பிணங்கள்/பிணம்

பிணம்

காதலாம் காதல்! மனிதனிடம் மகிழ்ச்சி இருக்கக் கூடாது என்ற மனப்பான்மையில், இந்தக் காதல் என்ற கருநாகத்தைக் கடவுள் சிருஷ்டித்தான் போலும்! காதலுக்கு எப்போதுமே சுபமான முடிவு இருப்பதில்லை. காதலின் ஆரம்பம் அல்லல்! கடைசி கட்டம் சாதல்!

இது தெரிந்தும், ஆறு அறிவு கொண்ட மனிதக் கூட்டம், இந்தக் காதலில் ஏன் சீரழ்கிறது? இந்தக் காதல் சிலந்திக் கூட்டின் முன், சக்தி வாய்ந்த மனிதர்கள் ஈக்கள்தானா? அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், காதல் பலியாக வேண்டிய அவசியமே இல்லை.

கணேஷ் சிறைச்சாலைக்கு ஏன் வந்தான்? அவனுக்கு ஏன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது? அவன் நடமாடும் மனிதனாக இல்லாமல், பிணமாக இருக்கிறானே ஏன்? அவன் ஏன் பிரமை பிடித்தவனைப் போல ‘மௌனி’யாக இருக்கிறான்.

எல்லாம் காதலின் கைங்கரியம் என்றாலே கஷ்டம் என்றுதான் அர்த்தம்; காதல் தன் வேலையை ஆரம்பித்தது. அதைத்தான் சிறைச்சாலையில் அனுபவித்துக் கொண்டிருந்தான் கணேஷ்.

காதலன் ஒருவன்! காதலி இருவர்! கணேஷ் ஒருத்தியைக் காதலித்தான்; ஆனால், அங்கே வழக்கமான எதிர்ப்பு! இன்னொருத்தி மாண்டாள்; அபாண்டப் பழி கணேஷ் மீது விழுந்தது. அதன் முடிவு? சிறைச்சாலை! சித்தப் பிரமை! கைதிகளிடம் கதையைச் சொல்கிறான் கணேஷ்.

சிறு வயது முதல் தாய், தந்தை இழந்த அனாதை நான். என் மாமா வீட்டிலே வளர்ந்து வந்தேன்; தன் மகன் சுரேஷ் போலவே, என்னையும் போற்றி வந்தார். ஆனால், சுரேஷ் என்னைக் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. என்னை வேலைக்காரனாக நடத்த வேண்டும் என்று சுரேஷ் நினைத்தான். ஆனால், சுரேஷ் தங்கை ஆஷா? அன்பே உருவெடுத்த அழகு ராணி அவள். நான் பட்டினி இருக்கவோ, கஷ்டமான வேலை செய்வதையோ காண சகிக்கவே மாட்டாள். தன் அப்பாவிடம் சொல்லி, சுரேஷை மிரட்டுவாள். ஆனால்—என் மாமாவின் மரணத்திற்குப் பின்?

கடிவாளம் இல்லாக் குதிரையைப் போல் ஓட ஆரம்பித்தான், என் மீதும், ஆஷா மீதும் சுரேஷ். மஞ்சத்தில் படுத்த என்னை, மண் தரையில் தள்ளினான். பருப்பும், பாலும் சாப்பிட்ட எனக்கு, பழையது போட்டான். என்னோடு சேரக் கூடாது என்று ஆஷாவுக்குப் புது உத்தரவு போட்டான்.

குழந்தையாக இருக்கும் போதே, என்னைப் பிரிய மறுத்த ஆஷா, பருவத்தில் மறப்பாளா? எங்கள் சந்திப்பை வானத்து சந்திரன்தான் அறிவான். பயமில்லாத நேரடியான சந்திப்பிலே இருக்கிற சந்தோஷத்தை விட, கள்ளச் சந்திப்பிலே ஓர் தனி இன்பம் இருக்கிறது. அதை நாங்கள் தினமும் அனுபவித்தோம். ஆஷா வருகிற பொழுதெல்லாம், தன் தலையிருந்து ஒரு மல்லிகை மலர் எடுத்து எனக்கு பரிசளிப்பாள். அந்த மல்லிகை மலரின் நறுமணத்தை நான் இப்போது நினைத்தாலும், நாற்றமெடுத்த இந்த சிறைச்சாலை எனக்குச் சிங்காரச் சோலையாக தோன்றுகிறது.

