புதியதோர் உலகு செய்வோம்/சட்டம் யாருக்கு?

17. சட்டம் யாருக்கு?

அண்மையில் ஒரு திரைப்படநடிகையும் அவள் தாயும், விபசாரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதற்காகத் தொடரப்பட்ட வழக்கில், விடுதலை பெற்றதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாயிற்று. எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. அப்படி ஒரு சட்டம், பெண்களை மட்டுமே குற்றவாளியாக்கித் தண்டிக்கும் சட்டம் இன்னமும் உயிரோடு இருக்கிறதா என்று மலைத்தேன்.

விபசாரம் என்று சொல்லப்படுவதற்கு என்ன பொருள்? ஒரு பெண் தன் உடலை வாணிபப் பொருளாக்கி உரிமையில்லாத ஆண் அனுபவிக்க உடன்படுவதை அச்சொல் குறிப்பாக்குகிறது. ஓர் ஆண் தொடர்பில்லாமல் அவள் இந்த ஒழுக்கக் கேட்டுக்குக் காரணமாக முடியாது. ஆனால் விபசாரத் தடைச்சட்டம் வீட்டிலோ, விடுதியிலோ இருக்கும் பெண்ணை மட்டுமே தண்டனைக்குரியவளாக்குகிறது. சமூக ஒழுக்கம் என்பது பெண் சார்ந்த கலாசாரம்தானா? அந்நாள் 'தேவதாசி' என்ற முறை கடவுளைத் தொடர்பாக்கி இந்த வாணிபத்தை அநுமதித்தது. ஒரு குடும்பத்துப் பெண்ணுக்குக் கிடைக்காத சிறப்புகள் அவளுக்கு உண்டு. அறியாமை இருட்டில், உழைப்புச் சாதனமாக, குடும்ப வாரிசைப் பெற்றுத்தரும் கருவியாக மட்டுமே அவள் வாழ்ந்தாள். ஆனால், தாசிக்கு அவருக்கே இயல்பான தாய்மையும், குடும்ப கவுரவமும் மறுக்கப்பட்டது. இந்த அநியாயத்துக்கெதிராக டாக்டர் முத்துலட்சுமி அம்மை போராடி, சட்டபூர்வமாக இந்த மரபை ஒழித்தார். அன்றைய சட்ட சபையில், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் என்ற கெளரவத்துக்குரியவர்கள்கூட, இதை எதிர்த்தார்கள். இந்த மரபை ஒழித்தால் சமூக ஒழுக்கம் குலைந்து போகும் என்றே காரணம் காட்டினார்கள். ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ள சமூகத்துக்கு அவர்கள் அத்துமீறலுக்கு வடிகால்கள் தேவை என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. 'ஒரு பெண்ணை போகத்துக்குரிய சாதனம்’ என்ற கருத்தில் வாழ்வதையே காந்தியடிகள் மறுத்துள்ளார். அவர்தம் வாழ்வையே சத்தியசோதனை என்ற திறந்த புத்தகமாக மக்களுக்கு வழங்கி இருக்கிறார். அவருடைய வழிகாட்டலில், அரசியல் சுதந்தரம் பெற்றோர், அந்நாளைய தேசத்தொண்டர்கள், மிகப்பலர் இல்லாவிட்டாலும், ஒரு சிலரேனும் அக்கால வழக்குக் கொப்ப, இளம்பருவத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், பிரும்மசரியம் என்ற ஒழுக்கத்தை மிக மேலாக மதித்தார்கள். ஒரு தொண்டரின் இளம் மனைவி காந்தியடிகளை நேரில் சந்தித்து, எனக்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் வேண்டும். அதற்காக என் கணவரிடம் தாங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, ஒரே ஒரு குழந்தை பெற்றார். அப் பெண் குழந்தைக்கு காந்தியடிகளே, சீதா என்று பெயரும் வைத்தாராம்! இத்தகைய ஒழுக்க நெறியில் மக்களைக் கொண்டு செல்லும் தலைவர்கள் இன்று இல்லவே இல்லை. சுவடுகள் அழிந்தே போயின. அன்றைய அரிச்சந்திர நாடகம், ஒரு மகாத்மாவைத் தோற்றுவித்த பெருமை பெற்றது. அத்தகைய காட்சிக்கலை, பெண் சோரத்துக்குரிய ஒரு தொழிலாகவே பின்னாளைய சமூகத்தில் பார்க்கப்பட்டது. இதே காட்சிக்கலை 'திரை’ என்ற பரிணாமம் பெற்ற பிறகு, தாசி மரபுக்குரிய நெறிகளையும் தூக்கியெறிந்து பெண் வாணிபமாக வளர்ந்துவிட்டது. காட்சி ஊடகங்கள், உலகமயமாக்கலின் சந்தைப் பொருளாகவே பெண்ணுடலை, அவள் இளமையை, திறனை குத்தகை எடுத்துள்ளன.

