பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/வள்ளி சொன்ன சேதி
வள்ளி சொன்ன சேதி
தொகுவழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.
"வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.
"நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."
"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள்.
"அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன்.
"ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள்.
"சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...."
"என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள்.
"ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..."
"இப்போது எங்கேயிருக்கிறார்...?"
"அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்."
"சரி, அப்புறம் சொல்லு."
"ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்."
"ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!"
"நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி.
"யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"
வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள்.
"நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன்.
வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான்.
வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. 'வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."
இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான்.
"இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள்.
"குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்."
"ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?"
"நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்."
பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.
பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான்.
மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.