பாரதியார் கதைகள்/சந்திரிகையின் கதை


சந்திரிகையின் கதை

பூகம்பம்

பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பக்ஷிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம், அதாவது: பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பக்ஷிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்—விசேஷமாகப் பெண் குழந்தைகள்—பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.

அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் ஸந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பக்ஷிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.

அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மஹாஸுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன—எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருது சாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள்—என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பக்ஷிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மஹாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத்தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது ப்ரசவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆஹாரம் வேண்டுமே? மஹாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங் காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் ௸ மஹாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலை மயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நக்ஷத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு க்ஷணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.

இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.

மஹாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு இரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மஹாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரஸவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை—அவள் பெயர் விசாலாட்சி—வெளியே வந்து பார்த்தாள். எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பக்ஷிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லை யென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர்:— “ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்” என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாக்ஷியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்கு வர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.

ஆனால், ‘அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை’ யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு க்ஷணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்க்ஷி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து “குவா!” “குவா!“ என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாக்ஷி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:— “விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்களெழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை” என்றாள்.

விசாலாட்சி ”சரி” என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

விசாலாக்ஷிக்கு கிடைத்த உதவி

சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னப்பட்டணத்தில் “சுதேசமித்திரன்” பத்திராதிபராகிய ஜீ. சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற “காங்கிரஸ்“ என்ற பாரதஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ. சுப்பிரமணிய அய்யர் மஹா கீர்த்திபெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோக மொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோதைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904-டிஸம்பர் மாஸத்திடையே ஒரு நாட்காலையில் அவர் தம் வீட்டு மேடையின்மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய்நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு ச்சுமங்கலிப் பெண்—அவருடைய இளைய மகள்— ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டுவைத்தாள்.

“இதில் என்னம்ம, வைத்திருக்கிறது?” என்று அய்யர் கேட்டார்.

“நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது“ என்று மகள் சொன்னாள்.

“இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்“ என்று அய்யர் முணுமுணுத்தார்.

இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து:— “அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவஸர காரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்“ என்றாள்.

“அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?“ என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது“ என்று மகள் சொன்னாள்.

“சரி, ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு. அந்தப் பெண்ணை வரச்சொல்“ என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே சென்றாள். சில க்ஷணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாக்ஷி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள்.

எந்த விசாலாட்சி? சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாக்ஷி அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணியய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.

“எந்த ஊரம்மா?” என்று அய்யர் கேட்டார்.

“பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி“ என்ற கிராமம் என்று விசாலாக்ஷி சொன்னாள்.

“ஓஹோஹோ ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் ௸ கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப்பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன்; அதே வேளாண்குடிதானா?“ என்று அய்யர் கேட்டார்.

விசாலாட்சி “ஆம்“ என்றாள்.

“நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே ! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று ?“ என்று அய்யர் கேட்டார்.

“பதினைந்து வருஷங்களாயின“ என்று விசாலாக்ஷி சொன்னாள்.

“உனக்கு இப்போது எத்தனை வயது?“ என்று அய்யர் கேட்டார்.

“இருபத்தைந்து“ என்று விசாலாட்சி சொன்னாள்.

“பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?“ என்று அய்யர் கேட்டார்.

”ஆம்” என்று விசாலாட்சி சொன்னாள்.

அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்கு பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்தும், அம்மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும்—ஆகிய இச்செய்திகளெல்லாம் ஜீ. சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தை போல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார். சில க்ஷணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக்கொண்டு, ஜீ. சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி:— ”நீ இங்கே வந்ததின் நோக்கம் யாது?” என்று கேட்டார்.

”என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப் படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசுகூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லாவிட்டாலும் நல்ல படிப்பும், மாதந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும் என்றாள்.”

”இந்த குழந்தை ஏது?” என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

”இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக்குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய் விட்டாள். சாகும் போது இதன் காவலை என் மீது சுமத்திக் கட்டளை யிட்டாள்” என்று விசாலாக்ஷி சொன்னாள்.

”இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?” என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

”செம்புப் பிச்சை; உவாதான மெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்” என்றாள்.

ஜீ. சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து விசாலாக்ஷி கையில் கொடுத்தார். விசாலாக்ஷி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள்.

”சரி, அம்மா, நீ போய் வா” என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது விசாலாக்ஷி சொல்லுகிறாள்:— ”ஐயா நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனினும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்றென்பதைத் தாங்கள் மறக்கக்கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்” என்றாள்.

அது கேட்டு ஜீ.சுப்பிரமணிய அய்யர்:— ”அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது” என்றார்.

”தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை” என்று விசாலாக்ஷி வற்புறுத்தினாள்.

”என்னால் ஸாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?” என்றார் அய்யர்.

”நீங்கள் தயவு வைத்தால் ஸாத்தியப்படும்” என்று விசாலாக்ஷி சொன்னாள்.

”உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபா கொடுத்தேன்?” என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

”அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்” என்று விசாலாக்ஷி மன்றாடினாள்.

ஜீ. சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சிலகணங்களுக்கப்பால் விசாலாட்சியை நோக்கிச் சொல்லுகிறார்:— ”ராஜமஹேந்திரபுரத்தில் என்னுடைய ஸ்நேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேசலிங்கம் பந்துலு, அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன்வசம் ஒரு கடிதமெழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்” என்றார்.

”சரி” என்றாள் விசாலாக்ஷி.

உடனே, ஜீ. சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து:— ”என்ன வேண்டுமப்பா?” என்று கேட்டாள்.

”அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?” என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் உறுமினார்.

”அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித் ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டு வர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?” என்றாள்.

என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப்பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டுவா. மையத்தும் தாளையும் எடுத்து வா என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அவர் வேண்டிய சாமான்களை யெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து ”உறையை சரியாக ஒட்டிக் கொண்டு வா” என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும், மைக்கூட்டையும் மையத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாக்ஷியை நோக்கி:— ”உனக்குத் தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டார். ”தெரியும்” என்றாள் விசாலாக்ஷி. ”எங்கே படித்தாய்?” என்று அய்யர் கேட்டார்.

”எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்குப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேசவரும்” என்றாள்.

”சரி, உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். ”நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக்கடவீர்” என்று சொல்லி, அய்யர் அவளிடம் காகிதத்தைக் கொடுத்தார். அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கி ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக்குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.


விசாலாக்ஷியின் ஏமாற்றம்

ராஜமகேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னைப் பட்டணத்துக்குப் போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.

விசாலாட்சி சென்னைப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார்.

விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ. சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக் கொண்டு அந்நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப்பார்த்துவிட்டு, அவளை நோக்கி ‘இன்றைக்கென்ன கிழமை?’ என்று தமிழில் கேட்டார். அவள் ‘புதவாரமு‘ என்று தெலுங்கில் மறுமொழி சொன்னாள்.

”மீகு தெலுகு வச்சுனா?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”அவுனு, சால பாக வச்சுனு” என்றாள் விசாலாட்சி.

இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லையாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்.

”உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”இல்லை” என்றாள் விசாலாட்சி.

”அண்ணன், தம்பி, அக்காள், தங்கை—?”

”எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களிலே கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக்கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்துகொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள் என்று விசாலாட்சி சொன்னாள்.

”உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்” என்று விசாலாட்சி சொன்னாள்.

”இங்கிலீஷ் தெரியுமா?” என்று பந்துலு கேட்டார்.

”தெரியாது” என்றாள் விசாலாட்சி.

”கொஞ்சங் கூட?” என்று கேட்டார்.

”கொஞ்சங்கூடத் தெரியாது” என்றாள்.

”ஸங்கீதம் தெரியுமா?” என்று பந்துலு கேட்டார்.

”எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்” என்று விசாலாட்சி சொன்னாள்.

”வீணை, பிடில், ஹார்மோனியம்—ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?” என்று பந்துலு கேட்டார்.

”ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை” என்றாள் விசாலாட்சி.

”தாளந் தவறாமல் பாடுவாயா?” என்று பந்துலு கேட்டார்.

”தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்” என்று விசாலாட்சி சொன்னாள்.

”எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக்காட்டு, பார்ப்போம்” என்று பந்துலு கேட்டார்.

அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாக்ஷி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாக்ஷியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.

”என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்” என்று பந்துலு சொன்னார். அவள் அக் குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழுகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.

”கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்” என்றாள் கிழவி.

”ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகலகலா பண்டிதை” என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.

”அப்பால், வீரேசலிங்கம் பந்துலு தமக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களை யெல்லாம் விரித்துக் கூறினார்.

அவருடைய மனைவி இதைக் கேட்டு:— “சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டிகலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு முன்னேயிறந்தானா? பிந்தி இறந்தானா?” என்று வினவினாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:— “அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறிவிட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின“ என்றார்.

“சரி; அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆக்ஷேபமின்றி இவளை மணம் புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?“ என்று கிழவி கேட்டாள்.

“ஆம், இவள்தான் அவர் விரும்பிய லக்ஷணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், ௸ டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை நினைத்தேன். ஆனால் இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ“ என்பதுதான் சந்தேகம் என்று பந்துலு சொன்னார்.

இதைக் கேட்டவுடனே கிழவி:— ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம் போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம்; டிப்டி- கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்” என்றாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:— “அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லக்ஷணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர் வேறென்ன நல்ல லக்ஷணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய்விடும்“ என்றார்.

இது கேட்டு விசாலாக்ஷி:— “சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்’ என்றாள்.

“குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது“ என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

அதற்கு விசாலாக்ஷி:— “என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்கு சாத்தியப்படாது யாதொன்று மில்லை. நான் அவருடைய மாம்ஸ போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் ஸம்மதப்படுகிறேன்” என்றாள்.

இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:— “சரி. பாட்டுப் பாடத் தெரியும் என்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்“ என்றார்.

“சுருதிக்குத் தம்பூர் இருக்கிறதோ?“ என்று விசாலாட்சி கேட்டாள்.

“ஹார்மோனியம் இருக்கிறது“ என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய ‘மோஹின்’ பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாட்சியிடம் கொடுத்தாள்.

பெட்டியை மடிமீது வைத்து விசாலாக்ஷி முதற்கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த “மாருபல்கு கொன்னா லேமிரா“ (மறுமொழி சொல்லாதிருப்ப தென்னடா?) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள்.

அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் ௸ கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி “மாரு பல்க” என்ற பல்லவியெடுக்குந் தறுவாயிலிருந்தாள்.

வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.

“என்ன விசேஷம்? யார் வந்திருக்கிறார்கள்?“ என்ற பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள்.

“கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது“ என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக் கொண்டு, மட மட வென்று வெளியே சென்றார்.

இவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாக்ஷியை நோக்கி:— அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபலாய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக்கொண்டு வந்த வெங்கயாமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய ஸாம்பார், தேங்காய் சட்னி, மைஸூர் ரசம், புடலங்காய் பொடித்தூவல் , வடை, பாயஸம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறையப் பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோஹமதிகம். சரி. நீ காலையிலே ஸ்நானம் பண்ணிவிட்டு தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா“ என்றாள்.

விசாலாட்சி “அப்படியே சரி“ என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்த பக்ஷிகளின விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரஸித்துக் கொண்டிருந்தனர்.

குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனினும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

சோலைப் பறவைகளெல்லாம் இக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக்குழந்தைகளுக்குக் காண்பித்தன.

புன்னகை செய்த மலர்ச் சிறு வாயைச் சந்திரிகை மூடவேயில்லை. வானமும், ஸூர்யனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், ஸுந்தரப் பக்ஷிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப் போய்விட்டாள்.

ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள்.

இங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:— “நீ ஒரு பாட்டுப்பாடு” என்றாள். ”அத்தை கற்றுக் கொடுத்த 'நந்தலால்' பாட்டுப் பாடலாமா?” என்று சந்திரிகை கேட்டாள். “அந்த அம்மா உனக்குத் தாயில்லையா? அத்தையா?” என்று வேலைக்காரி கேட்டாள்.

அதற்குச் சந்திரிகை:— “என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த ஸங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம், பூமி நடுங்கிற்றாம், பேய்க் காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப் போய்விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையுமிருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக் கொண்டு வருகிறாள்“ என்று தன் குழந்தைப் பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது.

இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக்கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப்பெண் மிகவும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப் போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டாள்.

அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். ஸுகமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தப் பணிப்பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள் மீது காதல் கொண்டார்.


வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து

மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் “ஹோ“ என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாஸனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம் பண்ணிவிட்டார்.

அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை, விளம்பரங்களுட்பட, ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார். கோபாலய்யங்கார் இங்கிலீஷ், ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த ஸமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய் மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.

இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.

தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவேயில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

“யாருடைய சமையல் தெரியுமா?” என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். “காலையில் வந்தாளே, அந்தப் பெண்ணுடைய சமையலா?“ என்றார் பந்துலு.

“ஆம்“ என்றாள் பந்துலுவின் மனைவி.

“அந்தப் பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?“ என்றார் வீரேசலிங்கம் பந்துலு.

“அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம் என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆஹாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கைகழுவிவிட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் “இதுவே சுவர்க்கம்“ என்று பந்துலு சொன்னார்.

“எது?“ என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.

“இப்போது செய்த போஜனம்“ என்று பந்துலு சொன்னார்.

“சமையல் ருசியாக இருந்ததா?“ என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.

“மிகவும் ருசியாக இருந்தது“ என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள், உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா?“ என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.

அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டிவா“ என்றார். சரி என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி? என்று கேட்டார்.

“அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக்குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே ஸரஸ்வதி ரூபமாக விளங்கும்“ என்று பந்துலு சொன்னார்.

பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல், செய்ய குங்குமப் பொட்டு, அந்தக் குழந்தை விசாலாக்ஷியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது ஸரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லக்ஷமீதேவி விக்ரஹமாக விளங்கிற்று.

அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவஸ்திரீகளின் நாட்டியச் செயல்களை யொத்திருந்தன.

இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக்கண்ணுக்கு முன்னே எழுந்தது.

“குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?“ என்று கோபாலய்யங்கார் கேட்டார். “தெரியும்“ என்றாள் சந்திரிகை. “எங்கே, ஒன்று பாடு, கேட்போம்“ என்றார் கோபாலய்யங்கார்.

“அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?“ என்று சந்திரிகை கேட்டாள்.

“பாடு“ என்றார் கோபாலய்யங்கார்.

சந்திரிகை பாடத் தொடங்கினாள்:—

நந்தலால் பாட்டு

      யதுகுல காம்போதி ராகம்—ஆதி தாளம்.

ஸ்ஸ்ஸா—ஸம்மாபதா—பத்தப்பம்பா—பாபா
      பநீஸதபா—மாகா—ஸரிமகரீ—கெகரிரிஸ்ஸா

பார்க்கு மரத்தி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
      பச்சை நிறந்தோன்று தடா, நந்தலாலா;
காக்கைச் சிறகினிலே, நந்தலாலா—நின்றன்
      கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;

கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
      கீத மிசைக்கு தடா, நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா—நின்னைத்
      தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.


இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித ஸங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.

“இதுதான் சுவர்க்கம்” என்று கோபாலய்யங்கார் சொன்னார். “எது“? என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

“இந்தக் குழந்தையின் பாட்டு“ என்று அய்யங்கார் சொன்னார்.

“சங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?“? என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

அதற்கு கோபாலய்யங்கார்:— “மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்“ என்றார்.

“குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்“ என்று பந்துலு சொன்னார்.

“அவையும் சேர்ந்துதான்“ என்று அய்யங்கார் சொன்னார்.

இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா? என்று கேட்டார்.

பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.

“என் ஜன்மம் பலிதமாய் விட்டது“ என்றார் கோபாலய்யங்கார்.

“அதெப்படி?“ என்று பந்துலு கேட்டார்.

“இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது“ என்றார் அய்யங்கார்.

இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?“ என்று அய்யங்கார் கேட்டார்.

விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். ஸாதாரணமாக, ஹிந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் ஸந்தித்து ஸம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய ஸம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் ஸம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்” என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார்:— “அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை“ என்றார்.

“அப்படியே செய்யுங்கள்“ என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்த, படியே நித்திரை போய்விட்டார்.

கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி பெற்றவள். நமது விசாலாக்ஷியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், “பிராமணா: போஜனப்ரியா:“ (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுஸரிப்பதில் ஸாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர். ப்ராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோஹமதிகம் என்று மற்ற ஜாதியார் ஸாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில ஸமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில ஸமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தைக் கையாடுகிறார்கள். வேறு சில ஸமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். ஸர்வோ ஜநா: போஜனப்பிரியா:— எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் ஸாதாரண பிராமணனொருவனைக் காட்டிலும் ஸாதாரண சூத்திரன்— மறவன், அல்லது இடையன், அல்லது உழவன், எந்தத் தொழிலாளியும்-நாளன்றுக்குக் குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாகத் தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மானியன் இருபத்தேழு பங்கு அதிகமாகத் தின்கிறான். இனி, அளவை விட்டுவிட்டு, ஆஹாரத்தின் பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர், அல்லாதார் என்ற பாகுபாட்டுக்கிடமில்லை. செல்வர்கள் உணவைப் பலவகையாகப் பக்குவங்கள் செய்து புஜிக்கிறார்கள். ஏழைகள் சிலவகைப் பக்குவங்களே செய்கிறார்கள். பரம ஏழைகளாய், ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஜனங்களே, இந்நாட்டில், லக்ஷக்கணக்காக மலிந்து கிடக்கிறார்கள். இவர்கள் கூழும் கஞ்சியும் ஒருகால் மிளகாயும் தவிர வேறுவிதமான பக்குவங்களை உண்ணுதல் அருமையிலும் அருமையிலும் அருமை. இத்தனை கொடிய ஏழ்மை நிலையில் பெரும்பாலும் பள்ளர் பறையர்களும் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே இருக்கிறார்கள். ஆனால் மற்ற வகுப்பாரிலும் பலர் அந்த ஸ்திதிக்கு மிக சமீபத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களிலும் அங்ஙனமே பலர் அந்தப் பரிதாபகரமான நிலையில் அகப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தில் மற்றஜாதி ஏழைகளைக் காட்டிலும் பிராமண— ஏழைகளுக்கு முக்கியமாக வைதிக பிராமணர்களுக்கு, இனாம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது. எனினும் இவ்விஷயத்தில் பிராமணரென்றும், அல்லாதரென்றும் பிரிவு செய்தல் பொருந்தாது. “பொதுப்படையாக” ஏழைகளின் வீட்டில் செய்வதைக் காட்டிலும் செல்வர் வீட்டில் கறி, குழம்பு முதலிய பதார்த்தங்களில் அதிக வகுப்புக்கள் சமைக்கிறார்களென்று சொல்லாம். இந்த விதிக்குப் பல விளக்குகளுமல்லதால், பொதுப்படையாக என்றேன். ஏனென்றால் செல்வமிருந்த போதிலும் லோப குணமுடையோரின் வீடுகளில் போஜனவகைகள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். தவிரவும், தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வர்களுக்கும், பொருள் தேடுவதிலும் அதைக் காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வர்களுக்கும் ஜீர்ணசக்தி எப்போதும் பரம மோசமாகவே இருக்குமாதலால், அவர்கள் வீட்டில் எத்தனை வகையான பக்குவங்கள் செய்தபோதிலும் ஒன்றிலும் ருசியேற்படாது. ஏற்கெனவே, இத்தையோர் போஜனப்பிரியர் என்று சொல்லத் தகார். அன்னத் துவேஷமுடையோரை போஜனப்பிரியர் என்று கூறுவதெப்படி? இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனினும், போஜனம் பண்ணுவதில் எல்லோரும் விருப்புடையோரெயெனிலும், போஜன விஷயத்தைக் குறித்து நீண்ட ப்ரஸ்தாபம் நடத்துவதில் தற்காலத்துப் படிப்புப் படித்தவர்களுக்கு அதிகச் சுவையேற்படாதாகையாலும், இந்நூல் படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசியேற்படாமல் கதையெழுத வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்கு சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப்பிரியர் என்று கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியின்றும் வேறுபட்ட குணமுடையோரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லையென்பதே என் அபிப்ராயம். இது நிற்க.

கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமஸேனனுக்கு விருகோதரன்— ஓநாய் வயிறுடையோன்—என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்குப் பசி அதிகமாம். தின்னத் தின்ன—எவ்வளவு தின்றபோதிலும்—ஸாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம். உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது சிறிதேனுமில்லாமலும் உழைத்தால், மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில் வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழு வலிமையையும் செலுத்திச் செய்யப்படும் தொழிலே தொழிலாம். ஆனால், எவ்வளவு தொழில் செய்த போதிலும், அதனால் உடம்புக்கு சிரம முண்டாகாத வண்ணமாகச் செய்யவேண்டும். வேர்க்க வேர்க்க கஸ்ரத் எடுப்பவன் ஸமர்த்தனல்லன். எத்தனை கஸ்ரத் எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே ஸமர்த்தன். இதை ஒரு வேளை ஸாதாரண மல்லர் அங்கீகாரம் செய்யத் திகைக்கக்கூடும். ஆனால் நூறு கஸ்ரத் பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டிப் போகும் மனிதனைக் காட்டிலும், ஆயிரம் கஸ்ரத் செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக ஸமர்த்தன் அதிக பலவான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தக் கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம் எட்டிப் போடுகிறேன். கஸ்ரத் செய்யும் தொழிலாயினும், கதையெழுதும் தொழிலாயினும்—எல்லாவிதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிரமந் தோன்றிய பிறகு தான் உடம்பில் சிரமந் தோன்றுகிறது. அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழிலில் சிரமுமுந் தோன்றாது; அது உன்னதமான வெற்றி பெறவுஞ் செய்யும். இங்கனம் தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி, உடம்பில் மேன்மேலும் ஒளியும் வலியும் விருத்தியடைந்துகொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கலாமென்னில், கோபாலய்யங்காருக்குப் பத்துப் பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர். எனவே மதுமாமிசப் பழக்கங்களால், வீரேசலிங்கம் பந்துலு எதிர்பார்த்தபடி, கோபாலய்யங்கார் அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர்பார்க்க இடமில்லை. இது நிற்க.

கோபாலய்யங்கார் போஜன ப்ரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே, விசாலாக்ஷியின் விழிகளென்னும் வலைக்குள் கோபாலய்யங்காரின் ஹ்ருதயமென்ற மானை வீழ்த்துவதற்கு இரை போடும் அம்சத்தில் கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரையென்று தீர்மானித்துக்கொண்டு, வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாஹலமாகச் சமையல் பண்ணினாள். முப்பது வகைக் கறி; முப்பது வகை சட்டினி; முப்பது வகை பொரியல்;— எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜலந் தெளித்துப் பரிமாறுதல் தொடங்கிவிட்டது. நாலிலை; குழந்தைக்கொன்று; விசாலாக்ஷிக்கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபாலய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.

பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் விசாலாக்ஷியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாட்சியை நோக்கி:— “விசாலாக்ஷி எங்கே?” என்று கேட்டார். இவள்தான் விசாலாட்சி யென்பது அவருக்குத் தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப்பணிப் பெண்ணே விசாலாகட்சி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.

“நான்தான் விசாலாக்ஷி” என்றாள் விசாலாட்சி.

“நீயா விசாலாக்ஷி?” என்றார் கோபாலய்யங்கார்.

“ஆம்” என்றாள் விசாலாகட்சி.

“காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“அவள் இக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குழந்தைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி” என்று விசாலாட்சி சொன்னாள்.

கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில் பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர் பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர் கோபாலய்யங்காரும் பந்துலுவும், காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாட்சியின் அழகு அறிவும் பயிற்சியும் கலந்த அழகு. பணிப்பெண்ணுடைய அழகு கிராமியமானது.

எனிலும், இப்போது விசாலாட்சியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக அழகா, அவள் அதிக அழகா என்ற சமுசயமேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு மனவிழியால் பணிப்பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும் விசாலாட்சியின் முகத்தைப் பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணை மூடி மூடி விழித்துச் சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும், விசாலாட்சியை மணம் புரிந்து கொள்வதே பொருந்துமென்ற யோசனை ஒரு கணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும், காதல் வலியதன்றோ? காதலுக்கெதிரே எந்த சக்தி, எந்த யோசனை நிற்கவல்லது? காதல் இறுதியிலே வெற்றி பெற்றுத்தீரும். கோபாலய்யங்காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாட்சியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது சாத்தியமில்லை.

நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து ஸம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரஸம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரஸமேற்படவில்லை. ஆஹாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்:— பந்துலுகாரு, “நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை” என்றார். “ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?” என்று பந்துலு கேட்டார்.

அதற்கு கேபாலய்யங்கார்:— “அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாட்சி சர்வசுப லக்ஷணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும், மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்” என்றார்.

“அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?“ என்று பந்துலு வினவினார்.

“எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது“ என்றார் அய்யங்கார்.

“அஃதெங்ஙனம்?“ என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன ஸமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். “காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணாவது கதையாவது! நடக்கக் கூடிய விஷயமா? பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?” என்று பந்துலு கேட்டார். இது கேட்டு கோபாலய்யங்கார்:— “அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?“ என்றார்.

அப்போது பந்துலு:— “தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில் இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி ஸ்வாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்“ என்றார்.

“சர்க்கார் வேலை போகாதே? அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்ட போதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது” என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அதற்குப் பந்துலு:— “அவ்விஷயம் எனக்குத் தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு யாதொரு தீங்கும் நேராது. ஆனால், உங்களுடைய ஸ்நேகிதர்களும் உங்களுடன் ஸமபதவியுடைய பிறரும் உங்களை இகழ்ச்சியாகப் பேசுவார்கள். ‘மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது’ என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறார். அந்த அபகீர்த்தியைக் குறித்தே நான் அஞ்சுகிறேன்“ என்றார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்:— “வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும் ஸ்நேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்குத் துணிந்த நான் இதற்குத் துணிதல் பெரிதன்று. பந்துக்களும் ஸ்நேஹிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல் பழி தூற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே ஸங்கதியைப் பற்றி எத்தனை நாள் பேசுவது? ஒரே மனிதனை எத்தனை காலம் தூற்றிக் கொண்டிருப்பது? நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான் செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் ஸம்பந்தமும் செய்ய முடியாமல் போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாக்ஷியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப்பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. ஸ்நேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய ஸ்நேஹிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய ஸ்நேஹிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோகமுள்ளவரை ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேராது” என்றார்.

”இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன” என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.

“அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்” என்றார் கோபாலய்யங்கார்.

“முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சி யில்லாதவள். கல்விப் பயிற்சி யில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதை யெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்“ என்று பந்துலு சொன்னார்.

அதற்கு கோபாலய்யங்கார்:— “நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல ஸங்கீத ஞானம்— இன்னும் எத்தனையோ லக்ஷணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அஃதற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக்கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்” என்று அய்யங்கார் சொன்னார்.

“உலக அனுபவமில்லாத பதினாலுவயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த ஸர்க்கார் வேலையிலிருந்து ஸகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது“ என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

“மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. ஸாவித்திரியும் ஸத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. ஹிமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்” என்று அய்யங்கார் சொன்னார்.

செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு:— சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்“ என்றார்.

அப்போது கோபாலய்யங்கார்:— அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு வீரேசலிங்கம் பந்துலு:— “அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாக்ஷி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது.... .......ஓஹோ ஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?“ என்றார்.

“அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை “என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

“தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்“ என்றார் பந்துலு.

“அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்த்ரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்” என்று கோபாலய்யங்கார் வேண்டினர்.

”எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமஸிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ மஹேந்திரபுரத்துக்குப் போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்” என்று பந்துலு சொன்னார்.

“நாளைக்குக் காலையில் நான் ௸ வேங்கடாசல நாயுடுவைப் பார்க்கவேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும், இந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது“ என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்:— “எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்கு தருவியுங்கள். மற்ற ஸங்கதி பிறகு பேசிக்கொள்வோம்“ என்றார்.

அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த ஸம்பாஷணையைத் தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாக்ஷியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து:— “இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது“ என்றாள்.

அப்போது பந்துலுவின் மனைவி:- “பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன்“ என்றாள்.


கோபாலய்யங்காருக்கு விவாகம்


றுநாட்காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாக்ஷியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாக்ஷியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக் கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு தர்மசங்கடம்—சங்கரய்யர் என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கக்ஷி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் ஸங்கடப்படுவாராம். நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக என்றெண்ணி, ஸௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, “வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கக்ஷி உண்மை யென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கக்ஷி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கக்ஷிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?” என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு தர்மஸங்கடம்—சங்கரய்யர் என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதிஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும் பக்ஷபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

“பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்,
மெய்போலும்மே; மெய்போலும்மே.
மெய்யுடையொருவன் சொல்லமாட்டாமையால்
பொய்போலும்மே; பொய்போலும்மே.”

இங்ஙனம் சொல் வலிமை மட்டுமே யன்று; ஆள் வலிமை, தோள் வலிமை, பொருள் வலிமை—எல்லாவித வலிமைகளும் நியாயத்தராசைத் தமது சார்பாக இழுத்துக் கொள்ள வல்லன.

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும் தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக் கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பனிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய தந்தை பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த ஸஹோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய்விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும், அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், ஸாமான்கள் வாங்கிக் கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுபட்டிருக்கின்றனவென்றும், வீடுவாயில் பெருலுக்குதல், பாத்திரங் கழுவுதல், துனி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி பொறுமை இன்சொல் பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்னும், அவளுக்கு மாஸம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம. சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.

“அவளுடைய தந்தையின் பெயரென்ன? அவர் இப்போது வீட்டிலிருப்பாரா?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“அவளுடைய தந்தையின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்“ என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக் குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீது உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச்செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுசுடர்கின்ற விழிகளும், துருக்கமீசையும், விரித்த மார்பும் திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்க கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர்மனதை மிகச் சஞ்சலப்படுத்திற்று.

“நான் என்ன செய்வேன். சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோக்ததைப் பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால் ஸ்ரீமந்நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சரணாகதி யடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கர்யங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்கு சம்மதப்பட வழியில்லை” என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

இதைக் கேட்டு கோபாலய்யங்கார்:— ”கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகிவிட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும் நிஷமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்கு ஸந்தேஹமிருந்தால், என்னிடம் தமிழில் மனுஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ, தெரியாதோ? தெரியுமா? அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை” என்றார்.

”அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய் தான்” என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.

“ஆமாம்; அதுவே மனுஸ்ம்ருதியின் கொள்கை” என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

“எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே?“ என்று சுப்புசாமிக் கோனார் ஆக்ஷேபித்தார்.

“நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய் விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்ஷியத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாணமன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்“ என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:— “கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பலாய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும், அய்யங்காரவர்கள் கொடுப்பார்“ என்றார். பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்.

“எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்துவைக்க ஏற்பாடு செய்தால் நல்லது” என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

“தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?“ என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது“ என்றார் கோனார்.

“மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா?“ என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

“ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம்“ என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால் மீனாக்ஷியை அழைத்து அவளுடைய ஸம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.

“அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்: அவள் சிறு குழந்தை. அவள் பிறந்ததுமுதல் இதுவரை என் வார்த்தையை ஒருமுறை கூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான ஸம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்“ என்றார் கோனார்.

“எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் ஸமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்” என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாக்ஷியை அழைத்து வரும்படி செய்தார். மீனாக்ஷி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட ஸம்மதமுற்றாள். சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனர் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள்—என்ன பயனுமில“ என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டுது. எனினும், பரிபூர்ணநிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி:— “மீனாக்ஷி என்ன சொல்லுகிறாள்?“ என்று கேட்டார்.

“அவளிடத்திலே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே“ என்றார் கோனார். “என்ன மீனாக்ஷி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்து கொள்ள ஸம்மதந்தானா?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாக்ஷி “சம்மதம்“ என்று மெதுவாகக் கூறித் தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாக்ஷியும் பிரம ஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ௸ ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள ஸம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாக்ஷி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் பந்துலுவின் மனைவி:— நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்துப் பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின் விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்துச் செலுத்த நேரும். உன் விஷயத்தைக் கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள் ராஜமஹேந்திர புரத்துக்குப் போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான் வரன் தேடிக் கொடுக்கிறேன். ஆனால் அவஸரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது. சிறிது காலம் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்” என்றாள்.

இதுகேட்டு விசாலாக்ஷி:— “மயிலாப்பூரில் என்னுடைய அம்மங்கார் (மாமன் மகள்) இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர்ட் வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு கோபாலய்யங்கரின் விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கையில், நான் இங்கு சும்மா ஏன் இருக்க வேண்டும்? இந்தப் பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன். பத்து நாள் கழிந்தவுடன் இங்கு வருகிறேன்“ என்றாள்.

பிறகு அவர்கள் இவ்விஷயத்தைக்குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் விசாலாக்ஷி தன் இஷ்டப்படி செய்வதைத் தடுக்கத் தமக்கு சம்மதமில்லை யென்றும், அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவஸரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாக்ஷியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார்.

”மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாஸ மெப்படி?” என்று பந்துலு கேட்டார்.

அதற்கு விசாலாக்ஷி:— ”என் அம்மங்காருடைய[1] புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்சு ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் ஸோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்கு ஸம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான் விவாகம் செய்துகொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகாத் தெரிவிப்பிதில் எனக்கு ஸம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்.” என்றாள்.

அப்போது பந்துலு:— “நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டா. ஜனவரி மாஸம் இருபதாந் தேதி நான் இங்கிருந்து ராஜமகேந்திரபுரத்துக்குப் புறப்படப் போகிறேன். நீ ஜனவரி மாஸம் பதினெட்டாந்தேதி இங்கு வா” என்றார்.

இது கேட்டு விசாலாக்ஷி:— “தாங்கள் இந்த ஊரிலிருக்கும்போதே எனக்கொரு வரன் தேடிக் கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானிப் பட்டணம். இங்கு கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரிக் கரையில் எங்ஙனம் கிடைக்கப் போகிறான்?“ என்றாள்.

அதற்குப் பந்துலு:— “அப்படி யில்லை யம்மா. இங்கிருந்தாலும் ராஜமஹேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலேதான். இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்கக்கூடிய நண்பர்கள் எனக்குப் பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடையெழுதுவார்கள். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன்“ என்றார்.

“பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது“ என்றாள் விசாலாட்சி.

“சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய் விடும். பிறகு, உன் காரியத்தை முடிக்கு முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே என்று பந்துலு சொன்னார்.

“அப்படியானால், என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்?“ என்று விசாலாட்சி கேட்டாள்.

“இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு“ என்றார் பந்துலு.

அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள்.

முத்தம்மா திருநெல்வேலியில் தெப்பக் குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள். திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் ஸமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி ஸந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாக்ஷியும் வருவாள்; முத்தம்மாளும் வந்துவிடுவாள். வந்தால், இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவருமே கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக் கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு ஸமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாக்ஷியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாஸம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாக்ஷி தாலி யறுத்த ஸமயத்தில், அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி விசாலாக்ஷியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாகச் சொல்லியனுப்பினாள்.

தமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடி யில் கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றாகக் குடியிருந்தபோது அவ்விருவரின் உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பித் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா விசாலாக்ஷியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசிக் கொண்டிருப்பாள்.

விசாலாடுசியோவெனில், அப்பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய மற்றத் தோழிப் பெண்களைக் கூப்பிடும்போது முத்தம்மா, முத்தம்மா என்று கூப்பிடுவாள். இப்படி அளவு கடந்த பால்ய ஸ்நேஹமுடைய இவ்விருவரும், முத்தம்மா புக்கத்துக்கு வந்த பிறகு ஒருவரையருவர் ஸந்திக்கவேயில்லை. ஸோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீக்ஷை தேறினார். முத்தம்மாளுடைய தந்தை அவளுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மதுரை, திருச்சினாப்பள்ளி, காலேஜ்களைப் பரிசோதனை செய்து முடித்துக் கடைசியாகக் கும்பகோணம் காலேஜுக்கு வந்து சோமநாதய்யரைக் கண்டு தக்க மாப்பிள்ளையென்று நிச்சயித்தார். அந்தக் காலத்தில் வரசுல்கம்—அதாவது மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் பணங் கொடுத்துக் கிரயத்துக்கு வாங்குதல்—என்ற வழக்கம் கிடையாது. கன்யா சுல்கம்—அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல்—என்ற வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே, ஸோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால், கன்யாசுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் “என்னடா, செய்வோம்!” என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருடைய உருவ லக்ஷணங்களையும் படிப்புத் திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளைக் கன்யா சுல்கம் வாங்காமல், அதாவது இனாமாக, மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் பிதா தீர்மானித்தார்.

சோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்து அவளை மணம்புரிந்து கொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர் முத்தம்மா விசாலாக்ஷியை ஓரிரண்டு முறைதான் ஸந்திக்க நேர்ந்தது. முத்தம்மா ருதுவாய், அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்குச் சென்ற பின்னர் அவளும் விசாலாக்ஷியும் ஒருமுறைகூட சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பி.ஏ., பி.எல். பரீட்ஷை தேறி, ஸோமநாதய்யர், ஹைகோர்ட் வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள் உத்தியோகம் பண்ணிவிட்டு, அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிகப் பணத்தாசை கொண்டு மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களா வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக்கொண்டு வருகிறார்.

ஆதலால், இப்போது, பல வருஷங்களுக்குப் பின் புதிதாக சந்தித்ததில், முத்தம்மாளும் விசாலாட்சியும் ஸ்நேக பரவசமாய் ஆனந்த ஸாகரத்தில் அழுந்திப் போயினர். முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயது தானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று வயது. அதன் பெயர் அனந்த கிருஷ்ணன்.

முத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் விதவை. அவள் பெயர் ராமுப்பாட்டி. அவளுக்கு க்ஷயரோகம், அன்று, காசரோகம், அதாவது, சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான க்ஷயமில்லை. நோயாளியை நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்துக் கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி ஏழு மணியாய் விட்டால் அவள் இருமத் தொடங்கிவிடுவாள். பாதி ராத்திரி, ஒரு மணி, காலை இரண்டு மணி வரை மஹா பயங்கரமாக இருமிக் கொண்டேயிருப்பாள். அந்த இருமலைக் கேட்டால், கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும். ஆனால், ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக்கொண்டு வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை.

இப்படியிருக்கையில், விசாலாட்சி ஸோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள் கழிந்தவுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப் போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தலையில் ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக, இரண்டு நாற்காலிகளின்மீது, அதாவது சாய்விட மில்லாத நாற்காற் பலகைகளின்மீது, வைக்கப்ப்டடிருந்தன.

அதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குகையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி:— “அடீ, விசாலாக்ஷி! நீ எப்படி யேனும் மறு விவாகம் செய்துகொள்” என்று சொல்லி விட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர்பார்க்கப்படாத, கோர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவி பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்கத் தொடங்கிவிட்டாள்.

தலைமயிர் வளர்த்துக் கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரியில் அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடி யிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கிவிட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். “இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்க முடியவில்லை. மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக் கொள்கிறேன்“ என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் ப்ரார்த்தனை செய்து கொண்டாள்.

“இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்?” என்று மாமா கேட்டார்.

அங்கே நம்முடைய தமிழ்த் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?” என்று விசாலாட்சி கேட்டாள். உடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக்கொடுத்து, இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹூகார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே!” என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் ஸம்மதமாகவே யிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டை யடித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும், அவள்தற்குக் கட்டுப் பட்டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டையிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாக்ஷியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.

எனவே, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விசாலாக்ஷி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபஹரித்துக் கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகைப் பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் ஸதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.

இப்போது, அதாவது ௧௯0௫ ஆம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி யிரவில், மயிலாப்பூர் வக்கீல் ஸோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாக்ஷி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம். அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாகப் பரந்துகிடந்தது.

அவளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போலே ஒளி வீசிற்று. அவளுடைய மார்பு மெல்லிய பச்சைப்பட்டு ரவிக்கையின் மீது வனப்புறப் பூரித்து நின்றது. அவளுடைய மார்புத்துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ, கந்தர்வ ஸ்திரீயோ என்று தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள்.

அவள் அறைக்கதவைத் தாழ்ப் போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில் விழாதபடி, ஸோமநாதய்யர் தம் பத்தினியுடன் மாடிமேல் கொல்லைப் புறத்திலிருந்த அறையில்—அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்க ஸாத்தியப்படுமோ, அத்தனை தூரத்தில்—இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அன்று அந்த ஏகாதசி இரவில் ஸோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்துக் கொள்ள வில்லை. ஏனென்றால், அவள் அன்று மாதவிடயாதலால் வீட்டுக்கு விலக்குற்றவளாய், வெளித் திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள் கட்டி ஒரு கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய அனந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே ஸோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின் கட்டிலுக்கும் புறத்தே குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின்மீது படுத்திருந்தனர்.

நள்ளிரவு, சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில் மயங்கிப்போன குழந்தைகளைப் போல் ராமுப்பாட்டியும், தோட்டத்தில் வெளிக் குச்சிலில் படுத்திருந்த தோட்டக் காவலனும், திண்ணையில் படுத்திருந்த முத்தம்மாளும், அவளருகே அனந்த கிருஷ்ணனும், உள்ளே விசாலாக்ஷியும் சந்திரிகையும், மேலே ராமநாதனும் ராமகிருஷ்ணனும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள் மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய ஸோமநாதய்யர். ஸோமநாதய்யருக்கு வயது அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். ஸாண்டோ இரும்பு குண்டு போட்டு அவருடைய இரண்டு புஜங்களும் அழகாகப் பருத்திருந்தன. தோட்சதைகள் நன்கு திரண்டிருந்தன. முன்னங்ககைகள் செவ்வனே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாகப் படுத்திருந்தது. வயிறு நன்கு படிந்திருந்தது. மேலும் பலவித அப்யாஸங்களையும் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும் அழகுறச் சமைந்திருந்தன. ஆனால் அவருக்குத் தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண் பார்வை கொஞ்சம் சொற்பம். அதற்காக ஐரோப்பியக் கண் சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக க்ஷவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லையென்றேன். ஏன்? என்ன செய்து கொண்டிருந்தார்? மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாக்ஷி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசைத்துப் பார்த்தார். கதவு விசாலாக்ஷியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார். விசாலாக்ஷி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும் கோபத்துடன்:— “இங்கெதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்?” என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய ஹ்ருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாக்ஷி இடிபோன்ற உரத்த குரலில்:— “இங்கிருந்து வெளியேறிப் போம்” என்றலறினாள்.

“குழந்தையை எழுப்பி விடாதே” என்று ஸோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாக்ஷி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில்:— “போம்; இங்கிருந்து வெளியேறி!” என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். ஸோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கையணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக் கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வெயர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் ஸஹிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய ஹ்ருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்குத் தூக்கமெப்படி வரும்?

கீழே விசாலாக்ஷி, இவர் வெளியேறியவுடன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.

விடுதலை

“ஒரு கால் விடுதலை யுற்றான்
எப்போதும் விடுதலை யுற்றான்”

றுநாட் பொழுது விடிந்தது. ஸோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துசுப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துசுப்பா தீகட்சிதரே புரோகிதர். இவ்விருவரும் காலையில் பத்து மணிக்கே வந்துவிட்டார்கள். ஆனால் பகல் இரண்டு மணி வரை சோமநாதய்யர் மெத்தையைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. அவருக்குப் பலமான தலை நோவு.

இதனிடையே தீட்சிதரிருவரும் சும்மா பதுமைகள் போல் உட்காரந்திருக்க மனமில்லாமல் வேதாந்த விசாரணையில் புகுந்தனர்.

முத்துசுப்பா தீக்ஷிதர் சொன்னார்:— “ஜீவன் முக்தி இகலோகத்தில், அதாவது இந்த சரீரத்தில் சாத்தியம்” என்றார்.

“ஆனால் இந்த சரீரத்தில் ஏற்படும் முக்தி எப்போதைக்கும் சாசுவதமாக நிற்பது நிச்சயமில்லை“ என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.

“உமக்கு விடுதலை என்றால் இன்னதென்று விஷயமே புலப்படவில்லையென்று தெளிவுபட விளங்குகிறது. விடுதலையென்பது ஒருகாற் பெறப்படுமானால் மறுபடி தளையென்பதே கிடையாது. முக்திக்குப் பிறகு பந்தமில்லை. சர்வபந்த நிவாரணமே முக்தி. அந்த சர்வ பந்த நிவாரணமாவது ஸர்வ துக்க நிவாரணம், சர்வ துக்கங்களையும் ஒரேயடியாகத் தொலைத்துவிடுதல். அந்த நிலைமை பெற்ற பிறகும் ஒருவன் மறுபடி பந்தத்துக்குக் கட்டுப்பட இடமுண்டாகுமென்று சொல்லுதல் பொருந்தாது“ என்று முத்துசுப்பா தீட்சிதர்” சொன்னார்.

“சுவர்க்கலோகத்திற்குப் போன பிறகும் அங்கிருந்து வீழ்ச்சி யேற்படுவதாக நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே—அதன் தாத்பர்யமென்ன?“ என்று குப்புசாமி தீட்சிதர் கேட்டார்.

“அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஜீவன் முக்திக்கு நான் சொன்னதுதான் சரியான அர்த்தம். அதை எந்த சாஸ்திரத்திலும் பார்த்துக் கொள்ளலா“ மென்று முத்துசுப்பா தீட்சிதர் சொன்னார்.

இவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து நெடுநேரம் வார்த்தைபாடிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக சோமநாதய்யர் மாடியை விட்டுக் கீழே யிறங்கி வந்தார் அவர்:— “இந்தத் தர்க்கத்தின் விஷயமென்ன?” என்று கேட்டார்.

“ஒருமுறை ஜீவன் முக்தி பெற்றால் அது எப்போதைக்கும் சாசுவதம்தானா? மீட்டும் பந்தப் ப்ராப்தி ஏற்படுமா“ என்ற விஷயத்தைக் குறித்து விசாரணை செய்கிறோம் என்று குப்புசாமி தீட்சிதர் சொன்னார்.

“இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்ராயமெப்படி?“ என்று சோமநாதய்யரை நோக்கி முத்துசுப்பா தீட்சிதர் கேட்டார்.

“எனக்கு வேதாந்த விவகாரங்களில் பழக்கம் போதாது“ என்று சோமநாதய்யர் சொன்னார்.

திடீரென்று விசாலாக்ஷி அவர்களுக்கு முன்னே தோன்றி “ஜீவன் முக்தி இவ்வுலகில் சாத்தியமென்பதே பொய். நீங்கள் அதை யடைந்திருக்கிறீர்களோ? அடைந்தோர் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களோ?“ என்று கேட்டாள்.

“சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார்; அவர் பெரிய ஜீவன் முக்தர் என்று சோமநாதய்யர் சொன்னார்.

