பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 39


39-ஆம் அதிகாரம்
உபராஜ நியமனம்—தேச பரிபாலனம்—
உத்தியோகச் சீர்திருத்தம்

நான், அருணோயதமாவதற்கு முன், ஞானாம்பாளைப் பார்த்து ““நீ மகா ராஜாவா யிருப்பதால், உன்னோடு கூட நான் சமான ஸ்கந்தமா யிருப்பதைப் பார்க்கிறவர்கள் விபரீதமா யெண்ணிக் கொள்வார்கள். நான் இன்னானென்று உண்மையைத் தெரிவிப்பதும் கூடாத காரியமாயிருக்கின்றது. நீயும் பொய் சொல்ல மாட்டாய். இந்தச் சங்கடங்களை யெல்லாம் யோசிக்கும் போது, நான் ஒரு இடத்தில் தனிமையி லிருப்பது உத்தமமென்று நினைக்கிறேன்”” என்றேன். அவள் என்னைப் பார்த்து “““மத யானை ஏறியும், திட்டி வாசலில் நுழைவது போல, நமக்கு ராஜபட்டம் கிடைத்தும், நாம் ஒருவருக்குப் பயப்பட வேண்டுமா? உங்களை மேலான இடத்தில் வைத்து, நான் கைகட்டிச் சேவிக்காமல் இந்த ராஜாங்க நிமித்தம் உங்களை எனக்குச் சமானமாக வைத்துக்கொள்ளும்படி நேரிட்டிருப்பது எனக்கு எவ்வளவோ மனஸ்தாபமாயிருக்கிறது. நீங்கள் அதைக்கூட ஜனங்கள் வித்தியாசமாய் நினைப்பார்களென்று சொல்லுகிறீர்கள். ஜனங்கள் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். நான் இனிமேல் உங்களை ஒரு நிமிஷங்கூடப் பிரிகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறேன். நான் இதற்குமுன் உங்களைப் பிரிந்துபட்ட துன்பம் போதாதா? இன்னமும் பிரியவேண்டுமா? நீங்கள் இன்னாரென்று மற்றவர்களுக்கு உண்மையைத் தெரிவிப்பது அசாத்தியமாயிருந்தாலும் நான் பொய்யும் சொல்லாமல் தக்கபடி சொல்லிச் சமாளித்துக் கொள்வேன்““” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “““ஓ மகாராஜாவே! உங்களுடைய கட்டளைப் பிரகாரம் நடக்கச் சித்தமா யிருக்கிறேன்““” என்று சொல்லிச் சிரித்தேன். அவளுடைய சிவந்த வாயைத் திறந்து பல்வரிசை தோன்றும்படியாக அவள் சிரித்தது எப்படி யிருந்ததென்றால், பவளப் பெட்டியைத் திறந்து அதிலிருக்கிற முத்துச் சரங்களை விரித்துக்காட்டினது போலிருந்தது.

