புகழேந்தி நளன் கதை/சுயம் வர காண்டம்

1
சுயம் வர காண்டம்

நிடதநாடு நளன் ஆண்ட நாடு; அதன் நீர்வளம் நிலவளம் அதனைச் செல்வம் மிக்க நாடாக ஆக்கின.

கண்ணைக் கவரும் பொய்கைகள் அவற்றில் வண்ண மலர்கள் அந்த நீர் நிலைக்கு அழகு ஊட்டின; வயல்களில் கயல்மீன்கள் பிறழ்ந்து கவின்மிக்க காட்சியைத் தந்தன; குவளை மலர்கள் பூத்துக் கிடந்தன; தாமரை மலர்களில் செந்தேன் சொட்டத் தளைகள் அவிழ்ந்தன. காட்சிக்கு இனியதாக அவ்வூர்ப் பொய்கைகள் எங்கும் நிறைந்து கிடந்தன.

கயல் பிறழ்ச்சியும், குவளை மலர்ச்சியும், தாமரை தளை நெகிழ்ச்சியும் திருமகளின் கண்களை நினைவூட்டின. நிலமடந்தையின் கண்போல் நிடத நாடு தோற்றம் அளித்தது; பல்வகைச் சிறப்புகளால் அது ஏற்றம் பெற்று இருந்தது.

இந்த நாட்டின் தலைநகர் மாவிந்தம் ஆகும். இந்நகர் செல்வம் மிக்க நகராக விளங்கியது. மகளிர் தம் கொங்கைக்கு அப்பிய கலவைச் சாந்து அது உலர்ந்து குப்பையாய்த் தெருவை நிரப்பியது. களிறுகள் அக்கலவைச் சாந்தில் கால் வழுக்கிவிழுந்தன. அது சேறாக விளங்கியது.

அவ்வூர் மகளிர் தம் கூந்தலுக்கு ஊட்டிய அகில்புகை வான்முகிலில் கலந்து அது பெய்யும் மழை நீருக்கு அம் மணத்தைச் சேர்ப்பித்தது. அந்த ஊரில் பெய்த மழை நீரும் அகில் மனம் வீசியது.

மக்கள் கல்வியும், ஞானமும் மிக்கவராய் வாழ்ந்தனர். கந்தனை அனையவர் கலை தெரி கழகங்களாக அவர்கள் பயிலும் கல்வி நிலையங்கள் காட்சி அளித்தன. புலவர்கள் நூல்களை ஆராய்ந்தனர். கவிஞர்கள் கவிதைகள் இயற்றினர். அரங்கேற்றங்கள் நடைபெற்றன.

ஆடல் மகளிர் மேடைகளில் காட்சி அளித்தனர். அவர்கள் இடை’ கவர்ச்சி தந்தது. கண்புலனுக்குத் தெரியாத கவின் அது பெற்றிருந்தது. எங்கும் இசை முழங்கியது; முத்தமிழ் வளர்த்த வித்தகர்கள் கலையையும், ஞானத்தையும் வளர்த்தனர். அறிவுமிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் மக்கள் கவலை இன்றி வாழ்ந்தனர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான், அதனை உயிரினும் மேலானதாக மதித்தனர். நேர்மை தவறாது வாழ்ந்தனர். சோர்வும், சோம்பலும் அவர்களிடம் தலை காட்டவே இல்லை. ஆண்மை மிக்கவராகத் திகழ்ந்தனர். விற் பயிற்சியும், படைக்கலப் பயிற்சியும் அவர்களைச் சிறந்த வீரர்கள் ஆக்கின. ஓடாத படையை உடையவன் நளன் என்ற புகழுக்குக் காரணம் ஆயினான்.

வறுமை இல்லை; அதனால் மக்கள் பிறர் பொருளைக் கவர விரும்பவில்லை; இரத்தல் என்பது இழிவு என்று அறிந்தவராய் வாழ்ந்தனர்; உழைத்தனர்; உயர்வு அடைந்தனர். மக்கள் அழுது அரற்றியது இல்லை; கலக்கம் என்பதும் அவர்கள் கண்டதும் இல்லை; சோர்வு, கலக்கம், அரற்றுதல் என்பனவற்றைக் காணவேண்டும் என்றால் மகளிர் கூந்தலில் சோர்வு காண முடிந்தது; கலக்கம் என்பது நீர் குடைந்தாடும் குளங்களில் காண முடிந்தது. அரற்றுதல் என்பது மகளிர் கால் சிலம்பில் கேட்க முடிந்தது. வளைவு என்பது வில்லிலே கண்டனர். மக்கள் சொல்லிலே அவர்கள் கண்டது இல்லை.

இத்தகைய வளம்மிக்க நகரில் எங்கும் சோலைகள் நிரம்பி இருந்தன. சேலை கட்டிய மகளிர் இச்சோலைகளில் பூப்பறித்து மகிழ்ந்தனர். புனல் விளையாடினர்; மகிழ்வுடன் விளங்கினர்.

இளவேனிற் பருவம் வந்தது. மன்மதன் தன் கரும்பாகிய வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத் தான். தென்றல் வீசியது; அது சோலையில் உள்ள பூக்களின் வாசத்தைத் தெருக்களில் கொண்டு சென்று வீசியது. இளைஞர்கள் கிளர்ச்சி பெற்றனர். சுகமான காற்று அவர்களைக் காம விருப்புக்குத் தூண்டியது: இன்ப வேட்கையை நாடினர்.

பூக்களில் தேன்நாடி வண்டுகள் சென்றன. நளன் சோலைகளில் பூ நாடிச் சென்றான். அவனோடு அந்தப் புரத்து அழகியர் சிலர் உடன் சென்றனர். அவர்கள் முகம் சந்திரன் போல் ஒளி வீசியது. கண்கள் கருங்குவளை என்று அழகு பெற்றிருந்தன. அம்மகளிர் நளனையே சுற்றி வட்டமிட்டனர். அவர்கள் விழிகள் அவனை வளைத்துப் பிடித்தன. அவர்கள் தன்னைச் சூழ்ந்து வர நளன் சோலையை அடைந்தான்.

அங்கே வடிவுமிக்க அன்னப்பறவை ஒன்று பறந்து வந்தது; பசுமையான சோலை அதுதன் பசுமை நிறம் மாறி வெண்மை நிறம் பெற்றது என்று கூறும்படி அதன் சிறகுகள் வெண்மையாகக் காட்சி தந்தன. அதன் தாள் நிறத்தால் பொய்கையின் தலம் சிவப்புப் பெற்றது. இந்தப் புதுமை கண்டு பதுமை நிகர் பெண்களோடு இருந்த நளன் அதனைப் பிடித்து வர அவர்களுள் சிலரை ஏவினான்.

மயில் கூட்டம் சென்று வளைப்பதுபோல் அவர்கள் அந்த அன்னத்தை வளைத்துப் பிடித்தனர். அதனை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

“தன்னை இவர்கள் ஏன் பிடித்து வந்தார்கள்” என்பது அதற்கு விளங்கவில்லை” கூட்டத்தில் கூடி இருந்து ஆடி மகிழும் பறவை அது. தனித்து விடப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தது; தன் சுற்றம் ஆகிய அன்னப் பறவை ஏதாவது அங்குத் தென்படுமா என்று பார்த்தது. ஏக்கத்தால் அது தாக்கம் பெற்றது; நடுங்கியது; தனிமையால் வாடியது; தன் வான் கிளையைத் தேடியது.

அதன் நடுக்கத்தைக் கண்டு நளன் வடுநீங்கிய மாற்றம் உரைத்தான். “அன்னமே நீ அஞ்சாதே! உன்னை யான் பிடித்து வரச் செய்தது உன் அழகிய நடையைக் காணவே; கவிஞர்கள் மகளிர் நடைக்கு உன் நடையை ஒப்புமை கூறி வருகின்றனர். எனக்கு ஒரு ஐயம்; உன் அழகிய நடை சிறந்ததா? மகளிர் தம் மாட்சிமைப்பட்ட நடை சிறந்ததா ஒப்பிட்டுக் காணவே பிடித்து வரச் செய்தேன்.” இதில் தப்பு ஏதும் இல்லை என்று விளக்கினான்.

அங்கே அழகிய பெண் ஒருத்தி இந்த அன்னத்தைப் பிடித்து வந்திருந்தாள். தாமரையில் இருக்கும் திருமகள் போல் அந்தப் பெண் இருந்தாள். அழகி அருகில் நிற்க இந்த அன்னம் அந்தச் சூழ்நிலை கண்டு மகிழ்ந்தது. அவன் மகளிர் பால் நாட்டம் உடையவன் என்பதை அறிந்தது. காதல் செய்யும் காளை அவன் என்பதை அறிந்தது.

அவன் இரக்கம் உள்ளவன் என்பதை அறிந்தது; யாரையும் வருத்தாதவன் என்பதையும் அறிந்தது; ‘தண்ணளியான்’ என்று அவனைப் பற்றி முடிவு செய்தது. அச்சம் அதனை விட்டு அகன்றது.

அவன் பேரழகன் என்பதைக் கண்டு தெளிந்தது. அவனுக்கு ஏற்றவள் யார் என்று எண்ணிப் பார்த்தது. தமயந்தியின் நினைவு வந்ததது. அவள் அழகிய நடை அவனைக் கவரும் என்று முடிவு செய்தது. மூங்கில் போன்ற தோள்களை உடையவள் அவள். அவள் தோள்களைத் தழுவுவதற்கு ஏற்றவன் அவன் என்று முடிவு செய்தது.

“புகழ்மிக்க அரசனே! உன் பருத்த தோள்களுக்கு ஏற்றவள் சிறுத்த நெற்றியை உடைய பேரழகி தமயந்தி என்பாள் இருக்கிறாள். அவள்தான் உனக்கு ஏற்றவள்” என்று பேசியது.

காதல் விருப்பு அவனுக்கு எழுந்தது. அன்னத்தின் சொற்கள் அவனுக்குக் களிப்பு ஊட்டின; வேட்கையைத் துண்டின. அவளை அவன் தன் இதயத்தில் இருத்தினான். கன்னி அவன் மனக் கோயிலில் இடம் பெற்றாள். மன்மதன் அவன் ஆசையைத் துண்டிவிட்டான். தன் மனத்தை அவனால் அடக்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

மயிலே வந்து நடமாடுவது போன்று அவளை அவன் அதன் சொற்களில் கண்டான். தமயந்தியின் மென்மையான சாயல் அவனைக் கவர்ந்தது. “மயில் அனையாள்; அவள் யார் மகள்?"என்று ஒரு வினாவினைக் கேட்டு வைத்தான்.

அவள் அரச மகளா? தெய்வ மகளா? என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அரச மகளாயின் அவள் தந்தை யார்? நாடு , யாது? என்பனவற்றை அறிய ஆவல் கொண்டான். ஊர், பெயர் கூறினால் தெரிந்து கொள்ளலாம் என்ற ஆவல் கொண்டான்.

‘விதர்ப்பன் மகள்’ என்று அன்னம் பதில் உரைத்தது. பேரரசன் மகள் அவள் என்பதை அறிந்து கொண்டான். அவளை எப்படி அடைவது?

