பிரபல நட்சத்திரம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பிரபல நட்சத்திரம்

முன்னுரை

நுரையும் நொங்குமாகப் போகும் வேகவதி ஆறு 'வா வா' என்று என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நதியில் அடைக்கலம் புகுவதற்கு அமாவாசை இரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் காலத்தைப் போக்கியாக வேண்டும். அதுவரை என் அறிவையும் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் சும்மா இருந்தால் மனம் அதிகமாகக் குழம்புகிறது. தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பயங்கரமான அந்தகாரம் வந்து சூழ்கிறது. ஆகா! அமைதியான நல்ல தூக்கம் தூங்கி எத்தனை காலமாயிற்று.

ஆம், ஏதாவது வேலையில் மனத்தைச் செலுத்த வேண்டுமென்பதற்காகத்தான் என் கதையை எழுதத் தொடங்குகிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு நான் 'பிரபல நட்சத்திர'மாயிருந்த காலத்தில் பத்திரிகையில் என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி பிரசுரித்துக் கொண்டிருப்பார்கள். நான் எந்த தெருவில் எந்த வீட்டில் இருக்கிறேன்; அது சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை ரூபாய் வாடகை, தினம் எவ்வளவு தடவை நான் காப்பி சாப்பிடுகிறேன், என்றெல்லாம் கேள்விகளும் பதில்களும் வெளியாகிக் கொண்டிருக்கும். அதெல்லாம் அந்தக் காலம்.

இப்போது 'பிரபல நட்சத்திர'ப் பதவியிலிருந்து நான் விழுந்து ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. என் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இப்போது யாருக்காவது சிரத்தை இருக்குமா என்பதை நான் அறியேன். இந்த எனது துயர சரித்திரத்தை, சினிமா நட்சத்திரமாக விரும்பும் எந்தக் குடும்ப ஸ்திரீகளாவது படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு நிச்சயமாய் இது உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன். இதை எழுதி முடிக்கும் வரையில் பகவான் என்னுடைய அறிவை மட்டும் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

1. கல்யாணம்

கதையை எங்கே, எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது இதிலெல்லாம் விசேஷம் ஒன்றும் கிடையாது. என் தகப்பனார் வக்கீல். அவருக்கு நான் நாலாவது பெண். என் தமக்கைமார்களுக்கெல்லாம் நல்ல வரன்களைத் தேடிக் கலியாணம் செய்து கொடுத்து விட்டார். அப்போதெல்லாம் அவருக்குச் சம்பாத்தியமும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தள்ளாமை அதிகமாக ஆக ஆக வருமானமும் குறைந்தது. வீட்டில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, எல்லாரும் இந்தத் துக்கிரி பிறந்த அதிர்ஷ்டம் என்று என்னைத் தூற்றுவார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. 'எனக்குத் தான் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது' என்று மனத்துக்குள் சொல்லிக் கொள்வேன். சில சமயம் வெளியிலும் சொல்வேன். என் தாயார் மட்டும் என் கட்சியில் இருந்து, 'ஆமாண்டி கண்ணே! உனக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது; உன் அக்காமார்கள் எல்லோரையும் காட்டிலும் நீதான் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படப் போகிறாய். உன்னால் தான் எங்கள் தரித்திரம் தீரப் போகிறது" என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

பள்ளிக் கூடத்தில் நான் இரண்டாவது பாரம் வரையில் தான் படித்தேன். ஆனால் படிப்பதில் எனக்கு அந்த நாளிலேயே ஆர்வம் அதிகம். விக்ரமாதித்யன் கதை முதற்கொண்டு, பத்திரிகைகளில் அந்த வாரம் வெளியான தொடர்கதை வரையில் எல்லாவற்றையும் படித்து வந்தேன். இதனாலெல்லாம் என்னென்னமோ பகற் கனவுகள் காண ஆரம்பித்தேன். கதைகளில் வருவது போல் 'சகல லட்சணங்களும் பொருந்திய இளங்குமரன் எனக்காக எங்கேயோ பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு நாள் அவன் எங்கிருந்தோ வந்து, என் மேல் காதல் கொண்டு சகலரும் அறிய என்னைக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு போகப் போகிறான்; நாடு நகரமெல்லாம் அதைப் பார்த்து அதிசயிக்கப் போகிறது' என்று அடிக்கடி எண்ணமிடுவேன். தகுந்த வரன் கிடைக்காத காரணத்தினால் என் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. கற்பனா லோகத்தில் நான் கண்டு வந்த இராஜகுமாரன் வரும் பொருட்டாகவே, என் கல்யாணம் நிச்சயிக்கப்படாமல் தட்டிப் போய் வருகிறது என்று நான் நம்பினேன். அவன் எப்போது வருவான், எந்த ரூபத்தில் வருவான் என்றெல்லாம் சிந்தனை செய்தேன். நாளாக ஆக, என்னுடைய உள்ளத்தின் தாபமும் வளர்ந்து வந்தது. பொறுமைகுன்றியது. "ஏன் இன்னும் வரவில்லை?" என்று ஊர் பெயர் தெரியாத என் கற்பனை மணாளனிடம் கோபம் கொள்ள ஆரம்பித்தேன். இன்னும் எங்கள் வீட்டு வாசலிலே நின்று தெரு வீதியில் அவர் வரவை எதிர் நோக்கலானேன்.

நான் பார்ப்பதற்கு நன்றாயிருப்பேனென்று அந்த நாளிலேயே எல்லோரும் சொல்வார்கள். "உன் அழகுக்காகவே உன்னை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய்விடுவான்" என்று என் பாட்டி சொல்வதுண்டு. இதைப் பற்றி நான் உள்ளுக்குள் ரொம்பவும் கர்வம் கொண்டிருந்தேன். நாலு பேர் உள்ள இடத்தில் இருக்கும் போதெல்லாம் எல்லோரும் என் அழகையே பார்த்துப் பிரமித்துப் போய் நிற்பதாக நான் எண்ணிக் கொள்வேன். என் வீட்டு வாசலிலே நிற்கும் போதும் இந்த அழகு கர்வம் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டு தானிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல், போவோர் வருவோர் எல்லோரும் என்னை உற்றுப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். இவ்விதம் பார்த்தவர்களில் நல்ல தோற்றமும் நாகரிகமும் வாய்ந்த இளைஞன் யாராவது இருந்தால், "என்னை மணந்து அழைத்துப் போக வரும் கந்தர்வ குமாரன் இவன் தானோ?" என்று எண்ணமிடுவேன்.

அந்த இளைஞர்களில் பலர் நான் நிமிர்ந்து பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு போய்விடுவார்கள்; இன்னும் சிலரைப் பார்த்ததும் எனக்கே வெறுப்பு உண்டாகிவிடும். ஒரு சிலர் மட்டும் சமிக்ஞைகளினாலும் நேரிலேயும் என்னிடம் காதல் பாஷை பேசத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களுடைய நிலைமை இன்னதென்று அறிந்ததும் எனக்குண்டான ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. ஒருவனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்; இன்னொருவன் வக்கீல் குமாஸ்தா; வேறொருவன் பெயில் ஆன பி.ஏ. - ஆகா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கந்தர்வ குமாரன் இவர்களிலே ஒருவனாக இருக்க முடியுமா? எல்லாம் மனோராஜ்யமா? வெறும் ஆகாசக் கோட்டையா? இவ்வளவு அழகையும் வைத்துக் கொண்டு, கேவலம் கன்னிகையாகவே, அப்பா அம்மாவுக்குப் பாரமாகவே இருக்கப் போகிறேனா! பகவானே! இதற்காகவா, எனக்கு இவ்வளவு அழகையும் அறிவையும் கொடுத்தாய்?

    அழகிலே மட்டுமல்ல? அறிவிலும் நான் நிகரில்லாதவள் என்று தான் அப்போதெல்லாம் எண்ணியிருந்தேன்! உண்மையிலேயே நான் எவ்வளவு மந்த அறிவு படைத்தவள் என்பதைப் பகவான் எனக்கு விரைவிலேயே காட்டிக் கொடுத்து விட்டார்.
    நான் என் வீட்டு வாசலில் நின்று ஸ்வயம்வரம் நடத்திய காலத்தில் ஒருநாள் கலாசாலை ஆசிரியர் ஒருவர் அந்த வழியே போவதைக் கண்டேன். அவருக்கு வயது சுமார் முப்பது தானிருக்கும். ஆனால், அவருடைய தலைப்பாகையும், நீளமாய்த் தொங்கிய கறுப்புச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அவருடைய வயதை அதிகப் படுத்திக் காட்டின. அவரைப் பார்த்தவுடனே எனக்கு ஒருவிதமான பயபக்தி உண்டாயிற்று. அவர் என்னைப் பார்த்த பார்வையோ என்னுடைய பயத்தை அதிகமாக்கியது. "ஏன் இப்படித் தெரு வீதியில் நின்று போவோர் வருவோரைப் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறாய்? நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு இது அழகா?" என்று அவர் என்னைக் கேட்பது போலிருந்தது. ஆனால் என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். "இவர் என்ன மகாப் பெரியவர். இவருக்கு எதற்காக நாம் பயப்பட வேண்டும்?" என்று நினைத்து நினைத்து அசட்டுத் தைரியத்தை அதிகமாக்கிக் கொண்டேன். அவர் வீதி வழியாகப் போகும் சமயம் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே வாசலில் போய் நிற்கவும், அவரை விழித்துப் பார்க்கவும் ஆரம்பித்தேன். இதெல்லாம் எனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அந்த வேடிக்கை விரைவில் வினையாக முடிந்தது.
    ஒரு நாள் என் தாயார் திடீரென்று கூப்பிட்டுப் பரவசமாகக் கட்டி அணைத்துக் கொண்டு, "அடி அம்பு! கடைசியில் உனக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டதடி, உன் கலி தீர்ந்து விட்டதடி! 'எப்போ வருவாரோ? எப்போ வருவாரோ?' என்று பாடிக் கொண்டிருப்பாயே? அவர் வந்துவிட்டாரடி!" என்றாள். அப்போது எனக்கு உடம்பெல்லாம் புளகாங்கிதம் ஏற்பட்டது. என் உள்ளத்திலே 'அவர் வந்து விட்டாரா? அவர் யார்? எப்படி இருப்பார்?' என்ற கேள்விகள் பொங்கின. ஆனால், வாயில் ஒரு வார்த்தையும் வரவில்லை. அம்மா அவளாகவே சொன்னாள்: "ஆமாண்டி கண்ணே! நிஜந்தாண்டி. இந்த ஊர் காலேஜிலே புரொபஸராம்! 250 ரூபாய் சம்பளமாம். ரொம்பப் படிப்பாளியாம். பிரின்ஸிபால் வேலை கூட ஆகுமாம். கல்யாணமே வேண்டாம் என்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்தாராம். உன் அதிர்ஷ்டம் அப்பேர்ப்பட்டவருடைய மனது மாறி விட்டது."
    இதற்குள் பாட்டி "அதுதான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நம்ம அம்புவின் அழகுக்காகவே அவளை யாராவது வந்து கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று அப்போதெல்லாம் என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கைப் படவில்லை" என்றார்.

