பிரதாப முதலியார் சரித்திரம்/பதிப்புரை


பதிப்புரை

தமிழ் இலக்கியம் காலந்தோறும் புதுப்புது வளர்ச்சியைப் பெற்று வருகிறது. அதன் வளர்ச்சிக்கு வளம் கூட்டிய படைப்பாளிகள் பலர்; அவர்கள் படைத்த படைப்புகளும் பல. அப்படைப்புகளைப் போலவே, அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. அம்முறையில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, தமிழுக்கு வளமை சேர்த்த சிலருள் சிறந்தவராக ‘நாவல்’ என்னும் புதுமை இலக்கியத்தைத் தோற்றுவித்த மாயூரம் ச வேதநாயகம் பிள்ளை விளங்குகிறார்.

தமிழ் நாவல் முன்னோடியான வேதநாயகம் பிள்ளை ’பிரதாப முதலியார் சரித்திர’த்தை 1879-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிட்டார். அந் நாவலே தமிழில் ’நாவல்’ என்ற இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல் எனப் போற்றப்படுகிறது.

இந்நாவலின் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில், பத்திரிகைகளும் நிறுவனங்களும் சிறப்பு வெளியீடுகளை வெளியிட்டுத் தத்தம் தமிழன்பைப் புலப்படுத்தி உள்ளன.

தாய்மொழியின்மீது — இலக்கியத்தின்மீது — அதைப் படைத்த படைப்பாளியினமீது நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த நம்மால் இயன்ற ஒரு சிறு செயலையேனும். ’ஒல்லும் வகையில் செல்லும்வாய் எல்லாம்’ செய்தால்தான் மனம் நிறைவு அடைகிறது; உலகிற்கும் பயன்படுகிறது இவ்வகையில் முதல் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளையின் மகன் வழிப்பேரன் என்ற முறையில், இம்முதல் நாவலை மறுபதிப்பாக வெளியிட முன்வந்துள்ளேன். ஆசிரியர் வெளியிட்ட முதல் பதிப்புக்குப் பின் பல பதிப்புக்களை இந்நாவல் பெற்றுள்ளது. எந்த நாவலுக்கும் ஏற்படாத ஓர் அபாயம் முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு ஏற்பட்டது. வேதநாயகம் பிள்ளை தமது கால இயல்புக்கேற்ற தமிழ் நடையில் எழுதிய அந்த நாவலைத் தனித் தமிழ் பெய்து முழுதும் மாற்றி (அதாவது ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ப்பதைப் ’பெருமை முதலியார் வரலாறு’ என மொழி பெயர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி) வெளியிட்டது ஒரு பதிப்பகம். இது தமிழ் எழுத்தாளர்களின பலமான கண்டனத்திற்கு உள்ளாயிற்று. ஓர் எழுத்தாளர் எழுதிய நூல் எந்த நடையில் எப்படி எழுதப்பட்டதோ அந்த நடையில் அப்படியே மக்களுக்கு வழங்கப்படவேண்டும். ஏனென்றால், நடை என்பது அவர் வாழ்ந்த காலத்தையும் சூழ்நிலையையும் காட்டும் கண்ணாடியாகும். நூற்றாண்டு விழா கொண்டாடும் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் பதிப்பித்து, ஆசிரியர் எழுதிய மூல நூலின்படியே வெளியிடப்பட்டுள்ளது. அதற்காகத் தமிழக அரசை நான் அணுகியபோது, அது நிதயுதவி அளித்து என்னை ஊக்குவித்து, இப்பதிப்பு வெளி வரச் செய்தது.

இந்நாவல், நூற்றாண்டு விழாப் பதிப்பாக வெளிவரக் காரணமாய் இருந்த தமிழக முதல் அமைச்சர் மக்கள் திலகம் மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கும், இந்தூலுக்கு அரியதோர் அணிந்துரை நலகிப் பதிப்பைச் சிறப்பித்த கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் எம்.ஏ., பி.எல்.,பிடி.., அவர்களுக்கும் என் மனமார்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். . இம் முயற்சியைத் தமிழுலகம் போற்றி வரவேற்பதாக.

வேதநாயகம் நகர்
ஆவடி, சென்னை - 71

வே. ஞா. ச. இருதயநாதன்.