பாரதியாரின் தேசிய கீதங்கள்/6. எங்கள் நாடு
6. எங்கள் நாடு
ராகம் - பூபாளம்
- மன்னும் இமயமலை யெங்கள் மலையே
- மாநில மீதிது போற்பிறி திலையே!
- இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
- இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
- பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
- பார் மிசை யேதொரு நூல்இது போலே?
- பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
- போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.
- மாரத வீரர் மலிந்தநன் னாடு
- மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
- நாரத கான நலந்திகழ் நாடு
- நல்லன யாவையும் நாடுறு நாடு
- பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
- புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
- பாரத நாடு பழம்பெரு நாடே
- பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.
- இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
- ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
- தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
- தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
- கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
- கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்
- உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
- ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.