புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/பெர்டோல்ட் ப்ரெக்ட்
நான் சொல்கிறேன்:
ஏழைகள் நாற்றம் பிடித்தவர்கள்!
ஏன்! நானுந்தான்.
(1898–1956)
தீப்ஸ் நகரின்-
ஏழு கோபுரங்களைக்
கட்டி முடித்தவர் யார்?
மன்னர்களின் பெயர்கள் தான்
வரலாற்றில் நிரப்பப் பட்டுள்ளன.
மாபெரும் சீனப் பெருஞ்சுவரைக்
கட்டி முடித்த மாலை வேளையில்
அதன் கொத்தர்கள்
எங்கே ஓடி ஒளிந்தார்கள்?
ரோம் நகரெங்கும்
சிற்பக் கலையழகு மிக்க
வெற்றி வளைவுகள்!
அவற்றை எழுப்பியவர் யார்...?
இந்தப் பாடல் வரிகளின் தொனி, பாரதிதாசனின் புரட்சிக் கவியை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
நிறைந்து பெருங் காடாக்கப் பெரு விலங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலம்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார், அழகு நகருண் டாக்கி?
சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
முதலில் இருக்கும் பாட்டுவரிகளுக்குச் சொந்தக்காரர் பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் என்னும் ஜெர்மானியப் பாரதிதாசன். உலகின் தலைவிதியையே மாற்றிவைத்த உலகப்போர்கள் நடந்த காலத்தில், ஜெர்மனியில் சமாதானச் சங்கநாதம் முழக்கிய புரட்சிக்கவி; குண்டு மழைகளுக்கு நடுவிலிருந்து மனிதாபிமானக் குரல் கொடுத்த ஒற்றைக்குயில்.
ப்ரெக்ட் 1898 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை சிறிய காகித ஆலையொன்றின் நிர்வாக இயக்குநர்; தாயார் பிளேக்ஃபாரஸ்ட் பகுதியில் பணிரிந்த ஓர் அரசாங்க அலுவலரின் மகள். முதல் உலகப்போர் தோடங்கியபோது, ப்ரெக்ட் மாணவராக இருந்தார். அப்போதே அவர் துணிச்சலாகப் போர் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிட்டார். மியூனிச் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் பல்கலைக் கழக மரபுகளுக்கு மாறான பணிகளில் ஈடுபட்டதோடு, ஒரே சமயத்தில் பலபெண்களைக் காதலிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். இவ்வழக்கம் அவர் வாழ்நாளில் இறுதிவரை தொடர்ந்தது.
கல்வியை முடித்துக் கொண்டு, ஜெர்மன் இராணுவ மருத்துவமனையில் சிலகாலம் பணிபுரிந்தார். முதல் உலகப் போர் முடிவுற்றதும் இராணுவப் பணியிலிருந்து விலகி பவேரியப் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கு கொண்டார். அங்கு பொழுது போக்கு அரங்குகளிலும், விடுதிகளிலும் நாடோடிப் பாடகராகச் சிலகாலம் புகழ்பெற்றார். அன்றையப் பிற்போக்கு நாடகங்களைத் தாக்கிப் பத்திரிகைகளில் விமரிசனம் எழுதினார். பின்னர் இவரே நாடகம் எழுதிப் புகழ் பெறத் தொடங்கினார். 1924 முதல் 1933 வரை பெர்லின் நாடக உலகில் துடிப்போடு இயங்கினார். சிறந்த இசைப் புலவரான 'குர்த்வீல்' என்பாரின் துணையோடு ‘மூன்று பென்னிய இசைநாடகம்’ (The Three Penny Opera) என்ற சிறந்த படைப்பை வெளியிட்டார். அந்நாடகம் பெர்லினில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அது எல்லாராலும் விரும்பி நடிக்கப்பட்டது.
1933-இல் ரீச்ஸ்டாக் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், இவர் ஜெர்மனியை விட்டு வெளியேறினார், ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, ஆகிய நாடுகளில் ஏழாண்டுகள் எளிய வாழ்க்கை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார். 1941-ஆம் ஆண்டு ருசியநாடு வழியாகப் பயணம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவை அடைந்தார்.
