பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 9
9-ஆம் அதிகாரம்
இம்மை மறுமைப் பற்றிய
விடுகதையும், அதன் பொருளும்
கருணானந்தம் பிள்ளை தன் மகளையும் மருகமனையும்
நம்பி மோசம் போன சரித்திரம்
ஒருநாள் எங்கள் உபாத்தியாயர் ஒரு விடுகதை சொல்லி, எங்களை விடுவிக்கும்படி சொன்னார். அஃது என்னவென்றால்:- "இங்குண்டு அங்கில்லை; அங்குண்டு இங்கில்லை; இங்கும் உண்டு; அங்கும் உண்டு; இங்கும் இல்லை; அங்கும் இல்லை" என்பது தான். உடனே நான் இங்குண்டு அங்கில்லை என்பதற்கு, ஒருவன் ஆஸ்திவந்தனாயிருந்து புண்ணியஞ் செய்யாமலிருப்பானானால், அவனுக்கு இந்த உலகத்தில் மட்டும் சுகமே தவிர, அந்த உலகத்திலே சுகமில்லை என்றும், "அங்குண்டு இங்கில்லை" என்பதற்கு ஒருவன் தரித்திரவானாயும், புண்ணியவானாயும் இருப்பானால், அவனுக்கு மறுமையிலே சுகமே தவிர இம்மைச் சுகம் இல்லையென்றும், "இங்கும் உண்டு அங்கும் உண்டு" என்பதற்கு, ஆஸ்தியும் தர்மமும் உடையவனுக்கு இகபரம் இரண்டிலும் சுகமென்றும், "இங்கும் இல்லை அங்கும் இல்லை" என்பதற்குச் செல்வமும் இல்லாமல், புண்ணியமும் இல்லாமல் இருப்பவனுக்கு இவ்வுலகத்திலும் சுகமில்லை, பரலோகத்திலும் சுகமில்லை என்றும் பொருள் விடுவித்தேன்.
இதைக் கேட்டவுடனே உபாத்தியாயர் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார். "அந்த விடுகதைக்கு நீ சொன்ன அர்த்தம் தகுதியானதுதான். ஆனால், அதில் சில காரியங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். இகலோக சுகத்தை அநுபவிப்பதற்குக் கூடச் செல்வப் பொருள் மட்டுமே போதாது. செல்வத்துடன் புண்ணியமும் சேர்ந்திருக்க வேண்டியது முக்கியம். சில ஆஸ்திவந்தர்கள், தாங்களும் அநுபவியாமல் பிறருக்கும் உபகாரஞ் செய்யாமலும், பொருள்களைப் பூட்டி வைத்துக் கொண்டு லோபஞ் செய்கிறார்கள். அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன பாக்கியம் உண்டு? இன்னும் சிலர், எவ்வளவு தனம் இருந்தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் ஆசைப்பட்டு நித்திய தரித்திரர்கள் போல் துக்கத்தை அநுபவிக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகத்தில் என்ன சுகம் உண்டு? இன்னும் பல ஆஸ்திவந்தர்கள் பரஸ்திரீ கமனம், சூது, மதுபானம், பரஹிம்ஸ முதலான துர்விஷயங்களில் பொருளைச் செலவழித்துப் பல வியாதிகளையும், துன்பங்களையும், அபகீர்த்தியையும், பாவத்தையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய தனம் அவர்களுக்குக் கேடாக முடிந்ததே தவிர, நன்மையைக் கொடுக்கவில்லை. ஆகையால், இம்மையின் சுகானுபவத்துக்குக் கூடப் புண்ணியம் அவசியமாயிருக்கின்றது. ஒருவன் ஏழையாயிருந்தாலும் பொய் புரட்டு இல்லாமல், தேகப் பிரயாசைப் பட்டுத் தன்னையும், தன்னை அடுத்தவர்களையும், சம்ரக்ஷித்துத் தெய்வ பக்தியும் தர்ம சிந்தையும் உள்ளவனாயிருப்பானால், அவனுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன குறை இருக்கின்றது?
