பாரதியார் கதைகள்/ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்
ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்
வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சினேகமாக இருந்தார்கள். வாத்தியார், செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.
“செட்டியாரே, கால் ஏன் வீங்கியிருக்கிறது?” என்று வாத்தியார் கேட்டார்.
“எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாததுதான்“ என்று செட்டியார் சொன்னார்.
சில தினங்களுக்குப் பின் வாத்தியாருக்கு பலமான ஜலதோஷம் பிடித்திருக்கிறது. செட்டியார் வந்தார். ‘ஏன், ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே“ என்று கேட்டார்.
“கையிலே பணமில்லை. அதுதான் சகலத்துக்குக் காரணம்“ என்று வாத்தியார் சொன்னார். செட்டியார் புன்சிரிப்புடன் போய்விட்டார்.