பாலைப்புறா/அத்தியாயம் 2



ந்த டெம்போ, குண்டு குழிச்சாலையில், துள்ளித் துள்ளிக் குதித்து, குதித்து ஓடியது. வேலையாட்களோடு, கனகம்மா, சல்வார்கமிஷ் மஞ்சுளா, வாடாப்பூ, மேலத்தெரு பூவம்மா, கீழத்தெரு சொர்ணம் ஆகியோர் பின் பக்கம் இருந்தார்கள். தலை மேல் விழுந்த பிளாஸ்டிக் நாற்காலிகளைச் சுமந்து கொண்டே, செம்மண் புழுதி படலத்திற்குள், டெம்போவை துரத்துவது போல் தலைவிரி கோலமாய் ஓடி வந்த பெண்களைப் பார்த்துக் கையாட்டினார்கள். ஆங்காங்கே ஆட்கள், அதிசயமாய்ப் பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டார்கள். பீடித் தட்டோடு வந்தவர்கள் வாயில், கை வைத்தார்கள். நான்கைந்து பட்டதாரிகள் உடம்பை நெளிக்க அவர்களுக்கு மத்தியில் நின்ற, கலைவாணியின் எதிர்காலக் கணவன் மனோகர், முகத்தை கேள்விக் குறியாக்கிப் பார்த்தான். அவனுக்கு கை காட்டிய கலைவாணி, டிரைவரை ஆற்றுப்படுத்தினாள். “ஒங்களுக்கு ஒன்றும் ஆகாது. வேணுமுன்னால் பாருங்க.”

“என்னத்த வேணுமுன்னு பார்க்கம்மா, - பார்க்கறதுக்கு உயிரு இருக்கணுமே! நீங்க உயிர விடலாம்… நியாயம். ஒங்க நியாயத்துக்காக நான் ஏம்மா அநியாயமாய் உயிர விடணும்”.

கலைவாணி, டிரைவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அந்த வண்டி கிட்டத்தட்ட கடத்தப்பட்டது மாதிரிதான். டிரைவர், டெம்போவை எடுக்கத் தயங்கிய போது, பாம்படக்காரி கனகம்மா, ‘காத்தை பிடுங்கி விடுவோம்’ என்றாள். சக்கர டயர்களை எப்படி பஞ்சராக்க வேண்டும் என்பது தெரியாமல், சல்வார் கமிஸிடம் யோசனை கேட்டாள். உடனே டெம்போ கர்ஜித்தது - பயந்து போய் உறுமியது.

30 பாலைப்புறா

அந்த டெம்போ, அந்த தெருவில் முனைக்குப் போய், வலதுபக்கமாய்த் திரும்பி, தொகுப்பு வீடுகளைத் தாண்டி, தனித்திருக்கும் முருகன் கோவிலுக்கு அப்பால் சென்று, அந்த கம்பிச்சாலையை எல்லையாகக் கொண்ட, ஒரு விசாலமான இடத்திற்கு முன்னால் நின்று, நொண்டியடித்தது. கலைவாணி மீண்டும் அதட்ட, அந்த இடத்தில் மத்தியப்பகுதியில் நின்றது. இரண்டு ஏக்கர் சதுரளவு இடம். குண்டு குழி அடைபட்டு, அந்த நிலத்திற்கு முடிவெட்டியது போன்ற புல் தளிர்களால் அலங்காரமாய்த் தோன்றியது.

டெம்போவில் இருந்து முன்னாலும், பின்னாலுமாய் குதித்தவர்கள், ஒரு நிமிடம், மூக்கில் விரல் வைத்து அப்படியே நின்றார்கள். எந்த இடத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டிருக்க வேண்டுமோ - அந்த இடத்தில் ஒரு கொட்டகை எலும்புக் கூடு - அதற்கு மாமிசத் தோல் போர்த்த பனையோலைகள். தென்னந்தட்டிகள். இந்த கூட்டிற்குள், அதன் ஆன்மா போல், கம்பு முளைகளில் கட்டப்பட்ட நான்கைந்து எருமை மாடுகள். ஏழெட்டு வேலையாட்கள், மூங்கில் கம்புகளைக் கட்டுவதும், பச்சைத் தென்னை ஒலைகளைப் பின்னுவதுமாக இயங்கினார்கள். மிராசுதார் ராமசுப்பு, வேலையாட்களை மேற்பார்வையிட்டார். உருளை உடம்பு... ஐம்பது வயதிருக்கலாம். பின் பக்கம் முதுகு வளைந்திருந்ததால், முகம் மட்டும் ஒணாண் மாதிரி.

