புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/ரெய்னர் மேரியா ரில்க்

 இசை-
சிற்பங்களின் மூச்சு;
ஓவியங்களின் பேச்சு.





ரெய்னர் மேரியா ரில்க்
(1875–1926)


பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பால்கன் நாடுகளில் பிறந்த ஒருவன் தன்னை எந்த நாட்டுக்காரன் என்று சொல்லிக் கொள்ள முடியாதபடி, அங்கே படையெடுப்புக்களும், விரைந்த ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. கவிஞர் ரெய்னர் மேரியா ரில்க் பிராகுவில் பிறந்தவர்; பொகீமிய இனத்தைச் சார்ந்தவர்; ஆஸ்திரியக் குடிமகன்; ஜெர்மன்கவி.

தந்தை ஓய்வு பெற்ற ஆஸ்திரிய இராணுவ அதிகாரி; பெண் குழந்தை வேண்டும் என்று விருப்பத்தோடு காத்திருந்த தாய்க்கு, ரில்க் ஆணாகப் பிறந்தது பெருத்த ஏமாற்றம்: ஏனவே ரில்க்கை ஒரு பெண்ணைப் போல வளர்த்தாள் ‘ரெனி’ என்று பெயர் சூட்டி. பெண்ணுடையும் சுருள் முடியும் அணிவித்து, பொம்மைச் சமையலறையொன்று விளையாடக் கொடுத்து வளர்த்தாள். பொருள்களையும் இருக்கைகளையும் துடைத்து தூய்மையாக வைத்திருப்பது எப்படியென்றும், வீட்டு வேலைகளில் தாய்க்கு எப்படி உதவுவது என்றும் கற்றுக் கொடுத்தாள்.

அடிக்கடி நோய்வாய்ப்படும் அவரது இளமை இராணுவப் பள்ளியிலும், வணிகக் கல்லூரியிலும் கழிந்தது. பிராகு பல்கலைக்கழகத்திலும் இரண்டாண்டுகள் சட்டக் கல்வி பயின்றார். கொஞ்சநாள் வழக்குரைஞராக இருந்த தன் உறவினரிடம் பணிபுரிந்தார். கடைசியில் இலக்கியப் பணியே தனக்கு ஏற்ற பணியென்று முடிவு செய்தார்.

பெற்றோர்களின் மணவிலக்கும், இராணுவப்பள்ளி அனுபவங்களும் ஆவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தின. தமது படுக்கையில் அமர்ந்து சாவை வேண்டி இறைவனிடம் அவர் மன்றாடிய நேரங்கள் உண்டு.

1899-1900 ஆம் ஆண்டுகளில் ரில்க் லோ ஆண்ட்ரியல் சலோமி என்ற பெண்ணுடன் ருசியப்பயணம் மேற்கொண்டார். அங்கே எழுத்தாளரும் தத்துவஞானியுமான லியோ டால்ஸ்டாயைச் சந்தித்தார். பின்னர் பெர்லின் திரும்பியதும் ருசிய நாட்டு வரலாற்றையும், அந்நாட்டின் கலை இலக்கியங்களையும் விரும்பிப் பயின்றார். ரில்க், பிரான்ஸ், ஸ்காண்டி நேவியா, இத்தாலி, ஸ்பெயின், வடஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், ருசியப்பயணம் அவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும் விளங்கியது; தான் தரிசித்த முதல் புனித பூமியாக அதைக் கருதினார். ருசியப் பயணத்தின் விளைவாகத் தோன்றிய கவிதைகளில் ருசிய நாட்டைத் தனது ஆன்மீகப் பெருவெளியாக அதிசயங்கள் மிக்க கற்பனை உலகமாக-வருணிக்கிறார். 1900-இல் அவர் எழுதி வெளியிட்ட ‘கடவுளின் கதைகள்’ (Stories of god) என்ற நூல் அவர் உள்ளத்தில் ஆட்சி செய்த கற்பனை ருசியாவை மிக உயர்வாக உருவகப்படுத்துகிறது.

1902-இல் புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ரோடினின் செயலாளராகச் சேர்ந்து இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் பாரிசில் பத்தாண்டுகள் தங்கியிருந்து தம் இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். 1915-ஆம் ஆண்டில் இராணுவப் பணிக்காக அழைக்கப்பட்டு வியன்னா சென்றார். இராணுவத்தின் கடுமையான நடைமுறைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய் வாய்ப்பட்டார். அவருடைய மோசமான உடல் நிலை காரணமாக இராணுவத்தில் அவருக்கு எழுத்தர் பணி வழங்கப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளில் அப்பணியிலிருந்தும் விடுதலைபெற்று ம்யூனிச் சென்று தங்கினார். தமது கடைசி நாட்களை ஸ்விட்சர்லாந்தில் கழித்தார்.

