புகழேந்தி நளன் கதை/பாயிரம்

பாயிரம்
இறை வணக்கம்
விநாயகர்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரி தங்கூற வருந்துணையாம் - ஈசன்
கரியா னனத்தான் கருது புகழ்பூண்ட
கரியா னனத்தான் கழல் 1

நம்மாழ்வார்

வளன்கூர் வயல்குழு மாநிடத மன்னன்
நளன்சீர் நவிலுநல நல்கும் - உளஞ்சேர்
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர் 2

திருமால்

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலேஎன அழைப்ப
என்னென்றான் எங்கட் கிறை 3

சிவபெருமான்

கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடைமேல் உறையும் - நிலாவை
வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்
கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. 4

திருமுருகன்

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை
மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல் சூர்வென்றோன்
அணிச்சே வடியென் அரண் 5

அவையடக்கம்

வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் பைந்தொடையில்
தேன்பாடுந் தார்நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாடல் உற்ற இது 6

நூலாசிரியர்

பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால்
பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்
செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்
மொழியின் சுவையே முதிர்ந்து 7


1. சுயம்வர காண்டம்
வியாசர் கதை கூறல்

பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதும் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தான் இருந்தானை மண்ணொடும் போய்மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து 8


நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானைக்-காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழில்தோள் வேந்தர்
வருந்தகையார் எல்லோரும் வந்து 9


கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க-முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி 10