பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 45
45-ஆம் அதிகாரம்
இராஜாங்க பரித்தியாகம்—தாய் தந்தையரைச்
சந்தித்தல்—ஆநந்த வல்லியின் மகுடாபிஷேகம்
ஜனங்கள் எல்லாரும் போனபின்பு, ஞானாம்பாள் என்னைப் பார்த்து “அத்தான்! அந்த ஜனங்கள் சொல்வதைப் பார்த்தால் விபரீதமாயிருக்கிறது. அவர்கள் நம்முடைய இஷ்டப்படி அந்தப் பெண்ணுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதித்தது சந்தோஷமான காரியந்தான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு நான் மாலை சூட்டி, ரோம் பட்டணத்தை ஒரு காலத்திலே மூவேந்தர்கள் ஆண்டது போல நீங்களும் நானும் அந்தப் பெண்ணும் ஆகிய மூவருங்கூடி அரசாளவேண்டுமென்பது ஜனங்களுடைய தாற்பரியம் போலக் காணப்படுகிறது. இந்தத் தர்மசங்கடத்துக்கு என்ன செய்கிறது?“ என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “நீ சம்மதித்துத்தானே அந்தப் பெண்ணுக்கு மாலை சூட்ட வேண்டும்? உன்னுடைய சம்மதமில்லாமல் யார் என்ன செய்யக்கூடும்? அந்தப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகஞ் செய்துவிட்டு நாம் ஒருவருக்குந் தெரியாமல் இந்த ஊரை வீட்டுப் புறப்பட்டுக் கம்பி நீட்டிவிட்டால் அப்பால் ஜனங்கள் என்ன செய்வார்கள்? ஆகையால் நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்“ என்று அவளுக்குத் தேறுதல் சொன்னேன்.
அன்றையத் தினம் சாயரக்ஷை வீதிக்கு வீதி பேரிகை முழக்கமும் ஜனங்களுடைய சந்தோஷ ஆரவாரமுங் கேட்டு “அது என்ன சப்தம்?” என்று சாரணர்களை விசாரித்தோம். அவர்கள் எங்களைப் பார்த்து “மகாராஜாவுக்கும் பழைய அரசருடைய புத்திரிக்கும் வருகிற சுக்கிரவாரங் காலையில்' கலியாண முகூர்த்தமும் அன்றையத்தினஞ் சாயங்காலம் அந்த ராஜபுத்திரிக்குப் பட்டாபிஷேகமும் நடப்பதாகவும் அதற்காக எல்லாரும் ஊரை அலங்கரிக்க வேண்டுமென்று முரசு முழக்குகிறார்கள். அதைக் கேட்டு ஜனங்கள் எல்லாரும் ஆநந்த கோஷம் செய்கிறார்கள்” என்றார்கள்.இதைக் கேட்டவுடனே நாங்கள் பிரமித்துச் சிறிது நேரம் சிலை போல அசையாமல் உட்கார்ந்திருந்தோம். அந்தச் சமயத்தில் மந்திரிகள் வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் அவர்களைப் பார்த்து முரசு அறையும்படி யார் உத்தரவு கொடுத்தார்கள்? என்று வினவினாள். மந்திரிகள் மகாராஜாவே! இன்று காலையில் நீங்கள் சொன்ன அபிப்பிராயத்துக்கு விரோதமாக ஒன்றும் நடக்கவில்லை. பட்டாபிஷேகமுங் கலியாணமும் ஒரே தினத்தில் நடக்கவேண்டுமென்பது எல்லாருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது. இந்த விஷயத்தில் எல்லாரும் ஒரு மனமாயும் ஒரே குமுக்கமாயுமிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கு விரோதஞ் செய்தால் பெருங் கலகத்துக்கு இடமாகுமென்று தோன்றுகிறது. மேலும் அந்தக் குமாரத்தி தனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நீங்கள் போய்விடுவீர்களென்று நினைத்து தனக்குப் பட்டாபிஷேகமே வேண்டாமென்று அழுதது. நீங்கள் தன்னைக் கலியாணஞ் செய்துகொள்வீர்களென்று கேள்விப்பட்ட பிறகு தான் அது சந்தோஷமாயிருக்கிறது. உங்களுடைய முயற்சியினாலே தனக்குப் பட்டாபிஷேகம் ஆகிறதென்று தெரிந்து கொண்டு முன்னையைப் பார்க்கிலும் நுறு பங்கு அதிகமாக உங்களிடத்திற் பக்ஷமும் பாசமுமாயிருக்கிறது. ஆகையால் அந்தப் பெண்ணினுடைய