கலைவாணிக்கும், அந்தப் பெண்களுக்கும் இன்னொரு அதிர்சி. ஒரு பட்டுத்துணி மறைவோடு உள்ள அடிக்கல், சரளைக் கற்களோடு, அநாதையாய்க் கிடந்தது. அச்சடித்தது போன்ற முத்து முத்தான எழுத்துக்களில் சாணக் கறைகள்... அந்தக் கல் பொருத்தப்பட்ட இடம், அரையடி ஆழத்தில் வெள்ளைமண்ணைக்காட்டி, இதுதான் வெள்ளையன்பட்டி என்று சிரித்தது.

கலைவாணியும், அவள் தோழிகளும் கொட்டகை போடப்பட்ட இடத்திற்கு ஒடினார்கள். எதுவுமே நடக்காததுபோல், ஒரு பனையோலை மட்டையை, அரிவாளால் ஒரேதுண்டாக வெட்டிய ராமசுப்புவை, அதிர்ந்து பார்த்தார்கள். அவருக்கு சிறிது தொலைவில் உள்ளூர் விவேகிகள் ஐந்தே ஐந்து பேர் தற்செயலாக வருவதுபோல் அந்தப் பக்கமாய் வந்தார்கள். சாணத்தில் புரளும் எருமை மாடுகள், ‘விட்டுடு' என்பது போல் ‘இம்மா' போட்டன.

கலைவாணிக்கு அழுகையே வந்தது. முறையிட்டாள்.

"மாமா... நீங்க செய்யுறது முறையில்ல மாமா. நம்ம ஊர்ல சரியான வைத்திய வசதி இல்லாமல், ரெண்டு பேரு பிரசவத்திலேயே இறந்து போனது ஒமக்கு தெரியாதா மாமா? 'தெக்குத்தெரு' காளிமுத்து அத்தை ஆஸ்பத்திரிக்கு சு. சமுத்திரம் 31

போகுற வழியிலேயே குறைப் பிரசவமானது தெரியாதா? ஒம்ம மகள்கள் - மருமகள்கள் மாதிரி - தென்காசி நர்ஸிங் ஹோமுல பிரசவிக்க முடியாத ஏழை பாளைகளுக்காக வருகிற பிரசவ ஆஸ்பத்திரி மாமா".

ராமசுப்பு காதில் வாங்காதது மாதிரி ஒரு மூங்கில் தட்டியை எடுத்து, சணல் கயிறால், கொட்டகை கம்புச் சரத்தில் கட்டினார். ‘வெயில் வரப் போவுது சீக்கிரமாய் முடியுங்களேப்பா' என்று வேலையாட்களை விரட்டினார். இதற்குள், கலைவாணியின் வருங்கால மாமனார் தவசிமுத்து, அந்தப் பக்கமாய் வந்தார். நடந்ததை யூகித்துக் கொண்டு, ‘இந்தா பாருப்பா... சுப்பு... நீ செய்யுறது ஒனக்கு நல்லா இருக்குதா' என்று கேட்டார். உடனே ராமசுப்பு, தவசிமுத்தைப் பார்க்காமலே, பச்சை தென்னை ஒலைகளை அடுக்கியபடியே ‘இது ஒரு காலத்துல களத்து மேடாய் இருந்தது. ஒனக்கு தெரியாதா? இதுல நீயும் களம் போடலாம்... மாடு கட்டலாம். அவ்வளவு ஏன்... இந்த கொட்டகை போட ஐநூறு ரூபாய் ஆகும். பாதி ரூபாய் கொடுத்துட்டு இந்த கொட்டகையில் பாதியை எடுத்துக்க. நான் வேண்டாங்கல’ என்றார்.

