பாலஸ்தீனம்/முன்னணி

முன்னணி

சிறிது காலமாகப் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வருகிற சம்பவங்களையும், இவை சம்பந்தமாகப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கர்ப்பக்கிரகத்தில் ஏற்பட்டிருக்கிற அதிர்ச்சியையும் பார்க்கிற போது, இந்தப் பாலஸ்தீனப் பிரச்னை, முடிவுக்கு வராத ஒரு பிரச்னையாகவே இருந்து விடுமோவென்ற எண்ணம் சில அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘எகானமிஸ்ட்’ (The Economist) என்ற ஒரு பிரிட்டிஷ் வாரப் பத்திரிகை, 10-7-37ல், பாலஸ்தீனப் பிரிவினை சம்பந்தமாக எழுதியது இங்குக் கவனிக்கத்தக்கது.

பீல் கமிஷனுடைய சிபார்சுகளை பிரிட்டன் நன்கு வரவேற்ற போதிலும், உலகத்தின் மற்ற நாடுகள், இந்தப் பிரிவினையை, பாலஸ்தீனத்தில் வசிக்கிற இரண்டு ஜனங்களின் நஷ்டத்தின் மீது பிரிட்டன் லாபமடையக் கூடிய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முறைக்கு ஓர் உதாரணமென்று கருதுகின்றன.

பாலஸ்தீனம், ஒரு சிறிய நாடாயிருந்தாலும், அது தற்போதைய உலகப் பிரச்னைகளின் முன்னணியில் வந்து நிற்கக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டது. ஸ்பெயினும் இப்படித்தானே. ஆனால் ஸ்பெயினுக்கு ஏற்பட்டு விட்ட நரம்புத் தளர்ச்சி, புனித பாலஸ்தீனத்திற்கும் ஏற்படக் கூடாதென்பதே அறிஞர்கள் பிரார்த்தனை.

7–2–39ல் லண்டனில் சமரஸ மகாநாடு கூடிய அதே தருணத்தில், பாலஸ்தீனத்தில் அடக்கு முறை தேவதை காலதேவனோடு கை கோத்துக் கொண்டு கோர தாண்டவம் செய்த வண்ணமாயிருக்கிறாள். அராபியர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அடக்கு முறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்து, அஃது அங்கீகரிக்கப்பட்ட பிறகே, அராபியப் பிரதிநிதிகள் சமரஸ மகாநாட்டு மேஜைக்குச் செல்ல இசைந்திருக்க வேண்டுமென்றும், இது விஷயத்தில் இவர்கள் 1921ம் வருஷத்தில் ஐரிஷ் பிரதிநிதிகள், பிரிட்டனுடன் சமரஸம் பேசுவதற்கு முன்னர் நடந்து கொண்ட மாதிரியைப் பின் பற்றியிருக்கலாமென்றும் சில ராஜ தந்திரிகள் அபிப்பிராயப் படுகிறார்கள். இந்தச் சர்ச்சையில் நான் தற்போழ்து நுழைய விரும்பவில்லை. மகாநாடு தொடங்கி விட்ட பிறகு அதைப் பற்றி வாதம் செய்து என்ன பயன்?

வெளிநாட்டு விவகாரங்களில், தமிழர்களாகிய நாம் இன்னும் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் கோரிக்கை.

வெகுதானிய

தை உ௬

இதுதான் பாலஸ்தீனம்

பீல் கமிஷன், பாலஸ்தீனத்தை இந்த மாதிரிதான் பிரிக்க வேண்டுமென்று சிபார்சு செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலஸ்தீனம்/முன்னணி&oldid=1654585" இலிருந்து மீள்விக்கப்பட்டது