புகழேந்தி நளன் கதை/கலி நீங்கு காண்டம்

3
கலி நீங்கு காண்டம்

வீமன் திருநகரில் மக்களோடு தமயந்தியும் போய்ச் சேர்ந்தாள். மனைவி மக்களைப் பிரிந்த மன்னன் நளன் நாடோடியாகத் திரிந்தான்.

அவன் முதல் சந்திப்பு அவனைப் பரோபகாரியாக ஆக்கியது.

தீயவர்க்கும் நன்மை செய்யும் சந்திப்பு ஏற்பட்டது.

காட்டுத் தீயில் அரசு அரவு ஒன்று அகப்பட்டுக் கொண்டது. நளனைக் கண்டதும் அவ் அரவு “மன்னா உனக்கு அபயம்” என்று அரற்றியது. வாய்விட்டுக் கத்தியது. கூவி அழைத்தது.

‘அபயம்’ என்ற குரல் கேட்டு ஒசை வந்த திசை நோக்கிச் சென்றான்.

நெருப்பில் அந்தப் பாம்பு சிக்கி அவதிப்பட்டது; யார் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்க வில்லை. நல்லவனா கெட்டவனா என்ற பேதம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நஞ்சு உடைய நாகம் என்று தெரிந்தும் அதனைக் காக்கத் துணிந்தான். நெருப்பினின்று அதனை எடுக்க விரைந்தான்.

பெரு நெருப்பு; அலைகடல் போல் பரவிய வண்ணம் இருந்தது. “செந்தீ” அது சுடாமல் இருந்தால் பார்க்கத் தக்கதுதான். அது சுட்டு எரிப்பதால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டது.

நெருப்புக் கடவுள் இவன் விருப்புக்கு உதவ வரம் தந்திருந்தான். வேண்டும்போது உதவுவேன் என்று கூறி இருந்தான். தாண்டும் வழி அவனுக்குத் தேவைப்பட்டது. “சற்றே அடங்கி இரு பிள்ளாய்! அந்த அரவினை யான் காத்தல் வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். கடல் அலைகள் அடங்குவதுபோல் நெருப்பு அடங்கியது; விலகியது.

அரவு அவனுடன் உரையாடியது: “ஐயா என்னை இங்கு இருந்து எடுத்துவிடு. வேதமுனிவன் இட்ட சாபத்தால் இந்த ஏதம் எனக்கு நிகழ்ந்தது; இந்தக் கொடிய

காட்டில் நெடிய நெருப்பில் சிக்கித் தவிக்கின்றேன். என்னை எடுத்துவிடு” என்று இரந்து கேட்டது.

சோகக் குரல் கேட்டு வேகமாகச் சென்று அதனைக் காக்கத் துணிந்தான். அதனை அவன் நெருப்பினின்று எடுத்தான். சற்றுத் தள்ளி அதனைவிட நினைத்தான்.

“நீ பத்து அடி நடக்க; பின் என்னை விடுக்க” என்று கேட்டுக் கொண்டது.

நெருப்பை விட்டுப் பத்து அடி நடந்தான். காலால் பத்து அடிகள் எடுத்து வைத்துப் பின் அதனைத் தரையில் விட்டான்.

நன்றி கூறுவதற்கு மாறாக அது கொடுமை செய்தது; அவனைக் கடித்தது; நஞ்சு உடம்புக்கு ஏறியது. அவன் சாகவில்லை; தெய்வ வரம் அவனுக்குத் துணை செய்தது. மற்றும் அவன் சாக அது கடிக்கவில்லை. வேகமாகச் செய்த செயல் விளைவு; அவன் தப்ப நினைக்கும் முன் இந்தத் தவறு அது செய்து முடிந்தது.

நெடியவன் குறுகியவன் ஆயினான். திருமால் வாமனன் ஆயினான். நீண்ட தோள்களை உடைய அரசன் குறுகிய தோளினன் ஆயினான். ஆள் உருமாறினான்; கருநிறத்தினன் ஆயினான்; பேரரசன் சாமானியன் ஆயினான். பாட்டாளியின் இனத்தவன் ஆயினான்.

ஏன் தன்னை இது இவ்வாறு மாற்றியது. இந்த வடிவில் சென்றால் காதலிகூட தன்னைக் கருத்தில் கொள்ள மாட்டாள். எப்படி தமயந்தியின் முகத்தில் விழிப்பது. பிள்ளைகள் தன்னை அடையாளம் காண முடியாத நிலையை எண்ணிப் பார்த்தான்.

“இதுதான் நன்றிக் கடனா?” என்று கேட்டான்.


“நான் ஒன்று கூறுகிறேன் கேள். கார்க்கோடகன் என்பது என் பெயர். நான் கடித்ததால் நீ கருநிறம் பெற்றாய்; இது என் பல்லுக்கு ஏற்பட்ட வலிமை; உனக்கு நன்மை செய்யவே உன்னை மாற்றினேன். நீ உருமாறுவது உனக்கு நன்மை தருவது ஆகும். ‘நளன்’ என்று யாரும் உன்னைக் காணமாட்டார்கள். நீ மறைந்து வாழ முடியும். உனக்கு இது நன்மை” என்றது.

“இப்படியே இருந்தால் என் எதிர்காலம்?”

“காலம் மாறும்; கலி நீங்கும்; அப்பொழுது உன் துயர் அகலும்; வேண்டும்போது நீ பழைய உருவை அடைவாய்” என்று கூறியது.

அழகிய ஆடை ஒன்று தந்தது. “இந்த ஆடையை நீ எப்பொழுது உடுத்துக் கொள்கிறாயோ அப்பொழுது நீ பழைய உருவைப் பெறுவாய்” என்று கூறியது.

“நீ தோள் குறைந்துள்ளமையால் உன்னை ‘வாகுவன்’ என்று கூறுவர். அதுவே நீ ஏற்கக் கூடிய பெயரும் ஆகும். ‘வாகு’ என்றால் தோள் என்பது பொருள் ஆகும். தோள் சிறுமை கருதி உன்னை வாகுவன் என்றே அழைப்பார்கள், இது உனக்கு உதவும் பெயராகும்” என்றது.

நளன் புதிய மனிதனாக மாறினான். தோள்வலி குறைந்தவனாக அவன் மாறினான். எந்தப் பெண்ணும் அவனைக் காதலிக்கமாட்டாள். அந்த வகையில் அது அவனுக்குத் தற்காப்பாக அமைந்தது; எளியன் என்பதால் எவரும் அவனை ஏவல் தொழிலுக்கு ஏற்க இசைவர் காவலன் ஏவலனாக மாற இது அவனுக்கு உதவியது.

“அடுத்து நீ அயோத்தி செல்க, அங்கு அரசனிடம் தேர் ஒட்டியாகப் பணி ஏற்க” என்று அது அறிவித்தது. குட்டைக் கையனாக மாறியவன் நெட்டை வழி நோக்கி நடந்தான்.

பார்த் தொழில் செய்தவனைத் தேர்த் தொழில் ஏற்க என்று கூறியது. நீ அயோத்தி அடைந்து தேர்த் தொழிலுக்கு மிக்கவனாக நீ ஆகுக” என்று அறிவுறுத்தியது.

நாகம் தனக்கு உதவி செய்ததாகவே கொண்டான். பாண்டவர்கள் ஒர் ஆண்டுக் காலம் மறைந்து வாழ்ந்தனர். இவனும் சில காலம் மறைந்து இருந்து வாழ இது இவனுக்கு உதவியது. புதிய பிறப்பு, புதிய பதவி, புதிய சூழல்கள் எல்லாம் புதுமைதான். அரசனாக இருந்து அறிய முடியாதவற்றை எளிய குடி மகனாக இருந்து அறியும் வாய்ப்புக் கிடைத்தது.

காரிருளில் கானகத்தே காரிகையைக் கைவிட்டுத் தனியனாய் நடந்தான். அயோத்தி அடைய அலைகளை உடைய கடற்கரை வழியே செல்ல நேர்ந்தது.

நினைப்பு அவனை அலைக்கழித்தது. காதலியின் நினைவு அவன் நெஞ்சில் சுடுநெருப்பைத் தந்தது; காதல் நினைவுகள் அவனை வேதனைக்கு உள்ளாக்கின.

காதல் நெஞ்சைத் தூண்டி எழுப்பக் கூடிய காட்சிகள் அவனுக்கு வேதனையைத் தந்தன. தமயந்தி தன் முன் நின்றாள். அவள் எட்டாத தூரத்தில் இருந்தாள். நினைவில் இருப்பவளை நேராக வடிவில் காண முடியாமல் தவித்தான்.

அங்கே ஒரு பெண் குருகு உறங்கிக் கொண்டிருந்தது; அருகிருந்த ஆண் குருகு அதற்குக் காவல் தந்தது. அந்தக் காட்சி அவனைச் சாடுவதுபோல இருந்தது. உறக்கத்தே அவளை விட்டுவிட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். குருகுக்கு உள்ள பொறுப்பு; பெடையின் மீதுள்ள விருப்பு தன்பால் இல்லாமல் போய் விட்டதே என நினைத்து வருந்தினான்.