தவசிமுத்துவுக்கு, குற்றாலத்தில் குளித்தது போலிருந்தது. இங்கேயே ஒரு கட்டிலைப் போட்டு, ஒரு தென்னந்தட்டிக் கதவையும் வைத்து தூங்கினால்... அடேயப்பா எப்படி காத்து வரும்? பக்கத்து வாழைத் தோப்பும் வாய்க்கு உதவும்.

தவசிமுத்து, தான் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போல், சொன்னார். மருமகளாய் ஆகப் போகிற கலைவாணியிடம், வாழைப்பழ ஊசியாய் பேசினார்.

"ராமசுப்பு சொல்றதுல ஒரு முழு நியாயம் இல்லாவிட்டாலும், முக்கால் நியாயம் இருக்குது. நாளைக்கு நீங்க ஆஸ்பத்திரி கட்டி, இவனோ இல்ல எவனோ கோர்ட்டுக்குப் போய் கட்டுனதை இடிக்கப்படாது பாரு...ஆற அமர யோசிப்போம்”.

ஆனந்தி, அழாக் குறையாய் வாதிட்டாள்.

"என்ன தாத்தா இப்படிப் பேசுறீங்க? அந்த வெளிநாட்டம்மா சரியா ஆறு மணிக்கு வரப் போறாங்க. நேத்தே இவரு இப்படி அட்டுழியம் செய்திருந்தால், அவங்க கையிலே காதுல விழுந்து, நிகழ்ச்சிய தள்ளி வச்சிருப்போம். இங்கே வாரவங்களுக்கு என்ன பதில் சொல்ல...?"

"ஊர்மானம் பறக்கும் தாத்தா"

"எப்படி பறக்கும்.... கல்லுதானே நடணும். அதோ அந்த செளக்கு 32 பாலைப்புறா

தோப்புப் பக்கம் ஒரு பொட்டல் காடு இருக்குதே. அங்கே நடச்சொல்லுங்க”

"பிறக்கிற பிள்ளைங்கள நரி தூக்கிட்டுப் போகவா?”

“அப்டி இல்ல... முட்டாப்பய மகளே. நில விவகாரம் ஒங்களுக்கு சாதகமாய் ஆயிட்டால், அங்கே நடுறதை இங்கே நட்டுட்டால் போச்சு. சீக்கிரம் பஞ்சாயத்து வைச்சுக்குவோம்".

அந்தப் பெண்களுக்கு, அழுகை வரப் போன வேளை; இதற்குள், உள்ளூர் விவேகிகள், பேச்சு வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணைச் சிமிட்டினார்கள். பிறகு, ஒருத்தர் கேட்டார்.

“ஆம்புளைகள மதிக்காமல் பொட்டச்சிகளாய் சேர்ந்து இப்படி ஆடாத ஆட்டம் ஆடினால் பாடாத பாடுதான் படணும்".

“அப்டி என்னத்த ஆடிட்டோம் தாத்தா".

"இந்தக் கூட்டத்தை எப்படி நடத்தனுமுன்னு ஒரு வார்த்தை, கேட்டியளா... எங்க பேரக்கூட போடாண்டாம். ஆனால் ஒரு பேருக்காவது கேட்கனும் இல்லையா?”

"தப்புத்தான் தாத்தா! ஆனாலும் இதைப் படித்துப் பாருங்க தாத்தா!"

அந்தச்சமயம் பார்த்து கையில் காகிதக் கட்டோடு மூச்சிறைக்க ஓடிவந்து நின்ற வாடாப்பூவிடம் இருந்த நான்கைந்து காகிதங்களை, அந்த விவேகிகள் சிண்டிகேட்டின் தலைவரான ஆறுமுகக் கிழவரிடம், கலைவாணி நீட்டினாள். அதைப் படித்ததும் அவருக்குப் பரமானந்தம். அவரும், இவர்களும் முன்னிலை; இந்த பக்கத்துப் பழனியாண்டி பெயர்தான் விடுபட்டுட்டு - விடுபட வேண்டியவன்தான்.