அந்த அன்னம் அவன் விருப்பத்தைத் துண்டியது. அவள் நற்குணங்களையும், செயல்களையும் விளம்பத் தொடங்கியது. மாட்சிமை மிக்கவள் அவள் என்பதை எடுத்துக் கூறியது. அவளிடத்தில் பெண்மை அரசு புரிகிறது என்று எடுத்துக் கூறியது. அவள் நற்குணங்களை அழகிய உருவகங்களில் எடுத்துப் பேசியது.

“அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவை அவள்பால் காணப்படும் நற்குணங்கள். இவை அவளுக்கு நாற்படைகள் ஆகும். காற்சிலம்பு அணி முரசு, கண்கள் அவளுக்கு வேலும், வாளும் ஆகும். அவள் அழகிய முகம் அது நிலவு போன்றது; அது வெண் கொற்றக்குடை. அதன் கீழ் பெண்மை அரசு ஆள்கிறது” என்று கூறியது.

“அவள் வனப்பு மிக்கவள்” என்று கூறியது. இடை மெல்லியது; வண்டு தன் சிறகு கொண்டு வீசும் சிறு காற்றுக்கும் அவள் ஆற்றாள்; மெல்லியலாள்” எனப் பேசியது.

“அவள் செந்தேன் மொழியாள்” என்றும் கூறியது. “மன்மதனும் அவளிடம் வந்து தன் மலர் அம்புகளைத் தீட்டுவதற்கு அவள் பிறை போன்ற நெற்றியைத்தான் நாடுகிறான். அவள் அழகு மன்மதனையும் கவர்ந்து உள்ளது. அவன் தன் ஆட்சிக்கு அவளைத் துணையாக நாடுகிறான். இளைஞர்கள் அவள் பேரழகைக் கண்டு மனம் உடைவர்” என்று பேசியது.

அவனுக்கு அவள்பால் விருப்பு பெருகியது. இந்தப் பறவை எப்படித் தன் காதலை எடுத்து உரைக்கும் என்று ஏங்கினான். இருவருக்கும் உள்ள பழக்கம் எத்தகையது என்பதை அறிய விரும்பினான்.

“அன்னமே! நீ உரைத்த அன்னம் அவளைப் பற்றி எண்ணவே என் ஆவி சோர்கிறது. உனக்கும் அவளுக்கும் உள்ள நெருக்கம் யாது? பழக்கம் யாது?” என்று கேட்டான்.

“யாம் பூஞ்சோலையில் வாழுகின்ற பறவைக் கூட்டம். அவள் தன் மனையிடத்தில் மயிற்கூட்டம் போல் திரிந்து உள்ளோம்; காமன் அங்கு வந்து படை கற்க வருவான். அவள் பாத நடையைக் கற்க யாம் செல்வது வழக்கம்” என்று கூறியது.

அன்னத்திற்கும் தமயந்திற்கும் உள்ள உறவு, பழக்கம், நெருக்கம் அறிந்ததும் அவனுக்குக் காதலில் வேட்கை மிகுந்தது.

“இற்றது நெஞ்சம்; எழுந்தது இருங்காதல்; அற்றது மானம்; அழிந்தது நாண்” என்று தன்நிலை பற்றிக் கூறினான். “இனி என் உயிரே உன் கையில்தான் உள்ளது. நீ கொண்டு வந்து கூறும் சொற்களில்தான் என் வாழ்வு உள்ளது” என்று கூறினான்.

“அவளை உன் தோள்களில் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று கூறி விடை பெற்றது.

“வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றது; உயரப் பறந்தது.

அவன் ஆர்வம் அளவு கடந்தது. அது விரைவில் செல்ல வேண்டும், சென்று பேச வேண்டும். காதலை எடுத்து இயம்ப வேண்டும். மறுஉரை பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினான்.

அவள்பால் கொண்ட காதல் அவனைப் பெரிதும் கலக்கியது. அவள்பால் கொண்ட விருப்பு அதனால் காதல் காட்சி ஏதேனும் கண்டதும் அவன் மனம் அழிந்தான்; வேதனையால் வெந்து வருந்தினான்.

ஆண் குயில், பெண் குயிலுடன் விரும்பி மகிழ்வுடன் பேசும் சிறுகுரல் கேட்டான். அவ்வளவுதான் அதை அவனால் தாங்கவே முடியவில்லை. “காதல்” அது வேதனையைத் தந்ததது.

“இந்தக் குயிலைப்போல் யான் அவளோடு பேசி மகிழமாட்டேனா” என்று ஏங்கினான்.

எந்த அழகிய காட்சியைக் கண்டாலும் அவன் மனம் இளகியது. அவன் முன் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது. அதனைக் கண்டான். அவள் மென்மையான சாயல் அவன் கண்முன் நின்றது. அவளே வந்து முன் நிற்பது போல் தோன்றியது. அவன் உள்ளம் கலங்கினான்; “அவள் பேரழகைக் கண்டு மனம் மகிழ மாட்டோமா” என்று ஏங்கினான்.

குயிலைக் கண்டான். அதன் குரல் கேட்டு மனம் நைந்தான். மயிலைக் கண்டான். அதன் ஒயில் பார்த்து மனம் அழிந்தான். அங்கே பூங்கொடி ஒன்றைக் கண்டான். அவளே ஒசிந்து நிற்பதுபோல் அது காட்சி அளித்தது. அவளுக்கு உவமையாகக் கூடிய அக்கொடியைப் பார்த்து ‘நீங்களாவது என்னுடன் உரையாட மாட்டீர்களா?’ என்று ஆற்றாமையால் பேசினான்.

“நீங்கள் மிகவும் கொடியவர்கள்” என்று கூறினான். “கொடியிர்!” என்று கூறிக் கரங் கூப்பித் தொழுதான். அச்சமும் ஆர்வமும் அவன் சொற்களில் கலந்து ஒலித்தன.

“என் காம வேட்கையை நான் தீர்த்துக் கொள்வேன்” என்று பேசி மன ஆறுதல் அடைந்தான். “கொங்கை இளநீரால் குளித்து மகிழ்வேன்” என்று பேசினான். “அவள் சொற் கரும்பைச் சுவைப்பேன்” என்றான். “அவள் பொங்கு சுழி என்னும் தடத்தில் முழுகித் திளைத்து மகிழ்வேன்” என்று கூறினான். “என் வெப்பமிகு காம நோயினை அவள் நறுங் கூந்தலின் நிழலில் ஆற்றிக் கொள்வேன்” என்றும் பேசினான்.

இவ்வாறு இவன் தனிமைத் துயரில் தளர்வு கொண்டி ருந்தான். நளன் அனுப்பி வைத்த அன்னப் பறவை தமயந்தி இருக்கும் இடத்தை அடைந்தது. அந்த அழகிய அன்னத்தைக் கண்டதும் தமயந்தி அதன் அருகில் அணைந்தாள். அவள் தன்தோழியருடன் விளையாடுவது விட்டுவிட்டு அந்த அன்னத்தைத் தனி இடத்தில் சந்தித்தாள்.

அது ஏதோ ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறது என்பதை அறிந்தவள்; ஆதலின், “நீ கூற வந்த செய்தி யாது?” என்று வினவினாள்.

கூர்த்த மதி படைத்த அந்தப் பறவை எப்படிக் கூறினால் அவள் ஏற்பாளோ அதை அறிந்து கூறியது. “செம்மனத்தான்” என்று கூறியது. தான் கண்டு வந்த ஆடவன் யார்? எத்தகையவன் என்பதைக் கூறத் தொடங்கியது. அவன் தன்பால் அன்பும் இரக்கமும் பாராட்டியதைக் கொண்டு அவனைத் “தண்ணளியான்” என்றும் கூறியது.

யாரோ ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக் கூறுவதுபோல இருந்தது. புத்தனைப் பற்றிப் பேசுவது போல இருந்தது. யாரோ ஒரு மகானைக் கண்டு வந்தது போல் அதன் பேச்சின் தொடக்கம் அமைந்திருந்தது.

அரசன் அவன் என்பதை அடுத்துக் கூறியது. அதனால் அவளுக்கு என்ன நன்மை? ‘காதல் இளைஞன்’ என்பதை அடுத்துக் கூறியது. ‘மங்கையர் தம் மனத்தை வாங்கும் தடந்தோளான்’ என்று கூறியது. வாய்மை தவறாதவன் என்று அவன் தனிப் பண்பைக் கூறியது. இறுதியில் அவன் பெயரைக் கூறியது “நளன் என்பான் ஒருவன் உளன்” என்று முடித்தது.

சரி எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவன்தானே இவன் என்று எண்ணக் கூடும்

“ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை” என்று இறுதியில் முத்தாய்ப்பு வைத்ததுபோல் கூறியது.

அடுத்தது தெய்வம் கூட இவனுக்கு ஒப்பாக மாட்டாது என்று கூறிப் புகழ்ச்சியின் எல்லையைத் தொட்டுக் காட்டியது. “இவன் அறத்தைத் தேடிச் செல்லவில்லை; மறத்தை நாடி இவன் முயலவில்லை".

“அவை தாமே அவனிடம் வந்து தங்கிவிட்டன. அவன் பார்வை அருள் நோக்கம் கொண்டது” என்றும் கூறியது. இதனை மிக அழகாகக் கூறியது.

அன்னத்தின் சொல்திறம், அவள் தனிமை, வாலிப வயது, மன்மதன் வில்லம்பு துளைத்தது; அதனால் அவள் என்ன ஆனாள்? இளைத்தாள்’ என்று கூறுவது அவசரப்பட்டுக் கூறும் சொல்லாகிவிடும். வெளுத்தாள்’ என்பதுதான் பொருந்தும். சிவந்து இருந்த அவள் முகம் வெளுத்துவிட்டது. காதல் ஏக்கம் அவளைத் தழுவியது; அவன் நினைவு அவளை வாட்டியது. மேனி விளர்த்தாள்’ என்று கூறும் நிலையை அடைந்தாள்.

மன்னன் மனத்து எழுந்த காதல் மயக்கம் அத் துணையையும் அது விவரித்துக் கூறியது. அதனைக் கேட்டு அவள் உள்ளம் உருகினாள். அவனைத் தழுவிக் கொள்ள விழைந்தாள். ஆர்வம் மிக்கவள் ஆயினாள். அவள் தன் முலை முகத்தைப் பார்த்து மயங்கினாள். அவள் வேறு என்ன செய்ய முடியும்.

அவளும் மனம் பதைத்துப் பார்வேந்தனுக்குத் தன் செய்தி கூறுமாறு வேண்டினாள். “வாவிகளில் உறையும் இள அன்னமே! நீ சென்று அவனிடம் பேசினால் என் உயிரைப் பாதுகாத்தவள் ஆகிறாய்; மறுபடியும் செல்க; அச்சோலையிடத்தே தேர்வேந்தனுக்கு என் நிலைமை நீ சென்று உரைப்பாய்; இது என் வேண்டுகோள்” என்று உரைத்தாள்.

“அவன் தோள்களை நீ தழுவ உதவுவேன்; நீ கவலை கொள்ளாதிரு; அவன் தோள்கள் உன் வன முலைக்குக் கச்சு ஆகும்படி செய்வேன்” என்று கூறியது. மன்மதன் அம்புக்கு இலக்கு ஆகிக் கலக்கமுற்று இருந்த நளன்பால் சென்றது.