“மரக் கிளையில் உறங்காது விழித்திருக்கும் குருகே! உறக்கத்தே அவளை விட்டு விட்டுவந்தேன். அதனால் நீ என்னுடன் பேச மறுக்கிறாயா? உன்னைப் போல் காதல் நெஞ்சம் எனக்கும் உள்ளது. ஏதோ போதாத காலம்; தவறு செய்துவிட்டேன். எனக்கு ஆறுதல் கூறி என் மனப் புண்ணை நீ ஆற்றக் கூடாதா” என்று கேட்டான்.

அடுத்துப் புன்னை மரத்தில் ஒரு புதுக் காட்சியைக் கண்டான். மது அருந்த வண்டுகள் அப் புன்னைப் பூவில் அமர்கின்றன. அதன் மகரத்தங்களைக் கோதுகின்றன. அடுத்து அதில் உள்ள தேனைப் பருகாமல் தன் பெடை வண்டு உண்ணத் தான் காத்திருந்தது. அதன் அருள் உள்ளம் அவன் நெஞ்சில் மருளை உண்டாக்கியது. அதன் முன் தான் சிறுமையுற்றது போல் சிந்தனை பெற்றான். காதலியின் நினைவால் அவன் நெஞ்சு பஞ்சு எனச் சிதறுண்டது. ஆவி அழிந்தான். பெருமூச்சுவிட்டான். நெஞ்சில் பல நினைவுகள் ஓடின. அவளை அடைய நாடினான்; மனம் உழன்றான்.

கடல் அலைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவை பேரிசைச்சல் செய்தன; அது அவனுக்கு ஒரு நாதமாக இசைத்தது. அந்தக் கடற்கரையில் இவனைக் கண்டு நண்டுகள் சில மருண்டு தன் வளைக்குள் புகுந்து அடங்கின. அவை தன்னைப் பார்க்கக் கூடாது என்பதால் தான் ஒளிந்து கொண்டன என்று நினைத்தான். தான் செய்தது பாதகச் செயல் என்பதை வெளியிட்டான். கொடுமை மிக்கது என்று மனம் கொதித்துப் பேசினான்.

நேசித்தவள்; உயிரென மதிக்கப்பட்டவள்; ‘காதலி’ அழகான சொல் அதற்கு உரிமை பெற்ற அவளைக் கரிய இருட்டில் விட்டு நீங்கினான்; புத்தனைப் போல் மாளிகையில் அல்ல; பித்தனாக இருந்து காட்டில் விட்டு விட்டு வந்தான். இத்தகைய பாதகச் செயல் தான் அவன்

புரிந்தது என்பதை உணர்ந்தான். இதை எடுத்துக் கூறினான். “காதலியைக் கார் இருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப்படாது என்றா நண்டே நீ ஒடி ஒளிக்கின்றாய்; அல்லது வேறு எந்தக் காரணத்தால் மறைகிறாய்? எனக்கு நீ உரைப்பாய்” என்று கேட்டான். மற்றும் அக்கழிக் கானலில் இருந்த பூவையும், செடியையும், பறவை இனங்களையும் பார்த்தான். விளித்தான். ‘என் காதலி தூங்கி எழுந்தால் விழித்து எழும்போது அவள் என்ன நினைத்திருப்பாள். அவள் நினைவுகள் எத்தகையன? எவ்வாறு துடித்திருப்பாள்? படித்து அறியாத மூடன் அல்ல; விடிவதற்கு முன் அவளை விட்டு வந்தேன். அவள் நிலைமை எப்படி இருக்கும்? இப்பொழுது அவள் எங்கே இருப்பாள்? என்ன செய்து கொண்டிருப்பாள்? தேடித் தேடி அலைந்து அவள் வாடி இருப்பாள். ஒடி இருப்பாள். அவள் ஓலமிட அந்தப் பேரொலி உங்கள் செவிகளில் பட்டிருக்கும். கொடுமை விளைவித்துவிட்டேன். எனக்கு விடிவே இருக்காது” என்று பேசினான். பேசாத நண்டோடும், அசையாத செடி கொடிகளோடும், கடல் அலையோடும், இணைப் பறவைகளோடும் பேசினான்.

“நீலமலர்களே! சோலையில் வந்து உலாவும் சோலைத் தென்றலே! கடற்கரையில் உள்ள கழிகளில் உலவும் குருகுகளே! என் காதலி அந்த இருட்பொழுதில் விழித்துப் பார்ப்பாள்; அவள் என்னை நினைப்பாள்; காழ்ப்பாள்; துன்பத்தில் ஆழ்வாள். வேகும் அவள் நெஞ்சு என்ன பாடுபட்டு இருக்கும்? இவற்றை எல்லாம் எண்ணி யான் வருந்துகின்றேன்” என்று பேசினான்.

அலை கடலைக் கண்டான்; அதுவும் தன்னைப் போல் நிலைகுலைந்து உள்ளது என்று நினைத்தான்.

“கடல் அலையே! நீயும் போகிறாய்; வருகிறாய்; புரண்டு விழுந்து இரங்கி நாக்குழற நடுங்குகிறாய்; நீயும்

என்னைப்போல் இரவில் உன் காதலியைத் தவிக்கவிட்டு வந்து விட்டாயா?”

“யான் அரவினைத் தீயிடத்து இருந்து அகற்றினேன். ஆனால் என் காதலியைத் தீமையில் விட்டு விட்டு வந்திருக்கிறேன். பாம்புக்குப் பால் வார்த்தேன். பாவை அவளுக்குக் கொடுமை செய்தேன். பரோபகாரம் செய்த யான் உற்றவளுக்கு உதவிகள் செய்வதை மறந்துவிட்டேன். கட்டிய மனைவி அவளைக் கதறவிட்டேன். காட்டில் அரவுக்கு இரக்கம் காட்டினேன். முரண்பாடு கொண்ட வாழ்க்கை இது".

“நீயும் அலையுறுகின்றாய்! நீயும் இப்படி ஏதாவது தவறு செய்துவிட்டாயா? அப்படிச் செய்திருந்தால் ஏன் அவ்வாறு செய்தாய்? நீ பிறர் மெச்ச வாழ்பவன் அல்ல; உலகம் உயர நீ உதவுகிறாய். நான் ஊர் மெச்ச உபகாரி யாயினேன். உண்மை என்னிடம் இல்லாமல் போயிற்று. நீ அழும் அழுகுரல் என்னை ஆழ்துயரில் அழுத்துகிறது; சிந்திக்க வைக்கிறது.”

“பெண்களால் கலங்கிப் பேதுறும் நிலை உனக்கும் வாய்த்துவிட்டது. அதே போல எனக்கும் ஏற்பட்டு விட்டது. நமக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?” என்ற பேசினான்.

வழியில் முத்துப் போன்ற அழகுடைய பல்லினை உடைய அழகியர் சிலர் இவனைக் கண்டனர். அவர்கள் சிரிப்பு ஒலி தன் காதலியை அவனுக்கு நினைவுறுத்தியது. அவள் பேரழகு அவனுக்குத் தன் காதலியை நினை வூட்டியது.

மகளிரைப் பார்க்கவும் அவன் அஞ்சினான்; பின் வாங்கினான். இளமை நினைவுகள் அவனை விட்டு அகன்று சென்றன. அவர்கள் அவனுக்குச் சிலிர்ப்பைத்

தரவில்லை; கிளர்ச்சியும் ஊட்டவில்லை. மேலும் இவனைக் கண்டு அவர்கள் ஒதுங்குவது போல் தெரிந்தது.

அவர்கள் முறுவல் அவனுக்குப் புதுமையைத் தந்தது. புது வாழ்வு மலரும் என்ற நம்பிக்கை தந்தது. கங்கை பாயும் நாடு ஆகிய அயோத்தியைச் சென்று அடைந்தான். நிடத நாட்டு அரசனாகிய நளன் அயோத்தியை அடைந்தான்.

பார்வேந்தனாக இருந்த நளன் அயோத்தி மன்னனின் வாயில் காவலர்க்குத் தன்னைப் பற்றித் தேர் ஒட்டவும், தேர்ந்த சமையல் செய்யவும் வல்லவன் என்பதைத் தெரிவித்தான். மன்னனுக்குச் சோறு சமைக்கும் ஆளாகப் பணி செய்ய வந்ததாகத் தெரிவித்தான். அரசனிடம் அறிவிக்குமாறு அறிவித்தான்; தன் பெயர் ‘வாகுவன்’ என்றும் தெரிவித்தான்.

அவன் கூறிய செய்தியைக் காவலர்கள் அரசனுக்குச் சென்று உரைத்தனர்.

ஏவல் செய்ய ஒருவன் வந்திருக்கிறான் என்று கூறினார்கள்.

“வருக! அவனைக் கொண்டு தருக” என்று அனுப்பினான். நளனும் அரசன் முன் வந்து நின்றான்.

“நீ எந்தத் தொழில் வல்லவன்?” என்று நளனை நோக்கி அயோத்தி மன்னன் வினாவினான்.

கொடைத் தொழில் வல்லவனாகிய நளன் தான் மடைத் தொழிலிலும் படைத் தொழிலிலும் வல்லவன் என்று கூறிக் கொண்டான்.

