பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 3


3-ஆம் அதிகாரம்
சம்பந்தி முதலியார் சரித்திரம்
ஞானாம்பாளுடைய குணாதிசயங்களும்
கல்வித் திறமையும்

எனக்காகக் கனகசபை படிப்பதும், எனக்காக அவன் அடிபடுவதும், என் தாயாருக்குச் சிலநாள் வரைக்கும் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்ததாகக் தோன்றுகிறது. ஒருநாள், அவர்கள் என்னையும் கனகசபையையும் அழைத்து, இருவருக்கும் இலைபோட்டுக் கனகசபை இலையில் மட்டும், அன்னம் பட்சணம் முதலியவைகளைப் படைத்து, என்னுடைய இலையில் ஒன்றும் படையாமல் வெறுமையாய் விட்டுவிட்டார்கள். என் மாதாவைப் பார்த்து, எனக்கும் அன்னம் படைக்கும்படி வேண்டினேன். அவர்கள் கனகசபை அமுது செய்வதைப் பார்த்துக் கொண்டிரு என்றார்கள். அவன் அமுது செய்கிறதைப் பார்த்துக்கொண்டிருந்தால், எனக்குப் பசி அடங்குமா? என்றேன். அவன் படிக்கிறதையும் அடிபடுகிறதையும் நீ பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு வித்தை வருமா? என்றார்கள். நான் உடனே நாணம் அடைந்து, மாதாவின் முகத்தைப் பார்க்கிறதைவிட்டு பூமிதேவி முகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அன்றைய தினம் எனக்கு அன்னப்பிடி வெல்லப்பிடியாய் விட்டது. எனக்காக ஒரு ஏழைப்பிள்ளையை அடிபடும்படி செய்வித்தது பெரிய அக்கிரமமென்று என் தாயார் விஸ்தாபிரஸங்கஞ் செய்ததுமின்றி என்னைப் பார்த்து நீ படவேண்டிய அடியை கனகசபை ஏற்றுக்கொண்டால், நீ அனுபவிக்கிற சுகங்களிலும் அவனுக்குப் பங்கு கிடைக்கவேண்டியது நியாயம் என்று சொல்லி, அன்று முதல் அன்ன வஸ்திரபூஷணாதி விஷயங்களில், எனக்குங் கனகசபைக்கும் யாதோரு பேதமு மில்லாமல் இருவரையும் ஒரே தன்மையாய் நடத்தி வந்தார்கள். இனிமேல் நான் என் வீட்டில் படிப்பது சரியல்லவென்று, என் மாதா அபிப்பிராயப்படி எங்களுடைய சம்பந்தி முதலியார் வீட்டில், அவருடைய மகளோடுகூட வேறொரு தகுந்த உபாத்தியாரிடத்தில், நானும் கனகசபையும் படிக்கும்படி திட்டம் செய்தார்கள். அன்று முதல் என் படிப்பும் பிழைத்தது; கனகசபை முதுகும் பிழைத்தது. கனகசபையிம் தகப்பனார் சாந்தலிங்கம் பிள்ளையை என் தாயார் கைவிடாமல், அவரை எங்கள் குடும்பத்தில் பிரதான காரியஸ்தராக நியமித்து, அவரையும் அவருடைய குடும்பத்தையும் சம்ரட்சணை செய்து வந்தார்கள்.

சம்பந்த முதலியார் யாரென்றால், அவர் என் தாயுடன் பிறந்த அம்மான். அவருடைய பாட்டனார், என்னுடைய பாட்டனாரைப் போலவே கருநாடக ராஜாங்கத்தில் உத்தியோகஞ்செய்து அநேக திரவியங்களை ஆர்ஜித்துக் கொண்டு சத்தியபுரியில் வந்து வசித்தார்.அவருடைய குமாரன் சந்திரசேகர முதலியாருக்குச் சம்பந்தி முதலியாரும் என் தாயாரும் சந்ததிகள். அவர்களுக்கும் எங்களுக்கும் நெடுங்கால அநுபந்தம். மேற்படி சம்பந்தி முதலியாரும், எங்களைப் போலவே தனத்தில் மிகுந்தவர். அவருக்கு வெகு காலம் பிள்ளையில்லாமலிருந்து, பிற்பாடு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு ஞானாம்பாள் என்று நாமகரணம் செய்தார்கள். உலகத்திலிருக்கிற அழகுகளெல்லாம் கூடி ஒரு வடிவம் எடுத்து வந்தாள் போல, அவள் அதிரூபலாவண்ணியம் உடையவள்; அவளுடைய குணாதிசயங்களை யோசிக்குமிடத்தில், ஞானாம்பாள் என்கிற பேர் அவளுக்கே தகும்! அவளுடைய பிதா சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவளிக்கிற விஷயத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத் தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லாது பணத் தியாகம் செய்யமாட்டார். "கொடு" என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல் இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் "தா, தா" என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர் தாதனைப் பார்த்து "தாதா" என்று கூப்பிட்டாலும் அவர் சகிக்க மாட்டார். இப்படிப்பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள் ஐந்து வயதுக் குழந்தையாயிருக்கும்போது ஒரு வார்த்தையினாலே திருப்பி விட்டாள். எப்படியென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை அவர், பொக்கிஷ அறைக்குள் அழைத்துக் கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்து தரம் எண்ணி வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியே போகும்போது, "அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள் தான். அவரும் பணத்தைப் பார்க்கிறதைத் தவிர செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு போனார்கள். அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டு தகப்பனாரிடம் போய் "ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டாள். அவர் "லோபி என்றால் ஈயாதவன்" என்று சொன்னார். அவள் "அப்படியானால், உங்களைப் பல பேர்கள் லோபி லோபி என்று சொல்லுகிறார்கள்.. உங்களுக்கு மகளாயிருக்க எனக்கு வெட்கமா யிருக்கிறது" என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி அன்று முதல் அவர் லோப குணத்தை விட்டு "தாதா" என்று பல பேரும் சொல்லும்படி புது மனுஷனாக மாறிவிட்டார்.