அன்று பூவுதிர்காலம் என்றுதான் நினைக்கிறேன். சந்திரன் தன் கதிர்களை ஒன்று விடாமல், எங்கள் மீது தெளித்துக் கொண்டிருந்தான்; குளக்கரை பூ மெத்தையிலே உட்கார்ந்தோம்; சிறிது நேரத்திற்கெல்லாம் எங்கள் உடம்பைப் பூக்கள் மொய்த்துக் கொண்டன. உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்த நாங்கள், அப்படியே உறங்கி விட்டோம்.

யாரோ என்னைத் தட்டி எழுப்பினார்கள்; திடுக்கிட்டு எழுந்தேன்; விடிந்து விட்டது. என் முன்னே சுரேஷ் நின்றான்; என் கன்னத்தில் ‘பளீர், பளீர்’ என்று நாலைந்து அறை வைத்தான்; “அடிக்காதீர்கள்” என்று அழுது கொண்டே சுரேஷ் தாள் பணிந்து நின்றாள் ஆஷா.

ஆனால், சுரேஷ், ஆஷாவை இழுத்துச் சென்று வீட்டிலே பூட்டினான். என்னை வீட்டை விட்டுத் துரத்தினான்; ஆனால், என் காதலை யாராலும் துரத்த முடியவில்லை.

என் கால்கள் என்ன சுகத்தைக் கண்டனவோ, எனக்குத் தெரியாது; ஆஷா வீட்டை நோக்கி, என் கால்கள் நடந்தன; உறக்கமில்லாத என் உள்ளம், ஆஷா வீட்டைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது.

“மாட்டாயா? வர மாட்டாயா? வந்து உன் வண்ண முகத்தைக் காட்ட மாட்டாயா? ஆஷா!” இப்படி என் வாய் பாட ஆரம்பித்தது. மாடி ஜன்னல் கதவு திறந்தது. பைங்கிளியைப் போல், இறக்கை ஒடிந்து நின்று கொண்டிருந்தாள் ஆஷா! நான் மேலே ஏறினேன்.

“ஆஷா! நீ இல்லாமல், இந்த உலகமே இல்லை. என்னோடு வந்து விடு. எங்காவது போய் இன்பமாக வாழலாம்! எதற்கும் யோசிக்காதே| நீ என் காதலி! நான் உன் காதலன்! நீ மறந்தால்… அல்லது என்னைத் துறந்தால்… நான் இறக்க வேண்டியதுதான். ஆஷா! புறப்படு சீக்கிரம்” இப்படி நான் சொன்னதும், என் ஆஷா தயாராகி விட்டாள்; இருவரும் புறப்பட ஆயத்தமானோம். ஆனால், சுரேஷ் கையிலே துப்பாக்கியோடு வந்து எனக்கு முன்னால் நின்றான்; என்னைச் சுட்டு விடுவேன் என்று சொன்னான். என் ஆஷா எனக்கு முன் வந்தாள்.

“அவர் என் காதலன்! அவரைச் சுட உனக்கு உரிமையில்லை! நான் உன் தங்கை; என்னைச் சுடு!” இப்படி ஆத்திரமாகப் பேசினாள் ஆஷா! சுரேஷ் கோபம் தணிந்தது. துப்பாக்கியைக் கீழே போட்டான்.

“ஆஷா! நீங்கள் காதலராக இருங்கள்! ஆனால், கணேஷ் பணம் சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும். அதன் பின்தான் கல்யாணம்.”

சுரேஷ் கூறியவை எனக்கு ஆறுதல் அளித்தது. காதலிக்காக காட்டிலே சென்று புலி நகம் கொண்டு வந்ததாக ஏட்டிலே நான் படித்திருந்தேன். பணம் சம்பாதித்து விட்டு வந்து, ஆஷாவை மணம் புரிவதுதான் சரி என்று முடிவு செய்து விட்டு வெளியேறினேன்.

வேலைக்காக நான் அலையாத இடமில்லை. பிச்சை எடுப்போமா என்று எண்ணம் ஏற்படும் அளவுக்கு பசியும், பட்டினியும் என்னை வாட்டியது. தள்ளாடி நான் செல்லும் போது, ஒரு தளிர் மேனியாள் என் மீது காரை ஏற்றி விட்டாள்.

