பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 24


24-ஆம் அதிகாரம்
சோர பயம், தளவருக்கும் உளவருக்கும்
நடந்த சண்டை—புண்ணிய கோடி செட்டி
சரித்திரம்

அத்தியாயம் - 24 மறு நாள் விடியுமுன் எழுந்து, மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம். பகல் முழுதும் யாத்திரை செய்கிறதும் இரவில் எந்த ஊர் நேருகிறதோ அந்த ஊரில் தங்குகிறதும் இவ்வகையாக நாங்கள் பயணஞ் செய்துகொண்டு போகும்போது ஒரு நாள் அஸ்தமிக்கிற வரையில், நாங்கள் தங்கும்படியாகச் சத்திரமாவது ஊராவது தென்படவில்லை. அன்றையத் தினம் அமாவாசை இருட்டானதால் எங்கே தங்கலாமென்று யோசித்துக்கொண்டு போகையில் வழிக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு சாவடி காணப்பட்டது. அந்தச் சாவடியில் தங்க லாமா வென்று அவ்விடத்தில் நின்று கொண் டிருந்த ஆட்களை விசாரித்தோம். அவர்கள் அது தகுதியான இடமென்று சொன்னதினால் நாங்கள் பண்டியை நிறுத்தி, அந்தச் சாவடியில் தங்கி, நானும் ஞானாம்பாளும் வழியில் வந்த களைப்பினால் முன் னேரத்தில் படுத்துத் தூங்கினோம். வேலைக்காரர்கள் சுயம்பாகம் செய்து, எங்களை எழுப்பி, அன்னம் படைத்தார்கள்.

போஜனம் முடிந்த வுடனே, எங்கள் வேலைக்காரர்களில் ஒருவன் எங்களைப் பார்த்து ““ஐயா! நான் ஜலம் கொண்டுவரக் குளத்துக்குப் போனபோது, ஒரு மனுஷன் என்னைக் கண்டு இந்த இடம் கள்ளர்கள் வசிக்கிற இடமென்றும், இந்தச் சாவடியில் அநேகம் விசை கொள்ளையும் கொலையும் நடந்திருப்பதாகவும், சொன்னான். அந்தச் சாவடி தங்குவதற்குத் தகுந்த இடமென்று சில ஆட்கள் சொன்னதை நம்பி, நாங்கள் தங்கினோ மென்று நான் தெரிவித்தேன். அப்படி யாராவது உங்களுக்குத் தெரிவித்திருந்தால், அவர்கள் திருடர்களாகவே இருப்பார்கள். நீங்கள் சர்வ ஜாக்கிரதையா யிருக்க வேண்டும் என்று, அந்த மனுஷன் எச்சரிக்கை செய்து போய் விட்டான்”” என்றான். இதைக் கேட்ட வுடனே எனக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. ஞானாம்பாளில்லாமலிருந்தால், நான் பயப்படமாட்டேன். அவள் கூட இருப்பதால், என்ன அவமானம் நேரிடுவோமென்கிற பயம் அதிகரித்து. அவளை எங்கே யாவது ஒளித்து வைக்கலா மென்று பார்த்தால், எங்கும் வெட்டார வெளியா யிருந்ததால், தகுந்த இடம் அகப்பட வில்லை. அவள் பயந்து நடுங்குவதைக் கண்டு ”“ஞானாம்பாள்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே. நானும் வேலைக்காரர்களும் பண்டிக்காரக்ளும் உட்பட ஆறு பேர்கள் இருக்கிறோம். நமக்கு வேண்டிய ஆயுதங்களும் இருக்கின்றன. திருடர்கள் எத்தனை பேர்கள் வந்தாலும் ஒரு கை பார்க்கிறோம்” என்று ஞானாம்பாளுக்குப் பயம் நீங்கும்படியான வார்த்தைகளைச் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து “நான் பயப்படுகிறதெல்லாங் கூடி திருடர்கள் வந்தால் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள். அவர்களை எதிர்த்துச் சண்டை செய்வீர்கள். அப்போது என்ன அபாயம் நேரிடுமோ வென்று தான் அஞ்சுகிறேன். என் பயத்தை உங்களுடைய வார்த்தை ஸ்திரப்படுத்துகிறது. நம்முடைய பலத்தையும் எதிரியினுடைய பலத்தையும் இடம் காலம் முதலிய பலாபலங்களையும் யோசிக்காமல் யுத்தத்துக்குப் புறப்படுவது உசிதமல்ல. சொத்துக்களைத் திருடுவதற்காகவே திருடர்கள் வருகிறார்கள். அவர்களுடைய எண்ணத்துக்கு யாதொரு விக்கினம் நேரிட்டால் அவர்கள் கொலைபாதகத்துக்கு அஞ்சுவார்களா? அடியாளுக்குத் தோன்றுகிறதெல்லாம் கூடி கள்ளர்களுடைய கூட்டம் அதிகமாயிருக்கிற பக்ஷத்தில் அவர்களை எதிர்க்காமல் நம்முடைய கையில் உள்ள சொத்துக்களை அவர்களிடத்தில் கொடுத்து மரியாதையையும் பிராணனையும் காப்பாற்றிக் கொள்வதே விவேகமென்று தோன்றுகிறது. பின்னும் இந்தச் சமயத்தில் கடவுளைத் தவிர வேறு துணை இல்லாதபடியால் அவரை நம்பினால் கைவிடமாட்டார்”” என்றாள்.

இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மேற்குத் திசையில் வெடி சப்தங் கேட்டு, நான் சாவடித் திண்ணையை விட்டுக் கீழே குதித்து அந்தத் திசையைப் பார்த்தேன். சிறிது தூரத்தில் வெளிச்சங்களுடனே திருடர்கள் பெருங் கூட்டமாய் வருகிறதைக் கண்டு, திண்ணைமே லேறி நாங்கள் வைத்திருந்த தீபம் வெளியிலே தெரியாதபடி மறைவாக வைத்துவிட்டு சுவாமி மேலே சகல பாரத்தையும் போட்டுவிட்டு, திருடர்கள் வந்தவுடனே அவர்களிடத்தில் கொடுக்க வேண்டியதற்காகப் பணப் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போலப் பயந்து நடுநடுங்கிக் கொண்டு இருந்தோம். ஞானாம்பாள் ஒரு மூலையில் கண்ணீர்ப் பிரவாகத்துடனே கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தாள்.

மேற்கேயிருந்து வந்த திருடர்கள் இரஸ்தாவில் வந்து சேர்ந்து, நாங்கள் இருந்த சாவடிக்கு நேரே திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும் போது, அவர்களுக்கு நேரே கிழக்கே யிருந்து ஒரு பெருங் கூட்டம் வந்து அவர்களைப் பார்த்து, ““நீங்கள் ஆரடா?”” வென்று வினாவ, அவர்கள் “நீங்கள் ஆரடா” என்று எதிர்த்துக் கேட்டார்கள். உடனே கிழக்கேயிருந்து வந்தவர்களுக்குக் கோபம் உண்டாகி மேற்கேயிருந்து வந்தவர்கள் மேலே விழுந்து கத்திகளாலும் கழிகளாலும் யுத்தஞ் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அடித்துக் கொள்ளுகிற அடிகள், எங்கள் தலைமேலே அடிக்கிறது போலவே கேட்டு, நாங்கள் விடுவிடென்று நடுங்கிக் கொண்டிருந்தோம். அவர்கள் சண்டை செய்கிற காரணம் இன்னதென்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றினதெல்லாங்கூடி அன்றைய தினம் திருடவேண்டிய முறை இன்னாருடையதென்று ஸ்தாபித்துக் கொள்வதற்காக அவர்கள் சண்டை செய்வதாக அனுமானித்தேன். அந்த இரு பக்ஷத்தாரும் சமான கக்ஷியாயிருந்தமையால் ஒரு கக்ஷிக்காவது தோற்புக் கெலிப்பு இல்லாமல் நெடு நேரஞ் சண்டை செய்தார்கள். ஆனால் கிழக்கேயிருந்து வந்த கூட்டத்தாருக்கு மறுபடியும் மறுபடியும் உப பலம் சேர்ந்து கொண்டிருந்தபடியால், அவர்கள் பக்ஷத்தில் ஜயம் உண்டாகி மேற்குத் திசையார் ஓட ஆரம்பித்தார்கள். அவர்களைக் கிழக்குத் திசையார் வெகு தூரம் வரையில் தொடர்ந்து போய்ப் பிற்பாடு நாங்கள் இருந்த சாவடியை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே, எங்களிடத்தில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த அற்பப் பிராணனும் மேற்குத் திசையார் போல ஓட ஆரம்பித்தது.

