பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 28


28-ஆம் அதிகாரம்
சகோதர பக்ஷம்—நல்ல சகோதரனும். கெட்ட
சகோதரனும்

தேவராஜப் பிள்ளை யினுடைய பாளையப்பட்டின் எல்லைக் குள்ளாக என்ன குற்றம் நடந்தாலும், அதை விசாரித்துத் தீர்மானிக்கிற அதிகாரம், கவர்மெண்டாரால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு நாள் அதிகாலையில் ஏதோ சில விசாரணை செய்வதற்காக வெளியே போனவர் சூரியாஸ்தமன காலம் வரையில் வீட்டுக்கு வரவில்லை. அவர் திரும்பி வந்தவுடனே எங்களைப் பார்த்து “பெருந் துயரத்துக்குரிய சில சங்கதிகள் இன்று நடந்தன; அவைகளை நினைக்கும் போது எனக்கு மயிர்க்கூச்சிடுகின்றது; மனம் உருகுகின்றது; கண்ணீர் பெருகுகின்றது. அந்தச் சங்கதிகளைச் சொல்லுகிறேன். கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.

“கும்பகோணத்தில் வைசியர் குலத்திலே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் போதுமான பூஸ்திதிகளும் நிதி, நிக்ஷேபம், நகை, பாத்திர முதலிய ஜங்கமங்களும் இருந்தன. அவர்களில் மூத்தவன் பொய் வஞ்சகம் பேராசை முதலிய துர்க்குண புஞ்சமாயும், இளையவன் சற்குண சம்பன்னனாயு மிருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் லோகாந்தரஞ் சென்ற பிறகு மூத்தவனே குடும்ப வியாபகனாய் மேல் விசாரணை செய்து வந்தபடியால் சகல ஸ்திதிகளும் கணக்குகளும் அவன் கைவசமாகவே இருந்தன. இளையவன் தமையனே கதியென்று நம்பியிருந்தபடியால் தங்களுக்கு இவ்வளவு ஆஸ்தியென்பதுமே இளையவனுக்குப் பரிச்சேதந் தெரியாது. இளையவனுக்குக் கலியாணப் பருவம் வந்து வெகுநாளாகியும் அவனுக்குக் கலியாணஞ் செய்விக்காமல் மூத்தவன் காலங்கடத்தி வந்தான். அவர்களுடைய தாயுடன் பிறந்த அம்மானுக்கு இந்த ஊர் வாசஸ்தலமானபடியால் அவன் மேற்படி இளைய பிள்ளையை இந்த ஊருக்கு வரவழைத்து தன்னுடைய மகளைக் கன்னிகாதானஞ் செய்வித்து மகளையும் மருமகனையும் கும்பகோணத்துக்கு அனுப்பினான். அவர்களுக்கு அன்ன வஸ்திரங் கொடாமல் மூத்தவன் அநாதரவு செய்தபடியால் இளையவன் தமையனைப் பார்த்து ‘“அண்ணா! குடும்ப ஸ்திதிகளில் ஏதாவது தங்களுக்கு இஷ்டமானதைக் கொடுத்தால் நான் எங்கேயாவது போய்ப் பிழைத்துப் போகிறேன். தேவரீர் கிருபை செய்யவேண்டும்” என்று மிகுந்த பயபக்தியுடன் இரந்து மன்றாடினான்; அந்த மன்றாட்டையெல்லாம் மூத்தவன் ஆற்றில் கரைத்த புளியாக்கி இளையவனையும் அவன் மனைவியையும் புறக்கணித்துத் தள்ளி விட்டான். அவர்கள் இருவரும் பட்டினியும் பசியுமாக இந்த ஊருக்கு வந்து விட்டார்கள். தமையன் அவ்வளவு கொடுமை செய்தும் அவன் மேலே பாகவியாஜ்ஜியஞ் செய்ய இளையவன் அநிஷ்டனாயிருந்தான். ஆயினும் அவனுடைய மாமனார் முயற்சியினாலே கும்பகோணத்தில் பாக வழக்குச் செய்யப்பட்டது. மூத்தவன் தன் கையிலிருந்த திரவியங்களையெல்லாம் பல பேர் கையில் ரகசியமாய்க் கொடுத்து விட்டு, தன்னிடத்தில் பூஸ்திதிகளைத் தவிர வேறொரு பொருளுங் கிடையாதென்றும் பூஸ்திதிகள் பல பெயர்களிடத்தில் வாங்கப்பட்ட கடன்களுக்கு உத்தரவாதமாயிருப்பதாகவும் தனக்கு ஒருவருங் கடன் கொடுக்க வேண்டியதில்லை என்றும் எதிர் வழக்காடி அந்தப்படி பொய்க் கணக்குகளைக் கொண்டும் நிரூபணஞ் செய்தான். அன்றியுந் தன் தம்பியினுடைய சாக்ஷிகளைப் பொருள் மூலமாகக் கலைத்து அவர்கள் தன் தம்பி பக்ஷத்தில் சாக்ஷி சொல்லாதபடி அழிம்பு செய்தபடியால் தம்பி வழக்கு அபஜயமாய்ப் போய்விட்டது.