ஷெல்லியும் பைரனும் கவிஞர்களுள் மிகவும் அழகானவர்கள்; டபிள்யூ எச். ஆடன் கவிஞர்களுள் மிகவும் அழகற்றவர்: அளவற்ற குடியால் சீர்குலைந்து, தோல் சுருங்கி, ஒட்டுக் கந்தலாக அவர் முகம் காட்சியளிக்கும். ரில்க்கின் சமகாலத்து எழுத்தாளர் ஒருவர் ரில்க்கின் தோற்றத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, 'அடிக்கடி மீசையைச் சுண்டும், சுண்டெலி போல் காட்சியளிக்கிறார், என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

மீசையோடும், இனிய உறுதியான முகத்தோடும், மெவித்த தாடையோடும் எதிர்ப்பட்டதைக் கிரகிக்கும் ஒளி பொருந்திய கூர்த்த விழிகளோடும், மெல்லிய நீளமான அழகிய விரல்களோடும் ரில்க் படத்தில் காட்சியளிக்கிறார். அவர் சிரிப்பை விரும்பாதவர்; ஜெர்மானியக் கண்டிப்போடு கூடிய மெய்விளக்க வாதி; படித்த இளைஞர்களோடும் பண்பட்ட இளங் கலைஞர்களோடும் நீண்டநாள் கலந்துரையாடிக் கவிஞனின் குறிக்கோள்களைக் கற்றுணர்ந்தவர்.

ஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை; ரில்க், தன்னைத்தானே அழித்துக் கொள்ளப்புறப்பட்ட ஐரோப்பியப் போர் வெறியின் எதிர்ப்புணர்ச்சி பெற்றெடுத்த குழந்தை.

சிற்பியிலிருந்து சீமாட்டிவரை ரில்க்கின் வாழ்க்கையில் பல பெண்கள் குறிக்கிட்டனர். அவர்களிடம் ரில்க் கொண்ட காதலுறவும் சுவையானது; புதிரானது. ரில்க்கின் முதற் காதல் 1897-இல் வேலரி டேவிட் ரோன்ஃபீல்ட் என்ற பெண்ணிடம் துவக்கவிழாக் கொண்டது. அவரது முதல் கவிதை நூலுக்கு அவள் ஊக்கச் சக்தியாக விளங்கியதோடு அந்த நூலை வெளியிடும் பொருட்செலவையும் அவளே ஏற்றாள். ‘வல்லி’ என்று தன் குறிப்புகளில் வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார் ரில்க். ஆனால் அவள் உறவு குறுகிய காலத்தில் முறிந்தது.

அடுத்து ரில்க்கைக் கவர்ந்தவள் ‘லோ சலோமி’. அவள் அதிர்ச்சிதரும் அழகுத் தேவதை. இருபது வயதில் ஜெர்மானியத் தத்துவஞானி நீட்சேயைத் தன் அழகின் முன் மண்டியிடச் செய்தவள். ரில்க்கைச் சந்தித்த போது அவளுக்கு வயது முப்பத்தைந்து; திருமணமானவள். ரில்க் அப்போது இருபத்து மூன்று வயதுக் கட்டிளங்காளை. என்றாலும் தனது அனுபவக்கரங்களாலும் அமுத மொழிகளாலும் ரில்க்கை அரவணைத்துத் தாலாட்டினாள். கண்டதும் காதல்! விரைவில் அவர்கள் பிரிந்தாலும், காதல் தொடர்பு அற்றுப் போகவில்லை; வாழ்க்கையின் இறுதிவரை நீடித்தது. லோ சலோமி ரில்க்கின் உள்ளத்துக்கு நெருக்கமானவளாகவும் உணர்ச்சிப் பரிமாற்றங்களுக்கு ஏற்றவளாகவும், ஆதர்ச நங்கையாகவும் எப்போதும் விளங்கினாள்.

அவர் நெருங்கிப் பழகிய பெண்களுள் டிரிஸ்டி நகருக்கருகில் இருந்த டியூனோ கோட்டை இளவரசி ‘மேரிவான்தான்’ குறிப்பிடத்தக்கவள். அவளுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் கட்டுப்பட்டு ஆண்டுக் கணக்காக அவளுடைய கோட்டையில் தங்கியிருந்தார் ரில்க். புகழ்பெற்ற ‘டியூனோ இரங்கற்பா’ (Duing Elegies) தோன்றக் காரணமாக இருந்த நங்கையும் இவளே

ருசியப் பயணம் முடிந்து ஜெர்மன் திரும்பியதும். சில்க் ‘வொர்ப்ஸ்வீட்’ என்ற சிற்றூருக்குச் சென்றார். அங்கே ‘கிளேரா வெஸ்ட்ஹாஃப்’ என்ற இளஞ் சிற்பியைச்சந்தித்தார். அவள் புகழ் பெற்ற சிற்பி ரோடினுடைய மாணவி. இருவரும் காதலித்து 1901-இல் திருமண்ம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ‘ரூத்’ என்று குழந்தையும் பிறந்தது. குடும்பு வாழ்க்கை என்னும் கட்டுத்தறியில் ரில்க் நிலையாகத் தங்கும் பழக்கமில்லை. அவர் எம்போதும் பயணம் செய்து கொண்டே இருப்பார். அவர் மேய்ச்சல் தரை பெரியது.

காதலைப்பற்றி ரில்க் கொண்டிருந்த கருத்து புதுமையானது. முழுமை பெறாததும், கைம்மாறு கருதாததும் தான் உன்னதமான காதல் என்பது ரில்க்கின் கருத்து. ‘ஒரு பெண்ணின் தோள்மீது கைவைத்த அளவிலேயே, என்னுடைய காதலின் முழுமையான உணர்ச்சியைத்தெளிவாக அவளுக்கு உணர்த்த முடியும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். ரில்க்கின் உண்மையான ஆர்வலர்கள் எல்லாரும் பெண்களே. அவர்கள் அவரை நன்கு புரிந்திருந்தார்கள்; அவரிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவரிடம் பழகியபோது தங்கள் காதல் நிறைவேறிய உள்ள நிறைவு அவர்களுக்கு ஏற்பட்டது.

