பாரதியின் இலக்கியப் பார்வை/கண்ட இலக்கிய நெறி
கண்ட இலக்கிய நெறி
- “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே —அதைத்
- தொழுது படித்திடடி பாப்பா” எனப்
பாப்பாவிற்குக் கூறும் பாரதியார் தானும்தொழுது படித்தவராகவே காணப்படுகின்றார்.
இங்கு ஒன்றைக் குறிக்க வேண்டும்.
பாரதியார் காலத்தில் ஆங்கில ஆட்சியில் தமிழ் தலை தூக்க இயலாதிருந்தமை பாரதிக்கு பெரும் கவலையைத் தந்தது. ஆங்கில எதிர்ப்பு உணர்ச்சியிலேயே தமிழ் வளர்ச்சி பற்றி எழுதினார். ஆனால், வடமொழிபற்றி அவருக்குப் பெருமதிப்பான கருத்து உண்டு. அதனைத் தெய்வ மொழியென்றே கருதினார். ஆயினும், தமிழின்பால் தனித்த ஓர் உணர்வும் இருந்தது. “ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” எனத் தமிழன்னையின் வாய்மொழியாகப் பாடிய உட்பொருள் உணரத்தக்கது. நமது பாடல்களில், வடமொழிக் கலப்பைக் கொண்டாரேனும் உரைநடை அளவில் செறிய வைத்தாரல்லர். வடமொழி எழுத்துக்களையும் கையாண்டார்.
இந்நூலில் காட்டப்பட்டுள்ள அவரது தொடர்களில் அமைந்த வடவெழுத்துக்களை நான் தமிழ் எழுத்துக்களில் மாற்றி எழுதியுள்ளேன். (இக்கால எழுத்துச் சீர்திருத்த முறையில் அவரது எழுத்துக்களை மாற்றியிருப்பது, போன்று தமிழ் எழுத்து மாற்றமும் குற்றமாகாது.)
ஆயினும் தமிழ் இலக்கியத்தின்பால் ஒரு தனிப்பற்று அவருக்கு அப்போதே முளைத்ததைக் காணமுடிகின்றது.
“மனித நாகரீகத்தில் இவ்விரண்டு பாசைகளிலே தான் உயர்ந்த கவிதையும் இலக்கியங்களும் சாத்திரங்களும் ஏற்பட்டன. மற்றப் பாசைகளில் இலக்கிய நெறிகள் இவற்றுக்குப் பின்னே அமைந்தன. பல இடங்களில் இவை இயற்றின நடையையே முன்மாதிரியாகக் கொண்டன” (தமிழ்நாட்டு மாதருக்கு-கட்டுரை) இரண்டையும் ஒருங்கு சேர்த்துக் கூறியிருப்பினும், மற்றோரிடத்தில்,
- “சமற்கிருத பாசையின் கலப்புக்கு முன்னாகவே தமிழ்நாட்டில் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன” -என்று காட்டியுள்ளார். இவ்வரிகளும் பாரதியாரது தமிழ் இலக்கியப் பார்வையைக் காட்டுபவை.
தமது ஆழ்ந்ததும் நெட்டோட்டமானதுமான இலக்கியப் பார்வையால் இனி வளர வேண்டிய இலக்கியங்களுக்கு நெறியையும் கண்டார்: அறிவித்தார்:
- “எளிய பதங்கள்; எளிய நடை: எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்; பொதுசனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர்தருவோனாகின்றான். ஓரிரண்டு வருடத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்” —இது
கடந்த கால இலக்கியங்களையும் நிகழ்கால இலக்கியங்களையும் கருத்திற்கொண்டு எதிர்கால இலக்கியத்திற்கு வகுக்கப்பட்ட இலக்கிய நெறி எனலாம்.