அன்றையத் தினம் பட்டாபிஷேகமான மறு நாளானதால், மந்திரி பிரதானி முதலானவர்கள் வந்து, தரிசன மகாலில் ராஜ பேட்டிக்குக் காத்திருப்பதாக, உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். நானும் ஞானாம்பாளும், உயர்ந்த வஸ்திராபணங்களைத் தரித்துக் கொண்டு, தரிசனமாலுக்குப் போய்ச் சித்திராசனத்தில் வீற்றிருந்தோம். நான் ராஜாவோடு கூடச் சமானமா யிருப்பதைப் பார்த்தவர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்து, என் முகத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். உடனே, ஞானாம்பாள் அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்:- “என்னோடு கூட ஆசனத்தி லிருப்பவர் என்னுடைய அத்தை குமாரர். அவரும் நானும் ஒரே இடத்தில் பிறந்து ஒரே இடத்தில் வளர்ந்து ஒரே இடத்தில் கல்வி கற்று ஒரே இடத்தில் வாழ்ந்தோம். எனக்குப் பிராணன் அவர்தான்: அவருக்குப் பிராணன் நான்தான். எனக்கு அவரே பிரியர்: அவரே அன்பர். இளமைப் பருவமுதல் எனக்கு அவரே காவலர்: அவரே துணைவர். என்னை ஒருநாளும் பிரியாதவர், பிரிந்து, வெளிப்பட்டு, வந்துவிட்டதால், அவரைத் தேடிக் கொண்டு வந்த இடத்தில், எனக்குப் பட்டாபிஷேகங் கிடைத்தது. அவருடைய யோக்கியதையை நீங்களும் அறிவீர்கள். பொழுது விடியாதபடி முந்திப் பாடிப் பிறகு பொழுது விடியும்படியாகப் பாடினவர் இவர்தாம்”” என்றாள். இதைக் கேட்டவுடனே மந்திரி பிரதானிகள் எல்லோரும் ““ஆம்! ஆம்! இவர் மகா வரப்பிரசாதி. புண்ணியாத்மா. இவரை அரசராக நியமிக்கவேண்டுமென்பது அநேகருடைய கருத்தாயிருந்தது. இவர் மகாராஜாவுக்குச் சமீபப் பந்துவாயிருந்தது எங்களுக்குப் பரம சந்தோஷம்”” என்றார்கள். உடனே ஞானாம்பாள் அவர்களை நோக்கி “இவரை அரசராகத் தெரிந்துகொள்ள அநேகர் அபேக்ஷித்ததாக நீங்கள் சொல்லுகிறபடியால் இவரை உபராஜாவாக வைத்துக்கொண்டு ராஜ்ஜியபாரஞ் செய்ய வேண்டுமென்பது என்னுடைய ஆசத்தியமாயிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள். உடனே அவர்கள் “இவருடைய மகிமையை நாங்கள் பிரத்தியக்ஷமாக அறிந்திருக்கிறோமாதலால் அவர் உங்களுக்கு உபராஜாவாயிருக்க எங்களுக்குச் சம்மதந்தான். நீங்களிருவரும் அரோகதிகாத்திரராய் நெடுங்காலம் அரசாளும்படி கடவுள் அநுக்கிரகிப்பார்” என்று சொல்லி உத்தரவு பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் போன பிற்பாடு நான் ஞானாம்பாளைப் பார்த்து “உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். நீ நினைத்தபடி நிறைவேற்றிவிட்டாய். நான் இன்னானென்று அவர்களுக்குத் தெரிவித்த விஷயத்தில் நீ ஒரு பொய்யையுங் கலக்காமல் உண்மையையே பேசினாய். பிரியன், அன்பன், காவலன், துணைவன் என்கிற வார்த்தைகளினால் நான் உனக்குப் பர்த்தாவென்று தெரிவித்தாய். ஆனால் அந்த வார்த்தைகளை நீ உபயார்த்தமாக உபயோகித்தபடியால் நான் உனக்குப் பிரியமான நேசன், சிறு பருவமுதல் நான் உனக்குத் துணையாயிருந்தவன், காவலாயிருந்தவனென்று அவர்கள் அர்த்தம் பண்ணியிருப்பார்களே யன்றி நான் உனக்குக் கணவனென்று கிரகித்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாக்குச் சாதுரியமாகப் பேச யாருக்காவது வருமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “நீங்கள் பொழுது விடியாமற் போகவும் பிறகு விடியவுஞ் செய்த சாமர்த்தியமும் என்னுடைய வாய்ச் சாமர்த்தியமும் இரண்டும் சமானந்தான். மனதிலே கபடத்தை வைத்துக்கொண்டு சிலேஷையாக ஒருவரிடத்திற் பேசுவது பொய்தானே. நம்முடைய வார்த்தைக்குப் பிறர் தப்பான அர்த்தஞ் செய்கிறார்களென்று தெரிந்தவுடனே அவர்களைத் திருத்தாமலிருப்பதுங் கரவடம் அல்லவா? ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல நான் தரித்துக் கொண்டிருக்கிற ஆண் வேஷமே முழு மோசமானதால் அதை ஸ்தாபிக்கிறதற்கு இத்தனை பொய்களினுடைய சகாயம் வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தாள்.

