பாரதியின் இலக்கியப் பார்வை/தெய்வ வள்ளுவன்

தெய்வ வள்ளுவன்.

இதுபோன்று திருவள்ளுவப் பெருந்தகையை அவர் காணும் முறையும் நோக்கற்பாலது. ‘திருக்குறளைச் செவியாரக் கேட்டு நல்லுணர்வும், நல்லறிவும் பெற்று வாழ்வைச் செம்மை செய்யவேண்டும்; அவ்வாறு செம்மை செய்யாதவர் செவிடர்’ என்று பாரதி அறிவித்த பாங்கை முன்னர் கண்டோம்.

திருவள்ளுவர் மக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் பேருள்ளங் கொண்டவர். அப்பேருள்ளத்தைத் தன் நூலாம் திருக்குறளில் தெளிவாகப் பதித்துள்ளார். மக்களின் செம்மை வாழ்வுக்குச் சில கருத்துகளை உறுதிப்படுத்திக் கூறக் கருதினார்; அதே நேரத்தில் தெளிவாகவும் விளக்கக் கருதினார். சில கருத்துகளை ஆழமாகக் குறிக்கக் கருதினார். அதே நேரத்தில் விரிவாகவும் விளக்கக் கருதினார். அழகாகவும் வைக்கக் கருதினார். இவ்வாறே திருவள்ளுவர் தம் எண்ணத்தை நூலில் பதித்திருப்பதை உணர்ந்த பாரதியார்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும்”

கருதினேன் என்று விரித்துப் பாடுகின்றார். இக்கருத்துகளால் திருவள்ளுவர் மக்களை எந்நிலைக்குக் கொண்டு செல்கிறார் என்பதையும் பாரதி எண்ணிப் பார்க்கிறார். திருக்குறளுக்குள் புகுந்து நின்று நோக்குகிறார். வள்ளுவர் மக்கள் வாழ்வாங்கு வாழ வகை சொல்லுவதைக் காண்கிறார். அவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்பவன் மனித நிலையைக் கடந்து வானுறையும் தெய்வமாக ஆவான்’ என்ற அறிவிப்பு பாரதியை அகல விழித்து நோக்க வைக்கிறது.

‘என்னே வள்ளுவர் தம் திறன்! மனிதனைத் தெய்வமாக்கி காட்டுகின்றாரே. மனிதனைத் தெய்வமாக்குபவரை மனிதராகவோ கொள்வது? தெய்வமென்றன்றோ கொள்ள வேண்டும்! ஆகவே, தெய்வம் என்றே திருவள்ளுவரைக் குறிக்க வேண்டும்’ என்று கருதி,

“தெய்வ வள்ளுவன் வான்குறள் செய்ததும்”
-என்று பாடினார்.

மேலும், அத்தெய்வம் தந்துள்ளக்கருத்துகள் செந்தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று, உலகத்துக்கும் பொருந்துவன. இதனையும் அறிவிக்க எண்ணிய பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

-என்று செந்தமிழ் நாட்டை நினைத்துப் பூரித்துப் பாடினார். வான்குறள் செய்தவரைத் தந்து தமிழ்நாடு வான்புகழ் கொண்டதாகக் குறித்த பொருத்தம் நினைந்து மகிழத்தக்கது.

கம்பரை மானிடன் என்று குறித்ததையும், வள்ளுவரைத் தெய்வம் என்று குறித்ததையும் இயைத்துப் பார்த்தால் ஒரு தனிச்சுவை தோன்றும்.