வெள்ளையன்பட்டி விவேகிகள், பழனியாண்டி நீங்கலாக, இப்போது ராமசுப்புவை முகம் சுழித்துப் பார்த்தார்கள். இவர்கள், தங்களை மதிக்கவில்லை என்பதற்காக, வரப்பு வெட்டி திலகமான ராமசுப்பை, சும்மா, ரெண்டு கம்பு கழிகளைப் போடச் சொன்னது இவர்கள்தான். பொட்டப் பிள்ளைகளை ஒரு அதட்டுப் போட்டுட்டு, அப்புறமாய் விட்டுக் கொடுக்கணும் என்கிறது நோக்கம். ஆனால் இந்தப் பயல். இதுதான் சாக்குன்னு இடத்தை அமுக்குகிறான். விடப்படாது. அதுவும் நாம் முன்னிலை வகிக்கும் போது...

“எடே ராமசுப்பு நம்ம பிள்ளையடா.. கொட்டகய பிரிச்சிடுடா". சு. சமுத்திரம் 33

ராமசுப்பு, கம்பு முளையை கழட்டிக் கொண்டு ஓடிய ஒரு எருமை மாட்டை இழுத்தபடியே, 'தலைக்குமேல தண்ணீர் போன பிறகா' என்றார். அந்தப் பேச்சோடு பேச்சாய், 'ஏடா. மந்திரம் -அந்த டெம்போக்காறனுக ஏன் நிற்கான்னு அரிவாளோடு போய்க் கேட்டுட்டு வா’ என்றார்.

'லூசனான' மந்திரம், அரிவாளைத் தூக்கியபடியே ஒடியபோது, அந்த டெம்போவும் ஒடியது. திரும்பிப் பாராமல் ஓடியது. அத்தனை பெண்களும், கலைவாணியை அங்கேயே விட்டு விட்டு, டெம்போ பின்னால் ஓடி, கருப்பிகள் கூட சிவப்பானார்கள். கலைவாணிக்கு என்ன செய்கிறோம் என்பது புரியவில்லை. ஆவேசமாய் ஓடி, ஓலையும், அரிவாளுமாய் நின்ற ராமசுப்புவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அழுகை அழுகையாய் வந்ததை ஆத்திரம் ஆத்திரமாய் மாற்றிக் கொண்டாள். ராமசுப்பு, தவசிமுத்துவிடம் முறையிட்டார்.

"தவசி. ஒன் மருமகள விடச் சொல்லு. இல்லன்னா பொம்புளைய அடிச்சேன்னு எனக்கு கெட்டப் பேர்வரப்படாது."

"எனக்கும் சின்னப்பையன், பெரிய மனுஷனை கை வச்சுட்டான்னு பேர் வரப்படாது".

எல்லோரும் திரும்பிப் பார்த்தால், கலைவாணியின் தம்பி பலராமன்; பதினெட்டு வயதிருக்கும். பிளஸ் டு பெயிலு. பார் விளையாடுறதும், பஸ்கி எடுக்கிறதும் அவன் தொழில். இப்போது கோணச் சத்திரத்தில், கராத்தே கற்றுக் கொள்வதாக கேள்வி. டியூட்டோரியல் காலேஜுக்கும் போகிறான் என்பது பேரு, போவதோ கராத்தே கூடத்துக்குத்தான், என்பதாகச் செய்தி.

ராமசுப்புவும் விடவில்லை. கலைவாணி இறுக்கிப்பிடித்த கையாலயே, வேட்டியைத் தார் பாய்த்து, பலராமனை, பகைப் பார்வையாய்ப் பார்த்தார். அதற்குள், ஊரில் இருந்தும், அந்தக்கப் பிச்சாலைக்கு வடகிழக்கே உள்ள சேரியில் இருந்தும் ஒரே கூட்டம். ஆண்கள், அந்தக் கூட்டத்திலேயே காணாமல் போனது போன்ற பெண்கள் கூட்டம். சிலர் கைகளில், துடைப்பக் கட்டைகள் கூட இருந்தன.

