பாரதியாரின் தேசிய கீதங்கள்/16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)
- வலிமையற்ற தோளினாய் போ போ போ
- மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
- பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
- பொறி யிழந்த விழியினாய் போ போ போ
- ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
- ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
- கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
- கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ
- இன்று பார தத்திடை நாய்போல
- ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
- நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
- நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
- சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
- சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
- வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
- விழிம யங்கி நோக்குவாய் போ போ போ
- வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
- வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
- நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
- நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
- மாறு பட்ட வாதமே ஐந்நூறு
- வாயில் நீள ஓதுவாய் போ போ போ
- சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
- சிறிய வீடு கட்டுவாய் போ போ போ
- ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
- தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
- நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
- நீட்டினால் வணங்குவாய் போ போ போ
- தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
- தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
- சோதி மிக்க மணியிலே காலத்தால்
- சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.
(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)
- ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
- உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
- களிப டைத்த மொழியினாய் வா வா வா
- கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
- தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
- சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
- எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
- ஏறு போல் நடையினாய் வா வா வா
- மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
- வேதமென்று போற்றுவாய் வா வா வா
- பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
- பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
- நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
- நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
- தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
- தேசமீது தோன்றுவாய் வா வா வா
- இளைய பார தத்தினாய் வா வா வா
- எதிரிலா வலத்தினாய் வா வா வா
- ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
- உதய ஞாயி றொப்பவே வா வா வா
- களையி ழந்த நாட்டிலே முன்போலே
- கலைசி றக்க வந்தனை வா வா வா
- விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
- விழியி னால் விளக்குவாய் வா வா வா
- வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
- விநயம் நின்ற நாவினாய் வா வா வா
- முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
- முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
- கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
- கருதிய தியற் றுவாய் வா வா வா
- ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
- ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா