பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 34
34-ஆம் அதிகாரம்
வேட்டை பார்க்கப் போய் வில்லங்கத்தில்
மாட்டிக் கொண்டது—அநீத வழக்குகள்
ஆதியூருக்கு வடக்கே இரு காத வழி தூரத்துக்கு அப்பால் எல்லை காணக்கூடாத விஸ்தீரணமான காடுகளும் மலைகளும் இருந்தன. அவைகளில் யானை, புலி, கரடி, முதலிய துஷ்ட மிருகங்கள் பெருகி அடுத்த கிராமங்களிலிருக்கிற ஜனங்களுக்கும் ஆடு, மாடு முதலியவைகளுக்கும் சேதத்தை உண்டுபண்ணினபடியால், அந்த மிருகங்களை நாசஞ் செய்யும்படி வேட்டைக்காரர்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டுமென்று, பல கிராமத்தார் வந்து தேவராஜப் பிள்ளையிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். உடனே அவர் வேட்டைக்காரர்களை அழைப்பித்து மிருக வேட்டையாடும்படி உத்தரவு கொடுத்தார். நானும் கனகசபையும் வேட்டை பார்க்க விரும்பினமையால் தேவராஜப் பிள்ளை அவருடைய பெரிய பட்டத்து யானையைச் சிங்காரித்து வேட்டையாடுகிற கானகத்திலே கொண்டு போய்ச் சித்தமாய் வைத்திருக்கும்படி உத்தரவு செய்தார். நானும் கனகசபையும் குதிரைகளின் மேலேறிக்கொண்டு கானகத்துக்குப் போனோம். என்னுடைய குதிரை யானை நின்ற இடத்துக்கு முந்திப் போய்விட்டதால் நான் குதிரையினின்று யானைமேல் ஏறி, அம்பாரியில் உட்கார்ந்துகொண்டேன். யானைப்பாகன் கனகசபையைக் காணாமையினால் வழியைப் பார்த்துக்கொண்டு யானைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். வேடர்களால் கலைக்கப்பட்டு ஒரு பெரும்புதரில் பதுங்கிக் கொண்டிருந்த ஒரு புலியானது அந்தப் பாகன் மேலே பாய்ந்து அவனைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. உடனே நான் என் கையிலிருந்த துப்பாக்கியிற் குண்டு போட்டுக் கெட்டித்துப் புலியின் மேலே பிரயோகித்தேன். அந்தக் குண்டுகளையும் புலி லக்ஷியஞ் செய்யாமல், பாகனைத் தூக்கிக்கொண்டு ஓடிற்று. தன் முதுகின் மேலே வெடிச்சத்தங் கேட்டவுடனே யானை வீறிட்டுக் கொண்டு அந்தப் புலியைத் தொடர்ந்து சென்றது. புலி வெகு தூரம் வரையில் ஓடி, யானை நுழையக்கூடாத ஒரு மலைக்குள்ளாக நுழைந்து விட்டது. ஒரு பர்வதம் மலையருவிகளுடன் நடந்து போவது போல அந்த மத யானை மதஜலங்களை ஒழுக விட்டுக் கொண்டு குறுக்கே இருக்கிற மரங்கள், செடிகளை முறித்துத் தள்ளி, இடி முழக்கம் போல சப்தித்துக் கொண்டு கன வேகத்துடன் கானகத்துக்குள்ளாக நடந்து போவதைப் பார்த்த மற்ற