கொட்டகை கம்புகள் கீழே விழுந்தன. மூங்கில் தட்டிகள் பாதிப் பாதியாய் சுருண்டன. ஒலைத் தட்டிகள், நொறுங்கின. அங்கும், இங்கும் கைகளும், கால்களும் அசைந்தன. அசைந்து அசைந்து அத்தனையும் நகர்ந்தன. வெறுமையாய் நின்ற இரண்டு பனைமரத்தூண்களை, நான்குபேர் ஆட்டி ஆட்டி, மேலே கொண்டு வந்து கீழே போட்டு ‘தூ’ என்று துப்பினார்கள். கூட்ட மிரட்டலில் எருமை மாடுகள், அங்குமிங்குமாய்த் துள்ளின; சில கயிறோடு ஓடின. சில முளையோடு ஆடின. 34 பாலைப்புறா

“மூடப்பயலே கட்டையில போறவனே...இன்னும் நாங்க சாகணுமா? இதுவரைக்கும் செத்தவளுக போதாதா?”

சில பெண்கள், கையில் மண்ணை அள்ளிக் கொண்டு ராமசுப்பு பக்கம் ஒடினார்கள். அவர் அரண்டு போனார். இதுவரை காணாத எதிர்ப்பு. ஊரில் தனக்கு செல்வாக்கு இருப்பதாய் அனுமானித்த எண்ணத்தில் மண்விழுந்தது போல், தலையில் செம்மண்துகள்கள், எவளோ ஒருத்தியின் கையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் விழுந்தன. அடிபடப் போனவரை, தவசிமுத்துதான் இழுத்துக் கொண்டு ஓடினார். ஓடும் போதே ஒரு உபதேசம் 'ஒரேயடியாய் தன்னந்தனியாய் அமுக்கப்படாதுப்பா’. 'பலாப்பழத்தை முழுசா சாப்பிடலாம். ஆனால் அப்படியே முழுங்க முடியுமா? இனிமேல் எதையும் அமுக்கணும். அபகரிக்கணுமுன்னு வந்தால் என்னையும் சேர்த்துக்கோ.. சீக்கிரமா ஒடு...’

கலைவாணியோ, அவளது தோழிகளோ இப்படிப்பட்ட ஆதரவை எதிர்பார்க்கவில்லை. பிரமித்து நின்றார்கள். சுற்று முற்றும் தத்தம் சொந்தக்காரர்கள், பெருமிதமாய் பார்ப்பதைப் பார்க்காமலே நின்றார்கள். பலராமன் வந்தபோது மட்டும், அவனை உள்ளுர் ரஜினிகாந்த்தாக நினைத்து, மீரா, உற்சாகமாக கைதட்டினாள். மீரா மட்டுமே.

கலைவாணிக்கு பிரக்ஞை வந்தது. டெம்போக்காரன் போயிட்டான். ‘என்ன செய்யுறது...எப்படி மேடை போடுறது, கையும், காலும் ஓடலியே’.

கலைவாணி, உள்ளுர் விவேகிகளிடம் ஓடினாள். நிலைமையை எடுத்துச் சொன்னாள். அவ்வளவுதான்... அவர்கள் உரக்கவே சத்தம் போட்டார்கள்.

‘கூட்டத்தை நடத்தியே ஆகணும். இந்த வெள்ளையன்பட்டி, பக்கத்து பட்டிகளுக்கு இளக்காரமாயிடப் படாது. டேய் மாரி... பனங் கம்புகளை நடுடா, சீமைச்சாமி... இந்தக் கம்பியை எடுத்து குழிதோண்டு. அடே பெருமாள் ஏமுல பிள்ளைத்தாச்சி மாதிரி வயித்த நெளிக்கே. என் வீட்டுலே போய் டிரக் வண்டியை இழுத்துட்டுவா... அதுதான் மேடை... இந்தப் பாரு மொள்ளமாரி அருணாசலம், ராமசுப்பு செளக்குத் தோப்புல போய், பத்துப் பதினைஞ்சு மரத்தை வெட்டிட்டு வா. கூடமாட வாரவன்ல ரெண்டு பேரை ராமசுப்பு வாழைத் தோப்புல ரெண்டு தலைவாழையை வெட்டிட்டு வரச் சொல்லு, உப்பத் தின்னவன் தான் தண்ணி குடிக்கணும்.' ‘ஏல குடிகாரா! கோணச் சத்திரத்தில் போயி பட்டாசு வெடி வாங்கிட்டு வா. என் வீட்ல தொழுவம் அடைக்க தென்னந்தட்டிக வச்சிருக்கேன். மயினிக்கு தெரியாம ஒசப்படாமல் தூக்கிட்டு வா' சு. சமுத்திரம் 35

