பாரதி அறுபத்தாறு/கடவுள் வாழ்த்து


பாரதி அறுபத்தாறு


முதற் காண்டம்

கடவுள் வாழ்த்து - பராசக்தி துதி

எனக்கு முன்னே சித்தர் பல ரிருந்தா ரப்பா,
யானும் வந்தே னொரு சித்த னிந்த நாட்டில்;
மனத்தினிலே நின் றிதனை யெழுதுகின்றாள்
மனோன்மணி யென் மாசக்தி வையத் தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்ய மணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னை யொரு மலரைப்போலும்
வண்டினைப் போ லெனையு முரு மாற்றிவிட்டாள். (1)

தீராத கால மெலாந் தானு நிற்பாள்,
தெவிட்டாத இன் னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடி வெடுத்தாள், நிலத்தின் மீது
போராக நோ யாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள் ; புணர்ச்சி கொண்டால்
நேராக மோன மஹா னந்த வாழ்வை
நிலத்தின் மிசை யளித் தமரத் தன்மை யீவாள். (2)

மாகாளி பராசக்தி உமையா ளன்னை
வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி
பாகார்ந்த தே மொழியாள், படருஞ் செந்தீ
பாய்ந் திடு மோர் விழி யுடையாள், பரமசக்தி,
ஆகார மளித்திடு வாள், அறிவு தந்தாள்,
ஆதி பரா சக்தி யென தமிர்தப் பொய்கை,
சோகாடவிக் கு ளெனைப் புக வொட்டாமல்
துய்ய செழுந் தேன்போலே கவிதை சொல்வாள். (3)