பாலைப்புறா/வித்தும் விளைச்சலும்



அரசுப் பணியிலிருந்து, அண்மையில் நான் ஓய்வு பெற்ற போது, எனது செய்தித் துறை ஆசானும், பிரபலமான செய்தியாளரும், அகில இந்திய வானொலியில் பெரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவருமான திரு.கே. ராமநாதன் அவர்கள், நான் நன்னடத்தையுடன் கூடிய சிறை வாழ்க்கைக்குப் பிறகு, வெற்றிகரமாய் விடுதலை ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார். இருபதாண்டுகளுக்கு முன்பு, செய்திக்கு இலக்கணமாக அவர் என்னிடம் தெரிவித்த கருத்தை, இப்போது நினைவு படுத்தினேன். “வருவதைப் படி… படித்ததை எறி… எது மனதில் நிற்கிறதோ, அதுதான் செய்தி…” என்றார். நான், நினைவு படுத்திய போது, ‘இது இலக்கியத்துக்கும் பொருந்துண்டா… இதைத்தான் நீ செய்யுறே’ என்றார். உண்மையும் இதுதான். வாழ்க்கையில் கண்ட, கேட்ட, விசாரித்த நிகழ்ச்சிகளில் ஒரு சில என் மனதை வாட்டிக் கொண்டிருக்கும்; உள்ளம் முழுதும் அதுவே சிந்தனையாக இருக்கும்… இதற்கு வடிகாலாகத்தான் எழுதுகிறேன். இதில் வாசிப்பு சுகம் நோக்கமல்ல… என்னுடைய வாசகர்கள் அறிவு ஜீவிகளும் அல்ல. மாறாக, சமூக சிந்தனையாளர்கள், தமிழாசிரியர்கள், முற்போக்குத் தோழர்கள் தொழிலாளர்கள், சாதாரண பொது மக்களில் அசாதாரணமானவர்கள். இவர்களே என் வாசகப் பரப்பு… இதைப் புரிந்து கொள்பவர்களால் மட்டுமே, என் இலக்கிய நேர்த்தியைப் புரிந்து கொள்ள முடியும்…

தகவல் ஒலி பரப்பு அமைச்சகத்தின் கள விளம்பரத் துறையில், நான்காண்டுகளுக்கு முன்பு இணை இயக்குநராகச் சேர்ந்தேன்… அப்போது ஊரக வளர்ச்சித் திட்டங்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு முதலியவை சம்பந்தமாக பல புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது… எய்ட்ஸ் சம்பந்தமாக டாக்டர் ஜெயா ஸ்ரீதரின் “எய்ட்ஸ் எரிமலை”, ஐ.நா. உலக சுகாதார நிறுவனத்தின் வெளியீடுகள் முதலியவற்றை கரைத்துக் குடித்தேன்…

பெரிதும் பயன்படும் தகவல்களைக் கொடுக்கும் எய்ட்ஸ் எரிமலையில், என்னைத் தூக்கி வாரிப் போடும்படியான கருத்தை, அதில் வெளியான ஒரு பேட்டியில் படிக்க நேரிட்டது. எய்ட்ஸ் கிருமிகளால் தாக்குண்ட ஒரு இளைஞன், திருமணம் செய்து கொள்வது அவனது விருப்பம் என்றும், இதில் தலையிட முடியாதென்றும், தேவைப்பட்டால், அவன் மனைவிக்கும் ஆலோசனை வழங்கலாம் என்றும், கூறப்பட்டுள்ளது. நான் கொதித்துப் போனேன். இந்த அணுகு முறை, ஒரு இளம்பெண் சிறுகச் சிறுக சித்ரவதையாவதையாவதற்கு உடன்படுவதற்கு ஒப்பானது என்று கருதுகிறேன்… எய்ட்ஸ் திருமணங்கள் நடப்பது தெரிந்தும், அதைத் தடுக்க முடியாதவர்களை, சமூக நேயர்களாக என்னால் கருத இயலவில்லை… இந்த இலக்கணப் பிழையை, பல்வேறு விழிப்புணர்வு அமைப்புக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். பல்வேறு விதமான சால்சாப்புக்கள்… திருமணம் ஒருவரது சொந்த விவகாரம் என்ற மழுப்பல்கள்… சட்டத்தில் இடமில்லை என்ற சாக்குப் போக்குகள்….