அன்று சாயங்காலம் முத்தம்மாளிடம் அனுமதிபெற்றுக் கொண்டு விசாலாக்ஷி சந்திரிகையுடன் மயிலாப்பூரிலிருந்து புறப்பட்டுப் பட்டணம் தங்கசாலைத் தெருவிலிருந்த மற்றொரு பந்துவின் வீட்டில் போய் இறங்கினாள். இந்த பந்து யாரெனில் விசாலாக்ஷியின் பெரிய தாயார் மகள். அந்த அம்மாள் பெயர் பிச்சு. அவளுடைய புருஷனாகிய சங்கரய்யர் தங்கசாலைத் தெருவில் மிகவும் கீர்த்தியுடன் மிட்டாய்க் கடை வைத்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்குக் கன லாபம். அவர் கையில் தங்கக் காப்பு; வயிர மோதிரங்கள்; கழுத்தில் பொற்சரளி. அவருக்கு வயது முப்பதுக்கு மேலிராது, மிகவும் அழகான புருஷன். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் வீட்டுக்கு நம்முடைய விசாலாக்ஷி போய்ச் சேர்ந்தாள்.

அங்கு இவள் போன தினத்துக்கு மறுநாள் காசியிலிருந்து ஒரு பால ஸந்நியாஸி வந்திருந்தார். இவர் ஜாதியில் தென்தேசத்துப் பிராமணர். ஆனால் பார்வைக்கு வட தேசத்தார்களைப் போலவே சிவப்பாகவும் புஷ்டியாகவும் உயரமாகவும் ஆஜாநுபாகுவாகவும் இருப்பார். மிகவும் அழகிய வடிவமுடையவர்.

இவருக்கு நாலைந்து பாஷைகள் நன்றாகத் தெரியும். இவர் சங்கீதத்தில் அபார வித்வான். இவர் தம்மை ஜீவன் முக்தி அடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டார். எனினும், சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டேயிருந்தன. மகா மேதாவி. உலகத்து சாதாரண மூடபக்திகளை யெல்லாம் போக்கிவிட்டார். ஆனால், தீய விதியின் வசத்தால் தமக்குத் தாமே மானசீகமான பல புதிய மூட பக்திகளும் பொய்ப் பிசாசுகளும் உற்பத்தி செய்து கொண்டு ஓயாமல் அவற்றுடன் போராடிக் கொண்டிருந்தார். அதாவது, அவர் இன்னும் ஜீவன் முக்தி அடைந்துவிடவில்லை. அடைய வேண்டிய மார்க்கத்திலிருந்தார். தாம் முக்தி அடைந்துவிட்டதாகவே அவர் பிறரிடம் சொல்லியது மட்டுமன்றித் தம்முடைய மனத்துக்குள்ளும் அவ்வாறே நிச்சயப்படுத்திக் கொண்டு விட்டார்.

விசாலாக்ஷி தம் வீட்டுக்கு வந்த தினத்திற்கு மூன்று நாட்களின் பின்பு ஒரு மாலையில், நிலவு தோன்றும் பருவத்தில் மிட்டாய்கடை சங்கரய்யர் தமது வீட்டு மேடையில் அழகிய நிலா முற்றத்தில் நான்கு நாற்காலிகள் போட்டு நடுவே மேஜையின் மீது பக்ஷணங்கள், தேநீர், வெற்றிலை, பாக்கு, பூங்கொத்துக்கள் முதலியன தயார் செய்து வைத்தார். சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால ஸந்நியாஸியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாட்சியும் நால்வரும் அந்த நான்கு நாற்காலிகள் மீதிருந்து கொண்டு சிற்றுண்டி யுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத் துறங்கிவிட்டாள். அவளுக்குக் காவலாகக் கிழ இடைச்சி, ஒரு வேலைக்காரி, படுத்திருந்தாள்.

நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந்நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே, சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த பால சந்நியாசிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்தக் கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த சந்நியாசியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக் கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஸந்நியாஸியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகாசுந்தர ரூபி. வடிவெடுத்த மன்மதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர்மீது அடங்காத மையல் கொண்டு விட்டாள். ஸந்நியாஸியும் அங்ஙனமே விசாலாக்ஷியின் மீது பெரு மையல் பூண்டார். ஸந்நியாஸி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத் தான் வெல்லமாட்டா?

காற்றையும் நீரையும் இலையையும் புஜித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மஹரிஷிகள் கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர் என்று பர்த்ருஹரி சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்துப் புலவர் தம்முடைய நூல்களுளன்றில் மன்மதனை எல்லாக் கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளாகக் கூறுகிறார். பார்வதியை மறந்து தவம் செய்து கொண்டிருந்த சிவபிரான் மீது மன்மதன் அம்புகள் போட்டபோது, அவர் கோபங் கொண்டு மன்மதனை எரித்தாரேயன்றி, அவன் அம்புகளின் திறமையை விழலாக்கி மறுபடி யோகம் பண்ணத் தொடங்கினாரோ? அன்று; அவர் காமனம்புகளுக்குத் தோற்று ஜகன்மாதாவை மணம் புரிந்து கொள்ளத் திருவுளங் கொண்டருளினார். மேலும், மன்மதன் மஹாவிஷ்ணுவின் குமாரன் பிரம்மாவுக்கு ஸஹோதரன். அவனே பிரம்மா. அவனாலே படைப்புத் தொழில் தோன்றுதல் பிரத்யக்ஷமன்றோ?

நித்யானந்த பால ஸந்நியாசி ரிக்வேத முழுதையும் ஸாயன பாஷ்யத்துடன் படித்தவர். உபநிஷத்துக்களில் முக்கியமான தசோபநிஷத்துக்களை சங்கர பாஷ்யத்துடன் கற்றுணர்ந்தவர். மற்றும் எண்ணற்ற அத்வைத நூல்களிலும் விசிஷ்டாத்வைத நூல்களிலும், தர்க்கம் மீமாம்ஸை யோகம் ஸாங்க்யம் முதலிய சாஸ்திரங்களிலும், புராண இதிஹாசங்களிலும், காவ்யங்களிலும், நாடகங்களிலும் அபாரமான பயிற்சியுடைமையால், ஹிந்து மதத்துக்கும் இந்து நாகரீகத்துக்கும் தக்க ப்ரதிநிதியாகக் கருதத்தக்கவர்.

தவிரவும், ஹிந்தி, வங்காளி, மஹாராஷ்ட்ரம், தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் இந்த ஆறு பாஷைகளிலும் மிக உயர்ந்த தேர்ச்சி கொண்டவராய், இவற்றில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சாஸ்திரங்களையும் காவ்யங்களையும் நன்கு பயின்று சிறந்த அறிவுத் தெளிவு படைத்தவர். எனவே, இவர் சொல்லும் வேதாந்தம் வெறுமை வாய்ப் பேச்சு மாத்திரமன்று. உள்ளத்தில் பலவித ஆராய்ச்சிகளாலும், உயர்ந்த கேள்விகளாலும், தெளிந்த வாதங்களாலும் நன்றாக அழுந்திக் கிடந்த கொள்கை. இவருக்கு ஜீவன்முக்தி பதம் ஏற்படுவதற்கு ஸ்திரீயில்லாத குறைதான் ஒரு பெருந் தடையாக நின்றது. ஏனெனில், பொருளில்லாவிடினும் கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன்முக்தி பதமெய்தலாம். ஆனால் காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன் முக்தியடைந்து இவ்வுலகில் வாழ்வது மிகவும் சிரமம் என்று தோன்றுகிறது.

பௌத்தமதத்தின் மேம்பாட்டினாலே தான், ஆரம்பத்தில் பெண்ணுடன் கூடிவாழும் வாழ்க்கையை விட்டு முக்தி தேடப் புகும் வழக்கம் இந்நாட்டி லும், உலகத்திலும் ஊர்ஜிதப் பட்டதென்று நினைக்க ஹேது இருக்கிறது பூர்வீக வேத ரிஷிகவெல்லோரும் பத்தினிகளுடன் வாழ்ந்ததாகவே முன்னூல்கள் சொல்லுகின்றன. பௌத்த மதத்திலிருந்து தான் ஹிந்து மதமும் பிற மதங்களும் ஒரேயடியாக உலகத்தைத் துறந்து விடுவதாகிய நித்ய ஸந்நியாஸ முறையைக் கைக்கொண்டனவென்று கருதுகிறேன். வேதரிஷிகள் மோக்ஷத்துக்கு ஸாதனமாகச் செய்த வேள்வியிலெல்லாம் அவர்களுடன் மனைவியிருமிருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. பூர்வ விஷயங்கள் எங்ஙனமாயினும் “இல்லறமல்லது நல்லறமன்று” என்னும் ஔவை (?) வாக்கியத்தையே நான் ப்ரமாணமாகக் கொண்டிருக்கிறேன். காதல் தவறான வழிகளில் செல்லும்போதும் உண்மையினின்றும் நழுவும் போதும் மாத்திரமே, அது இவ்வுலகத்தில் பெருந்துன்பங்களுக்கு ஹேதுவாகிறது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய ஸாதனமாகும். ‘உண்மையான காதலின் பாதை மிகவும் கரடுமுரடானது’ என்று ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலக் கவியரசர் சொல்லுகிறார். அந்தக் கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சியில்லாமலும் பாவ நெறியில் நழுவிச் செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின் இன்பத்தைச் சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் க்ஷணத்திலே தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ்வுலக இன்பங்கள் எண்ணத் தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். சூரியனும், வெயிலும், பக்ஷிகளும், இனிய தோற்றமுடைய மிருகங்களும், சோலைகளும், மலைகளும், நதிகளும், காடுகளும், அருவிகளும், ஊற்றுக்களும், வானவெளியும், வானமூடியும், சந்திரனும், நிலவும், நக்ஷத்திரங்களும் பார்க்கப் பார்க்கத் தெரிவிட்டாத ஆனந்தந் தருவன.

ஏழை மானிடரே! இவையெல்லாம் சாசுவதமல்லவா? க்ஷணந் தோறும் தோன்றி மறையும் இயல்பு கொண்டனவா? தனித்தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது. தனிப் பக்ஷிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிருகக் கூட்டமும் பக்ஷி ஜாதியும் எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக, மலை, கடல், வானம், இடைவெளி, ஸூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ யுகாந்தரங்களில் இவையும் மாறக் கூடுமென்று சாஸ்திரிகள் ஊஹத்தாலே சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊஹவாதத்தைப் பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்களுக்குப் பிறகு இவை ஒரு வேளை அழியக் கூடு மென்று அந்த சாஸ்திரிகள் சொல்லுமிடத்தே, நாம் அவற்றை நித்ய வஸ்துக்களாகப் போற்றுதல் தவறாகாது. இது நிற்க.

இன்னும் உலகத்தில் மனிதனுக்கு நெடுங்கால இன்பங்கள் வெறெத்தனையோ இருக்கின்றன. நேராக உண்டு வந்தால், அதாவது பசியறிந்து உண்பதென்று விரதங் கொண்டால், மனிதருக்கு உணவின்பம் எப்போதும் தெவிட்டாது. நோயின்றி இருந்தால் ஸ்நானத்தின் இன்பம் என்றும் தெவிட்டாது. இன்னும் நட்பு, கல்வி, சங்கீதம் முதலிய கலைகள்— முதலிய எக்காலமும் தெவிட்டாத இன்பங்கள் இவ்வுலகத்தில் மனிதருக்கு எண்ணின்றி நிறைந்து கிடக்கின்றன. இப்படியிருக்க, இவ்வுலக இன்பங்கள் க்ஷணத்தில் தோன்றி மறையும் இயல்புடையன என்றும், நீர்மேற் குமிழிகளத்தன என்றும் சொல்வோர் அறிவில்லாதோர், சோம்பேறிகள் நெஞ்சுறுதி யில்லாதோர்.

இன்ப மயமான இவ்வுலகத்தில் காணப்படும் எல்லா இன்பங்களைக் காட்டிலும் காதலின்பமே சாலவுஞ் சிறந்தது. அதில் உண்மையும் உறுதியுங் கொண்டு நின்றால் அது எப்போதும் தவறாததோர் இன்ப உற்றாகி மனித வாழ்வை அமர வாழ்வுக்கு நிகராகப் புரிந்துவிடும். அங்ஙனமின்றி மானுடர் எப்போதும் காதலின்பத்தில் உண்மை தவறிவிடுவதாலும், ஒரு மனிதனையே, மாறுதலின்றிக் காதல் செய்து வருதலாகிய வழக்கம் மனிதருக்குள் ஏற்படுமாயின் அவர்கள் காதலின்பம் எத்துணை சிறந்ததென்பதையும் எத்தகைய பயன்கள் தருவதென்பதையும் தாமே எளிதில் உணர்ந்துகொள்ள வல்லோராவர்.

இங்ஙனம் ஆலோசனை புரிந்து நித்யானந்தர் என்ற பால ஸந்நியாசி தாம் விசாலாக்ஷி மீது காதல் கொண்டது தவறில்லையென்று தீர்மானித்துக் கொண்டார். ஒரு நாள் மாலையில் நித்யானந்தரும் விசாலாக்ஷியும் மிட்டாய் கடை சங்கரய்யர் வீட்டு மேடையில் தனியே ஸந்தித்தார்கள். அவ்விருவருள் நெடுநேரம் ஸம்பாஷணை நடந்தது. தாம் ஸந்நியாசத்தை விட்டு நீங்கி லௌகிக வாழ்க்கையில் புகுந்த விசாலாக்ஷியை மணம் புரிந்து கொள்ள நிச்சயித்ததற்குள்ள காரணங்களையெல்லாம் அவர் விசாலாக்ஷியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அவளும் அக்காரணங்கள் நியாயமானவையேயென்று மிகவும் ஸுலபமாக அங்கீகாரம் செய்துகொண்டாள். கதையை வளர்த்துப் பிரயோஜனமென்ன? அவ்விருவரும் சந்திரிகை ஸஹிதமாக உடனே புறப்பட்டு எழும்பூரில் வீரேசலிங்கம் பந்துலு இருந்த வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு போகுமுன்னாகவே நித்யானந்தர் தம்முடைய காவியுடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெள்ளை வேஷ்டியும், நேர்த்தியான சட்டையும், பஞ்சாபித் தலைப்பாகையும் அணிந்து கொண்டார். “இந்த லௌகிக ரூபத்தில் ஸ்வாமிகளைப் பார்த்தால் நேபாளத்து ராஜா மகனைப் போலிருக்கிறது” என்று சங்கரய்யர் சொன்னார். ”இன்னும் என்னை ஸ்வாமிகளென்று சொல்லாதேயுங்கள். ஸந்நியாஸக் கோலத்தையும் தொலைத்தேன்; பழைய நித்தியானந்த னென்ற பெயரைக்கூடத் தொலைத்து விட்டேன். இனிமேல் எனது பிரிய காந்தை யாகிய விசாலாக்ஷியின் பெயருக்கேற்ப விசுவநாத சர்மா என்று பெயர் வைத்துக்கொள்வேன்” என்றார். எனவே நானும் இக்கதையில் இவருக்கு நித்யானந்தர் என்ற பெயரை நீக்கி விசுவநாத சர்மா என்ற பெயரையே வழங்கி வருதல் அவசியமாகிறது.

விசுவநாத சர்மாவை இந்த லௌகிக வேஷத்தில் பார்த்த மாத்திரத்திலே விசாலாக்ஷிக்கு ஏற்கெனவே அவர் மீதேற்பட்டிருந்த கண் தலை தெரியாத காதல் முன்னிலும் ஆயிர மடங்கு அதிகமாய், அவளை வெறி கொண்டவள் போலாக்கிவிட்டது.

இவ்விருவரும் வீரேசலிங்கம் பந்துலுவிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, விசாலாக்ஷி பந்துலு விடத்திலும் அவர் மனைவி யிடத்திலும் தன்னை விசுவநாத சர்மா மணம் செய்துகொள்ள இணங்கிய செய்தியையும், அவ்வாறு இணங்கும்படி நேர்ந்த பூர்வ விருத்தாந்தங்களையும் எடுத்து விஸ்தாரமாகச் சொன்னாள். வீரேசலிங்கம் பந்துலுவுக்கு அளவிறந்த மகிழ்ச்சியுண்டாய்விட்டது. ஏற்கெனவே இவ்விஷயத்தில் அவர் பல இடங்கில் முயற்சிசெய்து பார்த்து வெற்றிபெற வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய முயற்சியில்லாமலே தமது விருப்பம் நிறைவேறி விட்டமை கண்டு அவருக்கு அத்தனை பூரிப்புண்டாயிற்று.

