பாலைப்புறா/அத்தியாயம் 29
இப்போதைக்கு, அது இரண்டு மாடிக் கட்டிடம். மூன்றாவது மாடி முளை விடப் போவது போல், இரண்டாவது மாடியில் மூன்றடி உயரச் சுவர்களில், சதுரம் சதுரமாய் கட்டப்பட்ட செவ்வகக் கம்பிகள் செங்குத்தாக நீண்டு கொண்டிருந்தன. இந்தக் கட்டிடத்தில், அடிவாரத்திலும் ஒரு தளம் இருக்கிறது. ஆனால், அங்கே என்ன இருக்கிறது என்பது ‘பட்டுச் சேலை டாக்டர்’ என்று பரவலாகப் பேசப்படும் டாக்டர் சுமதிக்கே வெளிச்சம். இந்தக் கட்டிடத்திற்கு முன்னால் போய் நின்று, அண்ணாந்து பார்த்தால், ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’ என்று, நவீன ஓவியப் பின்னணியில் எழுதப்பட்ட தேக்குப் பலகை, ஆங்கிலத்தில் ‘மாஸ் அவார்னஸ் டைரக்டரேட்’ என்று பெயர். இதனாலோ அல்லது இது அல்லாத காரணங்களாலோ, படித்தவர்கள் இந்த வாசகத்தைச் சுருக்கி ‘மேட்’ என்பார்கள். தெரியாத்தனமாய், இப்படி ஒரு பெயரை வைத்து, அதன் சுருக்கம் இப்படி ஆகி விட்டதே என்று டாக்டர் சுமதி, ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும், இப்போது சந்தோஷப்படுகிறாள்… ஆமாம். இந்த அப்பாவி மக்களை கரையேற்றுவதில், ‘எங்கள் இயக்கத்திற்கு ஒரு பைத்தியம்’ என்கிறாள். பைத்தியக்கார பொது மக்களை, எய்ட்ஸ் சம்பந்தமாக பக்குவப்படுத்துவதில் நாங்கள் மேட்… பைத்தியம்தான் என்று அழுத்திப் பேசுகிறாள்.
என்றாலும், இந்த இயக்கத்தின் பெயரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. முழுக்க, முழுக்க எய்ட்ஸ் விழிப்புணர்வு காரியங்களைச் செய்யும் இந்த அமைப்பு, ஏன் எய்ட்ஸ் என்ற வார்த்தையைச் சேர்க்கவில்லை என்று கேட்கும் இதே மாதிரியான ஒரு சில அமைப்புகள், அப்படிக் கேட்டு விட்டு குறுஞ்சிரிப்பாகவும் சிரிக்கின்றன. எய்ட்ஸ் என்று போட்டுவிட்டால், பெண்ணியம், ஊரக வளர்ச்சி, பெண் சிசுக் கொலை போன்ற பிரச்சினைகளில், ‘விழிப்புணர்வு’ இயக்கங்களை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும், காசு கறக்க முடியாதே என்கின்றன… ஒரு வேளை எதிர்காலத்தில், எய்ட்ஸ் நோய் குணப்படுத்தப்படலாம் என்று டாக்டர் சுமதி பயந்து, இந்த எய்ட்ஸ்க்குப் பிறகும் தனது அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, இப்படி பொதுப்படையான பெயரைச் சூட்டியிருப்பதாக, இந்த அமைப்பு போல் வளராத இதர அமைப்புகள் இயம்புகின்றன. ஒரு தடவை, ‘இப்படிப்பட்ட’ கருத்து பற்றி டாக்டர் சுமதியிடமே செய்தியாளர் கூட்டத்தில், ஒருத்தர் கேட்ட போது, ‘காய்த்த மரத்தில்தானே… கல்லடி விழும்’ என்று அவள் பதிலளித்தாள். உடனே இன்னொரு நிருபர் ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்றும் வைத்துக் கொள்ளலாமே’ என்ற கேட்ட போது, டாக்டர் சுமதி செய்தியாளர்களுக்காக திட்டமிடப்பட்ட ‘காக்டெய்ல் பார்ட்டியை’ ரத்து செய்து விட்டாளாம். எப்படியோ போகட்டும்…