புனைவியக் கவிஞராக அரும்பி, அழகியக் கவிஞராக மலர்ந்து இருப்பியக் கவிஞராக மணம் பரப்பி, பதிப்பியக் கவிஞராகக் காய்த்து இறுதியில் தமது சொந்த உள்ளுணர்வுகளுக்கும் அகக் காட்சிகளுக்கும் கருத்து வடிவம் கொடுக்கும் சங்கேதக் கவிஞராகக் கனிந்து விளங்கினார்.

சிதறிக் கிடக்கும் சிறுகவிதைகள் நிறைய எழுதிக் குவித்திருந்தாலும், ரில்க்கிற்கு அழியாப் புகழைச் சேர்க்கும் கவிதைத் தொகுதிகளாக மூன்றைக் குறிப்பிடலாம். அவை ‘மால்டே லாரிட்ஸ் பிரிக்கின் குறிப்புகள்’ (The Note books of Malte Lawrids Brigge) ‘டியூனோ இரங்கற்பாக்கள்’ Duino Eeegies ‘ஆர்ஃபிசை நோக்கி எழுதிய ஈரேழ்வரிக் கவிதைகள்’ (Sonnets To Orpheus) என்பன. இவை நிகழ் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய முன்னோடிக் கவிதைகள்.

மால்டே லாரிட்ஸ் பிரிக், ரில்க்கின் பண்புகளை அப்படியே உள் வாங்கிக் கொண்ட கற்பனைப் பாத்திரம். மேலும் போதலேரின் உருவாக்கத்தையும் இப்பாத்திரப் படைப்பில் காணலாம். இக்குறிப்புகளில் அடங்கியுள்ள கட்டற்ற கவிதைகள் ரில்க்கின் படைப்பாற்றலுக்குச் சவாலாக விளங்குகின்றன. குழந்தைப் பருவத்தைப் பற்றியும், குறிக்கோள் இல்லாத காதலைப் பற்றியும், சாவைப் பற்றியும், துறவிபோல் நடிக்கும் பெண்களைப் பற்றியும் ரில்க் நூதனமாக கருத்துக்களை மால்டே குறிப்புக்களில் வெளியிட்டிருக்கிறார்

இக்குறிப்புகளுள் ‘முகங்கள்’ என்ற பகுதியில், ஒவ்வொரு மனிதனும் பல முகங்களைப் பெற்றிருப்பதாகவும், ஒரு சமயத்தில் ஒன்றை மட்டும் அவன் அணிந்து கொண்டு மற்றவற்றை இருப்பில் வைத்திருப்பதாகவும் சிலர் அடிக்கடியும் அவசியம் ஏற்படும் போதும் தமது முகங்களை மாற்றிக் கொள்வதாகவும் சுவைடக் கூறியுள்ளார். பாரிஸ் நகரில் நாட்டர்டாம் தெருமுனையில், தனது முகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணைச் சந்தித்ததாக ஒரு மிகைக்கற்பனையை சில்க் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

தெரு வெறிச்சோடிப்போய் அமைதியாக இருந்தது; அந்த வெறுமை எனக்குச் சலிப்பாக இருந்தது; சோர்வோடு அத்தெருவெங்கும் சுற்றித் திரிந்தேன். என் கால்கள் மரக்கட்டைகளாகக் கனத்தன, ஒரு பெண் தன் கைகளை முகத்துக்குத் தாங்கலாக வைத்துக் குனிந்து கொண்டிருந்தாள்: என்னைக் கண்டதும் திடுக்கிட்டு வெடுக்கென நிமிர்ந்தாள், அப்போது அவள் முகம் கையோடு வந்து விட்டது, அவள் கையில் கிடந்த உட்கவிந்த வெற்று முகத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதைவிட அது பெயர்த்து எடுக்கப்பட்ட இடம், முகம் இல்லாமல் காத்திருப்பதைக் காண அஞ்சினேன்.”

மேலே குறிப்பிடுவது போன்ற காட்சிகளை அடிமனக் கோட்பாட்டு ஓவியர்களின் படைப்பில்தான் காண முடியும். ஓவியர், ரோடினிடம் சிலகாலம் செயலாளராக இருந்திருந்தாலும், இதுபோன்ற ஓவியங்களைப் பார்த்திருக்க முடியாது. காரணம், ரோடின் செவ்விய ஓவியர் (Classicist). கிரேக்கத் தெய்வமான அப்போலோவின் சிலையைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ரில்க் பாடிய கவிதை யொன்றில்,

இது-
உன்னைப் பார்க்க விரும்பாத இடம்.
உனக்கு இங்கே இடமில்லை;
நீ உன்னை மாற்றிக் கொள்.

என்ற வரிகள் காணப்படுகின்றன. ரில்க்கின் இந்த வரிகளை இலக்கிய வாதிகள் அடிக்கடி மேற்கோளாக எடுத்தாள்வதுண்டு. இந்த வரிகளின் கருத்துக்களே மேலே குறிப்பிட்ட மிகைக் கற்பனையாக விளக்கம் பெறுகின்றன. டியூனோ கோட்டையில் ஒரு நாள் தனிமையில் அமர்ந்திருந்த போது, தம் உள்ளத்தில் நிகழ்த்த கவிதை ஆவேசத்தைக் கீழ்க் கண்டவாறு படர்க்கையில் பதிவு செய்கிறார் ரில்க்.