தோள் குறைந்தவன் அவன் எப்படிப் படைத்தொழில் செய்ய முடியும்? அதற்குத் தகுதி அற்றவன் என்பதை அறிந்தான். “படைத் தொழிலுக்கு உடைமை

வீரம்; வன்மைமிக்க தோள்கள்; அவை இல்லையே உன்னிடம்” என்றான்.

“அதனால் தேர்த் தொழில் மட்டும் செய்கிறேன்” என்றான். வீட்டில் மடைத் தொழில் வெளியே தேர் ஒட்டி என்று தெரிவித்தான்.

ஒரே ஆள் இரண்டு தொழில்களில் தேர்ந்தவன் என்று கேட்டதும் மன்னன் மனம் குளிர்ந்தான்.

ஒன்றில் இரண்டு அடங்கி இருப்பது கண்டு மகிழ்ந்தான். சமைக்கவும் வல்லவன்; வண்டி ஒட்டவும் வல்லமை பெற்றவன். சரியான ஆள்தான் என்று முடிவு செய்தான். பணியில் அவனை அமர்த்திக் கொண்டான்.

நளன் அரசன் என்பதால் அறிவு மிக்கவனாக இருந்தான். அயோத்தி மன்னன் மனம் விரும்பும்படி கலந்து பழகினான்; உரையாடினான். அறிவிற் சிறந்தவன் என்ற நன்மதிப்பையும் பெற்றான்.

அந்தணன் நளன் மக்களைக் கொண்டு போய்ச் சேர்த்தான். அவனே தமயந்தியையும் கண்டுபிடித்து அவள் தந்தையிடம் சேர்த்து வைத்தான். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் அந்தணன் மதிக்கத்தக்க இடத்தையும் பெற்றான்.

தமயந்தி யோசித்துப் பார்த்தாள். அங்கே தன் தந்தை வீட்டில் சுகமாக இருக்க அவள் விரும்பவில்லை. உண்பதும் உறங்குவதும்தான் வாழ்க்கை அல்ல என்பதை அறிந்தாள். தன் கணவனைக் கண்டு அவனை அழைத்து வருவது என்று சிந்தித்தாள்.

தன்னையும் தம் மக்களையும் தன் தந்தை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பித்த அந்தணன் அவன் நினைவு அவளுக்கு வந்தது.


“நீ ஒரு பணி செய்ய வேண்டும்” என்று கூப்பிட்டு அழைத்தாள்.

ஏதோ ஊர்ப் பயணம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.

“நீ அறிவாளி, உன்னால்தான் முடியும்” என்று கூறினாள்.

நம்பிக்கை ஊட்டும் சொல்லாக இருந்தது.

“இயன்றது செய்கிறேன்” என்றான்.

“என் மன்னவனைத் தேடிக் கண்டு இங்குக் கொண்டு வந்து சேர்க்க” என்றாள்.

“இது என்னால் இயல்வது அன்று; காவல் வீரர்கள் செய்யத்தக்க ஏவல் இது” என்று தெரிவித்தான்.

“உன்னைப் போல் அறிவுக் கூர்மை உடையவரால் தான் இது இயலும். புத்திசாலிகள்தான் இதைச் செய்ய முடியும்” என்று கூறினாள்.

“நீ நான்கு திசையும் செல்க. வழியில் எங்காவது நளன் அகப்படுவான். செய்தி கொண்டு வந்து தருக” என்றாள்.

“அவன் உருமாறி இருந்தால் என்ன செய்வது?” என்று கேட்டான்.

“கருமாரி அம்மனை வேண்டிக் கொள்; கருத்தில் இதை நிறுத்திக் கொள்” என்றாள்.

“காதலியைக் காரிருளில் தவிக்க விட்டுச் சென்றான் ஒரு காவலன்” என்று அவனிடம் பேச்சைத் தொடங்குக. “அதனைச் செவிமடுத்துக் கேட்டால் அதற்குத் தக்க விடை தர முற்பட்டால் அவனை விடாதே. தொடர்ந்து பேசு;

அவன் அதனை அறிந்தவன்போல் பேசினால் அதுதான் அவனைக் கண்டுபிடிக்க அடையாளம்” என்றாள்.

தனக்கு நல்ல காலம் வரக் காத்திருக்கிறது. தன்னால் அவனைக் கண்டு வரமுடியும் என்று திடம் கொண்டு புறப்பட்டான்; விடைபெற்றான்; நடந்தான் திசைகள் தேடி.

மாபெரும் நகர்களில் எங்காவது மறைந்திருப்பான் என்று யூகித்தான்.

அயோத்தி நகர் புகழ்மிக்க நகர்; பெருநகர்; அங்கு அவன் இருக்கக் கூடும் என்று யோசித்தான்.

குட்டையான கைகளுடன் கட்டையான ஒரு ஆள் அங்கு இவன் எதிரே வந்தான்.

அயோத்திக்குப் புதியவன் என்பதை அறிந்து கொண்டான்.

“காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்டான் ஒரு மன்னன்; அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“அவன் மிகவும் பாதகன் அல்லவா” என்று மேலும் கேட்டான் அந்த அந்தணன்.

“எல்லாம் விதி; அது வலிது; அது சிலர் மதியை மயக்கி விடுகிறது” என்றான்.

“நீ அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்” என்று கேட்டான்.

“அவன் தெரிந்து செய்யவில்லை. அவள் நன்மைக்காகவேவிட்டு விலகினான்” என்றான்.

இவ்வளவு விவரமாகச் செய்திகளை அறிந்து கூறுகிறான். இவன் நளனாக இருக்கக் கூடும் என்று ஐயுற்றான்.


“பார்த்தால் இவன் அரசனாகத் தெரியவில்லையே” என்ற மருட்சி ஏற்பட்டது.

உருவு கண்டு எதையும் முடிவு செய்ய இயலாது. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

“நடுகாட்டில் நள்ளிரவில் எந்த இடர்ப்பாட்டில் தனியள் அவள் அகப்பட்டு வேதனைப் படுகிறாளோ” என்று இரக்கம் தோன்றப் பேசினான்.

நளன் கண்களில் நீர் வெளிப்பட்டது. அவன் சோகம் அவனைக் காட்டிக் கொடுத்தது.

இவன் ஏன் கண்ணீர் விடுகிறான் என்று எண்ணிப் பார்த்தான். அவன்தான் நளன் என்பதை அறிந்து கொண்டாள்.

மேலும் கேட்டால் அவன் எங்காவது சென்று விட்டால் என்ன செய்வது? பார்த்து வா என்று சொன்னார்களே தவிர அழைத்துவா என்று யாரும் சொல்லவில்லை. அவன்தான் நளன் என்பதை அறிந்தான்.

“அவன் அவளை வெறுத்து ஒதுக்கி இருக்க மாட்டான். அவன் அவளை உயிரினும் மேலாக நேசித்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் அவளைவிட்டு நீங்கினான் என்றால் அது பழைய வினை; விதியின் செயல்” என்று நளன் கூறினான்; “அவளை வெறுத்து நீங்கினால் அவள் அலைய நேரிடும்; அவன் விரும்பிச் செய்ய வில்லை” என்று மேலும் விளக்கம் தந்தான்.

அதற்குமேல் அவனுக்கு விளக்கம் தேவைப்பட வில்லை; அங்குத் தங்குவதைத் தவிர்த்து உடனே திரும்பினான்; தமயந்தியை அணுகினான். அவளைச் சந்தித்தான்; பேசினான். “கண்டனன் கற்பினுக்கு அணியைத்

தெண்திரைக் கடல் அக்கரைக்கு அப்பால்” என்றான் அனுமன். அதுபோல் அந்தணனும் செங்கோல் வேந்தனைத் தன் கண்களால் கண்டதாக உரைத்தான். இதைக் கேட்டதும் அளவில்லா மகிழ்வு கொண்டாள். அவனைத் தூக்க முடிந்தால் தலைமீது வைத்துச் சுற்றிக் கீழே போட்டிருப்பாள். அவன் மண்டை சிறிது ஒட்டை விழுந்திருக்கும். அளந்து பார்த்து அடிபலமாக இல்லை என்று மருத்துவர் கூறிச் சான்று தந்திருப்பார்; அந்த எல்லைக்கு அவள் செல்லவில்லை.

அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள்; அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். “எப்படிப் போனாய்? எங்குத் தங்கினாய்? எங்கு உணவு கொண்டாய்? எங்கு உறங்கினாய்? எப்படி எப்படிக் காலம் கழித்தாய்?” என்று அடுக்கி விசாரித்தாள்.

எப்பொழுதுமே கண்டிராத உபசாரத்தை அவன் காண நேர்ந்தது. அவன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தான். அதை இறக்க அவளுக்குக் காட்டக் காத்திருந்தான். அவள் அவசரப்பட்டாள்.

