பாலைப்புறா/பதிப்புரை



சு.சமுத்திரத்தின் துணிச்சலான படைப்புகளை வெளியிடுவதற்காக தோன்றிய பதிப்பகம்தான் ஏகலைவன்.

தமிழகத்தின் அரசியல், சமூக, கலாச்சார சீரழிவுகளையும், அதற்கு காரணமானவர்களையும், போலிப் பெயர்களால் படைக்காமல், நிசமான பெயர்களில், உலவ விடுவதை இன்றைய தமிழ் இலக்கிய உலகமோ, பதிப்புலகமோ ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு அபத்தமான நிலைமை… நிசமான மனிதர்களை பிடிப்பதற்கு, அவர்களின் நிழல்களைப் பிடித்தால் போதும்; இலக்கியத்தில் அரசியல் கூடாது என்ற தற்காப்பு பேச்சுகளே, இன்றைய நிலைமையில் உலா வருகின்றன.

ஆய்வுரையில் விஜய திருவேங்கடம் குறிப்பிட்டது போல, சாராயத்தில் அல்லது சினிமாவில் மூழ்கி இருக்கும் இன்றைய சராசரி தமிழனின் சீரழிவுக்கு காரணமான பின்புலத்தை சுட்டிக் காட்டாத இலக்கியம் என்ன இலக்கியம்?

எனவே, இத்தகைய படைப்புக்களை ஏகலைவன் பதிப்பகம் வெளியிடுவதற்கு துணிந்துள்ளது. ஏற்கெனவே ‘ஒரு மாமரமும், மரங்கொத்தி பறவைகளும்’, ‘மூட்டம்’, ‘எனது கதைகளின் கதைகள்’, இப்போது ‘பாலைப்புறா’ ஆகிய நான்கு படைப்புக்களை வெளியிட்டு உள்ளது. இவை முழுக்க, முழுக்க துணிச்சலான படைப்புக்கள் என்று சொல்ல முடியாது. விரைவில் ‘மேய்ச்சல் நிலம்’, என்ற நாவல் வரப் போகிறது. சொந்த முறையில் ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் நாடகமாடிகளை மையமாக வைத்து எழுதப்படுகிற நாவல். இது ஆரம்பமே தவிர, முடிவல்ல.

எங்களது முயற்சிக்கு, சு.சமுத்திரத்தின் வாசகப் பெருமக்கள், ஆதரவு கொடுப்பார்கள்; கொடுக்க வேண்டும்.

-ஏகலைவன் பதிப்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/பதிப்புரை&oldid=1641676" இலிருந்து மீள்விக்கப்பட்டது