அந்தக் கூட்டத்தார் சிறிது தூரம் வந்து பிறகு நின்று விட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் மட்டும் எங்களை நோக்கி வந்தார்கள். அவர்களை யம தூதர்களாகவே எண்ணினோம். அவர்கள் தூரத்தில் வரும்போதே என் பெயரைச் சொல்லி மரியாதையாய்க் கூப்பிட்டுச் சொல்லுகிறார்கள்: “ஐயா! பிரதாப முதலியாரே! திருடர்கள் ஓடிப் போய்விட்டார்கள்; இனி மேல் நீங்கள் அஞ்சவேண்டாம்; நாங்கள் திருடர்கள் அல்ல” என்று சொல்லிக் கொண்டு எங்களை நோக்க, எங்கள் வேலைக்காரன் ““ஐயா! நான் குளத்துக்கு ஜலம் மொள்ள வந்தபோது நாங்கள் ஜாக்கிரதையா யிருக்கவேண்டு மென்று சொன்னவர்கள் நீங்கள் தானா?”” என்று வினாவ, அவர் “ஆம்” என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வந்து நமஸ்காரஞ் செய்தார். அவருடைய முகக் குறியால் அவர் யோக்கியர் என்று தெரிந்து கொண்டு நானும் அவருக்கு நமஸ்காரஞ் செய்து “நீங்கள் யார்?” என்று வினாவ, அவர் சொல்லுகிறார்:—