அவன் வாய்ச் சொல் உதிர்க்கும் முத்துகளைக் கோக்கக் காத்திருந்தாள். அவன் சொன்னான் “பேச்சினால் அவன் உன் மணாளன்தான்; ஐயமே இல்லை; ஆனால் உருவ மாற்றத்தால், வடிவால் அவன் அல்லன். வடிவைக் கொண்டு பார்த்தால் அவன் அடி ஐந்து உடையவன்; குறுமையன்; நளன் அல்லன்; இவனை நீ தேர்ந்து எடுக்க வாய்ப்பே இல்லை; மாலையிடுவதற்கு வேண்டிய மயக்கம் அவனிடம் சிறிதும் இல்லை. கோயில் நூறு சென்று சத்தியம் செய்வேன் அவன் நளன் அல்லன்” என்றான்.

“உணர்வு, உயிர், எண்ணம், நினைவுகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் அவன் நீ நாடும் அரசன்தான்;

வார்த்தை கொண்டு பார்த்தால் அவன் அவன்தான்; வடிவு கொண்டு பார்த்தால் அவன் அவன் அல்லன்” என்று கூறினான்.

அறிவு நிரம்பியவள்; சுயசிந்தனை மிக்கவள்; அவள் ஐம்புலனும் நல்லமைச்சு என்று பேசப்பட்டவள். அவன் கூறியது ஒரு விடுகதையாக இருந்தது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் அது என்ன என்று கேட்பதுபோல் இருந்தது. வார்த்தையில் நளன், வார்ப்பில் அவன் அல்லன் என்று கூறினான்.

அவள் வடிவைக் கொண்டு மயங்கவில்லை. அவன் உணர்வில் ஒன்றுபட்டவள்; உயிரோடு ஒன்றியவள். அதனால் அவன்தான் நளன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.

கள்வனைப் பிடிப்பது கடிய செயல் அன்று. அவனைக் கட்டி இழுத்துவரத் திட்டம் ஒன்று வகுத்தாள். ‘அதிரடி’ அறிவிப்பாக அது அமைந்தது. “தமயந்திக்கு மற்றும் ஒரு சுயம்வரம் என்று சற்றும் தயங்காது நீ சென்று உரை; அதைக் கேட்பான் அயோத்தி மன்னன்; உடனே அவன் என்னை வேட்க விரைந்து வருவான்".

“தேர் பூட்டத் தேர்ந்த ஆள் அவர்தான். அவர் தேரை ஒட்டிக் கொண்டு இந்த ஊர் வந்து சேர்வார். அதற்குப்பின் அவரை அறிய அறிவிக்க அவரை வெளிப்படுத்த எங்களால் முடியும். நீ சென்று வருக; அயோத்தி மன்னனிடம் சுயம்வரம் என்று விளம்பரம் செய். அதுபோதும். இது ராஜதந்திரம். அவனை அழைத்து வர யான் மேற்கொண்ட மந்திரம்” என்றாள்.

அந்தணனுக்கு மறுபயணம் வாய்த்தது.

“அந்தச் சுயம்வரம் நாளையே நடைபெறும் என்றும் கூறுக; நாள் குறித்தாகிவிட்டது என்று அறிவிக்க; ஒரே நாள்

இடைவெளி; அந்த அரசனால் அவ்வளவு விரைவில் தேரில் வர இயலாது; நளனை அழைப்பான்; அவனும் மறுக்கான்; மறைந்து வாழ்வது மாற்ற இயலும்” என்று தெளிவுறுத்தினாள்.

அந்தணன் அயோத்தி அடைந்தான்; அரசனைச் சந்தித்தான்; செய்தி அறிவித்தான். அவன் அது கேட்டு வியந்தான். இன்பம் தன்னைத் தேடி வருவதாகக் கொண்டான். தமயந்தி அவன்கண் முன் நின்றாள். அவள் பொன்மாலை ஏந்தி நளன் கழுத்தில் போட்ட காட்சியை நினைத்தான். பொறாமை உள்ளே இருந்து கொண்டு கொழுந்துவிட்டு எரிந்தது. “அவன் தொலைந்தான், இனி தனக்கு நலம்தான்” என்று கொண்டான். அடுத்த வாய்ப்பு தனக்குத்தான் என்று மனப்பால் குடித்தான். அந்தக் கற்பனையில் ஆழ்ந்தான்.

“எம் அரசன் தன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று முரசு அறைவித்து அரசர்க்கு உரைத்திருக்கிறான். அதுவும் நாளையே நடைபெற உள்ளது” என்று செய்தியைக் கூறினான்.

எண்ணிப் பார்த்தான்; இடைவெளி ஒரே ஒரு நாள். தேர் ஏறிச் சென்றாலும் நாட்கள் பல பிடிக்கும். என் செய்வது; தன் உடன் இருந்த வாகுவனை அழைத்தான் “இலகுவில் எப்படி அங்குச் சேர்வது?” என்று கேட்டான். இதை நம்ப முடியவில்லையே” என்றும் கூறினான்.

“நீர் ஐயப்படுவது உண்மைதான். அவள் குறையாத கற்பினாள். கொண்டானுக்கு அல்லால் அவள் மனம் இசையாள்; வசை இது; வழக்கும் அன்று; அது நடக்காது; நடவாது; அதற்கு அவள் இசையாள்” என்று கூறினான்.

“நீ நினைப்பது ஒரளவு உண்மைதான்; அவளைப் பற்றிப் பொதுவாக அறிந்தவர் இவ்வாறு பேசுவர்; இது

உலகப் போக்கு. பெண்ணின் நெஞ்சு அது பஞ்சினும் மென்மையானது. இளகிய மனம் உடையவள்; என் மீது அவளுக்கு ஒரு கண் இருந்தது. அவள் என் பெருமை அறிந்தவள். அவள் எடுத்த மாலை எனக்குத்தான். அடுத்து இருந்தவன் நளன். கை தவறி அவன் கழுத்தில் விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது” என்று ஒரு விளக்கம் தந்தான்.

அவன் கூறுவது கேட்க “அவன் மனத்தில் அது ஒரு வடிவு பெற்றுள்ளது; ஆழமான நம்பிக்கை; அதை மாற்ற முடியாது” என்பதை நளன் அறிந்தான்.

அதை மாற்றவோ மறுக்கவோ அவன் விரும்பவில்லை.

“முதல் சுயம்வரமே அவள் தனக்காகத்தான் வைத்தாள். உள்நோக்கம் இதற்கும் இருக்கத்தான் வேண்டும். அரசிஇயல் இது; எதிலும் ஒர் உள்ளடக்கம் இருக்கும்; அதற்கு வாய்ப்புள்ளது".

“தன்னை அங்கு அழைக்கவே இந்தத் திட்டம்” என்பதைக் கண்டு கொண்டான். “ஒரு வேளை தீய வினைகள் அடுக்கிக் கொண்டு வருகின்றனவோ! இது கலியின் திருவிளையாடலோ; அவள் மனத்தை மாற்றி மயக்கி விட்டார்களோ! ஏதோ ஒரு மாற்றம்” என்று பலவாறு எண்ணினான்.

அரசன் தன்னுடன் வருமாறு நளனை அழைத்தான். தேர் ஒட்ட அவன் தேவை என்பதைத் தெரிவித்தான். கடமை; அதற்குக் கட்டுப்பட்டான்.

“அழைப்பு அயோத்தி மன்னனுக்குத்தான் என்றாலும் அவன் தேர் ஒட்டி அங்குச் செல்லத் தடை இருக்காது; என்னதான் நடக்கும்? அதையும் பார்த்து விடலாம்” என்று உடன் புறப்பட்டான். அவன் இட்ட

பணி இது; அதனை முடிப்பது தன் கடமை என்று தேரைக் கொணர்ந்தான்; பூட்டினான்; அரசன் ஏறினான், தேர் சென்றது.

தேரைக் கொண்டு வந்து நிறுத்தினான். “இதற்குச் சக்கரங்கள் இரண்டு இல்லை” என்றான் நளன்.

“ஏன் என்ன ஆயிற்று?”

“சூரியன் தேருக்கு ஒரே சக்கரம்; இதற்கும் ஏன் ஒரே சக்கரம் இருக்கக் கூடாது என்று மாற்றி விட்டேன்” என்றான்.

“சூரியன் பாதையில் செல்லவில்லை. அந்தரத்தில் செல்லும் தேர் அது; அதனால் ஒரு சக்கரம் போதும். இது தரையில் ஒடும் தேர்; இரண்டு சக்கரம் அவசியம்” என்றான் அரசன்.

நளன் வேறு வழி இல்லாமல் இரண்டு சக்கரம் உடைய தேரைக் கொண்டு வந்து நிறுத்தினான்.

“இதைக் கொண்டு சூரியனின் தேர் வேகத்தை யான் அமைத்துத் தருகிறேன்” என்றான்.

“சூரியன் இந்தப் பூமியைக் கடக்க ஒரு பகல் எடுத்துக் கொள்கிறான். யானும் ஒரே பகலில் அங்குப் போய்ச் சேர்ப்பேன்” என்றான்.

“இந்தத் தேர் சூரியன் தேருக்கு நிகரானது; ஏறுக” என்றான். அவனும் ஏறி அமர்ந்தான்.

அயோத்தி மன்னன் மன வேகத்தைவிட இதன் வேகம் மிக்கு இருந்தது என்பதை அரசனே ஒப்புக் கொண்டான்.

இது அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கம். அயோத்தி அரசனின் மேலாடை காற்றில் அசைந்து கீழே விழுந்தது.