அந்தக் கூட்டுச் செயற்குழு பெண்கள், ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமலே, அத்தனை பேரும் இயங்கினார்கள். இரண்டு மணி நேரத்தில் எல்லாமே தயார். டயர் சக்கர வண்டி மேல் தார்ப்பாய் போடப்பட்டு, அது மேடையானது. அதற்குமேல் எழுந்த தென்னை ஒலை பந்தலின் அடிவாரத்தில், சலவைத் தொழிலாளி அருணாசலம், அழகழகான சேலைகளை நீள வாக்கில் கட்டிவிட்டார். எவளெல்லாம் அவருக்குப் பிடிக்காதோ, அவள்களுடைய சேலைகள், இப்போது பந்தல் அம்மணத்தை மறைத்தன. ராமசுப்புவின் செளக்குக் கட்டைகளில், ராமசுப்புவின் குலைவாழைகள் கட்டப்பட்டன. உள்ளுர் மேளக்காரர்கள் கூப்பிடாமலேயே வந்து விட்டார்கள்.

வாடாப்பூ, கலைவாணிக்கும், ஆனந்திக்கும் மத்தியில் நின்றாள். மீரா, பலராமன் போகும் இடமெல்லாம் போக்கு காட்டி நடந்தாள். பக்கத்தில் உள்ள பனந்தோப்பில், சுண்ணாம்பு கலக்காத பதநீரைக் குடித்துவிட்டு, லேசாய் தடுமாறுவது போல் வந்த 'லாரிக்கார' மாரியப்பன், 'இங்க என்னடி ஒனக்கு வேலை' என்று வாடாப்பூ தலைமுடியை பிடிக்கப் போனான்... கலைவாணி கர்ஜித்தாள்.

"வாடாப்பூவ. தொடு பார்க்கலாம்”

கனகம்மாள் மிரட்டினாள்.

"தொட்டால்.. கை துண்டா விழும். ஒன்னத்தான் மாரியப்பன்! இனிமேல் அவள எப்போவாவது, நீ அடித்தால், அது எங்கள அடித்தது மாதிரி. ஒன்னை மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி... கழுதையிலே ஏத்திடுவோம்; பொட்டப் பயல்தான் பொம்புளைய அடிப்பான்".

கலைவாணியும், சீனம்மாவும் மிரட்டிய மிரட்டலில், கண்களை உருட்டிப் பார்த்த மாரியப்பன், அப்படியே குன்றி நின்றான். தடுமாறாத போதை... தன்னை மறக்காத போதை... வாடாப்பூவை முறைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை... என்ன கொடுமை இது?

மாரியப்பன் போனதும், வாடாப்பூ, கலைவாணியின் கையையும், தேனம்மாவின் தோளையும் பிடித்துக் கொண்டு விம்மினாள். உள்ளே அழுது இப்போது வெளிப்படையாகவும் அழுதாள். கலைவாணி ஆறுதல் சொன்னாள். 'சரி எப்போவாவது அடித்தா முன்னால், நாங்க இருக்கோம். சாத்து சாத்துன்னு சாத்திடுவோம். இப்போ பல கிராமங்களில் பெண்கள் இயக்கம் பெண்டாட்டிய அடிக்கிற பயல்களை உண்டு இல்லன்னு ஆக்குது'. 36 பாலைப்புறா

சிறிது நேரத்தில், ஒரு கண்டசாகார் வந்தது. அதற்குப்பின்னால் ஒரு கார். இன்னும் ஒரு ஜீப்.

