பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 5


5 ஆம் அதிகாரம்
சிங்காரத் தோட்டம், கனகசபை சரித்திரம்,
ஜலகண்டபுரம்

எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் எண்ணிகையில்லாத பல விருக்ஷங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டமும், பூஞ்சோலைகளும், தாமரைத் தடாகங்களும் இருந்தன. நாங்கள் படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் இந்திரனுடைய கற்பகச் சோலைக்குச் சமானமான அந்தச் சிங்காரத் தோட்டத்தில் விளையாடுகிறது வழக்கம். "அவப் பொழுதிலும் தவப்பொழுது" என்பது போல் விளையாடுகிற நேரத்தையும் ஞானாம்பாள் தர்ம விஷயங்களில் உபயோகப் படுத்தி வருவாள். எப்படியென்றால், சிங்காரத் தோட்டத்தில் பழுத்திருக்கிற மாங்கனிகள், தேங்கனிகள், வாழைக்கனிகள், பலாக்கனிகள், விளாங்கனிகள் முதலியவைகளைப் பறித்து ஏழைகளுக்குக் கொடுத்து வருவாள். அந்தத் தோட்டத்தில் இருக்கிற பக்ஷிகளை, ஒருவரும் பிடிக்காமலும், உபத்திரவஞ் செய்யாமலும் ஞானாம்பாள் பாதுகாத்து வந்தபடியால், அவைகள் மென்மேலும் பெருகி அவளைக் கண்டவுடனே ஆடிப்பாடி குதித்து விளையாடி மகோற்சவங் கொண்டாடும். சாதுக்களைக் கண்டால் சந்தோஷப் படாதவர்கள் யார்?

ஒரு நாள் நாங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மரத்தில் அபூர்வமாய்ப் பழுத்திருந்த இரண்டு பழங்களை, ஞானாம்பாள் பறித்துக் கொண்டு வந்து என் முன்பாகவும் கனகசபை முன்பாகவும் வைத்துப் புசிக்கும்படி சொன்னாள். நான் கணக்கில் என் வல்லமையைக் காட்டுவதற்காக, இவளைப் பார்த்து "இவைகள் எத்தனை பழங்கள்?" என்றேன். அவள் "இரண்டு பழம்" என்றாள். நான் மூன்று பழம் என்றேன்; அவள் எப்படி? என்று கேட்க, அந்தப் பழங்களை வரிசையாக வைத்து எண்ணும்படி சொன்னேன்; அவள் "ஒன்று, இரண்டு" என்று எண்ணினாள்; உடனே "ஒன்றும் இரண்டும் மூன்றல்லவா?' என்றேன். அவள் "ஆம் ஆம்" என்று கனகசபையைப் பார்த்து "அண்ணா! நீங்கள் ஒரு பழம் தின்னுங்கள். நான் ஒரு பழம் எடுத்துக் கொள்கிறேன். அத்தான் ஒரு பழம் அருந்தட்டும்" என்று சொல்லி, அவள் ஒரு பழத்தைத் தின்றுவிட்டாள்; கனகசபை ஒரு பழத்தை விழுங்கிவிட்டான்; நான் ஒன்றுமில்லாமல் வெறும் வாயைச் சப்பினேன்: இவ்வகையாக என் கணக்கின் சாமர்த்தியத்தைக் காட்டப்போய்க் கனியை இழந்து ஏமாறினேன்.