கலைவாணி, கீழே இருந்து படியேறி, முதலாவது தளத்திற்குள் நுழைந்தாள். ஒரே கிளு கிளுப்பு… உடலெங்கும் பொங்கிய வியர்வை, உடனடியாய் பன்னீராய் மாறிய பரவசம்… உச்சிச் சூரியனை உள்ளே விடாமல், ஆகாயத்தில் கட்டிப் போட்டது மாதிரியான நேர்த்தி; தெர்மகோல் போட்ட மேற்பரப்பு… இவற்றிற்கு இடையிடையே நிலா விளக்குகள்… பரந்து விரிந்திருந்த தளத்தில், ஆங்காங்கே அலுமினிய உருளைக் கம்பிகளில் பொருத்தப்பட்ட நோவா பலகைகள்… அதோடு தளத்தை சின்னச் சின்ன தடுப்புக்களாய் காட்டும் செக்ஷன்கள்… ஒவ்வொரு தடுப்பறையிலும், அழகழகான சொக்காப் பெண்கள். பனியன், சட்டை போட்ட இளைஞர்கள்… இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறுகிறவர்களாம்…
கலைவாணி, இந்த நோவா தடுப்புகளில் இருந்து தனித்திருந்த அறைக்குள் போனாள். நீண்ட பெரிய கூடம்… இடது பக்கம் சோபா செட்… வலது பக்கம் ஒரு மேஜை… அதன் மேல் ஒரு எலக்ட்ரானிக் டைப்ரைட்டர்… நீளவாக்கில் பல்வேறு பைல்களை கொண்ட ரேக்… இந்த ஜடப் பொருட்களைப் பார்த்த கலைவாணி, எதிர் பக்கம் ஜடமாய்க் கிடந்த ஒரு பிள்ளையாண்டானைப் பார்த்தாள். கழுத்தில் ஒரு கலர் டை கட்டியிருந்தான். அந்த ஏஸியிலும் அவன் முகம் வேர்த்திருந்தது. இவனது இருபக்கமும் நடுத்தர வயதைத் தாண்டிய இருவர்… பெற்றோராய் இருக்கலாம்… சூட்டு கோட்டு போட்ட அந்த மனிதர் கையில் ஒரு கவர்… டாக்டர் அசோகன் மேசையில் அடுக்கி வைக்கப்பட்ட கவர்கள் மாதிரி அதே நிறம். அம்மாக்காரியின் கண்கள் சிவந்திருந்தன… அந்த மனிதர், மகனின் முதுகு வழியாக தங்கச் சங்கிலி போட்ட கடிகார கையை நீட்டி, அவன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார். அந்த இளைஞன், ஏதோ பேசப் போகிறான்; பிறகு பேச்சற்று, மூச்சற்றவன் போல் மேற்கூரையை நோககுகிறான். பார்வையில் கூட ஒரு கோர்வை இல்லாதது போல், குமைந்து போய்க் கிடக்கின்றான்.
கலைவாணி, அவர்களை ஊனுருகிப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, உள்ளே பச்சைக் கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட அறைக்கு பக்கவாட்டில், ஒரு முக்காலியில் உட்கார்ந்திருக்கும் மீசைக்காரனிடம் ஏதோ பேசினாள். அவனோ அவள் வருவது தெரியும் என்பது போல் தலையாட்டி விட்டு, அதே சமயம் அவளைக் கையமர்த்தினான்… கலைவாணியை, பக்கத்தில் உட்காரச் சொல்லுகிறான். அவள் உட்காராமலேயே, கடிகாரத்தைப் பார்க்கிறாள். பத்து நிமிடத்திற்குள் டாக்டர் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று எவளோ ஒருத்தி சொல்லிவிட்டுப் போனாள். இவள் நிதானமாக புறப்படப் போன போது, ‘டெஸ்பாட்ச்’ செக்ஷன் எடுபிடிப் பெண்கள் இவளை அவசரப்படுத்தினார்கள். சொன்ன நேரத்திற்கு, சுமதியம்மாவைப் பார்க்கா விட்டால், அப்புறம் பார்க்க வேண்டிய அவசியமே இராது என்று வேறு பயமுறுத்தி விட்டார்கள். இவளுக்கும் வேலை போய் விடக் கூடாதே என்ற பயம். மாதம் அறுநூறு ரூபாய் சம்பளமும், இருப்பதற்கு