காலேஜ் புரொபஸர் என்று அம்மா சொன்னதுமே என் மனது பதைத்தது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக "பாரடி அம்மா, பாட்டியை! என் அழகுக்காகவே யாரோ வந்து விட்டார்களாம்! நீ சொல்லுகிறவர் இன்னும் என்னை வந்து பார்க்கக் கூட இல்லை. அதற்குள்ளே பாட்டிக்கு அவசரம்!" என்றேன்.

    அப்போது அம்மா, புன்னகையுடன், "இல்லேடி கண்ணே; பாட்டி அவசரப்படவில்லை. கல்யாணம் நிச்சயமான மாதிரிதான். அவர் தினம் இந்த வீதி வழியாக காலேஜுக்குப் போகிற போது உன்னைப் பார்த்திருக்கிறாராம். அவரே அப்பாவைக் கூப்பிட்டனுப்பி, 'எனக்கு உங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க இஷ்டமா?' என்று கேட்டாராம். பணம் காசு என்று ஒன்றும் பேசப்படாது என்று சொல்லிவிட்டாராம். எல்லாம் தீர்மானமாகி விட்டது. முகூர்த்தத் தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்காகத்தான் அப்பா ஜோசியரண்டை போயிருக்கார்" என்று சொல்லி, ஆசையோடு என் நெற்றியில் கையை வைத்து திருஷ்டி கழித்தாள். நான் அவளிடமிருந்து திமிறிக் கொண்டு ஓடினேன். காமரா உள்ளுக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு தரையில் படுத்தேன். என் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிற்று. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.
    "அவரையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம்?" என்று எண்ணியபோது, ஒரு பக்கம் திகிலாயிருந்தது. இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருந்தது; அப்பேர்ப்பட்ட படிப்பாளி என் அழகு வலையில் விழுந்துவிட்டாரல்லவா? ஆனால் அந்த மனிதருடனா வாழ்க்கை முழுவதும் கழிக்கப் போகிறோம் என்று நினைத்தபோது, என்னமோ செய்தது.
    சற்று நேரத்துக்கெல்லாம் அம்மா கதவை இடித்தாள். "அம்பு! கதவைச் சாத்திக் கொண்டு என்ன செய்கிறாய்? அப்பா வந்துவிட்டார். முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறார்!" என்று குதூகலமான குரலில் சொன்னாள். நான் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அம்மா என் முகத்தைப் பார்த்து விட்டு, "அடி அசடே! அழுதாயா, என்ன?" என்று கேட்டாள். நல்ல வேளையாகப் பாட்டி, "அழுகையாவதடி; குழந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கடி!" என்றாள். அம்மா, "என் கண்ணே!" என்று என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
    சாதாரணமாய்க் குடும்பங்களில் அடியும் வசவும் பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்குக் கூடக் கல்யாணம் என்று ஏற்பட்டு விட்டால் தனி மகிமை உண்டாகி விடுகிறது. எல்லாரும் கல்யாணப் பெண்ணை அருமை பாராட்டவும் கொஞ்சவும் ஆரம்பித்து விடுகிறார்கள். ஏற்கனவே நான் செல்லப் பெண்; அதிலும் இப்போது எனக்கு 'அதிர்ஷ்டம்' வேறே வந்திருந்தது. ஆகவே எல்லாரும் என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்லவா வேண்டும்?
    கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. அம்மா அப்பா முதலியவர்களுக்குத் தலைகால் தெரியவில்லை. 'தடபுடல் ஒன்றும் வேண்டாம்' என்று மாப்பிள்ளை சொன்ன போதிலும் 'கிடைக்காத சம்பந்தம் கிடைத்திருக்கிறது' என்ற பெருமையினால் அப்பா ஆடம்பரமாகவே கல்யாண ஏற்பாடுகளைச் செய்தார்.
    குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தது. எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். மாப்பிள்ளை நலங்கிடுவதற்கு வரவில்லை என்ற ஏமாற்றம் அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் உண்டு. இதை மறைப்பதற்காக அம்மா, "அவர் என்ன சாமான்யப்பட்டவரா? எல்லாரையும் போல் நலங்கிட உட்காருவாரா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்! இன்னும் என்னை அடிக்கொரு தடவை கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்து, "நீ அதிர்ஷ்டக்காரி அம்பு! கொடுத்து வைத்தவள்" என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
    அந்த நம்பிக்கையுடனேயே அம்மா என் கல்யாணமாகிச் சில காலத்துக்கெல்லாம் கண்ணை மூடினாள்.
    நானும் இன்றைக்கு இந்தச் சந்தோஷமான இடத்திலேயே நிறுத்திவிட்டு கண்ணை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்கிறேன்.

2. இல்லறம்

    நேற்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினது போல் சென்ற ஆறு மாதத்தில் தூங்கினதில்லை. ஆற்றில் அடைக்கலம் புகுவது என்று தீர்மானித்ததின் பலனோ, அல்லது என் கதையை எழுதத் தொடங்கி இளம் வயதின் ஞாபகங்களை எழுதியதனால் தானோ தெரியவில்லை.
    கல்யாணம் ஆன உடனேயே நானும் என் கணவரும் எங்கள் இல்வாழ்க்கையைத் தொடங்கினோம். இல்வாழ்க்கையைக் குறித்து நான் என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேனோ, அதற்கெல்லாம் நேர்மாறுதலாக எங்கள் வாழ்க்கை நடந்தது.
    புருஷர்கள் மனைவிகளை ஆடுமாடுகளைப் போல் நடத்துவதையும், அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவ்விதமாக என்னை அவர் கொடுமைப் படுத்தவில்லை. என்னை வைதோ, கோபமாகப் பேசியதோ கூடக் கிடையாது. வெகு மரியாதையுடன் என்னை நடத்தினார். பேசும்போதெல்லாம் இனிய வார்த்தைகளையே பேசினார். இதனாலெல்லாம் எனக்கு மனநிம்மதி ஏற்படவில்லை. ஏனோ, துக்கம் துக்கமாக வந்தது.
    என் அழகையோ, அலங்காரத்தையோ அவர் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.
    சில சமயம் அவர் என்னை ஆவலுடன் உற்றுப் பார்ப்பார். ஏதோ சொல்லப் பிரயத்தனப்படுகிறவர் போல் தோன்றும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். வர வர, என் அழகை நான் வெறுக்க ஆரம்பித்தேன். அலங்காரம் செய்து கொள்வதில் என் ஆசை போய் விட்டது. சில நாள் குளிக்காமலும், நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமலும் தலை வாரிக் கொள்ளாமலும் இருப்பேன். அப்போதும் அவர் வாய் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டார்.
    அவருக்குச் சதா அவர் வேலையே சரியாயிருந்தது. காலேஜுக்குப் போகும் நேரம் போக அவருடைய புத்தக அறைக்குள்ளேதான் இருப்பார். அப்படி ஓயாமல் படிப்பதற்கு எழுதுவதற்கும் என்னதான் இருக்குமோ, எனக்குத் தெரியாது. அதாவது, அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் கணவர் காலேஜில் சரித்திரப் புரொபஸர் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்தியாவின் பழைய சரித்திரத்தைப் பற்றி அவர் ஏதோ முக்கியமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாராம். நமது இந்திய தேசத்துக்கும் சீனா தேசத்துக்கும் பழைய காலத்தில் ஏற்பட்டிருந்த உறவைப் பற்றி சில மிகவும் முக்கியமான உண்மைகளை அவர் கண்டுபிடித்தாராம். எங்கள் கல்யாணமான புதிதில் அவர் தம் ஆராய்ச்சியைப் பற்றிச் சில சமயம் என்னுடனே பேச ஆரம்பிப்பதுண்டு. ஆனால் அவர் சொல்வது ஒன்றுமே எனக்கு விளங்காது. அதிலே எனக்குச் சிரத்தையும் இல்லை. எனவே, அவர் பேசிக் கொண்டேயிருக்கும் போது, நான் நடுவில் "மெஜஸ்டிக் சினிமாவில் மேனகா படம் வந்திருக்காமே?" என்று சொல்லி வைப்பேன். அவருக்குச் சீ என்று போய்விடும். புத்தக அறைக்குப் போய் ஏதாவது எழுத ஆரம்பித்து விடுவார். எனக்கோ, அவர் சீன தேசத்தின் மேல் செலுத்தும் கவனத்தில் நூறில் ஒன்று என் மீது செலுத்தக் கூடாதா என்று தோன்றும்.
    இப்படி நாளாக ஆக, அவரும் நானும் எட்டி விலகிப் போய்க் கொண்டிருந்தோம். ஒரே வீட்டுக்குள் இருந்த போதிலும், சில தினங்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாத நிலைமை ஏற்பட்டு விட்டது. நாளுக்கு நாள் என்னுடைய மன நிம்மதி குலைந்து வந்தது. அவர் மேல் வெறுப்பும் கோபமும் வளர்ந்தன. என்னுடைய தாபத்தையும் கோபத்தையும் பன்மடங்கு அதிகமாக்கும்படியான ஒரு சம்பவம் இப்போது நேர்ந்தது.
    என் கணவருக்கு ஒரு தங்கை உண்டு. அவருடைய புருஷனுக்கு டில்லியில் வேலை. எனக்குக் கல்யாணமாகி மூன்று வருஷத்துக்குப் பிறகு ஒரு தடவை அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ராஜம் முதலில் வந்துவிட்டாள். அவள் புருஷன் தம் சொந்த ஊருக்குப் போய் விட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்தார். அவர் வருவதற்கு முன் அந்த ஒரு வார காலமும் எனக்குச் சிறிது உற்சாகமாயிருந்தது. ராஜம் எங்கள் கல்யாணத்தின் போது கூட பரிகாசம் செய்து மானத்தை வாங்கினாள். "அண்ணா நித்திய பிரம்மச்சாரி என்று சொல்லிக் கொண்டிருந்தான்; பிள்ளையாருக்குக் கல்யாணம் ஆகும் போது தான் தனக்கும் கல்யாணம் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்தான். பொம்மனாட்டி என்றாலே தலையைக் குனிந்து கொள்வான். அப்படிப்பட்டவனை உன் மாய வலையில் சிக்க வைத்து விட்டாயேடி! என்ன பொடி போட்டு மயக்கினாயடி?" என்றெல்லாம் கேலி செய்தாள். என் மேனி நிறம், முகவெட்டு, கண்ணின் அழகு இதையெல்லாம் பற்றி அவள் வர்ணித்து, "அண்ணா காத்திருந்தாலும் காத்திருந்தான், முதல் நம்பர் அழகியாகப் பார்த்துப் பிடித்தான்" என்று அவள் சொன்ன போதெல்லாம் நான் வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாலும் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷமும் கர்வமும் அடைந்தேன்.

