பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 31
31-ஆம் அதிகாரம்
கனகசபையின் கலியாணம்—கலியாணச்
சந்தடியில் தாலி கட்ட மறந்து விட்டது
முந்தின அதிகாரத்தில் சொல்லிய படி தீர்மானஞ் செய்த பிறகு, கவர்னர் எங்களை நோக்கிச் சொல்லுகிறார்:— இப்போது விசாரணை யான சங்கதியில் அசம்பாவிதமென்று நினைக்கும் படி யான சில விஷயங்கள் கலந்திருந்தாலும், அந்த விஷயங்க ளெல்லாம் வாஸ்தவமென்றும் பாளையதார் கக்ஷி உண்மையான தென்றூம் நிர்த்தாரணம் செய்திருக்கிறோம். பாளையதார் பிள்ளை இறவாம லிருக்க, அந்தப் பிள்ளை இறந்தது போல அவருடைய சகோதரன் மாய்மாலம் பண்ணி, அந்தப் பிள்ளைக்குப் பதிலாகப் பால்காரிப் பிள்ளையை அடக்கம் செய்ததும், அந்த மாறுபாடு பாளையதார் குடும்பத்தில் ஒருவருக்கும் தெரியாமற் போனதும், பாளையதார் தம்பி கொலை செய்வதற்காக முத்துவீரனிடத்திற் கொடுத்த பிள்ளையை அவன் கொலை செய்யாமல், சாந்தலிங்கம் பிள்ளை வசத்தில் ஒப்புவித்து சாந்தலிங்கம் பிள்ளை தன் சொந்தப்பிள்ளையைப் போல் வளர்த்ததும், அந்த ரகசியம் அநேக வருஷ காலம் பாளையதார் முதலானவர்களுக்குத் தெரியாமலிருந்ததும் சாதாரணமாய் நடக்கக் கூடுமான காரியங்கள் அல்ல. ஆயினும் அவைகளெல்லாம் வாஸ்தவமென்று உங்களுடைய பத்தினிகளின் ஊக்கமான முயற்சியினால் நாம் கண்டுபிடித்துக் கொண்டோம். முக்கியமாகச் சத்தியபுரி சுந்தரத்தண்ணிக்கு நீங்கள் எல்லாரும் கிருதக்ஞர்களா யிருக்கவேண்டும். வசன சாதுரியமாயும் மாதுரியமாயும் மிருதுபாக்ஷிதமாயும் சாரசங்கிரகமாயும் சுந்தரத்தண்ணி நியாயங்களை எடுத்துக் காட்டினபடியால் நாம் உண்மையைக் கண்டு கொள்வது அதிசுலபமாயிருந்தது. இப்படிப்பட்ட நியாயவாதினி உங்களுக்குக் கிடைத்தது உங்களுடைய அதிர்ஷ்ட விசேஷந்தான். ஐரோப்பாவிற் கூடச் சுந்தரத்தண்ணியைப் போல் ஆயிரத்தில் ஒரு ஸ்திரீ அகப்படுவது அருமை. சுந்தரத்தண்ணியைத் தாரமாகப் பெற்ற புருஷன் புருஷனே யல்லாமல் மற்ற ஆண்மக்களெல்லாரும் வீண் மக்கள்தான். அழகும் துக்கமும் உருவெடுத்து வந்தது போல உங்களுடைய ஸ்திரீகள் குழந்தைகள் சகிதமாய் நம்மிடத்தில் வந்து அபயப் பிரதானங் கேட்டதும், அவர்கள் மத்தியில் சுந்தரத்தண்ணி எழுந்து நின்று கொண்டு நியாய வாதஞ் செய்ததும் நம்முடைய புத்தியிலும் அப்போது கூட இருந்தவர்களுடைய புத்தியிலும் நன்றாய்ப் பதிந்து போயிருக்கிறது. அந்தப் பிரகாரம் ஒரு படம் எழுதும்படி உத்தரவு செய்திருக்கிறோம். அது முடிந்தவுடனே உங்களுக்குஞ் சில படங்கள் கொடுக்கப்படும்” என்றார். பிறகு அவர் தேவராஜப் பிள்ளையை நோக்கி “உம்முடைய புத்திரன் கலியாணத்தை இனி நீர்த் தாழ்க்காமல் உடனே நிறைவேற்ற வேண்டிய கிருஷி செய்யலாம்” என்று உத்தரவு கொடுத்துவிட்டுச் சென்னை நகரத்துக்குப் போய்விட்டார்.