என் கொதிப்பு, இத்தகைய வேஷங்களால் ஆவேசமானது… இதன் விளைவுதான் பாலைப்புறா… பாலைவனத்தில் உள்ள மெலிந்த புறா என்றும், பாலியலால் பாதிக்கப்பட்ட புறா என்றும் எடுத்துக் கொள்ளலாம்… எனது ஆவேசத்திற்கு வடிகாலாக, நானே நடத்திய விழிப்புணர்வு இயக்கங்கள் இருந்ததால், இதனை படைப்பாக்கும் எண்ணம் உடனடியாக எழவில்லை… எழுத்தாளர் கோவி.மணிசேகரன்.அவர்களிடம், இந்த எய்ட்ஸ் திருமண அநியாயத்தை பேச்சு வாக்கில் குறிப்பிட்ட போது, இதை ஒரு விழிப்புணர்வு நாவலாக எழுது என்றார்… என்னால் மட்டுமே முடியும் என்றார்… எனக்கும் சரியாகப் பட்டது… தமிழகத்திலும், புதுவையிலும் கிட்டத்தட்ட அங்குலம், அங்குலமாக சுற்றுப் பயணம் செய்த எனக்கு, நிறையத் தகவல்களும், நேர்முக அனுபவங்களும் கிடைத்தன. இந்த நாவலில் வரும் முக்கால்வாசி அத்தியாயங்கள் நடந்த நிகழ்ச்சிகளே… என்றாலும், இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து எழுத, பல தரப்பினரை சந்தித்து உரையாடினேன்… எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டாலும், அந்த நோயை புறந்தள்ளி… தொலைக் காட்சிகளிலும், கூட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சென்னை வாழ் சேகர் அவரைக் கட்டிக் காத்த, விழிப்புணர்வு அமைப்பான சாப்-அதன் மூலம் எனக்கு பரிச்சயமான ஓரினச் சேர்க்கை இளைஞர்கள், இந்த நாவலின் பாத்திரங்களில் நடமாடுகிறார்கள்.