யானைகள், புலி, கரடி முதலியவை அஞ்சி நடுநடுங்கி அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கிக்கொண்டன. இவ்வகையாக அந்த யானை பல நாள் வரைக்கும் என்னைச் சுமந்துகொண்டு அநேக கான்யாறு மலைகளெல்லாந் தாண்டி, வட திசையை நோக்கி ஓடிற்று. அதை வசப்படுத்தித் திருப்ப நான் செய்த பிரயத்தனங்களெல்லாம் வியர்த்தமாய்ப் போய் விட்டன. நான் புலி வாயில் அகப்பட்ட மான் போலவும், பூனை வாயில் அகப்பட்ட கிளி போலவும், யமன் கையில் அகப்பட்ட உயிர் போலவுந் தத்தளித்துத் தடுமாறித் தயங்கினேன். எனக்காகவுங் கனக சபைக்காகவும் பல பாத்திரங்களில் அநேக வகையான பக்ஷணங்களும், பலகாரங்களும், ஜலமும் அம்பாரிக்குள் வைக்கப் பட்டிருந்தாலும் நான் மனக்கலக்கத்தினால் மூன்று நாள் வரைக்கும் ஆகாரத்தை நினைக்கவேயில்லை. பிறகு நான் அந்தப் பக்ஷணத்தையும் ஜலத்தையும் அருந்தி ஒருவாறு பசி தீர்த்துக் கொண்டேன். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது அந்த ஸ்திதியில் தானும் ஒரு ஆகாரத்தை அபேக்ஷித்தால் எப்படியோ அப்படிப்போல் அந்த மத யானையிடத்தில் அகப்பட்டுக் கொண்டு பரிதபிக்கிற நானும் ஆகாரஞ் செய்தேன்; அந்த யானை ஒரு இடத்திலும் நில்லாமல் அல்லும் பகலுமாக அநேக நாள் ஓடின பிறகு, ஒரு மலையருகில் வந்து சேர்ந்தது. அந்த மலைச் சாரலில் எண்ணிறந்த யானைகள் கூட்டங் கூட்டமாய்ச் சஞ்சரித்துக்கொண்டிருந்தன. அந்த யானைகளில் ஒன்றாவது இந்த யானையைப் போலப் பெருங் காத்திரமுள்ளதா யிருக்கவில்லை. மாமிச பர்வதம் போலவும், இடி முழக்கத்துடன் மேகங் கர்ச்சித்துக்கொண்டு வருவது போலவும் இந்த யானை ஓடி வருவதைக் கண்ட மற்ற யானைகள் கர்ப்பங் கலங்கிக் கிடு கிடாய் மானமாய் அங்குமிங்கும் ஓடிப் போய்விட்டன. இந்த யானை எங்கும் நில்லாமல் ஒரே ஒட்டமாய் அந்த மலைச் சார்பை நாடி வந்ததை யோசிக்குமிடத்தில் ஆதியில் இந்த இடம் அந்த யானை வசித்த இடமாயிருக்கலாமென்று தோன்றிற்று. யானை மலையோரத்தில் சென்று தாண்டி தாண்டித் தன் மேலிருந்த அம்பாரியை மலையுடன் சேர்த்து மோதிற்று. உடனே அந்த அம்பாரி சுக்குசுக்காக உடைந்து அதிலிருந்து நான் வெளிப்பட்டு மலைமேலே தொத்திக் கொண்டேன். நான் அம்பாரியிற் கழற்றி வைத்திருந்த என் தலைமுண்டாசு சட்டை முதலியவைகள் அந்த மலையில் எனக்கு எட்டாத இடத்தில் மாட்டிக் கொண்டன. பிறகு அந்த யானை என் கண்ணுக்கு மறைவாய்ப் போய்விட்டதால் அதன் செய்தி யாதொன்றும் எனக்குத் தெரியாது.