“இனம் புரியாதொன்று அவனிடம் அன்று நிகழ்ந்தது.வழக்கம் போல் ஒரு புத்தகத்தைக் கையிலேந்திய வண்ணம் அங்கு மிங்குமாக நடந்த கொண்டிருந்த அவன், கவையாகப் பிரிந்திருந்த மரக்கிளை. யொன்றில் வசதியாக அமர்ந்து கொண்டான். மிகவும் ஓய்வாக அமர்ந்த நிலையில் கையிலிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டுச்சுற்றியிருந்த அமைதியான, அழகிய இயற்கைச் சூழ்நிலையில் தன்னை மறந்து மூழ்கினான். இதற்கு முன் அனுபவித்திராத ஓர் உணர்ச்சி வெள்ளம் அவனுள் அலையாகப் பரவுவதை உணர்ந்தான், அவன் அமர்ந்திருந்த மரத்தின் நடுவிலிருந்து அவ்வுணர்ச்சி மெல்லிய அதிர்வுகளாக அவனுள் இறங்கியது. இதுபோன்ற இன்ப அதிர்ச்சியை அவன் என்றும் அனுபவித்ததில்லை. அவன் உடம்பே ஆன்மாவாக மாறி, இயல்பான தன் செயல்களை மறந்து, ஏதோ ஒரு பேராற்றலைத் தன்னுள் ஏற்றுக் கொண்டது போலிருந்தது, அதுவுமன்றி எளிதில் புலப்படாத இயற்கையின் மறுபுறத்தைக் கண்டதுபோலவும் இருந்தது.”

ரில்க் டியூனோ கோட்டையில் இருந்தபோது தம்மை யாரோ அழைப்பதைப்போன்று உணர்ந்தார். ‘நான் கூவியழைத்தால், தேவதைகளின் கூட்டத்தில் கேட்பவர் யார்?’ என்று அக்குரல் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தது. அந்த அடியே டியூனோ இரங்கற்பாவின் துவக்கமாக அமைந்தது.

டியூனோ இரங்கற்பாக்களை ரில்க் 1912- ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். ஆனால் அவற்றை 1923 வரை முடிக்கவில்லை. அதற்குப் பலகாரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1912-ஆம் ஆண்டில் அவருடைய கருத்துக்களையும், கவிதைப்பாணியையும் தீவிரமாகப் பாதிக்கும் அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. உவமைகள் மூலம் கருத்து விளக்கம் செய்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு, கருத்தையும் கருத்து விளக்கத்தையும் ஒன்றாகப் புரிந்து கொள்ளும் உருவக உத்திக்கு மாறிக்கொண்டிருந்தரர்; இது முதற் காரணம். அவருள்ளத்தில் பதித்த உணர்வுகள் கருத்துருவம் பெற நீண்ட சிந்தனை தேவைப்பட்டது: இது இரண்டாவது காரணம். மேலும், இவ்விரங்கற்பாக்களை எழுதும் போது உணர்ச்சி பூர்வமான இலக்கியத் தூண்டுதல் தேவைப்பட்டது. அத்துண்டுதலைச் செயற்கையாகப் பெறமுடியாது; இது மூன்றாவது காரணம்.

இவ்விரங்கற்பாக்கள் ரில்க்கின் அபூர்வப் படைப்பாற்றலுக்குச் சான்றாக உள்ளன. இப்பாக்களும் படிப்போரை மயக்கவைக்கும் மறைபொருள்களை உள்ளடக்கியிருக்கின்றன. இதுவே இப்பாக்களின் வலிமையும், தொய்மையும் ஆகும். ஆங்கிலக் கவிதையுலகில், டபிள்யூ. பி. யேட்சும், டி. எஸ். எலியட்டும் வகிக்கும் இடத்தை ஜெர்மானியக் கவிதை உலகில் ரில்க் வகிக்கிறார். டி. எஸ். எலியட் எழுதியுள்ள 'பாழ்நிலத்திற்கு' ஒப்பாக ரில்க்கின் ‘டியூனோ இசங்கற்பாக்களை’, இலக்கியவாதிகள் மதிக்கின்றனர்.

டியூனோ இரங்கற்பாக்களின் வெற்றிக்கு ரில்க் பயன்படுத்தியிருக்கும் கட்டற்ற கவிதையாப்பே காரணம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு யாப்பு முறையைப் பயன்படுத்தியிருந்தால், ரில்க்கிற்குத் தேவைப்பட்ட நிகழ்ச்சி கிடைக்காமல் போயிருக்கும். ரில்க் இவற்றுள் பயன்படுத்தியிருக்கும் மூவசைச் சீர்கள், கட்டற்ற கவிதை யாப்பில் வழக்கமாகக் காணப்படும் சந்தத் தடைகளைப் போக்கிவிட்டன.

டியூனோ இரங்கற்பாக்களின் தனிப்பாவையோ, அதன் பகுதியையோ தம்மைத் தவிர வேறு யாரும் பதிப்பிக்கக் கூடாது என்று ரில்க் அறிவித்திருந்தார். இரங்கற்பா முழுவதையும் வேறு ஒருவர் பதிப்பிக்கவும் முடியாது. பதிப்பிக்கக் கூடிய கவிதை அமைப்பிலும் அவை இல்லை.