அன்னம் அவளை விட்டு நீங்கியது; பின்னர் அவள் நிலைமை என்ன ஆயிற்று? காதல் நெஞ்சத்தில் காரிகை கலக்க மடைந்தாள். தனிமையை நாடினாள். தோழிகளை விட்டு ஒதுங்கினாள்; உண்பது உறங்குவது ஒழிந்தாள். மேனி பசலை பாய்ந்தது; வாட்டமுற்றாள். தோழியர் காரணம் கேட்டுப் பார்த்தனர்.

அவள் தக்க மாற்றம் தந்திலள்; கிளவிகள் சிலவே அவள் வாயில் பிறந்தன. அவள் காதல் மயக்கத்தை அக் கன்னியர் அறிந்தனர். அவள் தாய்க்குச் சென்று உரைத்தனர். தாய் அவளைப் பெற்ற தந்தைக்குக் கூறினாள். விதர்ப்பன் சிந்தித்தான். “சிறுமி அல்லள் அவள்” என்பதை அறிந்தான். “பருவ விழைவு” இது என அறிந்து செயல்பட்டான்.

கன்னியர் தங்கும் மாடத்தில் அவள் தன்னந்தனியாக இருந்தாள். அரசன் உரிய சுற்றத்தோடும் படை வகுப்புகள் பின் தொடர அம்மாடத்தை அடைந்தான். முரசு கேட்டு அவள் அவனைப் பரச விரைவில் வந்தாள். அவன் காலடிகளில் விழுந்து தொழுதாள். அவள் கண்ணிர் அவன் பாதங்களை நனைத்தது; சொற்கள் பயன் அற்றுப் போய் விட்டன. உணர்வுதான் பேசியது. அரசன் அவளை விளக்கமாக விசாரிக்காமல் விசனம் அறிந்து திரும்பினான். பேரழகு சோர்கின்றது என்று கூறும்படி அவள் சிறு நெற்றியில் வியர்வை அரும்பியது. “மணம் செய்வது; அதுதான் தக்கது” என்று முடிவு செய்தான்.

“இன்றைய ஏழாம் நாள் மங்கைக்குச் சுயம்வரம்” என்று செய்தி செப்பினான். “எங்கும் முரசு அறைக” என்று ஏவினான். அரசர்களுக்குத் தனித்தனியாகத் தூது அனுப்பினான்.

எங்கும் உள்ள அரசர்கள் தங்கு தடை அற்று அங்கு வந்து மொய்த்தனர். சந்திரன் சுவர்க்கி என்னும் அரசன் அவன்மீது பாடப்பட்ட தமிழ்ப் பாக்கள் எண்ணற்றவை. அவற்றைப் போல் இம்மன்னர்கள் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவர்கள் அங்கங்கே இருந்த மாளிகைகள், சத்திரங்கள், மன்றங்கள் எல்லாம் நிறைத்துவிட்டனர். மேலும் தங்குவதற்கு இடமில்லாமல் பறவைகள் தங்கும் சோலைகளிலும், தாமரைத் தடாகக் கரைகளிலும், உள்ளும் புறமும் இனிது தங்கினர். அவரவர் தம் மனத்தில் தமயந்தியை வைத்துப் பூசித்தவர்கள் போல் அவள் நினைவில் கிடந்தனர்; அவள் நினைவாக வாழ்ந்தனர்; கனவுக் கன்னியாக அவள் அவர்கள் நெஞ்சில் இடம் பெற்றாள்.

நீண்ட ஆகாயத்தில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு அன்னம் வர நளன் அதனைக் கண்டான். அவன் அது வரும் வழியில் விழி வைத்தான். அதன் சொற்கேட்கக் காதுகளைக் கூர்மைப் படுத்திக் கொண்டான்; அவள் காதல் மயக்கத்தில் நெஞ்சினை ஒடவிட்டான்; வழிமேல் விழி வைத்து அவள் காதல் மொழிமேல் செவி வைத்து மோகச் சுழிமேல் நெஞ்சு ஒட வைத்தான்.

அன்னத்தின் சொற்களைக் கேட்க ஆவல் மிக்கவன் ஆயினான். செல்வரை அணுகும் வறியவர் மனநிலையை அவன் பெற்றான். அன்னத்தின் முகம் பார்த்து அதன் அருள்நோக்கி, உள்ளம் அறிய ஆவலாய் நின்றான். காதல் உரைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். தான் பெருமன்னன் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்க வில்லை. இந்த வகையில் எளியனாய் நடந்து கொண்டான். செல்வரை அணுகும் வறிஞரைப் போல் அதன் முன் நடந்து கொண்டான்.

பகைவரைக் கண்டு அஞ்சாது வேல் எடுக்கும் வீரன் அவன். மிகவும் தாழ்ந்து விட்டான்; அடக்கமாகப் பேசினான். “அன்னக் குலத்தின் அரசே!” என்று அதனை விளித்துப் பேசினான். “அழிகின்ற என் உயிரை நீ தந்து அளித்தாய்; நீ கண்ட அவளுக்கு எந்தவித இடையூறும் இல்லையே! அவள் நலம்தானா?” என்று கேட்டான்.

பேரரசன் இவன் தன்பால் சொல்லிய செய்திகள் அனைத்தையும் அவன்பால் செம்மையாக உரைத்தது. அவளும் அவனுக்குத் தெரிவிக்கச் சொன்ன செய்திகளையும் கூறியது. இருவர் தம்மிடம் உள்ள காதல் பற்றிய உரைகளையும் மாறி மாறிச் செப்பியது. அவள் தன்பால் நேசம் கொண்டு இருக்கிறாள் என்ற பாசம் மிக்க சொற்களைக் கேட்டான். அவ்வளவுதான்; பித்துப் பிடித்தவன் போல் ஆயினான். அறிவு அழிந்தான். உள்ள அறிவும் கொள்ளை போய்விட்டது என்ற நிலைமை ஏற்பட்டது.

கேட்ட செவி வழியே அவன் உணர்வும் நீங்கியது. அவன் மனம் ஒட்டை மனம் ஆகியது; உளைச்சல் மிக்க மனம் ஆகிவிட்டது. உயிர் தள்ளாடியது. உணர்வும் உயிரும் அவனைவிட்டு நீங்கிய நிலையில் வெறும் சடமாகக் காணப்பட்டான். அவன் ஆழ் துயரினின்று அவனை மீட்க முடியாது என்றுபட்டது. குழியில் விழுந்து விட்ட யானை போல அவன் சாய்ந்தான். நெருப்புத் தழலில் பட்ட தளிர்போல் அவன் வேதனை அடைந்தான். அவன் துடிதுடித்து வேதனையுள் ஆழ்ந்தான். துன்பத்துள் முழுகினான்.

அந்நிலையில் அவன் வாயிலைத் தூதுவர் வந்து அடைந்தனர். ‘கோதை சுயம்வரம்’ அது குறித்து கொற்றவனுக்கு வந்து கூற அவர்கள் காத்திருந்தனர்.

அச்செய்தியைக் காவல் காப்போர் சென்று உரைத்தனர். அவ்வளவுதான் செய்தி கேட்டு அறியவும் முயலவில்லை. அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே “தேரில் குதிரை பூட்டுக” என்று ஆணை இட்டான். “விதர்ப்பன் நகருக்குச் செலுத்துக” என்று செய்தி கூறினான்.

வீமன் திருமகளை அவன் தன் உயிராக மதித்தான். அந்நகரை அடைந்து அதனைக் கண்டு அதன் அழகில் ஆழ்ந்தான்.

யாழிசை பாடிச் சிவனின் சீற்றத்தைத் தவிர்த்தவன் என்ற பெரும் புகழுக்கு உரியவன்; நன்மை செய்வதில் நாட்டம் உடையவன் நாரதன்; அவன் இந்திர உலகம் சென்று இந்திரனைச் சந்தித்தான். அன்று இந்திர அவை கூடியிருந்தது.

அன்று அந்த அவையில் கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக மண்ணுலகில் இருந்து வீரமும், ஆண்மையும் மிக்க அரசர்கள் வருவது உண்டு. அன்று அரசர்கள் என்பவர்கள் யாரும் வந்திலர்.

கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட இந்திரன், “இவர்கள் நாட்டம் எங்குச் சென்று உள்ளது? ஏன் இவர்களில் யாரும் இங்கு வந்திலர்” என்று நாலும் தெரிந்த அறிஞன் ஆகிய நாரதனைக் கேட்டான்.

தவத்திற் சிறந்த முனிவனாகிய நாரதன் “வீமன் மகள் அவள் மலர்த் தாமம் பெற வேண்டிச் சென்று உள்ளனர் அரசர்கள்; அவளுக்குச் சுயம்வரம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அச்செய்தி கேட்டு அரசர்கள் அங்குச் சென்று விட்டனர்” என்று கூறினான்.

“அரச மகள் திருமணம் என்றால் அனைத்து அரசர்கள் செல்வது ஏன்? அவ்வாறு செல்லக் காரணம் என்ன? அவள் என்ன பேரழகியா? எழில் நலத்தால் சிறந்தவளா?” என்று கேட்டான்.

நாரதன் நயம்படக் கூறுவதில் வல்லவன் என்பதைக் காட்டிக் கொண்டான். “அவள் பேரழகி” என்றான். “அழகு சுமந்து இளைத்த மேனியாள்” என்று கூறினான். “வண்டு பழகு கருங்கூந்தல் பாவை” என்றும் கூறினான்.

இந்திரனுக்கு வியப்பு உண்டாயிற்று. “அவள் அழகி என்பதால் இவர்கள் அங்குச் சென்றுமொய்த்துள்ளனர். அவளைத் தானும் காண வேண்டும்” என்று விரும்பினான்.

“அவள் வீமனின் ஒரே மகள். அந்த அரச குலத்துக்கு அவள் ஓர் ஒளித் தீபம்” என்று கூறினான்.

“கவர்ச்சி மிக்கவள்: இளைஞர்கள் கருத்தைக் கவர்ந்தவள்; மன்மதன் அவளை நம்பித்தான் வாழ்கிறான்; அவன் படைக்கு அவள் ஒரு சேமநிதி; அவனுக்கு அவள் ஒரு காப்பு” என்றும் கூறினான்.

அவள் மேனி அழகும் வடிவும் பெரிதும் பேசப்பட்டன. அவள் வீமன் மகள் எனவும், மன்மதன் படைக்கு அவள் ஒரு காப்பு எனவும் எடுத்து உரைத்தான்.

பழகு தமிழ் அவனுக்கு இந் நா நயத்தைத் தந்தது. “அழகு சுமந்தாள். அதனால் இளைத்துவிட்டாள்” என்று கூறியது இந்திரனைச் சிந்திக்க வைத்தது. அவள் பேரழகி; மெல்லியள் என்பது அவனைத் தூண்டியது.

தேவர்கள். கருத்து மண்மகள்மீது சென்றது. வச்சிரப் படை தாங்கியவன் இந்திரன்; ஆட்சி பீடம் ஏறிய அவனுக்குப் புதிய விருப்புத் தோன்றியது; உடன் இருந்த தேவர்களுக்கும் இந்தப் புதிய விருப்பு எழுந்தது.

“ஏன் நாமும் செல்லக் கூடாது” என்று இந்திரன் கேட்டான்.

அருகிருந்த அக்கினி, வருணன், இயமன் அவர்களும் தாமும் உடன் வருவதாக உரைத்தனர்.