தனம், உத்தியோகம், அதிகாரம் முதலிய செல்வங்கள் அற்பமாகவும், நிலை அற்றதாகவும், முன்னே நான் சொன்னபடி துன்பஹேதுவாகவும் இருக்கின்றன. அந்தச் செல்வங்களுக்கு அதிகாரிகளாலும், திருடர்களாலும், நெருப்பு முதலிய காரணங்களாலும் அநேக அபாயங்கள் உண்டு. பின்னும் வார்த்திக தசையிலும், நாம் வியாதியாயிருக்கும் போதும், அந்தச் சுகங்களை அநுபவிக்கச் சக்தி இல்லாதவர்களாய்ப் போகிறோம். நாம் இறந்த பிற்பாடு அந்தச் செல்வங்கள் கூட வருகிறது மில்லை. புண்ணியமோ வென்றால், நிலைமை உள்ளதாகவும், அந்நியரால் அபகரிக்கக் கூடாததாகவும், பர லோகத்திலும் நம்மைத் தொடர்ந்து வருவதாகவும் இருக்கின்றது. இந்த உலகத்திலே துன்பங்கலவாத சுகமில்லையாதலால், அந்த அற்ப சுகத்தை மதிக்காமல், புண்ணியப் பயனாகிய நித்திய சுகத்தை நாம் தேடவேண்டும்" என்றார்.
என்னுடைய உபாத்தியாயர் சொன்ன விடுகதையை என் தாயாருக்குத் தெரிவித்தபோது, என் தாயார் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:
"உன்னுடய உபாத்தியாயராகிய கருணானந்தம் பிள்ளையைச் சாதாரண மனுஷராக நினைக்க வேண்டாம். அவர் புத்தியிலும், நற்குணங்களிலும் சிறந்தவர். அவர் பெரிய திரவியவந்தரா யில்லாவிட்டாலும், அவர் வேண்டியமட்டில் ஒரு குறைவுமில்லாலமல், சில நிலங்கள், வீடுகள் முதலிய பூஸ்திதிகள் உடையவராயிருந்தார். அவருக்கு ஒரு பெண்ணைத் தவிர, வேறே சந்ததியில்லை. அந்தப் பெண்ணை மிகவும் அன்பாக வளர்த்து, அவளுக்குப் பக்குவ காலம் வந்தவுடனே, ஒரு தகுந்த புருஷனைத் தேடிக் கலியாணஞ் செய்வித்தார். அவருக்குச் சில காலத்துக்கு முன் க்ஷயரோகங் கண்டு, பிழைப்போமென்கிற நம்பிக்கை இல்லாமையினால், ஒரு மரண சாசனம் எழுதி வைத்தார். அதில் தமது சொத்துக்கள் முழுமையும் அன்று முதல் தம்முடைய மகளும், அவள் புருஷனும் அநுபவித்துக் கொண்டு தமக்கு உத்தரக் கிரியை செய்து தம்முடைய பெண்சாதியையும் சம்ரக்ஷித்து வருகிறதென்றும், சில விசை தாம் பிழைத்துக் கொள்கிற பட்சத்தில், தம்மையும் அவர்களே ஆதரிக்க வேண்டுமென்றும் நிபந்தனை செய்யப் பட்டது. அந்த மரணசாசனப்படி, சகல ஸ்திதிகளும் உடனே அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஸ்வாதீனமாகி, மிராசும் அவர்கள் பெயரால் பதிவாகி அநுபவிக்கத் தொடங்கினார்கள். பிற்பாடு தெய்வானுகூலத்தால் கருணானந்தம் பிள்ளை தேக சௌக்கியம் அடைந்து பிழைத்துக் கொண்டார். அவரையும் அவருடைய பத்தினியையும் சில நாள் மட்டும் அவர்களுடைய மகளும் மருமகனும் சம்ரக்ஷணை செய்து, பிற்பாடு அவர்களே வீட்டைவிட்டு வெளிப்படும்படியான விதமாகக் கொடுமையைச் செய்ய ஆரம்பித்தார்கள். கருணானந்தம் பிள்ளை மறுபடியுந் தம்முடைய சொத்தை அடைகிறதற்குப் பல பிரயத்தனங்கள் செய்தும், அவர் எழுதிவைத்த மரணசாசனமே அவருக்கு விரோதமா யிருந்ததால், அவருடைய பிரயத்தனம் பலிக்கவில்லை. அவரும் அவருடைய பத்தினியும் அன்ன வஸ்திரத்துக்கு மார்க்கமில்லாமல், மிகவுந் துன்பப் பட்டார்கள். அவர் யோக்கியரென்பதும், அவர் மருமகனை நம்பி மோசம் போனதும், சகலருக்குந் தெரியுமானதால், அவருக்குப் பொருள் உதவி செய்யவேண்டுமென்று பலர் நினைத்தார்கள். ஆனால் தேகத்தில் சக்தி உள்ளவரையில் உழைத்து ஜீவிக்க வேண்டுமே தவிர, யாசகத் தொழில் ஈனத் தொழிலென்பது அவருடைய சித்தாந்தமாகையால் அவர் பிறருடைய உதவியை அபேக்ஷிக்கவில்லை. என் தகப்பனாராகிய சந்திரசேகர முதலியாருக்கும் இவருக்கும் சினேகமானபடியால், அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இவர் வாடகைக்குக் குடியிருந்து கொண்டு, அவரிடத்தில் சொற்பத் தொகை கடன் வாங்கி முதலாய் வைத்து வியாபாரஞ் செய்து காலக்ஷேபம் செய்து வந்தார்.
