பாரதியாரின் தேசிய கீதங்கள்/43. தாதாபாய் நௌரோஜி
43. தாதாபாய் நௌரோஜி
- முன்னாலில் இராமபிரான் கோதமனா
- தியபுதல்வர் முறையி னீன்று
- பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
- தியஎமது பரத கண்ட
- மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்
- பிறரெள்ள வீழ்ந்த காலை
- அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில
- மக்களவ ரடிகள் சூழ்வாம்.
- அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
- மைந்தன், தன் அன்னை கண்ணீர்
- எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்
- உயிர் துடைப்பேன் என்னப் போந்து,
- யௌவன நாள் முதற்கொடுதான்
- எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும்
- செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
- யானுழைப்புத் தீர்த லில்லான்
- கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்
- கருணையும்அக் கருணைப் போலப்
- பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
- நிகரின்றிப் படைத்த வீரன்,
- வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
- எனஅதனை வெறுத்தே உண்மைச்
- சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித்
- தனக்குழையாத் துறவி யாவோன்.
- மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்
- மதியாதே வாணாள் போக்குந்
- தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
- நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
- வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
- உண்மைநெறி விரிப்போன் எங்கள்
- தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
- நவுரோஜி சரணம் வாழ்க;
- எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு
- இருந்தெம்மை இனிது காக்க!
- பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
- துக எமது பரதநாட்டுப்
- பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
- போற்புதல்வர் பிறந்து வாழ்க
- விண்புல்லு மீன்களென அவனன்னார்
- எவ்வயினும் மிகுக மன்னோ!