கவர்னர் போன பின்பு விடுதலையான எல்லாப் பிரபுக்களும், அவர்களுடைய குடும்பங்களும், ஆதியூரிலும் சுற்றுக் கிராமங்களில் வசிக்கிறவர்களும், சமுத்திரம் கரைபுரண்டு வருவதுபோற் கூட்டங் கூட்டமாய்த் தேவராஜப் பிள்ளை வீட்டுக்கு வந்து சந்தோஷம் கொண்டாடினார்கள். அவர்களுடைய கொண்டாட்டமே ஒரு பெரிய திருவிழாவாகவும், அந்தத் திருவிழாவுக்குத் தேவராஜப் பிள்ளை கிருகமே ஆலயமாகவும், அந்த ஆலயத்துக்கு என் தாயாரே தெய்வமாகவும் இருந்தாற்போலச் சகலரும் என் தாயாரை வாழ்த்தி வணங்கினார்கள்; அந்நிய புருஷர்களுக்கு என் தாயாருடைய தரிசனங் கிடைக்காமையினால் அவர்கள் எல்லாரும் என்னையும் என் தகப்பனாரையும் வைத்து எங்களை அபரிமிதமாகப் புகழ்ந்தார்கள். தேவராஜப் பிள்ளையும் மற்றவர்களும் செய்த ஸ்தோத்திரங்களினால் என் தாயாருக்குச் சலிப்புஞ் சங்கோசமும் உண்டாகி தேவராஜப் பிள்ளையைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:—
“ஐயா! நமக்கு இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சகலமும் கடவுளது செயலேயன்றி நம்முடைய செயல் ஒன்றுமில்லை. மேகத்திலிருந்து விழுகிற மழைத்துளிகள் இத்தனையென்றும் பூமியிலும் ஆகாயத்திலும் இருக்கிற அணுக்கள் இத்தனை யென்றும் அவர் கணக்கு வைத்திருக்கிறார்; அவருக்குச் சித்தமானால் அணுவை மலையாக்குவார்; மலையை அணுவாக்குவார்; அவருடைய கிருபா கடாக்ஷம் இல்லாமல் நமக்கு யாதொரு அனுகூலம் உண்டாகக் கூடுமா? நானும் மற்ற ஸ்திரீகளும் கடவுள் கொடுத்த வாக்கைக் கொண்டும், அவர் கொடுத்த புத்தியைக் கொண்டும் ஏதோ சில முயற்சிகள் செய்தோம். உங்கள் பக்ஷத்தில் நியாயம் இல்லாமலும் தெய்வானுக்கிரகம் இல்லாமலும் இருக்கிற பக்ஷத்தில் நமக்கு ஜெயமுண்டாகுமா? ஆகையால் கடவுளே ஸ்தோத்திரத்துக்குப் பாத்திரராயிருக்கிறார். அந்த ஸ்தோத்திரத்தை நான் பெற்றுக்கொண்டால் கடவுளுக்குரிய ஸ்தோத்திரத்தை நான் கவர்ந்து கொண்டது போல் ஆகுமல்லவா? அன்றியும் எனக்குப் பலரும் சொல்லுகிற புகழ்ச்சியானது என்னிடத்தில் ஆணவத்தையும் இறுமாப்பையும் ஆத்ம ஸ்தௌத்தியத்தையும் விளைவிக்குமென்று பயப்படுகிறேன். ஆகையால் எனக்குப் பிதா ஸ்தானமாகிய நீங்கள் கிருபை கூர்ந்து இனி என்னை ஒருவரும் புகழாதபடி செய்ய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றார்கள். உடனே தேவராஜப் பிள்ளை என் தாயாரை நோக்கி, அம்மா! நீங்கள் சொல்லுகிறபடி எல்லாங் கடவுள் செயல் தான். அவர் அசையாமல் அணுவும் அசையாதென்பது நிச்சயமே. ஆனால் கடவுள் அநேக நன்மைகளை மனுஷர்களைக் கொண்டு செய்விக்கிறபடியால் அவர்களுக்கும் நன்றியறிந்த ஸ்தோத்திரம் தங்களுக்கு அப்பிரியமா யிருக்கிற படியால், இனி மேல் எங்களுடைய நன்றியறிதலை வாயினால் வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளே வைத்துக் கொள்ளுவோம் என்றார். அவர் என்ன சொல்லியும் இதர ஜனங்கள் கேளாமல் அநேக நாள் அளவும் அவர் வீட்டுக்கு வருகிறதும் என் தாயாரைப் பரோக்ஷமாயும் அபரோக்ஷமாயும் வாழ்த்துகிறதுமே மணியமா யிருந்தார்கள்.