இவ்வகையில் தாமே ஒரு இலக்கியம், காப்பியம் படைக்க வேண்டுமெனும் கருத்துடையவராக இருந்தமை தென்படுகின்றது. அதற்காகத்தாம் படைத்த ஒன்றை ‘இதுதான் இலக்கிய நெறியுடையது’ என்று தாமே போற்றிக்கொள்ளும் சிறு செயல் அற்றவர் பாரதியார். அதனைத் தமது “சுயசரிதை”ப் பாடல்களின் முன்னுரையாக,
- “இச்சிறிய செய்யுள்நூல் விநோதமாக எழுதப்பட்டது. ஒருசில பாட்டுகள் இன்பமளிக்கக்கூடியன வாகும். பதர் மிகுதியாக கலந்திருக்கக்கூடும்.”
-என்று எழுதியிருப்பதுகொண்டு உணரலாம்
இதுபோன்று தாம் படைத்த “பாஞ்சாலி சபதம்” காப்பியத்தாலும் அவருக்கு ஒரு நிறைவு ஏற்பட்டதாகப் படவில்லை. அதனால்தான்,
“பிறருக்கு ஆதர்சமாக (மூலமாக) அன்று வழிகாட்டியாக” -இதனை எழுதி வெளியீடுவதாக அதன் முன்னுரையில் குறித்தார்.
தமிழின் இலக்கியப் பெருங்கடலை எண்ணி எண்ணிப் பூரித்த பாரதியாருக்கு அவற்றைத் தொடர்ந்து பேரிலக்கியங்கள் மிகுதியாக எழாமல் போன குறை உள்ளத்தில் எழுந்து கொண்டேயிருந்தது. இவ்வுணர்வைப் “பாஞ்சாலி சபத” நூலை யாருக்குக் காணிக்கையாகப் படைப்பது என்ற கருத்தெழுந்தபோது வெடிக்க விட்டிருக்கின்றார். யாருக்குக் காணிக்கையாக்கினார்?
இயலுமாறு, இனிப்பிறந்து காவியங்கள்
செய்யப் போகிற
வரகவிகளுக்கும்
அவர்களுக்குத் தக்கவாறு
கைங்கரியங்கள் செய்யப்போகிற
பிரபுக்களுக்கும்
இந்நூலைப் பாத காணிக்கையாகச்
செலுத்துகிறேன்”-என்று காப்பியம் படைப்போருக்கும்
இப்படியொரு துடிப்பான உணர்வு அவர்பால் ஊறக் காரணம் என்ன? அவர் இந்நாட்டின்மேல் கொண்டிருந்த பற்றும், தாய்மொழியின்மேல் கொண்டிருந்த ஊக்கமுமேயாகும். இப்பற்றும் ஊக்கமும் இலக்கிய உணர்வைக் கெல்லின. இலக்கியத்தான் நாட்டு நாகரீகத்தின் கண்ணாடி என்று உறுதியாக நம்பினார். இந்நம்பிக்கை அவர் தமிழ் இலக்கியங்களில் ஊடுபாவாக பார்வையால் எழுந்தது இதனைக்காட்டும் அவரது கருத்துச் செறிவுள்ள தொடர்கள் பொதுவாக இலக்கியத்திற்கும், சிறப்பாகத் தமிழ் இலக்கியத்திற்கும் மேம்பட்ட பெருமையைத் திறக்கும் ஒரு திறவு கோல். அத்திறவுகோல் தொடர்தான் இந்நூலின் முகப்பைத் திறந்துள்ளது.
அத்திறவுகோல் தொடருடன் இந்நூல் நிறைவேறுகின்றது.
- “தமிழ் நாட்டில் நாகரீகம் மிகப் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மையுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதைக் கண்ணாடிபோல் விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாசையிலுள்ள இலக்கியம். அதாவது காவியம் முதலிய நூல்களேயாகும்”
-சி. சுப்பிரமணிய பாரதி
(பாரதி நூல்கள்-கட்டுரைகள்: பக்கம் 227)