பாரதியின் இலக்கியப் பார்வை/மணிக் கண்ணகியார்
மணிக் கண்ணகியார்
சிலப்பதிகாரத்தின் தலைவிகண்ணகியார். இங்கு தலைவி எனக் குறிப்பது. கோவலன் தலைவன்; அவன் மனைவியாகையால் தலைவி என்னும் கருத்தில் அன்று. சிலப்பதிகாரமே கண்ணகிக்காக எழுந்தது. கோவலன் அதற்குத் துணை உறுப்பினன். சிலம்பு கண்ணகியார் கோவலன் வரலாறே அன்றிக் கோவலன் கண்ணகியார் வரலாறு என்று கூறக் கூடாது. அவ்வளவில் கண்ணகியாரே சிலம்பிற்கு உரியவர் ஆகின்றார்.
இக்கண்ணகியார் இளங்கோவடிகளாரால் பல்வகைப் பாங்குடன் போற்றப்படுகின்றார். பலர் வாயிலாகப் போற்றுதலை வைத்துள்ளார். அவற்றுள் ஒரு பாங்கு —ஒரு பாங்கு மட்டுமன்று —ஒரு தனிப்பாங்கு இங்கு எடுத்துக்கொள்ள வேண்டியது.
கண்ணகியாரை நாம் முதலில் மணவறையில் காண்கின்றோம். அடுத்து முதலிரவில் போற்றப்படுகின்றார். அப்போற்றி எத்தகையது?
கண்ணகியார் கோவலனுக்கு முதல் இரவு. நிலாமுற்றத்தில் மணிக்கால் கட்டில் மேல் இருவரும் குலாவினர். குலாவல் மொழிகளைக் கோவலன் பொழிகின்றான். இளங்கோவடிகளார் பொழிய வைக்கின்றார். முதலில் இனிய அன்புச் சொற்களால் அழைக்கின்றான். “மாசறு பொன்னே! வலம் புலிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! பாவாய் மருந்தே!” என்றெல்லாம் அழைத்தான். இவைகள் யாவும்! விளிக்கும்-அழைத்து மகிழும் சொற்கள். தொடர்ந்து கண்ணகியாரைப் புகழத் தொடங்குகின்றான். புகழ்ச்சியில்; முதல் தொடர்,
- “மலையிடைப் பிறவா மணியே என்கோ”
-என்பது முதற்புகழ்ச்சி
மணியாக அமைந்தது. முதன் முதலில் கண்ணகியாரை மணியாக வண்ணிப்பதை அவருக்குரிய கொழுநன் கோவலன் வாயிலாக அமைத்தது ஒரு தனிக்குறிப்பிற்கு உரியது எனலாம்.
அடுத்து வேட்டுவவரியில் சாலினி என்னும் பூசாரிச்சி கண்ணகியாரைப் போற்றுகின்றாள். தன் நிலையில் அன்று தெய்வமுற்ற நிலையில் நின்று போற்றுகின்றாள்:
- “இவளோ,
- கொங்கச் செல்வி; குடமலை யாட்டி”
-என்று
தொடங்கிய சாலினியின் வாயில் மணியை வைக்கின்றார் அடிகளார்;
- “ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய”
-என்றவள்.
நாவில் மற்றொரு மணியை மணிக்கு அழகும் ஊட்டி,
- “திருமா மணி” .
- என்று நிறைவேற்றச் செய்கின்றார். இவ்வாறு சாலினியின் போற்றுதல் வாயிலாகக் கண்ணகியாரை ‘மணி’யாக அதிலும் ‘மா மணி’யாக அதிலும் ஒப்பற்ற ‘ஒரு மா மணி’யாக மேலும் ‘திரு மா மணி’யாகக் காண்கின்றோம். கொழுநன் வாயால் மணியாகிய கண்ணகியார், அடுத்துத் தெய்வமுற்ற வாயால் இரண்டு மணியாகின்றார்.
அடுத்து அடைக்கலக் காதையில் மதுரைமா நகரின் புறஞ்சேரியில் கண்ணகியார், கோவலன், கவுந்தி அடிகள் மூவரும் உளர். மாடல மறையோன் அங்கு வந்து சேர்கின்றான். கோவலனை அவன் அறிவான். இங்கு இக்கோலத்தில் கண்டு வருந்துகின்றான். கோவலனது பெருமைகளையெல்லாம் பேசுகின்றான். பேசி முடிப்பவன் கண்ணகி யாரையும் இணைத்துக் காட்டி இந்நங்கையுடன் வந்தது ஏன்?-என்கின்றான். இங்கு கண்ணகிக்கு அவன் கூட்டியுள்ள-அடிகளார் அமைத்துள்ள-அடைமொழிகள் நோக்கத்திற்கு உரியன.
- “இத்திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”
- என்னும்
தொடர் அது. கண்ணகியாரை மணியாய்-மாமணியாய் மாடலன் வாய் போற்றிற்று. மாடலன் அம்மணியையும் ‘மா மணி’யாய் மட்டுமன்று, “தகு மா மணியாய்” மேலும் “திரு தகு மாமணியாய்” அடுக்கிப் போற்றினான், மணி மட்டு மன்று மணியில் கொழுந்து மணியாம்.
மாடலன் ஒரு துறவி. முன்னர் உரியவன் வாயால் கண்ணகியார்
- மணியானார்
- அடுத்துத் தெய்வ வாயால்
- மணிகள் ஆனார்.
- அடுத்துத் துறவியின் வாயால் தகு மணியானார்.
- மணிக்கொழுந்தும் ஆனார்.
இம்மூவர் போற்றிய மணியிலும் படிப்படியான உயர்வைக் காண்கின்றோம்.
- மணியாகத் தோன்றி மாமணி ஆகியது;
- மாமணி திருமா மணி ஆகியது;
- திருமாமணியும் திருத்தகு மாமணி ஆகியது;
- திருத்தகு மாமணியும், திருத்தகு மாமணிக் கொழுந்தாகியது.
இவ்வாறு இளங்கோவடிகளார் சிலம்பின் தலைமகளை மணிமணியாகச் சிலம்பில் பதித்தும், பெய்தும் மணி யொலிக்கும் சிலம்பாக்கியுள்ளார்.