பாரதியாரின் தேசிய கீதங்கள்/50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை

50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை

பேரருட் கடவுள் திருவடி யாணை,
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை.
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ
அத்தகை யன்பின்மீ தாணை.
தீயன புரிதல் முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்த பேராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால்.
வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும்
வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே.
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான்.
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்,
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்து முற்கொண்டே.
என்னுடனொத்த தருமத்தை யேற்றார்
இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன்; எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக.
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால் இயலும்
அளவெல்லாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன்.
உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிடக் கடவேன்,
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன்.
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்,
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக.
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ!

வேறு

பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே.-