பாரதியாரின் தேசிய கீதங்கள்/35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
35. நம்ம ஜாதிக் கடுக்குமோ
(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்)
- "ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
- நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு
பல்லவி
- ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
- செய்வது சரியோ? சொல்லும்
கண்ணிகள்
- முன்னறி யாப் புது வழக்கம் நீர்
- மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
- எந்நகரிலு மிது முழக்கம் - மிக
- இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)
- சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
- தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
- மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்
- மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)
- வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
- வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
- பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
- பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)