விழிப்புணர்வு கூட்டங்களில் விலாவாரியான தகவல்களைத் தந்த டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். காந்தராஜ், டாக்டர். ராதாகிருஷ்ணன், டாக்டர். ராஜலட்சுமி, டாக்டர். ஜெயா ஸ்ரீதர் ஆகியோர், இந்த நாவலின் உருவாக்கத்திற்கு தங்களை அறியாமலேயே உதவி இருக்கிறார்கள்… இது சம்பந்தமாக, நான் நடத்திய பட்டி மண்டபங்களில் கலந்து கொண்ட சென்னை தொலைக் காட்சி இயக்குநரும், சிறந்த எழுத்தாளருமான திரு.ஏ.நடராசன், பேராசிரியர் தி.ராசகோபாலன், வழக்கறிஞர் த.ராமலிங்கம், டாக்டர் அப்துல் காதர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.செந்தில் நாதன், சுருக்கமாகப் பேசினாலும், சுருக்கென்று பேசும் வாலண்ட்ரி ஹெல்த் சர்வீஸ் அமைப்பின் செயலாளர் டாக்டர். முரளி, எனது கள விளம்பரத் துறை அதிகாரிகள், நேரு இளைஞர் மையங்கள், அறிவொளி இயக்கங்கள் போன்ற நிபுணர்களிடமிருந்தும் அமைப்புக்களிடமிருந்தும், மருத்துவ கருத்துக்களையும், மக்கள் விவகாரங்களையும் கற்றுக் கொண்டேன். இந்த வகையில், என் மனோ பூமியில் இவர்கள் ஒட்டு மொத்தமான வித்து; இதன் விளைச்சல்தான் பாலைப்புறா.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எழுதி, பல்வேறு பிரதிகளை எடுத்து, பெரியவர் வல்லிக்கண்ணன், அப்போது தமிழக அரசின் சுகாதாரத் துறையிலும், இப்போது உள்துறையிலும் பணியாற்றும், ஆங்கில கலப்பில்லா தமிழ் உரையாடலுக்குப் புகழ் பெற்ற பூரணலிங்கம் அவர்கள், கேட்போரை தங்கள் வசமாக்கும் பாக்டர். காந்தராஜ், டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், கரடு முரடு இல்லாத தனித் தமிழில் உரையாடுகிறவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு.விஜய திருவேங்கடம் ஆகியோரிடம் படிக்கக் கொடுத்தேன்… ‘உங்களுக்கு இந்த நாவல் நல்ல பெயரைக் கொடுக்கும்’ என்றார் பெரியவர் வல்லிக்கண்ணன்; இதை, நான் தமிழில் வெளியிடாமல், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட நினைத்த போது, உங்கள் படைப்பு முதலில் தமிழுக்கு கிடைக்கட்டும் என்றார் பூரணலிங்கம் அவர்கள்… டாக்டர். காந்தராஜும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த நாவல் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்து, மருத்துவச் செய்திகளை சரி பார்த்தார்கள். ஆலோனைகளையும் வழங்கினார்கள். இன்னொரு பிரதியைப் படித்த, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் வாலண்டரி ஹெல்த் சர்வீஸில் உள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு மையத்தின் தகவல் நிபுணர் திரு.சிவன் அவர்கள், பெரிதும் பாராட்டினார். இந்த படைப்பை, தான் சார்ந்த அமைப்பும், தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பும் வாங்குவதற்கு, நான் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அரிய யோசனையை வழங்கினார். இதன் அடிப்படையில், நான் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த இரு அமைப்புக்களும் உறுதுணையாக நின்று, மொத்தம் மூவாயிரம் பிரதிகளை வாங்க முன் வந்துள்ளன. இதற்கு காரணமான தமிழக அரசின் உயர் அதிகாரி திரு. பூர்ணலிங்கம், எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநரான திருமிகு. ராமசுந்தரம் - அந்த அமைப்பின் தகவல் நிபுணரான திரு.பழனிச்சாமி, வி.ஹெச்.எஸ். அமைப்பின் செயலாளரான டாக்டர். முரளி, இதன் எய்ட்ஸ் பிரிவின் இயக்குனர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, தகவல் நிபுணர் திரு.சிவன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகும்… தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் இயக்குநர் திரு.ராமசுந்தரம் அவர்களைப் போல், என் படைப்புக்களில் ஆர்வம் காட்டி, ஆக்கப் பூர்வமான ஒத்துழைப்பு நல்கும் இந்த அமைப்பின் இப்போதைய இயக்குநரும், தமிழக அரசின் சுகாதாரத் துறையில் சிறப்புச் செயலாளரும், வெளிப்படையான நேர்மையாளருமான திரு. அலாவுதீன் அவர்களுக்கும், நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இதை நேரடியாக வெளியிடுவதா அல்லது பத்திரிகையில் தொடர் கதையாக வெளியிடுவதா என்று ஆரம்பத்தில் யோசித்தேன். இறுதியாக, தினமணி ஆசிரியர் திரு.சம்பந்தம் அவர்களிடம், இதைக் கொடுத்த போது, இரு கரம் கொண்டு அதை வாங்கி, அப்போதைய இதழ் ஆசிரியரான ஞாநியிடம் ஒப்படைத்தார்… இதை வெளியிடப் போவதாக கொள்கை அளவில் முடிவெடுத்திருப்பதாக ஞாநி தெரிவித்தார். ஆனாலும், தினமணிக் கதிரின் பக்க நெருக்கடியால், இது கிடப்பில் போடப்பட்டது. மக்கள் இலக்கியத்தில் மகத்தான தாக்கம் ஏற்படுத்தி வரும் என் தோழமை எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி அவர்களுடன், தினமணி அலுவலகம் சென்று, ஆசிரியர் சம்பந்தம் அவர்களிடம், ‘நாளாகும் என்றால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்,’ என்றேன். இது, குளத்திடம் கோபித்துக் கொண்டு போன கதை மாதிரி என்பது எனக்குத் தெரியும்… ‘சரி எடுத்துட்டுப் போங்கள்’ என்று சம்பந்தம் அவர்கள், ஒரு நிமிடத்தில் சொல்லி விட்டு, இதர வேலைகளை பார்த்திருக்க முடியும்… இப்படித்தான் சராசரி ஆசிரியர்கள் நடந்து கொள்வார்கள். ஆனாலும், சிறியன சிந்தியாத பெரியவரான சம்பந்தம், நாவலைத் தர மறுத்ததுடன், விரைவில் வெளியிடப் போவதாகவும் வாக்களித்தார்…

