பாரதியாரின் தேசிய கீதங்கள்/19. ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு)
19. ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு)
- நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
- குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
- வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
- தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
- தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
- புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
- வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
- கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
- கோடி கோடி புயத்துணை கொற்றமார்
- நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
- கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
- ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
- மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
- அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
- மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
- தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
- ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
- தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
- பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
- கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
- அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
- திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
- தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
- மருவு செய்களின் நற்பயன் மல்குவை
- வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
- பெருகு மின்ப முடையை குறுநகை
- பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
- இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
- எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)