ஆகவே, ராஜம் இப்போது வந்ததும் எனக்கு உற்சாகமாயிருந்தது. அவளும் முன்போலவே சிரிப்பும் பரிகாசமுமாய் இருந்தாள். அவளுடைய பரிகாசங்கள் எனக்கு முன்போல் சந்தோஷத்தை உண்டாக்கவில்லையானாலும், நான் என் மனோநிலையை வெளிக்குக் காட்டவில்லை. கூடிய வரையில் நானும் குதூகலமாயிருப்பதற்கு முயன்றேன். எங்களுடைய பரிகாசப் பேச்சுக்களில் சில சமயம் என் கணவரும் வந்து சேர்ந்து கொண்டார். என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மாறுதல் ஏற்படப் போவது போல் தோன்றியது.

    ஆம்; என் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படத்தான் செய்தது. ஆனால் நான் எதிர்பார்த்த முறையில் அன்று.
    ராஜம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு அவளுடைய கணவர் வந்து சேர்ந்தார். அவர் வண்டியிலிருந்து இறங்கியதும் அவர்கள் சந்தித்த காட்சியைப் பார்த்த போதே என் மனத்தில் முள் தைத்தது போலிருந்தது. ராஜமும் நானும் சந்தோஷமாகச் சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டிருந்ததற்கும் முடிவு ஏற்பட்டது. அவள் அவருடனேயே அதிக நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்குப் பேசுவதற்கு என்ன தான் இருக்குமோ என்று எனக்கு வியப்பாயிருந்தது. ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வதையும், கொஞ்சிக் குலாவுவதையும் பார்க்கப் பார்க்க என்னுடைய மனக் கசப்பு அதிகமாக வளர்ந்தது. சாயங்காலம் ஆனதும் அவர்கள் பாட்டுக்கு வெளியே கிளம்பி விடுவார்கள். கடைத்தெருவுக்கோ, கோயில் குளத்துக்கோ, சினிமா டிராமாவுக்கோ போய் விட்டு உல்லாசமாக இராத்திரி திரும்பி வருவார்கள். அப்போது என்னை என்னமோ செய்யும். வீட்டிலேயே இருப்பு கொள்ளாது. உள்ளுக்கும் வாசலுக்கும், மாடிக்கும் கீழுக்குமாக ஒரு காரியமும் இல்லாமல் போய் வந்து கொண்டிருப்பேன். அப்போது இவர் காலேஜிலிருந்து வருவார்; "எங்கே அவர்கள் இல்லையா?" என்று கேட்பார். எனக்குத் தொண்டை அடைக்கும். "சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்" என்பேன். மேலே நான் ஏதாவது சொல்லுவதற்குள், அவர் தம் அறைக்குப் போய்ப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்து விடுவார்.
    ஒரு நாளைக்கு ராஜமும் அவள் கணவரும் மாடி அறையில் இருந்தார்கள். அது எனக்குத் தெரியாமல் அந்த அறையின் கதவைத் திறந்து விட்டேன். அப்போது நான் கண்ட காட்சி என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருந்தது. ராஜத்தின் கணவர் தரையில் உட்கார்ந்திருந்தார். ராஜம் அவருடைய மடியிலே தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, அவர் குனிந்த வண்ணம் அவளுடைய கன்னங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அவசரமாக படீரென்று கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்கிப் போனேன். எதனாலோ எனக்கு அழுகை அழுகையாக வந்தது. கீழே ஓர் அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டேன். தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினேன்.
    அத்தனை காலமும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் இப்போது பொங்கிக் கொண்டு வந்தது. வெகு நேரம் வரையில் அழுது கொண்டிருந்தேன். கண்கள் வீங்கிப் போயின. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராஜம் வந்து கதவை இடித்தாள். நான் கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்து விட்டு, "ஐயையோ! இதென்னடி மன்னி" என்று அலறிவிட்டாள். "அசடே! பைத்தியமே! மாடிக்கு வந்து கதவைத் திறந்ததற்காகவா இப்படி அழுகிறாய்? என்னடி மோசம் முழுகிப் போயிற்று? இவர் அப்படியெல்லாம் சங்கோஜப்படுகிறவர் அல்ல. நீ வேணுமானால் பார்! நாளைக்கு நீ இருக்கிறபோதே என்னை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறேன். இதற்காக அழுவார்களா?" என்று இப்படிப் பேசிக் கொண்டே போனாள். அவளுடைய பேச்சு இன்னமும் என் நெஞ்சை அதிகமாகப் பிளந்தது என்பதை அவள் என்ன கண்டாள்?
    நான் மெதுவாகச் சமாளித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு, "அதற்காக இல்லை அக்கா! தலைவலி மண்டையைப் பிளக்கிறது!" என்றேன். உண்மையாகவே தலையையும் வலிக்கத்தான் செய்தது. கண்ணில் நீர் வரவேண்டியது தான். "இதோ நானும் வருகிறேன்" என்று எனக்குத் தலைவலியும் வந்து விடுவது வழக்கம்.
    அதற்கப்புறம் எனக்கு அடிக்கடி கண்ணீரும் தலைவலியும் சேர்ந்து வந்து கொண்டிருந்தன. ராஜம் இதனால் கவலையடைந்தாள். ஒரு நாள் அவள் அண்ணாவிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதிலே விழுந்தது. "ஏன் அண்ணா, மன்னி இப்படி இருக்கிறாள்?"
    "எப்படி இருக்கிறாள்?" என்றார் அவர்.
    "உனக்குக் கண்ணே இல்லையா, அண்ணா! ஓயாமல் அழுது அழுது மன்னிக்குக் கண் வீங்கிப் போகிறதே? தெரியவில்லையா?"
    "எல்லாம் தெரிகிறது! ராஜம்! ஆனால் நான் என்ன செய்யட்டும்? நான் உன் மன்னியைக் கல்யாணம் செய்து கொண்டது பெரிய பிசகு. புத்தி அப்போது கொஞ்சம் சபலித்துவிட்டது. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.
    "ரொம்ப அழகாயிருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதே, அண்ணா! வீட்டுக்கு வீடு வாசற்படி. அங்கங்கே அப்படித்தான் இருக்கும். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகப் போய்விடும்!" என்றாள் ராஜம்.
    சில நாளைக்கெல்லாம் ராஜம் ஊருக்குப் போய் விட்டாள். ஆனால், ஒன்றும் சரியாகப் போகவில்லை. நாளாக ஆக, என் மனக்கசப்பு வளர்ந்து கொண்டிருந்தது. நான் கண்ணீர் விடுவதையும் குப்புறப் படுத்துக் கொண்டு விம்முவதையும் அவர் சில சமயம் பார்ப்பார். அவருடைய மெல்லிய காலடி சத்தத்திலிருந்து அவர்தான் வருகிறார் என்று நான் தெரிந்து கொள்வேன். ஒரு வேளை அவர் என் பக்கத்தில் உட்காரமாட்டாரா, உட்கார்ந்து என்னைச் சமாதானப் படுத்த மாட்டாரா என்று சில சமயம் மனத்திற்குள் எண்ணுவேன். ஆனால், அவர் தலையில் அடித்துக் கொண்டு, "சனியன், பீடை!" என்று சொல்லி விட்டுப் போய்விடுவார். வேறு சில சமயம், "ஐயோ! என் புத்தி இப்படியா கெட்டுப் போக வேணும்?" என்று சொல்லிக் கொண்டே போவார்.
    நானோ, 'என்னத்துக்காகப் பகவான் நம்மைப் படைத்தார்?' என்று எண்ணமிடத் தொடங்கினேன். அவர் படைத்ததினாலேதான் என்ன? நல்ல வேளையாக, செத்துப் போவதை அந்தப் பகவானால் கூடத் தடுக்க முடியாதல்லவா?"
    "சாவு", "மரணம்" என்ற மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன்.
    எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே என் தாயார் காலமாகி விட்டாள் என்று சொன்னேனல்லவா? என் தகப்பனார் பிறகு வேலையிலிருந்து விலகிக் கொண்டார். என் மூத்த தமக்கை ஹைதராபாத்தில் இருந்தாள். அவளுக்குப் பெரிய குடும்பம். அப்பா, பேரன் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டு ஹைதராபாத்திலேயே இருந்தார். அவருக்கு என் தீர்மானத்தைக் குறித்துக் கடிதம் எழுத முயன்றேன். அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு நன்றாக எழுதத் தெரியாது. விஷயத்தைச் சொல்ல முடியாமல் திண்டாடினேன். ஆகவே, நாலைந்து தடவை கடிதத்தைப் பாதி வரையில் எழுதிக் கிழித்துப் போட்டு விட்டேன்.
    இப்படி நான் பாதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் மட்டும் நான் கிழித்துப் போடாமலே காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை! அவர் ஒரு வேளை எடுத்திருப்பாரோ என்று ஒரு கணம் சந்தேகம் உதித்தது. ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட சுபாவம் கிடையாது. என்னுடைய அறைக்குள்ளேயே அவர் வருவதில்லை. ஆனாலும், பின்னால் நடந்ததை எண்ணிப் பார்க்கும் போது, முதலில் நான் சந்தேகப்பட்டது தான் உண்மையோ என்றும் தோன்றுகிறது.
    கடைசியில், நான் என் தகப்பனாருக்குக் கடிதம் போடவேயில்லை. அதற்குள்ளேயே நான் எதிர்பாராத அந்த விபரீதச் சம்பவம் - என் வாழ்க்கையை அடியோடு மாற்றிய நிகழ்ச்சி நடந்து விட்டது.
    இரவு நேரங்களில் என் கணவர் வெகு நேரம் புத்தக அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார். நான் படுக்கை அறையில் கட்டிலில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பேன். சில சமயம் அழுது கொண்டே தூங்கி விடுவேன். அவர் வரும் போது விழித்துக் கொண்டிருந்தாலும், தூங்குவதுபோல் ஜாடை செய்வேன். அவர் வந்து படுத்து ஐந்து நிமிஷத்தில் காடாந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்.
    அன்று இரவு வரும் போது அந்த மாதிரி தான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். அவர் என் தலைமாட்டில் வந்து நின்ற போது எனக்குச் சற்று வியப்பாயிருந்தது. இதென்ன ஒரு நாளும் இல்லாத திருநாள்? எதற்காக இங்கே வந்து நிற்கிறார்? அடுத்த விநாடி, அவருடைய கரம் என்னுடைய நெற்றியை தொட்டது. இன்னும் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மூச்சை அடக்கிக் கொண்டிருந்தேன். ஆச்சரியம்! ஆச்சரியம்! அவர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்! கல்யாணம் ஆனதிலிருந்து, ஒரு தடவையாவது இம்மாதிரி அவர் செய்ததை நான் அறியேன்.
    பிறகு அவருடைய காலடிச் சத்தம் கேட்கவே கண்ணைச் சிறிது திறந்து பார்த்தேன். அவர் கதவை மெதுவாய்த் திறந்து கொண்டு வெளியே போனார். எனக்கு என்னமோ வயிற்றில் பகீர் என்றது. இன்னதென்று தெரியாத பீதி உண்டாயிற்று. சற்று உற்றுக் கேட்டேன். வாசற் கதவு திறக்கும் சத்தம் வெகு இலேசாகக் கேட்டது.
உடனே பரபரப்புடன் எழுந்திருந்தேன். அவருடைய அறைக்கு ஓடினேன். அவர் மேஜை மீது ஒரு கடிதம் எழுதி வைத்து, அதன் மேல் பாரமும் வைத்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். நான் பயந்தபடியே தான் அதில் எழுதியிருந்தது. இரண்டே இரண்டு வரிதான்!
    "அன்பார்ந்த அம்முலுவுக்கு,
    உனக்குப் பரிபூரண விடுதலை கொடுத்து விட்டு நான் போகிறேன். நீ சௌக்கியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறேன்!

