பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/சிரசாக்கினை
சிரசாக்கினை
தொகு"ஆகா இது உறையூர்தானா?" என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லும்படியிருந்தது. உறையூர் வாசிகளிடையே வெகுகாலத்திற்குப் பிறகு இன்று கலகலப்பும் உற்சாகமும் காணப்பட்டன. வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வண்டிகளிலும், பலவித வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆங்காங்கு ஜனங்கள் கூட்டமாய் நின்று கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்று காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி உறையூரில் பொது ஜன சபை கூட்டுகிறார் என்றும், இதற்காகச் சோழ நாட்டின் பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ள பிரமுகர்களையெல்லாம் அழைத்திருக்கிறார் என்றும் பிரஸ்தாபமாயிருந்தது. அன்று நடக்கப்போகும் சபையில் பல அதிசயங்கள் வெளியாகுமென்றும் பல விசேஷ சம்பவங்கள் நிகழுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அருள்மொழித் தேவியும், இளவரசர், விக்கிரமரும் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறார்களென்றும் செய்தி பரவியிருந்தது. இன்னும் இளவரசர் இரத்தின வியாபாரி வேஷத்தில் வஸந்த மாளிகையில் வந்திருந்தாரென்றும், குந்தவி தேவிக்கும் அவருக்கும் காதல் உண்டாகிக் கல்யாணம் நடக்கப் போகிறதென்றும் இதனால் உறையூரும் காஞ்சியும் நிரந்தர உறவு கொள்ளப்போகிறதென்றும் சிலர் சொன்னார்கள்.
வேறு சிலர் இதை மறுத்து, "தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளான இளவரசரைச் சக்கரவர்த்தி விசாரணை செய்து பொதுஜன அபிப்பிராயத்தையொட்டித் தீர்ப்புக் கூறப்போகிறார்" என்றார்கள். நாலு நாளைக்கு முன்னால், அமாவாசை இரவில், கொல்லி மலைச்சாரலில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், மாரப்ப பூபதியின் மரணத்தைப் பற்றியும் ஜனங்கள் கூட்டியும் குறைத்தும் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பொன்னனும் வள்ளியும் அன்று உறையூர் வீதிகளின் வழியாக வந்த போது, ஆங்காங்கே ஜனங்கள் அவர்களை நிறுத்தி, "பொன்னா! இன்று என்ன நடக்கப் போகிறது?" என்று விசாரித்தார்கள். பொன்னனோ, தலையை ஒரே அசைப்பாக அசைத்து "எனக்கு ஒன்றும் தெரியாது, சாயங்காலமானால், தானே எல்லாம் வெளியாகிறது. ஏன் அவசரப்படுகிறீர்கள்?" என்றான். வள்ளியை அழைத்துக் கேட்ட பெண் பிள்ளைகளிடம் வள்ளியும் அதே மாதிரிதான் மறுமொழி சொன்னாள். பொன்னனுக்கும், வள்ளிக்கும் அன்று இருந்த கிராக்கிக்கும் அவர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த பெருமைக்கும் அளவேயில்லை.
தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சபை கூடியிருப்பதைப் பார்த்தவர்கள் யாரும் திரும்பி வந்து நமக்கு அந்தச் சபையைப்பற்றிக் கூறியது கிடையாது. ஆனால் அன்று உறையூரில் கூடிய மாமல்ல நரசிம்மச் சக்கரவர்த்தியின் சபையைப் பார்த்தவர்கள், "தேவேந்திரனுடைய சபை கிட்டதட்ட இந்த மாதிரிதான் இருக்க வேண்டும்!" என்று ஏகமனதாக முடிவு கட்டினார்கள். அவ்வளவு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்த சபா மண்டபத்தில் சபை கூடிற்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் 'தேவேந்திரனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு ஒரு பக்கத்தில், வசிஷ்டரையும் வாமதேவரையும்போல், சிவனடியாரும், சிறுத்தொண்டரும் வீற்றிருந்தார்கள். சிம்மாசனத்தின் மற்றொரு பக்கத்தில் சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் அருள்மொழித்தேவியும் சிறுத்தொண்டரின் தர்ம பத்தினி திருவெண்காட்டு நங்கையும் காணப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் சிறுத்தொண்டரின் அருமைப் புதல்வன் சீராள தேவன் உட்கார்ந்து, அதிசயத்தினால் விரிந்த கண்களினால், நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னால் பொன்னனும் வள்ளியும் அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு நேர் எதிரே, சற்றுத் தூரத்தில் பல்லவ சேனாதிபதியும் இன்னும் சில பல்லவ வீரர்களும் சூழ்ந்திருக்க விக்கிரமன் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான்.
