பாலஸ்தீனம்/அராபியர்களின் தேசீய இயக்கம்

III
அராபியர்களின் தேசீய இயக்கம்

ரோப்பிய யுத்தத்திற்கு முன்னர் அராபியா, பாலஸ்தீனம், சிரியா முதலிய நாடுகள் துருக்கிய ஏகாதிபத்தியத்துக்குட் பட்டிருந்தனவல்லவா? இந்தப் பிரதேசங்களிலுள்ள அராபியர்கள், துருக்கிய சாம்ராஜ்யத்தினின்று விடுதலையடைய வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வந்தார்கள். இவர்களிடையே தேசீய உணர்ச்சியானது வலுத்து வந்தது. இந்த உணர்ச்சியின் வெளித் தோற்றந்தான் 1911ம் வருஷம் பாரிஸில் கூடிய அராபிய காங்கிரஸ். ஆனால் இந்தத் தேசீய இயக்கமானது, அராபியர்களில், படித்த வகுப்பாரிடையே மட்டுந்தான் பரவியிருந்தது. பாமர ஜனங்கள், இந்த இயக்கத்தில் தங்களைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளவில்லை. படித்த வகுப்பாரும், இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ளவில்லை. இங்ஙனம் ஒரு சிறு கூட்டத்தாரிடையே தேசீய உணர்ச்சி பரவியிருந்ததைக் கூட அப்பொழுதைய துருக்கிய அரசாங்கம் விரும்பவில்லை. சில அடக்குமுறைகளைக் கையாண்டது. இந்த நிலையில் ஐரோப்பிய யுத்தம் ஏற்பட்டது. துருக்கியின் நிருவாகத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு, இந்த யுத்தத்தை அராபியர்கள் நல்ல சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொண்டார்கள். இதற்கு பிரிட்டனும் உதவியாயிருந்தது. துருக்கிக்கு விரோதமாக அராபியர்களைக் கிளப்பி விடுவதில், பிரிட்டிஷார் சிரத்தை காட்டினர். டி.இ. லாரென்ஸ் என்பவன், பிரிட்டனின் கையாளாயிருந்து, துருக்கிக்கு விரோதமாக அராபியர்களிடையே பிரசாரஞ் செய்து வந்தான். அதனோடு, அவர்களுடைய சுதந்திர ஆவலையும் அதிகரிக்கச் செய்தான். எப்படியும் துருக்கிக்கு ஆதரவாக அராபியர்கள் இருக்கக் கூடாதென்பது பிரிட்டனின் கவலையாயிருந்தது.

1915ம் வருஷம், அப்பொழுது எகிப்தின் ஹை கமிஷனராயிருந்த ஸர் ஹென்ரி மக்மோஹன் என்பவன் மூலமாக, மெக்கா நகரத்தின் அப்பொழுதைய ஷெரிப்பாக (அதிபதியாக) இருந்த ஹுஸேனுக்கு பிரிட்டன் கொடுத்த வாக்குறுதியின் மூலம், அராபிய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரமானது, ஓர் ஒப்பந்தத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப் பட்டது. இஃது, அராபியர்களுக்கு ஒரு வித உற்சாகத்தையும், நம்பிக்கையையும் உண்டு பண்ணியதோடு கூட, பிரிட்டனிடத்தில் ஒரு நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி வைத்தது. மேற்படி ஒப்பந்தத்தில், பாலஸ்தீனமும், சுதந்திர அராபியாவில் சேர்க்கப் பட்டிருக்கும் என்று குறிப்பாகச் சொல்லப்படவில்லை. பாலஸ்தீனம் ஒரு தனி நாடாக இல்லாமையினாலும்,, அராபியாவுக்குட்பட்ட பிரதேசமா யிருந்தபடியாலும், எப்பொழுது அராபியாவின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்பொழுதே அதற்குட்பட்ட பாலஸ்தீனமும் தங்களுடைய சுவாதீனத்தில்தான் இருக்குமென்றும் அராபியர்கள் நம்பினார்கள்.[1]பின்னர், பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள், இந்த அராபிய சுதந்திர ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் செய்ததும், இதனின்றும் பாலஸ்தீனம் விலக்கப்பட்டதும், அராபியர்களிடையே பெரிய ஆத்திரத்தைக் கிளப்பி விட்டன. பாலஸ்தீன அராபியர்களின் தலைவருள் ஒருவனான அவனி பே அப்துல் ஹாதி என்பவன் பின்வருமாறு கூறுகிறான்:-