ருசியாவில் பயணம் செய்த காலத்தில் அந்நாட்டில் ஏற்பட்டிருந்த திட்டமிட்ட முன்னேற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். அவரையும் அறியாமல் அவர் உள்ளம் மார்க்சீயத்தின்பால் ஈர்க்கப்பட்டது. அவருடைய படைப்புக்களில் மார்க்சீயத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த போது, தமது நாடகங்களையும் கவிதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரங்கேற்ற விரும்பினார். அதில் ஓரளவே வெற்றி பெற்றார். ஹாலிவுட்டில் திரைப்படத் தொழிலில் ஈடுகடத் தீவிரமாக முயன்று அம்முயற்சியைக் கைவிட்டார். 1947-ஆம் ஆண்டு அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கை விசாரணைக் குழுவின் (Un-American Actryities Committee) முன் வருகைத் தரும்படி அமெரிக்க அரசாங்கம் அவரைப் பணித்தது. அக்குழு கேட்ட கேள்விக்குக் குதர்க்கமான வாக்குமூலங்களை வழங்விட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேறிக் கிழக்கு ஜெர்மனியை அடைந்தார். அங்கு தம் மனைவியோடு சேர்த்து புகழ்மிக்க பெர்லினிய இசைக்குழுவைத் தோற்றுவித்தார்.
கிழக்கு ஜெர்மனி அப்போது ஸ்டாலினின் பயங்கர சர்வாதிகாரப் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நேரம். ஸ்டாலினிய அதிகாரிகளோடு ப்ரெக்டால் ஒத்துப் போக முடியவில்லை. அடிக்கடி அவர்களோடு பூசலும், புகைச்சலுமாகவே அவர் இறுதி வாழ்க்கை கழிந்தது. 1956-ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி ஹூகதாட் இடுகாட்டுக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார்.
ஜெர்மனியில் இவரது வாலிபப் பருவத்தில் புகழின் உச்சியில் வாழ்ந்த கவிஞர் ரில்க்கோடு இவர் அடிப்படையிலேயே முரண்படுகிறார். ரில்க் தனிமனிதனின் ஆன்ம தரிசனத்தைப் பாடியவர்: ப்ரெக்ட் தெருவோரத்தில் அமர்ந்து ஏழ்மையைப் பற்றிச் சிந்தித்தவர். ரில்க்கின் கவிதை, அறிவை மயக்கும் சங்கேதக் கவிதை; ப்ரெக்டின் கவிதை அன்றாட வாழ்க்கையை ஆய்வு செய்யும் நடப்பியக் கவிதை (Runctional Paetry) இதைப் புதிய மெய்ம்மையியம் (New Realism) என்றும் சொல்லலாம்.
நடைமுறைக் கவிதையை அரசியல் உணர்ச்சி வெளிப்பாட்டியத்தின் (Poetical Expressionism) அடுத்த வளர்ச்சி என்றும் கொள்ளலாம். தற்பெருமை, தத்துவார்த்தம், பிரபஞ்ச ரகசியம், அடிமனக் கற்பனை என்பவற்றைப்பாடுபொருளாகக் கொண்டுவரும் கவிதைகட்கு எதிரானது நடப்பியக்கவிதை நேர்ப்படும் உண்மைகளை உள்ளது உள்ளபடியாகத் தரமான கவிதைகளில் அறிவார்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்த வேண்டும் என்று நடப்பியக் கவிஞர்கள் விரும்பினர். இன்னும் தெளிவாகச் சொன்னால் தெருவில் இருக்கும் மனிதனுக்கு அறிஞர்கள் படைக்கும் கவிதை நடப்பியக் கவிதை.
ப்ரெக்ட், கவிதையின் எல்லாச்சட்டதிட்டங்களையும் உடைத் தெறிந்துவிட்டு எழுதினார். சாமான்யர்களிடையில் காணப்பட்ட சாதாரணப் படிமங்களையே (Common Place Images) அவர் தமது கவிதைகளில் கையாண்டார். மேலும் அவர் பாடல்கள் பிரச்சார அடிப்படையிலேயே- குறிப்பாக மார்க்சீயச் சிந்தனை- அமைந்திருந்தன.