குந்தவி இருந்த பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ பிடிவாதமாக மனத்தை உறுதிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தானென்றாலும் சில சமயம் அவனை அறியாமலே அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் நோக்கின. அதே சமயத்தில் குந்தவியும் தன்னை மீறிய ஆவலினால் விக்கிரமனைப் பார்க்கவும், இருவரும் திடுக்கிட்டுத் தங்களுடைய மன உறுதி குலைந்ததற்காக வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியதாயிருந்தது.
இன்னும் அந்த மகத்தான சபையில், மந்திரிகளும் படைத்தலைவர்களும் தனாதிகாரிகளும் பண்டிதர்களும் கலைஞர்களும் கவிராயர்களும் பிரபல வர்த்தகர்களும் கிராமங்களிலிருந்து வந்த நாட்டாண்மைக்காரர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரையும் காட்டிலும் அந்தச் சபையில் அதிகமாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்த ஒருவர் சக்கரவர்த்தி குமாரன் மகேந்திரனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்லர் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறின. சபையினர் அவரைச் சுட்டிக் காட்டி தங்களுக்குள்ளேயே, "சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் உலக யாத்திரிகர் இவர்தான்!" என்று பேசிக் கொண்டார்கள் யுவான் சுவாங்க் என்றும் அவருடைய பெயரைப் பலரும் பலவிதமாக உச்சரித்து நகையாடினார்கள்.
இந்தச் சீன யாத்திரிகரைத் தவிர இன்னும் சில அயல் நாட்டாரும் அந்த மகாசபையில் ஒரு பக்கத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் நடை உடையினால் அயல்நாட்டாராகத் தோன்றினாலும், அவர்கள் பேசுகிற பாஷை தமிழாகத்தான் தெரிந்தது. சற்றே அவர்களை உற்றுப் பார்த்தோமானால், ஏற்கெனவே பார்த்த முகங்கள் என்பது நினைவு வரும். ஆம்; செண்பகத் தீவிலிருந்து வந்த கப்பலில் இரத்தின வியாபாரி தேவசேனனுடன் வந்தவர்கள் தான் இவர்கள். அச்சபையில் நடக்கவிருந்த விசாரணையின் முடிவாகத் தங்கள் மகாராஜாவுக்கு என்ன கதி நேரப் போகிறதோ என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கிருப்பது இயற்கையேயல்லவா?
சபை முழுவதிலும் ஆங்காங்கு பணியாட்களும் பணி பெண்களும் நின்று வெண்சாமரங்களினால் விசிறியும் சந்தனம் தாம்பூலம் முதலியவை வழங்கியும் சபையினருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட நேரம் ஆகியும் சக்கரவர்த்தி வராதிருக்கவே சபையில், "ஏன் சக்கரவர்த்தி இன்னும் வரவில்லை?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சப்தம் எழுந்தது. இவ்விதம் பல குரல்கள் சேர்ந்து பேரிரைச்சலாகிவிடுமோ என்று தோன்றிய சமயத்தில், சிறுத்தொண்டர் எழுந்திருந்து, கையமர்த்தி, "சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்று செய்தி வந்திருக்கிறது. அதுவரையில், இந்தச் சபை கூடியதின் நோக்கம் இன்னதென்பதை உங்களுக்கு எடுத்து உரைக்கும்படி எனக்குச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!" என்று இடி முழக்கம் போன்ற குரலில் கூறியதும், சபையில் நிசப்தம் உண்டாயிற்று. எல்லாரும் பயபக்தியுடன் சிறுத்தொண்டருடைய முகத்தையே பார்க்கலானார்கள்.