ஆசையைக் கெடுக்க வேண்டாம், மகாராஜாவே! என்று சொல்லி நாங்கள் மறுமொழி சொல்வதற்கு இடமில்லாமல் திடீரென்று சடுதியிற் போய்விட்டார்கள். இந்தச் சமாச்சாரங்களைக் கேட்டபின்பு, முன்னே எனக்கிருந்த தைரியம் நீங்கி என்பாடுந் தடுமாற்றத்தில் வந்துவிட்டது. “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்“ என்பது போல, நாங்கள் அந்த ஊரில் இருந்தால் ஞானாம்பாள் அந்தப் பெண்ணுக்கு அகத்தியம் தாலி கட்ட வேண்டியதாயிருக்கிறது. மாட்டே னென்றால், ஊராருடைய பகையையும், அந்தப் பெண் பழியையும், சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்களுடைய ஊருக்குப் போகலாமென்றால், கடலும் மலைகளுஞ் சூழ்ந்த விக்கிரமபுரியை விட்டு இன்ன மார்க்கமாய்ப் போகிறதென்று தெரியவில்லை. அரண்மனையில் எங்களைச் சூழ்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் மணமுரசு கேட்டுச் சந்தோஷிக்கிறவர்களா யிருந்ததால் நானும் ஞானாம்பாளும் சகல சங்கதிகளையும் கலந்து தாராளமாய்ப் பேசவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது.
ஒருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நானும் ஞானாம்பாளும் விடிவதற்குமுன் எழுந்து சில சமயங்களில் வெளியே உலாவப் போகிறது வழக்கமாயிருந்தது. நாங்கள் ஆதியில் விக்கிரமபுரிக்கு வந்தபோது ஏறி வந்த மலையின்மேல் ஏறி உலாவுவதும், அந்த மலைமேலிருக்கிற அரண்மனையில் இரண்டொரு நாள் வசிப்பதும் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி போகிறவர்கள் போல் நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் நடுச்சாமத்தில் எழுந்து வேறொருவரையுங் கூட அழைத்துக்கொண்டு போகாமல் நாங்கள் மட்டும் புறப்பட்டுப் போய் அந்த மலைமேல் ஏறினோம். ஏறின உடனே நான் ஞானாம்பாளைப் பார்த்து “இனிமேல் இந்த ஊரில் இருப்பது சரியல்ல; ஆனால் நம்முடைய ஊருக்காவது ஆதியூருக்காவது எந்த மார்க்கமாய்ப் போகிறதென்று தெரியவில்லை. நாம் முன்னே வந்த வழியாய்ப் போகலா மென்றால், துஷ்ட மிருகங்கள் நிறைந்த காடுகளைத் தாண்டி எப்படிப் போகக்கூடும்?“ என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து “இந்த ஊரிலிருந்து பெண்ணும் பெண்ணுங் கலியாணஞ் செய்துகொள்வதைப் பார்க்கிலும் அந்த மிருகங்களுடன் வாசம் செய்வது சுலபமாய்த் தோன்றுகிறது“ என்றாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து “நாம் முன்னேறிவந்த மலையின் தென்புறத்து வழியாக இறங்கிப் பார்ப்போம். கடவுளுடைய கிருபையால் அந்தக் காடுகளைக் கடந்து போவதற்குத் தக்க மார்க்கங் கிடைத்தாலும் கிடைக்கும்” என்றாள். அந்தப் பிரகாரம் தென்புறத்தில் இறங்கி, அருணோதயத்துக்கு அடிவாரத்தில் வந்து சேர்ந்தோம். அடிவாரத்தில் முன்னே இருந்த காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுப் போய், மனுஷர்கள் சஞ்சரிக்கும்படியாயிருந்தது. உடனே நாங்கள் ஸ்வாமிக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு தெற்கு வழியாக கடு நடையாக நடந்து போனோம். ஞானாம்பாள் ஆண் வேஷத்தை மாற்றிப் பெண் வடிவாகவே வந்தாள். ஒரு பெரிய ராஜாங்கத்தையும் திவ்விய சுந்தரமான ஒரு ராஜ புத்திரியையும் வேண்டாமென்று விட்டுவிட்டு ஓடுகிறவர்கள் எங்களைத் தவிர வேறொருவரும் இருக்கமாட்டார்கள்.