விழித்துப் பார்த்தேன். நான் அவள் வீட்டில் கட்டிலில் கிடந்தேன்; என் பக்கத்திலே டாக்டரும், அவளும் இருந்தார்கள். ‘லதா’ என்று சொல்லிக் கொண்டே, ஒரு வாலிபன் அங்கு வந்தான். என்னைப் பார்த்து விட்டு, “யார் இவன்? ஆஸ்பத்திரியில் சேர்க்கிறதுக்கென்ன?” என்று கேள்விகளைப் போட்டான். ‘ஷட் அப்’ என்ற ஒரு பேச்சில், அவனை வெளியே போகும்படி செய்தாள் லதா.

நான் குணமடைந்த பின், என்னை அங்கேயே வேலை பார்க்கச் சொன்னாள். நான் ஆனந்தத்தில் மூழ்கிப் போனேன். ஆனால், அதே இரவில் லதா என் படுக்கையறைக்கு வந்தாள். என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்; நான் ஆஷா கதையைச் சொன்னேன்; உடனே லதா போய் விட்டாள். ஆனால்…

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லதாவால் வெளியேற்றப்பட்ட அவன் வந்தான்; என்னைத் திட்டிக் கொண்டே உதைக்க ஆரம்பித்தான்; நானும் சண்டை போட்டேன்; முடிவில் ரிவால்வர் எடுத்து, என்னைச் சுட குறி வைத்தான்; ‘டபார்’ என்ற சப்தம் கேட்டது; லதா என் முன் வீழ்ந்து கிடந்தாள்.

என்னைக் கைது செய்து, கோர்ட்டிலே நிறுத்தினார்கள்; சட்டம் என்னைக் ‘கொலைகாரன்’ என்றது; தீர்ப்பு எனக்கு ஆயுள் தண்டனை என்று கூறப்பட்டது. சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தேன்.

இதுதான் கணேஷ் கூறிய கதை,

ஆயுள் கைதி என்றால், முன்பெல்லாம் அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், இப்போது? குறைந்தது 14 வருஷமாவது சிறையிலே இருக்க நேரிடும். அப்படி இருக்க கணேஷ், ஆஷாவை அடைய முடியுமா? அல்லது அவள் அழகு முகத்தை கணேஷ் பார்க்கத்தான் முடியுமா?

“நிச்சயமாக முடியும்” என்று கைதிகள் சொன்னார்கள்.ஜெயிலருக்குக் கல்யாணம்! வார்டர்கள் பார்வை எல்லாம் ஜெயிலர் வீட்டில் இருக்கும். தப்பிப் போக வேண்டிய ஏற்பாடுகளை பகலிலேயே செய்து விடலாம் என்று கைதிகள் மகாநாட்டிலே தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. தப்பிப் போனாலும், என்றாவது ஒரு நாள் பிடிபட்டுத்தானே ஆக வேண்டும்? இதனால்தானோ என்னவோ, கணேஷ் தப்பிப் போக விரும்பவில்லை. ஆனால் கைதிகளின் தீர்மானத்தைக் கணேஷின் காதல் மட்டும் ஒப்புக் கொண்டது.

மறுநாள் காலையில், ஜெயிலர் வீட்டில் மேள தாளம் முழங்கியது; கைதிகள் அந்தக் கல்யாணக் காட்சியைக் காண முடியவில்லையே தவிர, காது குளிரக் கேட்டனர். எனக்கும், ஆஷாவுக்கும் கல்யாணம் நடந்தால்…? கணேஷ் கற்பனை செய்ய ஆரம்பித்தான்.

ஆனால், உண்மையிலேயே ஆஷாவுக்கும், ஜெயிலருக்கும் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. இல்லாததையும், பொல்லாததையும் காட்டுகிற கண்ணாடிதானே கற்பனை! ஜெயிலர், ஆஷாவுக்கு மாலை போடுகிற காட்சி கற்பனை லோகத்திலே இருக்கிற கணேஷுக்குத் தெரியவா போகிறது?