மகாராஜாவாகிய ஞானாம்பாளும் உபராஜாவாகிய நானும் சிங்காசனம் ஏறி ராஜ்ஜிய பரிபாலனஞ் செய்யத் தொடங்கினோம். செங்கோல் கோணாமலும் மநுநீதி தவறாமலும் வர்ணாசாரங்கள் பேதிக்காமலும் மாதமும்மாரி பெய்யவும் முப்போகம் விளையவும் ஆறில் ஒரு கடமை வாங்கி அரசாக்ஷி செய்தோம். முந்தின அதிகாரத்தில் விவரித்தபடி, ராஜாக்கள் பிரஜைகளுக்குச் செய்யவேண்டிய அனுகூலங்களையெல்லாம் குறைவறச் செய்தோம். தேவாலயம் தர்மசத்திரம் பாடசாலை வைத்தியசாலை பல தொழிற்சாலை முதலியவைகளிற் பழமையாயிருந்தவைகளையெல்லாம் புதுப்பித்தோம். இல்லாத கட்டடங்களை நூதனமாகக் கட்டுவித்தோம். ஜீரணமாயிருந்தவைகளை ஜீரயோத்தாரணஞ் செய்தோம்.

பழைய ராஜாங்கத்தில் உத்தியோக நியமன விஷயத்தில் நடந்திருந்த அக்கிரமங்களை யெல்லாம் நாங்கள் திருத்திச் சீர்ப்படுத்தினோம். எப்படியென்றால், “அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்” என்கிற பழமொழிப்படி ஒரு வேலை கூடப் பார்ர்க்கச் சக்தியில்லாதவனுக்கு ரிவினியூ வேலை, மாஜிஸ்திரேட்டு வேலை, சிவில் விவகார வேலை முதலிய பல வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பலசரக்குக் கடைக்காரனைப் பயித்தியம் பிடித்ததுபோல், அந்த அதிகாரி ஒரு வேலையையாவது சரியாய்ப் பார்க்காமல் எல்லா வேலைகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு காலம் போக்கினான். நாங்கள் ஒவ்வொரு வேலையையுந் தனியே பிரித்து ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு உத்தியோகஸ்தனைப் பிரத்தியேகமாக நியமித்தோம். இருகாத வழி முக்காத வழி தூரத்துக்கு அப்பால் ஒவ்வொரு கச்சேரியிருந்தபடியால் ஜனங்கள் அவ்வளவு தூரம் போய் நியாயம் பெற்றுக்கொள்வது பிரயாசமா யிருந்தது. நாங்கள் சமீபமான இடங்களில் கச்சேரிகளை ஸ்தாபித்து ஜனக்களுக்குச் சகாயஞ் செய்தோம். உத்தியோக வரிசையில் ஒழுங்கீனமாய்க் கீழ்ப்படியிலிருக்க வேண்டியவர்கள் மேற்படியிலும், மேற்படியிலிருக்க வேண்டியவர்கள் கீழ்ப்படியிலும் வைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் அந்த ஏற்பாட்டைத் தலைகீழாக மாற்றி அவரவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த ஸ்தானங்களில் நியமித்தோம். அதிக வேலையுள்ள உத்தியோகஸ்தர்களுக்குக் குறைந்த சம்பளமும், குறைந்த வேலையுள்ளவர்களுக்கு அதிக சம்பளமும் நிஷ்கரிஷிக்கப்பட்டிருந்தன. நாங்கள் அந்த அக்கிரமத்தையும் திருத்திச் சரிப்படுத்தினோம். சில உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு வேலயுமில்லாமலிருக்க, அவர்களுக்கு வகைதொகை யில்லாமல் ஏராளமாய்ச் சம்பளங்கள் ஏற்றப்பட்டிருந்தன. நாங்கள் அந்த உத்தியோகங்கள் அநாவசியமென்று அடியோடே மர்த்தனஞ் செய்துவிட்டோம்.