பயம் பின்னே யிருந்து எங்களைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனதால், ஓடுகிற சிரமங்கூடத் தெரியாமல் காத வழி தூரம் ஓடினோம். பிறகு கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. யாரோ வந்து கூடாரம் அடித்திருக்கிறார்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டு அந்தக் கூடாரத்துக்கு நேரே போய் உள்ளே நுழைந்தோம். தேவராஜப் பிள்ளையுங் கனகசபையும் உள்ளேயிருந்தவர்கள் எங்களைக் கண்டவுடனே ஆவலுடன் ஓடி வந்து தழுவிக்கொண்டு, சற்று நேரம் அங்கலாய்த்துப் பிறகு களிகூர்ந்தார்கள். நான் தேவராஜப்பிள்ளையையுப் பார்த்து ஐயா! நாங்கள் பெரிய ஆபத்துக்குத் தப்பி ஓடிவந்திருக்கிறோம். சிலவிசை யாராவது எங்களைத் தொடர்ந்து வந்தாலும் வருவார்கள். ஆகையால் நாம் புறப்பட்டு ஆதியூருக்குப் போவது நன்மை. வழியிற் போகும்போது சகல சமாசாரங்களும் சொல்லுகிறேன் என்றேன். உடனே இரண்டு வண்டிகளிற் குதிரைகள் பூட்டி, ஒரு வண்டியில் ஞானாம்பாளை ஏற்றுவித்துக்கொண்டு, மற்றொரு வண்டியில் நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஏறிக்கொண்டு புறப்பட்டோம். என்னையும் ஞானாம்பாளையும் பட்டத்து யானை தூக்கிக்கொண்டு போய் மலையில் விட்டதும், நாங்கள் விக்கிரமபுரிக்குப் போய் அரசாண்டதும் முதலிய சகல சங்கதிகளையும் நான் வழியில் வரும்போதே, தேவராஜப் பிள்ளைக்கும் கனகசபைக்கும் தெரிவித்தேன். ஞானாம்பாள் புருஷ வேஷம் பூண்டுகொண்டு அரசாண்ட வகையைக் கேள்விப்பட்டு, அவர்கள் மிதமில்லாத ஆச்சரியமும் ஆநந்தமும் அடைந்தார்கள். ஞானாம்பாளைப் புருஷனென்று நினைத்து அந்த ராஜகன்னிகையாகிய ஆநந்தவல்லி இச்சைப் பட்டதும் அவர்கள் இருவருக்கும் விவாகம் செய்வதற்காக முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டதும், அதற்காகத் தப்பி நாங்கள் ஓடி வந்ததும் கேள்விப்பட்டுத் தகப்பனும் பிள்ளையும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பொழுது விடியவும் விடியாமலிருக்கவும் நான் பாடினதும் கேள்விப்பட்டவுடனே அவர்கள் ஆடியாடிக்கொண்டு சிரித்த சிரிப்பினால் நாங்கள் ஏறியிருந்த பண்டி கலகலத்துப் போய் விட்டது.