தினமணிக் கதிரில், பிற்பகுதி அத்தியாயங்கள் வெளியிடப்பட்ட முறை குறித்து, என் ஆதங்கத்தை, இதழ் ஆசிரியர் இளைய பெருமாளிடமும், உதவி ஆசிரியர் ராஜமார்த்தாண்டனிடமும் தெரிவித்ததுண்டு… அப்போதெல்லாம், இவர்கள் பொறுப்பாகவும், இனிமையாகவும், பதிலளித்தார்கள். இதனால் சொல்லப் போன கருத்தை இடையில் விட்டுவிட்டு, அவர்களுடன் நான் உடன்பட்டேன்…

இந்த படைப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ள பிரபல பத்திரிகையாளரான ஞாநி என்னுடைய நீண்ட காலத் தோழர்… இலக்கிய தளத்தில், எதிரும் புதிருமாக நின்றிருக்கிறோம்… நேர் கோடுகள்… எப்படியோ, நேர்மையான கோடுகள், ஒரு கட்டத்தில் சந்தித்தாக வேண்டும் என்பதற்கு நாங்கள் இருவரும் எடுத்துக் காட்டு… ஆனாலும், அவரது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடானவை அல்ல… எனது இடதுசாரி படைப்புக்களை மனதில் வைத்து, அந்த வகை படைப்புக்கள் பற்றிய தனது கருத்தை அவர் வெளியிட்டிருப்பதாகவே கருதுகிறேன்… ஆனால், வாடாமல்லியும், இந்தப் பாலைப்புறாவும் வித்தியாசமானவை… இதில் வரும், தவசிமுத்து, சங்கரன், எஸ்தர் ஆகிய பாத்திரங்கள், யதார்த்த தளத்தில் எழுத்தெழுத்தாய் செதுக்கப்பட்டவை. இதே போல், கிராமத்து முற்போக்கு பெண்கள் பேசிக் கொள்ளும் பாணி, இன்றைய கிராமிய யதார்த்தம்… அறிவொளி இயக்கம், நேரு இளைஞர் மையம், கள விளம்பரத் துறை போன்ற அரசுஅமைப்புக்களின் தாக்கங்களை கணக்கில் எடுக்கும், ஒரே ஒரு எழுத்தாளர் நான்தான் என்று நினைக்கிறேன்… என்றாலும், ஞாநியின் கருத்துக்கள் ஆத்மார்த்தமானவை. நட்புக்காகவோ, தாட்சண்யத்திற்காகவோ, எழுதாதவர், எழுதத் தெரியாதவர். பல்வேறு வேலைப் பளுவுக்கு இடையே, இந்த முன்னுரையை எழுதிக் கொடுத்த அவருக்கு நன்றி, அவரது கருத்துக்கள்.அவர் குறிப்பிட்டிருக்கும், அனைத்து எழுத்தாளர்களையும் சிந்திக்க வைப்பவை…

இந்த நூலுக்கு அருமையான ஆய்வுரை வழங்கியிருக்கும் திரு விஜய திரு.விஜயதிருவேங்கடம் அவர்கள், என்னுடைய நீண்ட கால அலுவலகத் தோழர். அவருக்கு என் ஆழிய நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறேன். தினந்தந்தியின் தலைமைச் செய்தியாளர் சுகுமாரன் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து விட்டு, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடுத்த அத்தியாயம் என்ன என்று என்னை கேட்பார். எத்தனையோ தலைவர்களை இனிமையோடு குறுக்கு விசாரணை செய்து, அற்புதமான செய்திகளை தினத்தந்திக்கு அள்ளித் தரும் அவர், அத்தனை வேலைப் பளுவிலும் ஞாயிற்றுக்கிழமை நான் முதலில் படிப்பது பாலைப்புறாவைத்தான் என்று நெகிழ்ந்து சொல்வார். இப்படி தமிழகமெங்கும் பல வாசகப் பெருமக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பாலைப்புறா நூலை படித்து விட்டு, இதனை பக்கத்திற்கு பக்கம் வண்ண ஒவியங்களை இணைத்து வெளியிட வேண்டும் என்று என்னை ஊக்கப் படுத்தியவரும், தனித்துவம் மிக்க சிந்தனையாளருமான மீடியா ஆர்ட்ஸ் உரிமையாளர் அருண் வீரப்பன்.அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

பாலைப் புறாவை முழுமையாகப் படிக்கும், வாசக பெருமக்கள், இது குறித்த தங்கள் கருத்தை எனக்கு, எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்… இந்த எனது எதிர்பார்ப்பு இனிதாய் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

-சு.சமுத்திரம்