அவள் மாலையிடுகிறாள் என்றால் அது தமக்கு ஏன் வாய்க்கக் கூடாது என்று நினைத்தனர். உடனே அவர்கள் விண்ணாடு விட்டு மண் உலகை நாடிச் சென்றனர்.

நளன் மிகவிரைவாகத் தேரில் வருவதைக் கண்டனர். இழந்துவிட்ட பொருளைத் தேடுபவன்போல் பறிகொடுத்த மனத்தை நாடுவது போல் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தான். தமயந்தியின் நினைவு தவிர வேறு எதுவும் அவன் உள்ளத்தில் இடம் பெறவில்லை.

அவன் எதிரே இந்தத் தேவர்கள் தலைவன் சென்றான்; தடுத்து நிறுத்தினான்.

எதிரே இருப்பவன். இந்திரன் என்பதை அறிந்தான். அவனைக் கண்டு வியப்பு அடைந்தான். தன்னை இவன் ஏன் சந்திக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தான்.

“இட்ட வேலையை இட்டமுடன் செய்வாயோ?” என்று கேட்டான்.

திட்டமிட்டு அவனை அணுகினார்கள் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

வாய்மை வீரன்; கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லிப் பழக்கம் இல்லை.

“ஏவல் இட்டால் செய்வேன்” என்று அந்தக் காவலன் உரைத்தான்.

நா காக்க வேண்டியவன் அதை மறந்து விட்டான். அவசரப்பட்டு வாக்களித்து விட்டான்.

அவர்கள் இன்னது கேட்கப் போகிறார்கள் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அதனால் இந்தத் தவறு செய்ய நேர்ந்தது.

“பணி இட்டால் செய்வேன்” என்றான்.

“சிறிதுதான்; செய்தி சொல்ல வேண்டும். நீ சொன்னால் அவள் கேட்பாள். எங்கள் நால்வருள் ஒருவர்க்கு அவள் ஏந்தி வரும் மாலையைச் சூட்டச் சொல்லுக; இதுபோதும்” என்று கூறினான்.

இடி விழுந்தது போல் இருந்தது. கட்டிய கனவுகள் சிதைந்தன. அவன் எழுப்பிய மனக் கோயில் அதில் வைத்திருந்த தெய்வத்தை அகற்றச் சொல்லினர். என் செய்வது?

வார்த்தை தந்து ஆகிவிட்டது. அதைக் காப்பது தன் கடமை என்று முடிவு செய்தான். காதலை அவன் உள்ளத்தில் இருந்து கிள்ளி எறிந்தான்; கடமை அதனை ஏற்றுக் கொண்டான்.

அவன் நெஞ்சு படாத பாடுபட்டது; தேவர்கள் இட்ட பணி ஒருபுறம்; கன்னி அவள்பால் கொண்ட காதல் மற்றொரு புறம். இரண்டு பக்கமும் அவன் நெஞ்சு தடுமாறியது. முன்னுக்குப் பின் சென்றது. பஞ்சுபடாதபாடு அவன் நெஞ்சு பட்டது. மாறி மாறிச் சென்றது. ‘பாவு’ நெய்பவர் அவர்கள் கைத்தறி அதில் உழலும் குழல் அதனைப் போல் நெஞ்சு மாறி மாறிச் சென்றது. வேதனை மிக்கவன் ஆயினான்.

கடமையை ஏற்றுக் கொண்டான்; இனி மடமையாக நடந்து கொள்ளக் கூடாது. அவளிடம் செல்வது என்று முடிவு செய்து கொண்டான்.

அவளை எப்படிக் காண்பது; அரசு அரண்மனை: கன்னிகள் உறையும் தனி மாடம் அது; அங்கே எப்படி உள்ளே நுழைய இயலும்? காவலர் கடுமை அவனைத் தடுத்து நிறுத்தியது; மற்றும் கள்வர் போல் பிறர்மனையுள் புகுதல் கீழ்மையாகும். கண்ணியம் குறையும்; அவளை நண்ணுவது எப்படி?

ஏன் தேவர்களையே கேட்டு விடுவது என்று முடிவு செய்தான்.

“ஏவலை ஏற்கிறேன்; காவலைக் கடப்பது எவ்வாறு? அது தெரியாமல் திகைக்கின்றேன்” என்று தெரிவித்தான்.

நளனை ஏற இறங்கப் பார்த்தான். அவன் நேர்மை கண்டு மதித்தான்.

“நீ அவளைக் காணச் செல்க, யாரும் உன்னைக் காண மாட்டார்கள்” என்றான் இந்திரன்.

இந்திரன் தேவன்; அவன் உதவியால் மறைந்து செல்ல இயன்றது; அடுத்து நகரின் உள் வாயில் நுழைந்தான்.

திசை முகந்த தெருக்களைக் கண்டு வியந்தான். இசை முகந்த வாயினைக் கண்டான். பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தனர். தமிழ் ஆராய்ந்த புலவர்களையும் கண்டான். கலைச் சிறப்பு மிக்க நகர் என்பதைக் கண்டு மகிழ்ந்தான்.

இந்த நாடு உண்மையில் தேவர் வாழும் பொன்னாடு என்று தனக்குள் கூறிக் கொண்டான். அதை மிகவும் பாராட்டினான். இந்த விதர்ப்பன் நாடு இந்திரன் பொன்னாடு போன்றது என்று மதிப்பிட்டான்.

கன்னியர்கள் மட்டும் தங்கியிருந்த அழகிய மாடத்தை அடைந்தான். அன்னம் உரைத்த அரண்மனை அது என்பதை அறிந்தான். அருகே அழகிய சோலை; பொய்கைகள் இருந்தன.

மன்மதன் படை கற்பதற்கு அங்கு வருவான் என்று கூறியது நினைவுக்கு வந்தது. அன்னங்கள் மயிற்கூட்டம் எனச் சென்று அங்கு நடை பயின்றன என்று கூறியிருந்தது. அவள் தங்கி இருந்த மாடத்தை அணுகினான்.

தங்கு தடையின்றி தமயந்தியை அவன் காண முடிந்தது. அவன் விழிகள் அவளை நோக்கின. அவளும் நோக்கினாள். அவளை அவன் பார்த்தது தாமரை மலர் குவளையில் சென்று பூத்தது போல் இருந்தது. அவள் அவனை நோக்கியது கருங்குவளை தாமரையில் பதிந்து பூத்ததைப் போல் இருந்தது. காதலர்க்கே உரிய பொது நோக்கு அவர்கள்பால் அமைந்திருந்தது.

அவள் தன் நெஞ்சைப் பறி கொடுத்தாள். அவன் அழகு அவளைக் கவர்ந்தது. அவனைத் தழுவிக் கொள்ள விழைந்தாள். கச்சணிந்த கன்னி அவள் அவன்பால் இச்சை மிக்கவள் ஆயினாள். அவன் தோளைத் தழுவி அணைக்க ஆவல் கொண்டாள். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் தவித்தாள்; என்றாலும் நாணம் அவளைத் தடுத்து நிறுத்தியது. யானையைக் கட்டுக்குள் அடக்கும் கட்டுத்தறிபோல் அவன்பால் வேட்கையைத் தடுத்து நிறுத்தியது.

உள்ளங் கலந்து பின் உரையாடினர். அவன் காவல் கடந்து வந்தது அவளுக்கு வியப்புத் தந்தது. “காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய்; அது உன்னால் எவ்வாறு இயன்றது? விஞ்சையனும் அல்ல நீ; விண்ணில் வாழும் தேவனும் அல்ல. உன்னால் அது எவ்வாறு இயன்றது? உள்ள நிலை எனக்கு உரைப்பாய்” என்று வினவினாள்.

“தான் மானுடன்தான்” என்று நகைத்துக் கொண்டே பேசினான்.

“இங்கே வந்தது காதல் சந்திப்பு அன்று; கடமை ஒன்று ஏற்று வந்திருக்கிறேன்” என்றான்.

காதலனை அவள் கண் குளிரக் கண்டாள். பேதமுறப் பேசுவது அவளுக்கு வியப்புத் தந்தது.

“தேவர் கோமான் ஏவல் ஒன்று இட்டான். அவன் உதவியால் காவலைக் கடக்க இயன்றது” என்று விளக்கினான்.

“இந்திரன் ஏவலால் வந்தேன்” என்று கூறியது அவளுக்குப் புதுமையாக இருந்தது.

“நான் கூறுவதை இகழாமல் ஏற்றுக் கொள்க; உள்ளம் வேறுபாடு இல்லாமல்தான் உரைக்கின்றேன். என் காதல் அதனைப் புதைத்து வைத்து விட்டேன். நீ ஏந்தும் பொன்மாலை அதனைப் பொன்னுலகம் காக்கும் புரவலனுக்குச் சூட்டுக; இதுதான் என் வேண்டுகோள்; இந்திரன் இட்ட ஏவல்; அதுதான் என் ஆவலும் ஆகும்” என்று உரைத்தான்.

அவள் சிந்தித்துப் பார்த்தாள். அவன் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவிக்கிறான் என்பதை அறிந்து கொண்டாள். அதனால் அவள் அதிர்ச்சி அடையவில்லை.

அவன் தன் கடமையைச் செய்கிறான் என்பதை அறிந்தாள்; அவள் நேர்மையை மதித்தாள்.

“உண்டு இல்லை” என்று கற்கண்டு போன்ற சொல்லாள் ஏதும் கூறவில்லை.

தேவர்கள் விருப்புக் கொள்வது அவர்கள் உரிமை; இருந்தாலும் அவர்கள் அவனை அனுப்பி நேர்மை தவறி விட்டார்கள் என்பதை அறிந்தாள்.

அவள் என்ன விடை தரப்போகின்றாள் என்பதைக் கேட்க ஆவலுடையவனாக விளங்கினான்.

சுருக்கமாகத் தன் கருத்தைத் தெளிவாக உரைத்தாள். “மன்னா! இந்தச் சுயம் வரமே உனக்காகத்தான் வகுக்கப் பட்டது. மற்றவர்களுக்காக அன்று; உன்னை வர வழைக்கவே இந்த ஏற்பாடுகள்” என்றாள்.

அவனுக்கு அது வியப்பு அளித்தது. அவள் அறிவினைக் கண்டு வியந்தான்.

தன்னை வரவழைப்பதற்காக ஒரு மாபெரும் கூட் டத்தையே வரவழைத்து விட்டாள். முறைப்படி தேர்ந்து எடுத்து மாலை சூட்ட அவள் திட்டமிட்டிருக்கிறாள் என்பதை அறிந்தாள்.

அன்னம் முன்னர் உரைத்த சொற்கள் நினைவுக்கு வந்தன. “ஐம்புலனும் நல்லறிவாகும்; அவையே அவளுக்கு நல்லமைச்சு” என்று கூறியது நினைவுக்கு வந்தது.

அரசிக்கு ஏற்ற அறிவு அவள்பால் இருப்பதை அறிந்தான்.

அவள் கூறியது புதுமையாக இருந்தது. தனக்குத்தான் அவள் மாலையிடுவாள் என்பதை அறிந்து கொண்டான். மேலும் விளக்கம் கேட்க விரும்பவில்லை. வற்புறுத்தி அவள் மனத்தை மாற்றிக் கொள்ளவும் அவன் வேண்ட வில்லை.