கனகசபையின் கலியாண விஷயத்தில் நேரிட்ட சகல விக்கினங்களும் நிவாரணம் ஆகிவிட்டதால், அந்தக் கலியாணத்துக்கு வேண்டிய கிருஷிகளெல்லாஞ் செய்து அதுவும் நிறைவேறிற்று. எப்படியெனில் ஊர் முழுதும் மகர தோரணங்கள் கட்டி, வாழை கமுகுகள் நாட்டிப் பந்தல் அலங்கரித்து, மணமகனையும், மணமகளையும் சுகந்த பனி நீரால் திருமஞ்சனம் ஆட்டி, திவ்விய வஸ்திராபரணங்கள் பூட்டி, ஸ்வர்ண மயமாயும் நவரத்தின கஜிதமாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண மண்டபத்தில், கோடி சூரியர்கள் தீபக் கோடிகள் பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல் நானாபேத மங்கல வாத்தியங்கள் முழங்க, மயிற்கூட்டங்கள் போல் நாட்டியப் பெண்கள் நடனஞ்செய்ய, குயிற்கூட்டங்கள் போற் பாடினிகள் சுபசோபனம் பாட, கோதானம், பூதானம் முதலிய மாதானங்களுடன் கனகசபையின் கலியாணம் நடந்தேறியது. நாங்கள் செய்ய வேண்டிய சீர் வரிசைக ளெல்லாம் ஏராளமாகச் செய்தோம்.
தேவராஜப் பிள்ளை கிருகத்தில் கனகசபையின் கலியாணத்துடன் இன்னும் மூன்று கலியாணங்கள் நடந்தன. அந்த நாலு கலியாணங்களும் ஒரே முகூர்த்தத்தில் நடந்தபடியால் புரோகிதப் பிராமணர் நாலு மங்கிலியங்களையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாய் எடுத்து அபிமந்திரித்து ஆசீர்வதித்து மாப்பிள்ளைகள் கையில் கொடுக்க அவர்கள் வாங்கிப் பெண்கள் கழுத்திலே கட்டினார்கள். இந்தப் பிரகாரம் கனகசபை உள்பட மூன்று மாப்பிள்ளைகள் மங்கிலியஞ் சூட்டினார்கள். ஒரு மாப்பிள்ளையினுடைய மங்கலியத்தை மடியிலே வைத்துக்கொண்டு மறந்துபோய் விட்டதால் அந்த மாப்பிள்ளை தாலி கட்டவில்லை. அதை அந்த மாப்பிள்ளையாவது பெண்ணாவது மற்றவர்களாவது கவனிக்கவில்லை. இரா முகூர்த்தம் ஆனதால் எல்லாக் காரியங்களுஞ் சரியாய் நடந்திருக்குமென்று நினைத்துக் கொண்டார்கள். அன்றைக்கு நடக்க வேண்டிய கலியாணச் சடங்குகளெல்லாம் முடிந்து புரோகிதர் வீட்டுக்குப் போனபிறகு ஒரு மங்கலியம் தன்னுடைய மடியிலிருப்பது அவருக்குத் தெரிந்தது. உடனே திடுக்கிட்டு “ஐயையோ! இந்த விஷயம் விடிந்த உடனே கலியாணக்காரர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்களே! நான் என்ன செய்வேன்!” என்று அவர் ஆலோசித்துக் கடைசியாய்க் கலியாண வீட்டுக்குப் போய் தாமும் படுத்திருந்த நடுச்சாமத்தில் எல்லாரும் உறங்குகின்ற சமயத்தில் அந்தத் தாலியைப் பெண் கழுத்தில் கட்டிவிடுகிறதென்று நிர்த்தாரணஞ் செய்துகொண்டார். அவர் வீட்டில் இராப்போஜனஞ் செய்தபிறகு புறப்பட்டு முகூர்த்த வீட்டுக்குப் போய்த் தாமும் ஒரு பக்கத்திலே போய்ப் படுத்துக்கொண்டார். அவர் அர்த்த சாமத்தில் நிசப்தமாக எழுந்து கலியாணப்பெண் படுத்துத் தூங்குகிற அறைக்குள் நுழைந்து யாருடைய கழுத்தில் தாலியில்லாமல் வெறுங் கழுத்தாயிருக்கிறதென்று நிச்சயிக்கும் பொருட்டு எல்லாப் பெண்களுடைய கழுத்துக்களையும் ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்களுடனே கூட விதந்துவாய்ப் போன ஒரு பெண்ணும் படுத்துத் தூங்கினாள். அவள் கழுத்தில் தாலியில்லாமலிருந்ததால் அவள் தான் அந்தக் கலியாணப் பெண்ணென்று புரோகிதர் நிச்சயித்துக் கொண்டு அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அமங்கலையைச் சுமங்கலியாக்கிவிட்டார். விடிந்த