இவ்வண்ணம் இளையவன் பிதுரார்ஜிதத்தை இழந்து பரதேசிக் கோலமாய் மாமனார் வீட்டில் வந்து சேர்ந்தான். மாமனாரிடத்தில் அவன் சில தொகை கடன் வாங்கி சத்தியந் தவறாமல் வர்த்தகஞ் செய்தபடியால் அவனுடைய யோக்கியதை எங்கும் பரிமளித்தது. புஷ்பத்தை நாடி வரும் வண்டுகள் போலச் சகலரும் அவனிடத்திலே கொள்ளல் விற்றல் செய்யவும் பரபத்தியங்கள் பண்ணவும் ஆரம்பித்தபடியால் அவனுக்குச் செல்வம் அமோகமாய்ப் பெருகிப் பெரிய திரவியவான் ஆனான். இளையவனை அவனுடைய தர்மந் தலைகாத்தது போல், மூத்தவனை அவனுடைய மோசமே நாசஞ் செய்துவிட்டது. எப்படியெனில் அவன் தம்பிக்குப் பயந்து கொண்டு யாரிடத்தில் பொருள்களை அந்தரங்கமாய்க் கொடுத்து வைத்தானோ அவர்கள் எல்லாரும் அந்தத் தனங்களை அபகரித்துக் கொண்டு அவனுக்கு நம்பிக்கைத் துரோகஞ் செய்து விட்டார்கள். தனக்கு யாதொரு சொத்துங் கிடையாதென்று அவனே நியாய சபையார் அறியச் சொல்லிவிட்டபடியால் அந்த நம்பிக்கைத் துரோகிகள் மேல் அவன் வழக்குத் தொடர மார்க்கம் இல்லாமற் போவிட்டது. பூஸ்திதிகள் பல பெயர்களுடைய கடன்களுக்குப் பாத்தியமாயிருப்பதாக அவனே தன் தம்பி வழக்கில் ஒப்புக்கொண்டபடியால் அந்தப் பொய்யான கடன்காரர்களெல்லாருந் தங்களுக்கு மெய்யாகக் கடன் வரவேண்டியதுபோலத் துர்வழக்குகள் செய்து அந்தப் பூஸ்திதிகளையெல்லாம் ஏலம் போட்டுக் கைவசப் படுத்திக்கொண்டார்கள். அவனுக்கு வரவேண்டிய கடன்களையெல்லாம் நியாஸ்தலத்தில் மறைத்த படியால் கடன் கொடுக்க வேண்டியவர்களெல்லாரும் அவனை மோசஞ் செய்து விட்டார்கள். அவனும் அவர்கள் மேல் வழக்கிடக்கூடாமற் போய்விட்டது. இவ்வாறு கைப்பொருள்களையெல்லாம் இழந்து கன தரித்திரனாய்ப் போய் விட்டான். மூத்தவன் வீட்டில் மூத்தவளே வந்து குடியிருக்கத் தலைப்பட்டதால் பிக்ஷைத் தொழிலைத் தவிர வேறு வழியில்லாமற் போய்விட்டது. அவன் கனிஷ்டத் துரோகியென்று ஊரெங்குந் தெரியுமானபடியால் அவனுக்கு இரங்குவார் இல்லை. அவன் தம்பியிடத்திற்குப் போகலாமென்றால் அவனுடைய மனச்சாக்ஷி இடம் கொடுக்க வில்லை.