கிரேட் பிரிட்டனைப் பொறுத்த மட்டில், அகன் எல்லா வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும், சந்தர்ப்பம், தன்னலம் இவைகளை யொட்டியே இருக்கின்றன போலும். பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தங்களுடைய ஒப்பந்தங்களை, தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளவோ, அல்லது அதனைத் திருத்தவோ, அல்லது அதற்குப் புது வியாக்கியானம் செய்யவோ தயாரா யிருக்கிறார்கள்.

பிரிட்டிஷாருடைய வாக்குறுதிக்கு, இங்ஙனம் பங்கம் ஏற்பட்டு விடவே, அராபியர்களின் தேசீய இயக்கமானது, பிரிட்டிஷாருக்கு விரோதமான ஒரு கிளர்ச்சியாக மாறி விட்டது. 1919ம் வருஷம் சிரியா, பாலஸ்தீனம், ஈராக் முதலிய நாடுகள் பிரிட்டிஷ் ராணுவ ஆக்ரமிப்பின் கீழ் இருந்த காலத்தில், இந்த நாடுகளின் நிலைமையைப் பற்றி விசாரித்து வரும்படி, அமெரிக்கக் குடியரசின் பிரசிடெண்டான வில்ஸன், அமெரிக்க அறிஞர்கள் அடங்கிய ஒரு சிறு கமிஷனை அனுப்பினான். இந்தக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், அராபியர்கள், பாலஸ்தீனத்திற்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்று கோருகிறார்களென்றும், இதை பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு எடுத்துக் காட்டினால், அவர்கள் பால்பர் அறிக்கையைத் திருப்பி எடுத்துக் காட்டி, இந்த அறிக்கையிலே கண்ட உறுதியை மீறி, பாலஸ்தீனத்தை எவ்வாறு அராபியர்கள் வசம் ஒப்புவித்து விட முடியுமெனக் கேட்கிறார்களென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, ஐரோப்பிய யுத்தம் முடிவு பெற்ற பிறகு, அராபியர்களின் சுதந்திர பாலஸ்தீனம் உருக் கொண்டு எழுவதற்குப் பதிலாக, ‘யூதர்களின் தேதீய ஸ்தல’மொன்றை பாலஸ்தீனத்தில் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு கூடிய ‘மாண்டேடரி’ நிருவாகத்திற்குட்பட்ட பாலஸ்தீனம் தோன்றியது. ‘யுத்தத்திற்கு முன்னர் துருக்கியர்களின் ஆதீனத்திற்குட் பட்டிருந்தோம்; இப்பொழுது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம்’ என்றும், இந்த ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே இந்த ‘மாண்டேடரி’ நிருவாகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதென்றும் பாலஸ்தீன அராபியர்கள் நம்பி விட்டார்கள். யுத்த சமயத்தில், பிரிட்டிஷார் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டனவே யென்பது இவர்கள் மனத்தில் அதிகமாகப் படவில்லை. ஆனால், தாங்கள் கொண்டிருந்த தேசீய அபிலாஷைகளெல்லாம் பயனற்றுப் போய் விட்டனவே யென்றுதான் வருந்தினார்கள்; கனன்றெழுந்தார்கள்.

பால்பர் அறிக்கை வெளியான காலத்திலிருந்து, அதனை அராபியர்கள் எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறைதான்—அதாவது 1919ம் வருஷம்—அப்பொழுது அராபியத் தலைவனென்று அங்கீகரிக்கப்பட்ட எமிர் பெய்ஸலும், யூதர்களின் தலைவனான டாக்டர் வீஸ்மானும் ஒரு வித ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். சுதந்திர ஐக்கிய அராபிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், பால்பர் அறிக்கையை இரு சாராரும் அங்கீகரிப்பதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்கள் தாராளமாக வந்து குடியேறுவதை ஏற்றுக் கொள்வதாகவும் இந்த ஒப்பந்தம் கூறியது.