கிடைத்துள்ள ஒரு அறையும் இழுபறியாகி விடக் கூடாதே என்ற அச்சம். இந்த அமைப்பில் சேர்ந்த இந்த ஆறு மாத காலத்தில், டாக்டர் சுமதியை இதே அறையில் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறாள். அதுவும், அசோகனின் வேண்டுகோள்படி; அவனது மருத்துவமனையில் இருந்து இவளைக் காரில் ஏற்றிக் கொண்டு போன சுமதி, வழியிலேயே இவளை இறக்கி விட்டு, “நான் இப்படியே கலெக்டர பார்க்கப் போறேன்… நீ ஆபீஸ்ல போய் வெயிட் பண்ணு” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். மணிக் கணக்கில் காத்திருந்த கலைவாணி, அறைக்குள் நுழையப் போன சுமதிக்கு ஒரு வணக்கம் போட்டாள். உடனே, டாக்டர் சுமதியும், இவள் உள்ளே வரப்படாது என்பது போல் வாசல் கதவை மறைத்தபடியே ‘பி.ஏ.’விடம், இவள் சம்பந்தமாக ஏதோ பேசி விட்டு உள்ளே போய் விட்டாள். இந்த பி.ஏ. சரியான மேனா மினுக்கி… எங்கெல்லாமோ போய், யார் யாரிடமோ பேசி, கும்மாளம் அடித்து விட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இவளுக்குரிய வேலைகளை விளக்கினாள். கிரவுண்ட் புளோரை விட்டு, எந்த புளோருக்கும் போகப்படாது. என்னென்ன கடிதங்கள், யார், யாருக்கு போகின்றன என்பதைக் குறிப்பெடுக்க வேண்டும். கவர்களை ஒட்ட வேண்டும். சைக்கிள் பையன் போட்டுவிட்டுப் போகும் செய்திப் பத்திரிகைகள், வாரப் பத்திரிக்கைகள் ஆகியவற்றில், இந்த அமைப்பைப் பற்றியோ, டாக்டர் சுமதியைப் பற்றியோ ஏதாவது செய்தியோ அல்லது ரைட்டப்போ வந்திருந்தால், அதைச் சுட்டிக் காட்டி, உடனடியாய் மேலே அனுப்பி வைக்க வேண்டும். இதுதான்.அவளோடவேலை… ஆனால், இதுவே அவளுக்குச் சரியாக இருந்தது.
முக்காலியில் இருந்த மீசைக்காரன், கிட்டத்தட்ட தூங்கிப் போனான். கலைவாணிக்கு சங்கடமாய் இருந்தது. ஒரு வேளை, டாக்டரம்மா தான் இன்னும் வரவில்லை என்று நினைத்து விடப் படாதே என்ற முன்னெச்சரிக்கை. அந்தம்மாவை முழுமையாய்ப் பார்த்து, நேருக்கு நேராய் பேசப் போவது இதுவே முதல் தடவை. டாக்டர் அசோகன் மருத்துவமனையிலும், அதற்குப் பிறகு, இங்கேயும் அவ்வளவு சரியாகப் பார்க்கவில்லை. இந்தம்மா காரில் இறங்கும் போதும், ஏறும் போதும் மட்டுமே சில சமயம் பார்த்திருக்கிறாள். எவனும், எவளும் இந்தம்மா கூப்பிடாமல், முண்டியடித்து முன்னால் போய் நிற்கக் கூடாது என்பது பி.ஏ.ம்மா ஆணை. அதோடு, இந்த சுமதியம்மா, அந்த அலுவலகத்தில் இருந்ததை விட, வெளிநாடுகளில் இருப்பதே அதிகம்… ஆகையால், இந்தப் பெண் விக்கிரமாதித்தை கூப்பிட்டு அனுப்பிய காரணத்தைக் கண்டறிய, கலைவாணிக்கும் ஒரு ஆவல். எவ்வளவு நாளைக்குத்தான் கவர்களையே ஒட்டிக் கொண்டிருப்பது…
கலைவாணி, பொறுமை இழந்தாள். வழுவழுப்பான ரப்பர் மெத்தையால் போர்த்தப்பட்ட கதவைத் திறந்தபடியே, உள்ளே போனாள். அப்போது அந்தக் கதவுச் சத்தமும், மீசைக்காரனின் குறட்டை சத்தமும் ஒன்றாய்க் கலந்து, ஒரு விநோத சத்தத்தை ஏற்படுத்தியது.