“எல்லாம் தெய்வச் செயல். நாமொன்று நினைக்க தெய்வமொன்று செய்கிறது” என்று சொல்லி அவர் மனமாரக் கடவுளைப் போற்றித் தொழுதார். பிறகு விசுவநாத சர்மாவையும் விசாலாக்ஷியையும் பிரம ஸமாஜத்தில் சேர்த்தார். கோபாலய்யங்காருடைய விவாகம் நடந்து இரண்டு வாரத்துக்குள் மறுபடி சென்னை பிரம சமாஜ ஆலயத்திலேயே, அந்த சமாஜ விதிகளின்படி விசாலாக்ஷிக்கும் விசுவநாத சர்மாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. விவாகம் நடந்த ஒரு வாரத்துக்குள் மிட்டாய்க்கடை சங்கரய்யரின் முயற்சியாலும் வேறு சில நண்பர்கள் முயற்சியாலும் நமது விசுவநாத சர்மாவுக்கு ஒரு உத்தியோகம் ஏற்பட்டது. தங்கசாலைத் தெருவிலே மூன்று, நான்கு குஜராத்தி லக்ஷப் பிரபுக்களின் பிள்ளைகளுக்கு ஹிந்தி, ஸமஸ்கிருதம், இங்கிலீஷ் மூன்று இராப்பாடம் சொல்லி வைக்க வேண்டியது. இதற்காக அவருக்கு அறுபது ரூபாய் மாதந்தோறும் சம்பளம் கிடைத்தது. சங்கரய்யர் வீட்டுக்கு ஸமீபத்தில் இரண்டு மனைகளுக்கப்பால் ஒரு வீடு காலியாக இருந்தது. சிறிய வீடு, கீழே இரண்டு மூன்று அறைகள். உயர்ந்த மாடி. அந்த வீட்டுக்குப் பின் அழகான தோட்டமிருந்தது. அதில் ஒரு சிறிய கூரை பங்களா புதிதாகத் தயார் பண்ணி, அதில் நாற்காலி, மேஜை, புத்தகங்கள், பிள்ளைகள் வந்தால் உட்காருவதற்கு நாற்காற் பலகைகள் முதலியன வாங்கி வைப்பதற்குரிய செலவெல்லாம் சங்கரய்யர் செய்தார். அந்த வீட்டில் புதிதாக விவாகமான தம்பதிகளை சங்கரய்யர் குடியேற்றினார். இவருக்கு விசுவநாத சர்மாவிடம் முன்னைக் காட்டிலும் நூறு பங்கு அதிக பக்தி ஏற்பட்டது. சில மாதங்கள் கழிந்த பிறகு, மேற்கூறிய குஜராத்திப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும்படி கிடைக்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலீஷ், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வியாஸங்களும், தலையங் கங்களும் எழுதி சாஸ்த்ர விஷயங்களைப் போலவே லௌகிக விஷயங்களிலும் பயிற்சியால் உயர்ந்த ஞானமேற்படுத்திக் கொண்டார். எழுதும் திறமையிலோ, இங்கிலீஷிலும், தமிழிலும் அவருக்கு ஸமமான தொழிலாளி இந்த தேசத்திலேயே குறைவென்று கூறலாம். அதனால் பத்திராதிபர்கள் அவரெழுதும் வ்யாஸங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக் கொண்டு தக்க சம்பளம் கொடுக்கத் தொடங்கினார்கள். இங்கு கொஞ்சம் கை தேறியவுடனே, அவர் தக்க மனிதர்களுடைய சிபார்சால் பம்பாய் கல்கத்தா முதலிய வெளி நகரங்களில் ப்ரசுரமாகும் உள்நாட்டுப் பத்தரிகைகளுக்கும், இங்கிலாந்து, அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகளுக்கும் விஷய தானம் செய்யும் பதவி பெற்றார். இதிலெல்லாம் அவருக்கு மாஸந்தோறும் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத வரும்படி வரத் தொடங்கிற்று. அவர் தீராத உழைப்பாளியாய் விட்டார்.

அவருடைய முகத்தில் முன்னிருந்த கவலைக் குறிகளெல்லாம் நீங்கிப் போய்விட்டன. எப்போதும் அவர் முகத்தில் ஸந்தோஷமும் திருப்தியும் நிலவலாயின. விசாலாக்ஷியோ முன்னிருந்த அழகைக் காட்டிலும் முந்நூறு பங்கு அதிக அழகு படைத்து விட்டாள். அவர்கள் வீட்டிற்கு ஒரு பசு வாங்கினார்கள். அந்தப் பசுவைக் கறக்கவும், குழந்தைக்குப் பொழுது போகவும், மற்றபடி வீடு வாயில் பெருக்குதல், பாத்திரந் தேய்த்தல் முதலிய தொழில்கள் செய்யவும், விசாலாக்ஷி மிகவும் புத்தியும் அனுபவமும் உண்மையும் உழைப்புமுடைய வேளாளக் கிழவியருத்தியை நியமனம் செய்து, அவளுக்கு வீட்டிலேயே போஜனமும் மாஸம் எட்டு ரூபாய் சம்பளமும் ஏற்படுத்தினாள். இவர்களுடைய வீட்டுச் செலவெல்லாம் நூறு ரூபாய்க்கு மேலாகாது. எனவே, மாஸந்தோறும் நானூறு ரூபாய்க்குக் குறையாமல் விசுவநாத சர்மா ஒரு பெரிய நாணயமுடைய குஜராத்தி வியாபாரியிடம் வட்டிக்குக் கொடுத்துவரத் தொடங்கினார். சிறிதுகாலத்துக்குப்பின் விசுவநாத சர்மா தமக்குப் பத்திரிகைத் தொழிலிலேயே ஏராளமான திரவியம் கிடைப்பதினின்றும், பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுப்பதாகிய சிரமமான தொழிலை விட்டுவிட்டார். காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோறும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவிவிட்டு சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணி வரை தமது எழுத்துவேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டி யுண்டு தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால், தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாக்ஷியையும், சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் ஸவாரி விடுவார். இரவு ஏழுமணிக்கு நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாக்ஷியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்னதான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத் தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாக்ஷி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவர் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில ஸமயங்களில் இருவரும் கைகோர்த்துக் கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப் போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும்.

இவ்விருவரும் ஒருவர்க்கொருவர் படைத்த காதல் மானஷிகமன்று; தெய்விகம். அது கலியுகத்துக் காதலன்று; கிருதயுகத்துக்காதல், ஒரே பெண்ணிடம் மாறாத காதல் செலுத்துவதாகிய ஏகபத்தினி விரதத்தில் ஸ்ரீராமபிரான் புகழ்பெற்றவன். ஆனால் அவனும் பத்தினியிடம் ஸம்சயங்கொண்டு இலங்கையிலே அவளைத் தீப் புகச் செய்தான். பின்பு உலகப் பழிக்கு அஞ்சி, அவளைக் காட்டுக்குத் துரத்தினான். இவ்விதமான களங்கங்கள் கூட இல்லாதபடி நமது விசுவநாத சர்மா சாக்ஷாத் வைகுண்ட நாராயணனே ஸ்ரீதேவியிடம் செலுத்துவது போன்ற பரம பிரேமை செலுத்தினார். சிவன் பார்வதி தேவியிடம் செலுத்தும் பக்தி நமது விசுவநாத சர்மாவால் விசாக்ஷியிடம் செலுத்தப்பட்டது. அவளும், இப்படிப் பரம ஞானியாகிய கணவன் தன்னிடம் தேவதா விசுவாஸம் செலுத்துவது கண்டு பூரிப்படைந்து தான் அவரை ஸாக்ஷாத் பகவானாகவே கருதி மஹத்தான பக்தி செலுத்தி வந்தாள். இப்படியிருக்கையிலே விவாகம் நடந்து ஒன்றரை வருஷமாவதற்குள் விசுவநாத சர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் மிகச் சிறந்த ஞானியாயினும் யோகாப்யாஸத்தால் முக்தி யடைவது ஸுலபமென்று கருதி மனதைப் பலவகைகளில் இடையறாமல் அடக்கி அடக்கி பலாத்காரஞ் செய்துகொண்டு வந்ததினின்றும், புத்தி கலங்கிவிட்டது. எழுத்து வேலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலேயே ஒரு நாட்டு வைத்தியர் வந்து பார்த்துச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கலாம் என்று சங்கரய்யர் சொன்னதற்கு விசாலாக்ஷி அது அவசியமில்லையென்று சொல்லிவிட்டாள்.

விசாலாக்ஷியின் கதி மிகவும் பரிதாபகரமாயிற்று. திடீரென்று ஸ்வர்க்கலோகத்தில் இந்திர பதவியினின்று தள்ளுண்டு மண்மீது பாம்பாகி விழுந்த நஹுஷன் நிலைமையை இவள் ஸ்திதி ஒத்ததாயிற்று.

காதலால் மோக்ஷமே பெறலாமென்று விசுவநாத சர்மா சொல்லியதை இவள் மனம் பூர்த்தியாக நம்பித் தனது அற்புத ஸௌந்தர்யமும் ஞானத் தெளிவுமுடைய அக்கணவனை ஒருங்கே மன்மதனாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் கருதிப் போற்றிவந்து அவனன்பினால் ஆனந்தபரவசமெய்தியிருந்தாள். அவனுக்கு இந்தக் கொடிய நோய் நேர்ந்ததைக் கண்டு துன்பக் கடலில் அமிழ்ந்திப் போய்விட்டாள். இடையிடையே விசுவநாத சர்மாவுக்கு புத்தி தெளியும் நேரங்களும் வருவதுண்டு. அப்போது, அவர் விசாலாக்ஷியை அழைத்துத் தன் அருகில் இருத்திக் கொண்டு:— “கண்ணே, நீ எதற்கும், எதற்கும், எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாதிருத்தலே முக்தி. கவலைப்படாதிருந்தால் இவ்வுலகத்தில் எந்த நோயும் வாராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய், அல்லது எவ்வித ஆபத்து, நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின், அவை தாமே விலகிப் போய்விடும். கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். பயமும், துயரமும், கவலையும் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தில் எக்காலமும் சாகாமல் வாழலாம். நான் என்னை மீறிச் சில பயங்களில் ஆழ்ந்து விட்டேன். அதனாலேதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கிறது. இது இன்னும் சிறிது காலத்துக்குள் நீங்கிப் போய்விடும். நமக்கோ பணத்தைப் பற்றிய விசாரமில்லை. நான் மூன்று வருஷம் எழுதாமலும், ஒரு காசுகூட சம்பாதிக்காமலும் இருந்த போதிலும் குஜராத்தியாளிடம் போட்டிருக்கும் பணத்தை வாங்கி சம்பிரமமாகச் சாப்பிடலாம். என்னைப் பற்றிய விசாரங்களுக்கும் உன் மனத்தில் இடங்கொடாதே.

இடுக்கண் வந்துற்றகாலை, எரிகின்ற விளக்குப்போல
நடுக்கமொன்றானுமின்றி நகுக; தாம் நக்க போதவ்
விடுக்கணையரியு மெஃகாம், இருந்தழு தியாவ ருய்ந்தார்?

என்று ஜீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் பாடி யிருக்கிறார். அதாவது, துன்பம் நேரும்போது நாம் சிறிதேனும் கலங்காமல் அதை நோக்கி நகைக்கவேண்டும். அங்ஙனம் நகைப்போமாயின் நமது நகைப்பே அத்துன்பத்தை வெட்டுதற்குரிய வாளாய்விடும். அவ்வாறின்றி வீணே உட்கார்ந்து துயரப்படுவதனால் மனிதருக்கு உய்வு நேராது (நாசமே எய்தும்). இந்த உபதேசத்தை நீ ஒரு போதும் மறக்காதே.என் கண்ணே, என் உயிரே, விசாலாட்சி, நீ என்ன நேர்ந்தாலும் மனத்தைத் தளரவிடாதே. நீ எக்காலமும் எவ்வித நோயுங் கவலையுமின்றி வாழவேண்டுமென்பதே என் முக்கிய விருப்பம். உன் மனம் நோக நான் பார்த்து ஸைஹிக்க மாட்டேன்” என்று பலபல சொல்லி மனைவியை சமாதானப்படுத்த முயல்வார். ஆனால், இவர் இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலேயே விசாலாக்ஷியின் கண்களில் ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிவிடும். அவள் கோவென்றழுது விம்முவாள். இதைக் கேட்ட விசுவநாத சர்மாவும் ஓலமிட்டழத் தொடங்குவார். இப்படி இவர்களிருவரும் கூடிப் பெருங்குரலிட்டழுது கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் வைத்தியர் வந்துவிட்டார். இந்தக் கோலத்தைப் பார்த்து வைத்தியர் விசாலாக்ஷியை காண்பதினின்று நேரும் துக்கத்தால் சர்மாவின் நோய் மிகுதிப்படுமென்றும், ஆதலால் இனிமேல் விசாலாக்ஷி தன் கணவனை அடிக்கடி தனியாக ஸந்திக்கக் கூடாதென்றும், அப்படியே ஸந்தித்த போதிலும் சில நிமிஷங்களுக்கு மேலே அவருடன் தங்கியிருக்கக் கூடாதென்றும் எப்போதுமே அவர் தன்னிடம் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் அவளிடம் தெரிவித்தார். அவளும் எவ்விதத்தாலும் தன்னால் தன் கணவனுக்கு அதிகக் கஷ்டம் நேரலாகாதென்ற நோக்கத்துடன் ஆஹாரம் போடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், சர்மாவை அடிக்கடி பார்க்காமலும், அவருடன் அதிகமாகப் பேசாமலும் ஒதுங்கியே காலங் கழித்து வந்தாள். ஆனால் இதனின்று விசுவநாத சர்மாவின் துயரமும் மனக்கலக்கமும் அதிகப்பட்டனவேயன்றிக் குறைவு படவில்லை. தம்மை விசாலாக்ஷி புறக்கணிக்கிறாளென்று சர்மா எண்ணவில்லை. அவர் அப்படி எண்ணக்கூடியவருமல்லர். ஆனால் தனது தேக நிலையைக் கருதி அவள் மிகவும் மனத்தளர்ச்சியும் துக்கமுமெய்தி அதுபற்றியே தோட்டத்துப் பங்களாவுக்கு அவள் அடிக்கடி வந்து தன்னைப் பார்க்காமலும், அதிகமாகத் தன்னிடம் வார்த்தையாடாமலு மிருக்கிறாள் என்று அவர் நினைத்துக் கொண்டார்.

இங்கு வியாதிகளின் ஸம்பந்தமாக ஒரு சிறு கதை சொல்லுகிறேன். வாந்திப் பேதிப் பிசாசு முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள மக்க நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாம். போகும் வழியில் பாரஸீகத்தில் பெரிய தபஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹமதிப் பக்கிரி அந்தப் பேயைக் கண்டு “எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அது கேட்டு வாந்தி பேதி சொல்லுகிறது:— “மக்க நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங்கியிருக்கிறது. நானா திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்கட்த்துக்குப் போகிறேன்” என்றது.

அது கேட்டு அந்த ஸந்நியாஸி:— “சிச்சீ! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள். அவர்களை நீ போய்க் கொல்ல நான் இடங் கொடுக்கமாட்டேன்” என்றார்.