கலைவாணியை முந்தி, ஆனந்தி கதவைத் திறந்தாள். சுருட்டைத் தலைமுடி கொண்ட நாற்பது வயது பெண். பாறைகளில் ஈரப் பசும்புல் படர்ந்தது மாதிரியாக வளவளப்பான தலை. முழங்கால் வரை நீண்ட ஸ்கர்ட்... காக்கா பொன்போன்று மின்னும் கறுப்பு. திருஷ்டி பரிகாரமாய் தடித்த உதடுகள்; பாம்படம் போட்ட கனகம்மா, சந்தன மாலையைப் போட்ட போது, அந்தம்மா, அவள் கையைப் பிடித்துக் கொண்டு, விடவே இல்லை. பாம்படங்களை தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்திருப்பது போல், முகம் மலர்ந்தாள். அதே கண்டசா காரில் இருந்து மறுபக்கமாய் இறங்கிய ஒரு டை கட்டி ஜென்டில்மேன், ஏதோ சொல்ல, மேடம், மேடையைப் பார்த்து நடந்தாள். கலைவாணி, ஆனந்தி வகையறாக்கள் இருபக்கமும் நடந்தார்கள். காமா சோமாவாய் மேடை போட்டிருப்பதற்கு கலைவாணி வருத்தம் தெரிவிக்கப் போன போது, அந்த மேடையை அதிசயித்துப் பார்த்த மேடம், டைகாரனிடம் எதையோ சொல்லும்படி சொல்ல, அவரும் வாய் கொள்ளாச் சிரிப்போடு நின்ற மேடத்தைச்சுட்டிக்காட்டி, இப்படிச் சொன்னார்.

‘போகிற இடத்துல எல்லாம், ஏ.ஸி மண்டபங்களையும், சாமியானா பந்தல்களையும் பார்த்து, ஒரு செயற்கைத் தனத்தால் வருத்தப்படும் அம்மாவுக்கு, இந்த மேடையைப் பார்த்ததும் சந்தோஷமாம். இங்கேதான் மண்வாசனை தெரியுதாம். அதோடு பந்தலின் அடிவாரத்தில் உள்ள நாட்டுப்புறக்கலை வேலைப்பாடு காணக் கிடைக்காத அதிசயமாம். இந்த மாதிரியான கிராம ஒற்றுமையை வேறு எங்கேயும் பார்க்க முடியாதாம்...’

ஒரே கைதட்டல்; பந்தலுக்கு, தத்தம் அருமையான சேலைகளை பறிகொடுத்தவர்கள் தவிர்த்து, அனைவருமே தட்டினார்கள். டைக்கார இந்தியனுக்கு சந்தோஷம். ஃபாரின் போஸ்டிங் நிச்சயம்...

மேடம், மேடை ஏறப் போன போது, லாரிக்கார மாரியப்பன், பக்கத்தில் போய் பனங்கள்ளாய்க் குழைந்து கேட்டான்.

“எம்மா எம்மா... பொம்புளை பிள்ளை பெறுறதுக்கு மட்டும் ஆஸ்பத்திரி கட்டினால் எப்படிம்மா.. நாங்க ஆம்புளைங்க எங்கம்மா போவோம்? குழந்தை பெறுறதுக்கு மட்டுமா.... வயித்த வலி வருது? பிள்ளை உண்டானால்தான் வாந்தி வருமா? எங்களுக்கும் வரும்மா. நாங்க எங்கேம்மா போவோம்? எங்களுக்கும் ஒரு சின்ன ஆஸ்பத்திரியா... அம்மா அம்ம்மா" சு. சமுத்திரம் 37

வாடாப்பூ, கூட்டத்தின் முகப்புக்கு வந்தாள். 'அந்த பேதிலபோவானை, யாராவது இழுத்துட்டுப் போங்க’ என்றாள். டை கட்டி இந்தியர், மாரியப்பனை மானசீகமாக உதைத்தார். ஃபாரீன் போஸ்டிங் கிடக்கட்டும். இப்போ, லோக்கல் நீடிப்பதே கஷ்டம்...

மேடம், மாரியப்பனை, அதிசயித்துப் பார்த்தாள். பிறகு அந்த டை கட்டியைக் கூப்பிட்டு, அவன் பேசியதை, ஆங்கிலத்தில் அர்த்தப்படுத்தச் சொன்னாள். அவரும் ஆங்கிலம் தெரிந்த கலைவாணியையும், ஆனந்தியையும் கணக்கில் கொண்டு, உள்ளபடியே மொழி பெயர்த்தார். மேடம் நிச்சிலோ 'ரியலி ரியலி.. குட் வெரிகுட்' என்றாள். பிறகு, தனது உதவியாளரிடம், மீண்டும் பேச அவர் மீண்டும் தமிழ்ப் படுத்தினார்.