அவர்களுக்கு என்ன விடை கூறுவது? அவள் மாற்றம் யாது? என்று நிதானித்தான்.

அடுத்து வரும் சொற்களை ஆவலுடன் எதிர் பார்த்தான்.

“தேவர்கள் வரட்டும்; தடுக்க வேண்டாம்; அது அவர்கள் விருப்பம்” என்றாள்.

புறப்படக் கால் அடி எடுத்து வைத்தான். ‘ஆனால் ஒன்று; நீ மட்டும் வராமல் நின்று விடாதே’ என்று கூறி அனுப்பினாள்.

அவள் மனக் கருத்தை அவன் அறிந்து கொண்டான். தேவர்களைப் பொறுத்தவரை அவள் பேசியது வன் மொழியாக இருந்தது. தன்னைப் பற்றி அவள் பேசியது மென் மொழியாக இருந்தது. கடமையை முடித்து விட்டோம் என்பதில் மனநிறைவு கொண்டான். காதலி யுடன் பேசினோம் என்பதில் களி மகிழ்வு கொண்டான்.

தம்முடைய காதலை இனி யாரும் தடுக்க முடியாது. தேவர்களாலும் அசைக்க இயலாது; மூவர் வந்து முயற்சித் தாலும் முறியாது என்று அறிந்தான். மனத் திண்மையோடு திரும்பினான்.

நெஞ்சில் நேர்மைத் திறம் இன்றி வஞ்சனை செய்தார்கள் தேவர்கள்; அவர்களைக் கண்டு இனி அஞ்சத் தேவையில்லை என்று தெளிவு பெற்றான். தேர்வில் தனக்குத்தான் வெற்றி என்பது அறிந்தான்.

தேவர் தலைவர்கள் நால்வரும் இவன் கொண்டு வரும் செய்திக்காகக் காத்து இருந்தனர்.

தான் அவளிடம் பேசிய பேச்சுரையையும், மெலிதாக எடுத்துச் சொல்லி ஏற்குமாறு தான் கூறியதையும் அகரம் முதல் னகர இறுவாய் ஒன்றுவிடாமல் கூறினான்.

அவள் ஒளிவு மறைவு இன்றி மறுத்துவிட்ட செய்தியை எடுத்துக் கூறினான். தன்னையும் சுயம்வர மண்டபத்துக்கு வருமாறு அவள் கூறிய செய்தியையும் ஒளிவு மறைவு இன்றி எடுத்துக் கூறினான்.

வாய்மை தவறாத வேந்தன் அவன் என்பதைக் கண்டு அறிந்தனர். அவனை மதித்தனர்; பாராட்டினர்; நன்றி தெரிவித்தனர். கடமையை ஆற்றிய கண்ணியத்தையும் பாராட்டி அவனுக்கு உதவக் கூடிய வரங்களைத் தந்தனர். “வேண்டும்போது உனக்கு உணவு, நீர், நெருப்பு, அணிகள், மலர்கள் எவை வேண்டுமானாலும் வந்து சேரும்” என்று நால்வரும் சேர்ந்து நல்வரம் தந்தனர்.

வரம் பெற்றவனாக உரம் கொண்ட நெஞ்சோடு தான் தங்கியிருந்த மாளிகையைச் சேர்ந்தான். மற்றைய மன்னர்களுள் ஒருவனாக அவன் தங்கினான். மறுநாள் எப்போது விடியும் என்று காத்திருந்தான்.

காதலர் இருவரும் கண்ணிணை கொண்டு உணர்வு ஒன்றினர். அதனால் அவர்கள் இதயம் மாறினர். அவன் நெஞ்சில் அவள் இடம் பெற்றாள். அவள் இதயத்தை அவனிடம் தந்து விட்டாள்.

தூது வந்த காதலனிடம் செய்திகள் சொல்லி அனுப்பி விட்டாள். அவன் பின் அவள் நெஞ்சு சென்று விட்டது. அவள் தன் வயம் இழந்தாள். என்ன ஆகுமோ என்று அயிர்த்தாள்; உயிர்த்தாள்; அழகிய முகம் வியர்த்தாள்; உரை மறுத்தாள்; காதலில் வீழ்ந்து துயர் உழந்தாள்.

உள்ளம் போய், நாண்போய், உரைபோய், கண் களில் நீர் வெள்ளம் பெருகி, வேகின்ற மென் தளிர்போல் அவள் உயிர் சோர்ந்தாள். மன்மதன் அம்புகள் அவளைத் துளைத்தன.

மன்மதன் அம்புகள் துளைக்கப்பட்டு அதன் காரணமாகவே உயிர் நீங்கிவிடும் என்று அஞ்சினாள். “என் உயிர் என்னை விட்டு நீங்கினாலும் என் ஆசை ஒழியாது; நீங்காது” என்று கூறி மனம் அழிந்தாள். யாழ் போன்ற சொல்லினாள்; அவள் இனைந்து வருந்தினாள்.

மாலைக் கதிரவன் மேற்கு எல்லையில் சாய்ந்தான். வையகம் பகல் இழந்தது; வானம் ஒளி இழந்தது; பறவைகள் சோலைகளிலும் பொய்கைகளிலும் பேச்சு அடங்கின. செவ்வாய் அன்றில் தன் துணை இழந்து வருந்தியது. கூவி அழைத்தது.

அந்திப் பொழுது வந்து சேர்ந்தது. அது அழகிய நங்கை ஒருத்தி அசைந்து நடந்து வருவது போல இருந்தது. மல்லிகை மலர்ந்து கிடந்தது. வண்டுகள் அவற்றை மொய்த்தன. மன்மதன் மலர்க் கணைகளைக் கொண்டு தன் ஆட்சியை நடத்தினான். அந்த மாலையாகிய நங்கையின் மெய்க் காவலாளாகச் செயல்பட்டான். முல்லைப் பூமாலை தோளில் அசைய நடந்து வரும் நங்கையென அம் மாலைப்பொழுது மெல்ல வந்து சேர்ந்தது. எங்கும் மல்லிகையும் முல்லையும் பூத்து அழகு செய்தன.

அந்திப் பொழுது முறுவல் காட்டி முகிழ் நகை தோற்றுவிப்பதைப் போல் பிறைமதி வானில் தோன்றியது. அதனால் தமயந்திக்கு வேதனை மிகுந்தது. நெருப்பை அள்ளிச் சொரிவது போல அதன் கதிர்கள் விளங்கின. கூட்டு மை போல் இருள் மிக்கு இருந்தது. அந்த இருளில் நிலவு வீசி அவளைச் சுட்டு எரித்தது.

தனக்குத் துணையாக இருந்த அன்னங்கள் அவற்றை அவள் காணவில்லை. ஒளிக்கதிர்கள் தந்த கதிரவனும் மறைந்து விட்டான். அந்த மிக்க இருளில் வாடைக் காற்று வீசி அவளை வருத்தியது. வாடைக்கும் கொடிய இருளுக்கும் பிழைப்பது அரிது என்று கூறினாள்.

அவள் தோழிகளை விளித்து உரையாடினாள். வான் மதியத்தைக் காட்டினாள்; நட்சத்திரக் கூட்டத்தையும் காட்டினாள்.

அவர்கள் அது திங்கள் என்றனர். மற்றவற்றை வானத்து மீன் என்று உரைத்தனர். அதை மறுத்து அவள் கூறினாள். ‘இவை திங்களின் சூடு தாங்காது வானத்தில் தோன்றிய கொப்புளங்கள்; இவற்றை நீங்கள் நட்சத்திரங்கள் என்று தவறாகக் கூறுகின்றீர்கள்’ என்று உள்ளம் வெந்து உரையாடினாள்.

“என் உயிர் கொள்ளை போகின்றது” என்று கூறினாள். “இந்த முற்றிய நிலா பாம்பின் கூரிய பல்போல் வாட்டுகிறது; நஞ்சு கக்குகிறது; என்னை வருத்துகிறது” என்று பேசினாள். “இந்த இரவுப் பொழுதுக்கு உள்ளம் மிகவும் கொடிது” என்று கூறினாள்.

“ஏன் இந்த இரவுப் பொழுது எரியாக எரிகிறது” என்று கேட்டாள். ‘வெங்கதிரோனை விழுங்கி விட்டதாலா தன் கொங்கைகளில் எழுந்த நெருப்பின் வெப்பத்தாலா திங்கள் வெளிப்படுத்தும் வெம்மைமிக்க கதிர்களாலா” என்று கேட்டாள்.

யுகங்கள் பல சேர்ந்து தொகைப்பட்டு ஒர் இரவு என்னும் உரு எடுத்துக் கொண்டதோ?” என்று வருந்தினாள். ஒர் இரவு அவளுக்குப் பல யுகங்களாகத் தோற்றம் அளித்தது.

“ஏன் கோழி இன்னும் கூவவில்லை? அதன் குரல் அடைத்துக் கொண்டதோ?” என்று கேட்கத் தொடங்கினாள்.

“இந்தக் கடலுக்கு ஒய்வு ஒழிச்சல் என்பதே கிடையாதோ?” எப்பொழுதும் இரைச்சல் இட்டுக் கொண்டு இருக்கிறதே! இது தூங்கவே தூங்காதா” என்று கூறினாள்.

சுடர் மதியம் வெளிப்படுத்திய வெயில் அவளைச் சுட்டு எரித்தது.

மோகம் என்ற சுழியில் அகப்பட்டுச் சுழன்றாள். அவள் மெல்லியலாள் இந்த வல்லியலை அவளால் தாங்க முடியாமல் போயிற்று. ஆடி வரி வண்டு அருகில் பறந்து வந்தால் அதற்காக வாடி வருந்துபவள் அவள். அதன் மென் காற்று அசைவுக்கும் அவள் தாங்காதவள். வனமுலை அவளுக்குச் சுமை என்று கருதிச் சுமப்பவள்; அவள் இப்பொழுது இந்தக் கடுமையான காதல் வெள்ளத்தில் அவளால் எப்படி நீந்த முடியும்?

மோகச் சுழியில் முழுகி அவள் வெளிவர முடியாமல் மனம் சுழன்றாள். அவளால் துயர் தாங்க முடியவில்லை.

“குளிர்ச்சி மிக்க இள நிலாவே! இவ்வாறு உன் ஒளிக்கதிர்களை என் சோர்ந்த கூந்தலில் சொரிவது ஏன்?” என்று கேட்டாள். மன்மதன் உன்னை ஏவி விட்டு என்னை வருத்துகிறானோ! அவன் உனக்கு மாலை சூட்டிப் பாராட்டுகிறான். எதற்காக என்னை வாட்டுகிறாய்” என்று நிலவினை நோக்கித் தன் நிலைமையினை எடுத்து உரைத்தாள். “மதியே! உன்னைத் தூண்டி விட்டான் மன்மதன். இந்த விடியாத இரவையும் அவன் உனக்குத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறான்” என்று கடிந்து கூறினாள்.

நிலவின் ஒளி அழல்போல் அவளை எரித்தது. சூடி இருந்த பூவும் வெப்பம் பெற்றது. நாடி வந்த வண்டுகளும் வெப்பத்தால் சுருண்டு போயின.

அவள் கண்களில் நீர் அருவிபோல் கொட்டியது. வளையல்கள் நெகிழ்ந்தன. கையில் தலை வைத்து உறக்கமின்றி அந்த இரவினைக் கழித்தாள். இரவு எல்லாம் தனிமையில் தவித்தாள். கடுந்தவம் இயற்றுபவள் போல் நின்றாள். அவனை அடைவது குறித்து நினைத்து வேதனை உற்றாள்.