கனகசபை நற்குணமும், நற்செய்கையும் உடையவனாயும், விவேக விற்பன்னனாயும், சர்வ ஜன ரஞ்சகனாயும் இருந்தான். அவனுடைய புத்திநுட்பந் தெரியும் பொருட்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு காரியத்தைத் தெரிவிக்கிறேன். அஃதென்னவெனில், சென்னைபுரி கவர்னர் தேச சஞ்சாரஞ் செய்துகொண்டு வருகையில், சத்தியபுரியில் கூடாரம் அடித்துக் கொண்டு அவருடைய பரிவாரங்களுடன் சில நாள் தங்கி இருந்தார். அப்போது ஒரு நாள் அவர் மட்டுந் தனியாய்ப் புறப்பட்டு வாகனாரூடராய், ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது அவருக்கு மறுபடியும் கூடாரத்துக்குப் போக மார்க்கந் தெரியாமையினால், வழியில் நின்று கொண்டிருந்த கனகசபையைக் கூப்பிட்டுக் கூடாரத்துக்குப் போகிற மார்க்கத்தைக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். அவர், கவர்னர் என்பது கனகசபைக்குத் தெரியாதாகையால் :நான் அவ்வளவு தூரம் எப்படி நடந்துவந்து வழி காட்டுவேன்?" என்று ஆக்ஷேபித்தான். உடனே கவர்னர், தம்முடன் கூட வண்டியில் ஏறிக் கொள்ளும்படி சொன்னதால், அந்தப் பிரகாரம் கனகசபையும் வண்டியில் ஏறி வழி காட்டிக் கொண்டு போனான். அவர்கள் வழியிற் போகும்போது கனகசபை கவர்னரை நோக்கி, "ஐயா! கவர்னர் அவர்களுடைய கூடாரத்தில் பல துரைமார்கள் இருப்பார்களே! அவர்களுக்குள் கவர்னர் இன்னாரென்று தெரிந்து கொள்வதற்கு விசேஷ அடையாளம் என்ன?" என்று கேட்க, கவர்னர் கனகசபையைப் பார்த்து, "கவர்னரைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றி நின்றுகொண்டு வணங்குவார்கள்; கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார். இது தான் அடையாளம்" என்றார். இவ்வகையாகச் சம்பாஷித்துக் கொண்டு அவர்கள் கூடாரத்தைச் சமீபித்தவுடன், கூடாரத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழட்டிக் கொண்டு கவர்னர் வருகிற வண்டியை நோக்கி வந்தனஞ் செய்தார்கள். அப்போது கவர்னர் கனசபையைப் பார்த்து "இப்போது கவர்னர் இன்னாரென்று உனக்குத் தெரிகிறதா?" என்று கேட்க, உடனே கனகசபை "நீங்களாவது கவர்னராயிருக்க வேண்டும். அல்லது நானாவது கவர்னராயிருக்க வேண்டும். ஏனென்றால் நாமிருவர் மட்டும் உட்கார்ந்தபடி இருக்கிறோம்; நம்மைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றிக் கொண்டு, நமக்கு வந்தனம் செய்கிறார்கள்" என்றான். சமயோஜிதமாகவும் சாதுரியமாகவும் கனகசபை சொன்ன மறுமொழியைக் கவர்னர் வியந்து கொண்டு, அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து அனுப்பினார்.