ஜனங்களுடைய நன்மைக்கு விரோதமாக உத்தியோகஸ்தர்களுக்கு அபரிமிதமான சம்பளங்களை ஏற்படுத்தி அந்தச் சம்பளங்களைக் கொடுப்பதற்காகவே, நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளைத் தவிரக் காற்றுவரி, மழைவரி, தீபவரி, கால்நடைவரி, மார்க்கவரி, கல்யாணவரி, துக்கவரி, ஜனனவரி, மரணவரி, மலஜலவரி முதலிய அநியாயவரிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். நாங்கள் நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளை வைத்துக்கொண்டு மற்ற வரிகளையெல்லாம் நீக்கிவிட்டோம்.

சில தேசங்களில் வியாஜ்ஜியங்களுக்கு முத்திரைவரி ஏற்பட்டிருப்பது போல விக்கிரமபுரியில் வியாஜ்ஜியங் கொண்டுவருகிற ஒவ்வொருவரும், வியாஜியக் யத் தொகைக்குத் தக்கபடி முந்தி வரி கொடுக்கவேண்டுமென்றும், வரி கொடாதவர்களுடைய வழக்கை அங்கீகரிக்கக் கூடாதென்றும் சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த சட்டம் அக்கிரமமென்று நாங்கள் மாற்றிவிட்டோம். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரீரத்துன்பம் இல்லாமலும் சொத்து நஷ்டமில்லாமலும் ரக்ஷிக்க வேண்டியது ராஜாக்களுடைய பிரதான கடமையாய் இருக்கிறது. அதற்காகவே நிலவரி வீட்டுவரி முதலான வரிகள் வாங்கப்படுகின்றன. அந்தக் காரணத்தைப் பற்றியே சரீரத் துன்பம் களவு முதலிய குற்ற விஷயங்களில் ஒரு வரியும் வாங்காமல் ராஜாவே வாதியாயிருந்து, துன்ப நிவாரணம் செய்கிறான். அப்படியே சில வியவகாரங்களிலும் ராஜாவே வாதியாயிருந்து சொத்து நஷ்டம் அடைந்தவர்களிடத்தில் யாதொரு வரியும் வாங்காமல் அவர்களுக்கு நஷ்டப்பரிகாரம் செய்யவேண்டியது நியாயமா யிருக்கிறது. முன்னமே பொருள் நஷ்டம் அடைந்து வியாஜ்ஜியம் கொண்டுவருகிறவனைப் பார்த்து, “நீ நமக்கு வரியுங் கொடுத்தால்தான் உன் வழக்கை அங்கீகரிப்போம்” என்று சொல்லுவது எவ்வளவு நியாயம்! துன்பப் பட்டவர்களுக்கு யாதொரு செலவும் இல்லாமல் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்யவேண்டியது ராஜாக்களுடைய முக்கியமான கடமை யல்லவா? நியாயபரிபாலனத்துக்கு வரி வாங்குவது துஷ்டர்களுக்கு அநுகூலமாயும் சிஷ்டர்களுக்குப் பிரதிகூலமாயும் முடியுமல்லவா? வியாஜ்ஜியங்களுக்கு வரி வாங்காவிட்டால், துர்வியாஜ்ஜியங்கள் அதிகரிக்குமென்று சிலர் சொல்லுகிறார்கள். ஒருவன் துர்வியாஜ்ஜியம் கொண்டுவந்ததாக