“நான் இதற்கு இரண்டு நாழிகை வழி தூரத்திலிருக்கிற பொன்னூரில் வசிக்கிறவன். என் பெயர் புண்ணியகோடி செட்டி. என் தகப்பனாராகிய ஞானி செட்டி சத்தியபுரியில் தங்கள் தகப்பனா ரிடத்தில் அனேக வருஷகாலம் காரியம் பார்த்து வந்து நான் அதி பால்லியமா யிருக்கும்போது இறந்துபோனார். அதுமுதல் என்னையும் என் தாயாரையும் தங்களுடைய தாயாரும் தகப்பனாரும் அன்ன வஸ்திரங் கொடுத்து ஆதரித்ததுமல்லாமல் எனக்கு வித்தியாப்பியாசமும் செய்து வைத்தார்கள். இது நீங்கள் பிறக்கிறதற்குச் சில காலத்துக்கு முன் நிகழ்ந்த சங்கதியானதால் தாங்கள் அறிய மாட்டீர்கள். சத்தியபுரியில் தங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் நானும் என் தாயாரும் குடியிருந்துகொண்டு, மேற் சொன்ன படி தங்களுடைய தாய் தந்தைமார்களால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்தோம். எனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது ஒரு நாள் அந்த வீட்டுக் கொல்லையில் மரம் வைக்கவேண்டியதற்காக ஒரு சிறிய மண்வெட்டியால் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பள்ளத்தில் மண்வெட்டுப்பட்டு, வெண்கல ஓசை போல் கணீரென்று சப்தங் கேட்டது. அது என்னவென்று மறுபடியும் தோண்டிப் பார்க்கத் தோலினால் மூடப்பட்ட ஒரு வெண்கலத் தோண்டி அகப்பட்டது. அதை என் தாயார் வீட்டுக்குள்ளே கொண்டுபோய்த் தெருக் கதவை மூடிவிட்டு வெண்கலத் தோண்டியைத் திறந்து பார்க்க, அறுநூறு பூவராகனும் அநேக ரத்னாபரணங்களும் அடக்கஞ் செய்யப் பட்டிருந்தன. அவ்வளவு பொருளை நாங்கள் ஒருநாளும் பாராதவர்களான படியால் அந்த சங்கதியை வெளிப்படுத்த வேண்டாமென்று என் தாயார் எனக்குச் சொன்னாள். நான் உடனே என் தாயாரைப் பார்த்து “இந்த வீடுங் கொல்லையும் நம்மை இரக்ஷிக்கிற கனகாசல முதலியாருக்குச் சொந்தமானதால் அதில் அகப்பட்ட நிதேக்ஷமும் அவருக்குத் தானே சொந்தம்? இந்தச் சங்கதியை அவருக்குச் சொல்லாமலிருப்பது கிரமமா/” என்று சொல்லிக் கொண்டு கதவைத் திறந்தேன். உடனே என் தாயார் நான் வெளியே போகாதபடி என்னைக் கட்டிப் பிடித்தாள்; நான் திமிறிக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போவதற்காக வெளியே ஓடினேன். என் தாயாரும் கதவைப் பூட்டிவிட்டு வெகுதூரம் வரையில் என்னைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தாள். நான் அகப்படாமல் ஓடி வந்து உங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டேன். என் தாயார் இனி மேல் காரியமில்லை யென்று வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டாள். நான் ஓடி வந்த ஓட்டத்தினால் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டு உள்ளே வந்து நுழைந்ததைத் தங்கள் தாய் தந்தையார் கண்டு “‘ஏன் அப்பா! இப்படி ஓடி வந்தாய்?’ என்று கேட்டார்கள். நான் ஓடி வந்த சிரமம் நீங்கினவுடனே, புதையல் அகப்பட்ட விவரமும், மற்றச் சங்கதிகளும், அவர்களுக்கு விக்ஞாபித்தேன். அவர்கள் “‘உன்னைப் போல் நல்ல பிள்ளைகள் உண்டா?’” என்று என்னைப் புகழ்ந்து கொண் டிருக்கும் போது, என் தாயார் இனிமேல் மறைக்கக் கூடாதென்று நினைத்து வெண்கலத் தோண்டி யுடனே வந்து புதையல் அகப்பட்ட விவரத்தை உண்மையாகவே தெரிவித்தாள். அவள் முந்தி மறைக்க யத்தனப் பட்டதை உங்கள் தாய் தந்தையர்கள் காட்டிக்கொள்ளாமலே அவளையும் புகழ்ந்தார்கள்.

