பாரதியாரின் தேசிய கீதங்கள்/32. சத்ரபதி சிவாஜி
32. சத்ரபதி சிவாஜி
(தன் சைனியத்திற்குக் கூறியது)
- ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
- ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
- வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
- சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
- யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
- அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
- எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
- வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!
- கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்.
- மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்
- செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
- யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
- தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
- மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
- ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!
- வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
- பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
- வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
- பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
- தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்
- நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
- வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
- ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!
- பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
- நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
- பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
- நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
- வானக முட்டும் இமயமால் வரையும்
- ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
- காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்
- தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
- இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
- உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
- பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
- மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!
- தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
- ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
- ஊனமொன் றறியா ஞானமெய் பூமி,
- வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
- பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
- நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
- தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
- பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
- ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
- வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
- இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
- ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
- பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
- மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
- ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
- சாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்
- கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
- எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
- கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,
- பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்
- திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
- பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
- சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
- வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
- ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.
- மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
- வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
- மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
- மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
- தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
- மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
- மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்
- ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
- தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
- நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?
- பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
- அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,
- புன்புலால் வாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு
- அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
- மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
- ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
- ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
- யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக!
- படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
- கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்!
- சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப
- மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,
- நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
- வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
- தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
- பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
- நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு
- ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!
- ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்
- வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.
- ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
- வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
- மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
- ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
- தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!
- மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
- புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
- கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
- ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
- சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!
- தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
- பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
- உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
- கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
- வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!
- நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
- புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
- மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
- இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
- பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
- வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
- ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
- நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்!
- வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!
- பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்
- செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மீன்!
- ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
- நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
- வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,
- ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்
- உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
- உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
- நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்
- (வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ
- ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்
- வானுறு தேவர் மணியுல கடைவோம்,
- வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்
- தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
- போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்!
- பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ?
- ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி
- வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே
- நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
- வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
- வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை!
- தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை!
- முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
- தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
- மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
- காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
- இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
- தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
- ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
- வையகத் தரசும் வானக ஆட்சியும்
- போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.
- மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்,
- கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
- வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
- ஓய்வுறுங் கால்கள், உலைந்தது சிரமும்,
- வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்
- சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
- எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
- சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
- எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
- கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
- சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
- தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
- வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
- புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
- அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்
- செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
- உண்மையை அறியாய் உறவையே கருதிப்
- பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
- வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
- நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்
- தம்மொடு பிறந்த சகோதரராயினும்
- வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
- ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
- பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
- அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
- பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
- பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
- ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
- மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
- குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்
- அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
- மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
- சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
- பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
- விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்
- இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்
- ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர்,
- தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,
- நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,
- செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்
- பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்
- சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.