அன்றிரவு. பள்ளியறையிலே பதுங்கி இருக்கும் மான் போல, ஆஷா நின்று கொண்டிருந்தாள்; ஜெயிலர் உள்ளே வந்தார்; ‘ஆஷா’ என்று அன்பாக அழைத்தார். ஆனால்…

ஜெயில் ‘சைரன்’ கதற ஆரம்பித்தது. அபாயத்தின் அலறல்தான் சைரன். சைரன் சத்தம் கேட்ட சாதாரண வார்டரிலிருந்து சூப்ரெண்ட் வரை உள்ளவர்கள் ஜெயிலுக்கு வந்து விட வேண்டும் என்பது சட்டம். ஜெயிலருக்கு மட்டும் விதிவிலக்கா? அவரும் ஜெயிலுக்கு ஓடி வந்தார்.

அப்போது கைதிகளுக்கும், வார்டர்களுக்கும் கைகலப்பு நடந்து கொண்டிருந்தது. அதிலே ஒரு கைதி வார்டர் கையிலே இருந்த துப்பாக்கியைப் பறித்து விட்டான். மணக்கோலத்தில் ஓடி வந்த ஜெயிலருக்கும் குறி வைத்தான். ஆனால், மனமிரங்கிய கணேஷ் கைதி சுடாதபடி தடுத்து விட்டான்.

கொஞ்ச நேரத்தில் புயல் அடங்கியது; கைதிகள் பிடிபட்டனர்; எல்லா கைதிகளும் கணேஷை உதைக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். ஆனால், ஜெயிலர் உத்தமக் கைதி என்று அவனைப் பாராட்டினார்; அவன் கதையை, அவரும் கேட்டார்; நிரபராதிக்கு ஆயுள் தண்டனையா என்று அவரும் வருத்தப்பட்டார். நான் இருக்கிற வரைக்கும் இந்த ஜெயிலில் உனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று ஜெயிலர் சொன்னார்.

ஒரு நாள், ஜெயிலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் கணேஷ் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது, தன் வீட்டு மாடியில் இருந்து, ஜெயிலர் கணேஷைப் பார்த்து விட்டு, தன் மனைவியைக் கூப்பிட்டு, “அதோ அந்தக் கைதிதான் என் உயிரைக் காப்பாற்றியவன்” என்று சொன்னார்.

“ஆ! கைதியாக இருப்பது என் காதலன் கணேஷா? ஐயோ! இந்த நிலைக்கு வரத்தானா ஊரை விட்டுச் சென்றார்?” இப்படி ஆஷா அலறவில்லை; மனதிற்குள் நினைத்தாள். மறுகணம், சுணேஷை அழைத்து வர ஜெயிலர் ஆள் அனுப்பினார்; ஆஷா வேண்டாமென்று தடுத்தாள்.

“ஏன்? என் உயிரைக் காத்த உத்தமனை நீ பார்க்க வேண்டாமா?”

“அவனே கொலை செய்த கைதி! அவனை நான் ஏன் பார்க்க வேண்டும்?”

அதற்குள் கணேஷ் அங்கு வந்து விட்டான்; ஆஷா ‘சட்’ என திரும்பிக் கொண்டாள்.

“கணேஷ்! நீ கொலைகாரன் என்று என் மனைவி சொல்கிறாள்! இதோ பார்! உன் காதலியின் பெயர் ஆஷாதானே?”

“ஆம்! ஆஷாதான்!”

“என் மனைவியின் பெயரும் ஆஷாதான்! உன் காதலியின் ஊர்தான் இந்த ஆஷாவுக்கும்.”

அப்போது, ஆஷாவின் கண்களிலே கண்ணீர் பெருகியது; இதை ஜெயிலர் கவனித்திருப்பான்! ஆனால், அப்போது ஜெயிலரைச் குப்ரெண்ட் அழைப்பதாகச் செய்தி வந்து விட்டது. “ஆஷா! நீ பேசிக் கொண்டிரு! சீக்கிரம் வருகிறேன்” என்று சொல்லி விட்டு, ஜெயிலர் சென்றான். ஆஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“அம்மா! என் ஆஷாவை உங்களுக்குத் தெரியுமா?”

“நன்றாகத் தெரியும்! அவள் எனக்கு ரொம்ப வேண்டியவள்!”

“அவள் இப்போது எங்கு இருக்கிறாள்? அவளை நான் பார்க்க முடியுமா?”

“முடியவே முடியாது! அவள் உனக்குக் கிடைக்க மாட்டாள்.”