அந்த அறைக்குள், டாக்டர் சுமதி ஒரு சுழல் மெத்தை நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அது முன்னாலும், பின்னாலும் வளைந்து அவளை மலக்க வைத்தும், கவிழ்க்க வைத்தும் கண்ணாமூச்சி ஆடியது. எதிரே உள்ள வட்ட வளைவு பளிங்கு மேஜையில், விதவிதமான வண்ணங்களில் அடுக்கடுக்கான பைல்கள்… கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்கு… ஒரு டெலிபோன்… ஒரு இண்டர்காம்… ஒரு கம்ப்யூட்டர், ஒரு வீடியோ திரை… அந்த மேஜைக்கு அப்பால் உள்ள மெத்தை நாற்காலிகளில், இரண்டு வெள்ளைக்காரிகள்… ஒரு காரன்… அந்தப் பெண்கள், வயது காணா வனப்பு… சுழல் நாற்காலிக்காரியின் சிவப்பு முகமும், வெள்ளக்காரர்களின் வெளுப்பும், வெள்ளை ஆகாயத் திட்டுக்களுக்கு இடையே, காலைச் சூரியன் தலையாட்டி பேசுவது போல இருந்தது. சும்மா சொல்லக் கூடாது… அந்த சூழலுக்கு ஏற்ப, டாக்டர் சுமதி இடுப்புக்குக் கீழே பட்டுச்சேலை கட்டியிருந்தாலும், அதற்கு மேல் கட்சோளிதான் போட்டிருந்தாள். முந்தானை பட்டும் படாமலும், மார்பகத்திற்கு இடையே ஒல்லியாய் போய், கழுத்தை வளைத்து ஒரு பக்கத்து தோளில் தொங்கியது. தலை முடி, வழக்கத்திற்கு
விரோதமாய் மேல் நோக்கி சுருட்டப்பட்டிருந்தது.
அந்த நால்வரையும் நோக்கிப் போகப் போன கலைவாணி, அபபடியே நின்றாள். அவர்கள் பார்த்த வீடியோ படத்தை இவளும் பார்த்தாள். என்ன இது…? டாக்டர். அசோகனின் எய்ட்ஸ் வார்ட். சந்தேகம் இல்லாமல் அதே நோயாளிகள். அதே ஆயா. அதே வார்ட் பையன். ஆயா, ஒரு நோயாளியை கிணற்றுக் கல்லில் உட்கார வைக்கிறாள். சுமதியம்மா… பக்கத்தில் உள்ள வாளியில் இருந்து, தண்ணீரை ஒரு குவளையில் மொண்டு மொண்டு, அந்த நோயாளியின் தலையில் ஊற்றுகிறாள். அந்த உடம்பை, வார்ட் பாய் ஒரு பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க, இவள் சோப்பை நீட்டுகிறாள். தண்ணீரைக் கொட்டுகிறாள்… அப்புறம் அடுத்த காட்சி. சுமதியம்மா எய்ட்ஸ் நோயாளிகள் தலைகளைக் கோதி விடுகிறாள். தண்ணீரை, பயத்தாலோ அல்லது பாசத்தாலோ நடுங்கும் கரங்களால் துடைத்து விடுகிறாள். மூன்றாவது காட்சியில், அவர்கள் வாயில் உணவூட்டுகிறாள். நான்காவது காட்சியில் சுமதியம்மாவின் தனிப் பேட்டி… ஐந்தாவது காட்சியிலாவது அசோகன் வருவாரா… இல்லை… அதோடு சரி…
கலைவாணிக்கு, டாக்டர் அசோகனை நினைக்க நினைக்கப் பாவமாய் இருந்தது. இதை, அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று நிறுவன விசுவாசத்திற்கும், உண்மைக்கும் இடையே இழுபட்டுக் கொண்டிருந்தாள்.
டாக்டர் சுமதியை, அந்த மூன்று வெள்ளைக்காரர்களும் அதிசயித்துப் பார்த்தார்கள். வெள்ளைக்கார மனிதர், அவள் கையை பலம் கொண்ட மட்டும் குலுக்கினார். பெண்களில் இளையவள், மேஜையில் உடல் சாய்த்து, தலையை பாம்பு போலாக்கி, சுமதியில் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். வயதானவள், ‘ஒண்டர்புல், ஒண்டர்புல்…’ என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
குட முழுக்கு செய்யப்பட்ட கோபுர உச்சி போல் கொண்டை போட்டிருந்த சுமதி, அந்த வெள்ளைக்கார பெண்களுக்குக் கை கொடுத்தாள். அந்த வெள்ளைக்காரர் பிடித்த கரத்தை லபக்கென்று எடுத்துக் கொண்டு, அவருக்குக் கை கூப்பினாள். தமிழ்ப் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியுமா?…
இந்த அமர்க்களத்திற்குப் பிறகு, இதுதான் சமயமென்றோ அல்லது ஏற்கெனவே திட்டமிட்டபடியோ, டாக்டர் சுமதி ஒரு வரை படத்தை எடுத்தாள். மேஜையில் ஒரு முனையில் இருந்த ஸ்லைட் புரஜெக்டரில் சொருகினாள். மறுமுனையில் உள்ள சின்னத் திரையில் ஒரு வரைபடம் தோன்றியது. உடனே சுமதி, கலை வேலைப்பாடு கொண்டஒரு ரூல் தடியால், ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக் காட்டி, இசையமைப்பது போல் குரலை ஏற்ற இறக்கமாக வைத்துக் கொண்டு விளக்கினாள்.
