பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/72. வெண்ணிலாவே!

72. வெண்ணிலாவே!

எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே!-விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே!-நின்தன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே!-(இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே!-வந்து
கூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே!
மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே!-அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே!
காதலொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே!-அந்தக்
காமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விளையபுன் னகையினள்
வெண்ணிலாவே!-முத்தம்
வேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே!-நின்
தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
வெண்ணிலாவே!

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே!-நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே!-அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே!-இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே!-(நல்ல)
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே!

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே!-நினைக்
காதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே!-நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே!-நீ
முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே!-நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே!

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே!-உன்தன்
மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே!-மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலும
வெண்ணிலாவே!-நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே!
புல்லின் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே!
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!