இப்படிக்கு ...."

    கடிதத்தை அப்படியே போட்டு விட்டு, நான் வாசற்பக்கம் ஓடினேன். தெரு முனையில் அவருடைய வெள்ளை வேஷ்டி நட்சத்திர வெளிச்சத்தில் இலேசாகத் தெரிந்தது. அந்தத் திசையை நோக்கி ஓடினேன். அப்போது மேற்காற்று நாள்; ஹோ என்ற இறைச்சலுடன் காற்று 'விர் விர்' என்று அடித்துக் கொண்டிருந்தது. புழுதியை வாரி மேலே அடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் தலைவிரி கோலமாக ஓடினேன். தெருவில் ஒரு பிராணி கிடையாது. அந்தக் காற்றுக்கும் புழுதிக்கும் பயந்து தெரு நாய்கள் கூட வீட்டுத் திண்ணையில் பதுங்கிக் கிடந்தன போலும்! நான் நினைத்தபடியே அவர் தெரு முனையில் இருந்த சந்தில் திரும்பினார்.
    வேகவதி நதிக்குப் போகும் சந்து தான் அது. நானும் அந்தச் சமயத்தில் திரும்பப் போனேன். அவர் நதிக்கரையை அடைந்தார். நேரே நதியில் இறங்கி விட்டார்; நதியில் பிரவாகம் பூரணமாய்ப் போய்க் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தினால் பிரம்மாண்டமான அலைகள் கிளம்பிக் கரையை மோதிக் கொண்டிருந்தன. நான் நதிக்கரையை அடைந்த போது அவர் வெள்ளத்தில் மார்பு அளவு ஜலத்துக்குப் போய் விட்டார். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. கூச்சல் போட வரவில்லை. ஒரு கணம் மங்கிய இருட்டில் அவர் தலை மட்டும் வெள்ளத்தின் மேல் தெரிவது போலிருந்தது! அடுத்த கணம் தலையும் வெள்ளத்துக்குள்ளே போய்விட்டது. அப்புறம் ஒரே அந்தகாரந்தான்!
    சொல்ல முடியாத பீதி என்னைப் பற்றிக் கொண்டது. திரும்பி வீட்டை நோக்கி ஓடினேன்; கண் தெரியாமல் குருட்டாம் போக்காய் ஓடினேன். வழியில் பலமுறை தடுக்கி விழுந்தேன்! வீட்டுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தேனோ தெரியாது. அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு தரையில் விழுந்தேன். மனத்தினால் ஒன்றுமே சிந்திக்க முடியவில்லை. தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் உணர்ச்சியேயில்லாமல் மரக்கட்டையைப் போல் கிடந்தேன். ஆனால், மார்பு மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த அடிப்பானது, 'விடுதலை விடுதலை விடுதலை' என்ற பல்லவிக்குத் தாளம் போடுவது போலிருந்தது.

3. வெள்ளித்திரை

    நாளைய தினம் அமாவாசை!
    சென்ற மூன்று இரவுகளில் நான் எழுதியதையெல்லாம் இன்று மத்தியானம் படித்துப் பார்த்தேன். இடையிடையே சில சம்பந்தமில்லாத சொற்களும், அர்த்தமில்லாத வாக்கியங்களும், குழப்பமான எழுத்துக்களும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் அடித்துச் சரிப்படுத்தினேன்.
    பகவானே! நாளைய இராத்திரி வரையில் எனக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். பிறகு வேகவதியில் அடைக்கலம் புகுந்து உன் பாதாரவிந்தத்தை வந்து அடைவேன்.
    மேலே கூறிய விபரீத சம்பவம் நடந்த போது, அப்பா சென்னைப் பட்டணத்தில் என் இன்னொரு அக்கா வீட்டில் இருந்தார். என் தந்தியைப் பார்த்துவிட்டு, அவர் ஓடி வந்தார்; நல்லவேளையாக, என் கணவர் எழுதி வைத்த சீட்டைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவு நான் கண்டதை அப்பாவிடம் கூடச் சொல்லவில்லை.
    அப்பா அந்தக் கடிதத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் ஏதேதோ முயற்சி செய்து பார்த்ததாகவும் தகவல் ஒன்றும் தெரியவில்லையென்றும் சொன்னார்கள்.

சில சமயம் வெள்ளத்தில் போனவர்களின் உடல்கள் கரையில் ஒதுங்குவது வழக்கமல்லவா? அந்த மாதிரி அவருடைய உடல் ஒதுங்குமோ என்று சில சமயம் நான் எண்ணி நடுங்குவேன். ஒரு வாரம் வரையில் அம்மாதிரி எதுவும் செய்தி வராமலிருக்கவே, இந்தப் பாவி உள்ளத்தில் ஒருவித அமைதி உண்டாயிற்று. ஏனெனில், அவர் நிச்சயமாக இறந்த செய்தி தெரிந்தால் என்னை இல்லாத அலங்கோலங்கள் எல்லாம் செய்து விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் பயந்தேன்.

    சில நாளைக்குப் பிறகு அப்பா என்னைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துப் போனார். அங்கே மீனா அக்கா வீட்டில் தங்கினோம். மீனா அக்காவின் புக்ககத்தில் எல்லோரும் குஷிப் பேர்வழிகள். நாகரிக வாழ்க்கையில் பற்று உடையவர்கள். அதோடு சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஓயாமல் சங்கீதம், நாட்டியம், நாடகம், சினிமா இவைகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட இடத்திலே இருந்தால், நான் என்னுடைய துக்கத்தை மறந்திருக்க முடியும் என்று என் தகப்பனார் எண்ணினார். அதோடு பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒன்றில் என்னைச் சேர்ந்து படிக்கச் செய்யலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.
    மீனா அக்கா வீட்டில், முதலில் சில நாள் என்னிடம் எல்லாரும் அனுதாபத்துடன் நடந்து கொண்டார்கள்; துக்க முகத்துடனே பேசினார்கள். வீட்டிலேயே சில நாள் கலகலப்புக் குறைவாயிருந்தது. நாளடைவில் நிலைமை மாறிப் பழையபடியே சிரிப்பும் விளையாட்டுமாயிருக்கத் தொடங்கினார்கள். எல்லாரும் சந்தோஷமாயிருக்கும் இடத்தில் நான் மட்டும் முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. என்னுடைய இளம் பிராயத்துக் குதூகல சுபாவம் மறுபடியும் மேலோங்கியது. எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகவும், சிரிக்கவும் தொடங்கினேன். அதோடு இல்லை; பாடவும் தொடங்கினேன்.