அவர் இழந்துபோன சொத்து, மறுபடியும் அவருக்குச் சித்திக்கும்படி உபாயஞ்செய்யவேண்டுமென்று என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் யோசித்துக் கொண்டு, ஒரு நாள் அவரை அழைத்துச் சொன்னதாவது:- "ஒரு பெரிய பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டி, அதை உம்முடைய வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைக்கிறோம். நீர் நாளைய தினம் எங்களுக்கும், உங்களது மகள் மருமகன் முதலியோர்களுக்கும் விருந்து செய்வதாகச் சொல்லி யனுப்பும். உம்முடைய வீட்டில் நாங்கள் போஜனஞ் செய்து முடித்தவுடனே, நாங்கள் இருவரும் ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் கடன் கொடுக்கும்படி உம்மைக் கேட்கிறோம். நீர் உடனே பெட்டியைத் திறந்து எங்களுக்குக் கடன் கொடுப்பது போல பாவனை பண்ணி, எங்களுடைய பணத்தை எடுத்து எங்களுக்குக் கொடுத்துவிடும். அதைப் பார்த்தவுடனே, உமது மகளும் மருமகனும் உம்மிடத்தில் இன்னமும் பொருளிருப்பதாக எண்ணி, அதையும் கிரகிப்பதற்காக உம்முடைய தயவைச் சம்பாதிக்கப் பிரயாசப் படுவார்கள்; அந்தச் சமயத்தில் அவர்கள் கையிலிருக்கிற மரண சாசனத்தை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளலாம்" என்றார்கள். கருணானந்தம் பிள்ளை "உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்" என்றார். உடனே என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் ஒரு பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டிக் கருணானந்தம் பிள்ளை குடியிருக்கிற வீட்டுக்கு ரகசியமாய் அனுப்பினார்கள். அவர் மறுநாள் தம்முடைய மகள் மருமகன் முதலானவர்கள் விருந்துக்கு வரும்படி சொல்லியனுப்பினார்; அவர் விருந்து செய்வதற்கு வகையேதென்று மகளும் மருமகனும் ஆச்சரியப். பட்டுக் கொண்டு அதையும் போய்ப் பார்க்கலாமென்று அவர் வீட்டுக்குப் போனார்கள். என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் விருந்துக்கு வேண்டிய சாமக் கிரியைகளை அனுப்பி, தங்களுடைய பரிசாகர்களைக் கொண்டு விருந்து செய்வித்து, அவர்களும் விருந்து சாப்பிடப் போனார்கள். விருந்து முடிந்தவுடனே என் தகப்பனார் எழுந்து, இரண்டாயிரம் வராகன் தமக்குக் கடன் கொடுக்க வேண்டுமென்று கருணானந்தம் பிள்ளையைக் கேட்டார். உன் தகப்பனாரும் இரண்டாயிரம் வராகன் கடன் கேட்டார்கள். கருணானந்தம் பிள்ளை ஒரு அறைக்குள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து, நாலயிரம் வராகன் எடுத்துக் கொண்டு வந்து கலகலவென்று கொட்டினார். அவர்கள் எண்ணி, ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இதைக் கண்டவுடனே மலத்தைக் கண்ட நாய்க்கு வாயூறுவதுபோல், கருணானந்தம் பிள்ளை மகளும் மருமகனும் வாயூறிக்கொண்டு, மலைத்து ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். ஒரு நிமிஷத்தில் நாலாயிரம் வராகன் கடன் கொடுப்பாரானால் இவருடைய செல்வம் எவ்வளவு பெரியதாயிருக்க வேண்டும்? இதை நாம் அறியாமற் போய்விட்டோமே என்று பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அந்தப் பணத்தைக் கண்டவுடனே, அவர் மேலே மகளுக்கும் மருமகனுக்கும் அத்தியந்த விசுவாசமுண்டாய் விட்டது. அவர் அந்தச் சமயத்தில், அவர்களை ஆயிரஞ் செருப்பாலே அடித்தாலும் பட்டுக் கொள்வார்கள்.