ஆர்ஃபிசை நோக்கி எழுதப்பட்ட ஈரேழ்வரிப் பாக்கள் மொத்தம் ஐம்பத்தைந்து. இவை அற்புதங்கள் நிகழ்த்திய கிரேக்கப்பாடகனாக ஆர்ஃபிசின் ஆற்றலோடு எழுதப்பட்டவை. ஆர்ஃபிசின் வாழ்க்கையில் கேட்போரை மயங்க வைக்கும் அற்புதங்கள் இருப்பது போல, இந்தப் பாக்களிலும் படிப்போரை மயங்க வைக்கும் மறை பொருள்கள் நிறைய உண்டு.

"இப்பாக்கள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை; இவற்றை ‘அறிந்து கொள்ளுதல்’ என்பதைவிட ‘உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே’ படிப்போரால் இயலும்” என்று ரில்க்கே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு ரெம்போவின் கவிதைகளுக்கும், அவற்றையொட்டிப் பின்னால் தோன்றிய கவிதைகளுக்கும் பொருந்தும் என்றாலும், இப்பாக்களில் கையாளப்பட்டுள்ள உத்திகள் ரில்க் கைப்பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

கிரேக்க இலக்கியங்கள் மீதும் கலைகளின் மீதும் ரில்க்கிற்கு நிறைய ஈடுபாடு உண்டு. கிரேக்கப் பாடகனான ஆர்ஃபிசின் இசையாற்றல், அவன் மனைவி யூரிடிஸின் இறப்பு, அவளை மீட்க அவன் இறப்புலகம் சென்று மீளுதல், கடைசியில் அம் முயற்சியில் ஏற்பட்ட அவலம் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாகக் கற்பனைநயத்தோடு இப்பாக்களில் பேசப்படுகின்றன. இவை கிரேக்கத் தெய்வத்தை நோக்கிப் பாடப்பட்டதாக அமைந்திருந்தாலும், உண்மையாக மக்களை நோக்கிப் பாடப்பட்டவை. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புக்களை எப்படித் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றை எப்படி மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் மறை பொருளாகப் பாடுகிறார் ரில்க்.

ரில்க் இசையை மிகவும் விரும்பினார். ஆர்ஃபிசின் யாழும். அவன் இசையும் ரில்க்கின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டன. ‘இசையே உலகம்; இசையே வாழ்க்கை. உலகின் எல்லாக் கலைகளும் இசையின் மாற்று வடிவங்களே’ என்பது ரில்க்கின் கருத்து. இசையைப் பற்றித் தம் கவிதையில் ஓரிடத்தில் குறிப்பிடும்போது,

இசை-
சிற்பங்களின் மூச்சு
ஓவியங்களின் பேச்சு
இதயத்தின் வெளிவளர்ச்சி:

பேச்சு மௌனித்து
அவலப் பாதையில்
செல்லும் போது
இடையில் எழும்
செங்குத்துச் சுவர்,

இது-
உணர்வுகளை
ஓசை நிலமாக ஆக்குவது.

[துண்டுப் பாடல்-
டியூனோ இரங்கற்பா]

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்கள் அல்லாமல் ‘புதுக் கவிதைகள்’ (The New Poems) என்ற நூலையும் ரில்க்கின் படைப்புகளுள் முக்கியமான ஒன்றாகக் குறிப்பிட வேண்டும். இதில் உள்ள கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக முறையே 1907, 1908 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. சிறுத்தை (The Panther) பியானோ பயிற்சி (Piano Practice), லீடா (Leda) வெனிசில் காலங் கடந்த இலையுதிர்க் காலம் (Late Autumn In Venice), ஸ்பானிய நடனமங்கை (Spanish Dancer) ஊதாரிப் பிள்ளையின் புறப்பாடு ( The Departure of The Prodigal Son) என்ற புகழ் பெற்ற கவிதைகள் இத்தொகுப்புக்களிலேயே உள்ளன. முதலில் குறிப்பிட்ட கவிதைகளுக்கும், இந்தப் புதுக் கவிதைகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடுண்டு. இக்கவிதைகளில் பார்ப்பவரின் உள்ள உணர்வுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், பார்க்கப்படும் பொருளின் தோற்றம், தன்மைப் பற்றியே ரில்க் அதிகமாகச் சிந்திக்கிறார்.

ரில்க்கின் கவிதைகளைக் கூர்ந்து கவனித்தால், அவருடைய படிப்படியான வளர்ச்சியும், அவர் எப்படிப் பட்டவர் என்பதும் புலனாகும். ரில்க் இளமையிலிருந்தே தனிமை விருப்பமுள்ளவர்; எதையும் கூர்ந்து பார்க்கும் பழக்கம் உடையவர்; மால்டே லாரிட்ஸ் பிரிக் குறிப்புகளில் ‘தன் முனைப்புமிக்க மனிதர்’ (obstinate man) ஒருவரைப் பற்றிய குறிப்பு ஓரிடத்தில் வருகிறது. அம்மனிதர் நாடக ஆசிரியர் இப்சன் என்றும், ஓவியர் ரோடின் என்றும் ஆய்வாளர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றனர். அந்த மனிதரிடமிருந்தே ‘தீவிரமாகக் கூர்ந்துபார்’ என்ற பாடத்தைத் தாம்கற்றுக் கொண்டதாக எழுதுகிறார் ரில்க்.

