பீரு முகம்மது

பீரு முகம்மது

  • ஞான ரத்தினக் குறவஞ்சி
  • பக்கம் 252 - 256

காப்பு

தொகு

• தரவு கொச்சகக் கலிப்பா

பொன்னுலகு பொருந்துமனப் பொருள் அறியத் தானம் அறிய
மின்னுலகில் மெய்ஞ்ஞானம் விளங்குற வஞ்சிதனை
உன்னாமல் தன்னினைவின் உன்னி யுதிப் பொருநான் காய்த்
தன்னிறையைத் தன்னினைவாய்த் தரிப்பதுவே காப்பாமே

கண்ணிகள்

தொகு
ஆதிக்கு முன்னம நாதியு மென்னடிசிங்கி
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா
ஆதியாய் வந்த அரும்பொருளேதடி சிங்கி
சொதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா
சோதியி லாதி சொருபமான தெப்படி சிங்கி
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா
முப்பொரு ளென்று நீ முன் சொன்ன தாரடி சிங்கி
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா
எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி
அப்பன் தன் னட்புக்கு ஒப்பிய தாயாலே சிங்கா
பராப ரத்தினிற் பஞ்சவன் னமேது சிங்கி
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா
ஒன்றுக்குள் ஐவர்கள் உண்டானதெப்படி சிங்கி
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா
மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடி சிங்கி – அது
நாதத்தில் ஐம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா
மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார் சிங்கி – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினைவடா – சிங்கா
மூலக் கிழங்கு முளைத்திடம் எவ்விடம் சிங்கி – அது
நாதத்திலான நடுநிலை யல்லவோ சிங்கா
முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடம் சிங்கி – அது
மூளைமுனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா
முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா
இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி – அது
இந்த வுடலுக்கு யிராதி மூலமே சிங்கா
இந்த வுடலுக் குயிர் வந்ததெப்படி சிங்கி – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா
இந்த வுடலுக் குயிரெங்கே நின்றது சிங்கி – அது
அந்தர மாயண்ட மாக்கொடி யல்லவோ சிங்கா
இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா
மாக்கொடி என்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி
மட்டில் அடங்காத மாகலி மாவடா சிங்கா
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி – அது
எல்லா முடிந்த பொருள் வழியாமடா சிங்கா
முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி – அது
முன் சுடர் மூன்றும் உடலுயிர் ஆத்துமா சிங்கா
பின்னே ரறிவர்கள் ஒன்றான தெப்படி சிங்கி – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா
ஆசை கொண்டு நம்மை யாட்டுவாராரடி சிங்கி – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா
ஆசை பாசப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா
தன்னை அறியுந்தலமேது சொல்லடி சிங்கி – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா

===24---

என்னவிதமாகத் தன்னை யறிவது சிங்கி – அது
தன்னவன் தாய்தந்தை யாகி நாமானது சிங்கா
இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா
தன்னுள் விளங்கும் தவமென்ன சொல்லடி சிங்கி – அது
தன்னை மறந்து தவத்தில் இருப்பது சிங்கா
என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி – அது
ஒன்றைப் பொருந்தி யொடுங்கியிருப்பது சிங்கா
என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி – அது
எல்லா மறந்து இருளா யிருப்பது சிங்கா
ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி –அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா
கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி – சில
உன்னி யெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா
எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா
அண்ணிணு மெண்ணும் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா
ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா
ஆணியாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி – முன்
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா
இந்தப் பொருள் வந்ததெந்த வழியடி சிங்கி – அது
அந்தக் கதிர்மதி வந்த வழியடா சிங்கா
கத்த னொளிவு கலந்திடம் எவ்விடம் சிங்கி – அது
அத்தன் நடனந்தான் ஆடிய தற்பரஞ் சிங்கா
உத்தம்பஃ பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி – வழி
நச்சரவாடும் நடுநிலை யல்லவோ சிங்கா
எட்டெழுத்தாக எழுந்தெழுத் தென்னடி சிங்கி – அது
மட்டி லடங்கா வடிவட்ட கோணமே சிங்கா
அஞ்செழுத்தாக அமைந்தெழுத் தென்னடி சிங்கி – அது
அஞ்சும் பொருந்திய ஆகாய வட்டமே சிங்கா
அன்பத்தோ ரட்சரம் அறிய நீ சொல்லடி சிங்கி – அது
வஞ்ச மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா
கற்பக வாசி கலந்திடம் எவ்விடம் சிங்கி – அது
உற்பன மூலத்தி னுள்ளளொளி யல்லவோ சிங்கா
சத்தம் பிறந்திடும் சற்குரு வேதடி சிங்கி – அது
உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா
கண்டு தொழுஞ்சிவ காரண மேதடி சிங்கி – நம்மை
உண்டு படுத்திய உள்ளொளி யானதே சிங்கா