மீனு அக்காவின் வீட்டுக்கு ஒரு சிநேகிதர் அடிக்கடி வருவார். அவர் பெயர் பட்சிராஜன். மீனு அக்காவின் மைத்துனருடன் அவர் காலேஜில் ஒன்றாய்ப் படித்தவராம். தமிழ் டாக்கிகள் ரொம்பக் கேவலமாயிருப்பது பற்றியும் அவற்றைச் சீர்திருத்த வேண்டியதைப் பற்றியுமே அவர் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். பாட்டில் அவருக்கு ரொம்பப் பிரியம். ஒருநாள் நான் பாடுவதைக் கேட்டு விட்டு அவர், "இது யார் இவ்வளவு அற்புதமாய்ப் பாடுகிறது? என்ன மதுரமான சாரீரம்? மைக்குக்கு எவ்வளவு பொருத்தமான குரல்" என்று சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. எனக்குப் புளகாங்கிதம் உண்டாயிற்று. நாளடைவில் என்னுடைய கூச்சத்தை விட்டு, புருஷர்களுக்கு முன்னால் பாட ஆரம்பித்தேன். நான் பாடும் போது அவர் அப்படியே மெய் மறந்து கேட்பார். அவருக்குப் புகைப்படமெடுக்கத் தெரியும். ஒரு நாள் கேமரா எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் எல்லோரையும் படம் எடுத்தார். "உங்களையும் ஒன்று எடுத்து வைக்கட்டுமா?" என்றார்; முதலில் நான் மறுத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதின் பேரில் சம்மதித்தேன்! மறுநாள் அவர் படத்தை எடுத்துக் கொண்டு வந்து, "உங்களுடைய குரல்தான் 'மைக்'குக்கு ஏற்றது என்று நினைத்தேன், முகமும் திரைக்காகவே ஏற்பட்டது போலிருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். அதற்கு முன்னால் என்னை நன்றாகப் படம் எடுத்ததேயில்லை! அவர் எடுத்த படத்தைப் பார்த்ததும் எனக்கே கர்வமாயிருந்தது; "நாம இவ்வளவு அழகாகவாயிருக்கிறோம்?" என்று அதிசயித்தேன். "இந்த அழகினால் என்ன பிரயோஜனம்?" என்ற ஏக்கமும் மனத்தில் உண்டாயிற்று.

"அதற்குப் பிறகு அவர் இன்னும் பல தடவை என்னைப் படம் பிடித்தார்; அதோடு, "உங்களைப் போன்றவர்கள் சினிமாவில் சேர்ந்தால் தான், தமிழ் சினிமாவுக்கு விமோசனம்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். நானும் என் மனதில், "பிரபல நட்சத்திரம் ஆவதற்கே நான் பிறந்திருக்கிறேன்" என்று தீர்மானித்துக் கொண்டேன். டாக்கியில் நடிப்பதைப் பற்றியே கனவு காண ஆரம்பித்தேன்.

இம்மாதிரி என் மனம் சபலப்பட்டிருப்பதை என் அக்கா எப்படியோ தெரிந்து கொண்டாள். சில சமயம் நானும் பட்சிராஜனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் ஒட்டுக் கேட்டதாகத் தெரிகிறது. அவள் என்னைத் திட்ட ஆரம்பித்தாள். எனக்குக் கோபமாய் வந்தது. "உனக்கு என்ன? குழந்தை குட்டிகளுடனும் ஆசைக் கணவனுடனும் சௌக்கியமாயிருக்கிறாய். எனக்கு மட்டும் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டாமா? என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டேன். ஒரு நாள் விஷயம் முற்றி விட்டது. அக்கா பட்சிராஜனிடம் "சினிமா, சினிமா என்று சொல்லி ஏன் அவள் மனத்தைக் கெடுக்கிறீர்கள்? இப்படியெல்லாம் பேசுவதாயிருந்தால், நீங்கள் இந்த வீட்டுக்கு வரவேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே நான், "அவர் இந்த வீட்டுக்கு வரக் கூடாதென்றால் நானும் போய்விடுகிறேன்" என்றேன். அக்கா திகைத்துப் போனாள். கடைசியில், "உங்கப்பா வரட்டும்; அவரைக் கேட்டுக் கொண்டு எது வேணுமானாலும் செய்" என்றாள். அச்சமயம் ஹைதராபாத்துக்குப் போயிருந்த அப்பாவுக்குக் கடிதம் எழுதினாள்.
    அப்பா வந்த பிறகு சில நாள் அவருக்கும் எனக்கும் ஒரே போராட்டமாயிருந்தது. "நம் குலத்தில் உண்டா? கோத்திரத்தில் உண்டா? சினிமாவில் நடிக்கவாவது? கூடவே கூடாது!" என்று சொன்னார். "எந்த விதத்திலாவது பெயர் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே எனக்கு வேண்டியதில்லை" என்றேன் நான். கடைசியில் நான் தான் வெற்றி பெற்றேன். என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தவர் பட்சிராஜன் தான். அவரை எப்படியோ அப்பாவுக்குப் பிடித்து விட்டது. ஒரு நாள் பட்சிராஜன் வந்து, குடும்ப ஸ்திரீகளையே பெரும்பாலும் நடிகைகளாகத் தேர்ந்தெடுத்து ஒரு டாக்கி எடுக்கப் போவதாகவும், எங்களுக்குச் சம்மதமானால் என்னைக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுப்பதாகவும் சொன்னபோது, அப்பா தம் சம்மதத்தைக் கொடுத்துவிட்டார். அன்றிரவு அளவிறந்த சந்தோஷத்தினால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

பின்னால் நான் எவ்வளவோ ஏமாற்றத்துக்கும் மனத்துயருக்கும் ஆளாக வேண்டியிருந்தது. கதாநாயகி வேஷம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு மட்டமான வேஷந்தான் கிடைத்தது. இந்தத் தடவை அந்த வேஷத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி விட்டால், அடுத்த தடவை கதாநாயகி வேஷம் கிடைக்குமென்று பட்சிராஜன் தேறுதல் கூறினார். எதனாலோ அவர் பேச்சில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டாயிற்று. உண்மையில் அவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது. முதல் டாக்கியில் மட்டமான வேஷத்திலேயே நான் நல்ல பெயர் சம்பாதித்தேன். அது வெளியான சில நாளைக்குள்ளேயே, இன்னொரு டாக்கிக்குக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக ஒப்பந்தம் நடந்தது. பட்சிராஜனிடம் எனக்கு அளவிறந்த நன்றியுண்டாயிற்று. "உங்களால் அல்லவா எனக்கு இவ்வளவு பெருமையும் வந்தது?" என்று ஆயிரம் தடவை சொன்னேன். என்னால் ஒன்றுமே நடக்கவில்லை உங்களுடைய முகவெட்டுத்தான் காரணம்; உங்களுடைய சாரீரந்தான் காரணம்" என்று சொல்வார்.

    இரண்டாவது டாக்கி எடுப்பதற்காக நாங்கள் கல்கத்தா போனோம். அங்கே ஐந்து மாத காலம் தங்க வேண்டியதாக ஏற்பட்டது. இந்தப் படம் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், நடந்த ஒரு சம்பவம் என் மனத்தில் எப்படியோ மிக ஆழமாய்ப் பதிந்தது. "இது என்ன பிரமாத விஷயம்?" என்று நானே பல தடவை எண்ணமிட்டிருக்கிறேன். என்றாலும் எதனாலோ அச்சம்பவம் என் மனத்தில் மிகவும் முக்கியத்தை அடைந்துவிட்டது.

ஒரு நாளைக்கு ஸ்டுடியோவில், "இன்றைக்கு யாரோ ஒரு பிரமுகர் ஷுட்டிங் பார்க்க வரப் போகிறார்" என்று பிரஸ்தாபம் வந்தது. அவரை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்தன. வரப்போகிறவர்களின் பெயர் 'பாபு சம்பு பிரஸாத்' என்று சொன்னார்கள். "அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா? எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!" என்று விசாரித்தேன். பாபு சம்பு பிரஸாத் மகா மேதாவி என்றும் அவருடைய ஆராய்ச்சிகள் அவரை உலகப் பிரசித்தமாக்கியிருக்கின்றன வென்றும், சமீபத்தில் அவருக்குச் சர்வகலாசாலையார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்றும் சொன்னார்கள். பட்சிராஜனே அவரைப் பற்றிப் பிரமாதமாகப் பேசினார். "ஒருவேளை இங்கே ஸெட்டுக்கு வந்தாலும் வருவார். அப்போது உன்னை அறிமுகப்படுத்தப் போகிறேன். நீ அவரிடம் தைரியமாகப் பேச வேண்டும்" என்றார். "அவர் என்ன பாஷையில் பேசுவார்?" என்று கேட்டேன். "இந்த வங்காளிகளே சுய பாஷையில் அபிமானம் கொண்டவர்கள். எப்போதும் வங்காளியில் தான் பேசுவார்கள். ஆனால் நாம் தென்னிந்தியர்கள் என்று தெரிந்தால் இங்கிலீஷில் பேசலாம். உனக்குத் தான் தெரியுமே? ஏதாவது கேட்டால் பளிச்சென்று பதில் சொல்லு" என்றார்.

அவ்வளவு பெரிய உலகப் பிரசித்தமான மேதாவியைப் பார்க்க நானும் ஆவலுடன் இருந்தேன். கடைசியாக அவர் மத்தியானம் வந்தார். வங்காளிகளில் பெரும்பாலாரைப் போல் அவரும் நீண்ட தாடி வளர்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெரிய கும்பலே வந்தது. ஸ்டுடியோ நிர்வாகிகள் அவருக்கு ரொம்பவும் மரியாதை செய்து எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தார்கள். எங்களுடைய ஸெட்டுக்கு அவர் வந்ததும், பட்சிராஜன் அவரை வரவேற்று, என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர் உயர் குடும்பத்துப் பெண். கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலேயே சினிமாவில் நடிக்க முன்வந்திருக்கிறார்" என்று அவர் கூறிய போது எனக்கு மிகவும் பெருமையாயிருந்தது. அவருக்கு மனத்திற்குள் நன்றி செலுத்தினேன். அப்போது அந்தப் பிரமுகர், என்னைப் பார்த்து, "நீங்கள் உயர் குடும்பத்துப் பெண்ணாயிருந்து இம்மாதிரி நடிப்புக் கலையில் சிரத்தை கொண்டது மிகவும் சந்தோஷிக்க வேண்டிய காரியம். உங்களைப் போன்றவர்களால் தான் சினிமா உத்தாரணம் ஆக வேண்டும். ஆனால், சினிமா தொழில் ஒழுக்கம் கெட்டுப் போகிறதென்று சாதாரணமாய் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. உங்களைப் போன்றவர்கள் அதைப் பொய்யாக்க வேண்டும்" என்றார். இதையெல்லாம் இங்கிலீஷில்தான் சொன்னார். என்னை என்னவோ செய்தது. அவருக்கு பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நா எழவில்லை. பட்சிராஜன் என்னைப் பார்த்து, "ஏதாவது பதில் சொல்லுங்கள்" என்றார். "எனக்காக நீங்களே சொல்லுங்கள்" என்றேன் நான். உங்களுடைய புத்திமதிக்காக மாலதி ரொம்பவும் வந்தனம் செலுத்துகிறாள்" என்றார் பட்சிராஜன். அப்போது பாபு சம்பு பிரஸாத் அவருடைய கூரிய கழுகுக் கண்களால் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விட்டார். அந்த மேதாவிக்கு நான் அச்சமயம் வந்தனம் செலுத்தாவிட்டாலும் இப்போது செலுத்துகிறேன். அவருடைய புத்திமதி என் விஷயத்தில் அநாவசியமென்றாலும், எவ்விதக் காரணமும் இல்லாமல், முன்பின் தெரியாத என்னிடம் அவர் சிரத்தை எடுத்துக் கொண்டாரல்லவா? அவருடைய பார்வையையோ, பேச்சையோ என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.