அதற்கு வாந்திபேதிப் பேய் சொல்லுகிறது:— “ஸ்வாமியாரே, என்னையும் அல்லா தான் படைத்து மனித உயிர்களை வாரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார். உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்களே யன்றி மற்றில்லை. அவனின்றி யோர் அணுவுமசையாது. ஆதலால் எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது. முடியுமெனிலும் நீர் அதனைச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே புண்யாத்மாக்களென்றும் தர்மிஷ்டர்களென்றும் உண்மையான பக்தர்களென்றும் நினைத்து விடக்கூடாது. எத்தனையோ பாவிகளும், அதர்மிஷ்டரும், கொரான் விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத்மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடையாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமேயன்றி புண்யவான்களும் சாகத்தான் செய்கிறார்கள். வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என்னால் துரிதமான மரணமெய்துதல் மனிதருக்கு நன்றேயன்றித் தீங்காகாது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனிலும், மஹானாகிய உம்முடைய மனதுக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையன்று சொல்லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத்தனை பேரைத்தான் கொல்லலாமென்று தொகை குறிப்பிட்டுக் கட்டளை யிடும். அந்தத் தொகைக்கு மேலே நான் ஒற்றை உயிரைக்கூடக் கொல்வதில்லையென்று பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன்” என்றது.

இங்ஙனம் வாந்தி பேதிப் பேய் சொல்லியதைக் கேட்ட முனிவர்:— “சரி; போ. அங்கு அநேக லக்ஷகணக்கான ஜனங்கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஓராயிரம் பேரைத் தான் கொல்லலாம். அதற்கு மேல் ஓருயிரைக்கூடத் தீண்டலாகாது. ஜாக்கிரதை! போய் வா“ என்றார்.

நல்லதென்று சொல்லிப்பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக் கொண்டு மக்கத்துக்குப் போயிற்று. அப்பால் சில தினங்கள் கழிந்தபின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லக்ஷம் பேர் வாந்தி பேதியால் இறந்து போயினரென்ற செய்தி பக்கரியின் செவிக்கெட்டிற்று. அவர் தம்மை வாந்திப் பேதிப் பேய் வஞ்சித்து விட்டதாகக் கருதி மிகவும் கோபத்துடனும் மனவருத்தத்துடனுமிருந்தார். மறுநாள் வாந்தி பேதிப் பேய் அந்த வழியாகவே மக்கத்தினின்றும் இந்தியாவுக்கு மீள யாத்திரை செய்து கொண்டிருக்கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று. பக்கிரி பெருஞ் சினத்துடன் அப்பேயை நோக்கி:— “துஷ்டப் பேயே, பொய் சொல்லிநாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லை யென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு, மக்கத் திலே போய் லக்ஷம் ஜனங்களை அழித்து விட்டனையாமே! உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?” என்றார்.

இதைக் கேட்டு வாந்தி பேதிப் பேய் கலகலவென்று சிரித்தது. அது சொல்லுகிறது:— “கேளீர், முனிசிரேஷ்டரே, நான் உமக்குக் கொடுத்த வாக்குறுதி தவறாதபடியே ஆயிரம் பேருக்குமேல் ஓருயிரைகூடத் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டவர். மற்றவர்கள் தமக்குத் தாமே பயத்தால் வாந்தியும் கழிச்சலும் வருவித்துக் கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?“ என்றது.

அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு:— ஆஹா! ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், ஸம்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலை செய்துகொண்டிருக்கிறாயே! உன்னுடைய இந்த மஹா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டிவிடும் மஹா பயங்கரமான விதியையும் நினைக்கும்போதே என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன். நான் என் செய்வேன்! நான் என் செய்வேன்! சுப்! நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹோ அக்பர். அல்லா மஹான். அவருடைய திருவுளப்படி எல்லாம் நடைபெறுகிறது. அவர் திருவடிகள் வெல்லுக“ என்று சொல்லி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதித் தியானம் செய்யத் தொடங்கினார். பேயும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டது.

இந்த மாதிரியாக நான் ஒரு கதை வாசித்திருக்கிறேன். நோய்க்கு முக்கியமான காரணம் ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம், கவலை, கோபம், ஸம்சயம், பொறாமை, வெறுப்பு, அதிருப்தி முதலிய விஷகுணங்களேயாமென்பது இந்தக் கதையின் பொருள். இதை நான் அங்கீகரிக்கிறேன். உள்ளத்திலே தோன்றும் அச்சம் முதலியனவே நோய்களைப் பிறப்பிக்கின்றன என்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் அங்ஙனம் பிறக்கும் நோய்களை நன்கு போஷணை செய்து வளர்ப்பதும், அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமாகிய தொழில்கள் பெரும்பாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மையெனவே நான் நினைக்கிறேன்.

இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது, வைத்தியர்களெல்லாருமே தமது சாஸ்த்திரத்தை நன்று கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது மனமறிந்த அயோக்யர்-களென்றாவது, வேண்டுமென்று மனிதனைக் கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல விரும்புவதாக யாரும் நினைத்து விடலாகாது.

வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன். வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்த்ரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும் ஜீவகாருண்யத்தில் சிறந்த மஹான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும், வியாதிகள் பல்குவதற்கும், மரணம் இங்ஙனம் மனிதரைப் பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாகத் தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம் ஏககாலத்தில் உண்மையாகுமென்பதைத் தெரிவிக்கிறேன்.

ஆனால், ஏற்கெனவே இந்த அத்தியாயம் மிக நீண்டு போய்விட்டது. நம்முடைய கதையின் போக்கோ சிறிது நேரம் விசாலாக்ஷியையும் விசுவநாத சர்மாவையும் விட்டுப் பிரிந்து வேறு சிலருடைய விருத்தாந்தங்களைக் கூறும்படி வற்புறுத்துகின்றது. ஆதலால் ௸ வைத்தியர் ஸம்பந்தமான விவகாரத்தைப் பின் ஓரத்யாயத்தில் விளக்கிக் காட்டுகிறேன்.

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

1907 ஆம் வருஷம்—அதாவது விசாலாக்ஷியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக் கப்பால்— மே மாஸத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச்வீதியில் ஹை கோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு, அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

“காபி போட்டுக் கொண்டு வரலாமா?” என்று முத்தம்மா கேட்டாள்.

“எனக்கு வேண்டியதில்லை. பகலிலே உண்ட ஆகாரம் இன்னும் என் வயிற்றில் ஜீரணமாகாமல் அப்படியே கிடக்கிறது. இன்றிரவு சாப்பிடலாமா, உபவாசம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கையில் காபி குடிப்பது உடம்புக்கு மிகவும் கெடுதியென்று நினைக்கிறேன். உனக்கு வேண்டுமானால் காபி போட்டுக் கொண்டு வந்து குடித்துக் கொள்” என்றார் சோமநாதய்யர்.

“எப்போது பார்த்தாலும் ஏதாவது நோய் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதுவும் என்னைக் கண்டால் போதும்; உடனே நீங்கள் நோயழுகை அழுவதற்கு ராஜா. ‘இன்றைக்கு என் உடம்பு சௌக்யமாக இருக்கிறது. ஒரு வியாதியுமில்லை’ என்று உங்கள் வாயினாலே சொல்ல ஒரு தரங்கூடக் கேட்டதில்லை. என் உயிர் உள்ளவரை அந்த நல்ல வார்த்தையை நான் ஒரு தரமேனும் காது குளிரக் கேட்கப் போகிறேனோ, அல்லது கேட்காமலே பிராணனை விடப் போகிறேனோ, தெரியாது. கை உளைச்சல், கால் உளைச்சல், அங்கு வீக்கம், இங்கு குடைச்சல், வயிற்றுவலி, தலைவலி,— அஜீர்ணம், அஜீர்ணம், அஜீர்ணம்—எப்போதும் இதே அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன், அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு— சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்” என்றாள்.

சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். ”நன்றி கெட்டநாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு ‘பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?’ நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் ஸம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப்போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டி யிருக்கிறது. நீதிஸ்தலத்திலே போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி, வேசைத் தொழிலும் சரி, தர்மத்தைக் கெடுத்து இஹத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன் பொருட்டாகப் பாடு படுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப் போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை. தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந் தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்பட்டு மலச்சிக்கல் உண்டாக்குகிறது. மலச்சிக்கலே சர்வ ரோகங்களுக்கும் ஆதாரமென்று நவீன வைத்திய சாஸ்திர பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

ஆதலால் உடம்பில் எப்போதும் ஓய்வின்றி ஏதேனும் வியாதி இருந்து கொண்டேயிருக்கிறது. இதனாலும் குழந்தைகளுக்கு உடம்புக்கேதேனும் வந்தால் அப்போது என் மனத்திலுண்டாகும் பெருந் துயரத்தாலும் அவர்களுடம்பு நேரே இருக்க வேண்டும், கடவுளே, என்றெண்ணி நான் எப்போதும் ஏக்கப்படுவதனாலும், தலை மயிர் நரைத்துப் போய்விட்டது. மண்டையில் வழுக்கை விழுந்துவிட்டது. உனக்காகப் பாடுபட்டே நான் கிழவனாய் விட்டேன். உன் தொல்லையாலேயே என் பிராணன் போகப் போகிறது. அடா, தீராத நோயிருந்தால், எப்படி சகிப்து? ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வாரமா, இரண்டு வாரமா, ஒரு மாசமா, இரண்டு மாசமா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, உன்னுடன் கூடி வாழத் தொடங்கிய கால முதலாக இன்றுவரை எப்போதும், ஒரு க்ஷணந் தவறாமல் என் உடம்பு ஏதேனம் ஒரு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. இத்தனை நோயையும் இத்தனை கஷ்டத்தையும் பொறுத்துக்கொண்டு என் உயிர் இதுவரை சாகாமலிருக்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம். இவ்வளவுக்கும் நான் உன்னிடமிருந்து பெறும் கைம்மாறு யாது?பேதைச் சொற்கள், மடச்சொற்கள், பயனற்ற சொற்கள், மனதைச் சுடும் பழிச் சொற்கள், காது நரம்புகளை அறுக்கும் குரூரச் சொற்கள்—இவையே நான் பெறும் கைம்மாறு.

ஓயாமல் 'புடவை வேண்டும்', 'ரவிக்கை வேண்டும்', 'குழந்தைகளுக்கு நகைகள் வேண்டும்,— வீண் செலவு! வீண் செலவு! வீண் செலவு!—என்ன துன்பம், என்ன துன்பம்! என்ன துன்பமடா, ஈசா! எனக்கிந்த உலகத்தில் சமைத்து விட்டாய்! இந்தக் கஷ்டத்தையெல்லாம் இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ? என் பிராணன் என்றுதான் நீங்கப் “போகிறதோ?” என்று சொல்லி சோமநாதய்யர் அழத் தொடங்கிவிட்டார்.

அப்போது முத்தம்மா:— “அழுகையை யெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். புன்னகை, ஸந்தோஷம், சிருங்கார ரஸம் இதற்கெல்லாம் வேறு பெண் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் என்னைத் தள்ளிவிட்டு வேறு ஸ்திரீயை பஹிரங்கமாக விவாகம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

இன்னொரு புதுப் பெண்—சிறு பெண்ணை மணம் புரிந்துகொண்டு அவளுடன் இன்புற்று வாழத் தொடங்குவீர்களாயின் உங்களுக்குள்ள மனக்கவலை யெல்லாம் நீங்கிப் போய்விடும். பிறகு புத்தியில் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். அப்பால் கோர்ட்டில் ஸாமர்த்திய மாகப் பேசும் திறமை மிகுதிப்பட்டு, உங்களுக்கு வக்கீல் வேலையில் நல்ல லாபம் வரத் தொடங்கும். உடம்பிலுள்ள வியாதிகளெல்லாம் நீங்கிப் போய்விடும். நீங்கள் ஸந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள். மலச்சிக்கலால் எல்லா வியாதிகளும் தோன்றுவதாகவன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள். எங்கள் அத்தங்கார் விசாலாக்ஷி அப்படிச் சொல்லமாட்டாள். அவளும் உங்கள் போலே பெரிய வேதாந்தியும் ஞானியுமாதலால் அவளுடைய கருத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பணக்கவலைகளாலேயும் மனக்குறைவுகளாலேயுந்தான் வியாதிகள் தோன்றுகின்றன என்பது விசாலாக்ஷியின் கொள்கை. நீங்கள் வேறு விவாகம் செய்து கொள்ளுங்கள். நானோ மூன்றுப் பிள்ளைகளைப் பெற்றுக் கிழவியாய் விட்டேன். புதிதாக ஒரு சிறு பெண்ணை மணம்புரிந்து கொண்டால் உங்களுக்கு மனக்குறைவுகளெல்லாம் நீங்கிப் போய்விடும். அப்பால் யாதொரு வியாதியும் வராது” என்றாள்.

இது கேட்டு சோமநாதய்யர்:- ”உன்னையும் உன் குழந்தைகளையும் வைத்துக் காப்பாற்றுவதிலேயே எனக்குச் சுமை தலை வெடித்துப் போகும் போலிருக்கிறது. இன்னும் ஒருத்தியைப் புதிதாக மணஞ் செய்து கொண்டு அவளையும் அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளையும் இந்த ஜாப்தாவுடன் சேர்த்து சம்க்ஷணை பண்ணுவதென்றால் என் தலை நிச்சயமாக வெடித்தே போய்விடும். உன்னைத் தள்ளி வைக்கும்படி அடிக்கடி சிபார்சு செய்கிறாய். உன்மீது என்ன குற்றஞ் சுமத்தித் தள்ளி வைப்பேன்? பிள்ளையில்லாத மலடியென்று சொல்லி நீக்குவேனா? பொய்யாகவும், எனக்கு மகத்தான அவமானம் நேரும்படியாகவும் உன்மீது வியபிசார தோஷத்தை ஆரோபித்து விலக்கி வைப்பேனா? அப்படியே ஏதேனு மொரு முகாந்தரம் சொல்லி விலக்கி வைத்தாலும் உன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றும் கடமை என்னை விட்டு நீங்காது. மேலும் கிழவனாய்விட்ட நான் இப்போது ஒரு சிறு பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அவளைப் போலீஸ் பண்ணிக் காவல் காக்குந் தொழில் எனக்குப் பெருங் கஷ்டமாகிவிடும். ஆதலால் உன்னைத் தள்ளிவைத்துவிட்டு வேறு விவகாம் செய்து கொள்ளும்படி நீ தயவுடன் சிபார்சு செய்யும் வழக்கத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்ளும்படி, அதாவது, என் காது நரம்புகளையும் ஹிருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும், இடையின்றியும், மறவாமலும், மீட்டுமீட்டும் உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின் ப்ரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.

“சரி, எனக்குத் தலைநோகிறது. நான் கீழே போய்க் காபி போட்டு சாப்பிடப் போகிறேன்“ என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.

“காப்பி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?“ என்று சோமநாதய்யர் கேட்டார்.

“எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்ச மிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகளெல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்று தான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடி வாழ்வதில் நீங்கள் அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்கு தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி. அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ, அது வரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் ஸஹித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தி யேது? நீங்களாவது என்னை விலக்கி வைத்து விட்டு மற்றொருத்தியை விவாகம் செய்து கொண்டு ஸௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச் செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?” என்று முத்தம்மா சொன்னாள்.

”அடியே நாயே, நான் மறுவிவாகம் செய்துகொள்ளலாமென்ற வார்த்தையை என் காது கேட்க உச்சரிக்கக் கூடாதென்று நான் சொன்னேனோ, இல்லையோ? இப்போதுதான் சொல்லி வாய் மூடினேன். மறுபடி அந்தப் புராணத்தை எடுத்து விட்டாயே உனக்கு மானமில்லையா? வெட்கமில்லையா? சூடு சுரணையில்லையா? இதென்னடா கஷ்டமாக வந்து சேர்ந்திருக்கிறது? இவள் வாயை அடக்குவதற்கு ஒரு வழி தெரியவில்லையே, பகவானே! நான் என்ன செய்வேன்? ஏதேனும் ஒரு வியாதி வந்து இவள் வாயடைத்து ஊமையாய் விடும்படி கிருபை செய்யமாட்டாயா, ஈசா?” என்று கூறி சோமநாதய்யர் பிரலாபித்தார்.