மூத்தவனும் அவன் பெண்சாதி பிள்ளைகளும் கஷ்டப்படுகிறதை இளையவன் கேள்வியுற்று அவர்களைத் தன்னிடத்துக்கு வரும்படி அவன் கடிதம் அனுப்பினதுமல்லாமல் அவர்களுடைய வழிச் செலவுக்காகப் பணமும் அனுப்பினான். உடனே மூத்தவன் சமுசார சகிதமாய்ப் புறப்பட்டுத் தம்பியிடம் வந்து சேர்ந்தான். தம்பியைப் பார்த்தவுடனே தமையன் கட்டிக்கொண்டு “தம்பி! பிறருக்கு வெட்டின குழி தனக்கே வந்து லபிப்பதுபோல் உனக்கு நான் செய்த தீங்கு எனக்கே வந்து லபித்துவிட்டது. உன்னுடைய பாகச் சொத்தை உனக்கு நான் கொடுத்திருப்பேனானால் மற்ற ஸ்திதிகளை வைத்துக்கொண்டு நான் க்ஷேமமாய் வாழ்ந்திருப்பேன். உன்னுடைய பாகத்தை வஞ்சிக்க நினைத்துச் சொத்துகளை யெல்லாம் நான் பராதீனஞ் செய்தபடியால் அந்தப் பராதீனமே நிலைத்து என்னுடைய ஸ்வாதீனம் மாறிப்போய் விட்டது. யுஆடவன் செத்த பிறகு அறுதலிக்குப் புத்தி வந்ததுரு என்பது போல் சொத்துக்களெல்லாம் போன பிறகு எனக்குப் புத்தி வந்தது அப்பா!” என்று சொல்லி அழுதான். தமையன் செய்த துரோகங்களைத் தம்பி எள்ளளவும் நினையாமல் அவனுக்குச் சர்வோபசாரங்களுஞ் செய்தி தாசானு தாசனாக நடந்தான். ஆனால் அவனுடைய இல்லாள் கொழுந்தனிடத்தில் துன்பப்பட்டவளானதால் அவள் தன் புருஷனுக்குத் தெரியாமல் கொழுந்தனைக் காணும்போதெல்லாம் கடுகடுத்துக் கொண்டு வந்தாள்.

சில நாளாயினபின், தமையன் ஊருக்குப் போகவேண்டுமென்று உத்தரவு கேட்ட படியால், கனிஷ்டன் தன் பத்தினிக்குத் தெரியாமல், பெட்டியைத் திறந்து, நுறு தங்க நாணயங்களை யெடுத்து, தமையன் கையிற் கொடுத்து, அவற்றை மூலதனமாக வைத்துக்கொண்டு வியாபாரஞ் செய்யும் படி யாகவும், இன்னும் வேண்டுங் காரியங்களுக்கு எழுதும்படியாகவுஞ் சொல்லி, தமையன் பத்தினிக்கும் பிள்ளைகளுக்கும் வஸ்திராபரணங்கள் கொடுத்து அனுப்பினான். அவர்கள் போனபிறகு இளையவ னுடைய பெண்சாதி பெட்டியைத் திறந்து பார்க்க, தங்க மோகராக்களைக் காணாமையினால், புருஷன் தன் தமையனுக்குக் கொடுத்திருப்பானென்று நிச்சயித்துக் கொண்டு அவள் கோப சன்னதத்துடன் புருஷனுக்குத் தெரியாமல் வெளியே புறப்பட்டுக் கொழுந்தனாரைத் தொடர்ந்து கொண்டு ஓடினாள். கொழுந்தனும் அவன் பத்தினி முதலானவர்களும் சிறிது தூரம் போய் வெயிலுக்காக ஒரு பாழ்மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் கொழுந்தனைக் கண்டவுடனே அவன் செய்த கொடுமைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக்காட்டி அவனை வாயில் வந்தபடி ஏசினாள். அவன் அந்தத் தூஷணங்களைச் சகிக்கமாட்டாதவனாய் அந்தக் கொடியவளைப் பார்த்து “இந்தப் பணத்துக்காகத் தானே இவ்வளவு பேச்சும் பேசுகிறாய்! இந்தா உன் பணம்” என்று சொல்லி அவன் கையிலிருந்த மோகராப் பையை அவள் முன்பாக எறிந்துவிட்டான். அவள் நல்ல காரியம் என்று மோகராப் பையை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். அவள் சொன்ன தூஷணங்களும் தன்னுடைய சொந்த மனச்சாக்ஷியும் இனிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வோமென்கிற ஏக்கமுங் கூடி அவனுக்குச் சித்த விகாரத்தை உண்டுபண்ணினபடியால் அவன் தன் பெண்சாதி பிள்ளைகளையுங் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளுகிறதென்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் தாகத்துத் தண்ணீர் வேண்டும் என்று சொன்னபடியால் அவன் ஜலங் கொண்டுவருகிறேன் என்று சொல்லிக் குளத்துக்குப் போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் விஷத்தைக் கலந்து தன்னுடைய பெண்சாதிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் விஷபானம் பண்ணினான். சற்று நேரத்தில் விஷம் தலைமண்டை கொண்டு அவர்கள் கால்மாடு தலைமாடாய்க் கீழே விழுந்து இறந்துபோய் விட்டார்கள்.