‘அதை எடுக்க’ என்று நளனிடம் கூறினான். தேரை நிறுத்தினான். அதற்குள் அது காதம் இருபத்து நான்கைக் கடந்துவிட்டது. இவன் ஆற்றலைக் கண்டு அயோத்தி அரசன் வியந்தான்.

அவனைப் பாராட்ட முன் வரவில்லை. தான் எந்த வகையிலும் அவனைவிட ஆற்றல் குறைந்தவன் அல்ல என்பதைக் காட்ட விரும்பினான். கம்ப்யூட்டர் தோன்றாத காலம்; விசையை அழுத்தினால் உடனே கூட்டுத் தொகை இது காட்டுகிறது. இது விஞ்ஞான வளர்ச்சி.

அவன் கூறினான் “இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள தான்றில் காய்கள் எண்ணினால் பத்தாயிரம் கோடி” என்று கூறினான்.

உடனே நளன் தேரை நிறுத்திவிட்டு அவற்றை நிதானமாக எண்ணிப் பார்த்தான். அவன் சொன்னது சரியாக இருந்தது. அவன் மன ஆற்றலை வியந்தான்.

தான் தேர் ஒட்டுவதில் வல்லவன்; இவன் கூட்டல் கழித்தலில் வல்லவன் என்பதை அறிந்து பாராட்டிப் பேசினான்.

“ஒன்று செய்வோம்; என் தொழிலை நீ ஏற்க; உன்தொழிலை எனக்குத் தருக” என்று அயோத்தி அரசன் கூறினான். இருவரும் ஒருவர் தொழிலை மற்றவருக்குக் கற்றுத் தந்தனர். பரிமாற்றம் நடந்தது.

நளன் புதிய ஆற்றல் பெற்றான். மன ஆற்றல் மிக்கவன் ஆயினான். எதையும் கூர்ந்து அறிந்து செயல் படும் திறன் அமைந்தது. இது அவனுக்கு மனவலிமையைச் சேர்த்தது. கலிமகன் இதனை அறிந்தான். அவனுடன் இனி வம்புக்குப் போக முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். அறிவு ஆற்றல் மிக்கவர்களைத் தொட முடியாது என்பதை அறிந்தான்.

பிறர் மனத்தை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்துவிட்டது. கலியின் திட்டங்களை அறிந்து விலக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டான். அறிவும் ஆற்றலும் மட்டும் இருந்தால் போதும்; எதிரியை அளக்கும் கூர்த்த அறிவு தேவை. அப்பொழுதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்தான். வெற்றி என்பது முழு ஈடுபாட்டை ஒட்டியது ஆகும். எதிரியின் எண்ண ஓட்டம், சூழ்ச்சித் திறன் இவற்றை அறிந்து செயல்படுவது தேவை; பிறர் எண்ண ஓட்டத்தை அறியும் ஆற்றல் அவன்பால் அமைந்தது.

இனி தன் செயல்திறன் எடுபடாது என்று கலியன் கண்டு கொண்டான். கொடை வள்ளல்களை அண்டி அணுகும் புலவர்களின் பசி நீங்குவதுபோலக் கலி அவனை விட்டு அகன்றான். இனி அவனை யாரும் அசைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகியது.

ஆமை முதுகில் நண்டு துயில் கொள்ளும் நாடு அயோத்தி மன்னன் நாடு; அதனை நீங்கி வீமன் திருநகரை நளன் அடைந்தான்.

வீமன் மாளிகையை அடைந்தான். தன் வருகையை அங்கிருந்த காவலர்க்கு எடுத்து உரைத்தபின் விருந்தினர் விடுதியை அடைந்தான். நளன் வேறு அயோத்தி மன்னன் வேறு எனப் பிரிந்தனர். அட்டில் சாலையை அவன் தன் கொட்டில் இடமாகக் கொண்டான்.

அயோத்தி அரசன் வருகையை அறிந்த வீமன் தன் இருகையும் எடுத்து வணங்கி வரவேற்றான். தன்னை நாடி வரக் காரணம் யாது? அவனுக்கு விளங்கவில்லை. தனக்கு இருந்தது ஒரே மகள். அவளுக்கு வேண்டிய விளம்பரம் தந்து விழா எடுத்து மணமும் முடித்துத் தீர்த்துவிட்டான்.

அவனுக்குத் தெரிந்து அவன் வேறு எந்த மகளுக்கும் தந்தையானது இல்லை; அப்படி எந்தப் பெண்ணும்

வளர்ப்பு மகளாகவும் வளர்ந்து வரவில்லை. தன் மனைவியைக் கேட்டு விசாரிக்க முடிவு செய்தான்.

என்றாலும் வந்தவரை வரவேற்று முகமன் கூறும் கடப்பாடு இருந்தது. சிரித்தனர்; அதற்காகவே அவர்கள் பழகி வைத்திருந்தார்கள்.

“தங்கள் வரவு நல்வரவு ஆகுக. சொல்லி இருந்தால் ஊர் எல்லைக்கே ஆள் அனுப்பி இருப்பேன்; மன்னிக்கவும்” என்று கூறினான்.

‘சுயம்வரம்’ என்பது யாரோ கட்டி அனுப்பிய கட்டுச் சோறு என்று அறிந்தான். இந்த மாதிரி ‘புரளி’ ஏன் எழுந்தது? அந்த நாட்டில் பத்திரிகைகளும் எதுவும் இல்லை புரளியை மையமாக வைத்துப் பிழைப்பு நடத்த.

இதில் ஏதோ மர்ம தேசக் கதை உள்ளது என்று யூகித்தான். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சூழ்நிலை அறிந்து செயல்பட்டான்.

“ஒன்றும் இல்லை; தங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்று கூறினான்.

அரசியல் தலைவர்கள் சந்திப்பது மரியாதை நிமித்தமாக நடப்பது என்பது அன்றும் இருந்தது. வெளியில் வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் மரியாதை நிமித்தம் உதவுகிறது. அவனுக்கு அது தான் கை கொடுத்தது.

“மிக்க நன்றி! விருந்து உண்டு போகலாம்” என்று இனிது கூறி வீமன் விடைபெற்றான்.

வந்த களைப்பு; தேரில் வந்த அலுப்பு; ஏமாற்றம்; குழப்பம்; ஒதுங்கி இருக்க விரும்பினான். சோறு வடிக்க வேறு ஒரு ஆள் தன்னுடன் வந்திருப்பதால் அவனை அனுப்பிவிட்டுக் காற்று வாங்கத் தன் அறைக்குச் சென்றான். சாளரங்கள் திறந்தான்; காற்று அவனைத் தேடி வந்து

வீசியது; அவன் களைப்பை ஆற்றியது. தமயந்தி அவள் அவன் முன் இல்லை; அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றினான். பிறன் மனைவி அவள் என்ற மதிப்பு அவனுக்கு உதித்தது; உத்தமன் ஆயினான்.

நளன் அவனுக்கு என்று வகுத்த பள்ளி; இவன் சென்றதால் அது மடப்பள்ளியாயிற்று. சோறு சமைக்க வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் கழுவி வைக்கப் பட்டிருந்தன. அடுப்பு எரித்து அரசி களைந்து உலை ஏற்றி உருப்படியாகச் சமையல் செய்ய வேண்டும்.

பணம் தேவைப்பட்டால் அதை எண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ‘செக்’ எழுதினால் அதை நீட்டினால் பணம் கைக்கு வந்து சேர்கிறது.

இவன் வங்கியில் வைத்திருக்கும் வைப்புப்போல் வரங்களைப் பெற்றிருந்தான். “அங்கி, அமுதம், பருகும் நீர், அணி, ஆடை எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நீ பெற்றுக் கொள்ளலாம்” என்று தேவர்கள் வரம் தந்திருந்தனர். அதனை இப்பொழுது காசு ஆக்கிக் கொண்டான்.

புகையில்லாமலேயே வகைவகையாக உணவுகளை வரவழைக்க முடிந்தது. சமையல் பிரமாதம், காய்கறிகள் கனி வகைகள் இனிப்புகள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டன. சரவணன் அருளால் சகலமும் கிடைப்பதுபோல் அவனுக்கு அனைத்தும் வந்து சேர்ந்தது.

நளன் தனிமைப் படுத்தப்பட்டான். இனி தீவிர விசாரணை நடத்துவது என்று காவிரிப் பெண்ணாள் கருத்தினைக் கொண்டாள்; கண்ணீர் பெருக்குவதில் அவள் காவிரியை ஒத்து இருந்தாள்.

சேடி ஒருத்தியை அழைத்தாள் “நீ செய்தி அறிந்துவா! ஒன்று அறிக; உற்று அடைந்து அவனைப் பற்றி செய்திகள் திரட்டுக” என்றாள்.


“அவனை எப்படி இழுப்பது? எவ்வாறு அழைப்பது? எதைப் பேசுவது?” என்று வினாவினாள்.

“வழி உள்ளது; மக்கள் இருவரையும் உன்னுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் அவன் முன் ஆட விடுக; அவன் நாட வருவான்; அப்பொழுது அவனை அறிக; சொற்களைக் கண்டு சொந்தம் பந்தம் அறிய முடியும்” என்று கூறினாள்.