யானைகளுடைய பயத்தினால் நான் கீழே இறங்கக் கூடாமலும், மேலே போவதற்கு மார்க்கம் இல்லாமலும் திரிசங்கு சுவர்க்கம் போலே நான் அந்தரத்தில் அகப்பட்டுக்கொண்டேன். அந்த மலை செங்குத்தாயிராமல், சாய்வாகவும் கரடு முரடாகவும் இருந்தபடியால், நான் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஆரம்பித்தேன். நான் போகிற வழியிலுள்ள மரங்களில் என் பெயரை ஒரு ஆணியினால் வரைந்துகொண்டு போனேன். நான் மலை விருக்ஷங்களின் கனிகளை யுண்டு, பசி தீர்த்துக் கொண்டு, மலை மேல் ஏற இரண்டு நாட்கள் சென்றன. நான் மலை முகட்டிற் சேர்ந்தவுடனே அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு வழியிருக்கிறதோ வென்று ஆராய்ந்தேன். மலைக்கு வடபுறத்தில் மனுஷர்கள் ஏறும்படியாகவும் இறங்கும்படியாகவும் படிகள் வெட்டப் பட்டிருந்தன. அவைகளைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோஷம் உண்டாகி அந்தப் படிகளின் வழியாக இறங்க ஆரம்பித்தேன். நான் ஒருநாட் பகலும் இரவும் மெள்ள மெள்ள இறங்கி மறுநாள் காலையில் அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன். அந்த மலை எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரமான மதிளும் நாக லோகம் வரையில் செல்லாநின்ற அகழியும் உடைய ஒரு பெரிய நகரம் அந்த மலையடிவாரத்திலிருந்தது. நான் கோட்டை வாசலைக் கடந்து தெரு வழியாய்ப் போகும்போது ஒரு சக்கிலியன் இரண்டு ஜோடுகளைக் கையில் வைத்துக்கொண்டு விலை கூறிக்கொண்டு எதிரே வந்தான். அப்போது வெயில் அதிகரித்து பூமியில் கால் வைக்கக் கூடாமலிருந்தபடியால் அந்த ஜோடுகளை வாங்கி என் காலில் மாட்டிப் பார்த்தேன். அவைகள் என் காலுக்குச் சரியாயிருந்தபடியால் நான் அந்தச் சக்கிலியனைப் பார்த்து உன்னை நான் சந்தோஷப் படுத்துகிறேன். இந்த ஜோடுகளை விலைக்குக் கொடு என்றேன். அவன் நல்லதென்று சம்மதித்தான். அந்த ஜோடுகள் அரை வராகன் பெறுமானதால் அந்தத் தொகையைச் சக்கிலியன் கையில் கொடுத்தேன். அவன் எனக்குச் சந்தோஷம் வரவில்லை என்றான். நான் மறுபடியும் கால் வராகன் கொடுத்தேன். அவன் அதையும் வாங்கிக் கொண்டு சந்தோஷம் வரவில்லை என்றான். நான் பின்னும் சில தொகை கொடுத்தேன். அவன் நான் கொடுப்பதையெல்லாம் வாங்கிக்கொண்டு “சந்தோஷம் இல்லை! சந்தோஷம் இல்லை!“ என்றான். நான் அவனைப் பார்த்து “உன்னுடைய ஜோடு எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடு” என்று கேட்டேன். அவன் உடனே என்னைப் பிடித்துக்கொண்டு “என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட நீ அப்படிச் செய்யத் தவறிப்போய் விட்டதால் உன்னை நான் சும்மா விடுவேனா? என்னுடைய ஜோட்டை நீ காலில் மாட்டிப் பார்த்தபிறகு அவைகளை நீ கொடுத்தால் நான் வாங்குவேனா? நியாய சபைக்குப் போவோம் வா? என்று என்னைப் பற்றி இழுத்துக்கொண்டு போனான். அவன் கையைத் திமிறிக்கொண்டு நான் தப்பித்துக் கொள்வது எளிதாயிருந்தாலும் தன்னூருக்கு யானை அயலூருக்குப் பூனை என்பது போல் நான் என்னுடைய ஸ்வரூபத்தைக் காட்டாமல் அடக்கிக்கொண்டு போனேன்.