மூத்தவன் எறிந்துவிட்ட மோகராப் பையை எடுத்துக்கொண்டு இளையவன் பெண்சாதி வீட்டிற்குள் வந்து நுழைந்தாள். அவள் கையில் மோகராப் பையைக் கண்டவுடனே அவளுடைய நாயகனுக்குக் கோபம் உண்டாகி அவளைத் திட்டியடித்து அந்தப் பையைப் பிடுங்கிக்கொண்டு அதைத் தமையனிடத்தில் மறுபடியும் கொடுப்பதற்காக ஓடினான். தமையன் முதலானவர்கள் வெயிலுக்காகப் பாழ்மண்டபத்தில் நுழைந்ததாக இளையவன் வழியிலே கேள்வியுற்று அவனும் அந்தப் பாழ்மண்டபத்துக்குப் போனான். அங்கே எல்லாரும் இறந்து கிடக்கிறதைக் கண்டு அவர்கள் மேலே விழுந்து கோகோவென்று கத்தி அழுதான். பிறகு அவர்கள் சமீபத்திலிருந்த விஷஜல பாத்திரத்தைக் கண்டு அவர்கள் விஷபானம் பண்ணி இறந்து போனதாக அறிந்துகொண்டு அதில் மிஞ்சியிருந்த விஷ ஜலத்தைத் தானுங் குடித்து மரணத்துக்கு ஆயத்தமாய்த் தமையனுடைய பிரேதத்தைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான். அவன் விஷம் அருந்தினது சில வழிப்போக்கர்களுக்குத் தெரிந்து அவர்கள் என்னிடத்தில் ஓடிவந்து அறிக்கை யிட்டார்கள். நான் உடனே வைத்தியர்களை அழைத்துக்கொண்டு ஓடினேன். மூத்தவனும் அவனுடைய பெண்சாதி பிள்ளைகளும் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர்களுக்கு வைத்தியஞ் செய்வது நிஷ்பிரயோசனமென்று வைத்தியர்கள் தெரிவித்தார்கள். இளையவன் எல்லோருக்கும் பின்பு விஷம் உண்டபடியால் அவன் இறவாமற் குற்றுயிராயிருந்தான். அவனுக்கு வைத்தியர்கள் ஔஷதப் பிரயோகஞ் செய்து அவன் உண்ட விஷத்தை வெளிப்படுத்தி அவனைப் பிழைப்பித்தார்கள். அவன் எழுந்து உடனே தன் தமையன் முதலானவர்களைப் பிழைக்கும்படி வைத்தியர்களை வேண்டிக்கொண்டான். அவர்கள் பிழைப்பது சாத்தியம் அல்லவென்று அவனுக்குத் தெரிந்தவுடனே அவன் விழுந்து புரண்டு அழுத பரிதாபத்தை ஒருவருங் கண் கொண்டு பார்க்கக்கூடாது. அவனுடைய தமையனுங் குழந்தைகளும் மாண்டு கிடப்பதையும், அவர்கள் மேலே அவன் விழுந்து விழுந்து அலறி அழுவதையும் பார்த்தவர்களுடைய மனங் கல்லாயிருந்தாலும் கரையாமலிருக்குமா? இரும்பாயிருந்தாலும் இளகாமலிருக்குமா? இளையவனுடைய மனைவியோ என்றால் தன்னுடைய தௌஷ்டியத்தினால் இவ்வளவு பிரமாதம் வந்து விளைந்ததென்று தெரிந்தவுடனே அவள் மதிமயங்கிக் கீழே விழுந்து இன்னமுஞ் சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருக்கிறாள். மூத்தவன் ஆதியில் தன் தம்பியை மோசஞ் செய்யாமல் அவனுடைய பாகத்தைக் கிரமப்படி கொடுத்திருப்பானானால் மூத்தவனுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்திராதென்பது உறுதி தான். என்றைக்கிருந்தாலும் துன்மார்க்கர்களைக் கடவுள் இந்த உலகத்திலும் தண்டிக்கிறாரென்பதற்கு இந்தச் சரித்திரமே போதுமான சாக்ஷியமாயிருக்கிறது. மேற்படி சங்கதிகளை யெல்லாம் நான் கூலங்கஷமாய் விசாரணை செய்து இறந்து போனவர்களை யெல்லாந் தகனஞ் செய்யும்படி உத்தரவு கொடுத்து வர இந் நேரம் சென்றது”” என்றார்.