”சரி” போதும், போதும், காது குளிர்ந்து போய் விட்டது. என்னைக் காபி குடித்துவிட்ட மறுபடி இங்கு வரும்படி சொன்னீர்களே, எதற்காக?” என்று முத்தம்மா மீண்டுமொருமுறை வினவினாள்.

”காபி குடித்துவிட்டுவா. பிறகு விஷயத்தைச் சொல்லுகிறேன். முதலிலேயே இன்ன காரணங்களுக்காகத்தான் அழைக்கிறேன் என்று உனக்கு முச்சலிக்கா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால்தான் வருவாயோ?” என்று சோமநாதய்யர் கர்ஜித்தார்.

“சரி; வருகிறேன். இதற்காகத் தொண்டையைக் கிழித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஹைகோர்ட்டில்லை; வீடு“ என்று சொல்லி முத்தம்மா அந்த ஏழைப் பிராமணன் மீது ஒரு கடைசி அஸ்திரத்தை பிரயோகம் செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

அவள் போனவுடன் ஸோமநாதய்யர்:— “ஹைகோர்ட்டில் எனக்கு யாதொரு லாபமும் கிடைக்கவில்லையாம். அதற்காகக் கேலி பண்ணிவிட்டுப் போகிறாள். இந்த நாயின் வாயை அடக்க ஒரு வழி தெரியவில்லையே!“ என்று நினைத்து வருந்தினார்.

“வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.“

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள். கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப் படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. மேலும், மாதர்கள் தாய்மாராகவும் ஸஹோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள். அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் ஸம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந் திறனும், பாயுந் திறனும் கொண்டிருப்பது மட்டுமே யன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேடும். அவ்விதமான பொறுமை பல மில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன ஸங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன, மனத் திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் ஸஹிக்குந் திறமையற்றவனவாகின்றன. மனவுறுதி யில்லாத ஒருவன் ஏதேனும் கணக் கெழுதிக் கொண்டிருக்கும் போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தைக் குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும். இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாஸமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு ஸமான மாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமை யில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமே யன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக் கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக் கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி யுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் “பொறுத்தார் பூமி யாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழி யேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் ஸஹிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும் பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு, குளிரைத் தாங்கும் படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். இது போலவே ஸுக, துக்கங்களை ஸஹித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் ஸஹிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்ப மெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண்கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல ஸமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும், ஸஹோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில ஸமயங்களில்—அனேக ஸமயங்களில்—நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மஹாமடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் ப்ரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், ஸாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்த்ரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மனைவி யாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

இந்த ஸங்கதிகளெல்லாம் ஸோமநாதய்யருக்கு மிகவும் இலேசாகத் தென்படலாயின. சில மாஸங்களுக்கு முன்பு அவருடைய கிழத் தாயாகிய ராமுப் பாட்டி இறந்து போய்விட்டாள். அவள் சாகுமுன்பு இவரைத் தனியாக அழைப்பித்து இவருடன் சிறிது நேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்:—

“அடே, அய்யா, ஸோமூ! உன் பொண்டாட்டி முத்தம்மாளை நீ ஸாமான்யமாக நினைத்து விடாதே. அவள் மஹா பதிவிரதை. உன்னை ஸாக்ஷாத் பகவானுக்கு ஸமமாகக் கருதிப் போற்றி வருகிறாள். உன்னுடைய ஹிதத்தைக் கருதியும் உனக்குப் பொறுமை விளைவிக்கும் பொருட்டாகவும் அவள் சில சமயங்களில் ஏறுமாறாக வார்த்தை சொன்னால், அதைக் கொண்டு நீ அவளிடம் அதிக அருவருப்பும் கோபமும் எய்தலாகாது. நானோ சாகப் போகிறேன். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் என் உயிர் தறுகி நிற்குமென்று தோன்றுவில்லை. நான் போனபின் உனக்கு அவளைத் தவிர வேறு கதியேது? தாய்க்குப் பின் தாரம். தாய் இருக்கும் போதே ஒருவன் அவளிடம் செலுத்தும் உண்மைக்கும் பக்திக்கும் நிகரான உண்மையையும் பக்தியையும் தன் மனைவி யிடத்திலும் செலுத்த வேண்டும். இதுவரை நீ முத்தம்மாளை எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுத்தி வதைத்து வதைத்து வேடிக்கை பார்த்தாய்விட்டது. கொண்ட பெண்டாட்டியின் மனம் கொதிக்கும் படியாக நடப்பவன் வீட்டில் லக்ஷிமிதேவி கால் வைக்க மாட்டாள். அந்த வீட்டில் மூதேவி தான் பரிவாரங்களுடன் வந்து குடியேறுவாள். இந்த வார்த்தையை எப்போதும் மறக்காதே. இதை ஆணி மந்திரமாக முடிச்சுப்போட்டு வைத்துக் கொள். குழந்தாய், ஸோமு, அந்தப் பராசக்தி லலிதாம்பிகை தான் உனக்கும் உன் பெண்டு பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளும் மாறாத ஆரோக்கியமும் கொடுத்து, உங்களை என்றும் ஸந்தோஷ பதவியிலிருத்திக் காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும்” என்றாள்.

அந்த வார்த்தை அவருக்கு அடிக்கடி நினைப்புக்கு வரலாயிற்று. “அத்தை யருமை செத்தால் தெரியும்“ என்பது பழமொழி. ராமுப்பாட்டியின் முதுமைக் காலத்தில், ஸோமநாதய்யர் அவளை யாதொரு பயனுமில்லாமல் தன்னுடைய ஹிம்சையின் பொருட்டாகவும் நஷ்டத்தின் பொருட்டாகவும் நிகழ்ச்சி பெற்று வரும் ஒரு கிழ இருமல் யந்திரமாகப் பாவித்து நடத்தி வந்தார். அவள் ஒரே யடியாகச் செத்துத் தீர்ந்த பிறகுதான், அவருடைய மனதில் அவள் மிகவும் மஹிமை பொருந்திய தெய்வ மாகிய மாதா என்ற விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற வசனம் அவருக்கு உண்மைப் பொருளுடன் விளங்கலாயிற்று. தாயிற் சிறந்த கோயிலில்லை. உலகத்தையெல்லாம் படைத்துக் காப்பவளாகிய ஸக்ஷாத் ஜகன்மாதாவே தனக்குத் தாய் வடிவமாக மண்மீது தோன்றிக் காப்பாற்றுகிறாள். ”புருஷ ஏவேதம் ஸர்வம்”—என்று வேதம் சொல்லுகிறது. இவ்வுலகத்திலுள்ள பொருளெல்லாம் கடவுளேயென்பது அந்த வாக்கியத்தின் அர்த்தம். ”ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்”—உலக முழுதும் கடவுள் மயம். நம் வீட்டை நாயாக நின்று காப்பதும் கடவுள் தான் செய்கிறார். தோழனாகவும பகைவனாகவும், ஆசானாகவும் சீடனாவும், தாய் தந்தையாராகவும், பெண்டு பிள்ளைகளாவும் நம்மைக் கடவுளே சூழ்ந்து நிற்கிறார். எனிலும் பிற வடிவங்களால் அவர் நமக்குச் செய்யும் உபகாரங்களைக் காட்டிலும் தாய் தந்தையராக நின்று அவர் செலுத்தும் கருணைகள் சால மிகப் பெரியன. தாய் தந்தையரிருவருமே கடவுளின் உயர்ந்த விக்ரஹங்களாக வணங்குதற்குரியர். அவ்விருவருள் தாயே நம்மிடத்து அதிக தெய்வீகமான அன்பு செலுத்துவது கொண்டும், நாம் கைம்மாறிழைக்க முடியாத பேரருட் செயல்கள் தந்தையிடமிருந்து நமக்குக் கிடைப்பதைக் காட்டிலும் தாயினிடமிருந்து அதிகமாகக் கிடைப்பது கருதியும், அவள் ஒருவனாலே தந்தையைக் காட்டிலுங்கூட உயர்வாகப் போற்றப்படத் தக்கவள். இதனைக் கருதியே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற வசனத்தில் தந்தையின் பெயருக்கு முன்னே தாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சோமநாதய்யர் காமம், குரோதம் முதலிய சேஷ்டைகள் உடனே அடக்கிக் கொள்ளக்கூடிய சக்தி பெறாவிடினும், கல்வி, கேள்விகளால் அவருக்கு ஏற்பட்டிருந்த புத்தித் தெளிவு இடைக்கிடையே அந்தக் காம முதலிய தீயகுணங்களைக் கண்டித்து நன்கு சுடர் வீசும் ஸமயங்களுமிருந்தன. அந்த நேரங்களில் அவருடைய புத்திக்குப் பெரிய பெரிய உண்மைகள் புலப்படுவதுண்டு. மேலும் தாம் சுமார் இரண்டு வருஷங்களின் முன்னே விசாக்ஷியிடம் அவமானப்பட்ட கால முதலாக, அவர் பரஸ்த்ரீகளின் விஷயத்தில் புத்தியைச் செலுத்தும் வழக்கத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வந்தார். ”பாவத்தின் கூலியே மரணம்” என்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது. துக்கத்தையும் பயத்தையும் இவற்றால் விளையும் மரணத்தையும் ஒருவன் வெல்ல விரும்புவானாயின், இங்கு பயங்களுக்கும் துக்கங்களுக்கும் முக்கிய ஹேதுவாக இருக்கும் பாவங்களை விட்டு விட வேண்டும். யாதேனுமொரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டுக் கைதேறி விடுவானாயின், பிறகு மற்றப் பாவங்களை வெல்வதில் அவனுக்கு அத்தனை கஷ்டமிராது. அவனுக்கு அசுர யுத்தத்தில் தேர்ச்சியுண்டாய்விடும். அசுரர்களென்பன பாவங்கள். தேவர்கள் ஹிதம் பண்ணும் சக்திகள்.

எப்போதுமே சோமநாதய்யர் பாவச் செய்கைகளுக்கு அதிகமாக ஈடுபட்டவரல்லர். முக்கியமாக வியபிசார தோஷத்துக்கு அவர் அதிக வசப் பட்டவரல்லர். பெரும்பாலும், இப்பாவத்தை அவர் மானஸிகமாகச் செய்து வந்தவரே யல்லாமல் கார்யாம்சத்தில் அதிகமாக அனுஸரித்தது கிடையாது. ஆனால் யேசு கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்:— “அன்ய ஸ்திரீகளுடன் ஸம்பந்தப் படுவோர் மாத்திரமே வியபிசாரமாகிய பாதகத்துக்காட்பட்டோர் என்று கருதுதல் வேண்டா. வெறுமே மனத்தால் ஒருவன் தன் மனைவி யொழிய மற்றொரு ஸ்த்ரீயை விரும்புவானாயின், அவனும் வியபிசார பாவத்துக்குட் பட்டவனே யாவான்” என்கிறார். இந்த விஷயத்தை உலகத்தார் ஸாதாரணமாக கவனிப்பது கிடையாது. பிறனுடைய சொத்தைத் திருடி, ஊர்க்காவலாளிகளின் விசாரணைகளில் அகப்பட்டு, தண்டனை யடைந்து சிறை புகுந்து வாழ்வோன் மாத்திரமே கள்வனென்று பாமரர்கள் நினைக்கிறார்கள். பிறனுடைய சொத்தை அபஹரிக்க வேண்டுமென்று மனதில் எண்ணினால் போதும். அங்ஙனம் எண்ணிய மாத்திரத்தாலேயே ஒருவன் கள்வனாகி விடுகிறான். கள்வனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படாவிடினும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.

ஆனால், இள மூங்கிலை வளைத்து விடுதல் ஸுலபம், முற்றிப் போன மூங்கிலை வளைக்க முடியாது. அதை வளைக்கப் போகுமிடத்தே அது முறிந்து போய்விடும். மனித ஹ்ருதயத்தை இளமைப் பிராயத்தில் சீர்திருத்துதல் ஸுலபம். பின்னிட்டு முதிர்ந்த வயதில் மனித ஹ்ருதயத்தை வளைத்தல் மூங்கிலை வளைப்பது போல் ஒரேயடியாக அஸாத்தியமன்று. ஆனால் மிகவும் சிரமமான வேலை. இது பற்றியே முன்னோரும் “இளமையிற் கல்” என்று உபதேசம் புரிந்தனர்.

எனிலும், வருந்தினால் வாராததொன்று மில்லை. மனித ஹிருதயம் எப்போதுமே முற்றிப்போன மூங்கிலாகும் வழக்கமில்லை. இளமை யிலிருப்பதைக் காட்டிலும் வயதேறிய பிறகு தவம் முதலியவற்றைப் பயிலுதல் மிகவும் சிரமமென்பது கருதி எவனும் நெஞ்சந் தளர்தல் வேண்டா. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம். இதைப் பற்றியே ஸோமநாதய்யர் அடிக்கடி யோசித்துக் கடைசியாகத் தவம் பயிலுதல் அவசியமென்று நிச்சயித்துக் கொண்டார். தவமென்றால் காட்டிலே போய், மரவுரியுடுத்து கந்த மூலங்களை புஜித்துக்கொண்டு செய்யும் தவத்தை இங்க பேச வில்லை. ஆளுதலாகிய உண்மைத் தவத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆத்ம ஞானத்தை—அதாவது, எல்லாம் ஒன்று; எல்லாம் கடவுள்;எல்லாம் இன்பம் என்ற ஞானத்தை—ஒருவன் தனது நித்திய அனுபவத்தில் பயன்படுத்தி நன்மையெய்த வேண்டுமாயின் அதற்காக அவன் கைக் கொண்டொழுக வேண்டிய ஸாதனங்களில் மிக உயர்ந்தது தவம்.

அதாவது, இந்திரியங்களை அதர்ம நெறிகளில் இன்புற வேண்டுமென்ற விருப்பத்தினின்றும் தடுத்தல். இந்திரியங்களைத் தடுத்தலாவது மனதைத் தடுத்தல். மனமே ஐந்து இந்திரிய வாயில்களாலும் தொழில் புரியும் கருவி. சஞ்சலம், பயம் முதலிய படுகுழிகளில் வீழ்ந்து தவிக்காதபடி மனத்தைக் காத்தலும் வலியது. மற்றெல்லாப் பாவங்களுக்கும் காரணமாவது, பயம், எனவே, பயத்தை வென்றால் மற்றப் பாவங்களை வெல்லுதல் எளிதாய் விடும். மற்றப் பாவங்களை வென்றால், தாய்ப் பாவமாகிய பயத்தை வெல்லுதல் பின் எளிதாம். இவ்விரண்டு நெறியாலும் தவத்தை ஏக காலத்தில் முயன்று பழகுதல் வேண்டும்.

இவ்வக¨த் தவத்தையே சோமநாதய்யர் விரும்புவராயினர். மேலும் தவங்களில் உயர்ந்தது பூஜை. மனத்தைத் தீய நெறியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியிலே செலுத்துதல். மனதைச் செலுத்துதற்குரிய நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. அன்பால் செய்யப்படும் உபசாரங்களே பூஜைகள் எனப்படும். எல்லாமாகிய கடவுளிடத்திலும், கடவுளாகிய எல்லாப் பொருள்கள், விசேஷமாக எல்லா உயிர்களிடத்திலும், இடையாறத நல்லன்பு செலுத்துவதும், அந்த அன்பின் கரியைகளாகிய வழிபாடுகள் புரிவதுமே மிகச் சிறந்த தவம்; அதுவே அறங்களனைத்திலும் பேரறம். அஃதே மோக்ஷ வீட்டின் கதவு. அன்பே மோக்ஷம். அன்பே சிவம். இதனையே பகவான் புத்தரும் நிர்வாணமாகிய மஹா முக்திக்குக் கருவியாகக் கூறினார். 'கடவுளிடத்தும் மற்றெல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மோக்ஷத்துக்கு வழியென்று யேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். மேலும், மற்ற மனிதர்களைத் தொழுதலும் வழிபடுதலும்—அவர்களிடத்துத் தீராத அன்பு செலுத்தி அவர்களுக்குத் தொண்டு புரிதலும்—இல்லாதோன் கடவுளுக்குச் செய்யும் ஜபம் முதலிய கிரியைகளால் கடவுளிடத்தே அன்புடையவன் என்று தன்னைக் கூறிக் கொள்ளுதல், வெறும் வேஷமாத்திரமேயன்றி உண்மையான தெய்வ பக்தியைக் காட்டுவதாகாது என்று கிறிஸ்து நாதர் உபதேசித்தருளினார். கண்ணுக்குத் தெரியும் கடவுளராகிய மனிதரிடத்தே அன்பு செய்யாதவன் கண்ணுக்குத் தெரியாத ஜகத்தின் மூல ஒளியாகிய ஆதிக் கடவுளிடத்தே அன்பு செய்ய வல்லன் ஆகமாட்டான் என்று கிறிஸ்து நாதர் சொல்லுகிறார்.