“இது தொலைவான இடங்களில் இருந்து இங்கே கவுன்சலிங் வருவோர்க்கு குடில்கள் கட்டும் இடம்… இது… கண்டதையும், கேட்டதையும் தீர விசாரித்து காட்சியாக்கும் வீடியோ தியேட்டர்… அது எய்ட்ஸ் நோயாளிகளோடு, நான் உட்பட எல்லோரும் உணவருந்துவதற்கான பொது உணவுக் கூடம். இது ஹெச்.ஐ.வி. நோயாளிகளை சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான பல்வேறு பயிற்சிப் பட்டறைகள்… ஒயர் கூடை பின்னுதல், மின்சார காயல் செய்தல்… ஜெம் கட்டிங்… பேட்டரி ஸெல் செய்தல்… டெய்லரிங்… இது கம்ப்யூட்டர் டிரெயினிங் சென்டர்… இது பிரிண்டிங் பிரஸ்…”
அந்த வெள்ளைக்காரர்கள் மூவரும், இப்போது இருக்கைகளிலே குதித்தார்கள். உடனே டாக்டர் சுமதி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் தான் வெளியிட்ட விளம்பரத்தைக் காட்டினாள். அது, இந்துவிலோ, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலோ வரவில்லை… ஏதோ ஒரு போணியாகாத ஆங்கிலப் பத்திரிகை… பணியாற்ற ஆட்கள் தேவையாம்… எய்ட்ஸ் கிருமி பிடித்த இளைஞர்கள், யுவதிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமாம்…
அந்த வெள்ளைக்காரர்களுக்கு, ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சர்யம்… இப்படி ஒரு பரோபகாரியா… இப்படி ஒரு தன்னல மறுப்பு தியாகியா… புத்தரும், சித்தரும், மகாத்மாவும் அவதரித்த, இன்டியா இன்டியாதான்.
அந்தப் பெண்களில் வயதானவள், இரு பக்கமும் இருந்த சகாக்களின் காதுகளைக் கடித்தாள். உடனே நாசூக்கு தெரிந்த சுமதி எழுந்து, அந்த அறையின் முன்பக்கமாக வந்தாள். கலைவாணி அங்கே நிற்பதை, அப்போதுதான் பார்த்திருக்க வேண்டும். அவளை வெளியே போகும்படி கையசைக்கப் போனாள்… அதற்குள், அந்த வெள்ளைக்காரர்கள் அங்கே வந்து, அருகே உள்ள சோபா செட்டில் உட்கார்ந்தார்கள்… டாக்டர் சுமதி, கலைவாணியை கண்டு கொள்ளவில்லை… எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகி விடப்படாதே…
வயதான மாது பேசப் போனாள். இவர்கள் கனடா நாட்டுக்காரர்கள். அங்கு ஒரு கோடான கோடீஸ்வரர், எய்ட்ஸ் நோயால் இறந்து போனாராம்… ஆனால், இறக்கும் முன்பு, சொத்துக்களை ஒரு டிரஸ்டாக்கி விட்டார். இந்த டிரஸ்ட், இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் உதவிக்கு ஓட வேண்டும் என்றும் உயில் எழுதி விட்டார். இந்த உயில் ஆணையை நிறைவேற்றவே, இவர்கள் அந்த டிரஸ்டின் சார்பில், இந்தியா வந்திருக்கிறார்கள். அந்த வெள்ளைக்காரம்மா கேட்டாள்.
“டாக்டர் சுமதி… இந்த புராஜெக்டுக்கு எவ்வளவு செலவாகும்…”
“மினிமம்… ஒன் குரோர். ஒரு கோடி டாலர்… இல்ல ரூபா…”
“நாங்க எவ்வளவு கொடுக்கணும்?”