சிற்பி ரோடின் மிகவும் கண்டிப்பானவர்: யாரிடமும் எளிதில் ஒத்துப்போகாதவர். அவரிடத்தில் செயலாளராகப் பணியாற்றிய ரில்க்‘ அவரிடமிருந்து தம் உள்ளொளியால் ஒரு கவிதைப்பாணியைக் கற்றுணர்ந்தார். அக்கவிதைக்குக் கருப் பொருள் கிடையாது. கவிஞன் ஆழ்ந்த தனிமையில் இருக்கும் போது, அது தனக்குரிய கருவைத் தானே படைத்து வெட்ட வெளியில் எடுத்து நிறுத்த வேண்டும். அதைக் கருக்கவிதை (Poems of Things) என்று ரில்க் குறிப்பிடுகிறார். டபிள்யூ. எச். ஆடன் அதைப் பற்றிக் குறிப்பிடும்போது.

வாழ்க ரில்க்கின் கருக்கவிதை
அது தனிமையின் சாந்தா க்ளாஸ்![1]

என்று பாராட்டுகிறார்.

ரில்க்கின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ரில்க் தமது நேரங்களைப் பொருட்காட்சிச் சாலைகளிலும், நூலகங்களிலும் பூங்காக்களிலும் கழிப்பார். இரவு நேரங்களில் வீதிகளிலும், மந்தை வெளிகளிலும், சீன் நதிப் பாலத்தின் மீதும் தனிமையில் சிந்தனையோடு சுற்றித் திரிவார்” என்று கூறுகிறார்.

தனிமை ரில்க்கிற்குப் பிரியமான ஒன்று. தனிமையை அவர் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதைப் போற்றிச் சுவைத்தார்; மாதாகோவில் தொழுகையின்போது அமைதியாக எழுப்பப்படும் இனிய இசையாக அதைக் கருதினார். தனிமை தன்னை வாட்டுவதாக இளங்கவிஞர் ஒருவர் ரில்க்கிற்கு எழுதிய போது, தனிமை- உள்ளார்ந்த பரந்த தனிமைதான் கவிஞனுக்கு வேண்டும். நமக்குள்ளேயே நாம், நீண்டநேரம் ஒருவரையும் எதிர்ப்படாமல் தனிமையில் நடக்க வேண்டும். அதுதான் நாம் அடைய வேண்டிய இன்பத்தின் எல்லை. தனிமை, குழந்தையின் தனிமையைப் போல் இருக்க வேண்டும். குழந்தை, தனக்குள்ளிருந்து வெளியுலுதைப் பார்ப்பது போல், கவிஞன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, தனிமையின் உதவியோடு வெளியுலகைப் பார்க்க வேண்டும். அது தான் கவிஞனின் பணி, தரம், தொழில்” என்று அவனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

எவன் உறுதியாக நடுவில் நிலைத்திருக்கிறானோ, அவனே வீரன்’ என்ற எமர்சனின் பொன்மொழி ரில்க்கிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ரில்க் ஓயாமல் உழைத்தார். துன்பத்துக்கு இலக்கான தம் தொடக்க நிலையிலிருந்து, படைப்பாற்றலை இடைவிடாது வெளிப்படுத்தும் தேவதையாகத் தம்மை உயர்த்திக் கொண்டார்.

அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறித்துவ சமயத்தைச்சார்ந்தவராக இருந்தாலும், தாம் எழுதியுள்ள ‘கிறிஸ்துவின் அகக் காட்சிகள்’ (Vision of Christ) என்ற நூலில், இயேசுவை ஒரு ஞானியாக ஏற்றுக் கொள்கிறாரே தவிர அவதார புருஷராக ஏற்றுக் கொள்ளவில்லை. 1898-இல் டஸ்கனி நகரைப்பார்த்து விட்டுத் திரும்பியவுடன் தமது குறிப்புக்களில் ஒரு கருத்தைத் தெரியப்படுத்துகிறார். அதில் தம் உள்ளத்தில் நிலைபேறு கொண்டு தம்மை நடத்திச் செல்லும் ஓரு பேராற்றலைத் தாம் உணர்வதாகவும், அதைத்தவிர வேறு தெய்வம், எதுவும் இருப்பதாகத்தாம் நம்பவில்லை என்றும் குறிப்பிடுகிறார். வெளியில் காணப்படும் மரங்கள், மலைகள், மேகங்கள்; அலைகள் யாவும் தாம் உள்ளத்தில் காணும் உண்மைகளின் குறியீடுகளே என்றும் குறிப்பிடுகிறார். ஒழுக்கக் கேடான நவநாகரிக சமுதாயத்தையும், கோவிலுக்கு வாரந்தோறும் செல்லும் சராசரி பக்தனின் ஆரவாரத்தையும், வசதிக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்ட சமயத்தின் (Ready-made religion) வெறுமையையும் பற்றிக் குறிப்பிட வந்த ரில்க் “ஞாயிற்றுக்கிழமை அஞ்சலகங்களைப் போலத் தூய்மையாகவும், மூடியும், ஏமாற்றம் தருவதாகவும் உள்ளது” என்று உள்ளம் நைந்து குறிப்பிடுகின்றார்.