இரவுப் பொழுது அவளை மிகவும் வாட்டியது. “பொது மகளிர் தம் இதயம் போல் அந்த இரவு இருளைப் பெற்றுக் கிடக்கிறது” என்று கூறினாள். தீ கொண்டும் மாய்க்க முடியாத இருளாக அது அவளுக்கு விளங்கியது.

அந்த இரவில் ஊர் மக்கள் துயின்றனர். நகரமே உறக்கத்தில் ஆழ்ந்தது. விழித்து ஒலி எழுப்பியவர் யாருமே இல்லை; ஊர்க்காவலர் மட்டும் அவ்வப்போது கைகளில் வேல் தாங்கி வீதிகளில் நடந்தனர். அவ்வப்பொழுது அவர்கள் துடி ஒலித்து எழுப்பியது; அது மட்டும் அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். எப்பொழுது யாமங்கள் கழியும் என்று காத்துக் கிடந்தாள்.காவலர் வருகை கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கொண்டாள்.

அந்த நகர் ஆழ்ந்த துயிலில் கிடந்தது. களிறுகளும் ஒலியடங்கிக் கட்டுத் தறியில் புகுந்து அடங்கின. இரவு நேரத்தில் யாழிசைப்போரும் இசை எழுப்பி அவர்களும் அடங்கினர். மன்மதனும் அடங்கி விட்டான். அவனும் ஒய்ந்து அடங்கினான். இந்த உலகமே துயிலில் புகுந்து அடங்கியது.

பேய் இரவில் தூங்காது என்று கூறுவர். பிணம் தின்று வயிறு வளர்க்கும் பேயும் உறங்கியது. அதன் நட மாட்டமும் அடங்கியது. அன்றில் பறவை தன் துணையை விளித்து உறங்காமல் கிடந்தது; அந்தக் குரல் அவளுக்குக் காதலைத் துண்டியது.

அமைதி என்பது அவளை விட்டு நீங்கியது. அவனைக் கட்டித் தழுவ விழைந்தாள். துயிலின்றி எழுந்தாள். அருகிருந்த தூண் ஒன்றினை அணைத்துத் தழுவினாள். அது அவள் காதலன் என்ற நினைப்பில் இறுகத் தழுவினாள். அது கல்; வெறும் கல்; ஒரு சிலர் மனம் போன்று விளங்கியது.

கனவு கலைகிறது; நனவு அவளை அழைக்கிறது. கட்டிக் கொண்டது வெறும் தூண். அவன் அல்ல; அதற்காக நாணினாள்; இதை யாரிடம் எடுத்துக் கூறுவது? வெளியில் சொன்னால் எள்ளி நகையாடுவர். அந்த அனுபவம் அவளுக்கே உரிமையாகியது; பகிர்ந்து கொள்ளவில்லை; யாருடனும் பகரவும் இல்லை.

அவள் மன மயக்கம்; அதன் விளக்கம் அதை எப்படிக் கூறுவது? மயங்கினாள்; நெளிந்தாள்; மனம் நடுங்கினாள்; வெம்மையுற்று வருந்தினாள். அங்கும் இங்கும் வறிதே உலாவினாள். பின் செய்வது அறியாது சோர்வு கொண்டாள். துயில முயன்றாள். துயில் பெறாது கண்கள் நீர் கடை சோர நின்றது.

அந்த இரவு அவளுக்குக் கடுமையாக இருந்தது. பொழுது விடிந்தால் அவள் அழுது விடிவது நிற்கும் என்ற நிலை ஏற்பட்டது.

யார் தடுத்தாலும் பொழுது தோன்றுவதை நிறுத்த முடியாது. அது வரத்தான் செய்யும். மேற்கே சாய்ந்தவன் கிழக்கே தலை காட்டினான். இது ஒரு அற்புதக் காட்சிதான். மறைவது ஒர்இடம்; தோன்றுவது மற்றும் ஒர் இடம்.

கதிரவன் ஒளி அது காலைப் பொழுது என்பதை அறிவித்தது. அந்தணர்கள் விழித்து எழுந்தனர். அவர்கள் காலை வணக்கம் கதிரவனில் தொடங்கியது. அது அவர்கள் தேசிய வழிபாடு. அவர்கள் காலை வழிபாடு. அவர்கள் கரம் குவிந்தன. குமுத மலர்கள் வாய் திறந்து கிடந்தவை. இப்பொழுது வாயடங்கின. பேச முடியாமல் சிலர் வாய் மூடிக் கொள்வது போல் அவையும் மவுனம் சாதித்தன. கதிரவன் ஒளி அதற்குக் குவிவு உண்டு பண்ணியது. அதனை அடக்கி வைத்தது; கரங்குவித்தவர் அவர்கள் மறையவர் எனப் பேசப் பட்டனர். குமுதங்கள் குவிவு பெற்றன.

மலர்ச்சி பெற்றன என்று கூறக் கூடியவை தாமரை, மற்றும் இந்த உலக மாந்தர் கண் விழித்தனர்; உலகம் அவர்களுக்காகக் காத்துக் கிடந்தது. இரவு எல்லாம் அரவு வாய்ப்பட்டது போல் துயிலின்றிக் கழித்தவள் முன் பொழுது புலர்ந்தது; அவள் துயரும் புலர்ந்தது. சுறுசுறுப்பு அவளை இசைக்க வைத்தது. உயிரோட்டம் அவள் செயலோட்டத்தில் காணப்பட்டது.

கிழக்கு மலையில் கதிரவன் தோன்றினான். அங்கேயும் மலைதான் இருந்தது. மேற்கு மலையில் படிந்தான்; கிழக்கு மலையில் எழுந்தான். இரவு எல்லாம் ஆட்டம் போட்ட மன்மதன் தன் வில்லினை முடக்கி வைத்தான். காய்ந்த நிலா ஒய்ந்து அடங்கியது. நிலவைக் கண்டு இனி அவள் அஞ்சத் தேவையில்லாமல் போயிற்று. மூடிய இருள் ஒடிய இடம் தெரியாமல் மறைந்து விட்டது. அரசர்கள் பொழுது வரும்; விடியும் என்று காத்திருந்தனர். அவர்கள் உள்ளம் எழுச்சி பெற்றது. எண்ணங்களில் மலர்ச்சி அரும்பியது. தமயந்தி பெயரை அவர்கள் நா உச்சரித்தது.

காலை முரசும் கனை துயில் எழுப்பியது. மண்ணரசர்கள் எல்லாரும் மணி மண்டபம் நோக்கிச் சென்றனர். அவரவர்க்கு வகுத்த ஆதனங்களைத் தேடி அழகுடன் அமர்ந்தனர். இன்னாருக்கு இன்ன இடம் என வகுத்து அளிக்கப்பட்டிருந்தது. எழுதி வைத்தபடி எல்லாம் நடை பெற்றது.

நளன் இரவு எல்லாம் தமயந்தியைப் போலவே காத்திருந்தான். நம்பிக்கை அவன் மனத்தை தளரவிடாமல் தடுத்தது. மறுபடியும் தான் கண்ட அந்தப் பாவையைக் காணத் தவம் செய்தவனாய் இருந்தான். அவள் கடைக் கண் பார்வைக்காக அவன் காத்திருந்தான். அவனுக்காகவே பொழுது விரைவில் விடிந்தது என்பது போல இருந்தது. அவனுக்கு அகமகிழ்வு அளித்தது.

தமயந்தியின் வருகைக்காக இந்த மன்னர்கள் காத்திருந்தனர். அவர்கள் அவள் அணிந்திருந்த நித்திலத் தோடு கண்டனர். அவள் விழிகள் செவி மருங்கு ஓடின. காதில் அணிந்திருந்த நித்திலப் பொன் தோட்டினை அவை நீல நிறமாக மாற்றிவிட்டன. அவள் விழிகள் அவர்களை மயக்கின. அவர்களை நாடி அவள் வந்தாள் என்று கூற முடியாது; அவர்கள் சித்தம் இழந்தவராய் அவளை நோக்கினர். அவர்கள் மனம் அவர்களிடம் நில்லாமல் அவளிடம் ஒடிச் சென்றது. பந்தற்கீழ் வந்து அவள் நின்றாள். அவளை அவர்கள் முழு வடிவில் காண முடிந்தது.

அவர்களைப் பார்க்க அவாவினர்; இந்தத் தோழிகள் அவளைச் சூழ்ந்து நின்றனர்; இவர்கள் வேலிபோல் அவளை வளைத்துக் கொண்டிருந்தனர். எங்கும் சேலை; இடைவெளி இன்றி அவர்களே அவளை நெருங்கிச் சூழ்ந்தனர். இடுக்கில் அவர்கள் பார்வை சென்று மிடுக்குடைய நங்கையை இடை இட்டுக் கண்டனர். தெய்வ தரிசனம் பக்தர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை; அர்ச்சகர்களே தடுத்து விட்டனர்.

அவளைப் பார்த்ததிலே மனம் நிறைவு பெற்றவர் பலர்; பேரழகி என்று பேசக் கேட்டவர்கள் அவளை நேரில் கண்டது பெறற்கரும் பேறு எனக் கொண்டனர்.

அவர்கள் விழித்துக் கண் மூடினார்களா தெரிய வில்லை. தாமரை பூத்த மண்டபமாக அது விளங்கியது. அது ஒரு பொய்கையா மண்டபமா என வேறுபாடு காணவே முடியவில்லை. இவள் அன்னமென நடந்தாள். தாமரை பூத்த பொய்கையில் அன்னம் நடப்பது போல் தோன்றியது.

தமயந்தி அவள் உடுத்திய சீரை அவளை அன்னம் எனப் பேச வைத்தது. தாளுக்குப் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அன்னத்தின் சிவந்த தாளை நினைப்பூட்டியது. ஒர் அழகிய ஒவியம்; அங்கே நீலநிறக் கண்கள்; நித்திலத் தோடு அணிந்த நங்கை, அன்ன நடை பொன் ஒளிர் மேனியாள்; தாமரை பூத்த பொய்கையில் அன்னம் ஒன்று மெல்ல நடந்து வருவது போன்று அவள் காட்சி அளித்தாள்.

விழித்த கண்மூடாமல் அவளையே நோக்கினர்; அவள் அவர்கள் பார்வையில் அகப்பட்டவள் ஆயினாள். வலையில் இருந்து தப்ப முடியாத மயிலோ என்று அவள் விளங்கினாள்.

அரசர்கள் ஒவ்வொருவரும் அவள் தன் அருகில் வருவாள் என்று காத்து இருந்தனர்.

அவளுடன் வந்த ஒருத்தி இந்த அரசர்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தாள். இவர்கள் நாடு யாது; குலம் யாது; வெற்றிச் சிறப்பு யாது; வரலாறு யாது என்பனவற்றை எல்லாம் அறிந்து வைத்திருந்தாள்.

பட்ட விழாவில் மாணவர்களை ஆளுநர்முன் அறிமுகம் செய்வதுபோல் இவர்களை அவள் அறிமுகம் செய்தாள்.