‘இதோ இவர் சொன்னது மாதிரி கட்டப் போகிற பிரசவ ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலேயே... ஒரு அனேக்ஷர் கட்டப்படும் என்று மேடம் சொல்லச் சொன்னாங்க. இதுல எல்லோருக்கும் எல்லா நோய்க்கும் எல்லா மருந்தும் கிடைக்கும் என்றும் சொல்லச் சொன்னாங்க. இதுக்கு முன்னோடியாய் அடுத்த வாரம் இலவச மருத்துவ முகாம் நடத்தும்படி கலெக்டர்கிட்ட வேண்டுகோள் விடுப்பாங்களாம். தமிழக அரசிடம், வெள்ளையன்பட்டியில், மருத்துவமனை கட்ட வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதையும் மேடம் ஞாபகப்படுத்தினாங்க”.

ஒரே கைதட்டல்; அதைப் பார்த்துவிட்டு, மேடமே கைதட்டினார். பிறகு மீண்டும் உதவியாளரிடம் ஒரு உரையாடல்; அவர் வாய் ஒலிப் பெருக்கியானது தமிழ் மொழிபெயர்ப்போடு.

"இதோ இவரை மாதிரி எல்லோரும் இருக்கணுமாம். இவரை மாதிரி ஒவ்வொருத்தரும் ஊர் தேவைகளை சொல்லி இருந்தால், இந்தியா, இதைவிட நல்லாவே முன்னேறி இருக்குமாம்”.

பயங்கரமான கைதட்டல், இப்போது மேடம் நிச்சிலே சுற்றி நின்றவர்களைப் பார்த்துப் பேசினாள்.

"வெள்ளையன்பட்டி. கீப் இட் அப் கீப் இட் அப்”

‘வெள்ளையன்பட்டியே இப்படியே இரு...இப்படியே இரு’

டைகட்டியவர், அப்படிக் கத்தினாலும், களைத்துப் போகவில்லை. சக்ஸஸ். ஃபாரின் போஸ்டில் வெற்றி... ஆனாலும், கலைவாணியிடம்

கிசுகிசுத்தார். ‘குட்டு உடையும் முன்னே, அவனை யாரையாவது விட்டு தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க.‘ 38 பாலைப்புறா

வாடாப்பூவுக்கும், கணவன், அசல் அர்ச்சுனன் மாதிரியே தெரிந்தது. ஊருக்குள்ள மட்டுமா, இருக்குது. லாரில இந்தியா முழுசும் சுத்துற மனுஷராச்சே, படுவாமனுஷன்’

மேடம் நிச்சில், மேடை ஏறி, அலங்கார நாற்காலியில் உட்கார்ந்தாள். வெளிநாட்டுக்காரி என்றதும், வெள்ளைக்காரியை எதிர்பார்த்த கூட்டம், ஆரம்பத்தில், இந்த கறுப்புக்காரியை கேலியாகப் பார்த்தது. நிசந்தான், ஆனால் இப்போதோ, அவளோடு ஒன்றிவிட்டது.

இதற்குள், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சந்திரா, முஸ்தபா சகிதமாய் கோபுர முத்திரை போட்ட காரில் வந்தார். லேட்டாக வந்ததற்கு கூச்சப்பட்டு, மேடைப்பக்கமே நின்றார். அவரை வரவேற்பதற்காக கீழே இறங்கிய கலைவாணி, அவரை மேடைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குமிங்குமாய் அலைந்தாள். குத்து விளக்கு கொண்டு வரப் போன மீராவைக் காணவில்லை. இந்த அமர்க்களத்தில் விளக்கு மறந்து விட்டது.

சிறிது தூரம், மீராவைத் தேடி அலைந்தவள் கண்ணில், எதிர்காலக் கணவன் மனோகர் எதிர்ப்பாட்டான்.

"எப்போவந்தீங்க... வாங்க முன்னால வந்து உட்காருங்க”

“நோதேங்க்ஸ் எங்க நிற்கணுமுன்னு எனக்குத் தெரியும். நீங்க பிஸி ஒங்க வேலையைப் பாருங்க..."

ஒரு தேவதையாய் துள்ளிய கலைவாணி, பேயறைந்தவள் போல் ஆகிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_2&oldid=1639222" இலிருந்து மீள்விக்கப்பட்டது