ருசுவான பிற்பாடு அவனை மட்டுந் தண்டிப்பது கிரமமே யல்லாமல், துர்வழக்குகள் வருமென்கிற காரணத்துக்காக நியாய வழக்குகளிலும் முந்தியே வரி வாங்குவது அக்கிரமமல்லவா? ஒரு ஊரில் குற்றவாளி இன்னானென்று தெரியாம லிருக்கும் போது, அந்த ஊரில் உள்ளவர்களை யெல்லாம் தண்டித்துவிட்டால் குற்றவாளியும் தண்டனையடைவான் என்கிற எண்ணத்துடன், ஊரில் உள்ளவர்களையெல்லாம் தண்டிப்பது கிரமமாயிருக்குமா? அப்படியே துர்வழக்குக்காரன் இன்னனென்று தெரிவதற்கு முன்னமே, அவனைத் தண்டிப்பதற்காக நியாய வழக்குக்காரர்களிடத்திலும் வரி வாங்குவது நியாயமாயிருக்குமா? நியாயஸ்தலங்களில் நூறு வழக்குகள் வந்தால் தொண்ணூறு வாதி பக்ஷத்திலும், பத்துமட்டும் பிரதிவாதி பக்க்ஷத்திலும் தீர்மானிக்கிறது சர்வத்திர சாதாரணமாயிருக்கிறது. அந்தப் பத்துத் துர்வழக்காளிகள் இன்னாரென்று தெரிவதற்கு முன்னமே அவர்களைத் தண்டிப்பதற்காகத் தொண்ணூறு நியாய வழக்காளிகளையும் தண்டிப்பது முறையா? துர்வழக்குகள் வருகிறதற்கு நியாயாதிபதிகளுடைய அறியாமையும் பக்ஷபாதமும் அபரிசுத்தமுமே முக்கிய காரணமாயிருக்கிறது. நியாயாதிபதிகள் தகுந்த சமர்த்தர்களாயும் சாஸ்திர விற்பன்னர்களாயும் அநுபோகஸ்தர்களாயும் நீதிமான்களாயும் இருப்பார்களானால், அவர்கள் முன்பாகத் துர்வழக்குகள் வருமா? வந்தாலும் ஜெயிக்குமா? உலகத்தில் ஆஸ்திவந்தர்கள் ஏழைகள் என்கிற இரண்டு வகுப்பில் ஆஸ்திவந்தர்கள் எந்த வரியாயிருந்தாலும் கொடுத்துவிட்டு வியாஜ்ஜியம் தொடங்குவார்கள். ஆஸ்திவந்தர்களால் துன்பத்தை யடைந்த ஏழைகள் வரி கொடுக்க நிர்வாகமில்லாமையினால், வியாஜ்ஜியஞ் செய்ய அசக்தர்களாயிருப்பார்கள். ஆகையால் வியாஜ்ஜியவரி பணக்காரர்களுக்கு மட்டுஞ் சாதகமாயும் ஏழைகளுக்குத் துன்பமாயுமிருக்கும். இப்படிப்பட்ட பல காரணங்களால் வியாஜ்ஜியவரியை நீக்கி விட்டோம். ஆனால் துர்வழக்குக்காரர்களைக் கண்டிக்க வேண்டியது அகத்தியமானதால், நியாயாதிபதிகள் பூரண விசாரணை செய்து துர்வழக்கென்று அபிப்பிராயப்பட்டால் அந்த வழக்காளி ராஜாவுக்கு அபராதமும், பிரதிவாதி யினுடைய செலவுகளுங் கொடுக்கும்படி சட்டம் ஏற்படுத்தினோம். அந்தத் துர் வழக்குக்காரன் அப்பீல் செய்யா விட்டாலும், அல்லது அப்பீல் செய்து தோற்றுப் போனாலும், அவனிடத்தில் அந்தத் தொகையை வசூல் செய்கிறதென்று நிபந்தனை செய்தோம்.