புத்தாயிரத்தை ஒட்டிய ஒரு பெண்கள் சந்திப்பு நிகழ்வில் அந்நாள் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஒரு பெண்மணி, “தரக்குறைவாக மேனியைக் காட்டி நடிக்கப் பெண்கள் முன் வருவதால்தானே சீர்கேடுகள் நிகழ்கின்றன, நீங்கள் ஏன் மறுக்கக்கூடாது?" என்று தொடுக்கப்பட்ட கேள்விக்குக் கூறிய விடை குறிப்பிடத்தக்கது : “ஒருத்தி ஒத்துக் கொள்ளவில்லை என்றால், இந்தத் தொழிலில் களமிறங்க, புகழ்பெற, பலரும் முன் வருகிறார்கள். இந்தக் கலைத்துறையில் பெண்ணின் விருப்பத்துக்கோ கருத்துக்கோ எந்த மதிப்பும் கிடையாது...” அதிர்ச்சியாக இருந்தது!! இன்று வரையிலும் எந்தப் பெண்கள் அமைப்பும், திரைத்துறைப் பெண்களுக்காகப் போராடக் குரல் கொடுத்தாகத் தெரியவில்லை. பல கொலைகள், தற்கொலைகள் ஓசைப்படாமல் நிகழ்கின்றன. சிலபல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நடிகையின் தற்கொலை - கொலைதான் என்று இத்துறைப் பிரமுகர் ஒருவரை சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கலை உலகில் அவர் தம் திறமைக்காக வெற்றிப் படங்களுக்காகப் பாராட்டு விருதுகளும் பெற்றிருக்கிறார்.

இந்நாட்களில் ஒவ்வொரு புதுப்படத்திலும் பாடல் ஆடல் காட்சிகளில் இளம் பெண்களைத் தரக்குறைவாக ஆட வைக்கிறார்களே? இது விபசாரமல்லவா? இந்த அழகிப் போட்டிகளுக்கு உட்கருத்து வாணிபமல்லாமல் வேறென்ன? போட்டியில் கலந்து கொள்பவள் திருமணம் செய்து கொண்டிருக்கலாகாது என்ற விதி - புதிய தேவதாசி முறையா? பொய்யை மெய்யாக்கி, மெய்யைப் பொய் யாக்கும் தொழில் நுட்பங்களின் கவர்ச்சி வலையில், மனிதகுல மேம்பாட்டுக்காக அரிய பெரிய சாதனைகளை இலக்கு வைக்க வேண்டிய இளமை வேகங்கள் சிக்கிப் பலியாகின்றன. திரைக் காட்சி அத்துமீறல் அராஜகங்களுக்கு எந்த வகையிலேனும் முடிவு கட்ட வேண்டியது இன்று அவசியமாக இருக்கிறது. கலைத்துறை நல் ஒழுக்கங்களை வளர்க்காவிட்டாலும் போகிறது; அது கொலைத் துறையாகப் பரிணமிக்கலாகாது.


‘பாரதமணி'
மே - ஜூன், 2004