தமது சிறுத்தைப் பாட்டில் ‘மையத்தைச் சுற்றி நடனமிடும் பேராற்றல்’ (The dance of forces round a centre) என்ற ஒரு கருத்தைக் குறிப்பிடுகின்றார். அப்பேராற்றல் நடம் புரியும் மையம் தமது இதயமே என்பது அவர் கருத்து அந்த மையம் தமது இதயத்தில் நீங்காமல் இடம் பெறவேண்டு மென்றால், அது தம் அகக் காட்சிகளைப் புறக் காட்சிகளாக இடையறாமல் மாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமது நெருங்கிய தோழியான லோ சலோமிக்கு எழுதிய கடிதத்தில் “நான் கலையை வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை; எப்படியும் அவையிரண்டிற்கும் பொருள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். துவக்க காலத்தில் கலை, வாழ்க்கை ஆகிய இரண்டின் எல்லைகளை வரையறுத்து, வாழ்க்கை அனுபவங்கள் மூலமாகக் கலையை வளப்படுத்தினார் ரில்க். தமது தோழியும் இளம் ஒவியருமான. பவ்லா மோதர் ஷோன் பெக்கர்’ என்பவர் பேறு காலத்தில் உயிர் துறந்தபோதும், தம்மைப் போல் கவிதையாற்றலும் சிந்தனை வளமும் மிக்க ‘கெளண்ட் வுல்ப்கிராஃப் வர்ன்க்ல்க்ரீத்’ என்ற இளங்கவிஞர் தற்கொலை செய்து கொண்ட போதும் அப்பேரிடிகளை ரில்க்கால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சாவுக்காக இறங்கி எழுதப்பட்ட இசைப் பாடல்களில் இரங்கலையும் புகழ்ச்சியையும் ஒன்று படுத்தியிருப்பதோடு, வாழ்வையும் சாவையும் ஆர்பிச நோக்கில் இணைத்து முடித்திருக்கிறார். “யார் வெற்றியைப்பற்றிப்பேசுகிறார்கள்? எதையும் தாங்கும் இதயமே வாழ்க்கை” என்று கூறிப் பெரு மூச்சு விடுகிறார் ரில்க்.

பொதுவாகக் கவிஞர்கள் உலகில் உள்ள பருப் பொருள்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அதற்கேற்ப உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் ரில்க்கின் கவிதையாற்றல் அதற்கு நேர்மாறானது. அவரது ஆன்மீக உள்ளம் எப்போதும் அக்க் காட்சிகளிலேயே ஈடுபட்டிருக்கும். குறிப்பாக உலகத் துன்பங்களால் பாதிக்கப்பட்டு வருந்திக் கலையிடம் அடைக்கலம் புகும்போது அவருள்ளத்தில் அகக் காட்சிகள் நிறையத் தோன்றும் அக்காட்சிகள் வெளிப்படுத்தும் உள்ளுணர்வுகளுக்கு ஒப்பான புறக் காட்சிகளை வெளியுலகில் தேடுவார். பிறகு இர்ண்டையும் பிரிக்க முடியாதபடி ஒன்று படுத்துவார். புறவுலகில் காணப்படும் அசையாப் பொருள்கள் கூட, அவருள்ளத் துணர்ச்சிகளோடு உறவாடும் உயிரினங்களாகத் தென்படுகின்றன.

வீடு பாத்திரம் ஓடை கதவு
பலகணி பாலம் பழமரம் என்று
வெறுமையாய்க் குறிப்பிடுகிறோம்
நான் கூறுகிறேன
புரிந்து கொள்ளுங்கள்.
இப் பொருள்கள்
எனக்கு-
எவ்வளவு நெருக்கமானவை என்று
அவைகளே நினைத்திருக்க முடியாது.

[டியூனோ இரங்கற்பா]

‘கவிஞன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில், தமது அகக் காட்சிகள் புலப்படுத்திய நுண்ணுணர்வுகளை ஆர்ஃபிசோடு தொடர்புபடுத்தி கனவு போல் சித்தரிக்கிறார் ரில்க்.

கடவுள் ஆற்றல்மிக்கவர்
சாதாரண மனிதன்
தெய்வீக யாழிசையைத்
தொடர்ந்து வர முடியுமா?

அவன் அறிவு
குழம்பிப் போயிருக்கிறது.
மேலும்-
இதயப் பாதையின் குறுக்கே
அப்போலோவின்
கோவில் கிடையாது
பாடுதல்
ஒரு விருப்பமோ
அல்லது
எளிதில் கிட்டும்
காதற் சந்திப்போ அன்று.

பாடுதல்-
கடவுளுக்கு எளிய செயல்
ஆனால் நமக்கு..?
மண்ணில் இருக்கும் நம்மை
அவன் எப்போது
விண்ணுக் குயர்த்துவான்?

இளைஞனே!
முதற் காதல்
பொங்கிக் கிளம்பும் போது
இதழ்க் கதவை உடைத்துக் கொண்டு
உணர்ச்சி
ஓசையுருவம் பெறுகிறதே!
அதுவன்று பாட்டு,

பாடுவதை
மறக்கக் கற்றுக் கொள்;
அது தேவையுமில்லை.
உண்மையான பாட்டுக்கு
ஒரு புது மாதிரியான
சுவாசம் தேவை.
ஓர் அமைதி!
ஒரு கடவுளின் சிலிர்ப்பு!
ஒரு மென் காற்று!

[ஆர்ஃபிசை நோக்கி]

1922 ஆம் ஆண்டில் மார்ஷல் ப்ரோஸ்ட் என்ற கவிஞன் இறந்தபோது அவனைப் பற்றி ரில்க் கீழ்க்கண்டவாறு தம் கடிதத்தில் குறிப்பிட்டெழுதியுள்ளார்:

“இவன் பயன்படுத்திய கவிதை உத்தி மிகச்செம்மையானது. இது எந்தக்குறிப்பிட்ட பொருளிலும் ஊன்றி நிற்பதில்லை. இது விளையாட்டாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஈடற்ற துல்லியத்தோடு, புதிய புதிர்களை மேன்மேலும் தோற்றுவித்த வண்ணம் அங்குமிங்கும்

ஒட்டிக்கொண்டு ஊசலாடும்.”