போகும்போது சக்கிலியனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு நிழலுக்காகச் சற்று நேரம் ஒரு திண்ணையில் உட்கார்ந்தேன். அந்தத் திண்ணையிலே சிலர் சூது விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து பந்தயம் என்ன? என்று கேட்டேன். அவர்கள் சும்மா என்றார்கள். நான் பந்தயமில்லையென்று நினைத்து அவர்களுடன் கூடி ஒரு ஆட்டம் ஆடித் தோற்றுப்போனேன். சக்கிலியன் எனக்கு உத்தரவு கொடுத்த நேரங் கடந்துபோய் விட்டதால் நான் அவனுடன் போவதற்காகத் திண்ணையை விட்டு எழுந்தேன். உடனே அந்தச் சூதாடிகள் சும்மாவைக் கொடு என்று என் மடியைப் பிடித்துக்கொண்டார்கள். நான் ஒன்றும் தோன்றாமல் மேலுங் கீழுமாக விழித்தேன். அவர்கள் என்னைப் பார்த்து நீ பந்தயம் என்னவென்று எங்களைக் கேட்டபோது நாங்கள் சும்மா என்றோம். அதற்கு நீ சம்மதித்துத் தானே எங்களுடன் விளையாடினாய். நீ தோற்றுப் போனதால் நீ ஒப்புக்கொண்டபடி சும்மாவைக் கொடுக்க வேண்டும் என்றார்கள். நான் சும்மாவென்பது யாது? என்றேன். உடனே நியாய சபைக்கு வா என்று அவர்கள் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தார்கள்.நாங்கள் போகும்போது ஒற்றைக்கண் குருடன் ஒருவன் எங்களுக்கு எதிரே வந்தான். அவன் என்னைக் கண்டவுடனே ஓடி வந்து அடா! திருடா! நீ போன வருஷத்தில் திருநாளுக்குப் போவதற்காக உன்னுடைய குருட்டுக் கண்ணை எனக்குக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக்கொண்டு போனாயே! கெடுத் தப்பி இத்தனை நாளாகியும் ஏன் என் கண்ணைக் கொடுக்கவில்லை? என்று அவன் ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக் கொண்டான்.
பிறகு ஒற்றைக் கால் நொண்டியான ஒருவன் வந்து என்னைப் பார்த்து என்னுடைய நல்ல காலை இரவல் வாங்கிக்கொண்டு நொண்டிக்காலைக் கொடுத்துவிட்டுப் போன நீ இந்நாள் வரையில் அகப்படாமல் மறைந்திருந்தாயே! நியாய சபைக்கு வா என்று அவனும் என் கையைப் பற்றிக்கொண்டான்.
நாங்கள் போகிற மார்க்கத்தில் தேசாந்திரிகளுக்குச் சமையல் செய்து விற்கிற பாகசாலை ஒன்று இருந்தது. சமையல் செய்கிற இடத்திலிருந்து கம கமவென்று பரிமள வாசனை வந்தபடியால், நான் சற்றுநேரம் சன்னலுக்கு நேரே நின்று அந்த வாசனையை மூக்கினால் இழுத்தேன். உடனே பாகசாலைக்காரன் ஓடி வந்து என்னைப் பார்த்து பாகஞ் செய்யப்பட்ட பதார்த்தங்களின் வாசனையை நீ மூக்கினால் கிரகித்துச் சாப்பிட்டபடியால், அந்தப் பதார்த்தங்களுக்கு நீ விலை கொடுக்கவேண்டும் என்று அவனும் பிடித்துக்கொண்டான்.