“கன்றினைக் கண்டால் பசு ஒடிவரும்; எளிதில் அவனை அறிந்து கொள்ள முடியும்” என்று கூறி அனுப்பினாள்.

நாடகம் தொடங்கியது; மக்கள் இருவரும் அவன் முன் விடப்பட்டனர். நளன் தன் மகள் மகனைக் கண்டான். சற்று வளர்ந்திருந்தனர். அரசன் இல்லில் வளர்ந்தவர்கள்; மலர்ச்சி பெற்று இருந்தனர். இடைவெளி அவர்களை மாற்றி இருந்தது. அவர்கள் வளர்ச்சி கண்டு இவன் உள்ளம் விம்மிதம் எய்தியது. இவனும் எடை கூடினான்.

அவனால் தன்னை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. இருவரையும் வாரி எடுத்தான்; அணைத்தான்; உச்சி முகர்ந்தான்; மெச்சிப் புகழ்ந்தான்; நச்சி அணைந்தான்.

தேர் ஒட்டி! இவன் ஏன் அணுகுகிற ஆசை வார்த்தைகள் பேசுகிறான். எங்கோ கேட்ட குரலாக இருந்தது. தம்மை அறியாமல் அவர்களும் அவனை அணுகினர்.

மற்றும் அவன் அன்பு குழையப் பேசினான்.

“என்னய்யா யார் நீ! ஏன் எங்களை எடுக்கின்றீர்” என்று கேட்டனர்.

“எனக்கும் உங்களைப்போல் பிள்ளைகள் உள்ளனர். அவர்களைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்;

வித்தியாசமே இல்லை; அதனால்தான் உங்கள்பால் எனக்கு இந்த ஈர்ப்பு” என்றான்.

“நாங்களாகவே இருந்தால்” என்றனர். அவர்கள் சிரித்துப் பேசினர்.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

“அது எப்படி முடியும்? நீ தேர் ஒட்டி; என் தந்தை பார் ஆளும் மன்னன்” என்றனர்.

“எப்படி இங்கே வந்தீர்” என்று வினாவினான் நளன்.

“என் தந்தை எங்களை விட்டுப் பிரிந்தார். காட்டில் என் தாயைத் தவிக்கவிட்டுத் தனியாக நடந்து சென்று விட்டார். அதனால் நாங்கள் இந்த நகரை வந்து அடைந்திருக்கிறோம். எங்கள் நாட்டை மற்றொருவன் ஆள்கின்றான்” என்றனர்.

“உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மாற்றான் ஒருவன் உங்கள் நாட்டை ஆள்கின்றான். நீங்கள் பிறர் கையேந்தி வாழ்கின்றீர்; மானம், வீரம் இவற்றை எல்லாம் அடகு வைத்துவிட்டு இங்குப் புகலிடம் தேடிக் கொண்டீர். மன்னன் மக்கள் என்று கூறுகிறீர்; அந்த வீரம், விவேகம், செயல்பாடு இவை எல்லாம் எங்கே போயிற்று!”

“உங்கள் பெருமை எல்லாம் என்ன ஆயிற்று. சுகம் தேடி இங்கு வந்து ஒடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்” எனறான்.

“மடையன் நீ; எதைப் பேசுவது? யாரிடம் பேசுகிறாய் என்பதும் அறியாமல் பேசுகிறாய். என் தந்தை இருந்தால், நீ சொல்வது கேட்டால், பேசுவது அறிந்தால், அவர் இந்நேரம் கொதித்து எழுந்து உன்னை மிதித்து இருப்பார்; தப்பித்தாய்” என்றனர்.


“என் தந்தை வாய்மையை மதித்தவர். அதனால் வாய்மூடிக் கொண்டார். நாட்டை வலிமையால் வவ்வ முடியும். வீரம் இல்லாமல் இல்லை; எனினும் கட்டுப் பட்டவர்; இழந்ததைத் திரும்பிப் பெற முயல்வது பிச்சை எடுப்பதற்கு நிகராகும். அதை அவர் செய்யவில்லை; நிச்சயம் ஒரு நாள் நாட்டைத் திரும்பப் பெறுவோம்” என்று உறுதி கூறினார்.

“மன்னர் பெருமை மடையர்கள் அறிய மாட்டார்கள்; என்னை மன்னித்துவிடுக” என்று தாழ்ந்து பேசினான் நளன்.

மக்களும் தந்தையும் சூடு பிறக்கப் பேசியது அருகிருந்து கேட்டாள் சேடி; அவர்களை அழைத்துக் கொண்டு மாளிகை வந்து அடைந்தாள்.

இச் செய்திகளைப் பதிவு செய்து கொண்டாள்; தட்டில் அல்ல; மனத்தட்டில்; அப்படியே தமயந்தி இடம் ஒப்புவித்தாள்.

நளன் மக்கள்பால் காட்டிய பாசத்தையும், வீர உரையையும், அதற்கு இவர்கள் சொன்ன சொற்களையும் விடாமல் பேசினாள். புலியின் புதல்வர்கள் பூனைகள் ஆவது இல்லை என்பதை அறிந்து மெய்ம் மயிர் சிலிர்த்தாள். வீரம் உடையவர் தம் மக்கள் என்பதை அறிந்தாள்.

நளன் அவன் உளன் என்பதை அறிந்தாள். மற்றும் அவன் இருந்த கோலத்தைக் கேட்டாள் “கைகள் கரிந்துள்ளன” என்று அந்த மங்கை உரைத்தாள். அது புகையால் கரிந்துவிட்டது என்று கருதினாள்.

“அந்தக் கைகள் அடுப்புப் புகையால் கருகியவோ?” என்று கருதி அழுதாள்; “கொங்கை அளைந்து தன் கூந்தலைத் திருத்தி வருடிய அவன் அங்கை இரண்டும் இவ்வாறு கருகிவிட்டனவே” என்று கூறி வருந்தினாள்.

கிளர்ச்சி ஊட்டிய கைகள் தளர்ச்சி உற்றனவே என்று கூறி வருந்தினாள். தடவிக் கொடுத்த கைகள் இன்று தட்டு முட்டுகள் கழுவ நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அன்று வாழ்ந்த வாழ்க்கை அவள் கண்முன் வந்து நின்றது; அவனோடு மகிழ்ந்த நாட்கள் அவற்றை எண்ணிப் பார்த்தாள். அடுக்களை அறியாத அவன் கைகள் இன்று புகை வடுக்களைப் பெற்று விட்டனவே என்று எண்ணி வருந்தினாள்.

தன் கொங்கைகளைத் தொட்டு வருடிப் பின் கூந்தலை நீவிய அந்த அழகிய கைகள் இன்று கறுத்து விட்டன என்று எண்ணிப் பார்க்கும்போது அவள் நெஞ்சு வெடித்தது; கரும்புகை அவள் பெருமூச்சில் வெளிப் பட்டது. வேதனையுள் ஆழ்ந்தாள். முதலில் அவனைப் பார்க்க வேண்டும். அந்தக் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். அதனைத் தடவித் தர விழைந்தாள். அவன் வருகையை எதிர்நோக்கி நின்றாள்.

நேரே தந்தையிடம் சென்றாள். புதிருக்கு விடை கண்டதுபோல் அவன் எதிருக்கு நின்று பேசினாள். “சந்தேகமே இல்லை; அவர்தான் அவர்” என்றாள்.

அவர் என்றால் எப்படி விளங்கும்? “யாரைக் குறிப்பிடுகிறாய்"? என்று கேட்டான் லிமன்.

“உம் மருமகன்” என்றாள்.

சென்ற உயிர் தானே இடம் தேடி வந்தது போல் ஆயிற்று அவனுக்கு.

“யாரைக் கூறுகிறாய் விளக்கமாகக் கூறு” என்றான்.

பெயரைக் குறிப்பிடவில்லை. அந்த அளவு பெண்கள் அன்று உரிமை எடுத்துக் கொள்ளவில்லை. சம உரிமை என்ற சரித்திரத்தை அவர்கள் படைக்க அன்று

அவர்களுக்குத் தேவைப்படவில்லை; அது தேடிப் பெறவில்லை. பெண்களை மதித்த காலம் அது. அதனால் இந்தக்கூச்சலுக்கு அன்று தேவையே ஏற்படவில்லை.

அவள் உள்ளத்தில் வைத்துப் போற்றிய தெய்வம்; அதனால் பெயரை அவள் கூற அவள் நா பழகவில்லை.

“மன்னனுக்குத் தேர் ஒட்டி வந்துள்ளாரே அவர்தான் அவர்” என்றாள்.

நளன்தான் அயோத்தி மன்னனுக்குத் தேர் ஒட்டி வந்தான் என்பதை அவள் தந்தை அறிந்து கொண்டான்.

அவ்வளவுதான்; நளன் தன் மருமகன்தான்; என்றாலும் மாமன்னன்; அதற்கு உரிய சிறப்புத் தந்து ஆக வேண்டும்; ‘வீடியோ காமிராக்களை’ அழைப்பதுபோல் முரசு தப்பட்டை நாதஸ்வரம் இன்னும் இத்தியாதி கூச்சல் குழப்பங்களையும் உடன் வரச் செய்து பூக்களை எடுத்துத் தொடுத்து மாலையாக்கி நளனைச் சந்தித்தான்.