எப்போதும் விநோத சல்லாபப் பிரியனான கனகசபை சில நாளாக நன்றாய் விளையாடாமலும், பேசாமலும், துக்காக்கிராந்தனாய் மௌனஞ் சாதித்தான். "அதற்குக் காரணம் என்ன?" வென்று அவனை நான் பலமுறை கேட்டும் அவன் தக்க மறுமொழி சொல்லாமல் மழுப்பிவிட்டான். ஒரு நாள், சிங்காரத் தோட்டத்தில் கடைசியில் இருக்கிற ஒரு பெரிய தாமரைத் தடாகத்தின் ஓரத்தில், நானும் ஞானாம்பாளும் கனகசபையும் விளையாடிக் கொண்டிருந்த போது கனகசபை கால் தவறி அந்தத் தடாகத்தில் விழுந்து விட்டான்; அவன் நீந்தத் தெரியாதவனானதால், தன்னீரில் முழுகுகிறதும் கிளம்புகிறதுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தான். நானும் நீந்தத் தெரியாதவனானதால் இன்னது செய்கிறது என்று தோன்றாமல் மலைத்துப் போய், ஸ்தம்பாகாரமாய் நின்றுவிட்டேன். ஞானாம்பாள் அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிப் பார்த்தும் உதவி செய்யத்தக்கவர்கள் ஒருவரும் அகப்பட வில்லை; எங்கள் வீடு வெகு தூரமானதால் அங்கே போய் யாரையாவது அழைத்துக் கொண்டு வருவதும் அசாத்தியமாயிருந்தது. இதை யெல்லாம் ஞானாம்பாள் ஒரு க்ஷணப் பொழுதில் ஆரோகித்துக் கொண்டு, சிங்காரத் தோட்டத்தின் கடைசியிலிருக்கிற திட்டி வாசலைத் திறந்து கொண்டு, வெளியே ஓடினாள். அவ்விடத்திலும் ஒருவரும் சமீபத்தில் இல்லையால் தூரத்தில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்த ஒரு சந்நியாசியை "ஐயா! ஐயா!" வென்று கூப்பிட்டுக் கொண்டு, மான் போலவும், மயில் போலவும் அதி வேகமாக ஓடினாள். அவள் தனிமையாக ஓடுகிறதைப் பார்த்து நானுங் கூட ஓடினேன். ஞானாம்பாள் சந்நியாசியாரை நோக்கி, "ஐயா! ஒரு சிறுவன், குளத்தில் விழுந்து விட்டான்; தாங்கள் தயவு செய்து வந்து அவனைக் கரையேற்ற வேண்டும்" என்று மிகவும் வணக்கத்துடனே பிரார்த்தித்தாள். அந்தச் சந்நியாசியாரும் உடனே திரும்பி எங்களுடன் ஓடி வந்தார். அவர் ஓடி வரும்போதே ஞானாம்பாளைப் பார்த்து, "அந்தப் பிள்ளையை நான் கரையேற்றினால், நீ காதில் போட்டிருக்கிற வயிர ஓலைகள் முதலிய நகைகளைக் கொடுப்பாயா?" என, அவள் "அப்படியே தருகிறேன்" என்றாள். நாங்கள் வரப் பின்னுஞ் சற்று நேரம் தாமதப் பட்டிருக்குமானால், கனகசபை ஜலத்தில் மூழ்கி இறந்து போயிருப்பானென்பது நிஸ்ஸந்தேகம். ஞானாம்பாளுடைய அதி தீவிர முயற்சியால் அவன் பிழைத்தான். எப்படியென்றால், சந்நியாசியார் ஒரு நிமிஷத்தில் தடாகத்தில் குதித்துக் கனகசபையைக் கரையேற்றி விட்டார். அவன் ஜலத்தைக் குடித்து மூர்ச்சையா யிருந்ததால், அவன் குடித்த ஜலம் வெளிப்படும்படி, சந்நியாசியார் தகுந்த பக்குவங்கள் செய்து அவன் பிராணனை ரக்ஷித்தார். உடனே ஞானாம்பாள் தன் காதில் இருந்த பூஷணங்களைக் கழற்ற ஆரம்பித்தாள். சந்நியாசியார் "வேண்டாம்! வேண்டாம்!" என்று கையமர்த்தி, ஞானாம்பாளைப் பார்த்து "உன்னுடைய மனோதர்மத்தை அறிவதற்காக அந்த நகைகளைக் கேட்டேன். அவைகளை நீ கொடுத்தாலும் நான் அங்கீகரிப்பேனா? ஒரு பிராணனை ரக்ஷித்த புண்ணியம் எனக்குப் போதாதா? எனக்கு இயற்கையாக இல்லாவிட்டாலும் உன்னைப் பார்த்த பிறகாகிலும் எனக்குத் தர்ம சிந்தனை இல்லாமற் போகுமா? இவ்வளவு சிறு பிராயத்தில் ஒரு பிராணனைக் காப்பாற்ற நீ எவ்வளவோ முயற்சி செய்தாயே, உனக்குச் சமானமான புண்ணியவதிகள் உலகத்தில் இருப்பார்களா? இம்மையிலும் மறுமையிலும் சகல பாக்கியங்களையும் கடவுள் உனக்குத் தந்தருள்வாராக" என்று ஆசீர்வாதஞ் செய்து "சந்நியாசி பயணம் திண்ணையில்" என்பது போல் ஒரு நிமிஷத்தில் போய் விட்டார். நாங்கள் ஒன்றும் பேச நாவெழாமல் பிரமித்துப் போய் நின்றோம். "பதினாயிரம் பொன் பெற்ற ஆபரணங்களைக் கொடுக்கச் சம்மதித்த ஞானாம்பாளுடைய குணம் பெரிதா? அவைகளை வேண்டாமென்று நிராகரித்த சந்நியாசியாருடைய குணம் பெரிதா?" வென்று நான் சற்று நேரம் ஆலோசித்து, ஞானாம்பாளுடைய குணமே விசேஷமென்று தெரிந்து கொண்டேன்.