சோழ நாட்டு அரசனுக்கு முதன்மை இடம் தரப் பட்டது. தமிழுக்கு அவர்கள் மதிப்புத் தந்தார்கள். காவிரி பாயும் நாடு அவன் நாடு என்று அறிமுகம் செய்து வைத்தாள். “பொன்னி அமுதம் புதுக்கொழுந்து பூங்கமுகின் சென்னி தடவும் திருநாடன்” என்று அறிமுகம் செய்து வைத்தாள். தமிழ்க் கவிதை மொழி அவள் அறிமுகத்தில் சுவையோடு வெளிப்பட்டது.

சோறு தந்த சோழ நாடு அதன் பெருமை பேசப்பட்டது. பாண்டியன் தன்னைப் பற்றிச் சேடி என்ன கூறப்போகிறாள் என்பதை எதிர்பார்த்தான். தமிழ் வளர்த்த சங்கம் குறித்து அவள் முழங்குவாள் என்று எதிர்பார்த்தாள்.

அவள் புராணம் படித்தவள்; கோயில் கூட்டங்களில் அவள் சென்று கேட்டிருக்கிறாள். செண்டு கொண்டு மேருமலையைத் தாக்கி வழி மாற்றினான் என்ற கதையைக் கேட்டிருக்கிறாள். அதை எடுத்துக் கூறி அவனை உயர்த்திப் பேசினாள். பண்டைப் பெருமை கேட்டுப் பாண்டியன் மனம் குளிர்ந்தான்.

அடுத்து அவள் சேரனைக் காட்டினாள். அவன் வில் அம்பு அவள் நினைவுக்கு வந்தது. அதுவே அவன் கொடிப் பெருமை என்று கூறினாள். சேரன் தான் வீரன் என்பதைக் கேட்டு அவன் உள்ளம் மகிழ்ந்தான். தமயந்தியின் முன் தன்பெருமை பேசப்பட்டதே தனிப்பேறு என்று கொண்டான். குன்றுகளில் அருவி பாயும் நாடன் சேரன் என்றாள். தனிக்கொடியின் மீது சிலை உயர்த்த வேந்து என்று பேசினாள்.

யதுகுல வேந்தன் அடுத்து அமர்ந்திருந்தான். கடற் கரையில் நின்றபோது அவன் காலில் அலைகள் வந்து மோதின என்றும், இசை மன்றத்திற்குத் தலைமை தாங்கினான் என்றும், பாண்டவர்க்காக தூது நடந்தான் என்றும், பாரதப் போரை முடித்தவன் என்றும் அவன் பெருமைகளைப் பேசினாள்.

குருநாட்டுக் கோமான் இவன் என்று அடுத்து இருந்தவனைச் சுட்டிக் காட்டினாள். செங்கழுநீர் மொட்டு அதனைப் பாம்பின் தலை என்று கருதிக் குருகுக் குஞ்சு அஞ்சி அலறியது; அதனை அமைதிப்படுத்தத் தாய்க் குருகு இரவு எல்லாம் தாலாட்டியது. அத்தகைய சிறப்பு உடையது குருநாடு என்று கூறினாள்.

சங்கு ஈன்ற முத்தினைத் தாமரை இலை தாங்கியது; அத்தகைய சிறப்பு உடையது மந்திரநாடு என்று அவ் வரசனைச் சிறப்பித்தாள்.

கருப்பஞ்சாறு பாய்ந்து நெற்பயிரை விளைவித்தது; அதன் தாளினை எருமைகள் கறித்துத் தின்றன. அதன் கடைவாயில் தாளின் பால் ஒழுகியது; இது மச்ச நாட்டின் பெருமை என்று கூறினாள்.

குவளைப் பூவைப் பறித்துத் தின்ன எருமைக் கடா விரும்பியது. அந்தப் பூவில் படிந்திருந்த வண்டுகள் பாடிய பண்ணிசை கேட்டு அது உண்ணாமல் நின்று விட்டது. அத்தகைய பெருமை உடையவன் அவந்தி நாட்டின் அரசன் என்றாள்.

மீன் பிடிக்கும் தூண்டில் அதனை மேலே நிமிர்த்த அதன் கொக்கி கமுக மரத்தின் பாளையைத் தைக்க அதிலிருந்து விழுந்த தேன் செந்நெற்பயிர்களுக்குப் பாய்ந்தது. அத்தகைய சிறப்பு உடையவன் பாஞ்சால நாட்டு அரசன் என்றாள்.

செந்நெல் அரிவார் தம் கொடுவாளைச் சினையோடு கூடிய ஆமையின் முதுகில் தீட்டுவர். அத்தகைய வளம்மிக்க நாடு கோசல நாடு என்று குறிப்பிட்டாள். அதனை ஆளும் அரசன் என்று அவனைக் காட்டினாள்.

தாமரை மலர்கள் மிக்கு விளங்கும் பொய்கைகளை உடைய நாடு மகத நாடு என்றாள். நெருப்புப் போல் அப்பூக்கள் காட்சிஅளித்தன. அதன்மேல் படியும் வண்டுகள் புகைபோல் காட்சி அளிக்கின்றன என்றாள்.

சங்கு ஈனும் முத்துகள் பவளக் கொடியில் சிக்கிக் கொள்கின்றன. அவற்றைக் கடல் தன் அலைக்கரத்தால் எடுத்துச் சென்று காக்கிறது. அத்தகைய நாட்டை உடையவன் அங்கநாடன் என்றாள்.

எருமைகள் நீரில் படிய வாளை மீன்கள் துள்ளி எழுந்து தாமரைப் பூக்களைக் கலக்குகின்றன. அதனால் அப்பொய்கையில் உள்ள வண்டுகள் சிதறிப் பறக்கின்றன. அத்தகைய சிறப்பு உடையது கலிங்க நாடு என்றாள்.

கடற்கரையில் கொண்டு சேர்த்த மகர மீனை ஆற்று மீனாகிய கெண்டை மீன் தொட்டு விடுகிறது; அதன் தீட்டு மறைய அது கங்கை ஆற்றில் முழுகி எழுகிறது. அத்தகைய சிறப்பு உடையது கேகய நாடு என்றாள்.

நெடிய குளத்தில் வாளைக் கொடி மீது தனியாக ஒரு அன்னம் நடந்து செல்கிறது. அது தனிக் கயிற்றில் நடக்கும் கழைக் கூத்து ஆடும் பெண் ஒருத்தியைப் போல விளங்குகிறது. அத்தகைய சிறப்பு உடையவன் காந்தார நாட்டு அரசன் என்றாள்.

சங்குகள் புடைபெயர அதனால் தாமரை மலர்கள் கலங்குகின்றன. அதனால் செந்தேனைப் பூ சிந்துகிறது. அது செங்குவளைக் கதிர்களைப் பொன்போல விளைவிக்க உதவுகிறது. அத்தகைய சிறப்புடைய நாடு சிந்து நாடு என்று கூறினாள்.

பார்த்திபர்கள் பலரை அவள் காட்ட நேர்த்திமிக்க நளனைக் காண அவள் விருப்பம் கொண்டாள். நளன் இருந்த இடத்துக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஒரு நளன் அல்ல; நான்கு நளன்களைக் கண்டாள். தேவைக்கு மேல் கிடைக்கும் செல்வம்தான் அது; அது தன் மன மயக்கம் என நினைத்தாள்.

நளன் உருவில் தேவர்கள் நால்வர் உடன் அமர்ந்திருந்தனர். இந்திரன், அக்கினி, வருணன், இயமன் இந்நால்வர் நளன் உருவில் அமர்ந்திருந்தனர். போலிகள் யார்? நளன் யார்? எப்படி அறிவது? தேவர்களின் சூழ்ச்சி இது என்பதைத் தமயந்தி அறிந்தாள்.

கையில் மாலை நளன் கழுத்தில் போட எடுத்தாள்; ஐவரும் எதிர்பார்த்தனர். நளன் ஏதாவது ஒரு குறிப்பைத் தந்திருக்கலாம். தான்தான் உண்மை நளன் என்று கூறி இருக்கலாம். அவன் நேர்மை தவற விரும்பவில்லை; மாலையிடுவது அவள் பொறுப்பு; அதில் அவன் தலையிட விரும்பவில்லை; தேவர்கள் கண்ணிமைக்காமல் காத்து இருந்தனர்.

அவள் தன் காதலில் நம்பிக்கை வைத்தாள். தன் கற்பில் உறுதி வைத்தாள். நிச்சயம் தவறு செய்ய நேராது என்று நம்பிக்கை வைத்தாள். வீமன் ஒரே மகள், குல விளக்கு என்று பேசப்பட்டவள்; தன் குடிப்பிறப்பில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. தேர்வில் வெற்றி பெறத் தன் கற்பில் நம்பிக்கை வைத்தாள். தவறு செய்ய மாட்டோம் என்ற நம்பிக்கை பிறந்தது.

மறுபடியும் அவர்களைப் பார்த்தாள். நளன் எந்தக் குறிப்பும் காட்டவில்லை; அவன் இயல்பாக நடந்து கொண்டான். தேவர்கள் அவர்கள் அதனால் கண் இமைக் காமல் இருந்தனர். அவர்கள் காலடிகள் தரையில் படிய வில்லை. வாடாத மலர்களை அவர்கள் மாலையாக அணிந் திருந்தனர். இவர்கள் தேவர்கள் என்பதைக் கண்டு கொண்டாள். நளன் வேறுபட்டு விளங்கினாள். மானுடனுக்கு உரிய இயல்புகளைக் கண்டாள். அவன்தான் நளன் என்பதை அறிந்து கொண்டாள்.

எடுத்தாள் மாலையை; அந்தப் பொன் மாலையை நளன் கழுத்தில் இட்டாள்; உண்மை வென்றது; நன்மை நிலைத்தது; சாயம் வெளுத்தது; தேவர்கள் வெட்கினர்; தலைகுனிந்தனர்; மனம் தவித்தனர். மானுடம் வென்றது என்று பேசினர்.

மண்ணரசர்கள் அவர்களும் மனம் வெதும்பினர்; பெருமைகள் எல்லாம் மறந்தனர். தனக்குத்தான் அவள் மாலை இடுவாள் என்று தறுக்கி இருந்தவர்கள் எல்லாம் தணிந்து போயினர். முகம் வெளுத்தது; செந்தாமரை எனப் பேசப்பட்டவர்கள் வெண்தாமரை என மாற்றப்பட்டனர். உலகம் அவ் இளைஞனை வாழ்த்தியது; பொருத்தம் என்று பேசினர். பிழை நடக்கவில்லை, பெருமை பெற்றாள் என்று பேசினர்.

மாலை தாங்கிய மன்னன் நளன் தன் காதலியுடன் செம்மாந்து நடந்தான்; வாழ்த்தொலிகள் அங்கு அம் மண்டபத்தில் எதிர் ஒலித்தன. அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். நகர்வலம் வந்தனர். மடநாகுடன் செல்லும் மழவிடைபோல் தமயந்தி அவனுடன் நடந்தாள். காளை எருதுடன் இளம்பசு உடன் செல்வதுபோல் இருந்தது. பொன் மாலை பெற்ற தோளோடும் அவன் புறப்பட்டான்.

சுயம் வரம் முடிந்தது; விழா இனிது நடைபெற்றது; நாட்டில் எங்கும் மகிழ்ச்சி நிலவியது. காதல் இருவர் ஒன்று சேர்ந்தனர். களி மகிழ்வு கண்டனர்.

