பாரதி பிறந்தார்/3
மதுரை மாநகரில் - சேதுபதி
மன்னர் பள்ளியிலே
புதுத்தமிழ் ஆசான் - ஆகிப்
போதனை செய்துவந்தான்
சங்கத் தமிழ்ப்பாட்டைத் தனது
சங்கீதத் குரலால்
பொங்கும் அமுதம்போல் - பாடிப்
போதனை செய்துவந்தான்
மிக்க அன்புடனே - சுதேச
மித்திரன் ஆசிரியர்
தக்க பொருள்கொடுத்துப் - பாரதி
தன்னைக் கூப்பிட்டார்
பாட்டுக் கவியரசன் - சென்னைப்
பட்டினம் சேர்ந்துவிட்டான்
நாட்டு நடப்புகளை - எழுதி
நாளும் வெளியிட்டான்
தீவிர வாதியென - மராட்டியத்
திலகர் கொதித்தெழுந்தார்
ஆவி கொடுத்தேனும் - பாரத
அன்னையைக் காப்பனென்றார்.
அச்சம் விட்டெழுந்தான் - பத்திரி
காசிரி யன்வேலை
துச்சம் எனநினைத்தான் - பாரதி
துள்ளிப் புறப்பட்டான்
இந்தியா என்றொரு பத்திரிகை பொறுப்
பேற்று நடத்திவந்தான் - அதில்
சொந்தமாய்ப் பற்பல கவிதைகள் கட்டுரை
சுடச்சுட எழுதிவந்தான்
கண்டனப் பாடலும் கருத்துப் படங்களும்
காட்டிப் புரட்சி செய்தான் - அதைக்
கண்டனர் வெள்ளையர் மண்டையிடி குளிர்
காய்ச்சலும் கொண்டு விட்டார்.