என் இரண்டாவது டாக்கியினால் என் புகழ் பிரமாதமாக வளர்ந்து 'ஓஹோ' என்று ஆகிவிட்டது. மாலதியின் படம் வராத பத்திரிகையே கிடையாது ('மாலதி' என்னுடைய வெள்ளித்திரைப் பெயர்; பட்சிராஜன் அளித்த பெயர்) தமிழ்நாட்டுப் பட்டணங்களின் சுவர்களில் எல்லாம் மாலதியின் புன்னகை வதனம் காட்சி தந்தது. இப்படி நான் புகழின் சிகரத்தையடைந்திருந்த சமயத்திலே தான், என் தந்தை என்னை இவ்வுலகில் அநாதையாக விட்டு விட்டுக் காலமானார். வெகு நாளாக எங்கள் குடும்பத்திலிருந்த சமையற்காரியைத் தவிர, நான் வேறு துணையில்லாதவளானேன்.

    ஆனால் அதிக நாள் துணையின்றி இருக்கவில்லை. இரண்டாவது டாக்கியில் என் புகழ் பெருகியதிலிருந்து அதுவரை என்னைப் பகிஷ்காரம் செய்திருந்த உறவினர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து உறவு கொண்டாடத் தொடங்கினார்கள். வெகு தூரத்து பந்துக்களெல்லாம் வந்தார்கள். சிலர் வேலைக்காக வந்தார்கள். சிலர், டாக்கியில் சேர்வதற்குச் சிபாரிசுக்காக வந்தார்கள். வேறு சிலர் பொருளுதவி தேடி வந்தார்கள். சிலர், பிரபல நட்சத்திரத்தின் பந்து என்ற பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காகவே வந்தார்கள். "அபலைப் பெண்ணாச்சே?" என்று இரக்கப்பட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனித்து ஒழுங்குபடுத்துவதற்கு அநேகர் சித்தமாயிருக்கிறார்கள்!
    இதனாலெல்லாம் நான் அடைந்த தொல்லைகளைச் சொல்லி முடியாது. அவர்களை எல்லாம் வைத்துச் சமாளிப்பது பெருங் கஷ்டமாயிருந்தது. இவ்வளவு தொல்லைகளுக்கிடையில், எனக்கு உண்மையில் உற்ற சிநேகிதராக நடந்து கொண்டவர் பட்சிராஜன் ஒருவர் தான்.
    அவரால் எனக்கு ஒரு விதமான கஷ்டமும் கிடையாது! எல்லாவிதத்திலும் ஒத்தாசையாகத்தான் இருந்தார். அப்பா காலமான பிறகு அவரிடம் தான் என் பணம் வரவு செலவுகளை ஒப்புவித்திருந்தேன். அவரும் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் கணக்கு ஒப்புவித்து வந்தார்.
    எனக்கும் அவருக்கும் இருந்த உறவைப் பற்றி ஊரில் பல வகையாகப் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவரோ என்னுடைய மனப் போக்கை அறிந்து, என்னை மிகவும் மரியாதையாக நடத்தி வந்தார். ஒரு தடவையாவது அவர் வரம்பு மீறி நடந்ததில்லை. என் மனத்தில் மட்டும் சில காலமாக ஒரு சஞ்சலம் தோன்றியிருந்தது. 'எத்தனை நாளைக்கு இம்மாதிரி நாதனற்றவளாக இருப்பது? இவ்வளவு தூரம் நமக்கு உதவி செய்திருப்பவரை ஏன் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது?' என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று.
இப்படியிருக்கையில் ஒருநாள் பட்சிராஜன் அந்த ஆச்சரியமான - என்னை ஒரேயடியாகப் பெருமையின் சிகரத்துக்குக் கொண்டு போன செய்தியுடன் வந்தார். "மாலதி! இன்று தான் என் உள்ளம் குளிர்ந்தது. உன்னுடைய அடுத்த காண்டிராக்ட் ஒரு லட்சத்திற்குக் குறையக் கூடாது என்று தீர்மானித்தேன். இதோ ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்குக் காண்டிராக்ட்!" என்றார். நான் பிரமை பிடித்தவள் போலானேன். பத்து நிமிஷம் வரையில் என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. பிறகு "இது கனவில்லையே? டாக்கியில் ஒரு காட்சி இல்லையே?" என்று கேட்டேன். "இதோ பார்!" என்று ஒரு நகல் ஒப்பந்தத்தில் எண்ணாலும் எழுத்தாலும் 'ஒரு லட்சத்துப் பத்தாயிரம்' என்று போட்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார். "நல்ல நாள் பார்த்து கையெழுத்துப் போட வேண்டியது தான் பாக்கி" என்றார். நான் அவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் ததும்ப, நாத் தழுதழுக்க, "என் உயிர் உள்ளவரையில் நான் உங்களை மறக்க மாட்டேன்" என்றேன். ஆம்; அவரை என் உயிர் உள்ளவரையில் - நாளை நள்ளிரவு வரையில் - என்னால் மறக்க முடியாது! ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் செய்த அற்புதமான காரியத்தையும் நான் மறக்க முடியாது தான்!

சீக்கிரத்திலேயே மேற்படி ஒப்பந்தம் முடிந்தது. கையெழுத்து ஆயிற்று. தென்னிந்தியாவின் டாக்கித் தொழிலை முழுவதும் கைப்பற்றுவதென்று இலங்கையிலிருந்து ஒரு முதலாளி ஏராளமான பணத்துடன் வந்திருந்தார். தென்னிந்தியாவிலுள்ள பிரபல நட்சத்திரங்களையெல்லாம் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தார். அவர் தான் என்னையும் மேற்படி பெருந் தொகைக்கு ஒப்பந்தம் செய்தார். நாற்பதினாயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்தார்.

    ஒரு மாதத்திற்குப் பிறகு - டாக்கி எடுப்பதற்குப் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த இடி போன்ற செய்தி வந்தது. என் ஆகாசக் கோட்டை இடிந்து தூள் தூளாயிற்று.
    பட்சிராஜன் திடீரென்று காணாமற் போய்விட்டார்!
    சினிமா உலகில் 'எக்ஸ்ட்ரா' பெண்கள் என்று ஓர் இனம் உண்டு. தோழிப் பெண்கள் முதலிய சில்லறை வேஷங்களில் நடிப்பதற்கு அவர்களை அன்றாடம் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட 'எக்ஸ்ட்ரா' பெண் ஒருத்தியுடன் பட்சிராஜன் அந்தர்த்தியானமாகி விட்டார்!
    அவர் மட்டும் அந்தர்த்தியானமாகவில்லை. பாங்கியில் இருந்த என் பணம் ரூ.40,000மும் அவரோடு அந்தர்த்தியானமாகி விட்டது.
    பட்சிராஜனை நான் பரிபூரணமாய் நம்பி, அவரிடமே என் வரவு செலவை ஒப்புவித்திருந்தேன் என்று சொன்னேனல்லவா? புதிய ஒப்பந்தப்படி வந்த அட்வான்ஸ் தொகையை அவர் தம் பேரிலேயே பாங்கில் போட்டுக் கொண்டிருந்தார். அவரே அதை வாங்கிக் கொண்டும் போய் விட்டார்.
    "ஆகா! இந்தப் பட்சிராஜன் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர்? வேறொரு மனிதனாயிருந்தால், நாம் இப்படித் தன்னந்தனியாய் அவரையே நம்பி இருப்பதற்கு இவ்வளவு நேர்மையாய் இருப்பானா? நம்மிடம் ஒன்றையுமே கோராமல் இப்படி அன்புடன் இருக்கிறாரே? இவர் தெய்வப் பிறவிதான்!" என்று பலமுறை நான் எண்ணியது உண்டு.

பட்சிராஜன் என்னத்தைக் கோரி என்னிடம் அவ்வளவு அன்பாயிருந்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது.

4. வீ ழ்ச்சி

    பட்சிராஜன் பறந்து போய் ஏறக்குறைய இப்போது ஒன்றரை வருஷமாகிறது. இந்த ஒன்றரை வருஷத்தில் என்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே எனக்குப் பயங்கரம் உண்டாகிறது; மூளை குழம்புகிறது.
    இலங்கை முதலாளிக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தின்படி டாக்கியில் நடித்தேன். இந்த டாக்கி எடுத்து முடிவதற்குள் ஒரு வருஷத்திற்கு மேலாயிற்று. இந்தக் காலத்தில் முதலாளி, டைரக்டர், ஸ்டூடியோ மானேஜர், பிரதான ஆண் நடிகர் எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்ல முடியாது. ஆண் துணையில்லாமல் ஒரு அபலை ஸ்திரீ அகப்பட்டுக் கொண்டால், உலகத்தில் - அதுவும் சினிமா உலகத்தில் - அவளை என்ன பாடுபடுத்தி வைப்பார்கள் என்னும் பாடத்தை நன்றாக அறிந்து கொண்டேன். என்னுடைய பரம விரோதிக்குக் கூட அப்பேர்ப்பட்ட கதி வரவேண்டாமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

தொல்லை பொறுக்க முடியாமல், பல தடவை "என்னால் முடியாது" என்று நின்று விடத் தோன்றியது. ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தேன். டாக்கி முடிந்ததும், அட்வான்ஸு தொகை போகப் பாக்கி பணம் வந்துவிடுமல்லவா? அப்புறம் சினிமாவுக்குத் தலை முழுகி விட்டு 'ராமா கிருஷ்ணா' என்று பகவானைத் தியானித்துக் கொண்டு காலங் கழிக்கலாம். அந்த எண்ணத்திலேதான் பட்சிராஜன் ரூ.40,000 கொண்டு போனதைப் பற்றிக் கூட நான் அதிகம் கவலைப்படவில்லை.