சுந்தரியை மணக்க அந்தரத்தில் இருந்து வந்த இந்திரன் தன் பொன்னாடு திரும்பினான். அவன் சென்ற வேகத்தைக் கண்ட மற்றைய தேவர்கள் அவன் மணமாலை தாங்கி வருவான் என்று எதிர்பார்த்தனர். பொன்னாடு எங்கும் விழா எடுத்துக் கொண்டாட நினைத்தனர். வரவேற்புகள் அவனுக்காகக் காத்து இருந்தன.

குட்டி தேவதைகளுள் ஒருவன் சனியன்; அவனை ஈசுவரன் என்று கூறி அஞ்சினர். அவன் யாரையாவது பிடித்துக் கொண்டால் இலேசில் விட்டுச் செல்ல மாட்டான் என்ற புகழைப் பெற்றவன்; குறைந்தது ஏழரை ஆண்டுகள் அவன் ஆட்டி வைப்பான் என்று நம்பினர்.

தீமைகள் தொடர்ந்தால் அதற்குக் கர்த்தாவே அவன்தான் என்று பேசும் பெருமையைப் பெற்றிருந்தான். அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். தன்னைப் பற்றாமல் இருக்க அவனை வழிபட்டனர்.

அறிவாளிகளும் மடமை காரணமாக அவனைக் கண்டு அஞ்சினர். இந்திரனை வந்து சந்தித்தான். தலைவர்களுக்கு மாலையிடக் கைத்துண்டைப்போடும் தொண்டனைப் போல் அவன் மாலை ஒன்று ஏந்தி அவன் வரும் வழியில் நின்றான்.

தமயந்தி இந்திரனுக்கு மாலையிடவில்லை. இவன் மாலை இடக் காத்திருந்தான். கழுத்தை நீட்டுவான் என்று கழுகு நிகர் கலிமகன் காத்திருந்தான்.

பத்திரிகை நிருபர்களைச் சந்தித்து அரசியல் நடத்தும் வரிசையில் இந்திரன் இருப்பான் என்று எதிர்ப்பாத்தான். புதிய செய்தி தருவான் என்று பேனாவில் மூடியைக் கழற்றினான்.

“நீ ஏன் வந்தாய்? உன்னை யான் எதிர்பார்க்கவில்லையே” என்று இந்திரன் கலியனைக் கேட்டான்.

“வெற்றிக் களிப்போடு வீடு திரும்புவாய்” என்று எதிர்பார்த்தேன். பரமசிவன் போல் பாதி உருவம் மற்றவள் ஒருத்திக்குத் தந்து பாகத்தனாக வருவாய் என்று எதிர்பார்த்தேன்” என்றான்.

கங்கை ஒருத்தி சடையில்; மங்கை ஒருத்தி இடையில்; இரண்டு பெண்களை அவன் சுமக்கிறான். அந்தத் திருக் காட்சியில் இந்திரனைக் காண விரும்பினான். மின்னும் நட்சத்திரம் வானத்திலிருந்து கையில் பிடித்துக் கொண்டு வருவான் என்று எதிர்பார்த்தான்.

தமயந்தி அவனுடன் வரவில்லை; உடன் சென்ற தருமத் தலைவர்கள் சோர்வோடு வந்ததைப் பார்த்தான்.

“மாலையிட்டு வரவேற்க வந்தேன்” என்றான்.

“அவள் மாலையிட்டு விட்டாள்; எனக்கு அல்ல; அவள் தேர்ந்து எடுத்த காதலனுக்கு; நளன் வந்தான்; அவளைத் தட்டிச் சென்றான்” என்று கூறி விளக்கினான்.

கலியனால் இச்செய்தியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ‘இனப் போராட்டம்’ அது அவனையும் பற்றியது. ‘தேவர் இனம் மதிக்கப்படவில்லை’ என்று ஒரு புதிய போராட்டத்தை இந்த மண்ணுலக மாந்தர் போல் அவனும் துவக்கி வைத்தான்.

“இது தனி ஒரு தேவனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல; நம் திருக்கூட்டத்துக்கே நேர்ந்த அவமதிப்பு” என்று தெரு கூட்டிப் பேசினான்.

“இதை எதிர்த்தே தீருவேன்” என்றான்.

குறளகத்தின் முன்பு உண்ணாவிரதம் இருப்பான் என்று இந்திரன் எதிர்பார்த்தான்.

திருக்குறளில் அவன் நம்பிக்கை வைக்கவில்லை. அழிப்பதே தன் தொழில் என்று கொண்டவன் ஒரு சில அரசியல் சூழ்ச்சிக்காரர்களைப் போல்.

“அவர்கள் காதலை முறிப்பேன்; வாழ்க்கையைப் பறிப்பேன்; கூட்டு வாழ்க்கையை உடைப்பேன்” என்று சபதம் செய்தான். “அது தன்னால் முடியும்” என்று குரல் கொடுத்துப் பேசினான்.

இந்திரன் தடுத்தான்; “உன் செபம் அங்குப் பலிக்காது; மக்கள் அவர்களை மதிக்கிறார்கள். அசைக்க முடியாது” என்று சொல்லிப் பார்த்தான்.

“அவன் நெறி தவறாதவன்; வாய்மை அவன் வழுவாதவன். நல்லவர்களுக்கு என்றும் கேடு வராது; அதைவிட அவன் பத்தினி அவள் பதிவிரதை, மழை பெய்யச் சொன்னால் அது பெய்யும். அவள் ஒரு நெருப்பு: அவளிடம் நீ அணுக முடியாது” என்றும் கூறினான்.

பாம்பு பாலைத்தான் பருகுகிறது எனினும் அது தன் தீமையை விடுவது இல்லை; நஞ்சைத்தான் கக்குகிறது. அது அதன் பிறவிக் குணம்.

நன்மைகள் அவனிடம் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் புன்மை அவனை விட்டு அகலவில்லை. இந்திரனும் இடைநின்று தடுக்கவில்லை; தீயவர்களைத் தடுத்தால் அவர்கள் மாறமாட்டார்கள் என்பது அறிந்தவனாக அடங்கிவிட்டான். இந்த உலகம் சனநாயகத்தைக் கண்டது. கெடுப்பதற்கு அனைவர்க்கும் உரிமை உள்ளது. அதனால் அவன் தடுக்கவில்லை.

சுயம்வரம் வேறு, மண விழா வேறு. இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்வது சுயம்வரம்; உறுதி செய்வது என்பது அந்த முதல் நிகழ்ச்சி. மணவாழ்வு என்பது இருவரையும் இணைத்து ஒன்றாக்குவது; தேர்வு முதற்படி பட்டமளிப்பு அடுத்தபடி அது எப்படி நடைபெற்றது? மணவிழா தொடர்ந்து நடைபெற்றது.

விதர்ப்பன் திருமடந்தையின் மணவிழாவினைக் காண வருபவன் போல் வெங்கதிரோன் ஆகிய சூரியன் வெளிப்பட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை படைக்கப்படுகிறது. சரித்திரம் உருவாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை நிகழ்கிறது. “இன்று நிகழ்ச்சி நிரல் யாது” என்று சூரியன் காண்கிறான்.

தமயந்தியின் மணநாள்; அதைக்காண வருபவன் போல் சூரியன் தோன்றினான். குமுதம் குவிந்தது; அதன் வாய் அடங்கியது. நளனுக்கும் தமயந்திக்கும் உள்ளத்தில் கொழுந்து விட்ட வேட்கை என்னும் தீ அடங்கியது. மணநாள்; அது அவர்களுக்கு இணையும் நாள் ஆகியது.

அவள் புன்முறுவல் கண்டு மனம் புண்பட்ட மன்னர் பலர்; அவள் பேரழகு அவர்களுக்குப் பெருத்த வருத்தத்தைத் தந்தது. ‘பொன் அழகு அது வெளியில் வைத்தால் அது பிறர் கண்படும்; அவர் நெஞ்சு புண்படும். அதைப் புதைத்து வைப்பதே செய்யத் தக்கது என்பது போல் புனைவுகள் கொண்டு அவள் மேனியைப் பூட்டி வைத்தனர். அணிகள் பல அணிவித்தனர். அவ்வாறே மலர் கொண்டு அவள் கூந்தலை மறைத்தனர். ‘மிக்க அழகு” அதைப் பாதுகாக்க இந்த அரண்கள் தேவைப்பட்டன.

ஆசிகள் பெற மணவிழா நடைபெற்றது. இனி அவர்கள் அன்றில் பறவைகள்; அவர்களை யாரும் பிரிக்கவே முடியாது. வீமன் மகள் நேற்றுவரை, இன்று காமன் கைப்பிள்ளை; நளனின் வாழ்க்கைத் துணைவி; இணைப்பு அவர்கள் பிணைப்பு.

சேடியர்கள் அவர்களைத் தனியறையில் விட்டனர். குற்றேவல் பல செய்து அந்த அறையை அழகு செய்தனர். மஞ்சத்தில் மலர்கள் பரப்பி அவர்கள் கொஞ்சி மகிழ வழி செய்தனர்; வகுத்துத் தந்தனர்.

காமன் தன் மலரம்பு தொடுத்தான்; அவள் தோள்களைத் துளைத்தான்; அவள் கொங்கைகளில் எய்தான்; இருவரும் கிளர்ச்சி பெற்றனர். முன்பின் பழகாதவர்; பார்த்து அறியாதவர்; பேசி மகிழ்ந்தனர். கூசி ஒதுங்கியவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட்டனர்; உடலால் ஒன்றுபட மாரன் மலர் அம்புகளைத் தொடுத்தான் இருவரையும் இணைத்தான்.

அரவுகள் பிணைவது போல் அவர்கள் இணைவு கண்டனர். இருவர் என்று உள் நுழைந்தவர். அவர்கள் மாறி ஒருவர் ஆயினர் என்று கூறும்படி ஒருவரை ஒருவர் தழுவினர்; அணைந்தனர். பின் இணைந்தனர்; இன்பத்தில் ஆழ்ந்தனர். நீரில் நீர் கலந்தால் அங்கே இரண்டு என்று கூற முடியாது. நீர் மறுபடியும் ஒன்றாகத்தான் அமையும். புனலோடு புனல் கலந்தது போல் அவர்கள் கலவியில் கலந்து ஒன்று ஆயினர்.

வீரம் மிக்க நளன் போர்க்களத்தில் யானையுடன் முட்டி மோதி வெற்றி கண்டவன் அது மறக்களம்; களப் போர் அது; இங்கே அவள் முலை முகட்டில் மோதி அவள் கரங்களைக் கரத்தால் பற்றி அணைந்தனன், இளகினர். அணைந்தனர், தாபத்தால் பிணைந்து இன்பம் அடைந்தனர். இது அவன் ஏற்ற கலவிப் போர்; புது இன்பம் கண்டு வாழ்வில் மலர்ச்சியைக் கண்டான்.

அவர்கள் இன்ப வாழ்வு தொடர்ந்தது. ஆண்டுகள் சில கழிந்தன. விதர்ப்புன் நாட்டில் அவர்கள் தொடர்ந்து தங்கினர். மருமகன் அதனால் அவன் அங்கே மருவி வாழ்ந்தான். இன்ப வாழ்வில் அவன் நாட்கள் சென்றன. சொந்த நாடு திரும்ப எண்ணினான்.