பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 11
11-ஆம் அதிகாரம்
ஒன்பது விக்கிரங்களின் கதை
நற்குணப் பெண்டீரே பெருஞ் செல்வம்
ஒரு நாள் என் தாயார் என்னிடத்தில் வந்து "ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து உன்னிடத்திலே பேச வந்திருக்கிறேன். அந்த விஷயம் எவ்வளவு முக்கியமானதென்று நீ தெரிந்துகொள்ளும் பொருட்டு, உனக்கு ஒரு சிறிய கதை சொல்லுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார்கள்:
ஒரு தேசத்தை ஆண்டுவந்த அரசன் இறந்துபோன பிற்பாடு, அவனுடைய ஏக குமாரனுக்குப் பட்டாபிஷேகமாகி, அரசாக்ஷி செய்துவந்தான். அவனுடைய திரவியங்களை எல்லாம் துர்விஷயங்களில் செலவழித்து விட்டு அவன் மனோவியாகுலத்தோடு கூடப் படுத்துத் தூங்கும்போது, ஒரு விருத்தாப்பியன் அவன் முன்பாகத் தோன்றி, "உன் தகப்பனாருடைய பொக்கிஷ சாலைக்குக் கீழே வெட்டிப் பார். உனக்குத் திரவியம் அகப்படும்" என்று சொன்னதாக ஒரு சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு அந்தப் பிரகாரம் அவன் வெட்டிப் பார்க்க, பளிங்கினால் கட்டப்பட்ட இரண்டு நில அறைகளைக் கண்டான். அந்த அறைகளில் ஒன்றில், தங்க நாணயங்கள் நிறைந்திருந்தன. மற்றொன்றில் ஒன்பது தங்கப் பீடங்களும், அவைகளுள் எட்டுப் பீடங்களில் எட்டு வயிர விக்கிரங்களும் இருந்தன. அந்த ஒவ்வொரு விக்கிரகமும் ஒரே வைரத்தினாலே செய்யப்பட்டதாயிருந்தது. ஒன்பதாவது பீடத்தில், ஒன்றுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அதில் அடியிற் கண்டபடி எழுதப்பட்டிருந்தது: "மகனே! அந்த எட்டு வைர விக்கிரங்களையும் வெகு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன்; உலகத்தில் ஒன்பதாவது விக்கிரகம் ஒன்று இருக்கின்றது; அது எட்டு விக்கிரகங்களைப் பார்க்கிலும் ஆயிரம் பங்கு சிரேஷ்டமானது; அது உனக்கு வேண்டுமானால், கேரோ பட்டணத்துக்குப் போய் அவ்விடத்திலிருக்கிற என்னுடைய ஊழியக்காரனைக் கண்டால், அவன் அந்த ஒன்பதாவது விக்கிரகம் கிடைப்பதற்குத் தகுந்த மார்க்கத்தைச் சொல்லுவான்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் அந்த ராஜகுமாரன் கேரோ பட்டணத்துக்குச் சென்று, ஊழியக்காரனைக் கண்டு, அவன் மூலமாக ஒரு வேதாளத்தினுடைய தயவைச் சம்பாதித்தான். அந்த வேதாளத்தைப் பார்த்து ஒன்பதாவது விக்கிரகம் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தான். அந்த வேதாளம் அவனைப் பார்த்து, "பதினைந்து வயதுள்ளதாகவும், அதிரூப லாவண்ணியமும் நிர்த்தோஷமும் உள்ளவளாயும் ஒரு பெண்ணை எனக்கு நீ சம்பாதித்துக் கொடுத்தால், உனக்கு ஒன்பதாவது விக்கிரகம் கிடைக்கும்; நீ பெண்களுடைய குணத்தை அறியும் பொருட்டு, ஒரு கண்ணாடி கொடுக்கிறேன். ஒரு பெண்ணைப் பார்த்த உடனே அந்த கண்ணாடியைப் பார். அவள் களங்கம் உள்ளவளாயிருந்தால், அந்தக் கண்ணாடியிலும் களங்கந் தோன்றும். அவள் நிஷ்களங்கமா யிருந்தால் கண்ணாடியும் நிஷ்களங்கமாயிருக்கும்" என்று சொல்லி ஒரு கண்ணாடியையும் அவன் கையில் கொடுத்தது. அவன் பல பல ஊர்களுக்குப் போய்ப் பல பெண்களைப் பார்த்து வேதாளம் சொன்ன குணங்குறிகளின்படி ஒரு மந்திரி மகளைச் சந்தித்தான். அந்த பெண்ணைப் பார்த்தவுடனே அவனுக்கே இச்சை உண்டானபோதிலும், அந்த இச்சையை நிக்கிரகஞ் செய்து, அந்த பெண்ணை வேதாளத்தின் முன்பாகக் கொண்டுபோய் விட்டான். வேதாளத்துக்கு அதிக சந்தோஷமுண்டாகி, அந்த ராஜகுமாரனைப் பார்த்து "நீ உன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார். அங்கே ஒன்பதாவது விக்கிரகத்தைக் காண்பாய்" என்றது. அவன் "அந்தப் பெண்ணை இழந்துவிட்டோமே" என்கிற துக்கத்துடன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார்த்தான். ஒன்பதாவது பீடத்தில் ஜகஜோதியாக ஒரு விக்கிரகம் இருந்தது. அதை நெருங்கிப் பார்க்க, இவன் வேதாளத்துக்குச் சம்பாதித்துக் கொடுத்த பெண்ணாயிருந்தது. உடனே அந்த வேதாளமும் ஆகாச மார்க்கமாய் வந்து "அந்தப் பெண் தான் ஒன்பதாவது விக்கிரகம். அவளை நீ விவாகஞ் செய்து கொண்டு சுகமாக வாழ்" என்று சொல்லி மறைந்து போய்விட்டது: அவன் பரம சந்தோஷம் அடைந்து, அந்த ஸ்திரீயை விவாகஞ் செய்துகொண்டு க்ஷேமமாயிருந்தான்.
"அந்தக் கதையில் சொல்லிய பிரகாரம் ஒருவனுக்கு உத்தம குணமுள்ள பாரி வாய்ப்பாளானால், அதற்குச் சமானமான செல்வம் வேறொன்றுமில்லை. ஞானாம்பாளை அந்த விக்கிரகமென்றே சொல்லலாம். அவளை உனக்கு விவாகம் செய்யும்படி சம்பந்தி முதலியாரைக் கேட்க யோசித்திருக்கிறோம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?" என்று என் தாயார் கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிக் கண் வழியாய்ப் புறப்பட்டு முகத்திற் பரவிற்று. நான் உடனே என் தாயாரைப் பார்த்து "ஞானாம்பாளைக் கொள்ள எனக்கு ஆக்ஷேபமில்லை. நீங்கள் அந்தக் கதையை ஒன்பது விக்கிரகங்களோடே முடித்துவிட்டது ஒரு குறைவாயிருக்கிறது. அந்த ஒன்பது விக்கிரகங்களுக்கும் ஆயிரம் பங்கு மேலாகப் பத்தாவது விக்கிரகம் ஒன்று இருக்கிறது. அதையும் கூடச் சேர்த்துவிட்டால், அந்தக் கதை பூரணமாகும்" என்றேன். நான் யாரைக் குறிப்பிட்டுப் பேசினேனென்று என் தாயார் அறிந்துகொண்டு, அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க இஷ்டமில்லாமல் போய்விட்டார்கள். நான் சொன்ன பத்தாவது விக்கிரகம் யாரென்றால் என் தாயார்தான்.