அவர்களுடைய சிரிப்பு அடங்கின பிறகு, என்னுடைய தாய் தந்தையர் மாமனார் மாமியார் முதலியவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:- நீங்கள் இருவரும் காணாமற்போன சமாசாரத்தை உடனே அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சகிக்கக்கூடாத துக்கம் உடையவர்களாய் ஆதியூருக்கு வந்தார்கள். இந்தக் காட்டு வழியாக அந்த யானை உங்களிருவரையுந் தனித்தனியே தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னபடியால் உங்களைத் தேடுவதற்காக இந்தக் காடுகளையெல்லாம் அழித்து நிர்மூலஞ் செய்ததுமின்றி மிருகங்களையும் கொன்று நாசஞ் செய்துவிட்டோம். இப்போது நாங்கள் மலைகளையும் அரணியங்களையும் அணுஅணுவாய் ஆராய்ந்து பார்த்தோம். இன்னமும் உங்களைத் தேடிப் பார்ப்பதற்காகவே நடுக்காட்டில் கூடாரம் அடித்துக்கொண்டு இவ்விடத்தில் வாசமாயிருந்தோம். உங்கள் தாய் தந்தையர், மாமனார், மாமியார் முதலானவர்களும் எங்களுடன் கூட வந்திருந்து உங்களைத் தேடிப் பார்த்தும் நீங்கள் அகப்படவில்லை. அவர்கள் உங்களைப் பிரிந்த ஏக்கத்தினால் சரியான ஊண் உறக்கமில்லாமல் துரும்பு போல் இளைத்துப் போயிருப்பதால் அவர்களை இந்தக் காட்டிலிருக்க வேண்டாமென்று கட்டாயப் படுத்தி ஆதியூருக்கு அனுப்பிவிட்டோம். அவர்களை நீங்கள் பார்த்தால் அடையாளங் கண்டுபிடிக்க மாட்டீர்கள். இன்னும் ஒரு மாசம் அவர்கள் உங்களைக் காணாமலிருப்பார்களானால் அவர்கள் ஜீவித்திருப்பது பிரயாசம். எங்கள் ஊரில் உங்களை நிறுத்திக்கொண்ட நிமித்தம் இப்படிப்பட்ட வியாசங்கள் உங்களுக்கு நேரிட்டபடியால் நாங்கள் பட்ட சஞ்சலம் கொஞ்சம் அல்ல. கடவுள் எங்களுடைய பிரார்த்தனைக்கு இரங்கி மறுபடியும் உங்களை க்ஷேமமாய்க் கொண்டு சேர்த்ததற்காக அவருக்கு நாங்கள் அத்தியந்த கிருதக்ஞர்களா யிருக்கிறோம் என்றார். என்னுடைய தந்தை தாய் முதலானவர்கள் ஆதியூரில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டவுடனே அவர்களைச் சீக்கிரத்திற் பார்க்க வேண்டுமென்கிற பெரிய அவாவுடன் சென்றேன்.
முன்னே எங்களை யானை தூக்கிக்கொண்டு போன வழி சுற்றுவழியாகவும் இப்போது நாங்கள் போவது நேர் வழியாகவும் இருந்தபடியால் நாங்கல் புறப்பட்ட நாலாம் நாள் சாயரக்ஷை ஆதியூரை அடைந்தோம். என்னையும் ஞானாம்பாளையும் பார்த்தவுடனே எங்களுடைய தாய் தந்தைகள் ஓடிவந்து எங்களை ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு பிரலாபித்துப் பிறகு மனந்தேறினார்கள். அவர்களுடைய தேகமெலிவையும் இளைப்பையும் பார்த்தவுடனே எங்களுக்கு ஆற்றாமையும் துக்கமும் உண்டாகி இனி மேல் ஒரு காலத்திலும் அவர்களை விட்டுப் பிரிகிறதில்லையென்று சங்கேதஞ் செய்துகொண்டோம். நாங்கள் ஊரை விட்டுப் போனபிறகு விக்கிரமபுரியில் நிகழ்ந்த சகல வர்த்தமானங்களையும் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிரகாரம் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வர்ணித்து வர்ணித்து என் தாய் தந்தையர், மாமனார் மாமியார் முதலானவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் உண்டான ஆச்சரியமும் ஆனந்தமும் அபரிமிதமே. தேவராஜப் பிள்ளையுங் கனகசபையுஞ் சொன்னது போதாதென்று அந்த அதிசயங்களை யெல்லாம் என் வாயாலே ஒருதரம் கேட்டார்கள். பிறகு நான் சொன்னது போதாதென்று ஞானாம்பால் வாயாலே ஒரு தரம் கேட்டார்கள். இவ்வகையாக அந்த இரவு முழுவதும் தேவராஜப்பிள்ளை வீடு சந்தோஷ அமர்க்களமாயிருந்ததே யன்றி ஒருவராவது உறங்கவில்லை.