பிற்பாடு தங்கள் தாய் தந்தைமார்கள் அறைக்குள்ளே போய்ச் சற்று நேரம் ஆலோசித்துக்கொண்டு வெளியே வந்து என்னைப் பார்த்து “பொய்யும் சூதும் வஞ்சனையும் நிறைந்த இந்த உலகத்தில் உன்னைப் போல யோக்கியமான பிள்ளை அகப்படுவது அருமையானதால் உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த சம்மானமாக அந்தப் புதையலைக் கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார்; அந்தத் திரவியத்தை நீயே வைத்துக்கொண்டு சுகமாயிரு” என்றார்கள். இதைக் கேட்டவுடனே நானும் என் தாயாரும் ஆனந்த பாஷ்பஞ் சொரிந்துகொண்டு அவர்களுடைய பாத கமலங்களில் விழுந்து விழுந்து அநேகந் தரம் சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்தோம். அவர்கள் நாங்கள் மறுபடியும் விழாதபடி எங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இப்போது நான் வசிக்கிற பொன்னூர்க் கிராமத்தை அவர்களே என் பெயரால் கிரயம் வாங்கி எனக்குத் தகுந்த பிராயம் வருகிறவரையில் என் தாயுடன் பிறந்த அம்மானைக் காரிய துரந்தரனாக நியமித்து என்னைக் குடும்பப் பிரதிஷ்டை செய்தார்கள். நான் இப்போது சாப்பிடுகிறது உங்களுடைய அன்னந்தான்; எரிக்கிறது உங்களுடைய விளக்குத் தான்; தண்ணீர்த் துறையில் உங்களுடைய வேலைக்காரனைப் பார்த்த போது நீங்கள் வந்திருக்கிற சமாசாரம் தெரிந்துகொண்டேன்; திருடர்களே உங்களை ஏமாற்றி இந்தச் சாவடியில் தங்கும்படி செய்ததாக எனக்குத் தோன்றின படியால் அந்த ஆபத்தைத் தீர்க்க என்ன உபாயஞ் செய்யலாமென்று நான் பல வகையில் யோசித்தேன். என்னுடைய கிராமத்துக்கு உங்களை அழைத்துக்கொண்டு போகலாமென்றால் வண்டி போகும்படியான மார்க்கமில்லை. நீங்கள் வயல் வழியாக நடக்கமாட்டீர்களானதால் நானே என் கிராமத்துக்குப் போய் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வருவதே நலமென்று நினைத்து அந்தப் படி ஆட்களைக் கூட்டிக்கொண்டு அதி சீக்கிரமாக வந்தேன். நாங்கள் வந்த சமயமும் திருடர்கள் வந்த சமயமும் ஒத்துக்கொண்டபடியால் திருடர்கள் உங்களைக் கிட்டாதபடி அவர்களை அடித்துத் துரத்தி விட்டோம். அதோ அங்கு நிற்கிற கூட்டம் நம்முடைய கூட்டந்தான். அவர்கள் எல்லோரும் இங்கு வந்தால் திருடர்களென்று நினைத்து நீங்கள் பயப்படுவீர்களென்று கருதி நாங்கள் இருவர் மட்டும் வந்து உங்களைக் கண்டோம்; கண் குளிர்ந்தோம். நாங்கள் செய்த பூஜாபலம் இப்போதுதான் எங்களுக்குப் பிராப்தமாயிற்று. உங்களுடைய தர்ம பத்தினியின் உத்தம குணங்களை இதற்கு முன் கேட்டு நாங்கள் சுரோத்திராநந்த மடைந்தோம். இப்போது அந்த உத்தமியைத் தரிசித்து நேத்திராநந்தத்தை அடைகிறோம். எங்களுடைய கண்ணுக்கும் காதுக்கும் இந்த விவாதம் இன்றோடு தீர்ந்துவிட்டது” என்றார். நான் அவரைப் பார்த்து “என் தாய் தந்தையர் உங்களுக்குச் செய்த உபகாரம் ஒரு பாக்காகவும், நீங்கள் எங்களுக்குச் செய்த உபகாரம் தோப்பாகவும் மாறிவிட்டது. நீங்கள் சமயத்தில் வந்து எங்களை ரக்ஷிக்காவிட்டால் எங்களுடைய யாத்திரை பரலோக யாத்திரையாக முடிந்திருக்கும்.

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

சமயத்திற் செய்த ஒரு சிறிய உதவி பூமியினும் பெரிதென்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அப்படியானால் நீங்கள் சமயத்திற் செய்த பேருதவிக்கு யாரை ஒப்பிடுவேன்?” என்று பலவகையாக என்னுடைய நன்றியறிதலை வெளிப்படுத்தினேன். அவர் பொழுது விடிந்தவுடனே தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று பிரார்த்தித்தார். நாங்கள் திரும்பி வரும்போது அகத்தியம் வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம்.