ஞானாம்பாளுடைய புத்தி தீக்ஷண்ணியம் தெரியும்படியாக இன்னொரு விசேஷம் தெரிவிக்கிறேன். ஒரு நாள், தமக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்கிற கர்வத்தோடும் கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுகு வந்திருந்தார்; அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள் ஞானாம்பாளைக் காட்டி "இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில் அதிக தீக்ஷண்ணியம் உள்ளதாயிருக்கிறது" என்கிறார்கள். அதைக் கேட்ட அந்தப் பெரியவர் "சிறு வயதிலே புத்திசாலியா யிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டியாய்ப் போகிறது சகஜம்" என்றார். உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து "தாங்கள் சிறு பிராயத்தில் அதிக புத்திசாலியா யிருந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்" என்றாள். உடனே அவர் நாணமடைந்து அவருடைய கர்வத்தை விட்டு விட்டார்.

என் தாயார் உத்தரவுப்படி நானும் கனகசபையும் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய், ஞானாம்பாளுடைய உபாத்தியாயராகிய கருணானந்தப் பிள்ளையிடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தோம். எங்களுடைய படிப்பைப் பரிசோதிப்பதற்காக, அந்த உபாத்தியாயர் எங்களைப் பார்த்து “உயிரெழுத்து எத்தனை, மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரம் சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்.; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.

உடனே உபாத்தியாயர் அதிகாரஞ் செய்து "நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்திலே போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள் "உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். "நான் உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியாயர் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டுபோய் உபாத்தியாயர் முன்பாக விட்டேன். அவள் அவரிடத்திலும் முன் சொன்னபடியே சொன்னாள். உபாத்தியாயர் அவள் சொன்னதுதான் சரியென்று எங்களுக்குத் தெரிவித்தார். இவ்வகையாக நாங்கள் ஞானாம்பாளுக்கு வயதில் மூத்தவர்களா யிருந்தாலும் கல்வியில் அவளுக்குக் கனிஷ்டர்களா யிருந்தோம். நாங்கள் அவளுடன் வாசிக்க ஆரம்பித்தபோது, அவள் எடுத்த புஸ்தகம் வாசிக்கவும் அர்த்தம் சொல்லவும் பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலான கணக்குகள் பார்க்கவும் திறமையுள்ளவளா யிருந்தாள். "பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெரு மூச்சு விட்டது போல் ஞானாம்பாளுடைய கல்வித் திறமையை அறிந்தவுடனே எங்களுக்குப் பொறாமையும் வெட்கமுமுண்டாகி, அன்று முதல் நாங்கள் கல்வியில் அதிகக் கவனம் வைக்கத் தொடங்கினோம். சீக்கிரத்தில் அவளை வித்தையில் வெல்ல வேண்டுமென்பது எங்களுடைய மனோரதமாயிருந்தது. நாங்கள் எவ்வளவு பிராயசப் பட்டுப் படித்தாலும் அவளும் மேலும் மேலும் படித்துத் தினந்தோறும் கல்வியில் அபிவிருத்தி அடைந்து வந்தபடியால், அவளுடைய ஓட்டத்தைப் பிடிக்க எங்களால் முடிய வில்லை. எட்டி எட்டிப் பார்த்தும் எட்டாமையினால் கொட்டாவி விடத் துவக்கினோம். ஆயினும் அவளுடன் சேர்ந்து படிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்த பிற்பாடு நாங்களும் கல்வியில் முயன்று கல்விமான்களென்கிற பெயரும் பிரதிஷ்டையும் பெற்றோம்.

ஞானாம்பாள் அதிகமாகப் படித்திருக்கின்றோ மென்கிற வித்தியா கர்வமில்லாமல், சுத்த நிகர்வ சிரோமணியா யிருந்தாள். நாங்கள் கல்வியில் தனக்குக் குறைவாயிருப்பதற்காக வருத்தப்படுகிறோமென்று தெரிந்து கொண்டு, அந்த வருத்தத்தை நீக்கும் பொருட்டு எங்களைப் பார்த்து ஞானாம்பாள் சொல்கிறாள்: "ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்பகாலத்தில் வளர்ந்து புஷ்பித்து சீக்கிரத்தில் கெட்டுப் போகிற சிறு செடிகளுக்குச் சமானமாயிருக்கிறார்கள். புருஷர்களோ என்றால், வெகுநாள் தாமதப்பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருக்ஷங்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஸ்திரீகளுக்கு யௌவனமும், புத்தியும் சீகிரத்தில் வந்து, சீக்கிரத்தில் மாறிப் போகின்றன. புருஷர்களுக்கு யௌவனமும் புத்தியும் தாமதித்து வருகிற படியால், நெடுங்காலம் நீடித்திருக்கிறது" என்றாள். அதைக் கேட்டவுடனே எங்களுடைய வெட்கம் நீங்கி, நாங்கள் மேலும் மேலும் கல்வியில் முயல மனோற்சாகம் உண்டாயிற்று.