“மருமகனே வருக” என்று மதிப்புடன் அழைத்தான். அவன் மறுமொழி கூறாமல் மழுப்பத் தொடங்கினான்.

“யான் வாகுவன்” என்றான்.

அரசியல் பேசினான்; “மன்னர்கள் எனப்படுபவர் மக்களின் தொண்டர்களா தலைவர்களா” என்று கேட்டான் வீமன்.

“தொண்டு செய்வதற்காகத் தலைமை ஏற்றவர்கள்” என்று கூறினான்.

அவன் நுட்ப அறிவை வியந்தான். இவன் நளன்தான் என்பதை அறிந்தான்.

அரசனுக்குத்தான் இந்த நுட்ப அறிவு இருக்க முடியும் என்று தெரிந்தான்; தெளிந்தான்; அறிந்தான்.

உருமாறி இருந்தான்; அது எப்படி இவ்வாறு மாற முடிந்தது? சிந்தித்துப் பார்த்தான்.

அலைச்சல் அவன் மாற்றத்துக்கு காரணம் என்று முடிவு செய்தான்.

கடன் பட்டவர்கள் முக்காடு இட்டுக் கொண்டு முகம் மறைத்துக் கொள்வது இயல்பு; சிலர் தாடி, மீசை வைத்துத் தரித்திரர்கள் போல் காட்சி அளிப்பதும் உண்டு; மொட்டை அடித்துக் கொண்டு முடி இழந்தமையை வெளிப்படுத்துவதும் உண்டு. இப்படிக் குட்டையானவர்களை அவன் இதுவரை பார்த்ததே இல்லை.

“மருட்சி மிக்கது உன் நாடு; கமுக மரத்தின் பாளையை ஐந்தலை நாகம் என்று மந்தி தெளியாது இருக்கும் நாடு உம்முடைய நாடு; நீயும் சுய வடிவு காட்டாமல் அயல்வடிவில் நிற்கிறாய். அதனை மாற்றிக் கொள். வேறு சட்டை போட்டுக் கொள். உடுத்திக் கொள். உருவை மாற்றிக் கொள்” என்று வேண்டினான்.

வாழ்க்கை நாடகம் அல்ல; ஒளி மறைவுகள் சில காலம் அமையலாம். நீடிக்க முடியாது. நாடகப் பாங்கு இனித் தேவையில்லை.

கார்க்கோடகன் அளித்த அழகிய ஆடை அதனை எடுத்தான். மந்திரக் கோல்போல் அது விளங்கியது; உடுத்திக் கொண்டான். ஆள் மாறினான். நளன் அவர்கள் முன் வந்து நின்றான்.

அரவரசன் அவனுக்குத் தந்த அழகிய ஆடைகளில் ஒன்றினை எடுத்து உடுத்தான்; மற்றொரு துகிலைப் போர்வையாய் மடுத்தான். அவன்தன் பழைய உருவினைப் பெற்றான்.

மகன் ஒடோடி வந்தான். தந்தையைக் கண்டதும் தன் சிந்தையைப் பறி கொடுத்தான். தாமரை ஒத்த அவன்

கண்களில் நீர் துளித்தன. தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கினான். தங்கையும் புத்தாடை உடுத்தி இருந்தாள்; பொன் நகைகள் மின்னி அவளுக்கு அழகு தந்தன. அவளும் தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். புதல்வர்களை எடுத்து அணைத்துக் கொண்டு அளவற்ற மகிழ்வு கொண்டான்.

தமயந்தி மாலையிட்ட நாளில் அவள் கையில் பொன்மாலை தாங்கி இருந்தாள். அந்தக் கோலத்தில் அவள் அவனிடம் வருவாள் என்று எதிர்பார்த்தான். மன்னர் விழித் தாமரை பூத்த மண்டபத்தே பொய்கையிடத்து அன்னம் நடப்பதுபோல் நடந்து வந்தாள். வெள்ளைச் சிறகு அன்னம்போல் வந்தவள்; செம்பஞ்சுக் குழம்பு பூசிய சிவந்ததாள் அவை மின்னல்போல் பளிச்சிட்டன. அந்தக் காட்சி அவன்முன் நின்றது.

அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை அவன் பாழ் மண்டபத்தில்விட்ட காட்சியோடு வந்து நிற்பாள் என்று. அவன் விட்டுச் சென்ற கோலத்தில் அவன் முன் வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

பாதித் துகிலோடும் பாய்ந்து இழியும் கண்ணீரோடும் அவன் முன் வந்து நின்றாள். அவள் குங்குமம் அப்பிய தனம் இப்பொழுது மாசு படிந்த நிலையில் அவளைக் காண நேர்ந்தது. அந்த அலங்காரங்கள் அவளை விட்டு அகன்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மாசு படிந்த சித்திரம்; அது புதுமையாக நின்றது. அவன் காலடிகளில் விழுந்தது. அவனைக் கண்ட அவள் கண்கள் அவனைக் கண்ணீரால் குளிப்பாட்டின. அவன் விட்ட துளிகள் அவள் திருமுடிமேல் பட்டு அவளை நனைத்தன; அவை அவன் இரக்க உணர்வைத் தீட்டிக் காட்டின; பரிவும் பாசமும் நீ முந்தி நான் முந்தி என்று அணியிட்டுக் கொண்டு வந்தன என்பதை அறிந்தான்.

பிரிந்தவர் கூடினர். ஆனால் பேச இயலாமல் போய் விட்டது. காண வேண்டும் என்று விழைந்தாள், காண முடியாமல் போய்விட்டது. காரணம் அவள் விழிகளை அவள் கண்ணீர் மறைத்தது.

விழிகள் துயில் கொண்டு இருந்த நேரத்தில் அவன் விழிகள் அவளைப் பார்க்காமல் நீங்கின. அவளைவிட்டுப் பிரிந்தான்; அவன் பிரிந்தான் என்பதை அவளால் மறக்க முடியாமல் போய்விட்டது. அதை வினாவாக வைத்து அவனைக் கேட்க விரும்பினாள். பார்வையே பேச விரும்பியது. ஆனால் கண்ணீர் போர்வையாக இருந்து மறைத்துவிட்டது. அதனால் கருத்து பரிமாற்றம் ஏதும் நிகழாமல் போயிற்று.

வாழ்த்துக் கூறுவதற்கு என்றே வானவர்கள் பூக்களைச் சேர்த்து வைத்து மழைபோல் பொழிந்தனர். குளிர்ச்சியைத் தந்தது; நறுமணமும் தந்தது. வண்ணத்தால் அழகும் சேர்ந்தது. பூமாரி பொழிந்தனர் தேவர்கள் என்று எங்கும் பேசினர்.

உத்தமன் இவனைப்போல் எத்திசையும் இல்லை என்று இந்த இமையவர்கள் வாழ்த்துரை வாசித்து அளித்தனர். அது மண்ணுலகத்தில் எதிர் ஒலித்தது. தேவர்களின் பாராட்டினைப் பெற்றான்; அதனால் பெருமை உற்றான்.

கலிதோற்றான்; இவன் வெற்றியை ஏற்றான். தொடர்ந்து இவனை அச்சுவேறு ஆணி வேறாகப் பிரித்து அலசிப் பார்த்தவன் கலியன்; அவன் தேவியின் கற்பும், பொற்பும், அவள் விளைவித்த அற்புதங்களும் கண்டு திகைத்தவன்; அவன் ஒரு நற்சான்று இதழை அழகாக வரைந்து தந்தான். “தேவியின் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும் பூஉலகில் ஒப்பார் யாரும் இல்லை” என்று பாராட்டினான்.


“மற்று உனக்கு என்ன வரம் வேண்டும், கேட்டுப் பெற்றுக் கொள்” என்று பார் அளிக்கும் பார்த்திபனிடம் கூறினான். உலகைக் காக்கும் உயர் வள்ளல் அவனிடம் மடிதட்டிக் கொண்டு திருமகள் இடம் கேட்டது; உதவுவதற்கு விரைந்தது.

“வரம் கேள்” என்று கேட்டான் கலி.

“தரம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்று சிந்தித்துப் பார்த்தான்.

“நீ நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாதே! அதுபோதும்” என்றான்.

“என் பிறவிக் குணம் அது என் ஜீவனம்; பிழைப்பு; தீயவை செய்வதற்கு என்றே படைக்கப்பட்டவன். அதனால் உன் வரத்தில் சிறிது திருத்தம் செய்து கொள்” என்று கூறினான்.

“என் கதையை இந்த உலகம் பேசும்; ‘நளன் கதை’ என்று தலைப்புத் தருவர். இதைக் கேட்கும் நல்லோர் நானிலத்தில் இருப்பர். அவர்களுக்கு எந்தத் தீமையும் செய்யாதே அதுபோதும்” என்று கேட்டுக் கொண்டான்.

“உன் கதை உலகுக்கு ஒரு படிப்பினை. ‘செய்வன திருந்தச் செய்’ என்பது நீ கற்றுத் தந்த படிப்பினை உன் கதையைக் கேட்பவர் இனி விழிப்புடன் செயல்படுவர். அவர்கள் வழுக்கி விழமாட்டார்கள். யானும் அவர்களுக்கு இழுக்குத் தரமாட்டேன்” என்று உறுதி தந்தான்.