டாக்கியின் முடிவு நெருங்க, எனக்குச் சேர வேண்டிய பாக்கி பணத்தைச் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு வந்தது. எனவே, டாக்கி முடிவதற்குள் இன்னும் ஒரு பகுதியாவது வாங்கி விட வேண்டுமென்று நினைத்து ஒரு நாள் முதலாளியின் ஆபீஸுக்குப் போய்ப் பணம் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்து விட்டு, "இந்த டாக்கி முடிந்து அடுத்த டாக்கியும் முடியும் வரை பணம் என்ற பேச்சைப் பேசாதே!" என்றார். எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. "என் உயிர் போனாலும் நான் இன்னொரு டாக்கியில் நடிக்க மாட்டேன்" என்றேன். "அப்படியானால் ஒப்பந்தப்படிஅட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கக்கிவிட வேண்டும்!" என்றார். அப்போதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்தப் பாதகன் பட்சிராஜன் என்னை எப்பேர்ப்பட்ட படுகுழியில் தள்ளிவிட்டுப் போய்விட்டான் என்று புரிந்தது. ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் ஒரு டாக்கிக்கு அல்ல, நாலு டாக்கிக்கு என்று தெரிந்தது.

    இந்த செய்தியினால் திகைத்துப் போய் நான் வீடு திரும்பினேன். முதலில் நான் நம்பவே இல்லை. வீடு திரும்பியதும், ஒப்பந்தத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் நாலு படங்களுக்கு என்று தான் கண்டிருந்தது. என் கொஞ்சப் பிராணனும் போய் விட்டது. நாலு படங்களில் நடிப்பதா? அதுவும் இந்தப் பாவிகளிடம்? ஒரு நாளும் இல்லை; உயிர் போனாலும் இல்லை.
    இன்னொரு நாள் முதலாளியிடம் பேசினேன். நல்ல வார்த்தையாக என்னை ஒப்பந்தத்திலிருந்து விடுதலை செய்து விடும்படி கேட்டேன். அவர் பிடிவாதமாக 'முடியாது' என்றார். மேலும் நான் வற்புறுத்தியபோது, "அட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கொண்டுவை! விடுதலை செய்கிறேன்" என்றார். அதற்கு "நான் எங்கே போவேன்? பட்சிராஜன் கொண்டுபோய் விட்டாரே?" என்றேன். "எனக்குத் தெரியும், உங்கள் மோசடியெல்லாம்! நீங்கள் இரண்டு பேரும் கலந்து பேசிக் கொண்டு, இப்படித் தகிடுதத்தம் செய்யப் பார்க்கிறீர்கள்!" என்றார்.

அப்போது எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அந்த ஆவேசத்தில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் இரைந்து கத்தினேன். மேலே பேச்சு முற்ற முற்ற என்னவெல்லாமோ சொல்லி விட்டேன். "எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்." "ஸ்டுடியோவைக் கொளுத்தி விடுவேன்" என்று சொன்னதெல்லாம் சொப்பனத்திலே சொன்னது போல் எனக்குப் பிற்பாடு ஞாபகம் வந்தது. இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

அதுமுதல் நான் ஸ்டூடியோவுக்கு வர மறுத்து விட்டேன். ஒரு நாளைக்கு ஸ்டூடியோ மானேஜர் வந்து என்னை நல்ல வார்த்தை சொல்லி அழைத்துப் போனார். முதலாளியின் ஆபீஸில் போய் நான் உட்கார்ந்ததும் என்னுடைய குரல் அடுத்த அறையிலிருந்து வருவதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். முன்னொரு நாள் முதலாளியிடம் இதே ஆபீஸில் பேசியதெல்லாம் தெளிவாகக் கேட்டது. "எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்" "ஸ்டூடியோவைக் கொளுத்தி விடுவேன்" என்று நான் கத்தியதெல்லாம், திரும்பக் கேட்டது!

    எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது. அப்போது அந்த முதலாளி யமன் சொன்னான். 'உனக்கு இருபது வருஷங் கடுங்காவல் தண்டனை விதிப்பதற்கு இதோ சாட்சியம் இருக்கிறது. என்ன சொல்கிறாய்? சொன்னபடி கேட்டுக் கொண்டு நாலு படங்களில் நடிக்கிறாயா? அல்லது இன்றைக்கே அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கட்டுமா?
    நான் பதில் ஒன்றும் சொல்லாமல் பாதிப் பிராணனுடன் வீடு போய்ச் சேர்ந்தேன். ஆனால், என் மனது மட்டும் இரும்பாயிற்று. அன்று வேண்டுமென்றே எனக்கு ஆத்திரமுண்டாக்கிக் கண்டபடி பேசும்படி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒலிப்பதிவு செய்ய முன் கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் பேசியதையெல்லாம் வெட்டியெறிந்து விட்டு, என் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு என்னைப் பலவந்தப் படுத்தப் பார்க்கிறார்கள். என்ன கேவலமான சூழ்ச்சி. என்ன இரக்கமற்ற அக்கிரமம்!
 "நமக்காச்சு; இவர்களுக்காச்சு. என்ன ஆனாலும் இனிமேல் படத்தில் மட்டும் நடிப்பதில்லை" என்று உறுதி செய்து கொண்டேன். இதை எப்படிச் சாதிக்கலாம் என்று அன்றிரவெல்லாம் ஒரு விநாடி கூடக் கண்ணை மூடாமல் சிந்தனை செய்தேன். கடைசியில், ஒரு யுக்தியைக் கண்டு பிடித்தேன்!
    வேறொன்றுமில்லை. பல கதைகளில் கதாநாயகிகள் கையாண்டிருக்கும் யுக்திதான். ஆனால் அந்த யுக்தி என் விஷயத்தில் என்ன விபரீதமான பலனைக் கொடுத்திருக்கிறது? ஸ்வாமி! பகவானே!
    நல்ல வேளையாக, இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. இந்த ஒரு மணி நேரம் என் அறிவைத் தெளிவாக வைப்பாய், ஸ்வாமி!
    யுக்தி இன்னதென்று சொல்லவும் வேண்டுமா! பைத்தியம் மாதிரி நடிக்கும் யுக்திதான். மறுநாளே அதைக் கையாள ஆரம்பித்தேன். சமையற்கார அம்மாளிடம் மட்டும் விஷயத்தை அந்தரங்கமாகச் சொல்லி விட்டு மற்றபடி யார் வந்து கேட்டாலும் "ஆமாம்; பட்சிராஜன் பறந்து போய் விட்டார்" என்று பதில் சொல்ல, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
    டாக்கி முதலாளி என்னவெல்லாமோ பிரயத்தனம் செய்தார். யார் யாரோ டாக்டர்களையெல்லாம் பிடித்து அனுப்பினார். எல்லோருக்கும் நான் பல்லவியைப் படித்தேன். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
    இவ்விதம் நாள் போய்க் கொண்டிருந்தது. என்னைப் போல் கிட்டத்தட்ட உருவமுள்ள ஒருத்தியைப் பிடித்துப் பாக்கிப் படத்தை எப்படியோ முடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், முதலாளி மட்டும் என்னை விடுவதாகக் காணவில்லை. மறுபடியும் மறுபடியும் என் உடம்பு எப்படியிருக்கிறதென்று பார்க்க யாரையாவது அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
    என் உடம்பு நன்றாய்த்தானிருந்தது. ஆனால் நாளாக ஆக, என் அறிவுக்குத் தான் ஏதோ ஏற்பட்டு வந்தது. இரவில் தூக்கம் என்பது அடியோடு போய் விட்டது. திடீரென்று இருள் சூழ்ந்தது போல் அறிவு சூனியமாகி விடும். அப்போது என் வாய் மட்டும் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கும். நான் பைத்தியம் என்று நடித்தது போக, உண்மையாகவே எனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு வருகிறது என்பதை உணரலானேன். சமையற்கார அம்மாள் என் விஷயத்தில் காட்டிய கவலையிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்!
    ஒரு பெரிய பீதி என்னைப் பிடித்துக் கொண்டது. பைத்தியம் முற்றிய ஸ்திரீகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பயங்கர அலங்கோல நிலைமையை நானும் அடைந்து விடுவேனோ? ஒரு நாளும் இல்லை. இப்படிப்பட்ட கதி நேர்வதற்கு முன்னால், அறிவுத் தெளிவு சிறிதேனும் இருக்கும் போதே, என் துயர வாழ்க்கையை முடித்துவிட வேண்டும். இந்த தீர்மானத்துடனே தான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன்.
    கதை முடிந்து விட்டது. யாராவது இதைப் பார்ப்பார்களோ? பார்த்து எப்போதாவது பிரசுரிப்பார்களோ, நான் அறியேன். என்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டேன்... இதோ மணி பன்னிரண்டு அடிக்கிறது! கிளம்ப வேண்டியதுதான்.
    ஏழு வருஷங்களுக்கு முன்னால் ஓர் அமாவாசை இரவில் இப்படித்தான் இருள் சூழ்ந்திருந்தது! இன்று போலவே தான் அன்றும் மேல் காற்று 'விர் விர்' என்று வீசி வீட்டையே கிடுகிடுக்கச் செய்தது. வேகவதி நதியும் அன்று போலவே இன்றும் நொங்கும் நுரையுமாக அலையெறிந்து போய்க் கொண்டிருந்தது.
    "மறு உலகம் என்பது உண்டானால், அங்கே என் கணவரை நான் அவசியம் சந்திப்பேன். அவருடைய பாதங்களில் விழுந்து இந்தப் பாவியை மன்னியுங்கள்" என்று கேட்டுக் கொள்வேன். இதுதான் என் வாழ்க்கையில் கடைசி மனோரதம். இதற்காகத்தான் அதே வேகவதியாற்றுக்கு, அதே நள்ளிரவு நேரத்தில் கிளம்பிச் செல்கிறேன்!
    வேகவதித் தாயே! இதோ வந்து விட்டேன். மறு ஜன்மத்தில் உன்னிடம் அடைக்கலம் புகுந்து அமைதி பெறுகிறேன்.