எப்படிக் கண்டே இறையை வணங்கலாம் சிங்கி – அது

நட்புடன் இரண்டு நடுநிலை காண்பது சிங்கா
நடுநிலை யானதை நாடுவதெப்படி சிங்கி – அது
நாட்டந் தேட்ட மோட்ட மாட்ட மொன்றாயினால் சிங்கா
தேட்டமு நாலுந் திருந்துவ தெப்படி சிங்கி – அது
திருவைப் பொருந்தி ஒருமித் திருப்பதே சிங்கா
ஒருமித் திருக்கின்ற ஓரிட மெவ்விடம் சிங்கி – அது
ஒன்றாம் இரவும் பகலும் உதிப்பிடம் சிங்கா
இரவும் பகலும் ஒன்றானது மெவ்விடம் சிங்கி – அது
எப்போதும் இருளாய் இருப்பது மூளையே சிங்கா
இரவும் பகலும் பிறப்பிட மெவ்விடம் சிங்கி – அது
இருளில் உதித்துன்னி வந்தத டிமூலம் சிங்கா
இரவும் பகலும் மெழுந்திடம் எவ்விடம் சிங்கி – அது
ஏகாந்த உன்னல்வந்து ஏறிய தாமரை சிங்கா
இரவும் பகலும் பிறந்திடம் எவ்விடம் சிங்கி – அது
எழுந்தறு கோணம் இடம்வலம் வாசியே சிங்கா
இரவும் பகலும் நின் றாடிய தெவ்விடம் சிங்கி – அது
எழுந்து நின்றாடுஞ் சுழுமுனை மண்டலம் சிங்கா
இரவும் பகலும் இருப்பிடம் எவ்விடம் சிங்கி – அது
ஈராறு மோடிய வோரான நான்கடா சிங்கா

இரவும் பகலும் உதிப்பிடம் எவ்விடம் சிங்கி – அது

ஏறுமெட்டங்குல மிருவிழி நடுநிலை சிங்கா
இரவம் பகலுமென் றென்னதைச் சொல்லலாம் சிங்கி – அது
இரவு பகலிடை பிங்கலை வாசியே சிங்கா
இடைகலை பிங்கலை என்னத்தைச் சொல்லலாம் சிங்கி – அது
இடைகலை சந்திரன் பிங்கலை சூரியன் சிங்கா
என்னத்தைச் சொல்லலாம் சந்திரன் சூரியன் சிங்கி – அது

கலையும் பொருந்தும் நடுச்சுழு முனையே சிங்கா

சந்திரன் சூரியன் ஒன்றான தெவ்விடம் சிங்கி – அது
கலையும் பொருந்து நடுச்சுழு முனையே சிங்கா
என்னத்திலே பாலனேறி நின்றாடுது சிங்கி – அது
உன்னுக்குள் வாசி நடனப் புரவிமேற் சிங்கா
என்ன விதமாய் எடுத்துநின் றாடலாம் சிங்கி – அது
ஏற்றவும் மாற்றவும் இணங்கி நின்றாடிப்பார் சிங்கா
மாற்றிப் பிடிக்க மருந்தென்ன சொல்லடி சிங்கி – அது
மாளாமல் மாண்டு மறைந்து இருப்பதே சிங்கா
அட்டகசங்கள் அறிந்திட மெவ்விடம் சிங்கி – அது
எட்டு விதமா யெழுதும் பலனடா சிங்கா
உற்றஞானப் பொருள் உத்தியாய்ச் சொன்னதார் சிங்கி – அது
உத்தமர் பீருமுகம்ம துரைத்தது சிங்கா

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பீரு_முகம்மது&oldid=493277" இலிருந்து மீள்விக்கப்பட்டது