இப்படிச் சொன்னதும், ஆஷா எழுந்து போய் விட்டாள். “ஆஷா, ஆஷா!” என்று கதறிக் கொண்டே, பைத்தியம் பிடித்தவனைப் போல் சுணேஷ் ஓடினான்…

கணேஷின் பரிதாப நிலையைக் கண்ட ஜெயிலர், தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டான். ஆஷாவை எப்படியாவது ஒரு நாள் கூட்டி வந்து, கணேஷுக்குக் காட்ட வேண்டுமென்று தன் மனைவியை ஜெயிலர் கேட்டுக் கொண்டான். முதலில் மறுத்த ஆஷா முடிவில் ஒப்புக் கொண்டாள்.

அன்று காலை 10 மணி இருக்கும். ஜெயில் தோட்டத்தில் கணேஷ் கட்டையை வெட்டிக் கொண்டிருந்தான்; அங்குதான் ஆஷாவைச் சந்திக்க ஜெயிலர் ஏற்பாடு செய்திருந்தார். ஆஷாவும் வந்தாள், ‘ஆஷா’ என்று சொல்லிக் கொண்டே கணேஷ் ஓடி வந்தான்; ஆஷாவும் ஓடி வந்தாள்.

“நில்! நீ இன்னொருத்தன் மனைவி: கணேஷைத் தீண்டாதே!” ஆஷாவின் மனச்சாட்சி இப்படிக் கட்டளையிட்டது. அப்படியே நின்று விட்டாள்; அதற்குள் அங்கே ஜெயிலர் வந்து கொண்டிருந்தார்; ஆஷாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடீரென்று தோட்டத்துப் பக்கம் திரும்பி, வீட்டிற்குள் சென்று விட்டாள் ஆஷா. “கணேஷ் காதலியை நான் பார்க்கக் கூடாதா?” என்று ஜெயிலர் கேட்க, “அடுத்தவன் காதலியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?” என்று தந்திரமாகச் சொல்லி வைத்தாள் ஆஷா.

ஆனால், ஒரு நாள் ஜெயிலர் வீட்டில் இல்லை. ஆஷாவைப் பற்றி இன்னும் விசாரிக்க வேண்டும் என்ற ஆவலில் கணேஷ் வந்தான்; எதிர்பாராத விதமாக ஆஷா எதிர்ப்பட்டு விட்டாள்.

“நீயா? என் ஆஷா ஜெயிலர் மனைவியா? அடி துரோகி! காதலை மறந்தாயா? நீயும், நானும் புருஷன், மனைவி என்று சொன்னாயே! அதெல்லாம் வேஷந்தானா?”

“கணேஷ்! நான் சொல்வதைக் கேள். நான் உனக்காகவே வாழ்ந்தேன்; இப்போது நீ இல்லாமல், பிணமாக வாழ்கிறேன்! சமூகச் சூழ்ச்சி, எங்களை சதி பதியாக்கியது. நான் நிரபராதி” இப்படி ஆஷா சொன்னாள்; கணேஷ் விடவில்லை. உண்மையிலேயே பைத்தியக்காரனானான். ஆஷா மாடிப் படிக்கட்டுகளிலே ஏறிக் கொண்டிருந்தாள்.

“அடி, ஆஷா! உண்மையிலே நான் கொலைகாரனல்ல! ஆனால், இப்போது கொலைகாரனாகப் போகிறேன். என் காதலி ஆஷாவோடு கலந்து வாழப் போகிறேன்!” இப்படி கணேஷ் கூறிக் கொண்டிருக்கும் போது, ‘படபட’ என்று சப்தம் கேட்டது. மாடிப் படிகளிலே உருண்டு கொண்டிருந்தான் கணேஷ். ‘ஐயோ! கணேஷ்’ என்று ஆஷா அலறினாள். ஆனால்…

கைதியாக இருந்த கணேஷ் விடுதலை அடைந்தான். காதல், சாதல் பரிசளித்தது. உயிர்த் தோழன் கணேஷுக்கு ஜெயிலர் சமாதி கட்டினான். ஆஷா என்ற நடைப் பிணமும், அந்தச் சமாதிப் பிணத்தண்டைதான் சதா அலைந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பிணங்கள்/பிணம்&oldid=1742963" இலிருந்து மீள்விக்கப்பட்டது