யாப்பமைதியோடு கூடிய தன்னுணர்ச்சிப் பாடல்களை அவர் அரிதாகவே எழுதினார். தொடர்களை உடைத்தெழுதும் துண்டுக் கவிதையையே (Official back- verse) அவர் விரும்பிக் கையாண்டார். இத்துண்டுக் கவிதை முறையை அதிகமாகக் கையாண்டாலும், அதைக் கவிதையென்று அவரே கூடக் கூறிக் கொள்வதில்லை. வறுமைக் காலத்தில் விளம்பரக் கவிதைகள் எழுதிப் பிழைப்பதற்கு இந்தப் பாணி அவருக்கு மிகவும் கை கொடுத்தது.
துவக்ககாலத்தில் அவர் நாடகங்களே எழுதினார். செல்வர்களாலும், ஆளும் வர்க்கத்தாலும் ஏழைமக்கள் சுரண்டப்படுவதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பிரச்சார நாடக ஆசிரியராக எல்லாராலும் தாம் மதிக்கப்பட வேண்டும் என்றே பெரிதும் விரும்பினார். நாடக ஆசிரியராக விளம்பரம் பெற்ற பிறகே அவர் கவிதை எழுதத் தொடங்கினார். மதம், அரசியல் சமுதாயம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை மக்கள் கண் முன்னால் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாடகமே சிறந்த சாதனம் என்பதை அவர் அறிந்திருந்தாலும், அன்றாட உண்மைகளைச் சொல்லோவியங்களாக மாற்றி மக்கள் நாவில் நடமாட விடுவதற்குக் கவிதை விறுவிறுப்பான சாதனம் என்பதையும் அறிந்திருந்தார். “ப்ரெக்டின் கவிதைகள் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சிறந்த நாடகாசிரியராக என்று விளம்பரம் பெற்றிருக்க முடியாது” என்று சில அறிஞர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.
ப்ரெக்டின் கவிதை முதன் முதலாக வெளியான போது, அதற்குப் பலமான எதிர்ப்பு இருந்தது. அதைக் கவிதையென்று யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பவுண்டின் காண்டங்கள் வெளியானபோது இலக்கிய வாதிகளிடையில் எத்தகைய எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்ததோ, அத்தகைய எதிர்ப்பைப் ப்ரெக்டின் கவிதையும் சந்திக்க வேண்டியிருந்தது. இன்றும் ப்ரெக்டை ஒரு சிறந்த கவிஞர் என்பதை விட, ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே இலக்கியத் திறனாய்வாளர்களுள் ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் சிறந்த கவிஞருக்குரிய எல்லாப் பண்புகளும் ப்ரெக்டிடம் இருப்பதாக வாதிடுகின்றனர். தம்மிடம் அமைத்திருந்த பல்துறை ஆற்றலைப் பற்றிப் ப்ரெக்ட் எப்போதும் பெருமைப் பட்டுக் கொண்டதில்லை.
ஒருவன்.--
தன்னைப் பற்றி
மிகையாக
நினைத்துக் கொண்டிருப்பதாகப்
பிறர் கருதக்கூடாது-
என்று தம்மைப்பற்றி ஓரிடத்தில் ப்ரெக்ட் அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். ஆனால் இக்கூற்று, அவருடைய பலதிறப்பட்ட காதல் விவகாரங்களில் மட்டும் பொய்யாகிவிட்டது.
ப்ரெக்டின் கவிதையாற்றலுக்கு மூலமாக விளங்கியவர்கள் லூதரும், கிப்ளிங்கும் ஆவர். இவர்களையும்விட ஆர்தர் வேலியின் சீனக்கவிதை மொழிபெயர்ப்புகள், ப்ரெக்டின்மீது அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தின. அம்மொழிபெயர்ப்புகள் ஒரு புதிய நடையைத் தம்மிடத்தில் தோற்றுவித்துக் கொள்ளப் ப்ரெக்டிற்குப் பெரிதும் உதவின் இவரும் சில சீனப்பாடல்களை மொழிபெயர்த்ததோடு, அதே பாணியில் தாமே சில கவிதைகளும் எழுதியுள்ளார். வேலியின் மொழிபெயர்ப்புகளோடு ஒப்பிடும்போது, பிரெக்டின் மொழிபெயர்ப்புகள், தெளிவும் இசைவும் பொருந்தி, மிகுதியான ஐரோப்பியத்தன்மைகளோடு விள்ங்குகின்றன. சீன மொழிபெயர்ப்புகளின் தொடர்பால் ப்ரெக்டின் கவிதைகளும் ஹைக்கூவைப்[1] போலவும் டங்காவைப்[2] போலவும், சுருக்கமும் சித்திரத் தன்மையும் பெற்றன. அதற்கு எடுத்துக்கட்டாக அவர் எழுதியுள்ள சிங்கக் கவிதை (To a Chinese Tea Root Lion) குறிப்பிடலாம்.