சிறுத்தொண்டர் மேலும் கூறினார்:-
"வீர சொர்க்கமடைந்த என் அருமைத் தோழரான பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வர் விக்கிரம சோழர், இன்று உங்கள் முன்னால் குற்ற விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் தேசப்பிரஷ்டத் தண்டனையை மீறி அவர் இந்நாட்டுக்குள் பிரவேசித்துக் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடிக்கவும் பட்டார். அவர் இவ்விதம் சக்கரவர்த்தியின் ஆக்ஞையை மீறி வந்ததின் காரண காரியங்களை விசாரணை செய்து, உங்கள் எல்லாருடைய அபிப்பிராயத்தையும் கேட்டு, சர்வ சம்மதமான நியாயத் தீர்ப்புக் கூறவேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம். இதற்காகத்தான் இந்தச் சபை கூடியிருக்கிறது. நீங்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு முன்னால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிரம சோழர் சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது குற்றமானாலும், அதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. இதோ என் பக்கத்தில் வீற்றிருக்கும் என் தோழர் அதற்குப் பெரும்பாலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறார்!" என்று சிறுத்தொண்டர் கூறியதும் சபையில் எல்லாருடைய கவனமும் சிவனடியார் மேல் திரும்பியது. அவருடைய முகத்தில் குடிகொண்டிருந்த தேஜஸைப் பார்த்து அனைவரும் பிரமித்தார்கள். "இவர் யார் இந்தப் பெரியவர்? அப்பர் பெருமானோ இறைவன் பதமடைந்துவிட்டார். சம்பந்த சுவாமியோ இளம் பிராயத்தவர். மஹான் சிறுத்தொண்டரோ இங்கேயே இருக்கிறார். வேறு யாராக இருக்கும்? விக்கிரம சோழர் விஷயத்தில் இவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?" என்று எண்ணமிட்டனர்.
பிறகு சிறுத்தொண்டர், பத்து வருஷங்களுக்கு முன் பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு உறையூரிலிருந்து கிளம்பியதையும் வெண்ணாற்றங்கரையில் நடந்த பயங்கர யுத்தத்தையும் சபையோருக்கு ஞாபகப்படுத்தினார். பார்த்திப மகாராஜாவுடன் கிளம்பிய பத்தாயிரம் பேரில் ஒருவர்கூடத் திரும்பாமல் போர்க்களத்திலேயே மடிந்ததைச் சொன்னபோது சபையோர் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்றிரவு, இந்தச் சிவனடியார் போர்க்களத்தில் வீரமரணமடைந்த தீர மன்னரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று அவருடைய உடலைத் தேடியலைந்ததை எடுத்துக் கூறினார். கடைசியில் இவர் தம் முயற்சியில் வெற்றியடைந்ததையும், பார்த்திப மகாராஜாவின் உடலில் இன்னும் உயிர் இருந்ததையும், மகாராஜா சிவனடியாரிடம், "என் மகனை வீர சுதந்திரப் புருஷனாக வளர்க்க வேண்டும்" என்று வரங்கேட்டதையும்; சிவனடியார் அவ்விதமே வரங்கொடுத்ததையும் எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெரிய சபையின் நாலா பக்கங்களிலும் 'ஆஹா'காரம் உண்டானதுடன், அநேகருடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.
பின்னர், சிவனடியார் உறையூருக்கு வந்து அருள்மொழித் தேவியைப் பார்த்துத் தேற்றியது முதல், விக்கிரமன் சுதந்திரக் கொடியை நாட்ட முயன்றது, தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளானது, செண்பகத் தீவின் அரசானது, தாயாரையும் தாய் நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் திரும்பி வந்தது, வழியில் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாவற்றையும் சிறுத்தொண்டர் விவரமாகக் கூறினார். இதற்கிடையில், நீலகேசி 'மகா கபால பைரவர்' என்ற வேஷத்தில் செய்த சூழ்ச்சிகளையும், ராணி அருள்மொழித் தேவியை அவன் கொண்டுபோய் மலைக் குகையில் வைத்திருந்ததையும், சிவனடியாரின் தளரா முயற்சியினால் அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டதையும் சென்ற அமாவாசை இரவில் நடந்த சம்பவங்களையும் விக்கிரமன் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் சிவனடியாரைக் காப்பாற்ற முன்வந்ததையும் விவரித்தார். இவ்வளவையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, "சபையோர்களே, உங்களையெல்லாம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என் தோழர் சிவனடியார் போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக - நீங்கள் அபிப்பிராயப்படுகிறீர்களா? பார்த்திப மகாராஜாவின் குமாரர் விக்கிரமர் வீர சுதந்திரப் புருஷராக வளர்க்கப்பட்டிருக்கிறாரா?" என்று கேட்டார்.
அப்போது சபையில் ஏகமனதாக, "ஆம், ஆம்" என்ற மகத்தான பெருங்கோஷம் எழுந்து அந்த விசாலமான மண்டபம் முழுவதும் வியாபித்து, வெளியிலும் சென்று முழங்கியது.
