பாரதியாரின் தேசிய கீதங்கள்/51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
- அறத்தினால் வீழ்ந்து விட்டாய்,
- அன்னியன் வலியனாகி
- மறத்தினால் வந்து செய்த
- வன்மையைப் பொறுத்தல் செய்வாய்,
- முறத்தினால் புலியைத் தாக்க்ம்
- மொய்வரைக் குறப்பெண் போலத்
- திறத்தினான் எளியை யாகிச்
- செய்கையால் உயர்ந்து நின்றாய்!
- வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
- வாரிபோற் பகைவன் சேனை
- திண்மையோடு அடர்க்கும் போதில்
- சிந்தனை மெலித லின்றி
- ஒண்மைசேர் புகழே மேலென்று
- உளத்திலே உறுதி கொண்டாய்,
- உண்மைதேர் கோல நாட்டார்
- உரிமையைக் காத்து நின்றாய்.
- மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
- மதங்ப்பிலாப் பகைவர் வேந்தன்
- வானத்தாற் பெருமை கொண்ட
- வலிமைதான் உடைய னேனும்.
- ஊனத்தால் உள்ள மஞ்சி
- ஒதுங்கிட மனமொவ் வாமல்
- ஆசனத்தைச் செய்வோ மென்றே
- அவன்வழி யெதிர்த்து நின்றாய்!
- வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
- மேல்வரை யுருளுங் காலை
- ஓரத்தே ஒதுங்கித் தன்னை
- ஒளித்திட மனமொவ் வாமல்
- பாரத்தை எளிதாக் கொண்டாய்,
- பாம்பினைப் புழுவே யென்றாய்
- நேரத்தே பகைவன் தன்னை
- எநில்எலென முனைந்து நின்றாய்.
- துணிவினால் வீழ்ந்து விட்டாய்!
- தொகையிலாப் படைக ளோடும்
- பிணிவலர் செருக்கி னோடும்
- பெரும்பகை எதிர்த்த போது
- பணிவது கருத மாட்டாய்,
- பதுங்குதல் பயனென் றெண்ணாய்
- தணிவதை நினைக்க மாட்டாய்,
- நில் லெனத் தடுத்தல் செய்தாய்.
- வெருளுத லறிவென் றெண்ணாய,
- விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்,
- சுருளலை வெள்ளம் போலத்
- தொகையிலாப் படைகள் கொண்டே
- மருளுறு பகைவர் வேந்தன்
- வலிமையாற் புகுந்த வேளை,
- உருளுக தலைகள் மானம்
- ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய்.
- யாருக்கே பகையென் றாலும்
- யார் மிசை இவன்சென் றாலும்
- ஊருக்குள் எல்லை தாண்டி
- உத்திர வெண்ணி டாமல்,
- போருக்குக் கோலம் பூண்டு
- புகுந்தவன் செருக்குக் காட்டை
- வேருக்கும் இடமில் லாமல்
- வெட்டுவேன் என்று நின்றாய்.
- வேள்வியில் வீழ்வ தெல்லாம்
- வீரமும் புகழும் மிக்கு
- மீள்வதுண்டு டுலகிற் கென்றே
- வேதங்கள் விதிக்கும் என்பர்,
- ஆள்வினை செய்யும் போதில்,
- அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
- கேள்வியுண் டுடனே மீளக்
- கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.
- விளக்கொளி மழுங்கிப் போக
- வெயிலொளி தோன்றும் மட்டும்,
- களக்கமா ரிருளின் மூழ்குங்
- கனக மாளிகையு முண்டாம்,
- அளக்கருந் தீதுற் றாலும்
- அச்சமே யுளத்துக் கொள்ளார்,
- துளக்கற ஓங்கி நிற்பர்,
- துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?