“நாட்டில் சட்டங்கள் சரிவரச் செயல்பட்டால் நீதிகள் கெடுவது இல்லை; நெறிகள் பிறழ்வது இல்லை. நீதியும் சட்டமும் நிலை நின்றால் உலகுக்குக் கேடு இல்லை” என்று கலி கூறி விடைபெற்றான்.


“எந்தக் காலத்தும் உன் சரிதம் கேட்போரை நான் அடையேன்” என்று வாக்குறுதி தந்தான். அது அவனுக்குத் தந்த வரமாக அமைந்தது.

வீமன் விருந்து வைத்தான். அருந்துமாறு அனைவரையும் வேண்டினான்; கூடி இருந்து குளிர்ந்து உண்பது அவர்களுக்கு மகிழ்வு தந்தது. பல்வகைக் கறிகளும் சுவை மிக்க உணவுகளும் பரிமாறப்பட்டன. அயோத்தி மன்னன் அழைக்கப்பட்ட புதிய உறவினனாக ஏற்கப் பட்டான். நாடு மகிழ்வு அடைந்தது.

அயோத்தி மன்னன் நாடு திரும்பப் புறப்பட்டான். மாபெரும் மன்னனை மடைப்பள்ளியில் வைத்து அவனை வருத்தியமைக்கு வருந்தினான். தேர் ஏறிச் செல்பவனைத் தேர் ஒட்டியாக நடத்தியதற்காக வருத்தம் தெரிவித்தான். அவன் காதலியை இவன் மனத்தால் கருதினான். அதைப் பற்றிப் பேசுவது இழுக்கு என்பதால் அதைப் பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை “தவறு செய்திருந்தால் பொருட்படுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான்.

நளன் சிரித்தான்; அவன் செய்தது பேருதவி என்று நன்றி கூறினான். அதனால்தான் தன் துணைவியைச் சந்திக்க முடிந்தது என்று கூறித் தன் நல்ல நினைவுகளை அவனுக்குத் தெரிவித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிப் பின் விடை பெற்றுப் பிரிந்தனர். அயோத்தி மன்னன் வெறுமையோடு தன் நகரை அடைந்தான். தன் தவறுக்கு வருந்தினான்.

“அப்பா! எப்பொழுது நம் வீட்டுக்குப் போவது” என்று இளவரசன் கேட்டான்.

“அம்மா! என் பொம்மைகளை நம் வீட்டில் வைத்திருக்கிறேன். போகலாம்” என்றாள் அவன் தங்கை.


“இருந்தது போதும் இனி இருப்பது நம் நிடத நாடு” என்று சொல்லிப் புறப்பட்டனர்.

கொடிகள் அசைந்தன; முரசுகள் முழங்கின; வளைகள் ஒலித்தன; மக்கள் ஆரவாரத்தோடு வழி அனுப்பினர்.

தேர் ஏறித் தெருவில் சென்றனர். வழியில் சோலைகள் ஆறுகள், பொய்கைகள், குன்றுகள் முன்பு இருந்தது போலவே இருந்தன. அவற்றை அவன் அவளுக்குக் காட்டிச் செல்லவில்லை. பிள்ளைகளும் ஊர் போய்ச்சேர்வதில் உவகை காட்டினர்.

“இனி நம் ஊர் எவ்வளவு தூரத்தில் உள்ளது” என்று சிறுவர்கள் கேட்டனர்.

“இந்த மலை கடந்து ஏழுமலைகளுக்கு அப்பால் விந்தம் என்னும் நம் நகர் உள்ளது” என்று நளன் கூறினான்.

விடியற் பொழுதில் அவர்கள் தம் நகரை அடைந்தனர். சூரியனும் கிழக்கே உதித்தான்.

இழந்த நாட்டைத் திரும்பப் பெறாமல் நகருள் நுழைய அவன் விரும்பவில்லை.

சூதாடித் தோற்ற நாட்டை மறுபடியும் சூதாடிப் பெறுவதே முறை என்று காத்திருந்தான்.

“ஒட்டுவதற்கு உன்னிடம் உள்ள பொருள் யாது” என்று முன்பு கேட்டான் புட்கரன்.

முன்பு அவனைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அங்கிருந்தால் கேடு வரும் என்று நாட்டை விட்டு நீங்கினான்.

ஒட்டுவதற்கு உறுபொருள் தன்னிடம் இப்பொழுது மிகுதியாக உள்ளது. அதனால் சூதாடி மீட்பது என்று முடிவு செய்தான்.

நகரத்தின் புறத்தில் ஒரு சோலையில் தங்கினான். தூதுவர் சிலரை அனுப்பிச் சூது ஆட அவனை வருமாறு அழைத்தான்.

அழைத்தால் வராமல் இருப்பது எப்படி? கட்டுக் குலையாமல் நளன் தன் துணைவியோடு இருப்பதைக் கண்டான். பட்டுப் புடவையில் அவள் பளிச்சிட்டது அவன் கண்ணைப் பறித்தது. அவர்கள் அழிந்து போய் இருப்பார்கள் என்று கணக்கிட்டு இருந்தான்.

குத்து விளக்காக அவன் குடும்பம் ஒளி பெற்றுத் திகழ்வதைக் கண்டான். அரசிக்கு உரிய அந்தஸ்துடன் அவன் துணைவி அமர்ந்திருப்பதைக் கண்டான். வயிறு எரிந்தான்.

இனி என்ன செய்வது? உறவினன் போல் பழக முனைந்தான். நல்லவன் போல் நடித்தான். பழகியவன் போல் பல் இளித்தான். அவனை விசாரித்தான். “மக்களும் மனைவியும் சுகம்தானா!” என்று வினவினான். நலம் விசாரித்து நட்புக் காட்டினான்.

அவன் மதி மயங்கியது; தன் நிலை தடுமாறினான். பழைய வெற்றி கலியன் தந்தது என்பதை மறந்து விட்டான். “அவனன்றி ஒர் அணுவும் அசையாது” என்ற உண்மையை எண்ணிப் பார்க்கவில்லை.

தன் ஆற்றலை அவன் நம்பிக் களத்தில் இறங்கினான். பின்னணியில்லாமல் சுயேச்சையாக நிற்கும் தனி மகனாகச் செயல்பட்டான்.

“ஆடுவதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டான்.

நளன் தன் கைமோதிரத்தைக் காட்டி அதை முதலாக வைத்து இழந்த பொருள்கள் ஒவ்வொன்றாகத் திரும்பப்

பெற்றான். அயோத்தி மன்னன் கற்பித்த நினைவு ஆற்றல் அவனுக்குக் கைகொடுத்தது. கலியன் புட்கரனுக்குத் துணை நிற்கவில்லை. தனித்து நின்று போட்டி இட்டான். மண்ணை வாரிக் கவ்விக் கொண்டான். அவன் ஆட்சி கவிழ்ந்தது. இப்படித்தானே வருணிக்கிறார்கள். ஆட்சி கைமாறியது; நளன் வேந்தன் ஆயினான்.

நளன் இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். அந்நியர் ஆட்சி அகன்றது என்பதால் மக்கள் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடி மகிழ்ந்தனர்.

“நளன் வாழ்க! காதல் வெல்க” என்று முழக்கம் எழுப்பினர்.

காதலுக்குக் கிடைத்த வெற்றி என்று நகரத்து இளைஞர் அவர்கள் தம் காதலியருடன் உரையாடினர். இதை ஒரு சான்றாக வைத்துப் பேசினர்.

“வாழ்ந்தால் நளன் தமயந்தி போல் வாழ்வோம்” என்று இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

‘அன்னத்தின் ஒவியம்’ அந்த நாட்டுச் சின்னத்தின் அடையாளமாக மாறியது. கன்னியர்கள் அன்னப் பறவையிடம் அளவற்ற பிரியம் காட்டினர்.

அன்னத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். இலக்கியத்தில் அது அழியா இடம் பெற்றது. நல்லது கெட்டது அறிந்து செயல்படும் பறவை என்ற புகழ் நிலைத்தது.

அந்த நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு கூற முடியாமல் போய்விட்டது. புலவர்கள் சில அளவைகள் வைத்திருந்தனர். மகிழ்ச்சி என்பதற்குச் சில அளவு கோல்கள் கருவிகள் அவர்கள் அகராதியில் வைத்திருந்தனர்.

மழை மேகத்தைக் காணும் மயில், விழி பெற்ற குருடன், நீர் பெற்ற நிறை வயல் இவற்றை அளவாக வைத்திருந்தனர். பார் பெற்று மாதோடு மன்னன் வரக்கண்ட மாநருக்கு இவை மூன்றனையும் உவமை கூறினர்.

“நளன் சிறப்புற ஆட்சி செய்தான். நீதி வழுவவில்லை; நேர்மை குறையவில்லை அவன் புகழ் நிலைத்த ஒன்று” என்று மக்கள் பாராட்டினார்.

இந்தக் கதையை வியாசர் தருமனுக்கு உரைத்தார். அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார்.