இலிகித ரூபமாகப் பிறக்கிற சகல பத்திரங்களையும், ஆதரவுகளையும் பதியும்படி, ஊருக்கு ஒரு உத்தியோகசாலையை உண்டு பண்ணி, தகந்த உத்தியோகஸ்தர்களை நியமித்தோம். அவர்கள் ஒவ்வொரு ஆதரவும் வாஸ்தவமென்றும், உபய வாதிக ளுடைய பூரண சம்மதத்துடன் பிறந்ததா வென்றும், நியாயத்துக்கும் தர்மத்துக்கும் ஒத்திருக்கிறதா வென்றும், பூரணமாய் விசாரித்துத் தெரிந்துகொண்டு புஸ்தகத்திற் பதியும் படிக்கும், அப்படிப் பதிவான ஆதரவுகள் நியாய ஸ்தலத்தா ருடைய தீர்ப்புக்குச் சமான மென்றும், அவைகளைப் பற்றி வேறே வியாஜியஞ் செய்யாமலே நிறைவேற்றலா மென்றும், நிபந்தனை செய்தோம். அதனால் ஜனங்களுக்குச் சந்தோஷம் உண்டாகி எங்களை மேன் மேலும் ஆசீர்வதித்தார்கள். வக்கீல்களுக்கும், எழுத்துக் கூலிக்காரர்களுக்கும், வருமானங் குறைந்து போய் விட்டதால், அவர்கள் எங்களுக்கு அளவிறந்த சாபங்கள் கொடுத்தார்கள். அவர்களுடைய சாபங்களுக்கு ஜனங்களுடைய ஆசீர்வாதங்களை ஈடாகக் கொடுத்துவிட்டு, நாங்கள் நினைத்த காரியங்களை நிர்ப்பய மாக நடத்தினோம். இவிகித சம்பந்தமான வியாஜியங்க ளெல்லாம், மேற் கண்டபடி சுலபமாய்த் தீர்ந்து போய் விட்டபடியால், பாக வழக்குகள், பாத்திய வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாயுடம்படிக்கை பற்றிய வழக்குகள் (Tort) என்கிற நஷ்ட வழக்குகள் முதலியவைகள் மட்டும் நியாயஸ்தலங்களில் செய்யப்பட்டன. அந்த வழக்குகளும் கால தாமத மில்லாமலும், ஜனங்களுக்குத் தொந்தரவும் செலவு மில்லாமலும், சீக்கிரத்திலே தீரும்படிக்கு அநேக விதிகளை ஏற்படுத்தினோம்.

முந்திய ராஜாங்கத்தில் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள், தினந்தோறும் உத்தியோகசாலைக்குப் போகாமல் கார்த்திகைப் பிறை போலவும், வால்நக்ஷத்திரம் போலவும், எப்போதாவது ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போனார்கள். சில நியாயாதிபதிகள் நியாயசபைக்குப் போகிற நேரம் ஒரே தன்மையாயிராமல் ஒரு நாள் காலையிலும் ஒரு நாள் மத்தியானத்திலும் ஒரு நாள் மாலையிலும் ஒரு நாள் அஸ்தமித்தபின்பும் நியாயசபைக்குப் போகிற வழக்கமாயிருந்தபடியால் வியாஜ்ஜியக்காரர்கள் தாங்கள் எந்த நேரத்தில் நியாயஸ்தலத்துக்குப் போகிறதென்றும் தெரியாமல் அவஸ்தைப் பட்டார்கள். நியாயாதிபதி நேற்றைத் தினங்காலையில் வந்தபடியால் இன்றைய தினமும் காலையில் வருவானென்று வழக்காளிகள் போய்க் காத்திருந்தால் நியாயாதிபதி காலையில் வராமல் கட்சிக்காரர்கள் இல்லாத சமயங்களில் வந்து, கூப்பிட்ட போது கட்சிக்காரர்கள் ஆஜராகவில்லை