உடனே விதந்து கழுத்தில் தாலியிருப்பதையும், கலியாணப் பெண் கழுத்துத் தாலியில்லாமல் வெறுமையாயிருப்பதையும் எல்லாரும் பார்த்து ஆச்சரியம் அடைந்து, இது வெளியானால் வெட்கக்கேடு என்று நினைத்துச் சில பெண்கள் அந்த விதந்து கழுத்திலிருந்த தாலியை அவிழ்த்து மணப்பெண் கழுத்திலே கட்டிவிட்டார்கள். புரோகிதர் செய்த மாறுபாட்டை அவர் என்னிடத்தில் ஒப்புக்கொண்டபடியால் அந்த ரகசியம் எனக்கு மட்டுந் தெரியும்; வேறொருவருக்கும் தெரியாது. இந்த விஷயத்தில் எனக்கு இரண்டு சாஸ்திர சங்கைகள் இருக்கின்றன. முதலாவது சாஸ்திரப்படிக்கும் தேசாசாரப் படிக்கும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டவேண்டியது அநிவாரியமானபடியால் அந்தப்படி தாலி கட்டப்படாத மேற்படி கலியாணம் செல்லுமா? செல்லாதா? அது செல்லாமலிருக்கிற பட்சத்தில் அநேக புத்திர பௌத்திரர்களைப் பெற்றுக்கொண்டு இப்போது க்ஷேமமாய் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த ஸ்திரீயையும் புருஷனையும் அவர்களுடைய சந்ததிகளையும் இனி மேல் என்ன செய்கிறது? இரண்டாவது அந்தப் புரோகிதர் விதந்து கழுத்தில் தாலி கட்டினபடியால் அது பிரம சமாஜத்தார் பிரசங்கித்து வருகிற புநர் விவாகம் ஆகுமா? இந்தக் கேள்விகளுக்குத் தர்மசாஸ்திரப் பண்டிதர்கள் தக்க விடை கூறுவார்களென்று நம்புகிறேன்.
கனகசபையின் சுயம்வரம் முடிந்து சில நாள் சென்ற பின்பு என் தந்தையாரும் மாமனாரும் ஊருக்குப் போக உத்தரவு கேட்டார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அவர்களைப் பார்த்து ஐயா! நீங்கள் இங்கே இருந்தது எங்களுக்குப் பெரிய அரணுங் கவசமும் போல் இருந்தது. உங்களுடைய பிரிவை நினைக்கும்போது எனக்கு மனசு பகீரென்கிறது. அந்த விசாரணைக் கர்த்தர்கள் அநியாயத் தீர்மானஞ் செய்த காலத்தில் நீங்களும் சுந்தரத்தண்ணியாரும் இவ்விடத்தில் இல்லாமலிருந்தால் எங்களுடைய கதி எப்படி முடிந்திருக்கும்? நீங்கள் போன பிற்பாடு நாங்கள் காவல் இல்லாத நகரம் போலவும் இறகில்லாத பக்ஷிகள் போலவும் மனம் வருந்துவோம் என்றார். உடனே என் தகப்பனார் அவரை நோக்கி, இனி மேல் கடவுள் உங்களுக்கு ஒரு ஆபத்தும் வர ஒட்டார். நாங்கள் எங்கள் ஊரை விட்டுவந்து வெகுநாள் ஆகிறபடியால் தாங்கள் கிருபை செய்து உத்தரவு கொடுக்க வேண்டும் என்றார். உடனே கனகசபை எழுந்து என் தகப்பனார் பாதத்தில் விழுந்து ஐயா! நீங்கள் இங்கே விஜயம் செய்த பிற்பாடு நான் இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி போல எவ்வளவோ மனமகிழ்ச்சியா யிருந்தேன்? இப்போது நீங்கள் எல்லாரும் ஒருமிக்கப் போய் விட்டால் நான் எப்படிச் சகிப்பேன்? அண்ணனும் அண்ணியாவது இன்னுஞ் சில நாள் இவ்விடத்தில் இருக்கும்படி உத்தரவு செய்ய வேண்டும். ஒரு மாசத்துக்குள் நாங்கள் எல்லாருஞ் சத்தியபுரிக்கு வந்து, “உங்களைக் கண்டு கொள்ளுகிறோம்” என்றான். தேவராஜப் பிள்ளையும் அந்தப்படி வேண்டிக்கொண்டபடியால் அவர்களுடைய பிரார்த்தனையை நிராகரிக்க மாட்டாமல், நானும் ஞானாம்பாளும் இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஆதியூரில் இருக்கும்படி நிரம்மியமாக உத்தரவு கொடுத்துவிட்டு, என் தாய் தகப்பனார் மாமனார் மாமியார் முதலானவர்கள் சத்தியபுரிக்குப் போய் விட்டார்கள்.