பாரதியாரின் தேசிய கீதங்கள்/11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
- பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
- புன்மை யிருட்கணம் போயின யாவும்,
- எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
- எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
- தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
- தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
- விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
- வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!
- புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
- பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
- வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!
- வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
- தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
- சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,
- அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
- ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
- பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,
- பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
- கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
- கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
- சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
- சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
- நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
- நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
- நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
- நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
- பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
- பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
- என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
- ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
- இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
- இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!
- மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
- மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
- குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
- கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
- விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
- வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
- இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
- ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!