பாரதியாரின் தேசிய கீதங்கள்/26. சுதந்திரப் பெருமை
26. சுதந்திரப் பெருமை
( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு)
- வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
- வேறொன்று கொள்வாரோ? - என்றும்
- ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
- அறிவைச் செலுத்துவா ரோ? (வீர)
- புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
- பொய்யென்று கண்டாரேல் - அவர்
- இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
- இச்சையுற் றிருப்பா ரோ? (வீர)
- பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
- பெற்றியை அறிந்தாரேல் - மானம்
- துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
- சுகமென்று மதிப்பா ரோ? (வீர)
- மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
- வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
- ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
- உடன்படு மாறுளதோ? (வீர)
- விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
- மின்மினி கொள்வாரோ?
- கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
- கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர)
- மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
- மாண்பினை யிழப்பாரோ?
- கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
- கைகொட்டிச் சிரியா ரோ? (வீர)
- வந்தே மாதரம் என்று வணங்கியபின்
- மாயத்தை வணங்கு வாரோ?
- வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
- என்பதை மறப்பாரோ? (வீர)