நான் மறுபடியும் செல்லும்பொழுது என்னுடைய நிழல் வழியில் நின்றுகொண்டிருந்த ஒரு தாசியின் மேலே பட்ட உடனே, அவள் ஓடிவந்து நீ என்னை ஆலிங்கனம் செய்தபடியால் அந்த ஆலிங்கனத்துக்காக ஆயிரம் வராகன் கொடுக்கவேண்டும் அவளும் என்னைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டாள்.விலங்கை விட்டுத் தொழுவத்தில் மாட்டிக்கொண்டதுபோல், நான் மத யானைக்குத் தப்பிப் பிழைத்து, இந்தக் கொடியர்களிடத்தில் அகப்பட்டுக்கொண்டு பட்ட பாடுகள் ஜன்ம ஜன்மத்துக்குப் போதும். என்னுடைய கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நான் பல ஆபரணங்களைத் தரித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆபரணங்களை இச்சித்தே அவர்கள் என்னை அநியாயஞ் செய்ததாக எனக்கு ஸ்பஷ்டமாய் விளங்கிற்று. அந்த அநியாயக்காரர்களுக்கு நகைகளைக் கொடுத்துத் தயவு சம்பாதிப்பதைப் பார்க்கிலும் நியாயாதிபதிகள் செய்யுந் தீர்மானத்துக்கு உட்படுவது நலமென்று நினைத்து நியாயசபைக்குப் போனேன். நாங்கள் போவதற்கு முந்தி, நியாயசபை கலைந்துபோய்விட்டதால் அன்றைக்கு விசாரணை நடக்கவில்லை. அந்தத் துஷ்டர்கள் என்னைக் காவல் கிடங்கில் ஒப்புவிப்பதற்காகக் கொண்டு போனார்கள். என்னுடைய நகைகளை நானே ஸ்வேச்சையாய்க் கொடுத்து விடுவேனென்று அவர்கள் எதிர்பார்த்தும் நான் கொடுக்கவில்லை. அவர்களும் விடாத கண்டர்கள்; நானுங் கொடாத கண்டனாதலால் அவர்கள் என்னை வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். எப்படியென்றால் மாலைக்காலம் வந்து இருட்டிய உடனே அவர்களுள் ஒருவன் என் பின்னே வந்து என் கண்களைப் பொத்திக்கொண்டான். இருவர் என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் என்மேலிருந்த ஆபரணங்களைக் கழற்றி ஆளுக்கொரு ஆபரணமாகத் தரித்துக்கொண்டார்கள். உடனே நான் கூ! கூ! கொள்ளை யடிக்கிறார்கள் என்று கூவினேன். அந்தச் சப்தங் கேட்டுக் காவற்சேவகர்கள் வந்து வளைத்துக்கொண்டு நடந்த சங்கதியை விசாரித்தார்கள். நான் என்னுடைய ஆபரணங்களை அந்தப் படுபாவிகள் கழற்றிக் கொண்டார்கள் என்று முறையிட்டேன். அவர்கள் என் சொல்லை மறுத்து “அந்த ஆபரணங்கள் தங்களுக்குச் சொந்தம்” என்று சாதித்தார்கள். அந்தக் காவல் சேவகர்கள் என்னைப் பார்த்து அந்த நகைகள் உனக்குச் சொந்தமல்லவென்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமல்லவென்று நீ சொல்லுகிறாய். ஆகையால் நீங்கள் இரு தரத்தாரும் அந்த நகைகளுக்குச் சுதந்தரவாளிகள் அல்லவென்பதற்கு உங்களுடைய வாய்ப்பிறப்பே போதுமானதாயிருக்கிறது. நாதன் இல்லாச் சொத்துக்கு நாங்கள் பாத்தியஸ்தர்களானதால், அந்த நகைகள் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லி நகைகளைப் பறித்துக்கொண்டார்கள். பிறகு அந்தச் சக்கிலியன் முதலிய துர்வழக்காளிகள் என் மேலே குற்றஞ்சாட்டி என்னைக் காவலில் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அந்தப் பிரகாரம் சேவகர்கள் என்னைப் பிடித்துக் கை விலங்கு கால் விலங்கு மாட்டி திரௌபதியைத் துகிலுரித்தது போல் என்னுடைய வஸ்திரங்களையும் பிடுங்கிக்கொண்டு கௌபீனத்துடன் என்னைக் காவலில் வைத்துக்கொண்டார்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல அந்தக் காவல் சேவகருடைய செய்கையே அப்படியிருக்குமானால் என்னைப் பிடித்துக்கொண்டு வந்த சக்கிலியன் முதலானவர்கள் மேல் குறை சொல்ல எனக்கு வாயுமுண்டா?