மறுநாட் காலையில் ஞானாம்பாள் என்னிடத்திலும் என் தாயாரிடத்திலும் ஆலோசனை செய்துகொண்டு தான் பெண்ணென்பது முதலான விவரங்களைக் காட்டி அடியிற் கண்டபடி ஆநந்தவல்லிக்கு ஒரு நிருபம் எழுதியனுப்பினாள்:-
என் பிரியமான தங்கையே!
மகாராஜாவாக விக்கிரமபுரியை அரசாண்ட நான் உன்னைப்போற் பெண்ணே தவிர ஆண் அல்ல. உபராஜாவாயிருந்து அந்த ஊரை ஆண்டவர் தான் என்னுடைய கணவர். நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு என்னைவிட்டுப் பிரிந்து போன என் பிராண நாயகரைத் தேடிக்கொண்டு வந்த இடத்தில் எனக்கு ராஜபட்டங் கிடைத்து நான் அரசாண்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமே! என்னைப் புருஷனென்று நினைத்து என்னை நீ பாணிக்கிரகணஞ் செய்துகொள்ள விரும்பியதாக நான் கேள்விப்பட்டு அளவற்ற வியாகூலம் அடைந்தேன். பல காரணங்களால் நான் பெண்ணென்கிற உண்மையை உனக்குத் தெரிவிக்கக் கூடாமற் போய்விட்டது. உனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நான் வெளியே வந்துவிடலாமென்று நினைத்து ஜனங் களிடத்தில் உன்னுடைய பட்டாபிஷேகத்தைக் குறித்துப் பேசினேன். அவர்களும் என்னுடைய வார்த்தையை அங்கீகரித்துக் கொண்டார்கள். பிறகு உனக்கும் எனக்கும் விவாகமும் பட்டாபிஷேகமும் ஒரே தினத்தில் நடப்பதாக என்னுடைய அநுமதியில்லாமல் ஜனங்கள் பேரிகை முழங்கிப் பிரசித்தஞ் செய்தபடியால் இனி மேல் அவ்விடத்தில் இருப்பது சரியல்லவென்று நினைத்து நானும் என் நாயகரும் வெளிப்பட்டு வந்து விட்டோம். உனக்கும் மற்றவர்களுக்கும் உண்மை தெரியாதானபடியால் நானும் அவ்விடத்திலிருந்து மாலை சூட்ட நிராகரித்தால் உனக்குப் பெரிய மனஸ்தாபமும் அவமானமும் நேரிடுமென்பதை நினைத்தே நான் சொல்லாமல் வந்து விட்டேன். இனி மேல் நான் ஆணென்பதை நீ சுத்தமாய் மறந்துவிட்டு உன்னுடன் கூடப் பிறந்த சகோதரி போல என்னைப் பாவிக்க வேண்டும். நான் புருஷனென்று நினைத்து என்னிடத்தில் நீ வைத்த நேசமானது நான் பெண்ணென்று தெரிந்த பிறகும் மாறாமலிருக்குமென்று நம்புகிறேன். முந்தின ராஜாவுடைய புத்திரியான உனக்குப் பிராகிருத ராஜாத்தியாகிய நான் என்னுடைய ராஜ்ஜியத்தை உதகதாரா பூர்வமாகத் தத்தஞ் செய்கிறபடியாலும், சகல ஜனங்களும் உன்னை ராஜாத்தியாக அங்கீகரித்துக் கொண்டு முரசு அறைவித்திருப்பதாலும், இனி நீயே அரசியென்பதற்கு ஐயமில்லை. ஆகையால் உன்னுயிர் போல மன்னுயிரைத் தாங்கி அரசாக்ஷி செய்யும்படி சுவாமி உனக்குப் போதுமான ஞானத்தையும் திறமையையும் அநுக்கிரகிக்கும்படி அவரைப் பிரார்த்திக்கிறேன்.