யென்னுங் காரணத்தால் வியாஜ்ஜியங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். கூப்பிட்டபோது ஆஜராகியவர்களுடைய வழக்குகளை விசாரிக்கிறதில்லை. அவர்கள் ஆஜராகாமற்போனால் மட்டும் வழக்குகள் தள்ளப்பட்டன. சில கலெக்டர் தாசில்தார் முதலான அதிகாரிகள் சித்தாதிகளைப் போல இன்றைக்கு ஒரு ஊர் நாளைக்கு ஒரு ஊராகச் சஞ்சரித்து ஒரு ஊரில் மனுக் கொடுத்தவர்களை அதற்குத் தூரமான வேறொரு ஊரிற் கூப்பிட்டு, அவர்கள் காத்திருக்கவில்லை யென்னுங் காரணத்தினால் அவர்களுடைய மனுக்களை நிர்மூலஞ் செய்தார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜ்ஜியங்களை விசாரிக்கும்படியான சிரமத்தை நீக்கிக்கொள்வதற்காக நான்-ஞாயிண்டர் (non joinder) மிஸ்-ஜாயிண்டர் (mis-joinder) முதலிய பல தோஷங்களைச் சொல்லி வழக்குகளைச் சர்வ சங்காரஞ் செய்துவந்தார்கள். சில நியாயாதிபதிகள் பிரியாது முதலிய தஸ்தாவேஜுகளைப் பார்வையிட்டாலும் ஒவ்வொரு வியாஜ்ஜியத்துக்கும் ஆதாரமான சட்ட சாஸ்திரங்களைத் தாங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளாமலும் வக்கீல்களுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கிறதும், வக்கீல்கள் நியாயத்தை எடுத்துக் காட்டவில்லையென்று அவர்கள் மேலே குறை சொல்லி அநியாயத் தீர்ப்புச் செய்கிறதுமா யிருந்தார்கள். சில அதிகாரிகள் அஷ்டாவதானஞ் செய்வதுபோல் அநேக வியாஜ்ஜியங்களை ஒரே காலத்தில் விசாரிக்கத் தொடங்கி ஒன்றையும் முடிக்காமல் திருப்பதி அம்பட்டன் க்ஷவரஞ் செய்ததுபோல் அரையுங் குறையுமாகத் தீர்த்துவந்தார்கள். சில அதிகாரிகள் விசாரணைக் கெடுவை ஒத்தி வைத்துக் காலத்தை நீட்டிவிட்டுக்கொண்டு கக்ஷிக்காரர்களை சிக்ஷித்து வந்தார்கள். சிலர் விசாரணைக் கெடுவை வழக்காளிகளுக்குத் தெரிவிக்காமல் குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர்மிடாவிலே நெறி கட்டினதுபோல், நியாயம் ஒரு பக்ஷமிருக்க வேறொரு பக்ஷத்தில் நியாயாதிபதிகள் இருந்துகொண்டு அதற்குத் ததானுசாரமாகச் சாக்ஷிகளை அதட்டி உருட்டி வாக்குமூலங்கள் வாங்கிக்கொண்டு, எக்கச் சக்கமாய்த் தீர்மானித்து வந்தார்கள். சில நியாயாதிபதிகள் தீர்க்கதரிசிகள் போல, வழக்காளிகளைப் பார்த்த மாத்திரத்தில் இவன் யோக்கியன் அவன் அயோக்கியன் என்று தப்பான எண்ணங்கொண்டு, அதற்குத் தக்கபடி சாதக பாதகஞ் செய்து வந்தார்கள். செப்பிடு வித்தைக்காரர்கள் ஒரு நிமிஷத்தில் செப்பையும் பந்தையும் மாற்றுவதுபோலச் சில நீதியதிபர்கள் ஒருவருடைய அநுபவச் சுதந்திரங்களை ஒரு நிமிஷத்தில் மாற்றி அநியாயஞ் செய்தார்கள். குற்றவிசாரணை செய்வதற்கு முன்னமே