கோஷம் அடங்கியதும், சிறுதொண்டர் கையமர்த்தி, "இன்னும் ஒரு முக்கிய விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்கு இந்த மகா புருஷர் வாக்குறுதி கொடுத்த பிறகு மகாராஜா இவரைப் பார்த்து, 'சுவாமி! தாங்கள் யார்?' என்று கேட்டார். அப்போது இந்த வேஷதாரி, தமது பொய் ஜடாமகுடத்தை எடுத்துவிட்டு உண்மை ரூபத்துடன் தோன்றினார். இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு பார்த்திப மகாராஜா தம் மனோரதம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கை பெற்று நிம்மதியாக வீர சொர்க்கம் அடைந்தார்!" என்று கூறியபோது சபையிலே ஏற்பட்ட பரபரப்பைச் சொல்லி முடியாது.
மீண்டும் சிறுத்தொண்டர், "இந்த வேஷதாரியின் உண்மை வடிவத்தைப் பார்க்க நீங்கள் எல்லாருமே ஆவலாகயிருக்கிறீர்கள் இதோ பாருங்கள்!" என்று கூறி, சிவனடியார் பக்கம் திரும்பி, ஒரு நொடியில் அவருடைய ஜடாமகுடத்தையும் தாடி மீசையையும் தமது இரண்டு கையினாலும் நீக்கிவிடவே, மாமல்ல நரசிம்ம சக்ரவர்த்தியின் தேஜோ மயமான கம்பீர முகத்தை எல்லாரும் கண்டார்கள்.
அப்போது அச்சபையில் மகத்தான அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. குந்தவி தன் ஆசனத்திலிருந்து எழுந்து, "அப்பா!" என்று கதறிக் கொண்டே ஓடிவந்து வேஷம் பாதி கலைந்து நின்ற சக்கரவர்த்தியின் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சையாகி விழும் நிலைமையில் இருந்த அருள்மொழித் தேவியைச் சிறுத் தொண்டரின் பத்தினி தாங்கிக் கொண்டு ஆசுவாசம் செய்தாள். விக்கிரமன் கண்ணிமைக்காமல், பார்த்தவண்ணம் நின்றான். அந்தப் பரபரப்பில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் பொன்னன், வள்ளியின் கையைப்பிடித்துக் குலுக்கினான்.
"தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி வாழ்க" என்று ஒரு பெரிய கோஷம் எழுந்தது. "ஜெய விஜயீ பவ!" என்று சபையினர் அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள். சிறிது நேரம் இத்தகைய கோஷங்கள் முழங்கிக்கொண்டிருந்த பிறகு பொன்னனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, திடீரென்று உரத்த குரலில், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" என்று கோஷித்தான். அதையும் சபையோர் அங்கீகரித்து, "ஜய விஜயீ பவ!" என்று முழங்கினார்கள்.
அந்தக் குழப்பமும் கிளர்ச்சியும் அடங்கியபோது இத்தனை நேரமும் சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை என்பதைச் சபையோர் கண்டார்கள். சிறுத்தொண்டர், "சபையோர்களே! நீங்கள் கலைந்து போவதற்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு காரியம் பாக்கியிருக்கிறது. மாமல்லச் சக்கரவர்த்தி தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப் பற்றி முடிவான தீர்ப்புக் கூறுவார்!" என்றார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் நரசிம்மச் சக்கரவர்த்தி தமக்குரிய ஆடை ஆபரணங்களைத் தரித்தவராய்க் கம்பீரமாக அச்சபைக்குள் பிரவேசித்தார். அவர் சபைக்குள் பிரவேசித்த போதும், சபையில் நடுநாயகமாக இருந்த தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்தபோதும், "ஜய விஜயீ பவ!" என்னும் முழக்கம் வானளாவ எழுந்தது. சத்தம் அடங்கியதும், சக்கரவர்த்தி எழுந்து, "விக்கிரம சோழரைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டேன். தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளானவர்கள் திரும்பி வந்தால், அதற்குத் தண்டனை சிரசாக்கினையாகும். எனவே, இதோ புராதனமான சோழ மன்னர்களின் மணிமகுடத்தை விக்கிரம சோழர் இனிமேல் தனியாகவே தலைமேல் தாங்க வேண்டுமென்னும் சிரசாக்கினையை விதிக்கிறேன்! இன்று முதல் சோழ நாடு சுதந்திர ராஜ்யமாகிவிட்டது. இதன் பாரம் முழுவதையும் விக்கிரம சோழரும் அவருடைய சந்ததிகளும் தான் இனிமேல் தாங்கியாக வேண்டும்!" என்று கூறியபோது, சபையிலே உண்டான கோலாகல ஆரவாரத்தை வர்ணிப்பதற்குப் புராண இதிகாசங்களில் சொன்னது போல், ஆயிரம் நாவுள்ள ஆதிசேஷன்தான் வந்தாக வேண்டும்!