முடிவு

    கனவிலும் நினையாத காரியம் நடந்துவிட்டது. கதைகளிலே கேட்டறியாத சம்பவம் நடந்துவிட்டது. என் வாழ்க்கை புனிதமாகி விட்டது. நான் புத்துயிர் பெற்றேன். என் குருட்டுத் தனத்தினால், நான் இழந்த பாக்கியத்தை மீண்டும் பெற்றேன்.
    வாழ்க்கை சோகமயமாயிருந்தபோது, என் கதையை எழுத வேண்டுமென்று தோன்றிற்று; இப்போது அந்த விருப்பம் கொஞ்சமும் எனக்கு இல்லை. ஆனாலும் அவருடைய வற்புறுத்தலுக்காகவே இதை இப்போது எழுதுகிறேன். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் அவர் படித்தார். "பாக்கியையும் எழுதிவிடு; பெயரையும் ஊரையும் மட்டும் மாற்றிப் பிரசுரித்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்கலாம்" என்றார்! உபயோகமோ, இல்லையோ, அவர் சொல்லியதற்காக எழுதி விடுகிறேன்.
    அன்றிரவு சரியாகப் பன்னிரண்டாவது மணிக்குப் புறப்பட்டு வாசற் கதவைச் சத்தமின்றித் திறந்து கொண்டு வெளியே வந்தேன். என் மனத்தில் ஓர் அதிசயமான அமைதி அப்போதே ஏற்பட்டு விட்டது. தெருவில் அந்த வேளையில் யாராவது வந்து தொலைக்கப் போகிறார்களே என்று சிறு கவலை மட்டும் இருந்தது; ஆனால் ஒரு பிராணியைக் கூடச் சந்திக்கவில்லை.
    நதிக்கரையை அடைந்ததும், பின்னால் காலடிச் சத்தம் கேட்டதுபோல் தோன்ற, நெஞ்சில் துணுக்கம் ஏற்பட்டது. "யாராவது வந்து தடுத்து விட்டால்?" என்று நினைத்ததும் கதிகலங்கிற்று. அவசரமாகவே ஜலத்தில் இறங்கினேன். வெள்ளம் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த தைரியம், துணிச்சல் எல்லாம் எப்படியோ போய், இன்னதென்று சொல்ல முடியாத பீதி ஏற்பட்டது. குளிரினால் நடுங்கிய உடம்பு, பீதியினால் அதிகம் நடுங்கிற்று. என்னையறியாமல் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டேன். இவ்வளவுடன் தண்ணீரில் மேலும் மேலும் இறங்கிக் கொண்டுதானிருந்தேன்! ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. வெள்ளத்தின் வேகம் இழுக்கத் தொடங்கியது. ஜலம் மார்பளவுக்கு வந்தது. இழுப்பின் வேகம் அதிகமாயிற்று. இனிமேல் நாம் விரும்பினாலும் கரையேற முடியாது என்று தோன்றிய அதே சமயத்தில், பின்னால் யாரோ தண்ணீரில் இறங்குவதுபோல் சலசலவென்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்த இருட்டில் ஓர் உருவம் - மனித உருவந்தான் - விரைவாக என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்ததாக மங்கலாகத் தெரிந்தது. என் வாழ்க்கையில் அதுவரையில் அறியாத பயங்கர பீதியை அந்தக் கணத்தில் நான் அடைந்தேன். ஒரே ஒரு கணந்தான். அடுத்த கணத்தில் அந்த உருவம் ஏழு வருஷங்களுக்கு முன்னால் அதே இடத்தில் மூழ்கி மறைந்த என் நாதரின் உருவம் தான் என்பதை அறிந்தேன். "கிறீச்" என்ற ஒரு சத்தம் என் வாயிலிருந்து வந்து, அந்த நதிப் பிரதேசமெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. அடுத்த கணம் நான் நீரில் மூழ்கினேன். ஒரு நொடிப் பொழுது, என் அறிவில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. பின்னர், அறிவைப் பேரந்தகாரம் வந்து சூழ்ந்தது.
    மறுபடியும் நான் கண்ணை விழித்தபோது அவருடைய மடியில் என் தலை இருப்பதையும், அளவிலாத பரிவுடனே அவர் என்னைக் குனிந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் கண்டேன். உலக வாழ்க்கையில் நான் அடையாத பாக்கியத்தை மறு உலகில் அடைந்திருப்பதாக முதலில் எனக்குத் தோன்றியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம். இது இந்த உலகம் தான் என்று தெரிந்தது. சற்று நேரம் பேச முடியவில்லை. மனம் மட்டும் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
    பேசும் சக்தி வந்ததும், "தாடி மீசையெல்லாம் எப்போது எடுத்தீர்கள்?" என்று கேட்டேன். அவர் ஆச்சரியத்தினால் பிரமித்து, "உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார். அதற்குப் பதில் சொல்லாமல் "தங்களுடைய புத்திமதியை நான் மறக்கவில்லை. அதை நிறைவேற்றினேன்" என்றேன். மீண்டும் அவர், "உனக்கு எப்படித் தெரிந்தது? எப்போது தெரிந்தது?" என்று கேட்டார்.
    "தண்ணீரில் மூழ்கியவுடனே பளிச்சென்று தெரிந்தது. அடுத்த நிமிஷம் நினைவு தப்பி விட்டது" என்றேன்.

... தொடர்ச்சி ...

    ஆம்; கல்கத்தா ஸ்டுடியோவில் என்னைப் பார்த்துப் புத்திமதி சொன்ன பாபு சம்பு பிரஸாத் என்னுடைய கணவர்தான். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடைய கூரிய கண்களின் பார்வை என் மனத்திற்குள்ளேயே பதிந்து கிடந்தது. நாங்கள் இல்லறம் நடத்திய போதெல்லாம், அம்மாதிரி அவர் என்னைப் பார்த்தது கிடையாது. மறுபடியும் அன்றிரவு கழுத்தளவு தண்ணீரில் நான் நின்று தத்தளித்தபோது, நட்சத்திர வெளிச்சத்தில் அதே பார்வையைக் கண்டேன். தண்ணீரில் மூழ்கிய தருணத்தில், "அந்த வங்காளிப் பிரமுகர் உண்மையில் என் கணவர்தான்" என்னும் உள்ளுணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய உள்ளுணர்வு உண்மையை சொல்லிற்று என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தினார்.

அவர் வீட்டை விட்டுக் கிளம்பிய போது நதியில் விழுந்து உயிரை விடுகிற எண்ணமே அவருக்கு இருக்கவில்லையாம். எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய்விடுவதென்று கிளம்பினாராம். நான் பின்னால் தொடர்ந்து வருவேன் என்று தெரிந்து கொண்டு நதியில் மூழ்கி விட்டதாக என்னை நம்பும்படி செய்துவிட்டால், நான் நிம்மதியாயிருப்பேன் என்றெண்ணி அவ்விதம் ஆற்றில் இறங்கி மூழ்கினாராம். கொஞ்ச தூரம் தண்ணீரிலேயே மூழ்கிச் சென்று பிறகு சத்தம் செய்யாமல் நீந்திக் கரையேறினாராம்.

முன்னாலேயே அவர் உத்தேசித்து வைத்திருந்தபடி, கல்கத்தாவுக்குச் சென்று, மாறு பெயர் வைத்துக் கொண்டு ஆராய்ச்சிகளை நடத்தி வந்த போதிலும், என்னுடைய ஞாபகம் மட்டும் அவருக்குப் போகவேயில்லையாம். சீக்கிரத்தில் நான் 'பிரபல நட்சத்திர'மாகி விட்டபடியால், என்னுடைய வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் அவரால் பத்திரிகைகளின் மூலம் கவனித்து வர முடிந்ததாம்.

கடைசியில், எனக்கு ஏதோ பெரிய சங்கடம் நேர்ந்துவிட்டதென்பதை ஒருவாறு தெரிந்து கொண்டு என்னைத் தேடி இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாராம். அதே தெருவில் ஒரு வீட்டில் இருந்து கொண்டு, என்னை எப்படிச் சந்திப்பது என்ற தயக்கத்துடன், இரவும் பகலும் எங்கள் வீட்டின் மேலேயே கண்ணாயிருந்தாராம். கடைசியில் சரியான சமயத்தில் என் உயிரையும் காப்பாற்றி, எனக்குப் புது வாழ்வையும் அளிப்பதற்கு வந்து சேர்ந்தார்.

கல்கத்தாவில் வங்காளிப் பெயர் வைத்துக் கொண்டு வேலை பார்த்ததில், அவருக்கு இன்னொரு பெரிய அநுகூலம் ஏற்பட்டதென்று சற்றே குதூகலத்துடன் அவர் சொன்னார். சென்னை மாகானத்தில் இருந்த வரையில், அவருடைய சரித்திர ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி ஏனென்று கேட்பார் இல்லையாம்! கல்கத்தாவுக்குப் போய் வங்காளிப் பெயருடன் அதே முடிவுகளை வெளியிட்டதும், இந்தியா தேசம் முழுவதும் அவருடைய பெயர் பிரபலமாகி விட்டதாம்! அப்புறம் சென்னைப் பத்திரிகைகள் கூட அவரைப் பற்றிப் பிரமாதமாய் எழுதினவாம்! சென்ற ஏழு வருஷ காலத்தில் இந்த வேடிக்கை ஒன்றுதான் அவருக்கு நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கை கசந்து போகாமல் செய்து வந்ததாம்!

"ஏழு வருஷம் நான் சுதந்திர வாழ்க்கை நடத்தியாயிற்று; நீயும் ஏழு வருஷம் சுதந்திரமாக வாழ்ந்தாய்; சுதந்திர வாழ்க்கை எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. உனக்கு எப்படி அம்பு?" என்று கேட்டார். அவருடைய குனிந்த முகத்தையும், கனிந்த கண்களையும் ஏறிட்டுப் பார்த்த வண்ணம் நான் சொன்னேன்:

"தங்களுடைய மடியில் தலை வைத்துப் படுக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நான் ஏழரை வருஷம் நரக வாழ்வு நடத்த வேண்டியிருந்தது! இனிமேல் என்னத்திற்கு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பிரபல_நட்சத்திரம்&oldid=484400" இலிருந்து மீள்விக்கப்பட்டது