புதியதோர் உலகு செய்வோம்/அவல் இடிக்கும் ஆயுதம்



19. அவல் இடிக்கும் ஆயுதம்

தமிழக ஆட்சி அரசியலில், மக்கள் அடியோடு மறக்கப்படும் அளவுக்கு, தலைபோகும் பிரச்சினைகள் அலையலையாக எழும்பிக் கொண்டிருக்கின்றன. கருவூலம் - கஜானா காலி என்று பானையைக் கவிழ்த்துக்காட்டும் நிலையில் அரசாட்சி சொல்லியும் சொல்லாமலும் கை கழுவி விட்டது. ஒரே ஓர் ஆறுதல். வயிற்றை ஈரத் துவாலையால் அழுத்திக் கட்டிக் கொள்ள, வான் கொடையால் நீர் வீழ்ந்திருக்கிறது. ஆனால், நம் தமிழக மக்களுக்கு அந்த ஈரமும் இல்லை என்றாலும், நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற சூடு - சுரணை உறைத் திருக்குமா என்பது ஐயம்தான். ஏனெனில், ஆட்சி பீடங்களைத் தேர்தலில் உறுதி செய்யும் திருமிகு வாக்காளப் பெருமக்கள் தாங்கள் ஒரு பெரிய குடியரசு நாட்டின் தன்மான உணர்வுடைய உறுப்பினர்கள் என்ற உணர்வுடன் செயல்படுவதில்லை. குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் ஆட்சி பீடத்துக்கான தேர்தல் - போட்டி ஆட்டங்களில் வெற்றி தேடித்தரும் கட்சித் தொண்டர் மந்தைகளாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் தலைவர்களுக்குக் கொசுக்கடி, புழுக்கடி, இருமல் என்ற துன்பங்கள் நேர்ந்தால்கூட ஊரைக் கொளுத்தவோ, ஏழைப் பெண்ணுக்கு அடுப்பெரிக்கக் கிடைத்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துத் தியாகம் செய்யவோ தயங்குவதில்லை.

இந்த ‘சுதந்திரச் சூழ'லில் பெண்கள், தங்கள் எல்லைகளை நிர்ணயிக்கும் இலட்சுமண ரேகைகளைத் தாண்டி, கல்வி, பொருளாதார சுயச்சார்பு என்ற பயன்களைப் பெறப் பல்வேறு முண்டுமுடிச்சு நெருக்கடிகளில் இடைப்பட்டு, மீண்டும் பெண்ணாகப் பிறந்ததன் இலக்கில் நிற்கின்றனர். திருமணம் என்பதும் சுரண்டல் வாணிபம்தான். எல்லாப் பண்பாடுகளும் அந்த வாணிபப் பூதத்துள் அடக்கமாகின்றன. மண்ணையும், பொன்னையும் போல் ஆணுக்கு, பெண்ணும் அனுபவிப்பதற்கான ஒரு சாதனம்தான். வாணிபப்பேரங்களில் வெற்றி பெற்று வீட்டுழைப்பு, வெளி உழைப்பு, மனம், உடல் இரண்டையும் பாதிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுப் பாதிப்புச்சுமை என்ற வாழ்க்கையில் அழுந்துகிறாள். ஆணின் தேவை, வசதிகளுக்கேற்ப எல்லைக்கோடுகளை அழித்தாலும் என்றும் அழியாத கற்பு நெறி, பெண்களை அந்தரத்துக் கம்பி ஆதாரத்தில் ஊசலாடவே வைக்கிறது.