மார்ஷல் ப்ரோஸ்டைப்பற்றி ரில்க் கூறிய கருத்துக்கள் அவருக்கும் பொருந்தும். ரில்க்கின் கவிதை சுவைத்துப் படிப்பதற்கேற்றது. அதைப்பின்பற்றி யாரும் எழுதவும் முடியாது; அதை மொழிபெயர்க்கவும் முடியாது. துண்டு துண்டாகக் காணப்படும் அவருடைய கவிதையின் உறுப்புக்கள், புதிய இளமை குன்றாத பேச்சு விதையிலிருந்து பெறப்பட்டவை. மூலமானதும், உயிர்த்துடிப்பானதுமான இப்புதிர் மொழியைப் புரிந்து கொள்ளக் கவிதையின் இயற் பொருளை ஊக்கத்தோடும் ஈடுபாட்டோடும் படிப்பவர்கள் அணுக வேண்டும்.

தனித்தன்மைமிக்க இந்த ஜெர்மானியக் கவிஞனின் தாக்கம், ஆங்கிலோ-அமெரிக்கக் கவிஞர்களான டபிள்யூ எச். ஆடன், சிட்னிகீஸ், ஆலன் லூயிஸ், எடித்சிட்வெல், எட்வின் மூர் ஆகியவர்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. ஜெர்மனியின் எல்லைக்கு வெளியிலே தமது கவிதையாதிக்கத்தை மிகுதியாகச் செலுத்தியவரும், கெதேவுக்கு அடுத்தநிலையில் வைத்துப் பேசத்தக்கவரும், ஜெர்மானியக் கவிஞர்களுள் ரில்க் கைத்தவிர வேறுயாருமில்லை.

ருசியக் கவிஞர்களான பாஸ்டர் நாக்கும் ஸ்வெட்டேவாவும் ரில்க்கின் ஆற்றலை வியந்து, அவரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு வழிபட்ட ‘அடியார்கள்’ என்று கூறலாம். மல்லார்மேயை விடக் குறைந்த தெளிவற்ற தன்மையும், வேலரியைவிட அதிக மனித நேயமும் ரில்க்கின் படைப்பில் காணப்படுவதாக ஆங்கிலக் கவிதை வாசகர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமிதமான படைப்பாற்றலைப் பொறுத்த வரை மகாகவி போதலேருக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க ஒரே ஐரோப்பியக் கவிஞன் ரில்க்தான் என்பதில் ஐயமில்லை.

ரில்க்கைப் பற்றி எதிர் மறையான கருத்தைச் சொன்னவன், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்க்சியக் கவிஞன்பெர்டோல்ட ப்ரெக்ட். ‘ரில்க்கின் கவிதைகள் சீரழிந்து போன நடுத்தர வர்க்கத்தின் பிதற்றல்கள்! எனக்கு அவற்றைப் பற்றிக் கவலையில்லை’ என்று சொன்னான்.

ரில்க் ஜெர்மனியின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர் என்றாலும், அவரிடத்திலும் சில குறைகளைத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவருடைய-

(1) சிறந்த படைப்புகள் புரிந்து கொள்ள முடியாதவை.

(2)சில படைப்புகள் - மெத்தப் படித்தவர்கள் மட்டுமே நெருங்கத்தக்க ஆழ்ந்த இலக்கிய துணுக்கம் பொருந்தியவை.

(3)சில சமயங்களில் அவர் பயன்படுத்தும் பொருத்தமில்லாத படிமங்கள் கவிதைச் சுவையைக் கெடுத்து விடுகின்றன.

(4) அவருடைய சிறந்த கவிதைகளில் சில (ஆர்ஃபிஸ் யூரிடிஸ் ஹெர்மிஸ்) செறிவும் சுருக்கமுமின்றிப் பழங்காலப் பாடல்களைப்போல் இருக்கின்றன.

ரில்க்கின் சாவும் கற்பனைச் சுவை பொருந்தியது. செடியிலிருந்து ஒரு ரோஜா மலரைக் கிள்ளிய போது, முள்குத்தி அவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி வழங்குகிறது. ‘டெட்டனஸ்’ என்ற இசிவு நோயைப் பற்றி அறியப்படாத தேதி அந்தக் காலத்தில் இச்செய்தி வியப்பிற்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஏற்கெனவே இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரில்க்கின் உடல் நிலை, முள் குத்தியதும் மேலும் மோசமாகி, அதுவே இசிவு நோய்க்குக் காரணமாகி, அதுவே சாவுக்கும் காரண மாகியிருக்கலாம்.


  1. கிறிஸ்துமஸ் பரிசுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டுவரும் கொழுத்த சிவப்புக் கிழவன்; இவனைக் கிறிஸ்துமஸ் தாத்தா என்றும் சொல்லுவர்
    அவன் அளவற்ற பரிசுகளைக் குழந்தைகளுக்கு வாரிக்கொடுப்பதுபோல், தனிமை ரிலிக்கிற்கு அழகான கருக்கவிதைகளை வாரி வழங்கியதாகப் பொருள் கொள்ள வேண்டும்,