இதனையெல்லாம் ஸோமநாதய்யர் நன்றாக அறிந்தவராதலால், மற்ற ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்திப் பழகுவதை முக்கிய விரதமாக எடுத்துக் கொண்டார். மற்ற உயிர்களிடத்திலும், விசேஷமாக மற்ற மனிதரிடத்திலும் உண்மையான அன்பு செலுத்திப் பழகுதல் ஸாமான்யமான காரியமன்று. சமஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்த கோடி ஸ்ருஷ்டிகளில் அனந்த கோடி ஜன்மங்களில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காகாரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும் பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை முதலிய முதலிய த்வேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பதுமுண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் ஸஹிப்பில்லாமை, அஸூயை முதலிய குணங்களுடையோராகின்றனர்.

இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ ஜீவ காருண்யமும் சர்வ ஜவீ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை ஸோமநாதய்யருக்குண்டாயிற்று. எனவே, அவர் ஆடு, மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை. ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும் மிகுந்த முதுமையால் உருச் சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்தி முகஞ் சுளிப்பதை நிறுத்தி, அவர்களை மானஸீகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக் கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார்.

இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும விளைவித்துத் தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிப்படும் மனிதர்களைக் காணும் போது முகமலர்ச்சி கொள்ளவும், அவர்களிடம் தாழ்மை யுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப் படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.

இஃதெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இஃதனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் ஸுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். அவளைக் கண்டவுடனே முகத்தைச் சுளிக்காமலிருக்க அவருக்கு ஸாத்தியப்படவில்லை. பரஸ்திரீகளிடம் காமமுறாமலிருப்பது அவருக்கு நாளடைவில் ஒருவாறு எளிதாயிற்று. ஆனால், முத்தம்மாளிடம் ப்ரேமை செலுத்துவதெப்படி? விவாகம் செய்து, ருதுசாந்தி முடிந்து சில மாஸங்கள் வரை அவருக்கு முத்தம்மாளுடைய உறவும் ஊடாடுதலும் இன்பம் பயந்து கொண்டிருந்தன. அப்பால் அவை அவருக்கு சுகஹேதுக்களாகாமல் மாறிப் போய்விட்டன. பதினைந்தாம் வயதில் அந்த பாக்கியவதி அவருடைய சயன வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தையையும் கொண்டு வரத் தொடங்கினாள். அவர் அவளை முத்தமிடப் போகும் ஸமயத்தில் அந்தக் குழந்தை வீறிட்டழத் தொடங்கிற்று. அல்லது மல மூத்ர விஸர்ஜனம் செய்து அவளுடைய மடியையும் இவருடைய வேஷ்டியையும் அசுத்தப்படுத்தலாயிற்று. அன்றைக்குத் தொடங்கிற்று பெருங் கஷ்டம். பிறகு புதிய குழந்தைகள் இரண்டு பிறந்தன. தமக்கும் தம்முடைய மனைவிக்கும் இளமைப்பிராயம் தவறிவிட்டன என்ற எண்ணம் அக்குழந்தைகளைப் பார்க்குநதோறும் அவருள்ளத்தில் எழலாயின. இதினின்றும் அவர் குழந்தைகளிடம் அருவருப்படைதல் என்ற பரம மூடத்தனத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தப்பினார். ஆனால் அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அதிக மூடத்தன மாகத் தமது பத்தினியை நோக்கும் பொழுதெல்லாம் அவளிடத்தில் வெறுப்பெய்துவதும் முகத்தைச் சுளிப்பதுமாகிய தீயவழக்கத்தில் தம்மையறியாது விழுந்து, நாளுக்குநாள் அந்தப் படுகுழியில் தமது சித்தத்தை அதிக ஆழமாக அமிழ்ந்துபோக இடங் கொடுத்தார். இத்தனை காலத்துக்கு அப்பால் இவருக்குண்டாகிய புதிய தெளிவின் பயனாக, இப்போது அந்த மனைவியிடம் அன்பு செலுத்த முயற்சி பண்ணினார். அந்த முயற்சி இவருக்கு ஆரம்பத்தில் வேப்பெண்ணெய் குடிப்பதுபோல் மிகவும் கசப்பாக இருந்தது. அவளோ, இவரிடத்திலே தோன்றிய மாறுதலைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டாளாயினும், இவருடைய புதிய அன்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் இவரைப் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கினாள். எனவே இவர் நம்பிக்கையையும் ஞானத்தையுந் துணைக் கொண்டு வேப்பெண்ணெய் குடிக்கப்போன இடத்தில் இவருடைய முதுகில் சவுக்கடிகள் வேறு விழலாயின. மஹா பதிவிரதையாகிய முத்தம்மா தன்னுடைய கணவன் இங்ஙனம் வேப்பெண்ணெய் குடிக்க வந்த ஸமயங்களில், அவருக்குச் சர்க்கரை முதலியன கொடுத்து அவருடைய கஷ்டத்துக்குப் பரிஹாரங்கள் செய்யாதபடி இங்ஙனம் சவுக்கடிகள் கொடுத்து அவருடைய முதுகைக் காயப்படுத்தியது அவளுடைய விரத மஹிமைக்குப் பொருந்துமோ என்று சிலர் ஐயுறலாம். ஆனால், அவள் உயர்ந்த பதிவிரதையாகிய காரணம் பற்றியே, எத்தனைக்கு எத்தனை விரைவாக நடத்துதல் ஸாத்தியமோ அத்தனைக்கத்தனை விரைவாக அவரை அஞ்ஞான விஷயத்திலிருந்து பரிபூர்ணமாக விடுவித்து அவருக்கு ஞானாமிர்தத்தைப் புகட்டவேண்டுமென்ற கருத்துடையவளாயினாள்.

ஜீவாமிர்தமாகிய தர்ம பத்தினியின் காதலை ஒரு பரம மூடன் வேப்பெண்ணெய்க்கு ஒப்பாகக் கருதி வருமிடத்தே, கூடிய அளவு விரைவில் அவனுக்கு என்ன கஷ்டம் விளைவித்தேனும் அவனை அந்த மஹா நரகமாகிய அஞ்ஞானத்தினின்றும் வெளியேற்ற முயலுவதே தனது முக்கியக் கடமையென்று அவள் நியாயமாக நிச்சயித்தாள். அவனுக்கு சாசுவதமான ஞானமும் நித்ய இன்பமும் ஏற்படுத்திக் கொடுத்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதி, அதனால் அவனுக்குச் சிறிது காலம் வரை அதிக சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு ஹிதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமை யன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ? அவன் அழ, அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது?

இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.

காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன.

கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் ஸுலபம். ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா? சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண் கொடுக்கவேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்கு ஸஹிக்க முடியாதனவாகவேயிருந்தன.

ஆனால் எப்படியேனும் தாம் இழந்த பார்வையை மீட்டும் பெறவேண்டுமென்ற பேராவல் அவருக்கும் இருந்தபடியால், சிகிச்சையிலுண்டாகிய சிரமங்கள் பொறுக்க முடியாதனவாகத் தோன்றினும், பல்லைக் கடித்துக் கொண்டு, தம்முடைய முழு சக்தியையும் செலுத்தி ஒருவாறு சகித்துக் பழகினார்.

எனவே முத்தம்மாளை ஓயாமல் தம்முடன் இருக்கும்படிக்கும் பேசும்படிக்கும் வற்புறுத்தத் தொடங்கினார். இவர் எத்தனைக்கெத்தனை அவளுறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத் தொடங்கினாரோ, அத்தனைக்கு அத்தனை அவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். “இவளை நாம் காதலுக்கு யோக்யதையில்லாத மனையடிமைப் புழுக்கச்சியாகவும் குழந்தை வளர்க்கும் செவிலியாகவும் நடத்தி வந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்து வந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக் கருதி அதனை வேண்டிச் சருவப் புகுந்தபோது, இவள் பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும் பொறுக்க முடியவில்லையே! இதென்னடா கேலி! சொந்தப் பெண்டாட்டியைக் காதலிராணியாகக் கொண்டாடப் போனவிடத்தே அவள் நம்மை உதாசீனம் பண்ணினாள். என்ன செய்வது? பதிவிரதையாவது, வெங்காயமாவது! நாம் இளமை தவறிவிட்டோமென்பது கருதி இவள் நமது காதலை உண்மையாகவே அருவருக்கிறாளோ, என்னவோ! எவன் கண்டான்? ஸ்திரீகளுடைய ஹிருதயத்துக்கு ஆழங் கண்டோன் யார்? கடலாழங் காணுதல் எளிது; மாதர் மனத்தை ஆழங் காணுதல் அரிது. ஆண்மக்களைக் காட்டிலும் பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் காமமென்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது.

எனவே, தலை வழுக்கையாய், நரை தொடங்கிக் கிழப்பருவத்திலே புகத்தொடங்கிய என்னிடம் இவள் உண்மையாகவே அவமதிப்புக் கொண்டாளெனின் அஃதோர் வியப்பாகமாட்டாது. என்னே உலக விசித்திரம்! என் குடும்பத்தில் மாத்திரமா, உலக முழுமையிலும் மனிதரெல்லாரும் வீட்டுப்பெண்டாட்டியென்றால் அவள் தன் விருப்பத்துக்கு கடமைப்பட்ட அடிமைச்சியாகவே கருதுகிறார்கள். புதியதொரு சித்திரத் தெய்வத்தின்மீது காதல் கொள்வதுபோல் நான் சொந்தப் பெண்டாட்டியிடம் காதல் செய்யப் புகுமிடத்தே, அவள் என்னை இப்படிக் கேலி பண்ணுகிறாள். எனிலும் இவள் பதிவிரதை யல்லளென்று கருதவும் நியாயமில்லை. எனது பெற்ற தாய் இறக்கப் போகுந் தருணத்தில் இவள் மகா சுத்தமான பதிவிரதையென்று சொல்லிவிட்டு மடிந்தாளே? அவள் தீர ஆராய்ச்சி செய்து நிச்சயப் படுத்தாத வார்த்தையை மரண காலத்தில் சொந்த மகனிடம் சொல்லக் கூடுமென்று நினைக்க இடமில்லையே. தாய் நம்மிடம் பொய் சொல்லிவிட்டா போவாள்? மேலும், அவள் இந்த வார்த்தை என்னிடம் சொல்லிய காலத்தில், அவளுடைய முகத்தை நான் நன்றாக உற்று கவனித்தேனன்றோ? அவள் அச்சொல்லைப் பரிசுத்தமான ஹ்ருதயத்துடனம் உண்மையான நம்பிக்கையுடனும் கூறினாளென்து அவள் முகத்தில் மிகத் தெளிவாக விளங்கிற்றன்றோ? மேலும், அவள் தீர ஆழ்ந்து பாராமல் வஞ்சிக்கப்பட்டவளாய் அங்ஙனம் தவறாது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடுமென்று நினைக்கப் புகுவோமாயின், அது பெரு மடைமைக்கு லக்ஷணமாகும். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். எத்துணை மறைந்த போதிலும் பெண் மர்மம் பெண்ணுக்குத் தெரிந்து விடுமன்றோ? ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இவளுடைய நடையை என் மாதா பத்து வருஷகாலமாக, இரவு பகல் கூடவேயிருந்தது மிகவும் ஜாக்கிரதையுடன் கவனித்து வந்தவளன்றோ? மேலும் என் மாதா புத்திக்கூர்மையில்லாத மந்தமா? இருபது கம்பிளியை போட்டு ஒரு ரஹஸ்யத்தை மூடி வைத்தாலும், அது அவளுடைய கண்களுக்குத் தெரிந்து விடுமன்றோ? தாய் சொல்லியதை மறுப்பதில் பயனில்லை. அதில் ஐயப்படுவது மூடத்தனம். 'ஐயமுற்றான் அழிவுறுவான்' என்று பகவத் கீதையில் கண்ணபிரான் அருளிச் செய்திருக்கிறானன்றோ? நிச்சயமாக நம்முடைய புத்திக்குப் புலப்படும் உண்மை யொன்றைப் பற்றி வீண் ஸம்சயப் படும் அதிகாரம் மனத்துக்குக் கொடுப்போமாயின், அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும். நம்முடைய முத்தம்மா பதிவிரதைதான். நம்முடைய உண்மையைச் சோதி த்-தறியும் பொருட்டாகவே, நம்மை இந்த வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள். இதனால் நாம் அவளிடம் கொண்டிருக்கும் பிரேமைத் தழல் அவிந்து போக இடங் கொடுக்கக்கூடாது. இதனால் நாம் அவளிடம் விரஸப்படலாகாது. அவள் தான் நமக்குத் தாரகம். வேறு புகல் நமக்கில்லை. எக்கலாத்திலும் நம்முடைய வழிகளை இருள் மூடாத வண்ணம் நம் மாதா கருணையுடன் நிறுத்தி விட்டுப்போன நித்ய விளக்கன்றோ இந்தக் கண்மணி முத்தம்மா? மேலும், மூட நெஞ்சமே! பாவியாகிய புழு நெஞ்சமே! முத்தம்மா நம்மை என்ன சோதனைகள் செய்கிறாள்? ஊடல் தானே பண்ணுகிறாள்? ஊடலன்றோ காதலின் மிக இனிய பகுதியாவது?

உணவினும் உண்டதறலினிது—காமம்
புணர்தலின் ஊட லினிது

என்றன்றோ சாக்ஷாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மஹா கவியுமாகிய திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில் தில் ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற்படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லக்ஷணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலக்ஷணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு ஸ்வர்க்க போகம்.”

என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு மணி யாய்விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு க்ஷணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும்.

அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும் விளைந்திருக்கும். இவர் விளக்கின் ஸ்திதியைப் பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியைக் குறைத்தார். விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனைத் தழுவிக் கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள் இரண்டும் படுத்திருந்தன. சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை எழுப்பிக் கீழே அழைத்துப் போய் போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு க்ஷணம் சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால், “அறிவுடனே கண்ணை விழித்து நன்றாகப் பார்த்துக் கொண்டே படுகழியிற் போய் விழ்வதொப்பப் பசியில்லாமல் உண்பதிலிருந்தே நோய்களும், சாவும் ஏற்படுதல் பிரத்யக்ஷமாகத் தெரிந்திருந்தும் நாம் தினந்தோறும் பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும் பேதைமையாகுமன்றோ?” என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. ”இன்றைக்கு நல்ல நாள். பசியில்லாத சமயங்களில் உபவாஸம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி விடுவோம். பிரிய ரத்தினமாகிய முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை இப்போ எழுப்பிச் சோறுபோடச் சொல்லித் தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் உபவாஸமே கிடப்போம் என்று தீர்மானம் பண்ணி, ஸோமநாதய்யர் விளக்குத் திரியை மிகவும் சிறிதாக்கிக் குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்துப் படுக்கையறையின் மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி மெதுவாக அவளைத் தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின் மீதேறிப் படுத்துக் கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும் சோமநாதய்யர் மிகவும் ஆச்சரியமான இன்பக் கனவுகள் கண்டார்.


  1. மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும், அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களுக்குள்ளே பெயர்கள் வழங்கி வரகின்றன. சிலருக்கு ஒருவேளை இச்சொற்கள் தெரியாமலிருக்கக் கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக் கூறினேன்.