இங்ஙனம்,
ஞானாம்பாள்
சில நாளாய் ஆதியூரில் நாங்கள் தங்கியிருந்து போக வேண்டுமென்று தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்கள் வருந்திக் கேட்டுக்கொண்ட படியால் நாங்கள் அந்தப் பிரகாரஞ் சில நாள் தங்கியிருந்தோம். நாங்கள் விக்கிரமபுரிக்கு அனுப்பிய நிருபங்கள் போய்ச் சேர்ந்தவுடனே ஆநந்தவல்லி மந்திரி பிரதானிகள் முதலிய அதிகாரிகளும், இன்னும் அநேக பிரபுக்களும், ஜனங்களும் எங்களைக் கண்டுகொள்வதற்காக ஆதியூருக்கு வந்தார்கள். ஆநந்தவல்லி முன்னே புருஷ வடிவமாகப் பார்த்த ஞானாம்பாளை இப்போது பென் வடிவமாகக் கண்டவுடனே பிரமித்து மதிமயங்கி முகம் மாறி முத்து முத்தாகக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்டவுடனே ஞானாம்பாளும் மனம் உருகி அழுதாள். என்னுடைய தாயார் அவர்கள் இருவரையும் பிரத்தியேகமாய் அழைத்து வைத்துக் கொண்டு ஆநந்தவல்லி மனந்தேறும்படியாக அநேக உறுதிகளைச் சொன்னார்கள். ஆநந்தவல்லி ஒருவாறு மனந்தேறின பிறகு அவள் ஞானாம்பாளைப் பார்த்து அக்கா! எனக்குத் தாயுந் தந்தையுமாயிருந்த சகல உபாகாரங்களையுஞ் செய்து நீங்கள் என்னை அந்தரத்தில் விட்டுவிட்டு வந்து விடலாமா? ஒன்றுந் தெரியாத சிறு பேதையாகிய நான் எப்படி ராஜாங்கத்தை வகிப்பேன்? ஆகையால் நீங்களும் உங்கள் நாயகரும் வந்து முன்போல் அரசு செய்யவேண்டும் என்று மிகவும் நைச்சியமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள். அப்படியே மந்திரி பிரதானிகள் முதலிய மற்றவர்களும் வேண்டிக் கொண்டார்கள். ஞானாம்பாள் ஆநந்தவல்லியைப் பார்த்து ராஜபுத்திரியாகிய உனக்கே அந்த ராஜாங்கம் சொந்தம். அதில் பிரவேசிக்க எங்களுக்குப் பாத்தியமும் இல்லை; இஷ்டமும் இல்லை. நான் குடித்தன முறையை அநுசரித்து என்னுடைய நாயகர் மாமனார் மாமியார் முதலானவர்களை உபசரிக்க வேண்டியவளே தவிர நான் அரசு செய்வது தகுதி அல்ல என்றாள். என்ன நியாயம் சொல்லியும் ஆநந்தவல்லி ஒப்புக் கொள்ளாமல், அசந்துஷ்டியாகவே யிருந்தாள். பிறகு நாங்களும் எங்கள் தாய் தந்தையர் முதலியவர்களும் விக்கிரமபுரிக்குப் போய் எங்கள் கையாலே ஆநந்தவல்லிக்கு மகுடாபிஷேகஞ் செய்வித்தோம். அந்த ஊரார் தங்களை ஆண்ட மகாராஜா பெண்ணென்று தெரிந்த உடனே முன்னையைப் பார்க்கிலும் பதின்மடங்கு அதிக விசுவாசமும் பக்தியும் உள்ளவர்களாய் ஞானாம்பாளையும் என்னையும் மட்டுமிதமில்லாமல் வாழ்த்தினார்கள். நாங்கள் அந்த வாழ்த்துக்களே பரம பிரயோஜனமாக எண்ணி மன மகிழ்ச்சியுடன் ஆதியூருக்குத் திரும்பினோம்.