மாமனாருக்குக் குலாம் போடும்படி, மருமகன் தன் பெண்சாதிக்குக் கண்சாடை காட்டிவிட்டுப் போய்விட்டான். அவள் தகப்பனாருக்குத் தூபம் போட ஆரம்பித்தாள். எப்படியென்றால், தகப்பனாரைப் பார்த்து, "ஐயாவே! எங்களுடைய வாழ்வுகளெல்லாம் உங்களால் வந்த வாழ்வு தானே! நீங்கள் கிருபை செய்யாவிட்டால் நாங்கள் இந்நாள் மட்டும் ஜீவித்திருப்போமா? தாயுந் தந்தையுங் கைகண்ட தெய்வமென்று சகல சாஸ்திரங்களுஞ் சொல்லுகின்றனவே! நீங்கள் சொல்லாமல் எங்களை விட்டுப் புறப்பட்டு வந்த நாள் முதல், எங்களுக்கு நல்ல நித்திரை இல்லை. அன்னம் ஆகாரமில்லை. எங்களை நாங்கள் மறந்திருந்தாலும் இருப்போமேயல்லாமல், உங்களை மறந்த நேரமில்லை. உங்களுடைய தேகம் இளைத்திருப்பதை நான் பார்க்கும்போது என்னுடைய மனம் பதைக்கின்றது!" என்று பல வகையாகத் தப்பு ஸ்தோத்திரஞ் செய்தாள். இவ்வளவும் பணஞ்செய்கிற கூத்தென்று அவர் நன்றாய்த் தெரிந்துகொண்டு, மகளைப் பார்த்து 'விசனப்பட வேண்டாம் அம்மா! உனக்கு ஏதாவது அபேக்ஷை இருந்தால் தெரிவி' என்று நய வஞ்சகமாகச் சொன்னார். அவர் உங்களையும் குறிக்கவில்லையே! என்றாள். ஆம் அந்த மரண சாசனத்தையும் கொண்டுவாஎன்றார். அவள் ஒரு நிமிஷத்தில் பட்சி போல் பறந்தோடி, மரண சாசனத்தைக் கொண்டு வந்து தகப்பனுக்குக் காட்டினாள். அவர் அதனைக் கிழித்துவிடு. நான் வேறே சாசனம் எழுதிக் கொடுக்கிறேன் என்றார். அவள் அந்தச் சீட்டையும், சீட்டினால் வந்த பாக்கியத்தையும் கிழித்து நாசஞ் செய்துவிட்டாள். இவர் நான் தகுந்தபடி எழுதி வைக்கிறேன். நீயும் உனது நாயகனும் இருட்டினவுடனே வந்து, அந்தப் பெட்டியை உங்கள் வீட்டுக்குக் கொண்டுபோங்கள் என்றார். உடனே அவள் கம்பீர ஜன்னி கண்டவள் போல எழுந்து, புருஷனுக்குச் சந்தோஷச் சமாச்சாரம் சொல்வதற்காக ஓடினாள். இருட்டினவுடனே புருஷனும் பெண்சாதியும், அந்தப் பெட்டியைக் கொண்டு போவதற்காக வந்தார்கள். அது எத்தனை பேர் கூடினாலும் தூக்கக்கூடாத பளுவாயிருந்ததால், அநேகர் கூடி முக்கி முரண்டி, ஒரு வண்டியின் மேலே ஏற்றினார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் புருஷனும் பாரியும் பேராசையுடனே திறந்து பார்த்தார்கள். பெட்டிக்குள்ளாக மண்ணுங் கல்லும் நிறைக்கப்பட்டிருந்ததே தவிர, இரண்டு ஓடுகளும், இரண்டு கயிறுகளும் ஒரு காகிதத் துண்டுமிருந்தன. அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால்: நீங்கள் என் வாயில் மண் போட்டபடியினாலே, உங்களுடைய வாயிலே