“எனக்கென்னமோ… இந்த புராஜெக்ட் முழுவதையும், நீங்களே நடத்தணுமுன்னு தோணுது… எத்தனையோ பேர் புராஜெக்டுக்கு பைனான்ஸ் செய்யத் தயாராய் இருக்காங்க… ஆனால், இந்த திட்டம்… எய்ட்ஸ்சால் மரணமான ஒரு உத்தமரோட பணத்திலயே நிறைவேற்றப்பட்டால்… அதுவே, அந்த மாமனிதனுக்கு செய்யப்படுகிற மகத்தான அஞ்சலி ஆயிற்றே… இல்லையா மேடம்…?”
“ஓ… கே… குட். நீங்களே… இந்த பிராஜெக்ட்டுக்கு இன்சார்ஜ்… நீங்களே, எங்கள் லோகல் ஏஜெண்ட்… அப்புறம் இதே ஏரியாவில டாக்டர் அசோகன்னு ஒருத்தர்… எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவை செய்கிறாராமே… ஏன் சிரிக்கிறீங்க…”
“டாக்டர் அசோகன் என்னோட சபார்டினேட்… அது என்னோட மருத்துவமனை… போய்ப் பார்ப்பாமோ…”
“இப்போ… நேரமில்ல… டாக்டர் சுமதி… நீங்க நெசமாவே கிரேட்… இந்த உலகம் இன்னும் உயிரோட இருக்குதுன்னா…அதுக்கு ஒங்களை மாதிரி தொண்டர்களே காரணம்… யூ ஆர் லைக் மதர் தெரெஸா… மேடம் கியூரி… டாக்டர் முத்துலட்சுமி”
“நோ… நோ…ஒங்க டிரஸ்ட்டோட நிறுவனர் ஜான் பெட்டிக்கோவிற்கு நீங்க பெருங்கருவி… நான் உங்களுக்கு ஒரு சிறு கருவி… எல்லாவற்றுக்கும் மேல. காட் இஸ் கிரேட்…”
“ஓகே… கனடாவுக்கு திரும்பினதும், முறைப்படி லட்டர் போடுறோம்”
“ஒரு சின்ன விண்ணப்பம்…”
“வாட்…?”
“அப்படியே இந்த புராஜெக்ட் சாங்க்ஷன் ஆகாட்டி கூட பரவாயில்ல… ஆனால், நீங்க அடிக்கடி இங்கே வரணும்… ஒங்க தரிசனம், எனக்கு கிடைக்கணும்… ஏன்னா… ஒங்கள் மூலம்தான் சேவை, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு அர்த்தம் ஆழமாகுது”
“எங்களால வர முடியாட்டாலும்… ஒங்களை கனடாவுக்கே வரவழைப்போம் டாக்டர் சுமதி”
வயதான வெள்ளைக்காரி அம்மா, மனம் நெகிழ்ந்து, டாக்டர் சுமதியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தாள். இளவயதுக்காரி, அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். சிறிது நேரம், ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றார்கள். அதற்குப் பிறகு, டாக்டர் சுமதி அந்த மூவரையும் வழி நடத்தி, வாசலுக்கு கொண்டு வந்தாள். “ஒங்களை ஹோட்டலுல சந்திக்கிறேன்” என்று சொல்லி விட்டு, கதவைத் திறந்து வைத்து வாசலாக்கினாள்…
வணக்கம், போட்டபடியே, அந்தக் கதவைப் பிடிக்கப் போன கலைவாணியை, மோவாயை ஆட்டி நின்ற இடத்திலயே நிற்க வைத்தாள்…
அந்த மூவரையும் வெளியே அனுப்பி விட்டு, கையை விட்டதும் தானாக பூட்டிக் கொண்ட கதவுப் பக்கம் நின்றபடியே, கலைவாணியைப் பார்த்துச் சீறினாள்.
“ஒன்னை யார் இங்கே நிற்கச்சொன்னது?”
“நீங்கதான் வரச் சொன்னீங்க மேடம்…”
“வரச் சொன்னால், இப்படி உள்ளே வந்துதான் நிற்கணுமா…? வெளில நிற்கப்படாதா…!”
“வெளிலதான். நின்னேன் மேடம். நான்… வரவே இல்லன்னு நீங்க நெனச்சுடக் கூடாதுன்னுதான்… உள்ளே வந்து நின்னேன் மேடம்…”
“நல்ல வேளை… சோபா செட்டுல உட்கார்ந்து, கால் மேல கால் போட்டு உட்காராமல் நின்னியே… அது வரைக்கும் நன்றி… நீ கிராஜுவேட்தானே… அடிப்படை மேனர்ஸ் கூடவா தெரியாது…!”