பின்னர் 1920ம் வருஷம் மார்ச் மாதம் அராபியத் தலைவர்கள் ஒன்று கூடி, மேற்படி பெய்ஸலை சிரியாவுக்கும், பாலஸ்தீனத்திற்கும் சேர்ந்து அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு சிரியாவின் மீது ஆதிக்கஞ் செலுத்த விரும்பிய பிரெஞ்சு அரசாங்கம், பெய்ஸலை அப்புறப் படுத்தி விட்டது. இதனால், அராபியர்களின் சார்பாக பால்பர் அறிக்கையை பெய்ஸல் அங்கீகரித்துக் கொண்டது பயனற்று விட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அராபியர் யாருமே சிந்தனை செய்யவில்லை, இதனை ஒரு முக்கிய விஷயமாகவும் அவர்கள் கருதவில்லை.[2]

பால்பர் அறிக்கையை எதிர்த்து வந்த அராபியர்கள், பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட ‘மாண்டேரி’ அரசாங்கத்திற்கு விரோதமாகவும், கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். இந்தக் கிளர்ச்சி பல சமயங்களில் பெரிய கலகங்களாகப் பரிணமித்து, அநேக உயிர்ச் சேதங்களையும், பொருள் நஷ்டத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. இதைப் பற்றி நாம் ஆராயு முன்னர், அராபியர்களின் தேசீய இயக்கத்தைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

பிரிட்டிஷாரிடத்திலும், யூதர்களிடத்திலும் சுயநலங் காரணமாகத் துவேஷங் கொண்ட ஒரு சில சோம்பேறி பணக்காரர்களால் தூண்டி விடப்பட்டதே இந்த அராபிய தேசீயக் கிளர்ச்சி யென்றும், இவர்கள், ஒன்றுந் தெரியாத அராபிய ஏழை விவசாயிகளைப் பயமுறுத்தித் தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்களென்றும் ஒரு சிலர் பிரசாரஞ் செய்கின்றனர். இங்ஙனம் பிரசாரஞ் செய்வோர் யார், இவர்களுடைய நோக்கமென்ன, சுதந்திர தாகத்தினால் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய பிரசாரஞ் செய்யப் படுகின்றனவாவென்ற நுணுக்கங்களைப் பற்றி நாம் இங்கு ஆராய வேண்டுவதில்லை.

பாலஸ்தீனத்தில் தேசீய இயக்கத்தோடு, மத உணர்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதத் தலைவர்களும், இவர்களுக்கு அநுசரணையாயிருக்கிற சில நிலச் சுவான்தார்களும், முதலாளிகளும், இந்த இயக்கத்தின் தலைவர்களாயிருக்கிறார்க ளென்பது உண்மைதான். எந்த ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிய இவர்களுடைய உழைப்பின் பயனாகத் தாங்கள் பணஞ் சம்பாதிக்கிறார்களோ, அந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் யூதர்களோடு தொடர்பு கொண்டு விட்டால், தங்களுடைய செல்வாக்குக் குறையுமே யென்ற எண்ணம் இந்த அராபிய நிலச் சுவான்தார்களுக்கும். முதலாளிகளுக்கும் இருக்கலாம். இதற்காக இவர்கள், ஏழை விவசாயிகளை அச்சுறுத்தியோ, வேறு விதமாக நெருக்கியோ தேசீய இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு செய்திருக்கலாம். இந்த மாதிரியான உதாரணங்களை ஏக தேசமாகத்தான் காட்ட முடியும். ஆனால், பொதுவாகப் பார்க்கிற போது, பாலஸ்தீன அராபியர்கள் தேசப் பற்று நிரம்பியவர்கள். தேசம் ஒன்று தான் இவர்களுக்குத் தெரியும். அரசியல் சம்பந்தமான நுணுக்கங்கள் இவர்களுக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளவும் இவர்கள் விரும்புவதில்லை. தேசத்திற்காக, தங்கள் தலைவர்கள் சொல்கிறபடி எதையும் செய்ய இவர்கள் சித்தமா யிருக்கிறார்கள். அரசியல் கட்சியினராகத் தங்களை வகுத்துக் கொண்டு, அந்தக் கட்சிக் கொள்கைக்காக, இயக்கத்தை நடத்துவதென்பதோ, கிளர்ச்சி செய்வதென்பதோ இவர்களுக்குத் தெரியாது. கட்சி அபிமான மென்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். எஜமான விசுவாசம் ஒன்றுதான் இவர்களுக்குத் தெரியும்.ஆனால், அந்த எஜமான விசுவாசமானது, தேச நலன் ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும். இதனால் ஏழைகள், பணக்காரர்கள் என்ற வேற்றுமையின்றி, கிராம வாசிகள், நகர வாசிகள் என்ற வித்தியாசமில்லாமல், எல்லாரிடத்திலும் தேசீய உணர்ச்சியானது வலுத்து நிற்கிறது. இல்லா விட்டால், சென்ற 1936ம் வருஷத்திலிருந்து, பிரிட்டிஷ் படைகளுடன் இடை விடாத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்குமா? 1929ம் வருஷம் பாலஸ்தீனத்தைச் சுற்றிப் பார்த்த ஒரு பிரிட்டிஷ் கமிஷன்[3], அறிக்கையில் பின் வருமாறு கூறுகிறது:-

