சமைக்கக் காய்கறிகள் - வாங்கச்
சந்தைக்குச் சென்றொருநாள்
சுமக்கும் அளவுக்குக் - கீரை
சுமந்து திரும்பிவந்தான்

வீட்டுக்கு ஒருகட்டாய் - அதை
வேற்றோர்க்கு அளித்துத்தன்
வீட்டுக்கு ஒருகட்டைக் - கொண்டு
வீரன் திரும்பிவந்தான்



நண்பர்களை ஒருநாள் - வீட்டுக்கு
நாவலன் கூப்பிட்டான்
எண்ணம் அறிவதற்கே - நண்பர்கள்
இல்லம் வந்தடைந்தார்

பறையர் குலத்தவனை-மேலாம்
பார்ப்பனன் ஆக்குதற்கு
மறைகள் ஓதிநின்றான் - பூணூல்
மாட்டிச் சடங்குசெய்தான்

வெடிக்கும் எரிமலைபோல் - பாடல்
வீசும் பாரதியைக்
கடத்திச் செல்வதற்குப் - போலீஸ்
காவலர் காத்திருந்தார்

வஞ்சகப் போலீசார் - விரித்த
வலையில் வீழாமல்
செஞ்சொற் கவியரசை - அவர்
சீடர் காத்து நின்றார்


பத்து வருடங்கள் - புதுவையில்
பாரதி வாழ்ந்த பின்னர்
சித்தம் சலிப்படைந்தே - சென்னை
சேர முடிவுசெய்தான்

கடலூர் எல்லையிலே - பாரதி
காலை வைத்தவுடன்
திடுமெனப் போலீசார் - பாய்ந்து
சிறையில் தள்ளிவிட்டார்

நாவலன் பாரதியை - அவன்
நண்பர்கள் சிறைமீட்டார்
காவலில் வாடியவன் - மீண்டு
கடையம் சென்றுவிட்டான்

தாவும் குழந்தைகளைப் - பிரிவால்
தவிக்கும் மனையாளைப்
பாவலன் சென்றுகண்டான் - அவர்கள்
பக்கம் அமர்ந்து கொண்டான்



கழுதைக் குட்டியினை - வழியில்
கண்ட பெருங்கவிஞன்
தொழுது முத்தமிட்டான் - தோளில்
தூக்கி நடந்துவந்தான்

பாதையில் சென்றவர்கள் - அவனைப்
பயித்தியம் என்றார்கள்
மேதையின் செயலெல்லாம் - இந்த
மேதினி அறிந்திடுமோ?

நண்பரின் திருமணத்தில் - ஓர்நாள்
நாவலன் விருந்துண்டான்
பண்பறியாத சிலர் - இதைப்
பார்த்து வெறுப்படைந்தார்

சாதியில் தாழ்ந்தவரின் - வீட்டில்
சமபந்தி உண்டதனால்
சாதியில் தள்ளிவைத்தார் - பாரதி
சற்றும் அஞ்சவில்லை


காக்கைஎன் சாதியென்றான் - பொங்கும்
கடலும்என் சாதியென்றான்
பூக்கள் கொடிகள் எல்லாம் - பாடும்
புலவரின் தோழன் என்றான்

சாதி சமயங்களைப் - பேசிச்
சண்டைகள் செய்பவரை
மோதி மிதிப்பனென்றான் - அவர்கள்
முகத்தில் உமிழ்வனென்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/6&oldid=1016572" இலிருந்து மீள்விக்கப்பட்டது