“நான்… யார் மேலயும் என்னைத் திணிக்க மாட்டேன் மேடம். ஒரு வேளை… அந்த வெள்ளைக்காரங்களோட நீங்க பேசும் போது… என் உதவி உங்களுக்கு தேவைப்படுமோன்னுதான் நின்னேன் மேடம்…”
“ஒன்னப் பற்றி… ரொம்பத்தான் உயர்வாய் நினைக்கே…”
“எதுக்கு… கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க மேடம் எனக்கும் தலைக்கு மேல் வேலை இருக்குது… கவர் செய்யுறதுக்கு காக்கிப் பேப்பர் வாங்கணும்… டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரை…அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்…”
டாக்டர் சுமதி, மஞ்சள் சேலையில மதர்ப்பாக நின்ற கலைவாணியை, சிறிது பொறாமையோடு பார்த்தாள். இந்த மாதிரி உடம்பு தனக்கு இருந்திருந்தால், இன்னும் எத்தனையோ உள்நாட்டு புராஜெக்டுகளை வாங்கியிருக்கலாம்.
டாக்டர் சுமதி, கலைவாணியை ஆழமாய் பார்த்தாள். அந்த ஆழத்திற்கு அளவு பார்ப்பது போலவும் பேசினாள்.
“ஒனக்கு… எவ்வளவு இன்டலிஜென்ஸ்… கிராஸ்பிங் பவர் இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கேட்கேன், நாங்க என்ன பேசுனோம், சொல்லு பார்க்கலாம்”
“ஒட்டு கேட்கிற பழக்கம் எனக்கு கிடையாது மேடம்… அதோடு ஒங்க கான்வென்ட் இங்கிலீசும்… அவங்களோட தொண்டைக் குழி பேசுறதுமான இங்கிலீசும் எனக்குப் புரியல மேடம்…”
டாக்டர் சுமதி, இப்போது சிரித்து விட்டாள். அப்பாடாவாக சிரித்தாள். அசோகனை, தனது சபார்டினேட் என்று சொன்னது, அவளுக்குக் கேட்கவில்லை… இவளை அதிகமாக ஒதுக்கவும் கூடாது. அந்தரங்கமாய் பழகவும் விடப்படாது. ஆனாலும் அந்த ‘பி.ஏ.’ எப்போ வாராளோ… எத்தனை தடவைதான் காதலன மாத்துவாள். எத்தனை தடவதான் ராத்திரி பிக்னிக் போவாள்.
“ஒனக்கு டிக்டேஷன் எடுக்கத் தெரியுமா…”
“தெரியும் மேடம்… காலேஜ்ல படிக்கும் போதே கத்துக்கிட்டேன்”
“நான் கோபப்பட்டதை தப்பா நினைக்காதே… அவங்க வெளிநாட்டுக்காரங்க… நான் என்னமோ… ஒன்னை வேலைக்காரியாய் ஓரத்தில் நிற்க வச்சதாய் அவங்களுக்கு ஒரு தப்பு அபிப்ராயம் வரப்படாது பாரு… அதனாலதான் சொன்னேன்”
“நான் இப்போ…ஒங்களுக்கு என்ன செய்யணும் மேடம்”
“வெளியிலே பி.ஏ. சீட்ல போய் உட்காரு… விசிட்டர்ஸ் வந்தால்… விசாரி. என் கிட்டே கேட்டுட்டு அனுப்பு… வேலைக்குன்னு யாராவது வந்தால், நீயே திருப்பி அனுப்பி விடு… டெலிபோன்ல யார் பேசினாலும்… ஒன் மினிட்டுன்னு சொல்லிட்டு… என் கிட்ட இன்டர்காமில் பேசிட்டு, அப்புறம் பதில் சொல்லு…! ஒனக்கு லைட் ஒர்க்காதான் கொடுக்கேன். இரண்டே இரண்டு நாளைக்குத்தான்… அப்புறம் பி.ஏ. வந்து விடுவாள். இன்றைக்கு இரண்டரை மணிக்கு யூனிசெப் போகணும்… ஐந்தரைக்கு ஒரு யூனிவர்சிட்டி புரோக்கிராம்… மறக்காம ஞாபகப்படுத்து…”
“எஸ் மேடம்…”
“உடம்பு எப்படி இருக்குது?”