அராபிய விவசாயிகள், அரசியலில் நேர்முகமான சிரத்தை கொள்வதில்லையென்று சொல்லப் படுவதற்கு, எங்களுடைய அநுபவத்தில் எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை. நாங்கள் கிராமங்களில் சுற்றுப் பிரயாணஞ் செய்த போது, எங்களை ஆரவாரத்துடன் வரவேற்று, எங்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுத்தார்கள். இந்த உபசாரப் பத்திரங்களைப்
படித்துப் பார்த்தால், கிராம ஜனங்களும் விவசாயிகளும், ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ அமைக்கப்படுவதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றிக் கவலையும், சிரத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. இங்ஙனமே பாலஸ்தீனத்தில், சுய ஆட்சி ஸ்தாபனங்கள் அபிவிருத்தி செய்யப் படுவதைப் பற்றியும் ஊக்கங் காட்டுகிறார்கள். அராபிய விவசாயிகளும், கிராம ஜனங்களும், ஐரோப்பாவிலுள்ள அநேக ஜனங்களை விட அதிகமான அரசியல் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

பத்து வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை இந்த வாக்கியங்கள். அப்பொழுதே, பாலஸ்தீனத்தின் தேசீய இயக்கமானது, பொது ஜன இயக்கமாக இருந்திருக்கிறது. இப்பொழுது கேட்க வேண்டுமா?

‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ அமைக்கப்படுமென்ற நோக்கத்தோடு, பாலஸ்தீன அரசாங்க நிருவாகம் நடைபெறத் தொடங்கியது முதல், அராபியர்களிடையே தேசீய உணர்ச்சியானது வலுத்து நிற்பானேன்? யூதர்களின் குடியேற்றத்தை இவர்கள் ஏன் மறுக்க வேண்டும்? யூதர்கள் மீது கொண்ட துவேஷம் மட்டுந்தான் இதற்குக் காரணமா? அப்படி காரணங் கற்பிப்பது, அராபியர்களின் தேசீய உணர்ச்சியை அவமானப் படுத்துவதாகும். ‘யூதர்களின் தேசீய ஸ்தல’ ஸ்தாபனத்தினால் அராபியர்களின் பொருளாதார வாழ்க்கையே மாறி விட்டது. பொதுவாக, பாலஸ்தீனத்தின் பொருளாதார நிலைமையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு விட்டது. இதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். ஏனென்றால், இதுவே அடிப்படையான பிரசனை.


  1. இதனை பீல் கமிஷன் அறிக்கையும் (Peel Commission Report) வலியுறுத்திக் கூறுகிறது. மேற்படி அறிக்கையின் 42-ம் பக்கம் பார்க்க.
  2. பெய்ஸல் பின்னர் (23-8-1921) ஈராக் என்று அழைக்கப்படுகிற மெஸொபொடேமியா நாட்டின் அரசனாக்கப்பட்டான். இவனுடைய பெரு முயற்சியின் பேரில், 1932ம் வருஷம், ஈராக் நாடு சர்வதேச சங்கத்தில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இவன் 6-9-1933ல் ஸ்விட்ஜர்லாந்தில் இறந்து போனான்.
  3. Shaw Commission.