போட்டுக் கொள்வதற்காகப் பெட்டியில் மண் வைத்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பிச்சை எடுக்கும்படி விட்டுவிட்ட படியால் நீங்கள் பிச்சை எடுக்கும்படி இரண்டு ஓடுகள் வைத்திருக்கிறேன். பிச்சை எடுக்க உங்களுக்குச் சம்மதம் இல்லாவிட்டால், நீங்கள் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு சாகும்படி கயிறும் வைத்திருக்கிறேன் என்பதுதான். இதைப் பார்த்தவுடனே, அவர்களுடைய ஸ்திதி எப்படி யிருந்திருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? கருணானந்தம் பிள்ளை செய்தது சரிசரியென்று அவர்களுடைய மனமே பறையடிக்க ஆரம்பித்தது. மரண சாசனம் பரிகரிக்கப் பட்டுப் போனதால், என் தந்தையால் தம்முடைய ஆட்களைக் கொண்டு, பூஸ்திதிகளையெல்லாம் கருணானந்தம் பிள்ளை வசப்படுத்தி விட்டார். அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஆதாரமாயிருந்த மரண சாசனமே, மரணமாய்ப் போய்விட்டபடியாலும், அதிகாரிகளெல்லாம் நியாய பக்ஷத்திலே இருந்தபடியாலும் அவர்கள் மறுபடியும் அந்தச் சொத்தை அபகரிக்கிறதற்குச் செய்த பிரயத்தனங்கள், நிஷ்பலமாய்ப் போய்விட்டன. மகளும் மருமகனும் புத்தி கெட்டுப் போவதற்கு இந்தச் சொத்துத் தானே காரணமாயிருந்ததென்று, கருணானந்தம் பிள்ளைக்கு வெறுப்புண்டாகி, அவர் தமது குடும்ப சம்ரக்ஷணைக்கு வேண்டிய சொற்ப ஸ்திதிகளை வைத்துக் கொண்டு, மற்ற ஸ்திதிகளையெல்லாம் பல பாகமாய்ப் பிரித்துத் தம்முடைய எளிய சுற்றத்தார் முதலானவர்களுக்குத் தானஞ் செய்துவிட்டார். அவருடைய மகளும் மருமகனும் ஏழைகளாய்ப் போனதால், அவர்களையும் தம்முடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு ஆதரித்து வருகிறார். மனுஷ தேகம் எடுத்தவர்கள், அவர்களாற் கூடிய பரோபகாரஞ் செய்ய வேண்டுமென்றும், பரோபகாரமில்லாதவர்கள் பூமிக்குச் சுமையென்றும் நினைத்து, அவருடைய வீட்டில் தர்மப் பள்ளிக்கூடம் வைத்துக் கொண்டு, எண்ணிக்கையில்லாத பிள்ளைகளுக்கு வித்தியா தானம் செய்து வருகின்றார். அப்படியே உனக்கும் ஞானாம்பாளுக்கும் தர்மத்துக்காக கல்வி போதிக்கிறாரேயல்லாது, யாதொரு பிரயோஜனத்துக்காக அல்ல. அவர் மகாத்மாவானதால், அவர் சொல்லுகிற ஒவ்வொரு புத்தியையும் ஒவ்வொரு மாணிக்கம்போல, உன்னுடைய மனதில் பதித்துக் கொள் என்றார்கள். உபாத்தியாயர் சரித்திரத்தை நான் கேட்டபிற்பாடு, அவரிடத்தில் எனக்கு அதிக பூஜிதையும், கௌரவமும் உண்டாகி, அவருடைய வாக்கை வேதவாக்காக எண்ணி, அந்தப் பிரகாரம் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.