பாரதியாரின் தேசிய கீதங்கள்/12. பாரத மாதா நவரத்தின மாலை
12. பாரத மாதா நவரத்தின மாலை
(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன)
(காப்பு)
- வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த
- பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்
- நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம்
- சிவரத்தன மைந்தன் திறம்.
(வெண்பா)
- திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி
- அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்
- எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
- கண்ணொத்த பேருரைத்தக் கால்.
(கட்டளை கலித்துறை)
- காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
- கும்பிட்டுக் கம்பனமுற்
- றோலிமிட்டோ டி மறைந்தொழி
- வான், பகை யொன்றுளதோ?
- நீலக் கடலொத்fத கோலத்தி
- ளாள்மூன்று நேத்திரத்தாள்
- காலக் கடலுக்கோf பாலமிட்
- டாள்அன்னை காற்படினே.
(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)
- அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
- ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே
- பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
- பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்
- இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
- என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
- மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
- விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.
(ஆசிரியப்பா)
- வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
- கற்றவ ராலே உலகுகாப் புற்றது
- உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
- இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்
- குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர்,
- மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
- முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
- பற்றை அரசர் பழிபடு படையுடன்
- சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்
- பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
- பாரத நாடு புதுநெறி பழக்கல்
- உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
- இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
- கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்
- சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
- மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
- தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
- கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
- அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே
- தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
- அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்
- வெற்றி தருமென வேதம் சொன்னதை
- முற்றும் பேண முற்பட்டு நின்றார்
- பாரத மக்கள் இதனால் படைஞர் தம்
- செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
- கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே
(வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! )
(தரவு கொச்சக் கலிப்பா)
- ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
- ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
- தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம்
- வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.
(வஞ்சி விருத்தம்)
- திண்ணங் காணீர்! பச்சை
- வண்ணன் பாதத் தாணை
- எண்ணம் கெடுதல் வேண்டா!
- திண்ணம் விடுதலை திண்ணம்.
(கலிப்பா)
- விடுத லைபெறு வீர்வரை வாநீர்
- வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்
- கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
- கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்?
- சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை
- சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை
- எடுமி னோஅறப் போரினை என்றான்
- எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!
(அறுசீர் விருத்தம்)
- காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி
- போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்
- மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
- காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே
(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)
- கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்
- பாரத தேவியே கனல்கால்
- இணைவழி வால வாயமாஞ் சிங்க
- முதுகினில் ஏறிவீற் றிருந்தே
- துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
- துயர்கெட விடுதலை யருளி
- மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
- கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.