இதிகாச துரெளபதை தன்மானம் குலைக்க முற்பட்ட கும்பல் அழியச் சூளுரைத்தாள். அவளுடைய சபதம் நிறைவேற கொடியவர் குருதி கொண்டு கூந்தல் முடிக்க, நாயகர்கள் பொறுப்பேற்றனர். ஆனால் கண்ணகிக்கு அத்தகைய ஊறுகள் நேரவில்லை. அவளுக்குத் துரோகமிழைத்த கணவன், செல்வங்களைப் பறி கொடுத்துத் திரும்பி வந்தபோது, தன் வணிகக் குலமானம் காக்க, இடம் பெயர்ந்து கல்லிலும் முள்ளிலும் நடக்கச் செய்தான். உளம் கரைந்த கண்ணகி நம்பிக்கையே கணவன் உயிரென்று, காற்சிலம்பைக் கொடுத்தாள். மீண்டும் உயிரைப் பற்றிக் கொண்டு தியாகத் தீயில் குளிக்க, உயிராகிய நாயகன் இல்லை. நாயகன் இல்லாத, சந்ததி இல்லாத கொடுமைகள், இவளைச் சந்தியில் நிறுத்தும். இந்தக் கொடுமைகளுக்கு அவளை ஆளாக்கிய மன்னனிடம் நீதி கேட்கச் சென்றாள். செங்கோல் வளைந்ததைப் பொறுக்காத மன்னன் உடனே மாண்டான். மன்னனின் தேவியோ, உடன்கட்டை ஏறும் அச்சத்தை நினைத்த மாத்திரத்தில் உயிர் துறந்தாள். இனியும் பழி தீர்க்க ஒன்றுமில்லை. அவர்களுடைய உயிர்த்தியாகமே இவள் ஆற்றாமை அனலைக் கிளர்த்தியது. எனினும் இவள் ‘கற்பரசி' என்ற முத்திரை பெற, பண்பாட்டைநிலைநாட்ட, இந்தக் காப்பியத்தைப் படைத்த ஆசிரியர், அக்கினியைக் கூவி அழைத்து, நினைவாக, 'பார்ப்போர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர்’ ஆகியோரைத் தவிர்த்து, பிற வாயில்லாப் பூச்சி சமுதாயத்தைத் தீக்கொள்ளச் செய்கிறார். இந்த நாயகி, தமிழ்ப்பண்பாட்டைக் காக்கும் காப்பிய நாயகியாகப் போற்றப்படுகிறாள். கடந்த 33 ஆண்டுகளாக இந்த நாயகி, விரித்த கூந்தலும், கையில் ஒற்றைச் சிலம்புமாக, சென்னை மாநகரின் முக்கியமான, உலகின் இரண்டாவது மிகச் சிறந்த கடற்கரைச் சாலையில் உலகப் பயணிகள் அதிசயிக்கக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்-தமிழ்ப் பண்பாட்டுச் சின்னமாக!

இத்தனை ஆண்டுகளில், இதே சாலையிலும் மாநகரிலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்த நிகழ்ந்து கொண்டிருக்கும், அநீதச் சாவுகள், வன்கொலை, விபத்துகள், பெண் கொடுமைகள், வன்புணர்தல்கள், வேலிகளே பயிர் மேய்ந்து அசைபோடும் அக்கிரமங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சென்னை மாநகரம் பாரத நாட்டின் அமைதியான நகரம் என்ற நிலையைவிட்டு, பாரதநாட்டின் அநீதமான சாலை விபத்துச் சாவுகளுக்கும் பெண் தொடர்பான அத்து மீறல்கள், தீக்குளிக்கச் செய்யும் கற்பு கலாசாரங்கள், பாலியல் கொடுமைகள், கொலைமோசடிகளுக்கும் பெயர் பெற்ற முதன்மை நகரங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதே கடற்கரைச் சாலையில் ‘நெஞ்சு பொறுக்கு தில்லையே’ என்று கொதித்த பாரதி, சில ஆண்டுகளுக்கு முன் பீடத்திலிருந்து வீழ்ந்ததும், ஓசைப்படாமல் மீண்டும் பீடத்தில் ஏற்றப்பட்டதும் நிகழ்ந்தன. ஆனால் ‘கண்ணகி’ இன்றைய அரசியல் கட்சிகளின் நெருக்கடிக்கு மிகத் தேவையான 'அவல் இடிக்கும் ஆயுதமாக’க் களத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறாள். இந்தத் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னக் கலக்கல்கள், பொதுமக்களின் அன்றாடத் தலைவிதிகளை எந்த வகையிலும் புதிதாகப் பாதிக்கப் போவதில்லை. ஆனால் பெண் வர்க்கத்துக்கு ஒன்றை மட்டும் நினைக்க அச்சமாக இருக்கிறது.

இப்போது தமிழகமெங்கும்,தெருவுக்குத் தெரு, விரித்த குழலும் கையில் ஒற்றைச் சிலம்புமாக தமிழ்ப் பண்பாட்டுச் சின்னமான கண்ணகி எழுந்தருளி இருக்க, நம் பெரும்குடி, சிறுகுடி, காவல் திருமகன்கள், உயர் - இடை - மலிவுரகங்களின் போதையுடன் திக்குத்தெரியாமல் வந்துவிட்ட அபலைப் பெண்களை, ‘என்னடி பத்தினித்தனம் காட்டுற?' என்ற முகவுரையுடன் முடி பிடிக்கும், துரத்தித் துகிலுரியும், கத்தி உருவும் காட்சியே அது! சின்னத்திரைகளிலிருந்து தெருச்சந்துகள் வரை அது உயிர் பெறுவதை நினைத்தால். நெஞ்சு சில்லிட்டுப் போகிறது. மதுராக்கள், பத்மினிகள், சுமதிகள், ரீட்டாமேரிகள் என்ற வரிசையில் ஓய்ந்து போகிறோம்.


‘தினமணி’,
4.1.2002