புகழேந்தி நளன் கதை/முன்னுரை

முன்னுரை

செய்யுள் வடிவில் உள்ள இலக்கியம் அதன் உரை நடையாக்கம் : தனித்தனிக் கவிதைகள் படிப்பது அதன் நயத்தைக் காட்டும்; ஒட்டுமொத்தமாகப் படிக்க உரை நடையே உதவும்.

பனிக்கட்டி உருகினால் அது அருவியாகிறது. செய்யுளை உடைத்தால் அது உரைநடையாகிறது. பனிக்கட்டி பார்க்க அழகாக இருக்கும். பருக அருவி நீரே சுவை தருகிறது.

நளன் கதை மிகப் பழைய கதை. பாரதத்துக்கு முன் எழுந்த கதை; பார்த்திபருள் சூதாடி நாட்டைத் தோற்றவன் கதை இது. பாண்டவர்கள் போலவே காட்டிற்குச் செல்லும் கதி இவனுக்கும் ஏற்பட்டது.

காவியம் என்பது பொதுவாக விருத்தப் பாவில் செப்புவது தமிழ் மரபு; பழங்காலத்தில் இளங்கோவும் சாத்தனாரும் படைத்துத் தந்தவை ஆசிரியப்பா. வெண்பாவில் யாரும் ஒரு காவியத்தைப் படைத்தது இல்லை.

குறள் வெண்பாவை வள்ளுவர் படைத்தார்; இவை நேரிசை வெண்பாக்கள்; நான்கு அடிகள் கொண்டவை; செப்பல் ஒசை உடையது. கதை சொல்வதற்கு வேண்டிய ஓட்டம் இதில் உள்ளது.

ஏறக்குறைய நானூறு பாக்கள் கொண்டது இந்நூல். கம்பருக்குப் பின் எழுந்த நூல் இது. ஒட்டக் கூத்தரை ஒட்டி எழுந்தது இது. ஒட்டக் கூத்தரும் புகழேந்தியாரும் சம காலத்தவர் என்று கூறப்படுகின்றனர்.

குறுநில மன்னன் சந்திரன்சுவர்க்கி என்பவன் இவரை ஆதரித்தவன் என்பது தெரிகிறது. இவர் பாடல்களில் அவன் நீதி வழுவாத தன்மையையும், நெறியையும், கொடைச் சிறப்பையும் பாடியுள்ளார்.

நளன் கதை காதற் கதை; அன்னம் தூது சென்று இருவரையும் ஒன்று சேர்த்தது. அன்னத்திடம் நளன் தன் காதலை உரைக்கிறான். அது தமயந்தியிடம் சென்று அவன் வீரத்தையும் அழகையும் நற்குணங்களையும் நவின்றது. இவை சுவைமிக்க செய்திகள் ஆகின்றன.

மன்னர்கள் கூடியிருந்த மணி மண்டபத்தில் நளனைத் தமயந்தி அறிந்து அவனுக்குப் பொன்மாலை சூட்டுகிறாள். தேவர்கள் தோல்வி அடைகின்றனர். கலி புருடன் அவர்களை வாட்டுகிறான். அதனால் அவர்கள் பிரிகின்றனர்.

பிரிந்தபின் தனிமையில் தவிக்கின்றனர். பாழ் மண்டபத்தில் நள்ளிரவில் அவளைத் தவிக்கவிட்டும் செல்கிறான்; இது பல பாடல்களில் பேசப்படுகிறது.

தமயந்தி தன் அறிவுத் திறத்தால் நளனைத் தன் தந்தை ஊருக்கு வரவழைக்கிறாள்; பிரிந்தவர் கூடுகின்றனர்; இழந்த நாட்டைப் பெறுகின்றனர்.

இந்தக் காதல் கதை புகழேந்தியாரால் கூறும்போது அது உள்ளத்தைக் கவர்கிறது. அவர்கள் சோகம் நம் நெஞ்சை உருக்குகிறது. கவிஞரின் கவிதையில் சொல்லாட்சிகள் நம்மைக் கவர்கின்றன. எதுகை மோனை நயங்கள் எழில் ஓசையைத் தருகின்றன. உருவகங்கள் கவிதைகளுக்கு அழகு ஊட்டுகின்றன. அணி நலம் மிக்க கவிதை நூல் இது.

இதனை எளிய இனிய உரை நடையில் தந்திருப்பது முதற்பகுதி, பின் அடுத்து அணி நலன்களைச் சுட்டிக் காட்டிக் கவிதைகளை விமரிசிக்கின்றது.

ஒவ்வொரு பாட்டும் அழகு உடையது; சுவை தருவது; சிறந்த சொல்லாட்சிகள் கொண்டது. அவற்றை வாசகர் அறிந்து மகிழ மூல நூல் செய்யுட்கள் அனைத்தும் பிண்ணிணைப்பில் தரப்பட்டுள்ளன.

இது உரை நூல் அன்று; சுவை நூல்; கவிதைத் திறனாய்வு நூல்.

இந்நூல் கவிதைகள் சுவை உடையன; கதை உள்ளத்தைத் தொடுவது; பழைய கதை நாட்டுக் கதை: கருத்துமிக்கது; சிறந்த நீதியை வற்புறுத்துவது.

இதனை எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி காண முடிந்தது; அதனைப் பகிர்ந்து கொள்வதே இந்நூல் வெளியீடு.

கம்பராமாயணம், மாபாரதம், சீவக சிந்தாமணி, திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றின் உரைநடை நூல்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். திருக்குறள் செய்திகள் என்ற நூலும் மூலநூலை அழகிய உரைநடையில் தந்துள்ளது.

இந்நூல் சுவைக்கத் தக்கது; கவிதை நயம் அறிய உதவுவது; வெளியிடுகிறோம்.

ரா. சீனிவாசன்