தேவராஜப் பிள்ளை அந்தச் சரித்திரத்தைச் சொல்லி முடித்தவுடனே என் தகப்பனார் என்னைப் பார்த்து “நீ கல்வி பயிலும்போது இரண்டு நல்ல சகோதரர்களுடைய சரித்திரத்தை நீ வாசிக்கக் கேட்டிருக்கிறேன். அந்தச் சரித்திரத்தை இப்போது சொல்லு” என்று உத்தரவு கொடுத்தார்கள். தேவராஜப் பிள்ளையும் அதைக் கேட்க விரும்பினபடியால் நான் சொல்லத் தொடங்கினேன்.

“பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகல் (Portugal) தேசத்திலிருந்து கோவா (Goa) பட்டணத்துக்குப் புறப்பட்டு வந்த ஒரு கப்பலில் ஆயிரத்து இருநூறு ஜனங்கள் ஏறியிருந்தார்கள். அந்தக் கப்பல் ஒரு மலையில் மோதி உடைந்துபோனதால் இருபது பெயர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் சமுத்திரத்தில் முழுகி இறந்து போனார்கள். அந்த இருபது ஜனங்களும் ஒரு சிறு படகிலேறித் தப்பிக்கொண்டார்கள். அவர்களுக்குப் போதுமான புசிகரணங்கள் இல்லாமல் இருந்தபடியால் திருவுளச் சீட்டுப் போட்டுத் தங்களிற் சிலரைக் கடலில் தள்ளிவிடுகிறதென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவனைக் கடலிலே தள்ளும்படித் திருவுளச் சீட்டு விழுந்தது. அவனை இளையவன் மிகுந்த அன்போடு கட்டித் தழுவி அழுதுகொண்டு மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். “என் தமையனுக்குப் பெண்சாதியும், பிள்ளைகளும் மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் போஷிக்கிறதற்கு என் தமையனாரைத் தவிர வேறு கதியில்லை; நானோ ஏகாங்கியா யிருக்கிறேன். நான் இறந்து போவதினால் ஒருவருக்கும் நஷ்டமில்லை. ஆகையால் என்னுடைய ஜேஷ்டருக்குப் பதிலாய் என்னைச் சமுத்திரத்தில் தள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். தம்பியினுடய பக்ஷ மிகுதியைக் கண்டு தமையன் ஆச்சரியம் அடைந்து “இப்படிப்பட்ட உத்தம சகோதரனை எனக்காக இறக்கும்படி செய்வது அநீதியானதால் என்னையே தள்ளிவிட வேண்டும்” என்று மன்றாடினான். மூத்தவனைக் கடலில் தள்ளாதபடி இளையவன் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். அவன் எவ்வளவு பலமாகத் தமையனைக் கட்டிக் கொண்டானென்றால் அவர்கள் இருவரையும் வெவ்வேறாய்ப் பிரிப்பது அசாத்தியமாயிருந்தது. இறுதியில் இளையவனுடைய தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அவனுடைய இஷ்டப்படி அவனைச் சமுத்திரத்தில் தள்ளிவிட்டார்கள். அவன் நல்ல நீச்சுக்காரணானதால் அவன் நீஞ்சிக் கொண்டு வந்து அந்தப் படகின் சுக்கானை ஒரு கையாலே பிடித்தான். அந்தக் கையை ஒரு மாலுமி வாளாலிலே வெட்டி விட்டான். அவன் உடனே சமுத்திரத்தில் விழுந்து எழுந்து படகை மற்றொரு கையாற் பிடித்தான். அந்தக் கையையும் அந்தப் பாவிப்பயல் தறித்து விட்டான். அவன் இரண்டு கைகளையும் இழந்தும் தண்ணீரில் முழுகாமல் இரத்தப் பிரவாகத்துடன் காலினால் நீந்திக்கொண்டு தண்ணீரில் நிற்கிற பரிதாபமான காக்ஷியும் அவனுடைய சகோதர பக்ஷமும் படகிலிருந்தவர்களுக்கு இரக்கத்தை உண்டுபண்ணின படியால் அவர்கள் ‘இந்த ஒரு பிராணனை ரக்ஷிப்பதனால் நமக்கு என்ன நஷ்டம் சம்பவிக்கக்கூடும்?’ என்று சொல்லி அவனைப் படகின் மேல் ஏற்றிக்கொண்டு அவனுடைய காயங்களைக் கட்டி சொஸ்தப்படுத்தினார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்து தெய்வ சகாயத்தினால் குறித்த இடத்துக்குச் சிந்தாத்திரையாகப் போய்ச் சேர்ந்தார்கள்”” என்றேன்.