ஒவ்வொருவரையும் குற்றவாளியென்று நிச்சயித்து தண்டனை செய்வதிலே முயற்சியாயிருந்த நீதிக்காரர்களும் பலரே. சில நியாயாதிபதிகள் எப்போதும் வாதி பக்ஷத்திலும் சில நியாயாதிபதிகள் எப்போதும் பிரதிவாதி பக்ஷத்திலு மிருந்து நியாயத்தைப் புரட்டினார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜ்ஜியக்காரர்களைக் கண்டவுடனே அக்கினி தேவனுக்கு அபிஷேகஞ் செய்ததுபோல், அவர்கள் மேல் சீறி விழுந்து அசப்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தார்கள். நாங்கள் அந்த அதிகாரிகளுக்கு அபராதம் ஆக்கினைகள் விதித்து அவர்கள் இனிமேல் அநுசரிக்கவேண்டிய நீதி நெறிகளைப் போதித்ததுமன்றி, ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடிக்க அவர்களால் கூடிய பிரயாசம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், எந்த நியாயாதிபதியாவது நியாயத்தைக் கண்டுபிடியாமல் தீர்மானஞ் செய்தால் அவன் உத்தியோகத்துக்கு அநர்கனென்னும் எச்சரிக்கை செய்தோம்.

வியாதி வந்தபிற்பாடு பரிகாரஞ் செய்வதைப் பார்க்கிலும் வியாதி வராமலே தடுக்கப் பிரயாசப்படுவது நன்மையா யிருப்பதுபோலக் குற்றம் நடந்த பிற்பாடு, தண்டிப்பதைப் பார்க்கிலும் குற்றம் நடவாமலே தடுக்கப் போலீசுவீரர்கள் பிரயாசப்பட வேண்டுமென்று உத்தரவு செய்தோம். குற்றவாளியைத் தண்டிக்கிற விஷயத்தில் நீதியும் இரக்கமும் பொருந்தி இருக்க வேண்டுமென்றும், குற்றம் ருசுவாகியவரையில் ஒவ்வொருவனும் மாசற்றவனென்று ஊகிக்க வேண்டுமென்கிற விதியையும், சந்தேகத்தின் பிரயோசனத்தைக் குற்றவாளிக்குக் கொடுக்க வேண்டுமென்கிற விதியையும் அநுசரிக்க வேண்டுமென்றும், தண்டனையான குற்றவாளி அப்பீல் செய்கிற பக்ஷத்தில் அப்பீல் முடிவாகிற வரையில் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் கட்டளை யிட்டோம். குற்றவாளிகளைச் சாட்டை முதலிய கருவிகளால் அடிக்கும்படி விதிக்கப்படுகிற தண்டனையானது மிருகங்களுக்கும் மிருகப்பிராயமான மிலேச்சர்களுக்கும் உரியதே தவிர நாகரிகமடைந்த தேசங்களுக்கு அநுசிதமாகையால் அந்தக் கொடிய தண்டனை எங்களுடைய ராஜ்ஜியத்தில் இல்லாதபடி நீக்கிவிட்டோம். பகுத்தறிவுள்ள சிறு பிள்ளைகள் தண்டிக்கப்படுகிற பக்ஷத்தில் அவர்களை மற்றக் குற்றவாளிகளிடம் சேர்க்காமல் பிரத்தியேகமான இடத்தில் வைத்து அவர்களுக்குரிய தொழில், கல்வி முதலியவைகளைப் பயிற்றும்படி திட்டஞ் செய்தோம். அப்படியே தண்டனை அடைந்த ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமான காராக்கிருகம் ஏற்படுத்தி அவர்களுடைய மானத்தைக் காப்பாற்றினோம்.