“இன்னும் அந்த எபெக்ட் தெரியல மேடம்”
“ஓகே… நீ போகலாம். இனி மேல் நான் கூப்பிட்டால் மட்டும், உள்ளே வந்தால் போதும்”
மாம்பழ டிசைன் பட்டுச் சேலையில் பழமைக்குப் பழமையாகவும், கட்சோளி லிப்டிக்ஸ்… கண் மை, மூக்கை முறிக்கும் சென்ட் வகையறாக்களோடு புதுமைக்குப் புதுமையாகவும் நின்ற சுமதியை, கலைவாணி ஓரங்கட்டிப் பார்த்து விட்டு, வெளியே வந்தாள்.
இன்னமும், அதே இளைஞனும், அவனோடு வந்த பெரியவர்களும் அதே கோணத்தில், அதே முகவாட்டத்தில் இருந்தார்கள். அவர்களை ஆதரவாக பார்த்தபடியே, எதிர்ப்பக்கம் உள்ள மேஜைக்குப் பின்னால் போடப்பட்டிருக்கும் பி.ஏ. நாற்காலியில் கலைவாணி உட்கார்ந்தாள். இதற்குள் எதிர் பக்கத்தில் இருந்து, அந்த மனிதர் அங்கிருந்தபடியே பேசினார்.
“இப்போவாவது, நாங்க டாக்டரைப் பார்க்கலாமா… எவ்வளவோ சொல்லியும், இந்த மீசைக்காரன் கேட்கல. எனக்கும் வேணும்… எத்தனையோ பேரை நான் காக்க வைத்திருக்கேன்…”
கலைவாணி வினயமாய்க் கேட்டாள்.
“அய்யா கொஞ்சம் விபரமாய்”
“அப்போ… அவரு… இப்போ நீங்களா… சொல்லித் தொலைக்கேன்… என் பேரு… தேவையில்லை… சேலம் இன்டஸ்டிரியலிஸ்ட்ன்னு சொல்லுங்க… அவங்களுக்கே தெரியும். இவன் என் மகன் ரகோத்தமன்… ஹெச்.ஐ.வி. கேஸ். போதுமா…? இப்போவாவது விடுவீங்களா…?”
“ஒரு நிமிடம்… ஒரே நிமிடம்…?”
கலைவாணி, இன்டர்காமில் விபரம் சொன்னாள்; அதை வைப்பதற்கு முன்பே, டாக்டர் சுமதி வெளியே வந்து கத்தினாள்.
“வாங்கோ… வாங்கோ… நேராய் உள்ளே வர வேண்டியதுதானே…? ஏம்மா… ஒனக்கு அறிவிருக்குதா… தராதரம் தெரிய வேண்டாம்… ஐயாம் சாரி… சாரி… வாங்க சார்…”
அந்த தொழிலதிபர்… “பரவாயில்ல… பரவாயில்ல” என்றார். பிறகு அந்த மூவரும் சுமதியோடு உள்ளே போனார்கள். கலைவாணி முகம் சுழித்தாள்… மீசைக்காரன் ஆறுதல் சொன்னான்.
“வருத்தப்படாதீங்க… வேணுமுன்னே ஆட்களை காக்க வச்சுட்டு… இப்படி பேசுறது, நம்ம அம்மாவோடு டெக்னிக்…”
கலைவாணி, வேண்டா வெறுப்பாய், அங்கும் இங்குமாய்ப் பார்த்தாள். ஹெச்.ஐ.வி. பிடித்த அந்த இளைஞன் மனதில் நிழலாடினான். கொடுத்து வைத்து பிறந்தாலும், அதைக் கெடுத்து விட்டவன்… நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்… என்பதை மறந்து போன செல்வச் சீமான்…
கலைவாணி, தன் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக, மேஜைக்கு அடிவாரத்தில் உள்ள டிராயரை பார்த்தாள். அது அவசரத்தோலோ என்னவோ திறந்திருந்தது. அதில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகம். டாக்டர் சுமதி நிறுவனத்தின் ஆண்டறிக்கை. எதேச்சையாய் எடுத்து தற்செயலாய் புரட்டினாள். முதல் பக்கத்தை பார்த்து விட்டுப் புன்னகைத்தாள். இரண்டாவது பக்கத்தில் புளகாங்கிதம்.அப்புறம் என்ன இது. இந்த டாக்டர் அசோகனும் ஒரு பிராடா…?