உன் நகத்தைக் கண்டு
அயோக்கியர்கள்
அச்சத்தால்
நடுங்குகின்றனர்
நல்லவர்கள்
பெருமிதமான
உன் அழகைக் கண்டு
வாயடைத்து நிற்கின்றனர்
என்கவிதையைப் பற்றியும்
இப்படிப் பிறர் பேசவேண்டும்
முதல் உலகப்போர் முடிவுற்றதும் ஜெர்மனி குழப்பத்தாலும். வறுமையாலும்,பொருளாதாரச் சீர் கேட்டாலும் நலிவுற்றது. எங்கும் பஞ்சம்! பட்டினி! போருக்குப் பின் வேலையற்ற கூலிப் பட்டாளத்தார் எங்கும் திரிந்து மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலைகளை நேரில்கண்ட ப்ரெக்ட் உள்ளம் உடைந்து நம்பிக்கையற்ற நிலையிலிருந்தார். மதத்தை வெறுத்து நாத்திகராக வாழ்ந்து கொண்டிருந்த ப்ரெக்டிற்குச் சரியான பற்றுக்கோடு எதுவும் கிடைக்கவில்லை. ரெம்போவைப் போல் குடிபோதைப் படகிலும், சுருட்டுப் புகையிலும் தம்மை மறந்திருக்க முயற்சி செய்தார். அந்தச் சூழ்நிலையில் (1927) ‘குடும்பத் தொழுகைப் பாடல்கள்’ (Domestic Breviary) என்ற முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அப்பாடல்களுக்குரிய இசைக் குறிப்பையும் நூலின் கடைசியில் வெளியிட்டிருந்தார். இந்நூல் இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தாலும், வசையையும் தேடிக் கொடுக்காமல் இருக்கவில்லை. அக்காலத்திய ஜெர்மானிய சமுதாயச் சீர் குலைவு அவருடைய உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம், உணர்ச்சிக் கொந்தளிப் போடும், ஆவேசத்தோடும் குத்தீட்டிக் கவிதைகளாக இதில் வெளியில் வநதன. இந்நூலைப் பற்றி ப்ரெக்ட் தாமே கீழ்க்கண்டவாறு விமர்சனம் செய்கிறார்.
“இந்த உணர்ச்சிப் புதையலின் நடுவே குழப்பமும் படிந்திருக்கிறது, இதன் தன்முனைப்பான வெளிப்பாடுகளின் நடுவில் குளறுபடிகளும் உண்டு. செழிப்பான இதன் பாடுபொருளின் நடுவில், ஒரு குறிக்கோளற்ற தன்மையும் உண்டு.”
தமது நூலைப்பற்றி ப்ரெக்ட் வெளிப்படுத்திய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் மேரி ஃபொராரின் சிசுக் கொலை” (The infanticide Marie Farrar) போன்ற உயர்ந்த கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இக்கவிதைகள் சாவைப்பற்றி அதிகமாகப் பேசுகின்றன. ‘சிலருக்குச் சாவுகூட இரக்கமின்றி மறுக்கப்படுகிறது’ என்ற கருத்தை ‘இறந்து போன போர் வீரன் கதை’ (Legend of The Dead Soldier) என்ற கவிதையில் உருக்கமாகப் பாடுகிறார். இக்கவிதை நாஜி அரசாங்கத்துக்கு எதிரானது என்று கருதப்பட்டு, அரசாங்கத் தேவைப்பட்டியலில் (Wanted list) ப்ரெக்டும் இடம் பெற்றார்.
ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொடுமையால் ஏற்பட்ட உள்ளக் குமுறலை ‘என் எதிர்காலச் சந்ததிக்கு (To Those Born Afterwards) என்ற கவிதையில் அழகான’ படிமத்தின் மூலமாகக் கீழ்க் கண்டவாறு சித்திரிக்கிறார்:
என்ன காலமிது!
மரங்கள்
அநீதிகளைத் தாங்கி
மௌனிப்பதால்
நாமும்
மரங்களைப் பற்றிப்
பேசுவது குற்றமாம்.
ப்ரெக்ட் மக்கள் கவி. வருந்தும் மக்களுக்கிடையில் தாமும் ஒருவராக இருந்து, அவர்களுடைய துன்பங்களை ஏற்று அனுபவித்து, அவர்களுக்காகவே எழுதவேண்டும் என்பதில் ப்ரெக்டுக்கு விருப்பம் அதிகம். அந்த ஏழை மக்களுள் ஒருவனாகத் தம்மைக் காட்டிக் கொள்வதிலும் அவர் தயங்கியதில்லை
நான் பெர்டோல்ட் ப்ரெக்ட்;
ஏழைகளின் நண்பன்.
ஏழைகள் அணியும்
டெர்பி குல்லாய்தான்
நானும் அணிகிறேன்.
நான் சொல்லுகிறேன்:
ஏழைகள் நாற்றம் பிடித்தவர்கள்
ஏன்! நானுந்தான்.
ப்ரெக்டின் படைப்பைப் பற்றி எல்லாரும் பொதுவான ஒரு குற்றச் சாட்டைக் கூறுவதுண்டு; அதாவது அவர் கவிதையில் பிரச்சார நெடி அதிகம் என்று. அது உண்மைதான். தமக்குச் சரி என்று பட்ட கருத்துக்களையும், கொள்கைகளையும் ஓய்வு ஒழிச்சல் இன்றி நாடகங்கள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் அவர் புற்றீசல் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் கூறிய கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்றும் விரும்பினார். நாஜிகளுக்கு அஞ்சி ப்ரெக்ட் ஜெர்மனியை விட்டு வெளியேறும் போது அவர் எழுதிய கவிதையொன்றில்
எனக்குக்-
கல்லறைக்கல்
தேவையில்லை
அப்படியொன்று-
எனக்குத் தேவையென்று
நீங்கள் விரும்பினால்
அதில்-
இப்படி எழுதவேண்டும்.
‘அவன் சில
கருத்துக்களை
எடுத்து வைத்தான்;
நாங்கள்
ஏற்றுக் கடைப்பிடித்தோம்.
ப்ரெக்ட் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மார்க்சீய வாதியாக விளங்கியவர். வறுமைக் காலத்திலும் அக்கொள்கை வழி வாழ்ந்தவர். என்றாலும் கிழக்கு ஜெர்மனியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஸ்டாலினிய சர்வாதிகாரம் ப்ரெக்டின் இறுதி வாழ்க்கையில் வெறுப்பையும் சலிப்பையும் தோற்றுவித்திருக்க வேண்டும். கடைசி நாட்களில் ஒரு மறுப்பியல்வாதி (Nihilist) போல் தம்மை ஒரு கவிதையில் காட்டிக் கொள்கிறார்.
வாலிபப் பருவத்திலும்
துன்பம்!
பின்னரும் துன்பம்!
எனக்கு-
மகிழ்ச்சி எப்போது?
விரைவில் கிடைக்கலாம்.
(காலம் மாறுசிறது)
◯
பாதையோரத்தில்
உட்கார்ந்திருக்கிறேன்
காலாகாட்டி
சக்கரத்தை
மாற்றிக் கொண்டிருக்கிறான்
எங்கிருந்து
நான் புறப்பட்டேன்?
எங்கு
போய்க் கொண்டிருக்கிறேன்?
எதைப்பற்றியும்
விருப்பமில்லை
பின் ஏன்-
அவன் சக்கரம் மாற்றுவதைப்
பதற்றத் தோடு
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?