இதுவரையில் பேசச் சக்தி இல்லாமல் களைத்துப் போயிருந்த கனகசபைக்குக் கொஞ்சம் திடம் உண்டாகி, அவன் எங்களைப் பார்த்துத் "தாய் தகப்பன் இல்லாமல் நிராதரவாயிருக்கிற எனக்கு இவ்வளவு பெரிய உபகாரஞ் செய்து பிராணனைப் பிரதிஷ்டை செய்தீர்களே! அதற்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன்?" என்று பல விதமாக உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினான். எனக்கு ஆச்சரியம் உண்டாகி, "உனக்குத் தாய் தந்தைகள் இருக்கும்போது, தாய் தகப்பனற்ற பிள்ளையென்று நீ சொன்னதற்குக் காரணமென்ன?" என்று நான் வினவ, கனகசபை கண்ணீர் விட்டு அழுதுகொண்டு சொல்லுகிறான். என் பிரியமான அண்ணனே! தங்கையே! என் பிராணனைக் காப்பாற்றின உங்களுக்கு இனிமேல் நான் உண்மை சொல்லாமலிருக்கலாமா? உங்களுடைய முந்தின ஆசான் ஆகிய சாந்தலிங்கம் பிள்ளையையும் அவருடைய பத்தினியையுமே, நான் தந்தை தாய் என்று நினைத்திருந்தேன். அவர் சில நாளைக்கு முன் கடின வியாதியா யிருந்தபோது இனிமேல் ஜீவதசைக்கு ஏதுவில்லையென்று நினைத்துக் கொண்டு, என்னை ரகசியத்தில் கூப்பிட்டு "அப்பா! குழந்தாய்! உனக்குத் தெரியாமல் இந்நாள் மட்டும் நான் மறைத்து வைத்திருந்த ஒரு ரகசியத்தை உனக்கு வெளிப் படுத்துகிறேன்; அஃதென்னவென்றால், நானும் என் பெண்சாதியும் உன்னைப் பெற்றவர்கள் அல்ல; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன் நீ ஆறு மாசக் குழந்தையாயிருக்கும்போது ஒருவன் உன்னைக் கொண்டுவந்து பிள்ளைக்குப் பால் வேண்டும் என்று கேட்டான். அதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் என் பெண்சாதிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துபோய். பால் வற்றாமல் இருந்ததால், அவள் உன்னை வாங்கி மார்பிலே வைத்து அணைத்தாள்; உடனே அவளுக்குப் பால் சுரந்து நீ சம்பூரணமாகப் பால் குடித்தாய். உன்னைக் கொண்டு வந்தவன், மறுபடியும் உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு அவனால் கூடிய மட்டும் பிரயாசைப் பட்டும், நீ என் பெண்சாதியை விடாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாய்; அவன் "இந்தப் பிள்ளை உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் போய் விட்டான். இப்படிப்பட்ட அதி சௌந்தரியமான பிள்ளை, நமக்குக் கிடைத்ததே என்கிற ஆநந்தத்தினால், நீ யாருடைய பிள்ளையென்று அவனை விசாரியாமல் உன் மேலே நோக்கமா யிருந்துவிட்டோம். ஆனால் அவன் கேவலம் சாமானியன் ஆனதால், அவனுக்கு நீ பிள்ளை அல்லவென்று நிச்சயம்; அது முதல் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும் வளர்த்தோம்; நீயும் சொந்தப் பிள்ளையைப் பார்க்கிலும் நூறு பங்கு அதிகமாகச் சகல விதத்திலும் திருப்தியாக நடந்து வந்தாய்; இனி நான் பிழைப்பேனென்கிற நம்பிக்கை இல்லாமையினாலும், சில விசை உன் மாதா பிதாக்கள் உன்னைத் தேடி வந்தால் உனக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டியதானதினாலும், இந்தக் காரியத்தை உனக்குத் தெரிவித்தேன். இப்போது நம்மை ஆதரிக்கிற சுந்தரத்தண்ணியாரும், அவருடைய பர்த்தாவும், உன்னையும் உன்னுடைய செவிலித்தாயையும் கைவிடார்கள். நீ மனம் வருந்தாதே" என்றார்.

"பிற்பாடு ஏதோ கடவுளுடைய அனுக்ரஹத்தால், என்னை வளர்த்த பிதாவாகிய சாந்தலிங்கம் பிள்ளை, ஆரோக்யம் அடைந்து பிழைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமே! அவர் சொன்ன விருத்தாந்தத்தைக் கேட்டது முதல் எனக்கு உண்டாகியிருக்கிற கிலேசமும் துக்கமும் கடவுளுக்குத் தான் தெரியும். அந்தக் காரணத்தைப் பற்றித் தான் சில நாளாக நான் சரியாய் விளையாடாமலும் பேசாமலும் இருந்தேன். என்னைப் போல் நிர்ப்பாக்கியர்கள் உலகத்தில் இருப்பார்களா? தாய் தகப்பன் இன்னாரென்று தெரியாத பிள்ளைகளும் இருக்குமா? பால் குடிக்கிற குழந்தையைக் கைவிடுகிற தாய் தந்தைமார்களும் பூமியில் இருப்பார்களா? லோகாபவாதத்தை யார் தடுக்கக் கூடும்? தடாகத்தில் விழுந்த என்னைக் கரையேற்றி ஏன் என்னைப் பழிக்கும் நிந்தைக்கும் ஆளாக்கினீர்கள்? நான் அப்போதே இறந்து போயிருந்தால் என்னுடைய துக்கமும் அவமானமும் என்னுடன் இறந்துபோயிருக்குமே" என்று சொல்லிக் கனகசபை தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டு அழுதான். அவனுடைய துக்கத்தைப் பார்த்து, நானும் ஞானாம்பாளும் கூட அழுதோம். பிற்பாடு எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, எங்களாலே கூடிய வரையில் அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியும் அவன் மனந் தேறவில்லை. அவனுடைய மனோ வியாகூலத்தால், அவன் நாளுக்கு நாள் துரும்பு போல் ஆனான். அவனுடைய சங்கதியை வெளிப் படுத்தினால், அவனுக்கு அவமானம் உண்டாகும் என்று நினைத்து, அதை நாங்கள் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் தாயார் மட்டும், அந்த ரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு, கனகசபையிடத்தில் அத்தியந்த கிருபையும் அன்பும் பாராட்டி வந்தார்கள்.